Chapter 12
அர்ச்சனாவுக்குக் குமட்டிக் கொண்டு வந்தது.. இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா..?
“ச்ச்சீ..” என்றாள் அருவெறுப்பாக..
“நீ இப்படி மாய்மாலம் பண்ணுவேன்னுதான் இன்னைக்கு ஒருநாள் மட்டும் உன்கூட இருக்கறேன்னு இவர் சொன்னார்.. அதுக்குப் பின்னாலே நீ இவருக்குக் கழுத்தை நீட்டித்தானே ஆகனும்..? இவரும் வீட்டோட மாப்பிள்ளையா ‘நம்ம்..ம’ கூடவே இருந்துக்குவாரு.. எல்லோரும் பிரியாம ‘ஒன்ன்ன..னா..’ இருந்துக்கலாம்..”
லீலாவதி பேசிய பேச்சைத் தாங்க முடியாமல் கையில் அகப்பட்டதை எடுத்து அவள் மீது வீசி விட்டாள் அர்ச்சனா.. அது டேபிள் விளக்காக இருந்ததில் லீலாவதியின் தலையில் பலமாக அடிபட்டு விட்டது.. ரத்தம் கொட்ட ஆரம்பிக்க அவள்..
“ஐயோ..” என்று தரையில் சரிந்தாள்..
“லீலா..” பாண்டுரங்கன் அவள் பக்கத்தில் ஓடினான்..
அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட அர்ச்சனா ஒரே பாய்ச்சலாய் ஓடி வாசலைத் தொட்டு விட்டாள்.. அவள் ஓடியதில் லீலாவதியை மறந்துவிட்ட பாண்டுரங்கன் அவளை ‘அம்போ’ எனத் தரையில் விட்டு விட்டு அர்ச்சனாவைப் பிடிக்க வாசலுக்கு ஓடினான்..
‘திடும்.. திடும்’ என்ற காலடி சப்தத்தில் திரும்பிப் பார்த்த அர்ச்சனா பாண்டுரங்கனைக் கண்டதும் தெருவுக்குப் பாய்ந்தாள்.. காய்கறி வண்டியில் காய்களைப் பொறுக்கியபடி ஊர் புறணி, உலகப் புறணிகளைப் பேசிக் கொண்டிருந்த அக்கம் பக்க வீட்டுப் பெண்கள், தலைவிரி கோலமாக ஓடி வந்த அர்ச்சனாவையும் அவளைத்
துரத்திக் கொண்டு வந்த பாண்டுரங்கனையும் பார்த்ததும் அனைத்துக் கதைகளையும் மறந்து அர்ச்சனாவைத் தங்கள் பக்கமாக இழுத்துக் கொண்டார்கள்..
“என்னம்மா ஆச்சு அர்ச்சனா..?”
“ஏன் இப்படி ஓடி வர்ற..?”
“இந்த ஆள் எதுக்காக உன்னைத் துரத்தறான்..?”
“தப்பா நடந்துக்கப் பார்க்கிறானா..? சொல்லும்மா.. என் வீட்டுக்காரர்கிட்டச் சொல்லிப் பல்லு பதினாறையும் பேர்க்கச் சொல்றேன்..”
ஆளுக்கு ஒன்றாக குரல்கள் எழும்ப பாண்டுரங்கன் பயந்து நின்றான்.. ஆக்ரோசமாக ரத்தம் கொட்டும் தலையுடன் வீட்டை விட்டு வெளியில் வந்த லீலாவதி..
“ஏண்டா.. அங்கே ஒருத்தி தலை உடைந்து ரத்தம் கொட்டிக் கிடக்கிறேன்.. நீ அதை என்ன ஏதுன்னு பாக்காம இவ பின்னால ஓடி வர்றயா..? இருக்குடா உனக்கு..” என்று பாண்டு ரங்கனிடம் தாழ்ந்த குரலில் சீறிவிட்டு, அக்கம் பக்கத்தினரிடம்..
