Chapter 10
சில சமயங்களில் வார்த்தைகளால் சாதிக்க முடியாததை ஓர் சிறு மௌனப்பார்வை சாதித்து விடும்.. கூர்மையான அர்ச்சனாவின் பார்வையில் லீலாவதி சுதாரித்துக் கொண்டாள்..
‘ஆத்தி.. முதலுக்கே மோசம் வந்திரும் போல.. இவ பாட்டுக்கு ஆஸ்டலில இருந்துக்கறேன்னு வீட்ட விட்டு வெளியில போயிட்டா மாசா மாசம் முள்ளங்கிப்பத்த போல சுளையாக் கிடைக்கிற பணமும் சேந்து போயிடுமே.. அடி லீலாவதி.. வாயை மூடிக்கடி.. இவ ஸ்கூட்டி வாங்கினா மாசா மாசம் வர்ற பணத்தில கொஞ்சம்தான் குறையும்.. வீட்டை விட்டுப் போயிட்டா மொத்தப் பணமும் போயிரும்டி..’
சதி லீலாவதி சித்தி லீலாவதியாகி சாகசச் சிரிப்பொன்றை சிரித்து வைத்தாள்.. இதற்கு இவள் சிரிக்காமலே இருந்திருக்கலாம என்று நினைத்துக் கொண்டாள் அர்ச்சனா.. சில சிரிப்புக்கள் அழகானவை.. சில சிரிப்புகள் அருவெறுப்பானவை..
“வேலைக்குப் போற பொண்ணுக்கு ஸ்கூட்டி வேண்டும்தான்.. நீயென்ன மொத்தமாவா பணம் கொடுத்து வாங்கப் போற..?”
“மொத்தப் பணத்துக்கு நான் எங்கே போவேன் சித்தி..? டியுவிலதான் வாங்கனும்..”
“அது சரி.. டியு கட்டறதுக்கான பணத்த உன் செலவைக் குறைச்சுக் கட்டப் போற.. நான் எதுக்கு தடுக்கனும்..? ம்ஹீம்.. இன்னும் கொஞ்ச நாளைக்கு இந்த வீட்டில ரசம் சோறும் துவையலும்தான்.. இந்த வாரக் கடைசியில மீன் எடுக்கலாம்ன்னு நினைச்சேன்.. எடுக்க நினைச்சாலும் குடுத்து வைக்கனும்ங்கிறது இதுதான் போல..”
‘அது எடுத்து வைத்தாலும் கொடுத்து வைக்கனும் என்கிற பழமொழி.. தெரிந்தால் பேசு.. தெரியலைன்னா வாயை வைத்துக்கிட்டு சும்மா இரு..’
தனக்கு மட்டும் ரசம் சோறு கிடைக்கும் என்பதை புரிந்து கொண்ட அர்ச்சனா எதுவும் பேசாமல் கிளம்பி விட்டாள்.. மனதில் மகிழ்ச்சி இருந்தால்தான் ருசியான உணவைத் தேடும்.. மகிழ்வில்லாத மனதிற்கு மீன் வறுவலும், ரசம் சோறும் ஒன்றுதான்..
லீலாவதி அந்த ரசம் சோறையும் போடாமல் அர்ச்சனாவின் வயிறைக் காயப் போட்டிருப்பாள்.. அவளுடைய சொல் பேச்சைக் கேட்காத அர்ச்சனாவை அப்படித்தான் தண்டிக்க வேண்டும் என்ற ஆங்காரம் அவளுக்கு இருந்தது.. ஆனால் ஓடோடி உழைக்க அர்ச்சனாவுக்கு சக்தி வேண்டுமே..
“ஃபுட் கிவ் அஸ் எனர்ஜி..” வினய் உரக்கப் பாடம் படித்து லீலாவதியின் மனதின் ஓட்டத்தைச் சொல்லிக் கொண்டிருந்தான்..
