Chapter 23
மாயா..!
மைதாமாவும், சந்தனமும், அரைத்த மஞ்சளும் சேர்ந்து வந்தால் என்ன நிறத்திலிருக்குமோ அது போன்றதொரு நிறத்துடன் மிளிர்பவள்.. மாசு, மருவற்ற வெள்ளை வெளேர் என்ற சருமத்திற்குச் சொந்தக்காரி.. அகன்ற கருவிழிகளும் ஒல்லியான தேகமுமாக ஆளை அயர வைக்கும் பேரழகுடன் திகழ்பவள்.. மூர்த்தியின் காதலி..!
மாயாவின் பெற்றோர் சென்னையில் வசித்தார்கள்.. அப்பா தொழிலதிபர்.. அம்மா கணவரின் தொழில்களில் பங்குதாரர்.. இருவரும் நிற்க நேரமில்லாமல் பணத்தைத் துரத்திக் கொண்டு ஓடிக் கொண்டிருப்பவர்கள்.. ஒற்றைப் பெண் குழந்தையைக் கவனித்து வளர்க்க முடியாமல் கொடைக்கானல் கான்வென்டில் சேர்த்திருந்தார்கள்.. மாயா ஹாஸ்டலில் தங்கிப் படித்து வந்தாள்.. மூர்த்தி அவளுக்கு சீனியரோ சீனியர்..
பிளஸ்-டூ படித்துக் கொண்டிருந்தவன் ஓர் மழை நேரத்துக் காலை வெயிலில் பள்ளி மைதானத்தில் கால் தடுக்கி விழுந்து விட்டக் குழந்தைப் பெண்ணாக மாயாவை சந்தித்தான்.. அப்போது அவள் ஆறாம் வகுப்பில் இருந்தாள்.. பெரிய விழிகளும் குண்டுக் கன்னமுமாக இருந்த அந்த அழகுச் சிறுமியின் கரிய விழிகளில் தெரிந்த ஏக்கம் மூர்த்தியை பாதித்தது.. கை தூக்கி விட எவரும் முன்வராமல் கை கொட்டிச் சிரித்த அவமானத்தில் அழுகையை அடக்க முயன்றபடி அவள் எழுந்து கொள்ள முனைந்தபோது அவள் முன் வலிய கரம் ஒன்று நீண்டது.. திகைப்புடன் நிமிர்ந்து பார்த்தவளிடம் சிநேகிதமாக சிரித்த மூர்த்தி..
“கமான்..” என்றான்..
கைகொட்டிச் சிரித்த மற்றவர்களின் சிரிப்புக்கும், மூர்த்தியின் சிரிப்புக்கும்தான் எத்துனை வித்தியாசம்..!
மாயாவின் விழிகளில் தெரிந்த ஏக்கம் தொலைந்து போனது.. அழுகையை அடக்கியதில் துடித்த இதழ்கள் மலர்ந்து சிரித்தன.. மூர்த்தியின் கையைப் பற்றியபடி எழுந்து நின்றாள்..
“தடுக்கி விழாதவங்க யாரிருக்கா..? சொல்லு.. கால் தடுக்கினா விழுந்துதானே ஆகனும்..? இதுக்குப் போய் மூட்-அவுட் ஆகலாமா..?”
இதமாக மூர்த்தி பேசிய விதம் மாயாவைக் கவர்ந்து விட்டது.. பனிரெண்டாம் வகுப்பில் படிக்கும் சீனியர் மாணவன் என்ற தோரணையுடன் பரிவாகப் பேசியவனை ஆர்வமாக பார்த்து வைத்தாள்.. அரும்பு மீசையும், அலைபாயும் கரிய முடியும், உயரமான தோற்றமுமாக அவன் ஒரு கதாநாயகனைப் போல இருந்தான்.. குழந்தையிடம் பேசும் பரிவுடன்தான் அவளிடம் பேசினான்.
“எந்த ஊர்..?”
“சென்னை..”
“ஹாஸ்டலா..?”
