Chapter 17
‘அப்பாடா.. கணக்கு ஒரு வழியா டேலியாகிருச்சு..’
நிம்மதியுடன் கம்யூட்டருக்கு சட்-டவுன் கொடுத்தாள் அர்ச்சனா.. சீட்டை விட்டு எழுந்து ஹேண்ட் பேகில் இருந்த ஸ்வெட்டரை அணிந்து கொண்டு பேக்கை தோளில் மாட்டிக் கொண்டாள்.. மேனேஜரின் அறையை எட்டிப் பார்த்து போய் வருகிறேன் என்று சொல்லி விட்டு விரல் பதிக்கும் இயந்திரத்தில் பெருவிரல் ரேகையைப் பதித்தாள்..
‘என்னதான் படித்துப் பட்டம் வாங்கினாலும் இந்த கம்யூட்டர் கடைசியில் கைநாட்டா ஆக்கிருச்சு..’
மனதுக்குள் சிரித்தபடி வங்கியின் கதவைத் திறந்து சாலையில் இறங்கினாள்.. கொடைக்கானலின் குளிர், ஸ்வெட்டரையும் மீறி ‘சில்’லென அவளைத் தாக்கியது.. குளிர் நிரம்பிய அந்த சூழல் அவளுக்குப் பிடித்தமானதாக இருந்தது.. வங்கியின் ஓரமாக வாகனங்கள் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த இடத்துக்கு நடந்தாள்.. புத்தம்புது ஸ்கூட்டி அவளை ‘வா’ வென கண் சிமிட்டி அழைத்தது.. அருகில் சென்று தொட்டபோது ஒயிலாக தலையை அசைத்து மயக்கியது..
அவள் புதிதாக ஸ்கூட்டி வாங்க முனைந்தபோது மூர்த்தி அதைத் தடுத்தான்..
“என் காரில் டிராப் பண்ணி பிக்-அப் பண்ணிக்க மாட்டேனா..?” என்று வாதாடினான்.
“டோன்ட் மிஸ்டேக் மி சார்.. உங்களை டிபண்ட் பண்ணாம என் வேலையை நானே பார்த்துக்கனும்னு நினைக்கிறேன்..” என்று அர்ச்சனா மறுத்து விட்டாள்..
இந்த வாக்குவாதத்தில் சாவித்திரி இருவருக்குமே ஆதரவு கொடுக்கவில்லை.. இது உங்கள் பிரச்னை என்பதைப் போல புன்னகையுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்..
‘இந்த புன்னகை இவள் கொடுத்தது..’ அர்ச்சனாவை கனிவுடன் பார்த்தான் மூர்த்தி..
அர்ச்சனாவின் மீது சாவித்திரி ஆழ்ந்த பாசத்தை வைத்திருந்தாள்… அவளது வரவிற்குப் பின்பு சாவித்திரியிடம் தெரிந்த மலர்ச்சியையும் புத்துணர்வையும் மூர்த்தி கவனித்துக் கொண்டுதான் இருந்தான்.. சாவித்திரி மூர்த்தியின் நிழல்..! அவன் எங்கே நகர்ந்தாலும் தானும் நகர்ந்து வரும் நிழல்..! அவன் பிறந்த போது கையில் எடுத்துக் கொண்ட சேவகி..! அவனை வளர்ப்பதற்காக அவனது தாய், தந்தையால் நியமிக்கப்பட்ட ஆயாதான்.. அவனை பாசத்துடன் அரவனைத்து தன்னலமில்லாத அன்பைப் பொழிந்து வளர்த்ததில் அன்னை..! மூர்த்தியைப் பெற்றெடுத்த தாய் வசுந்தராவின் தூரத்துச் சொந்தம்.. குழந்தையில்லை என்பதால் கணவன் மறுமணம் செய்து கொள்ள சாவித்திரி கணவனைப் பிரிந்து தாய் வீட்டிற்கு வந்து விட்டாள்.. சிறுவயதுத் தோழியின் துயரத்தைக் காணச் சகிக்காமல் தன் குழந்தையை வளர்க்கும் சேவகியென்ற பெயரில் தன் குடும்பத்துக்குள் வசுந்தரா அவளை இழுத்துக் கொண்டாள்… அன்று முதல்
இன்று வரை மூர்த்தியை விட்டு அகலாமல் அவனைக் கண்ணுக்குள் வைத்துக் கவனித்துக் கொண்டிருக்கிறாள் சாவித்திரி..