“தப்பா நடந்துக்கப் பார்த்தது இவர் மட்டுமில்லை.. இந்த அர்ச்சனாவும்தான்.. குடும்ப நண்பரா வீட்டுக்கு வந்து போயிக்கிட்டு இருந்த மனுசனோட தொடர்பு வைச்சிருந்திருக்கா.. இன்னைக்கு ரெண்டு பேரையும் நான் ஒன்னாப் பாத்துட்டேன்.. திட்டினேன்.. அதனால வெளிய ஓடி வந்திட்டாங்க.. விட்டுத் தொலைங்க.. என்னத்தச் செய்கிறது..? தாய், தகப்பனில்லாத பொண்ணாப் போயிட்டா.. இவளோட அப்பாவுக்கு நான் இரண்டாம் தாரமா வாக்கப் பட்டுத் தொலைச்சிருக்கேனே.. ஊர் சிரிக்கிறதுக்கு முன்னாடி கல்யாணத்தைப் பண்ணித் தொலைச்சிரலாம்.. ஏய்.. வாடி வீட்டுக்குள்ள.. நாளைக்கே கோவிலில வைத்து தாலியைக் கட்டச் சொல்றேன்..” என்று உரக்கப் பேசினாள்..
“ஐயோ..” அர்ச்சனா கண்களை விரித்து வாயைப் பொத்திய விதமே நடந்தது என்ன என்பதைச் சொல்லாமல் சொல்லியது..
அதற்குள் அக்கம் பக்கத்து வீடுகளில் இருந்த ஆண்களும் தெருவுக்கு வந்து கூடி விட்டார்கள்.. அவர்களில் ஒருவர் விரலை உயர்த்தி..
“நிறுத்தும்மா..” என்று லீலாவதியிடம் சப்தம் போட்டார்..
“எதை நிறுத்தச் சொல்றீங்க..? கல்யாணத்தையா..?”
“அதையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.. வாயிருந்தா நீ எதை வேண்டும்ன்னாலும் பேசிருவியா..? அர்ச்சனாவைப் பிறந்ததிலிருந்து பார்த்துக்கிட்டுத்தான் இருக்கோம்.. அபிராமி வயிற்றில் பிறந்த மகள் இவ.. நீ சொல்கிற இழிசெயலை ஓர்நாளும் செய்திருக்க மாட்டா..”
சொன்னவரின் உதாசீனப் பார்வை உன் வயிற்றில் பிறந்த மகளாக இருந்தால் அதைத் தயங்காமல் செய்திருப்பாள் என்று சொல்லாமல் சொல்லியது.. அதில் லீலாவதி வெகுண்டாள்.. சண்டைக்குப் போனாள்..
“கண்ணாலே கண்ட பின்னாலும் இப்படிச் சொல்வீங்களா..?”
“கண்ணாலே எதைக் கண்டோம்..? எங்க அர்ச்சனா பயந்து ஓடி வந்ததைக் கண்டோம்.. இந்த ஆள் துரத்திக்கிட்டு வந்ததைக் கண்டோம்..”
‘எங்க அர்ச்சனா..’ என்ற உரிமையுணர்வு அந்தத் தெருவில் குடியிருந்த அத்தனை பேரின் முகத்திலும் ஆண், பெண் பேதமின்றி பெரியவர்கள், சிறியவர்கள் என்ற பாகுபாடு இன்றிப் படிந்திருப்பதைக் கண்ட லீலாவதியின் சினம் கூடியது..
“நான் பார்த்துட்டேன்ங்கிற பயத்தில இவ ஓடி வந்தா..”
“நீ பார்த்தா எதுக்குப் பயப்படனும்..? நீயென்ன அபிராமியா..?”
நக்கலாக ஒருவர் கேட்க அதைவிட நக்கலாக அங்கிருந்தவர்கள் சிரித்தார்கள்..
