Chapter 18

0Shares

போர்டிகோவில் டூ வீலரை நிறுத்தி விட்டு மோகன் வீட்டுக்குள் போனபோது அங்கே பலமான வாக்குவாதம் நிகழ்ந்து கொண்டிருந்தது.. 

எனக்கென்ன என்று சுவரில் சாய்ந்து உட்கார்ந்திருந்த மாளவிகா ஆக்ரோசமாய் சண்டை போட்டுக் கொண்டிருந்த சரவணனின் வாயையும் கார்த்திகாவின் வாயையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள்..

‘என்ன..?’ சைகையில் கேட்டான் மோகன்..

‘உன்னாலேதான்..’ சைகையிலேயே பதில் சொன்னாள் மாளவிகா..

‘என்னாலா..?’ மோகன் தாய் தந்தையின் சண்டையைக் கவனித்தபடி சோபாவில் உட்கார்ந்து ‘ஷீ’ வைக் கழட்டினான்..

“என் தங்கச்சி பொண்ணுக்கு என்னடி குறைச்சல்..?”

“அவளே குறைதான்.. இதில புதுசா ஒரு குறைச்சல சொல்லனுமா..?”

“உன் அண்ணன் மக மட்டும் என்ன அதிரூப சுந்தரியா..?”

“உங்க தங்கை மக மாதிரி கோட்டானில்ல..”

“என் தங்கச்சி மக ‘கோட்டான்’னா.. உன் அண்ணன் மக ‘குரங்கு..'”

“என் அண்ணன் மகளைப் பத்தி நீங்க போதீங்க.. உங்க தங்கை மக வருணாச்சலத்தைப் பத்தி எனக்குத் தெரியாதா..?”

“உன் அண்ணன் மக மட்டும் லட்சணமா..?”

“உங்க தங்கச்சி மகளை விட லட்சணம்தான்..”

“அதை நீ சொல்லக் கூடாது..”

“வேற யார் சொல்லனும்..? இந்த ஊரே சொல்லும்.. கேட்டுப் பாருங்க..”

“எனக்கு வேற வேலை இல்லை பாரு.. ஊரை ஏண்டி கேக்கனும்..?”

“உங்க தங்கச்சியைக் கேட்டாப் போதும்ங்கறிங்களா..?”

“கட்டிக்கப் போற என் மகனைக் கேட்டாப் போதும்ங்கிறேன்..”

“அவன் என் மகன்.. பத்து மாதம் வயித்தில சுமந்து பெத்தவ நானு…”

“அவனுக்கு அப்பன் நானு..”

அதற்கு மேலும் அந்தச் சண்டையைக் கேட்கச் சகிக்காமல் முகம் சுளித்த மோகன்…

“அப்பா.. அம்மா.. என்ன இது..?” என்று ஆட்சேபக் குரலை எழுப்பினான்..

அப்போதுதான் அவனைக் கவனித்த கணவனும் மனைவியும் ஒருமித்த குரலில்..

“நீ எப்படா வந்த..?” என்று வியந்தார்கள்..

“கிழிஞ்சது போங்க.. நான் வந்து ஒரு மணி நேரமாச்சு.. உங்களுக்கு மத்தியிலதான் உட்கார்ந்திருக்கேன்.. என்னைக் கவனிக்காம நீங்க பாட்டுக்கு கண்ணும் கருத்துமா சண்டை போட்டுக்கிட்டு இருக்கீங்க..”

கார்த்திகா மகனுக்கு காபி கலக்க வேண்டும் என்ற நினைவில்லாமல்..

“நீயே சொல்லுடா மோகன்..?” என்று பஞ்சாயத்து வைத்தாள்..

மோகன் அப்போதுதான் அலுவலக விருந்தை ஒருபிடி பிடித்துவிட்டு வந்திருந்தான்.. உடனடியாக அவனுக்கு காபி தேவைப் படாத காரணத்தால் அவனும் திடிர் நாட்டாண்மையாக பொறுப்பேற்று அன்னைக்கும் தந்தைக்குமான வழக்கில் தீர்ப்பு சொல்ல இசைந்தான்..

“எதைச் சொல்லம்மா..?”

“இவரோட தொங்கச்சி மக.. இருக்காளில்ல..”

