Chapter 06
ஆயர்பாடியின் கள்ளத்தனம் மிக்க கண்ணனை யாருக்குத்தான் பிடிக்காது..? உண்மை போல பேசும் அவனது பொய்கள் யாரைத்தான் வசீகரிக்காது..? அவனின் அடாவடி கலந்த அட்டூழியத்தை ரசிக்காத கோபிகையர் கோகுலத்தில் இருந்திருக்கிறார்களா..?
மோகனும் அது போல்தான் என்று தோன்றியது சுசரிதாவிற்கு.. அவன் அடிக்கும் லூட்டியை அறிந்து வைத்திருப்பவர்களும் அதில் விழுந்து விடுகிறார்கள் என்றால் அவனுடைய அடாவடித்தனத்தை அவள் என்னவென்று சொல்லுவாள்..?
“என்னடா அன்பு.. உன்னோட அன்புத்தங்கை என்கிட்ட ஏதோ சொல்ல நினைக்கிறதைப் போல இருக்கு..” என்றான் மோகன்..
“தங்கையா..?” அன்பழகன் திகைத்தான்..
“தங்கை தாண்டா.. இவங்க உன்மேல காண்பிக்கிற நம்பிக்கையும் பாசமும் உன்னை பாசமலர் சிவாஜியப் போலவே காண்பிக்குதுடா மச்சி..” அடித்துச் சொன்னான் மோகன்..
அன்பழகன் அழமாட்டாத குறையாக மோகனைப் பார்த்த பார்வையில் அழகான பெண்களையெல்லாம் எதற்காக மோகன் அன்பழகனுக்கு மட்டும் தங்கைகளாக்கு கிறான் என்ற ஆற்றாமை இருந்தது.. மோகன் அதைப் பற்றியெல்லாம் கண்டு கொள்ளவே இல்லை..
“என்ன மாதிரியான அண்ணன்டா நீ.. இந்நேரத்துக்கு உன் தங்கைகிட்ட விலாவாரியா விளக்கம் கேட்டிருக்க வேணாமா..?” என்று அன்பழகனை முடுக்கி விடுவதிலேயே குறியாய் இருந்தான்..
அன்பழகன் அழுது விடுபவனைப் போல ஆகிவிட்டதில்..
“விடுங்க அன்பு சார்.. நான் இவர்கிட்ட பேசிக்கறேன்..” என்று அவனை ஆறுதல் படுத்தினாள் சுசரிதா..
“அன்பு சாரா..? அண்ணன்ம்மா..” எடுத்துக் கொடுத்தான் மோகன்..
“அந்த உறவு முறையையெல்லாம் நாங்க பார்த்துக் கிறோம்.. உங்களுக்கு அந்தக் கவலை வேணாம்..”
“அப்படிச் சொன்ன எப்படி..? பக்கத்திலேயே பாச மலர்கள வைச்சுக்கிட்டு.. அவங்கள பேசாம இருக்க விட்டா என் மனசு ஆறாது..”
“அது எதுக்காக ஆற மாட்டேங்குதுன்னு எங்களுக்கும் தெரியும்.. நீங்க ஒன்னும் பாசப்பயிருக்கு தண்ணி பாய்ச்ச வேணாம்.. அம்மாவாமில்ல.. யாருக்கு யார் அம்மா..?”
“ஓ.. நீங்க அப்படி வர்றீங்களா..? நிச்சயமா எனக்கு நீங்க அம்மா இல்ல.. எங்கம்மா வீட்டில இருக்காங்க..”
மோகனின் கள்ளத்தனம் மிக்க விழிகளில் அவனுக்கு அவள் யார் என்ற செய்தி இருந்தது.. அவள் உதட்டைக் கடித்துக் கொண்டாள்.. மோகன் அவளை பார்வையால் மொய்த்தபடி கம்யூட்டரைத் தட்டினான்..
“லதிகாகிட்ட என்ன பேசிக்கிட்டு இருந்தீங்க..?” என்று கேட்டான்…
“அவளோட குரலினிமையைப் பத்திப் பேசலை..” வெடுக்கென்று பதில் சொன்னாள் சுசரிதா..
“இருந்தாத்தான அதைப் பத்திப் பேச முடியும்..?” என்றான் மோகன்..
“இந்த சீட்டோட வொர்க்கப் பத்தி உங்களுக்குத் தெரியுமா..?”
“இதத்தான் லதிகாகிட்டக் கேட்டிங்களா..?”
“ம்ம்ம்..”
“அவளே இதப் பாத்தா பூதத்தப் பாத்ததைப் போல அலறுவா.. அவகிட்டப் போயி இந்த சீட்டோட வேலையைக் கேட்டிருக்கீங்களே..”
‘என்னடா இது..?’ இமைகொட்டி விழித்தாள் சுசரிதா.
இவன் இத்தனை குணசாலியாகவும் பேசுவானா..?
‘பயபுள்ள.. எதுக்காக இந்த பம்மு பம்முது..?’
