Chapter 16
“ஓ.. இவங்க உங்க ரிலேட்டிவ்வா..?”
வயதில் சிறியவளாக இருந்தாலும் அவள் மூர்த்தியின் சொந்தக்காரப் பெண் என்பதால் மரியாதையுடன் விளித்தார் பெரியவர்.. அந்த மரியாதை தனக்குரியது அல்ல என்பதில் அர்ச்சனாவின் மனதில் தாழ்வுணர்வு வந்தது..
அவள் மூர்த்திக்குச் சொந்தக்காரப் பெண் அல்ல.. முதல் நாள் இரவு அறிமுகமாகி அவனது வீட்டில் அடைக்கலம் புகுந்திருக்கும் ஓர் அகதி என்பதை அறிய நேர்ந்தால் இந்தப் பெரியவர் இதே மரியாதையுடன் அவளிடம் பேசுவாரா என்ன..?
வயதில் மிகவும் இளையவள் என்பதால்..
‘யாரும்மா நீ..? சுஹாசினிக்கு பெஸ்ட் பிரண்டுன்னு சொல்கிற.. அவளோட அப்பாவுக்கு டிரான்ஸ்பர் ஆகி டெல்லிக்கு குடி போயிட்டாங்கங்கிற விவரம் கூடத் தெரியாம இருக்கிற..’ என்றெல்லாம் கேள்வி கேட்டுத் துளைத்தெடுத்திருப்பார்..
மூர்த்தியின் சொந்தக்காரப் பெண் என்ற ஒற்றை வரி அர்ச்சனாவைக் காப்பாற்றி விட்டது..
“ஓகே.. தேங்க்ஸ் ஃபார் திஸ் இன்பர்மேசன்.. நாங்க கிளம்பறோம்..”
அதிர்ந்து நின்றிருந்த அர்ச்சனாவின் கையைப் பிடித்து ஏறக்குறைய இழுத்துக் சென்றான் மூர்த்தி.. முதன் முறையாக உணர்ந்த அவனது கரத்தின் ஸ்பரிசத்தில் அவள் நிலைகுலைந்தாள்.. வலிமையான அந்த இரும்புக் கையின் பிடியிலிருந்து தனது கையை விடுவித்துக் கொள்ளம் சக்தி அவளிடம் இல்லாததைப் போல தொய்ந்து காருக்குள் விழுந்தாள்.. முன் சீட்டில் அவளைத் தள்ளி விட்டு காரின் டிரைவர் சீட்டில் உட்கார்ந்த மூர்த்தி காரைக் கிளப்பிய வேகத்தில் கொடைக்கானலின் மலைப்பாதையில் அது பறந்தது..
“அங்கேயே நின்றா என்ன அர்த்தம்..?” மூர்த்தி சீறினான்..
எதனால் அந்த கோபம் என்று தெரியாமல் மருண்டாள் அர்ச்சனா.. அவள் என்ன தவறு செய்தாள்..?
“வேறு என்ன செய்திருக்கனும்..?” புரியாமல் கேட்டாள்..
அவளை முறைத்த மூர்த்தியின் கோபம் எதற்காக என்று புரியாத போதும் அவளை பாதித்தது.. அவன் கோபித்துக் கொள்கிறானே.. ஏனாம்..?
“அந்தப் பெரியவர் என்ன நினைப்பார்..?” அவன் மேலும் சீறினான்..
“என்ன நினைப்பார்..?” அதற்கும் விழித்தாள் அர்ச்சனா..
“நீ தெரிந்து பேசுகிறாயா.. இல்லை தெரியாமல் பேசுகிறாயான்னே தெரியலை.. இந்த உலகம் உன் பிரண்ட் சுஹாசினியோடு அஸ்தமித்து விடவில்லை.. புரிகிறதா..?”
