Chapter 11

0Shares

“என்ன..?”

“ஆமாம் சித்தி.. இந்த வீட்டு மேல எழுபது லட்சத்துக்கு மேல லோன் வாங்கியிருக்கோம்.. இப்ப அது வட்டியும் முதலுமாச் சேர்ந்து ஒரு கோடியைக் கூடத் தாண்டலாம்..”

லீலாவதியின் முகம் பார்க்காமல் சொன்னாள் அர்ச்சனா.. இந்தச் செய்தி லீலாவதிக்கு எப்பேற்பட்ட அதிர்ச்சியைத் தரக்கூடும் என்பதை அவள் அறிந்திருந்தாள்.. ஒர்வகையில் இந்த நிகழ்வு அவளுக்குத் திருப்தியைத் தந்தது.. எவனோ ஒரு அருவெறுக்கத்தக்க மனிதனை வீட்டிலே சேர்த்துக் கொண்டு அர்ச்சனாவிற்கு முள்ளின் மீது நிற்பதைப் போன்ற சங்கடத்தைத் தரும் லீலாவதியை ஏதாவது ஒர்வகையில் தாக்க வேண்டும் என்ற அர்ச்சனாவின் நீண்டநாள் மன உளைச்சல் அன்று நிறைவேறி விட்டது..

“ஒரு கோடியா..? இந்த வீட்டை வித்தாக் கூட அவ்வளவு தேறாதே..” இடிந்து போனாள் லீலாவதி..

“உண்மைதான் சித்தி.. வீடு ஜப்தியானாலும் ஆகி விடலாம்.. நாம் எதற்கும் தயாராக இருந்துக்கனும்..” இன்னும் கொஞ்சம் புளியைக் கரைத்து ஊற்றினாள் அர்ச்சனா..

“எதற்கும் தயாரா இருந்துக்கனும்னா..?” லீலாவதியின் சூனியக்காரக் கண்கள் இடுங்கின..

“அதாவது சித்தி.. எந்த நேரமும் எதுவும் நடக்கலாம்.. நாம வீட்டை விட்டு வெளியேறி வாடகை வீட்டில் குடியேற வேண்டியிருக்கலாம்..” அர்ச்சனா அடுக்கினாள்..

“வாடகை வீட்டிலா..? சொந்த வீட்டில் குடியிருந்துட்டு எப்படி வாடகை வீட்டில் இருக்கிறது..?” லீலாவதியின் குரூர முகம் அஷ்டகோணலானது..

‘நீ வாடகை வீட்டில் இருந்ததே இல்லை பாரு.. அதுக்குக்கூட வழியில்லாம என் அப்பாவை வலை போட்டு பிடித்த.. அதெல்லாம் மறந்து விட்டு இப்ப இந்தக் கேள்வியைக் கேட்கறியா..?’

மௌனமாக மனதுக்குள் பொருமினாள் அர்ச்சனா.. பல தருணங்களில் மனதில் நினைப்பதை பேச முடியாமல் மௌனம் காக்க வேண்டியிருக்கிறது.. இதுகூட அக்கினிக்குஞ்சை அடைகாக்கும் செயல்தான்.. சிறு துளி வெளிப்பட்டாலும் எதிராளியைச் சுட்டுப் பொசுக்கி விடும்.. அதைச் செய்ய இயலாமல் நம் மனதில் அக்கினியை ஏற்க வேண்டும்..

வாழ்க்கை என்பது துரோகங்களை அடையாளம் காட்டுவது.. அதன் ஒவ்வொரு திருப்பத்திலும் நமக்குப் பூங்கொத்து காத்திருக்கிறதோ இல்லையோ.. துரோகம் காத்திருக்கும்..

இது வாழ்க்கைக்கான போராட்டம்.. வாழ்வதற்காக எதையும் செய்பவர்கள் கைகளில் நாம் மாட்டி விட்டால் நம்மை மூச்சுத்திணற பாதாளத்தில் அழுத்தி விட்டு நம் மீது ஏறித் தாவத் தயங்க மாட்டார்கள்.. நியதிகள் நிலையானவையல்ல.. வாழ்வதற்கான போராட்டத்தில் நியதிகள் சிதைக்கப்படுவதும் நீதிகள் மறுக்கப்படுவதும் வாடிக்கையாகி விட்டது.. சுயநலம் என்பது தர்ம நியாயங்களைப் பார்க்காது.. தான் வாழ எதையும் செய்யும்.. எவரையும் கொல்லும்..