என்னவோ செய்து கொள் என்று எதிலும் பட்டுக் கொள்ளாமல் வாழப் பழகிக் கொண்டாள் அர்ச்சனா.. வேலைக்குப் போவது.. வீட்டுக்கு வருவது.. வார இறுதியில் சேர்ந்திருக்கும் அவளது அழுக்குத் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டுத் துவைத்து உலர்த்தி அயர்ன் பண்ணி அவளது அறையில் உள்ள சுவர் அலமாரியில் அடுக்கி வைப்பது என்று தன் வாழ்வின் ஓட்டத்தை வகுத்துக் கொண்டாள்..
லீலாவதி அர்ச்சனாவின் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டுத் துவைத்து வைக்கும் வேலையை எல்லாம் வைத்துக் கொள்ள மாட்டாள்.. வார இறுதியில் ஞாயிறன்று அர்ச்சனா தன் துணிகளைத் துவைக்கப் போகும் போது..
“இதுகளையும் கொஞ்சும் சேர்த்துப் போட்டுத் துவைச்சிரு அர்ச்சனா..” என்று லீலாவதி அவளுடைய துணிகளையும் வினய்யின் துணிகளையும் எடுத்துக் கொடுத்ததுண்டு..
அர்ச்சனா அவளுக்கே உரித்தான மௌனப் பார்வையோடு அவற்றைத் தொடாமல் தன் துணிகளை மட்டும் துவைக்க எடுத்தபடி..
“உங்க துணிகளையும் வினய்யின் துணிகளையும் எப்படித் துவைக்கிறதுன்னு எனக்குத் தெரியாது சித்தி.. எசகு பிசகாய் அதில எதுவும் கிழிந்து வைத்துட்டாக் கஷ்டம்.. அதனால உங்க துணிகளை நீங்களே துவைத்துக்கிறதுதான் பெட்டர்.. மெஷினில துணிகளைப் போட்டு எடுக்கறதில என்ன கஷ்டம்..? சமையல் வேலை ஒன்னும் அதிகமில்லைல்ல..? ரசம் சோறும் துவையலும் செய்திட்டு நாள் முழுவதும் சும்மாதானே இருக்கீங்க..? இதையும் செய்யலைன்னா பொழுது எப்படிப் போகும்..? அதோட சித்தி.. வாரம் முழுவதும் ஒடிக்கிட்டு இருக்கிறவளுக்கு ஞாயிற்றுக் கிழமையாவது ரெஸ்ட் வேணும்.. வேண்டும்ன்னாச் சொல்லுங்க.. வேலையை விட்டுட்டு உங்களுக்கு வீட்டு வேலையில ஒத்தாசையாய் இருக்கேன்.. செய்யட்டுமா..?” என்று கேட்ட போது..
‘ஆத்தி’ என்று மனதுக்குள் அரண்டு போனவளாக..
“நீ சொல்கிறதும் சரிதான்.. எங்க துணிகளை எப்படி மெஷினில் போட்டு எடுக்கறதுன்னு உனக்குத் தெரியாதுதான்.. இதுக்குப் போயி எதுக்காக வேலையை விடறேன்னு அச்சானியமாப் பேசற..? எங்க துணிகளை நான் துவைத்துக்க மாட்டேனா..?” என்று வெள்ளைப் புறாவை பறக்க விட்டாள்..
‘அஃது..’ அர்ச்சனா தன் வேலையைப் பார்க்கக் கிளம்பி விட்டாள்..
இந்த இறுக்கமும் மௌனப் பார்வையும் வீரப்பன் இருந்தபோது அர்ச்சனாவிடம் இருந்ததில்லை.. அப்படி இருந்திருந்தால் அவள் எப்படிப் பிழைக்கப் போகிறாளோ என்ற கவலையில் ஆழ்ந்து அவர் மருகியிருக்க மாட்டார்.. அவர் போன பின்புதான் அர்ச்சனா இறுகிப் போனாள்.. தாயும், தந்தையும் அற்ற வாழ்வு இருண்டதொரு கானகமாக காட்சியளித்து அவளை மருட்டியது..