அர்ச்சனாவிற்குச் சத்தியமாக எதுவும் புரியவில்லை.. அதைச் சொன்னால் அவன் இன்னும் கொஞ்சம் திட்டுவான் என்பதினால் வாயை மூடிக் கொண்டு பேசாமல் இருந்தாள்.. கார் எங்கே போகிறது என்று கேட்கவும் பயமாக இருந்தது.. பஸ் ஸ்டாண்டில் இறக்கி விட்டால் தேவலாம்.. அதை எப்படி அவனிடம் சொல்வது..?
மூர்த்தியின் பங்களாவைக் கண்டதும் மறுபடியும் இங்கே வந்திருக்கிறோமா என்ற மருட்சி வந்தது.. கூடவே தாய் வீட்டிற்கு வந்து விட்டதைப் போன்ற ஓர் பாதுகாப்பு உணர்வு.. தாய்ப் பறவையின் சிறகுகளுக்கு அடியில் புதைந்து கொள்ளும் நிம்மதி.. ஓர் இரவுதான் அங்கு தங்கியிருந்தாள்.. வாழ்நாள் முழுவதும் கிட்டாத அமைதியும் நிம்மதியும் அங்கே எப்படிக் கிட்டியது..?
சாவித்திரியைப் பார்க்கப் போகிறாள் என்பதில் மனதுக்குள் ஓர் மலர்ச்சி.. அவளுக்கும் இவளுக்கும் தொப்புள்கொடி பந்தமா உள்ளது…? இல்லையே.. அப்படியிருந்தும் அவளது மடிதேடி இவளது உயிர் பறப்பதற்கான காரணம் யாது..?
மூர்த்தியின் காரைக் கண்டதும் செக்யூரிட்டி அறையை விட்டு வெளியே ஓடி வந்து செக்யூரிட்டி கேட்டைத் திறந்து விட்டான்.. போர்டிகோவை நோக்கிப் போன பாதையில் சீறிப் பாய்ந்தது கார்.. வேலைக்காரப் பெண்ணிடம் எதையோ சொல்லிக் கொண்டிருந்த சாவித்திரி காரைக் கண்டதும் பேச்சை நிறுத்தி விட்டு அருகில் வந்தாள்.. காருக்குள் இருந்த அர்ச்சனாவைப் பார்த்ததும், என்ன, ஏது என்று கேட்காமல்..
“வா.. வா..” என்று சிரித்தாள்..
அர்ச்சனாவுக்குத்தான் கூச்சமாக இருந்தது.. டாட்டா, பைபை சொல்லி விட்டு பெட்டியுடன் சிநேகிதியின் வீட்டுக்குப் போனவள் போன மச்சி திரும்பி வந்தாள் பூ மணத்தோடு என்ற கதையாய் போன வேகத்தில் திரும்பி வந்திருக்கிறாளே என்று வெட்கம் வெட்கமாக இருந்தது..
சங்கடத்துடன் இறங்கினாள்.. சாவித்திரி அவளைப் பிரியத்துடன் அணைத்துக் கொண்டாள்.. அர்ச்சனாவிற்கு சற்று சங்கடம் குறைவதைப் போல இருந்தது..
“குறிஞ்சி.. அர்ச்சனாவோட பெட்டியை வாங்கிக் கிட்டுப் போய் என் ரூமில் வை..” சாவித்திரி உத்தரவிட்டாள்..
“இருக்கட்டும் ஆண்ட்டி..” அர்ச்சனா மறுத்தாள்..
“என்ன இருக்கட்டும்..? அதெல்லாம் பெட்டி என் ரூமில்தான் இருக்கும்.. நீயும், மூர்த்தியும் சாப்பிட வாங்க.. இன்றைக்கு சன்டே ஸ்பெசல்.. மட்டன் பிரியாணி, சிக்கன் வறுவல், மீன் பொரியல், அவித்த முட்டை.. மெனு போதுமா இன்னும் வேணுமா..?” சாவித்திரி அர்ச்சனாவின் கையிலிருந்த பெட்டியைப் பிடுங்கி குறிஞ்சியிடம் கொடுத்து விட்டு அர்ச்சனாவின் கையைப் பிடித்து இழுத்தபடி படியேறினாள்..