லீலாவதி அப்பேற்பட்ட சுயநலக்காரி.. சாகசக்காரி.. சூனியக்காரி.. கருணையின்றி வீரப்பனின் மீது பழி போட்டுத் தன் வயிற்றில் வளர்ந்த கரு அவருடையதுதான் என்று சாதித்து அவரது வீடு புகுந்தவள்.. மனக் கவலையில் அவரை மாள வைத்து அவர் பெற்ற மகளைத் தனக்கும் தன் மகனுக்கும் உழைத்துப் போட வைத்தவள்.. அதை அர்ச்சனாவின் கடமையென்று அவள் மனதில் உருவேற்றியவள்..

அவளைப் பொறுத்தவரை அர்ச்சனாவுக்கென்று எதுவும் இல்லை.. அவளது நகைகளை லீலாவதி கைப்பற்றி அடகு வைத்து விட்டாள்.. இனி அவள் பெயரில் இருக்கும் வீட்டைத் தன் பெயருக்கு மாற்றி எழுதி வாங்கிக் கொள்வது மட்டும்தான் பாக்கி.. அதை உடனடியாகச் செய்யாமல் வீரப்பன் இறந்து ஓரிரண்டு வருடங்கள் கழித்து வாங்கிக் கொள்ளலாம் என்பது அவளது எண்ணமாக இருந்தது.. அதன் பின்னால் அர்ச்சனா லீலாவதியுடன் இருந்தாலும்.. இல்லாவிட்டாலும் லீலாவதி பிழைத்துக் கொள்வாள்..

“இந்தா பாரு லீலா.. இந்தக் குட்டிப் பாக்க படுஷோக்கா இருக்கா.. எனக்கே இவளத் தூக்கிட்டுப் போயி தாலி கட்டிடலாம் போல இருக்கு..” லீலாவதியின் காதலனும் வினய்யின் தகப்பனுமான பாண்டரங்கன் பல் இளித்த போது..

“அடி செருப்பாலே..” என்று சீறினாள் லீலாவதி..

“இதப் பாருடா.. மகள்ன்னு வாய் வார்த்தைக்கு சொல்லிக்கிட்டு இருக்கன்னு பாத்தா நிஜமாவே நீ அந்தக் குட்டிய உன் மக மாதிரி நினைக்கிற போல.. ஒரு பேச்சுக்கு சொல்ல வந்தா இப்படிக் கோபப் படற..” ஜகா வாங்கினான் பாண்டுரங்கன்..

“யாருக்கு யார் மகள்..? அவ எனக்கு மகளா..? அவளையும் என்னையும் பக்கத்தில பக்கத்தில நிற்க வைச்சா அவ அக்கா மாதிரியும் நான் தங்கச்சி மாதிரியும் தெரிவோமில்ல.. அம்புட்டு அழகா, இளமையா இருக்கிறவ நானு.. என்னப் பாத்தா அவளுக்கு அம்மா மாதிரி தெரியுதா உனக்கு..?”

“இதப் பாருடா.. அப்புறம் எதுக்கு அந்தச் சீறு சீறுனவ..? நான் என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன்..”

“ஏய்யா.. தளதளன்னு தக்காளிப்பழம் போல நான் உன் கண்ணுக்கு முன்னால அலைஞ்சேன்.. உன் புள்ளயையும் வயித்தில வாங்கிக்கிட்டேன்.. என்னைத் தூக்கிட்டுப் போக வேணாம்.. கூட்டிக்கிட்டுப் போயாவது தாலி கட்டனும்ங்கிற எண்ணமில்லாம 

ஓடி ஒளிஞ்சுக்கிட்டவன் நீ.. இப்ப இவளப் பாத்து தூக்கிக்கிட்டுப் போயி தாலி கட்டனும்னு என்கிட்டயே சொல்ற இல்ல..”

“ஹி..ஹி.. சும்மா ஒரு இதுல சொன்னது லீலா..”