வீரப்பன் இருந்தபோது லீலாவதியிடம் காட்டிய நெருக்கத்தை அவர் போன பின்பு அர்ச்சனா காட்டவில்லை உன்னையும் உன் பிள்ளைளையும் பார்த்துக் கொள்ள நானிருக்கிறேன் என்று சொன்னவள் போகப் போக எதையும் சொல்லாமல் இறுகிப் போனாள்.
மகள் என்ற பாசத்தை லீலாவதி காண்பித்ததில்லை.. அக்கா என்ற பாசம் வினய்யிடமும் இருந்ததில்லை.. உன் அப்பன் என்னை இழுத்துக்கொண்டு வந்து விட்டான்.. அதனால் என்னையும் என் பிள்ளையையும் காலம் முழுவதும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு உனக்கு இருக்கிறது என்பதைப் போன்ற வசனங்களை அவ்வபோது அள்ளி விடுவாள் லீலாவதி.. வினய்யோ அந்த வீட்டின் உரிமையாளன் அவன்தான் என்பதைப் போலவும்.. அர்ச்சனா அந்த வீட்டில் அகதி என்பதைப் போலவும் திமிராகப் பார்த்து வைப்பான்..
எக்கேடோ கெட்டுத் தொலைக்கட்டும் என்று எதையும் மனதில் போட்டுக் கொள்ளாமல் லீலாவதிக்கு உழைத்துக் கொட்டிக் கொண்டிருந்தாள் அர்ச்சனா.. அப்படியே காலம் கழிந்திருந்தால் இப்படி அர்ச்சனா பனி விழும் இரவில் கொட்டும் மழையில் கொடைக்கானலில் உள்ள தோழியின் வீட்டுக்கு வந்து அவளில்லாத சூழலில் அனாதையாக நடு ரோட்டில் நின்றிருக்க மாட்டாள்..
“அர்ச்சனாக் கண்ணு..” என்று குழைவான குரலில் லீலாவதி அனர்த்தத்தை ஆரம்பித்து வைத்தாள்..
அவள் ‘கண்ணு’ என்று அழைத்தாலே ஏதோ ஒரு வில்லங்கத்தை விலை கொடுத்து அழைக்கப் போகிறாள் என்று அர்த்தம்.. அதனால் ஒன்றும் அர்ச்சனா உஷாராகி விடவில்லை.. லீலாவதி ஒன்றை நினைத்து விட்டால் அதிலிருந்து தப்பிப்பது வெகு கடினம்.. அர்ச்சனா உஷாராவதினால் மட்டும் எந்தவொரு ஆணியையும் பிடுங்கி விட இயலாது.. அதனால்தான் வீரப்பன் மகளைக் காப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வைத்து விட்டுப் போய்ச் சேர்ந்தார்..
“என்ன சித்தி..?”
“நம்ம வினய் ரெண்டு நாளாச் சாப்பிடலை கண்ணு.. அழுதுக்கிட்டே இருக்கான்..”
‘இல்லையே.. நேத்துக்கூட இவன் புரோட்டா தின்றுக்கிட்டு இருந்தானே.. என்னைக் கண்டதும் என்னவோ அவன் புரோட்டாவை நான் பிடுங்கித் தின்று விடுவேன் என்பதைப் போலத் தட்டை முதுகுக்குப் பின்னால ஒளித்து வைத்துக்கிட்டானே..’
“என்ன அர்ச்சனா.. பேசாமல் இருக்கிற..?”
“நீங்க சொல்கிறதை யோசிச்சுக்கிட்டு இருக்கேன்..”
“எதுக்காக அழுகிறான்னுதானே..?”
“ம்ம்ம்..”
“இதுதான் கூடப் பொறந்த பொறப்புங்கிறது..”
‘இவன் என் கூடப் பிறந்தவனா..?’