“ம்ம்ம்..”
“உன் பெயர் என்ன..?”
“மாயா..”
“எந்த கிளாஸ்..?”
“சிக்ஸ்த் ஸ்டாண்ட்ர்டு..”
“இனிமே கீழே விழுந்தா எழுந்துக்கப் பார்க்கனும்.. அழக்கூடாது..”
சிரிப்புடன் அறிவுறுத்தி விட்டுப் போய் விட்டான்.. அவளைப் பற்றிய விவரங்களைக் கேட்டவன் அவனைப் பற்றி எதுவும் சொல்லவில்லையே என்று அவள் மனம் சிணுங்கியது..
‘இவன் சொல்லாட்டி என்ன.. நானே கண்டு பிடிச்சுக்கறேன்..’
நினைத்ததைப் போல அவனைப் பற்றிய அனைத்து விவரங்களையும் அவள் சேகரித்து விட்டாள்..
“அந்த சீனியரா..? அவன் ரௌடி ஸ்டூடண்ட்.. யாராய் இருந்தாலும் சட்டுன்னு கை நீட்டிருவானாம்.. டேன்ஜரஸ் ஃபெல்லோ..”
“உன்னிடம் அவனைப்பத்தின ஒப்பினியனைக் கேட்டேனா..? யார் அவன்னு சொல்லுடின்னா.. ‘டேன்ஜரஸ் ஃபெல்லோ’ங்கிறா..”
“அவன் பெரிய பணக்கார வீட்டுப் பையன்டி..”
“இங்கே படிக்கிற எல்லோருமே ரிச் பேமிலிதான்..”
“இவன் ரிச்சோ ரிச்.. கொடைக்கானலிலே இவங்க பேமிலிக்கு சாக்லெட் பேக்டரி, ஸ்டார் ஹோட்டல், எஸ்டேட், ஹாப்பிங் காம்ப்ளெக்ஸ், ரிசார்ட்ஸ்ன்னு நிறைய புராப்பர்ட்டீஸ் இருக்கு.. சென்னையிலும் ஈஸி ஆர் ரோட்டில ரிசார்ட்டுகள் இருக்கிறதாச் சொல்லிக்கிறாங்க.. அங்கே பங்களாஸ் வேற இருக்காம்..”
மாயாவின் மனதில் மூர்த்தி எவ்வளவு ஆழமாகப் பதிந்தானோ அதைவிட ஆழமாக அவன் மிகப்பெரிய பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவன் என்ற விவரமும் பதிந்து விட்டது.. அதன் பின்னால் அவள் தினமும் மூர்த்தியின் வகுப்புக்கு அருகில் சென்று வருவாள்.. அவனைப் பார்ப்பாள்.. அவன் மரத்தடியிலோ வகுப்பிலோ சக மாணவர்களுடன் அரட்டையடித்துக் கொண்டிருப்பான்.. இவள் வந்து போவதை அவன் பார்த்ததில்லை.. இப்படியே நாள்கள் கழிந்து அவன் பள்ளியிறுதித் தேர்வை எழுதி முடித்து விட்டுப் பள்ளியை விட்டுச் சென்று விட்டான்.. அடுத்த கல்வியாண்டில் அவனைப் பார்க்க முடியாமல் பிழியப் பிழிய அழுதாள் மாயா.. அவளது மனதை இனம் புரியாத சோகம் ஆக்ரமித்துக் கொண்டது..
“என்னடி நீ.. இப்படி ஆகிப் போயிட்ட..?”
கொடைக்கானலைச் சேர்ந்த வகுப்புத் தோழி விசாரித்தாள்.. என்னவென்று மாயா சொன்னதும் அவளை ஒரு தினுசாய் பார்த்து வைத்தாள்..
“செவன்த் ஸ்டாண்டர்டிலேயே லவ்வா..?”
“ச்சீ.. அப்படியொன்னுமில்ல..”
“பின்னே..?”