“தொங்கச்சி மகளா..? அப்படின்னா..?”

“தங்கச்சி மகங்கிறதைத்தான் உன் அம்மா அந்த லட்சணமா சொல்லி வைக்கிறாடா.. இதெல்லாம் நல்லாயில்லை.. சொல்லி வைச்சிரு..”

“யாருகிட்டப்பா..?”

“உங்க அம்மாகிட்டத்தான்..”

“அஸ்க்கு.. புஸ்க்கு.. அதுக்கு வேற ஆளைப் பாருங்க.. என்னை மாட்டி விட்டுட்டு நீங்க தப்பிச்சுக்கலாம்ன்னு பாக்கறிங்களா..?”

“அவரை விடுடா மோகன்..”

“அந்த முடிவுக்கே வந்துட்டிங்களாம்மா..?”

“அடச்சே.. இது அந்த ‘விடுடா’ இல்லைடா.. பேச்சை ‘விடுடா'”

“அப்போச் சரி.. விட்டுட்டேன்.. இப்ப எதுக்காக இவரோட தொங்கச்சி மகளப் பத்திப் பேசினிங்க..?”

“யு டூ மோகன்..?”

“என்னத்துக்குப்பா இப்ப சீசராகறிங்க.. நான் என்னத்தை சொல்லிட்டேன்..?”

“தொங்கச்சி மகளா..?”

“வாய் தவறி வந்துருச்சுப்பா.. அதுக்காக என்னை ‘புருட்டஸ்’ ஆக்கனுமா..?”

“இப்ப சீசரைப் பத்தி ஏண்டா பேசற..?”

“நான் பேசலைம்மா.. அப்பாதான் பேசினார்.. நாம இவரோட தங்கச்சி மகளைப் பத்திப் பேசலாம்.. அப்பா சரியாச் சொல்லிட்டேன்..”

“அந்தத் தொங்கச்சி மகளை உனக்கு கட்டி வைக்கணுமாம்..?”

“என்னது..?”

“பார்த்தியா.. கேட்ட உனக்கே ஹார்ட் அட்டாக் வருதே.. உன்னைப் பெத்த எனக்கு எப்படியிருந்திருக்கும்..?”

“ஒன்னும் ஆகியிருந்திருக்காதுடா மோகா.. இவளோட நொன்னன் மகளை உனக்கு கட்டி வைக்கனும்னு இவ சொன்னப்ப அதைக் கேட்டுக்கிட்டு இருந்த எனக்கே எதுவும் ஆகலைங்கிறப்ப இவளுக்கு என்ன ஆகி விடப் போகுது..?”

“நொண்ணன் மகளா..?”

“எங்க அண்ணன் மகளைத்தான் அப்படிச் சொல்றாரு.. நான் மட்டும் இவரோட தொங்கச்சியை உருப்படியா பேசனுமாம்.. இவரு மட்டும் எங்க அண்ணனை ‘நொண்ணன்’ம் பாராம்.. நான் போறேண்டா என் பிறந்த வீட்டுக்கு..”

“அப்ப அப்பாவும் மாளவிகாவும் சாப்பாட்டுக்கு என்னம்மா பண்ணுவாங்க..? அவங்க ரெண்டு பேரும் பாவமில்ல..?”

“ஏண்டா அண்ணா.. எனக்கும் அப்பாவுக்கும்தான் வயிறிருக்கா..? உனக்கு இல்லையா..?”

“அதை ரொப்ப ஹோட்டல் இருக்கு.. உனக்கும் அப்பாவுக்கும் தானே ஹோட்டல் சாப்பாடு ஒப்புக்காது..?”

“தெளிவாத்தாண்டா பேசற அண்ணா..”

“டேய் மோகன்.. எங்க அண்ணன் மகளைக் கட்டிக்கடா.. அவ அழகு தேவதைடா..”

“இதை தேவதைகள் கேட்டா உன்னைச் சும்மா விடமாட்டாங்கடி.. டேய் மோகன்.. என் தங்கச்சி மகளைக் கட்டிக்கடா.. அவ பொறுமையிலே பூமாதேவியைப் போல..”

“இதைக கேட்டா அந்த பூமாதேவியே பொங்கி எழுந்திருச்சிருவா.. அவளா பூமாதேவி..? ராட்சசி..!”