“நீ எதுல சொன்னயோ.. நீதான் அப்பன்னு வினய்க்குச் சொல்லிட்டேன்.. மெல்ல விதவைக்கு மறுவாழ்வு கொடுக்கறேன்னு பேரை வாங்கிக்கிட்டு என் கழுத்தில தாலியைக் கட்டப் பாரு.. உனக்கு என்ன விட்டாத் தோதா எவளும் எம்புட மாட்டா..”

“ஏனாம்..?”

“யோவ்.. இன்னைக்கு நிலைமைக்கு எழுபது பவுன கையில வைச்சிருக்கேன்.. இந்த அர்ச்சனாவோட அம்மாகாரி நகைகள பேங்கில அடகு வைச்சு அந்தப் பணத்தில என் பேரில வீட்டடி மனையை வாங்கிப் போட்டேனா.. அப்ப அது பத்து லட்சம்.. இன்னைக்கு ஐம்பது லட்சம்.. இந்த லீலாவதிய ஒன்னும் ஏப்ப சாப்பன்னு நினைச்சிராதே..”

‘ஆ’ வென வாய் பிளந்து விட்டான் பாண்டுரங்கன்.. லீலாவதியே சொன்னதைப் போல அவனது நிலைமைக்கு லீலாவதியிடம் இருக்கும் வசதி ஏணி வைத்தாலும் எட்டாதுதான்..

“அந்தம்மாவோட நகைகளைத்தான் அடகு வைச்சுட்டதாச் சொல்றியே லீலா.. அப்புறம் எப்படி உன் கையில எழுபது பவுன் இருக்குன்னு சொல்ற..?”

“அறுபது பவுன் நகையை அடகு வைச்சேனில்ல.. அதைக் கொஞ்சம் கொஞ்சமா பணம் கட்டி மீட்டாச்சுய்யா.. அதுக்கப்புறம் பத்து பவுனைச் சேர்த்து எழுபது பவுனா ஆக்கியாச்சு..”

“எப்புடி புள்ள..?”

“அது அப்படித்தான்.. இந்த அர்ச்சனாக் கழுத வாங்குற சம்பளத்த அப்படியே கையில கொண்டு வந்து கொடுத்திருதா.. இரண்டு பேருக்கு மட்டும் ஆக்கிச் சாப்பிடறதில என்ன செலவு வந்துறப் போகுது..?”

“இரண்டு பேரா.. அர்ச்சனாவோட சேர்த்து மூணு பேரில்லையா..?”

“அதுக்கு ரசம் சோறுதான்.. எப்பவும்..”

“என்ன லீலா இப்படிச் சொல்ற..?”

“ஆமாய்யா.. இன்ஸ்ட்டால்மெண்ட்டில சாமான் வாங்கிப் போட்டப்ப செலவைக் குறைச்சுத் தவணை கட்டனும்னு ரசம் சோத்தைப் போட ஆரம்பிச்சேன்.. அப்ப இருந்து மாறவே இல்ல.. அந்தக் காசு மிச்சமாச்சு..”

“ஏன் புள்ள.. பாவம்.. சம்பாதிக்கிற புள்ள வயித்தில அடிக்கறியே..”

“என்னய்யா.. பாசம் பொங்கி வழியுது..?”

“அதெல்லாம் இல்ல புள்ள..”

“இருக்கக் கூடாது.. இருந்தா இந்த லீலாவதியோட வேற முகத்தப் பார்ப்ப..”

“ம்க்கும்.. இந்த முகத்தப் பாக்கவே சகிக்கல..”

“என்னய்யா முணுமுணுக்கிற..?”

“ஹி.. ஹி.. உன் பேச்சை மீறுவேனான்னு சொன்னேன் லீலா..”

“அஃது.. அப்படியே செல்லிப்பழகு.. மாசத்துக்கு பதினைந்தாயிரம் மிச்சமாகும்.. அத அப்படியே ஐம்பது மாதத் தவணையில பத்து லட்சரூபா சேர்ற சீட்டுப்பணத்தில கட்டிக்கிட்டு வந்தேன்.. கழிவு போக மாசத்துக்கு பதினைஞ்சாயிரத்துக்குள்ளதான் வரும்.. இவ பணத்த வைச்சே இவளோட நகைகள மீட்டுக் கையில வைச்சுக்கிட்டேனில்ல..”