“எனக்கு அவன் எங்கேயிருக்கான்னு தெரியனும்டி.. இனிமே அவனை பார்க்கவே முடியாதா..?”
“அவனை எதுக்குடி நீ பார்க்கனும்..?”
“தெரியலை..”
“என்னவோ செய்து தொலை.. அவன் எங்கே போனாலும் கொடைக்கானலுக்கு வந்துதான் ஆகனும்..”
“எப்படி..?”
“அவனோட பேமிலி இங்கேதானேடி இருக்கு..?”
“தட்’ஸ் தி பாயிண்ட்..”
மாயா குதூகலமானாள்.. மூர்த்தி சென்னையில் பி.ஈ படிப்பதாகவும் விடுமுறை தினங்களில் கொடைக்கானலுக்கு வந்து போவான் என்றும் அந்தத் தோழி கூறினாள்.. அப்படி அவன் வரும் தினங்களில் சந்தர்ப்பம் கிடைத்தால் மாயா அவனைப் பார்க்கலாம் என்றும் யோசனை சொன்னாள்.. வருடத்திற்கு ஒருமுறை அப்படிப்பட்ட சந்தர்ப்பம் கிடைக்கத்தான் செய்தது.. மாயா அவனை தொலைவிலிருந்து பார்த்தாள்.. அவன் அவளைப் பார்த்ததில்லை.. என்ஜினியரிங் படிப்பை முடித்து அவன் கொடைக்கானலுக்கு வந்தபோது கோக்கர்ஸ் வால்க்கிஸில் ஓர்நாள் அவன் மாயாவைச் சந்தித்தான்..
மாயா பிளஸ்-ஒன் முடித்து பிளஸ்-டூவில் காலடி வைத்திருந்தாள்.. உயரமாக அழகாக அன்றுதான் பூத்த புது மலர்போல அழகின் இலக்கணமாய் இருந்தவளை அவன் பார்த்தபோது யாரோ ஒருத்தியைப் பார்ப்பதைப் போலப் பார்த்தபடி கடந்து செல்லப் போனான்.. இருவரும் எதிரெதிர் திசைகளில் இருந்து நடந்து வந்தார்கள்.. அவனைப் பார்த்த மாயாவின் பார்வையில் தெரிந்த மின்னல் அவனைக் கடந்து செல்ல விடாமல் கால்களைக் கட்டிப் போட்டது.. அவன் தேங்கி நின்றான்..
‘யார் இவள்..?’
பதினேழு வயதுப் பிராயத்துக்கேயுரிய வனப்பு அவளிடம் குடி கொண்டிருந்தது.. யௌவனத்தின லாவண்யமும் ரம்யமும் அவளிடம் நிறைந்திருந்தன.. சிறுமிக்குரிய அறியாமை அகன்று கன்னிப் பருவத்தின் குறுகுறுப்பு அவள் முகத்தில் விரவியிருந்தது.. படபடக்கும் இமைகளோடு மூர்த்தியை அவள் பார்த்த பார்வையில் மூர்த்தி அப்படியே நின்று விட்டான்..
“ஹௌ ஆர் யு..?” மாயா கேட்டாள்..
தெரிந்தவளைப் போல அவள் கேட்ட கேள்வியில் புருவங்களை உயர்த்தியவன்..
“ஃபைன்.. ஹீ ஆர் யு..?” என்று பதிலுக்கு கேட்டான்..
“ஐ ஆம் மாயா.. ஸ்கூலில் உங்களுக்கு ஜூனியர்..”
“ஓ.. என்னை ஸ்கூலில் பார்த்திருக்கிறாயா..?”
“ம்ம்ம்..”