காரைப் பூட்டி விட்டு ஏதும் பேசாமல் முன் கைகளை மடித்துக் கட்டியபடி நின்று அவர்களையே பார்த்துக் கொண்டிருந்த மூர்த்தியின் பார்வையைச் சந்திக்க அவளுக்கு அச்சமாக இருந்தது.. ஏன் அப்படிப் பார்க்கிறான் என்று தெரியாமல் திகைத்தாள்.. சாவித்திரி அவளை இழுத்தபடி முன்னால் செல்ல அர்ச்சனா திரும்பிப் பார்த்தாள்.. அவன் காரருகே அதே போஸில் நின்றிருந்தான்.. ஏனென்று புரியாமல் இதயம் கனத்தது.. வழியோடு போன வழிப்போக்கி அவள்.. அவன் நினைத்திருந்தால் யார் எக்கேடு கெட்டால் என்ன என்று அவளை கண்டு கொள்ளாமல் விட்டு விலகி நடந்திருக்கலாம்.. அவன் அப்படிச் செய்யவில்லை.. அவளுக்கு அடைக்கலம் கொடுத்து அழைத்து வந்தான்.. இப்போதும் அவள் எங்கு செல்லப் போகிறாள் என்று கேட்டு பஸ்ஸ்டாண்டில் இறக்கி விட்டிருக்கலாம்.. அதைச் செய்யாமல் மறுபடியும் அவனது வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறான்..
‘என்னிடம் இரக்கம் காட்டாதே..’ இறைஞ்சியது அவளது நைந்த உள்ளம்..
‘நிரந்தரமில்லாத இந்த அன்பினால் யாதொரு பயனும் ஏற்படப் போவதில்லை.. இதை இழந்து முற்றிலுமாக நான் பிரிய நேரும் போது என் மனம் வலிக்கும்.. கதறும்.. நேசங்களற்ற பாலைவனத்தில் நடந்து கொண்டிருப்பவள் நான்… நீ பாலைவனச் சோலையைக் காட்டாதே.. இதில் நீடித்துத் தங்க என்னால் இயலாது எனும் போது இந்த இளைப்பாறுதல் எனக்கான தேறுதலைத் தரப் போவதில்லை.. எந்த நொடியில் நான் பிரிய வேண்டியிருக்குமோ என்ற நினைவே இந்த நொடிகளை நரகமாக்கி விடும்.. வேண்டாம்.. என் மீதான உனது கருணைப் பார்வையை அகற்றி தளைகளற்ற சுதந்திரப் பாதையில் என்னை நடக்க விடு.. அங்கு தனிமை என்னை சூழலாம்.. விரக்தி என்னை வாட்டலாம்.. அதுவே எனக்கான நிரந்தரம் என்ற உணர்வு என்னை சோர்ந்து வீழச் செய்யாமல் தாங்கி நடக்க வைத்து விடும்..’
அவளது பார்வையின் இறைஞ்சுதலைப் படிப்பவனைப் போல அவனது விழிகள் கூர்மையாக அவளது முகத்தை வட்டமிட்டு ஆராய்ந்தன..
“அங்கேயே ஏன் நிற்கிற மூர்த்தி..? உள்ளே வா..”
சாவித்திரியின் அழைப்பில் அவன் உள்ளே வந்தான்.. அவனைப் பார்க்க முடியாமல் தலை கவிழ்ந்தாள் அர்ச்சனா.. அவனது விழிகளின் தீட்சண்யம் அவளைத் துளைத்தது.. புரியாத சோகத்தில் கனத்த இதயத்தைச் சமாதானப் படுத்தும் வகையறியாமல் அவள் கண் கலங்கினாள்..