“ஏம்மா.. நீயே முறையில்லாத வாழ்வை வீரப்பனுடன் வாழ்ந்தவ அதை நினைச்சே அந்த உத்தமி உயிரை விட்டா.. அந்த உத்தமி போய் சேர்ந்ததை வசதியா ஆக்கிக்கிட்டு வீரப்பன் தலையில விழுந்த.. அவரையும் அனுப்பி வைச்சுட்டு இந்த ஆள்கூட லூட்டியடிச்சுக்கிட்டு இருக்க.. உன்னை இந்தத் தெருவில குடியிருக்க விட்டதே தப்பு.. அர்ச்சனாவோட முகத்துக்காக பொறுமையாப் போனா நீ இந்த அப்பாவி பொண்ணுமேலேயே களங்கத்தை உண்டாக்கி இவனை இது தலையில கட்டப் பார்க்கறியா..?”
“அதானே.. கேட்கிறதுக்கு யாருமில்லன்னு நினைச்சியா..? இந்த தெருக்காரங்க இருக்கோம்மா..”
“வேதாச்சலம்.. இதுகூடல்லாம் பேசி நம்ம தரத்தை நாமே குறைச்சுக்கக் கூடாது.. நீ போலிஸீக்குப் போனைப் போடு.. இந்த நாய் அர்ச்சனாகிட்ட வம்பு பண்ணுச்சுன்னு நாமே கம்ப்ளெயிண்ட் குடுத்து உள்ளே தூக்கிப் போடலாம்..”
“அதைச் செய்யுங்க முதலில.. இவன் ஆளும் முகரையும்.. தெருவில வயசுப் பொண்ணுக நடக்கக்கூட முடியல..”
“வயசுப் பொண்ணுக மட்டுமா..? பாட்டிகளையும் இந்தப் பய விட்டு வைக்கறதில்ல.. கேவலமா பார்த்து வைக்கிறான்..”
“அடிடா அவனை..”
“நொறுக்கிக் கூடையில அள்ளிச் சாக்கடையில் கொட்டுங்கடா..”
தெருவே ஒன்றுகூடி அடிக்க வந்ததில் பாண்டுரங்கன் வீட்டுக்குள் ஓடி ஒளிந்து கொண்டான்.. நிலைமை கைமீறி விட்டதைப் புரிந்து கொண்ட லீலாவதி..
“இனி இந்த வீட்டுக்குள்ள கால வைச்சேன்னா நடக்கறதே வேற..” என்று உறுமினாள்..
“யார் வீட்டுக்குள்ள யார் கால் வைக்கக் கூடாது..? இது அர்ச்சனாவைப் பெத்தவங்க கட்டின வீடு..” எதிர் வீட்டுப் பார்வதி சத்தம் போட்டாள்..
“நிறுத்தும்மா சும்மா.. இவ வீட்டுக்குள்ள வர்றதா இருந்தா பாண்டுரங்கனுக்குக் கழுத்தை நீட்டியாகனும்.. இல்லேன்னா வீட்டை விட்டு வெளியே போயிடனும்.. இந்த லீலாவதியை யாருன்னு நினைத்தா..” என்று ஆரம்பித்த லீலாவதி அடுத்த அரைமணி நேரத்துக்கு தெருவில் நின்று காடு காத்ததில் பெண்மணிகள் அனைவரும் காதைப் பொத்திக் கொண்டு மசக்கை வந்தவர்களைப் போல வாந்தி எடுத்தார்கள்..
இப்படிப்பட்ட மட்டக் கேவலமான வார்த்தைகளும் இருக்கக் கூடும் என்பதை அந்தத் தெருவிலிருந்த ஆண்கள் அன்றுதான் கேட்டறிந்தார்கள்..
“என்னய்யா இது.. இந்தப் பொம்பள இவ்வளவு அசிங்க அசிங்கமாப் பேசுது..? காதை டெட்டால் ஊத்திக் கழுவனும் போல.. நாறுது..”
“சாக்கடை..! இப்படித்தான் பேசும்.. சாக்கடையில இருந்து சந்தன மணமா வரும்..? நாற்றம்தான் வரும்..”
“இந்த வீரப்பன் மட்டும் உயிரோட இருந்திருந்தா உன்னாலதானய்யா இந்தப் பொம்பள இந்தத் தெருவுக்குள்ள வந்து தொலைச்சதுன்னு ஒருபிடி பிடிச்சிருப்பேன்..”