அர்ச்சனாவிற்குக் கேட்கச் சகிக்கவில்லை.. வினய் எந்த மனிதனின் ஜாடையில் இருக்கிறானோ அந்த மனிதனை அர்ச்சனா அறிவாள்.. அவனும் வீரப்பனுடன் பணி புரிந்தவன்தான்.. வீரப்பன் உயிரோடு இருந்தவரை அந்தப் பக்கம் எட்டிப் பார்க்காமல் தலை மறைவாய் எங்கோ ஓடி விட்டான்.. வெளி மாநிலத்துக்குப் போய் விட்டான் என்று பேசிக் கொண்டார்கள்.. அந்த ஊரில் இருந்தால் லீலாவதி அவன் தலையில் விழுந்து விடுவாள் என்று கெட்டிக்காரத்தனமாக ஒதுங்கிக் கொண்டவன் இப்போது வீரப்பனின் இரண்டாவது மனைவி என்ற பெயரில் வினய்யை வீரப்பனின் மகன் என சொல்லிக் கொண்டு வீரப்பனின் வீட்டில் லீலவாதி செட்டில் ஆகி விட்ட நிலையில் திரும்பி வந்திருக்கிறான்.. அடிக்கடி வீட்டுக்கு வந்து போகிறான்.. வினய்யை மடியில் தூக்கி வைத்துக் கொண்டு மணிக்கணக்கில் கொஞ்சுகிறான்..
‘திடிர்ன்னு எப்படி முளைச்சான்..?’
அவன் லீலாவதியுடன் போன் தொடர்பில் இருந்திருக்க வேண்டும் என்று அக்கம் பக்கத்தினர் சொன்னார்கள்.. லீலாவதி வீரப்பனின் இரண்டாவது மனைவிதான் என்ற எண்ணம் ஊர் உலகத்தின் மனதில் அழுத்தமாகப் பதிந்து அவள் அந்த வீட்டில் உரிமையுள்ளவளாக கால் ஊன்றிய பிறகு அவனை மீண்டும் வரவழைத்திருக்கிறாள் என்றார்கள்..
‘எந்தக் கழுதை எப்படிப் போனால் எனக்கென்ன..?’
அர்ச்சனா அருவெறுப்புடன் பேசாமல் இருந்து விடுவாள்.. அவள் பேசி என்ன ஆகப் போகிறது என்றாலும், அன்னியன் அதிலும் கெட்டவன் ஒருவன் அவளது வீட்டிற்கு வந்து போவதில் அவளது மனம் நடுங்கத்தான் செய்தது..
“இவர் உன் அப்பாவின் நண்பர் அர்ச்சனாக் கண்ணு.. நண்பரின் மகனைத் தன்னோட மகனா நினைச்சுக் கொஞ்சறாரு.. பாவம்.. வினய்யும் அப்பா இல்லாத பிள்ளையாச்சே.. இவரைப் பார்த்தா அவனுக்கு அப்பாவைப் பார்த்ததைப் போல இருக்காம்.. ஒட்டிக்கிட்டான்..”
லீலாவதி சொன்ன போது அவளுக்கு பற்றிக் கொண்டு வந்தது.. அந்த மனிதன் அர்ச்சனாவைப் பார்த்த பார்வை மகளைப் பார்க்கும் பார்வையாக இல்லை.. உடல் கூசிப் போன அர்ச்சனா மாடிக்கு விரைந்து விட்டாள்..
அந்த வினய் அர்ச்சனாவுடன் பிறந்தவனாம்..
“என்னன்னு சொல்லுங்க..” எரிச்சலானாள் அர்ச்சனா.
“வினய்யோட படித்த பசங்களில ஒருத்தன் நீ குடியிருக்கிற வீடு உனக்குச் சொந்தமானதில்லன்னு மத்த பசங்க முன்னாடி சொல்லிட்டானாம்.. உன் அக்கா வீட்டில நீ குடியிருக்கிற.. நாளைக்கே கல்யாணமானா உன் அக்கா புருசன் உன்னை வீட்டை விட்டுத் துரத்தி விடுவான்னு கெக்கலி கொட்டிச் சிரிச்சானாம்.. பாவம் புள்ள.. அப்ப அழுக ஆரம்பிச்சவன்தான்.. இன்னும் நிப்பாட்டலை..”