“எல்லாம் சரிதான் புள்ள.. எனக்கே இவளக் கல்யாணம் கட்டிக்கிட்டா என்னன்னு ஆசையா இருக்கே.. இவ கூட வேலை பார்க்கிற பயலுகளில எவனுக்காச்சும் அந்த ஆசை வராமலா இருக்கும்..?”

“என்னய்யா சொல்ற..?”

“காலாகாலத்தில இந்த வீட்ட உன் பேருக்கு எழுதி வாங்கிருன்னு சொல்றேன்.. இல்லேன்னா இந்தக் குட்டி எவன் கூடயாவது ஓடிப் போயிருவா.. இவ கூட இந்த வீடும் சேர்ந்து ஓடிப் போகும்.. பார்த்துக்க..”

‘ஆமாமில்ல’ என்று தோன்றி விட்டது லீலாவதிக்கு.. பொறுத்தார் பூமி ஆள்வார்தான்.. ஆனால் அந்தப் பொறுமைக்கும் ஒர் அளவு இருக்க வேண்டுமல்லவா..? காத்திருப்பவள் வீட்டை நாளை வருபவன் அடித்துக் கொண்டு ஓடிவிட்டால் என்ன செய்வது..? லீலாவதி ஒன்றும் பொறுமை சிகாமணி அல்லவே.. அவள் இத்தனை நாள் பொறுமையாய் இருந்ததே அதிசயம்..

லீலாவதி பொறுத்தது போதும் என்று பொங்கி யெழுந்தாள்.. வினய் அழுகிறான் என்று சொல்லி வீட்டைத் தன் பெயருக்கு எழுதிக் கொடுத்து விடும்படிக் கேட்டாள்.. அர்ச்சனா எழுதிக் கொடுத்து விடுவாள் என்றுதான் நம்பினாள்.. அர்ச்சனாவை அவள் அப்படித்தானே ஆட்டுவித்துக் கொண்டிருந்தாள்..? லீலாவதி எதைக் கேட்டாலும் எதிர் கேள்வி கேட்காமல் அர்ச்சனா அதைச் செய்தாக வேண்டும்.. நொடிப் பொழுது யோசிக்கக் கூடாது..

அர்ச்சனாவும் நொடிப்பொழுதும் யோசிக்காமல் வீட்டின்மீது லோன் இருப்பதைச் சொல்லி விட்டாள்.. லீலாவதி பேயறைந்ததைப் போல நின்று விட்டாள்..

லீலாவதி ஒன்றை மறந்து விட்டாள்.. அவள் வீரப்பனுக்கு இரண்டாவது மனைவி, வினய் வீரப்பனின் மகன் என்ற உறவு இருந்ததினால்தான் அர்ச்சனா லீலாவதிக்கு அடிமைப்பட்டிருந்தாள்.. வீரப்பன் சுமக்க வேண்டிய சுமை, அவர் நிறைவேற்ற வேண்டிய குடும்பப் பொறுப்பு என்பதினால் மட்டுமே இளமைப் பருவத்துக்குரிய கனவுகளைத் துறந்து சன்யாசினியைப் போலத் தன்னை ஆக்கிக் கொண்டு லீலாவதிக்கு சம்பாதித்துப் போட்டாள்.. சும்மா ஒன்றும் அர்ச்சனா ‘அவள் ஒரு தொடர்கதை..’ ஆகவில்லை.. இவை அத்தனையும் பாண்டுரங்கனின் வரவினால் அழிந்து போய் விட்டன.. அவளது ஓட்டத்திற்கான காரணத்தை பாண்டுரங்கன் இல்லாமல் செய்து விட்டான்.. வினய் பாண்டுரங்கனின் மகன் என்பதை லீலாவதி வினய்யிடம் சொல்லிக் கொண்டிருந்ததை அர்ச்சனா கேட்டு விட்டாள்.. அன்று இரவு அவள் தூக்கத்தைத் தொலைத்ததை லீலாவதி அறிய மாட்டாள்..