“அவரே அதைத் தாங்க மாட்டாமத்தான் உயிரை விட்டாரு..” பொறுக்க மாட்டாமல் ஒருவர் போலிஸீக்குப் போனைப் போடப் போக தடுத்த இன்னொருவர்..
“யோவ்.. போலிஸ் வந்தா அர்ச்சனாவையும் விசாரிக்கும்.. இந்த லீலாவதிக்கு எல்லாம் அத்துபடி.. அர்ச்சனா அப்படியா..?” என்று கிசுகிசுத்தார்..
“அதையும் யோசிக்கனுமில்ல..?” போன் செய்யப் போனவர் நிதானிக்க.. அதை அறியாத லீலாவதி அந்த மனிதர் போலிஸீக்க போன் செய்கிறார் என்று நினைத்து விட்டாள்..
“வரச் சொல்லு போலிஸை.. இன்னைக்கு ரெண்டில ஒன்னைப் பார்த்துடறேன்..” என்று அவருடன் சண்டைக்குக் கிளம்பி விட்டாள்..
அந்த மனிதருக்கு லீலாவதியின் நிழலைப் பார்த்தால் கூட அருவெறுப்பு வரும்.. அவள் நேரடியாக சண்டைக்கு வரவும் முகத்தைச் சுளித்தபடி அர்ச்சனாவைப் பார்த்து..
“எப்படிம்மா இந்தப் பொம்பளை இருக்கிற வீட்டில நீ இருக்கிற..?” என்று கேட்டு விட்டார்..
“இருக்கவே வேணாம்ய்யா..” லீலாவதி ஆங்காரமாக வீட்டுக்குள் சென்று அர்ச்சனாவின் பெட்டியைத் தூக்கி வீதியில் வீசி விட்டுக் கதவை அடைத்துக் கொண்டாள்..
வாயு வேகம், மனோவேகம் என்பார்கள்.. அதையும் தாண்டிய வேகம் கொண்டது லீலாவதியின் சதியும் சாகசமும் நிரம்பிய சூட்சும புத்தியின் வேகம்..
எப்போது பாண்டரங்கனால் ஆபத்து வரப் போகிறது, அதை லீலாவதி உண்டாக்கி விட்டாள் என்பதை அர்ச்சனா அறிந்து கொண்டு விட்டாளோ, அதன் பின்னால் அவள் உயிரே போனாலும் லீலாவதியுடன் வசிக்க மாட்டாள் என்பதை லீலாவதி கணக்கிட்டு விட்டாள்..
இனி தலைகீழாக நின்றாலும் அர்ச்சனாவின் மனதில் லீலாவதி வீரப்பனின் இரண்டாவது மனைவி, வினய் வீரப்பனுக்குப் பிறந்தவன் என்ற எண்ணத்தை நிலை நிறுத்த முடியாது.. ஓர்முறை எதிர் வீட்டுப் பார்வதி அச்சனாவிடம்..
“ஏன் அர்ச்சனா.. உங்க வீட்டுக்கு ஒர் ஆள் வந்து போகிறானே.. அவனை வினய் அப்பான்னு கூப்பிடறானே.. அவனும் வினய்யும் அச்சு அசல் ஒரே ஜாடையில செஞ்சு வைச்ச சிலை போல இருக்கிறாங்களே.. கவனிச்சியா..?” என்று கேட்டதை லீலாவதி கேட்டு விட்டாள்..
அப்போது அர்ச்சனாவின் முகத்தில் வந்த வெறுப்பையும் கோபத்தையும் லீலாவதி மறக்கவில்லை.. அர்ச்சனாவிற்கு உண்மை தெரிந்து விட்டது என்பதை அவள் தெரிந்து கொண்டாலும் அதை வெளியில் காண்பித்துக் கொள்ளவில்லை.. அர்ச்சனாவே நேரடியாகக் கேட்டாலும் ஆமாண்டி, அதுக்கு என்ன இப்ப..? என்று கேட்கும் தெனாவெட்டும் திமிரும் கொண்டவள் லீலாவதி.. எதற்கும் அஞ்சாதவள்..