“உன்னை நான் வளர்க்கலை மூர்த்தி.. என்னைத்தான் நீ வாழ வைக்கிறாய்.. உண்மையில் நீ என் தாய்..”
அடிக்கடி இதைச் சொல்லிக் கண்கலங்கும் சாவித்திரி மூர்த்தியின் யசோதை..! தேவகியான வசுந்தரா பெற்றெடுத்த அருமந்தச் செல்வனை மடியில் ஏந்தி வளர்க்கும் பாக்கியம் பெற்ற புண்ணியவதி..
கூட்டுக் குடும்பத்தில் தன் குழந்தையென்று தனிக் கவனம் எடுத்து வளர்க்க முடியாது.. தவிரவும் வசுந்தரா மெலிதான தேகத்துடன் இருப்பாள்.. அதிர்ந்து வேலை செய்து பழக்கமில்லாதவள்.. மூர்த்தியையும் மிருதுவளா-வையும் சாவித்திரிதான் வளர்த்தாள் என்றாலும் மூர்த்தியின் மீதுதான் சாவித்திரி அதிகப் பாசம் வைத்திருந்தாள்.. அவனைத் தரையில் நடக்க விடாமல் இடுப்பில் சுமந்தாள்.. அதற்கான காரணத்தை அவளது ஆழ்மனமே அறியும்..
தாய்மையடைய முடியாதவள் என்று அவளது கணவன் அவள் கண் முன்னே வேறொருத்திக்குத் தாலி கட்டி அவளை உயிருடன் கொன்று புதைத்தான்.. அவனை வேண்டாம் என்று புறக்கணித்து விலக்கி வைத்து விலகி வந்த வைராக்கியசாலிதான் சாவித்திரி.. அவளுக்கு கிட்டாது என எட்டாக்கனியாய் இருந்த தாய்மையை கிட்ட வைத்தவன் மூர்த்தி.. அவளது பிள்ளைக்கலி தீர்க்கப் பிறந்து வந்தவன்.. அவளை ‘ஆயா’ என்று அழைக்காமல் ‘அம்மா’ என்று அழைத்தவன்..
பரம்பரை கோடிஸ்வரரான மதுசூதனன் சில கட்டுதிட்டங்களைக் கொண்டவர்.. ஆயாவை அம்மா என்று அழைப்பதா என்ற அவரது பலமான ஆட்சேபனையினால் மற்றவரின் முன்பு ‘சாவித்திரியம்மா..’ என்று அழைக்கப் பழக்கப் படுத்தப் பட்டாலும் தனிமையில் சாவித்திரியை ‘அம்மா’ என்றுதான் அழைப்பான்..
மூர்த்தியின் தங்கையான மிருதுளா அப்படியல்ல.. அவள் சாவித்திரியிடம் அதிகமாக ஒட்ட மாட்டாள்.. வசுந்தராவுடன்தான் இருப்பாள்.. சாவித்திரியை ‘அம்மா’ என்று அழைக்காமல் ‘சாவித்திரி’ என்று பெயர் சொல்லித்தான் அழைப்பாள்.. மூர்த்தியை விட ஆறு வயது இளையவள் என்பதால் மூர்த்தி தங்கையைக் கண்டிப்பான்.. அவனது கோபத்திற்கு பயந்து ‘சாவித்திரியம்மா’ என்று அழைத்தாலும் அவள் ‘அம்மா’ என்று சாவித்திரியை அழைத்ததே இல்லை…
பெரிய வீட்டில் அதுவே பெரிய விசயம் என்பதால் சாவித்திரி அதைப் பொருட்படுத்தாமல் மிருதுளாவிடம் அன்பாகவே இருப்பாள்.. வளர, வளர மிருதுளாவிடம் கோடிஸ்வரக் குடும்பத்துக்கேயுரிய குணநலன்கள் வளர ஆரம்பித்தன.. அவள் சாவித்திரியை விட்டு முற்றிலுமாக விலகினாள்.. அவள் சாவித்திரி மதுசூதனன் வீட்டில் சமையல்காரியாக மாறினாள்.. அப்போதும் அவளை விட்டு விலகாமல் ‘அம்மா’ என்றழைத்து அவள் கையால் பரிமாறினால்தான் சாப்பிடுவேன் என்று அடம் பிடித்து அவளுக்கான தாய்மை ஸ்தானத்தை அங்கீகரித்து அளித்தவன் மூர்த்தி..