“இப்போ என்ன ஆச்சுன்னு கண்கலங்கற..?” சாவித்திரி அதட்டினாள்..
“இவங்க தேடிப் போன பிரண்ட் கொடைக்கானலிலேயே இல்லையாம்.. டெல்லிக்குப் போய் ஆறு மாதமாகுதாம்.. அதுக்குத்தான் இந்த அழுகை..” என்றான் மூர்த்தி..
“அதுக்காக அழுகனுமா..? இந்த சின்ன வயசில எத்தனை சோதனைகளைத் தாண்டி வந்திருக்கிற..? கேட்கும் போதே மனசு பதறது.. அதுக்கெல்லாம்
கலங்காம உறுதியா நின்ன பொண்ணு இதுக்குப் போய் கலங்கலாமா..?” சாவித்திரி அன்புடன் கடிந்து கொண்டாள்..
“இவங்க அதுக்காக மட்டும் அழலைம்மா.. திரும்பவும் நம்ம வீட்டுக்கு வரவேண்டியதாகிருச்சேன்னு அழறாங்க.. இங்கே வருகிறதில் அவ்வளவு வெறுப்பு..” கசப்புடன் சொன்னான் மூர்த்தி..
‘இதுதான் இவனோட கோபத்திற்கு காரணமா..?’
அர்ச்சனா இமைகளை உயர்த்தி அவனைப் பார்த்தாள்.. அதற்காகவே காத்திருந்ததைப் போல அவனது பார்வை அவளது பார்வையைக் கவ்விக் கொண்டது.. மருண்டு போனவள் பார்வையைத் தாழ்த்திக் கொண்டதில் அவன் முகத்தில் மென்மைபடர்ந்தது..
“நான் ஒன்று சொல்வேன்.. கேட்பியா..?” என்றான்.
‘ஒன்றென்ன.. கோடி சொல்.. கேட்பேன்..’ என்று சொல்லத் துடித்த மனதை அடக்கிக் கொண்டு..
“ம்ம்ம்..” என்று முணுமுணுத்தாள் அர்ச்சனா..
“இப்போதைக்கு லீவைப் போடு.. ஆற அமர யோசித்து ஒரு முடிவுக்கு வா..” யோசனை சொன்னான் அவன்..
“லீவைப் போடனும்தான்.. பட்.. எங்கே இருப்பது..?” அதை யோசனையுடன் அவள் கேட்டதும் அவனுக்கு காணாமல் போயிருந்த கோபம் மீண்டும் வந்து ஒட்டிக் கொண்டது..
“எங்கேயோ போய் தொலை..” எரிந்து விழுந்தான்..
“கோவித்துக்காதீங்க ப்ளீஸ்..” கெஞ்சினாள் அர்ச்சனா..
சாவித்திரிக்கு அவளைப் பார்க்கப் பாவமாக இருந்தது.. நல்ல பெண்.. அறியாத ஊரில் தெரியாத மனிதர்களின் வீட்டில் தங்கத் தயங்குகிறாள்.. அதில் தவறேதும் இல்லையே..
“நீ கோபத்தைக் குறைத்துக்க மூர்த்தி.. அவ நிலையில இருந்து யோசித்துப் பாரு.. அவ தயங்கறதில தப்பில்லன்னு உனக்கே புரியும்..”
“என்னம்மா தப்பில்ல..? இங்கே என்ன சிங்கம், புலி, கரடியா இருக்கு..?”
“இல்லேப்பா.. ஆண்களோட உலகம் வேறு.. பெண்களோட உலகம் வேறு.. அவங்க நாலையும் யோசிக்கனும்..”
“அப்படி யோசித்துத்தான் இந்த மேடம் மரியாதைக்குரிய லீலாவதி அம்மையாருடன் ஒரே வீட்டில் இருந்தாங்களோ..? அந்த வீட்டை விட இந்த வீடு பாதுகாப்பானதுன்னு சொல்லுங்கம்மா..”