சுசரிதாவிற்கு சந்தேகமாக இருந்தது.. அவள் அறிந்த மோகன் எந்தவொரு கணக்கீட்டிலும் அடங்காதவன்.. அவனாவது இத்தனை தன்மையாக பேசுவதாவது..
இருந்தாலும் அவளுக்கு வேலை ஆக வேண்டும்.. அவன் மனதில் என்ன இருக்கிறது என்று கண்டு பிடிக்க வேண்டுமானால் அவன் பேசுகிற போக்கில்தானே அவளும் பேசியாக வேண்டும்..?
“எனக்குத் தெரியாது மோகன் சார்..”
“என்ன சொன்னீங்க..? என் பெயரையா சொன்னீங்க..?”
“உங்க பெயர்தான மோகன்..?”
“இந்த ஆபிசிலேயே ஒத்தை மோகன்தான் இருக்கேன்ங்க..”
“ஒன்னையே இந்த ஆபிசாலே தாங்க முடியலை..”
“ஓஹோ..”
மோகன் தாடையைத் தடவியபடி அவளைப் பெண் பார்க்க வந்தவனைப் போல பார்த்துக் கொண்டிருந்தான்.. இடைவிடாத அவனது அந்தப் பார்வை அவளுக்கு இம்சையாக இருந்தது.. அவன் அவள் வந்த தினத்திலிருந்து அந்த தினம் வரை அப்படித்தான் பார்த்து வைக்கிறான் என்பதை அவள் நினைவு கூர்ந்தாள்..
“இப்ப என்ன செய்கிறதா உத்தேசம்..?”
“எதுவும் தெரியலைன்னு மேடத்துக்கிட்டப் போய் சொல்லி விடறதா உத்தேசம்..” எரிச்சலுடன் சொன்னாள் சுசரிதா..
‘ஒருவார்த்தையாவது எனக்கு இந்த சீட்டின் வேலைகளைத் தெரியும்… வா உனக்குச் சொல்லிக் கொடுக்கிறேன் என்று சொல்கிறானான்னு பாரு..’ என்று அவள் மனம் பொருமியது..
‘அந்த ரப்பர் மூஞ்சி லதிகாகிட்டப் போயி வேலை சொல்லித்தான்னு கேக்கத் தெரியுது.. பக்கத்திலேயே உக்காந்திருக்கேன்.. என்கிட்ட ஒருவார்த்தை சொல்லிக் கொடுடான்னு கேட்கத் தெரியுதா..?’ அவன் பல்லைக் கடித்தான்..
‘திமிர்.. உடம்பெல்லாம் திமிர்.. இவனுக்குத்தான் எல்லாம் தெரியும்ங்கிற திமிர்.. யாரையும் வசியம் பண்ணிக் கவிழ்த்துடறானில்ல.. அந்தத் திமிர்..’
‘தெனாவெட்டு.. இவன்கிட்டயெல்லாம் எதுக்காக கேக்கனும்கிற தெனாவெட்டு.. எல்லாத்தையும் வசியம் பண்றவன இவ வசியம் பண்ணி வச்சிருக்காள்ல.. அந்த தெனாவெட்டு..’
‘இவன் சொல்லிக் கொடுக்கலைன்னா என்னால இந்த வேலையைச் செய்ய முடியாதா..?’
வீம்புடன் மோகன் பக்கம் திரும்பாமல் கம்யூட்டருடன் மல்லுக்கட்ட ஆரம்பித்தாள் சுசரிதா.. அவளைப் பார்த்து உதட்டைப் பிதுக்கிவிட்டு.. வேறுபக்கமாக திரும்பிக் கொண்டான் மோகன்..
ஒருவாரம் ஓடியது… சுசரிதாவை அவர்களின் உயரதிகாரி அழைத்தாள்… சுசரிதா வெளிறிப் போன முகத்துடன் எழுந்து போனாள்..
“ஸ்டேட்மென்ட் என்ன ஆச்சு..?”
அவர்களுடைய உயர் அதிகாரியான தாரா கேட்டாள்..
“ரெடி பண்ணிக்கிட்டு இருக்கேன் மேம்..” நடுக்கத்துடன் பதில் சொன்னாள் சுசரிதா..
“ஒரு மாதமா ரெடி பண்ணுவீங்களா..? நீங்க ஜாயின் பண்ணினது ஒன்னாந் தேதியில.. இன்னைக்கு தேதி என்ன..? முப்பத்தி ஒன்னு.. ஒரு மாதமா உங்க வொர்க்கை முடிக்க முடியலைன்னா நீங்க இந்த வேலைக்கே தகுதியில்லைன்னு அர்த்தம் சுசரிதா..” தாராவின் குரல் உயர்ந்தது..
“மேம்..” சுசரிதாவின் கண்கள் கலங்கி விட்டன..
“ஐ டோன்ட் வான்ட் திஸ்.. இது ஆபிஸ்.. எதுக் கெடுத்தாலும் கண்ணைக் கசக்கிறது பேட் ஹேபிட்.”