சாவித்திரி மூர்த்தியின் மீது உயிரையே வைத்திருந்தாள்.. அவனுக்காக தன் உயிரையும் கொடுப்பாள்.. மதுசூதனனின் வீட்டை விட்டு மனரணத்துடன் மூர்த்தி வெளியேறிய போது எவரும் சொல்லாமல் அவனுடைய நிழலாக அவனைப் பின்பற்றி வெளியேறியவள் சாவித்திரி.. குடும்பத்தின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு மனக்குமுறலை வெளிக்காட்ட முடியாமல் சூழ்நிலைக் கைதியாக மூர்த்தியின் தாய் வசுந்தரா நின்றிருக்க.. அவனை வளர்த்த தாயான சாவித்திரி எவருக்கும் கட்டுப் படாமல் எனக்கு என் மகன்தான் முக்கியம் என்று சுதந்திரப் பறவையாக அவனைத் தொடர்ந்தாள்.. அன்று மூர்த்தி இருந்த மனநிலையில் சாவித்திரியின் அன்பும் கவனிப்பும் இல்லாமலிருந்திருந்தால் அவன் என்னவாகி இருப்பான் என்றே சொல்ல முடியாது.. அந்த அளவுக்கு மனிதர்களின் மீதும் உறவுகளின் மீதும் நம்பிக்கையற்றுப் போனவனாக அவன் இருந்தான்..
வளர்த்த மகனின் துயரத்திலிருந்து அவனை மீட்க முடியாமல் தானும் அவனது துயரத்தில் பங்கெடுத்து அதில் புதையுண்டு போன சாவித்திரியின் முகத்தில் எப்போதும் ஓர் சோகம் தவழ்ந்து கொண்டே இருக்கும்.. அர்ச்சனாவின் வரவுக்குப் பின்னால் அது தொலைந்து போயிருந்தது..
மூர்த்தியின் ஆட்சேபனையை மீறி அர்ச்சனா பிடிவாதமாக தனக்கென்று ஓர் ஸ்கூட்டியை வாங்கிக் கொண்டாள்.. அதைத் தவணை முறையில் அவள் வாங்கிய போது..
“நான் பணம் கொடுக்க மாட்டேனா..?” என்று அவன் சண்டைக்கு வந்தான்..
“நமக்குள் இருக்கிற டீலை மறந்துட்டுப் பேசறிங்களே சார்..” புன்னகையுடன் அவள் நினைவூட்டினாள்..
“எதற்கெடுத்தாலும் இதை ஒன்னைச் சொல்லிருவியே..” என்றாலும் அவனும் அதற்கு மேல் அவளை வற்புறுத்தவில்லை..
அர்ச்சனாவின் தோழி கொடைக்கானலில் இல்லை, டெல்லிக்கு குடி பெயர்ந்து விட்டாள் என்றானதும் அர்ச்சனா சாத்தூருக்குக் கிளம்பத் துடித்தாள்.. மூர்த்தியின் கேள்விகள் அவளை தடுத்து நிறுத்தின..