மூர்த்திக்கு வியப்பாக இருந்தது.. அவனை விட ஆறுவயது இளைய சிறுமி அவனைக் கண்காணித்திருக்கிறாள் என்பதில் அவனுக்குள் பரவசம் பரவியது.. அவன் எம்.பி.ஏ படிக்கப் பூனா போனான்.. போவதற்கு முன்னால் அவளைச் சந்தித்துச் சொல்லி விட்டுச் சென்றான்.. செல்போனில் உறவு வலுத்தது.. மாயா பள்ளிப் படிப்பை முடித்து சென்னையின் பொறியியல் கல்லூரியில் சேர்ந்தாள்.. சுதந்திரப் பறவையாய் சிறகை விரித்தவளைத் தேடி வந்து சந்தித்தான் மூர்த்தி.. காதல் வளர்ந்தது.. அவளில்லாமல் அவனில்லையென்று ஆகிப் போனான் மூர்த்தி..
எம்.பி.ஏ முடித்து கொடைக்கானலுக்குத் திரும்பினான்… மாயா அவனைச் சந்திக்கக் கொடைக்கானலுக்கே வந்து சென்றாள்.. அவர்களது காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்தது.. மாயாவின் ஸ்டேட்டஸ் மதுசூதனன் குடும்பத்தின் ஸ்டேட்டஸ்க்கு இணையாக இருந்ததில்..
“உன் வாழ்க்கையிலேயே நீ செய்த உருப்படியான காரியம் இதுதாண்டா.. எங்கே எப்போதும் போல பொதுவுடைமைத் தத்துவத்தைப் பேசிக்கிட்டு ரோட்டில் போகிற எவளோ ஒருத்தியை இழுத்துக் கொண்டு வந்து இவளைத்தான் நான் கட்டிக்கப் போகிறேன்னு சொல்லிருவியோன்னு பயந்துக்கிட்டே இருந்தேன்.. கடவுள் என்னைக் காப்பாற்றி விட்டார்..” என்று நெஞ்சை நீவி விட்டுக் கொண்டார் மதுசூதனன்..
மாயாவின் பெற்றோர் மதுசூதனனிடம் சம்பந்தம் பேச வந்தார்கள்.. தன் சம்மதத்தை மதுசூதனன் தெரிவித்து விட்டார்.. மாயாவின் படிப்பு முடிந்ததும் திருமணம்
என்று பேசி முடித்தனர்.. திருமணம் முடிவாகி விட்ட உரிமையில் மாயா கொடைக்கானலுக்கு அடிக்கடி வருவாள்.. மதுசூதனனின் வீட்டில் தங்குவாள்..
அந்தக் குடும்பத்தின் மருமகள் என்ற சொந்தத்துடன் அனைவரிடடும் பழகுவாள்..
மூர்த்தியின் காதலி, அவனது வருங்கால மனைவி என்ற அடையாளத்துடன் இருக்கும் மாயாவை அடையத் துடித்தான் நவீன்.. அவள் வரும்போது பேசிப் பழக முனைவான்.. அவள் இரண்டொரு வார்த்தைகளில் கழன்று விலகிச் சென்று விடுவாள்.. அந்தப் புறக்கணிப்பு நவீனின் மனதைச் சுட்டுக் கொண்டிருந்தது..
“ஏன் தாத்தா.. மாயாவை நான் காதலிக்கக் கூடாதா..?” நவீன் ஆத்திரமாகக் கேட்டான்..
உன் மனதில் இருக்கும் பெண் யார் என்று கேட்ட கேள்விக்கு மாயாவின் பெயரை அவன் சொல்லி விட்டதில் அதிர்ச்சியாகியிருந்த மதுசூதனன்..
“முட்டாளாடா நீ..” என்று மூத்த பேரனைக் கோபித்துக் கொண்டார்..
“நீங்க என்ன சொன்னாலும் என் தாத்தான்னு உங்க காலைச் சுற்றிச்சுற்றி வருகிறேனில்ல.. நான் முட்டாள்தான் தாத்தா..” மிகச் சரியாக அவரது வாயை அடைத்தான் நவீன்..
“எல்லாம் சரிதாண்டா.. அந்தப் பெண் மூர்த்தியைக் காதலிக்குதே..” தாடையைத் தடவினார் மதுசூதனன்..