அர்ச்சனா இரவு முழுவதும் பொட்டுத் தூக்கமில்லாமல் அழுதாள்.. எவனோ ஒருவனின் பிள்ளையை வயிற்றில் சுமந்து கொண்டு வீரப்பனின் மீது பழியைப் போட்டு அதன் மூலமாக அபிராமியின் நிம்மதியைக் குலைத்து அவளை நோய்ப் படுக்கையில் லீலாவதி தள்ளி விட்ட கொடுஞ்செயலை நினைத்துப் பார்த்தாள்.. கணவருக்கும் லீலாவதிக்கும் தொடர்பிருக்கிறது என்ற நினைவில் தன்னுயிரைத் தானே குறைத்துக் கொண்ட அபிராமி போய்ச் சேர்ந்து விட்டாள்.. குணம் கெட்டவளை இரண்டாம் தாரமென்ற பெயரில் வீட்டில் சேர்த்து விட்டோமே, அவளால் மகளுக்கு என்ன ஆபத்து வரப் போகிறதோ என்ற கவலையில் வீரப்பனும் போய்ச் சேர்ந்து விட்டார்.. அவர்கள் இருவரையும் மேலுலகம் அனுப்பி வைத்து விட்ட கையோடு தன் ஆசைக் காதலனை வீட்டுக்கு வரவழைத்து அவனுடன் சேர்ந்து விட்டாள் லீலாவதி.. அந்த வீடு வீரப்பனும், அபிராமியும் மகளுக்காக என்று பார்த்துப் பார்த்துக் கட்டிய வீடு.. கோவிலுக்கு நிகரானது.. கோவிலில் இருந்த தெய்வங்களை அனுப்பிவிட்டு லீலாவதி அதை உடைமையாக்கிக் கொள்ள நினைப்பதா..?

வீடு மூழ்கும் நிலையில் இருக்கிறது என்றானதும் லீலாவதியும் பாண்டுரங்கனும் சேர்ந்து கூடிக்கூடி ரகசியம் பேசினார்கள்.. என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று அர்ச்சனாவுக்குத் தெரியவில்லை.. மழை மேகம் சூழ்ந்த சனிக்கிழமை மதியம் வேலை முடிந்து அவள் வீட்டுக்கு வந்தாள்.. வங்கிகளில் சனிக்கிழமை மதியம் வரைதான் வேலை.. பசியுடன் வந்தவளுக்கு எப்போதும் போல ரசமும் சோறும் காத்திருந்தன.. சாப்பிட மனமில்லாமல் அவளுடைய அறைக்குப் போய் விட்டாள்.. லேசாக கண் சொறுக வாரத்தில் இரண்டு நாள்கள் மட்டுமே அரிதாக கிடைக்கும் மதிய நேர உறக்கத்தில் ஆழ்ந்தவள் அருகில் யாரோ இருப்பதைப் போலத் தோன்றிய உள்ளுணர்வின் உந்துதலில் சட்டென கண் விழித்தாள்.. அவளது முகத்துக்கு வெகு அருகாமையில் இருந்தது பாண்டு ரங்கனின் முகம்.. பதறி கட்டிலை விட்டு எழுந்து ஓடிக் கதவைத் திறந்து வெளியே பாய்ந்தவள்..

“சித்தி..” என்று அலறினாள்..

மூடப்பட்டிருந்த அறைக்குள் பாண்டுரங்கன் எப்படி வந்தான்..?

“நான்தான் அவரை உள்ளே இருக்கச் சொன்னேன்..” அஞ்சாமல் சொன்னாள் லீலாவதி..

“என்னது..?”

“ஆமாண்டி.. இந்த வீடு இல்லேன்னு ஆகிப் போச்சு.. நீயும் எவன் கூடவாவது ஓடிப் போயிட்டா நானும் வினய்யும் புவ்வாவுக்கு என்ன பண்ணுவோம்..?”

“அதுக்கு..?”

“நீ பாண்டு ரங்கனைக் கல்யாணம் பண்ணிக்க.. பேருக்குத்தான் கல்யாணம்.. இவர்கூட வாழச் சொல்ல மாட்டேன்..”

வாழவிட மாட்டேன் என்ற வன்மமும் உறுதியும் லீலாவதியின் குரலில் தொனித்தன..

0Shares

Reviews – Panivilum Iravu / பனி விழும் இரவு

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link