“அங்கே போனதும் உன்னை ஆபத்துக்கள் சூழ்ந்து விடும்.. உனக்குன்னு கவர்ண்ட்மெண்ட் வேலையிருக்கு.. நீ லேடிஸ் ஹாஸ்டலில் தங்கிக்கலாம் என்றாலும் அந்த லீலாவதியும் பாண்டுரங்கனும் உன்னை நிம்மதியாய் வேலை செய்ய விட்டு விடுவாங்களா..?”
விட மாட்டார்கள் என்பதில் மனம் கலங்கினாள் அர்ச்சனா.. அதற்காக அவள் கொடைக்கானலிலேயே இருந்து விட முடியுமா..?
“ஏன் முடியாது..?” இலகுவாக கேட்டான் மூர்த்தி..
“எப்படி சார் முடியும்..?”
“முடியாததுன்னு இந்த உலகத்தில் எதுவுமே இல்லை.. நாம முயற்சி மட்டும்தான் செய்யனும்..”
“முயற்சி செய்கிறதுக்கும் ஒரு காரணம் இருக்கனுமில்ல..? கொடைக்கானலில் எனக்குன்னு யாரிருக்கா..?”
“ஏன்..? நாங்க இல்லையா..?”
மூர்த்தியின் ஆழ்ந்த குரல் அவளை உலுக்கியது.. சாவித்திரியைப் பார்த்தாள்.. அவளது விழிகளில் தெரிந்த பாசமும் சொந்தமும் அர்ச்சனாவை அரவணைத்தன.. இது எப்படி சாத்தியமாகும் என்று மலைத்தாள் அர்ச்சனா..
“நீ எங்களை யாரோன்னு நினைக்கிற.. நாங்க உன்னை வேத்து மனுஷியா நினைக்கலை.. எங்க சொந்தமாத்தான் நினைக்கிறோம்..” மனத்தாங்கலுடன் சொன்னாள் சாவித்திரி..
“ஆண்ட்டி.. நான்..” அர்ச்சனா அழுது விட்டாள்..
“அழாதேம்மா..” அர்ச்சனாவின் கண்ணீரை துடைத்து விட்டாள் சாவித்திரி..
“உறவுன்னு சொல்லிக்க ஆளில்லாத அநாதை ஆண்ட்டி நான்..”
“இங்கே உறவுன்னு சொல்லிக்க ஊர் முழுவதும் ஆளிருந்தும் மூர்த்தி தனிச்சு நிற்குது.. நான் அதோட நிழலில் நிற்கிறேன்.. என்னோடு நீயும் சேர்ந்து நின்றாத் தப்பில்ல அர்ச்சனா.. மூர்த்தி ஆதரித்து நிழல் கொடுக்கும் ஆலமரம்..! மூர்த்தியோட நிழலில் நீயிருக்கும் போது யாராலும் உன்னை நெருங்க முடியாது..”
“ஹௌ இஸ் இட் பாஸிபிள்..?”
“முடியும்ன்னு நாம நினைத்தா முடியும் அர்ச்சனா.. உன் பேங்கில இப்போதைக்கு லீவ் சொல்லு… கொடைக்கானலுக்கு டிரான்ஸ்பர் கேளு.. மூர்த்தி அதை ஈஸியா வாங்கிக் கொடுத்து விடும்.. எங்களோடு இருந்தபடி வேலையைப் பாரு..”
கேட்க நன்றாகத்தான் இருந்தது.. மனதுக்கு இதமாகத்தான் இருந்தது.. சுட்டெரித்த வெயிலில் இருந்து தப்பிக்க குளிர் மரத்தின் நிழல் அவளை இருகரம் நீட்டி ‘வா’ வென அழைக்கிறது.. ஏற்றுக் கொண்டால்தான் என்ன..?
களைத்திருந்த மனது இளைப்பாறுதலை விரும்பியது.. சாவித்திரியின் பாசத்தைப் புறக்கணிக்க அர்ச்சனாவினால் முடியவில்லை.. மூர்த்தியைப் பொருத்தவரை அவன் நேர்மையாளன்.. அவன் வீட்டில் தங்கினால் அர்ச்சனாவிற்கும் பாதுகாப்பு கிடைக்குமே..