வீட்டின் மீது லீலாவதி குறி வைத்து விட்டாள் என்பதைப் புரிந்து கொண்டாள் அர்ச்சனா..
‘பிரளயம் வெடிக்கப் போகுது..’
அவளுக்குப் பயமாக இருந்தது.. ஊரின் நடு மையத்திலிருக்கும் அந்த வீடு எத்தனை லட்சங்கள் பெறும் என்பது அர்ச்சனாவை விட லீலாவதிக்கு நன்றாகவே தெரியும்.. அதை விட்டுக் கொடுப்பாளா..?
“நான்தான் கல்யாணம் பண்ணிக்கிறதாவே இல்லயே..” அர்ச்சனா நழுவ முயன்றாள்..
அப்போதும் அப்படிச் சொல்லாதே என்று லீலாவதி சொல்லவில்லை.. திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க முடியுமா..? அது சரியல்ல.. ஊரும் உலகமும்
என்ன பேசும் என்று கேட்கவில்லை.. அப்படியெல்லாம் மனிதத்தனம் உள்ளவர்கள்தான் கேட்பார்கள்.. லீலாவதி கேட்க மாட்டாள்..
“அது உனக்கும் எனக்கும் தெரியும் கண்ணு.. ஊர் உலகத்துக்குத் தெரியுமா..?” என்றுதான் கேட்டாள்..
‘கடவுளே..’ என்றிருந்தது அர்ச்சனாவுக்கு..
“இப்ப நான் என்னதான் செய்யனும்..?” தலையைப் பிடித்துக் கொண்டாள்..
‘அப்படி வா வழிக்கு…’ லீலாவதிக்கு கொண்டாட்டமாக இருந்தது..
இந்த ஒரு நாளுக்காக எத்தனை வருடங்களாக காத்திருக்கிறாள் என்று அவளுக்குத்தான் தெரியும்.. வீரப்பன் இருக்கும்வரை அவள் வீட்டைப் பற்றிப் பேச முடியாது.. இறந்தவுடன் பேச முடியாது.. ஓரிரண்டு வருடங்களாவது ஆக வேண்டும்.. அந்த தினம் இன்று வந்து விட்டது..
“ஒன்னுமேயில்ல கண்ணு.. இந்த வீட்ட என் பேருக்கு எழுதிக் கொடுத்துரு.. உனக்கும் வினய்க்கும் நான் அம்மாவாச்சே.. இந்த வீடு உனக்கும் வினய்க்கும் பொதுவான சொத்தா ஆகிரும்.. அப்ப எந்தப் பயலும் நாக்கு மேல பல்லப் போட்டு ஒரு வார்த்த சொல்ல முடியாதில்ல..?”
அதற்கென்ன சித்தி.. ஆகட்டும்.. என்ற வார்த்தைகளைத் தான் அர்ச்சனா சொல்வாள் என்ற எதிர்பார்ப்புடன் லீலாவதி காத்திருக்க.. அர்ச்சனாவோ..
“அது எப்படி முடியும் சித்தி..?” என்று கேட்டு வைத்தாள்..
“ஏன் முடியாது..?” பத்ரகாளியானாள் லீலாவதி..
“இந்த வீட்டு மேல லோன் இருக்கு.. பத்திரம் பேங்கில இருக்கு.. லோனைக் கட்டாம இந்த வீட்டை யார் பெயருக்கும் நான் எழுதிக் கொடுக்க முடியாது சித்தி..”
அர்ச்சனா சொல்லி விட்டாள்.. இப்படி நடந்திருக்கும் என்று நினைத்துப் பார்த்திராத லீலாவதி ஸ்தம்பித்து நின்று விட்டாள்..
Reviews – Panivilum Iravu / பனி விழும் இரவு
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.