அர்ச்சனா அந்த வீட்டுக்குள் வர மாட்டாள் என்று ஆனபோதே அவளை அந்த வீட்டுக்குள் வர விடக் கூடாது என்ற முடிவை லீலாவதி எடுத்து விட்டாள்.. அவள் முந்திக் கொள்ள வேண்டும்.. அர்ச்சனா வீட்டை விட்டு வெளியேறியதாக இருக்கக் கூடாது.. லீலாவதி வீட்டை விட்டு துரத்தி விட்டதாக இருக்க வேண்டும்.. வீடு அர்ச்சனாவின் பெயரில் இருந்தால் என்ன..? வங்கிக் கடனில் மூழ்கினால்தான் என்ன..? வங்கி வந்து வீட்டைக் கைப்பற்றும்வரை லீலாவதி அந்த வீட்டை விட்டு வெளியேற மாட்டாள்.. அர்ச்சனாவை அந்த வீட்டுக்குள் காலடி வைக்க விடவும் மாட்டாள்..
இதுபோல ஓர்நாள் வந்தால் என்ன செய்வது என்று லீலாவதி திட்டமிட்டு வைத்திருந்தாள்.. அவளுக்கு என்ன..? அவள் ஒன்றும் கூலி வேலை கிடைத்தாலும் போதும் என்று இருக்க இடமில்லாமல் நின்ற பழைய லீலாவதி இல்லையே.. நூறு பவுன் நகையும், வங்கியில் ரொக்கப் பணமும், சொந்தமாக வீட்டடி மனையும் வைத்திருக்கிற சாகச லீலாவதியாயிற்றே..! அவள் வாழும் வசதியான வாழ்க்கையைத் தொடரும் வழி அவளுக்குத் தெரியும்.. அன்று விலகி ஓடிய பாண்டுரங்கன் இன்று சேர்ந்து வாழச் சம்மதம் கொடுத்து விட்டான்.. என்ன ஒன்று.. அவனுக்குத் தாலி கட்டிய மனைவியென்ற அங்கீகாரம் லீலாவதிக்குக் கிடைக்காது.. அவன் வேறு ஒருத்தியைத் திருமணம் செய்து கொள்வதைச் சகித்துக் கொண்டு அவனுக்கு ஆசைநாயகியாக வாழ்ந்தாக வேண்டும்..
‘அதனால் என்ன கெட்டுப் போச்சு..? வினய்க்கு வீரப்பனோட இனிசியல் கிடைச்சாச்சு.. எனக்கும் பணம் சொத்து, பத்து நகைன்னு கிடைச்சாச்சு.. ஆசைக்கு சேர்ந்து வாழ பாண்டு ரங்கனும் கிடைச்சாச்சு.. பாண்டுரங்கன் ஒன்றும் பசையில்லாத ஆள் இல்லையே.. வினய் அவனோட மகன்.. என்னையும் வினய்யையும் வசதியா வாழ வைப்பான்.. இந்த வீடு இல்லைன்னா என்ன..? நான் வாங்கிப் போட்டிருக்கிற வீட்டடி மனையில் பாதியை விற்று அந்தப் பணத்தை வைத்து பங்களாவே கட்டிக்குவேன்.. அது போகவும் மீதம் பணம் இருக்கும்.. அதை பேங்கில போட்டு வட்டியை வாங்கி வாழ்ந்துக்க மாட்டேனா..?’
லீலாவதி வாழ்ந்து விடுவாள்.. அர்ச்சனாவைத்தான் நிம்மதியாக வாழ விட மாட்டாள்.. இதைத் தெரிந்து வைத்திருந்ததினால்தான் வீரப்பன் மகளுக்காக வீட்டின் மேல் கடன் வாங்கி இன்னொரு வீட்டை வாங்கி வைத்து மகளின் சொத்தைக் காப்பாற்றி வைத்து விட்டார்..
Reviews – Panivilum Iravu / பனி விழும் இரவு
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.