“ஓகே ஆண்ட்டி..” சம்மதித்த அர்ச்சனா..
“பட்.. ஒன் கண்டிசன்..” என்றாள்..
“என்ன..?” மூர்த்தியின் புருவங்கள் உயர்ந்தன..
“நான் சொல்லப் போகிறதைக் கேட்டு உங்களுக்குச் செமத்தியா கோபம் வரும்தான் சார்.. என்னோட சுயமரியாதையையும் நீங்க கன்சிடர் பண்ணனும்..”
“பண்ணிட்டாப் போச்சு..”
“இங்கே நான் தங்கறதா இருந்தா பேயிங்-கெஸ்ட்டாத்தான் தங்குவேன்..”
அர்ச்சனா சொன்னதின் அர்த்தம் புரியாமல்..
“பேயிங்-கெஸ்ட்டா..? இவ என்ன மூர்த்தி பேய், அது இதுன்னு பயமுறுத்தறா..” என்று மூர்த்தியிடம் அர்த்தம் கேட்டாள் சாவித்திரி..
“அம்மா.. மேடம் பேயைச் சொல்லலை.. அம்மணி இங்கே தங்கறதா இருந்தா நம்ம விருந்தாளியாத் தங்க மாட்டாங்களாம்..” வேண்டுமென்றே ராகம் இழுத்தான் மூர்த்தி..
“அதுவும் சரிதானே.. இந்த வீட்டிலே ஒருத்தியாத் தங்கிக்கறேன்னு சொல்கிறா போல.. தங்கம் போல இருக்கட்டுமே..”
“டயமண்ட் போல கூட இருக்கட்டும்.. எனக்கொன்னும் அப்ஜெக்சன் இல்ல.. அம்மையார் சொல்கிறதே வேற..”
“என்னவாம்..?”
“பணம் கொடுத்துத் தங்கற விருந்தாளியாத்தான் இருப்பாங்களாம்.. அதாவது மேடம் நம்ம வீட்டை ஹாஸ்டலாக்கறாங்க..”
அவன் கோபமாய் சொல்கிறானா இல்லை கேலியாய் சொல்கிறானா என்று கண்டு பிடிக்க முடியாமல் முகம் சிவந்த அர்ச்சனா பேசாமல் இருந்தாள்.. அவளையே துளைப்பதைப் போல அவன் பார்த்து வைத்தான்.. அதை உணர்ந்தவளாய் லேசாக இமைகளை உயர்த்தி அவனைப் பார்ப்பதும் அவனது பார்வையை சந்தித்து விட்டால் பதறிப் போனவளாக இமைகளைத் தாழ்த்திக் கொள்வதுமாக இருந்தாள்.. அவனது இதழ்களில் புன்னகை அரும்பியது.
“ஓகே.. உன் உணர்வுகளையும் சுயமரியாதையையும் நான் மதிக்கிறேன்.. உன் விருப்பம் போல இந்த வீட்டில் பேயிங்-கெஸ்ட்டா இருந்துக்கலாம்.. இப்போ சந்தோசம் தானே..?”
“சந்தோசம்தான் சார்.. என்னுடைய செலவுகளை நானே பார்த்துக்குவேன்.. அதிலும் நீங்க தலையிடக் கூடாது..”
அடுத்தடுத்த அவளது நிபந்தனைகளில் ஆட்சேபம் கொண்டவனாய் இமைக்காமல் அவளைப் பார்த்து தன் ஆட்சேபத்தை அவன் உணர்த்தினான்.. படபடக்கும் இமைகளோடு அவனது பார்வையை பிடிவாதமாக அவள் எதிர் கொண்டு நின்றதில் இதழோரப் புன்னகையுடன்..
“எதிலும் பிடிவாதம்..! ஊம்..? ஓகே டன்..” என்று அவளது நிபந்தனைகளை ஒப்புக் கொண்டான்..
இப்படித்தான் அர்ச்சனா மூர்த்தியின் இல்லத்தில் அடைக்கலமானாள்..
Reviews – Panivilum Iravu / பனி விழும் இரவு
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.