சாவித்திரி அர்ச்சனாவைப் பார்த்து இதற்கு என்ன சொல்கிறாய் என்பதைப் போல புன்னகை பூத்தாள்… அர்ச்சனா தவித்துப் போனாள்… அவள் மனதின் உணர்வுகளை எப்படிப் புரிய வைப்பாள்..?
மூர்த்தியை நேரடியாகப் பார்த்த அவளது விழிகளில் தெரிந்த சோகத்தில் அவன் பேச்சை நிறுத்தினான்..
“இந்த வீட்டை விடப் பாதுகாப்பான இடம் இந்த உலகத்தில் வேறு எங்கேயும் இல்லை ஆண்ட்டி.. ஓர்நாள் நைட்தான் இங்கே தங்கினேன்.. வாழ்க்கை முழுவதும்
நான் அனுபவித்த வேதனைகளுக்கு விடிவு வந்ததைப் போல இருந்தது.. அப்படியொரு நிம்மதியான உறக்கத்தை உறங்கினேன்… யாருமே இல்லைன்னு தனிச்சு நின்னவளுக்கு ஆலமரம் போல அடைக்கலம் கொடுத்து நானிருக்கேன் உனக்குன்னு அரவனைச்சுக்கிட்டீங்க.. உங்க மனசு யாருக்கு வரும் ஆண்ட்டி..? சாரைப் போல நல்ல மனிதர்களைப் பார்ப்பதே அரிது..”
“தெரியுதில்ல.. அப்புறமும் ஏன்ம்மா மூர்த்தி சொல்கிறதை மறுத்துப் பேசற..? கொஞ்சநாள் இங்கேயே இருக்கலாமே..”
“இருக்கலாம்தான்.. அதற்குப் பின்னால்..?”
அர்ச்சனாவின் இந்தக் கேள்வியில் சாவித்திரி மூர்த்தியின் முகம் பார்த்தாள்.. அவன் எதுவும் சொல்லாமல் அர்ச்சனாவையே பார்த்துக் கொண்டிருந்தான்..
“என்றைக்கிருந்தாலும் நான் இந்த வீட்டை விட்டு வெளியேறித்தான் ஆகனும் ஆண்ட்டி.. இப்பப் போனா கொஞ்சம் வேதனையோடு போயிரும்.. அதுவே கொஞ்சநாள் கழித்துப் போனா என்னால் தாங்கிக் கொள்ள முடியாது.. நான் தாய், தகப்பனில்லாத
அநாதை ஆண்ட்டி.. அன்புக்காக ஏங்கறவ.. நீங்களும் சாரும் அதை அள்ளியள்ளிக் கொடுக்கிறவங்களா இருக்கறீங்க.. மனசார அந்த அன்பு மழையில நனைஞ்சுட்டு வெளியேறனும்னா எப்படி முடியும் ஆண்ட்டி..? நான் செத்தே போயிருவேன்.. வேண்டாம் ஆண்ட்டி.. என்னைப் போக விடுங்க.. நான் வேற ஏதாவது ஒரு பிரண்ட் வீட்டுக்குப் போயிடறதுதான் எனக்கும் நல்லது.. உங்களுக்கும் நல்லது.. ப்ளீஸ் ஆண்ட்டி.. நான் எங்கேயாவது போயிடறேன் ஆண்ட்டி..”
அர்ச்சனா அழ ஆரம்பித்தாள்.. கேவலுடன் ஆரம்பித்த அவளது அழுகை தேம்பலாகி கதறலானது.. மூர்த்தியின் கண்கள் கலங்கிச் சிவந்தன.. அவன் சட்டென அந்த இடத்தை விட்டு நடந்து விட்டான்..
Reviews – Panivilum Iravu / பனி விழும் இரவு
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.