“மேம்.. வொர்க்க ஸ்டடி பண்ண முடியல..”
“ஏன் முடியல..? முடியாதுங்கிறது முட்டாள்களின் அகராதி.. நீங்க முட்டாளா..?”
சுசரிதாவிற்கு வாழ்க்கை வெறுத்தது.. தாராவின் கோபத்தைப் பற்றி அந்த அலுவலகத்தில் இருந்த அத்தனை பேரும் அவளிடம் சொல்லியிருந்தார்கள்.. சொன்ன வேலையை குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் முடித்துக் கொடுத்தால் அவள் தேவதை..!. காலம் தாழ்த்தினால் அவள் ராட்சசி..!
அன்று அவள் ராட்சசியாக மாறிக் கொண்டிருக்க.. அவளுடைய கோபத்திலிருந்து தப்பிக்கும் மார்க்கம் அறியாமல் தவித்தாள் சுசரிதா..
“டெல் மீ த ரீசன்..” தாரா கத்திக் கொண்டிருந்த போது..
“எக்ஸ்யூஸ் மி மேம்..” என்றபடி உள்ளே வந்தான் மோகன்..
‘இவன் எதுக்காக இப்ப இங்கே வந்து தொலைச் சிருக்கான்..’ சுசரிதா அவரமாக அவளது கலங்கிய கண்களை அவன் கண்டுவிடாமலிருக்கும் பொருட்டு வேறுபக்கமாக திரும்பிக் கொண்டாள்..
அவன் முன்னால் தாராவிடம் திட்டு வாங்கி விடாமலிருக்க வேண்டுமே என்று அவள் மனம் தவித்தது..
“வாட் இஸ் தி மேட்டர் மோகன்..?” கோபம் குறையாமல் கேட்டாள் தாரா..
“இவங்க நீங்க கூப்பிடற அவசரத்தில இவங்க பிரான்சோட ஸ்டேட்மெண்ட்ஸை கையில எடுத்துக்காம வந்திட்டாங்க.. அதைக் கொடுத்துட்டுப் போகலாம்ன்னு வந்தேன் மேம்..”
மோகனின் நீட்டிய கையில் கற்றையாக பிரிண்ட் எடுக்கப்பட்ட பேப்பர்கள் இருந்தன.. சுசரிதா திறந்த வாயை மூட மறந்தவளாக அப்படியே நின்று விட்டாள்.. அவளால் கண் முன்னால் காண்பதை நம்ப முடியவில்லை…
‘இது எப்படி சாத்தியமானது..?’
தாரா மோகனின் கையிலிருந்து பேப்பர்களை வாங்கிப் புரட்டிப் பார்த்தாள்.. அவள் முகம் கொதிப்பிலிருந்து மாறி குளிர் நிலைக்குப் போனது.. தேவதையாக மாறியவள் சுசரிதாவை பார்த்தாள்..
“உங்க வொர்க்கைத்தான் ஃபினிஷ் பண்ணிட்டிங்களே.. அப்புறமும் எதுக்காக ரெடி பண்ணிக்கிட்டு இருக்கீங்கன்னு சொன்னீங்க..?” என்று கேட்டாள்..
“ஆக்சுவலா மேம்.. இந்த பேப்பரெல்லாம் அடுக்காம இருந்தது.. அதச் சொல்லியிருப்பாங்களோ என்னவோ..” என்றான் மோகன்..
“அப்படியா..?” தாரா அந்தப் பதிலில் திருப்தி அடைந்தாலும்..
“இன்னும் வொர்க்கை ஸ்டடி பண்ணலைன்னு சொன்னாங்களே..?” என்று கேட்டாள்..
“இதான மேம் இவங்களோட பர்ஸ்ட் மன்த்லி ஸ்டேட்மென்ட்ஸ்.. இதெல்லாம் கரெக்டோ.. தப்போன்னு சந்தேகப் பட்டுக்கிட்டே இருந்தாங்க.. நான் சொன்னேன்.. நம்ம மேம் கீழேவொர்க் பண்றவங்க கரெக்டாத்தான் வொர்க் பண்ணுவாங்க.. அவங்க மிஸ்டேக் பண்ணவே மாட்டாங்க.. அதைப் போலதான் அவங்களோட ஸ்டாபும் இருப்பாங்கன்னேன்.. தலைவி எவ்வழியோ அவ்வழிதானே மேம் தொண்டர் படைக்கும்..?” மோகன் பவ்யமாக சொன்ன விதத்தில் சுசரிதா அயர்ந்து போனாள்..
‘இவனுக்கு இப்படிக்கூடப் பேசத் தெரியுமா..?’
அவனுடைய ஐஸ் மலையைப் பற்றி அறிந்தும் அறியாதவளைப் போல புன்னகையுடன் சுசரிதா அனுப்ப வேண்டிய பேப்பர்களில் கையெழுத்திட்டாள் தாரா..
Reviews – Poiselanerangalil Azhakanathu / பொய் சில நேரங்களில் அழகானது
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.