“ஏன் காதலிக்குது..? அவன் மதுசூதனன் குடும்பத்தில் பிறந்தவன்.. மதுசூதனனோட பேரன் அப்படிங்கிற அடையாளம் அவனுக்கு இருக்கிறதாலே காதலிக்குது.. அதை இல்லாம ஆக்குங்க தாத்தா… அப்புறம் எப்படி அந்தக் காதல் நிலைக்குதுன்னு நானும் பார்க்கிறேன்..” வழி சொல்லிக் கொடுத்தான் நவீன்..
“எப்படிடா..?” மதுசூதனன் அவன் விரித்த வலையில் மாட்டிக் கொண்டார்..
‘ஒரே கல்லில் இரண்டு மாம்பழம்..’
குதூகலமானான் நவீன்.. மூர்த்தியிடமிருந்து சாக்லெட் பேக்டரியையும் பறிமுதல் செய்து விடலாம்.. அதன் மூலம் அவனைச் செல்லாக் காசாக்கி மாயாவின் குடும்பத்தாரை விலக வைத்து மாயாவையும் அடைந்து விடலாம்..
நல்லவர்கள் தீட்டும் திட்டங்கள் பலித்தால் நாடு நலமாக இருக்கும்.. அதுவே தீயவர்கள் தீட்டும் திட்டங்கள் பலிக்க ஆரம்பித்தால் என்ன ஆகும்..?
நடக்கக் கூடாது எல்லாம் நடக்கும்..
மூர்த்தியின் வாழ்வில் அதுதான் நடந்தது.. அது, இது என ஆயிரம் காரணங்களைக் கூறி மூர்த்தியிடமிருந்த சாக்லெட் பேக்டரியைப் பறித்து நவீனுக்குக் கொடுத்து விட்டார் மதுசூதனன்.. அதையும் அவன் பணம் கொடுத்து வாங்கியிருப்பதாக கிரயப் பத்திரம் பதிவாகியிருந்தது.. அடுத்த சில நாள்களில் என்ன நடந்ததோ, ஏது நடந்ததோ.. நவீனுக்கும் மாயாவுக்கும் திருமணம் நிச்சயமாகி விட்டது..
அன்றைய மாலைப் பொழுதை வாழ்நாள் முழுவதும் மூர்த்தி மறக்கவே மாட்டான்.. சொத்துக்கள் பறிக்கப் பட்டதைப் பற்றிய கவலை ஏதுமின்றி புதிய தொழில்களை ஆரம்பிக்கும் ஏற்பாடுகளை அவன் ஆரம்பித்திருந்தான்.. கோவிந்தராஜன் அதற்கான பணஉதவியைச் செய்தார்.. வசுந்தரா அவளது வைர நகைகள் இருந்த வெட்டகத்தை அப்படியே தூக்கி மகனிடம் கொடுத்து விட்டாள்..
“அப்பா கொடுத்த பணம் கடன்தான்ம்மா.. உங்க நகைகளை அடமானமாத்தான் வைக்கப் போறேன்.. சீக்கிரமா அப்பாவோட பணத்தையும், உங்க நகைகளையும் திருப்பிக் கொடுத்திருவேன்ம்மா..”
உறுதியுடன் சொன்ன மகனை பனித்த கண்களுடன் அரவணைத்துக் கொண்ட வசுந்தரா..
“நீ செய்வ மூர்த்தி.. நாங்க உன்னை நம்பறோம்டா..” என்று அழுதாள்..
கோவிந்தராஜன் அழவில்லை என்றாலும் மகனுக்கு இழைக்கப்படும் அநீதிகளைப் பொறுக்க முடியாத துயர் அவரது விழிகளில் மண்டியிருந்தது.. மூர்த்தி தொழில்களை ஆரம்பிப்பதில் முனைப்பாக இருந்த ஒர் பொன் மாலைப் பொழுதில்தான் மனதில் பலத்த அடியை வாங்கினான்..
Reviews – Panivilum Iravu / பனி விழும் இரவு
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.