“உன் அண்ணன் மகள் மட்டும் அழகு தேவைதையா..? பார்க்கச் சகிக்கலை…”

“உங்களுக்கு சகிக்கனும்னு ஒன்னும் அவசிய மில்லை.. என் மகனுக்கு சகித்தால் போதும்..”

“இதையே நானும் சொல்லலாமில்லையா..? பொறுமையில் பூமா தேவின்னு நீ சொல்லனும்னு அவசிய மில்லை.. என் மகன் சொன்னா போதும்..”

இருவரும் மாறி மாறி வழக்கு மன்றம் வைத்துக் கொண்டிருக்க.. மோகன் பஞ்சாயத்து பண்ண முடியாமல் தலைமீது கைவைத்து தங்கையைப் பார்த்தான்..

“இங்கே என்னதான் நடக்குது..?”

“பார்த்தாத் தெரியலை..? உன் கல்யாணத்துக்காக சண்டை நடக்குது..”

“அதை இவங்க எதுக்கு போடறாங்க..?”

“அறிவைக் கடன் கொடுத்திருக்காங்கள்ல..? அதான் போடறாங்க.. உன்னைப் போல ஒரு மகனை பெத்து வைச்சுக்கிட்டு.. உன் கல்யாணத்தை இவங்கதான் தீர்மானிக்கப் போறாங்கன்னு கேணத்தனமா நம்பிக்கிட்டு இருக்காங்க பாரு.. இவங்களை என்னதான் செய்கிறது..?”

“வெல் செட் சிஸ்டர்.. உனக்குத் தெரியறது நம்மளப் பெத்தவங்களுக்குத் தெரியலையே..”

“நீ எதுக்கு இருக்கிற..? தெரியப்படுத்து..”

“அப்படிங்கற..?”

“ஆமாம்ங்கிறேன்..”

“செஞ்சிட்டாப் போகுது… எத்தனையோ செய்யறோம்.. இதைச் செய்ய மாட்டோமா..?”

“என்னையும் கூட்டுச் சேக்காதே.. ‘மாட்டேனா’ன்னு சொல்லு…”

“கறாராவே இரு..”

“பின்னே..? அன்பழகனைப் போல ஒரு பிரண்டைப் பிடிச்ச உன்கிட்ட பாசப்பயிரை வளர்க்கச் சொல்றியா..?”

அண்ணனும் தங்கையும் அவர்களைப் பெற்றவர்களின் முன்னால்தான் வழக்கடித்துக் கொண்டிருந்தார்கள்.. அவர்கள் அதைக் கவனிக்காமல் அவர்களின் சண்டையில் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள்..

“அப்பா.. அம்மா..”

மோகன் ஒரு சவுண்டை விட்டான்.. அடித்துக் கொண்டிருந்த இருவரும் அவனைத் திரும்பிப் பார்த்தார்கள்..

“நான் சொல்கிறதைக் கேட்டுக்கங்க.. அம்மாவுக்கு மாமா மகளை எனக்கு கட்டி வைக்கனும்னு ஆசை.. அப்பாவுக்கு அத்தை மகளை எனக்கு கட்டி வைக்கனும்ன ஆசை.. அப்படித்தானே..?”

“இதைத்தானடா இவ்வளவு நேரமும் இவங்க சொல்லிக்கிட்டு இருந்தாங்க…? நீ என்னவோ விளக்கவுரை.. பொழிவுரையெல்லாம் சொல்ற..?”

“நீ அதிலேயே இரு மாளவிகா.. அதைக் கடந்து எப்ப வரப்போறியோ தெரியலை.. அப்பா.. அம்மா.. எனக்கு நீங்க ரெண்டு பேரும் ஒன்னுதான்.. மாமா மகளும் அழகாத்தான் இருக்கா.. அத்தை மகளும் அம்சமாத்தான் இருக்கா.. ரெண்டு பேர்கிட்டயும் ஒரு குறையுமில்ல..”

“ஆக.. ரெண்டுக்கும் நீ அடி போடற..?”

“நீ அடிதான் வாங்கப் போற மாளவிகா.. அப்பாவுக்கும்.. அம்மாவுக்கும் சமரசம் பண்ணி விட்டுக்கிட்டு இருக்கேன்.. நீ ஊடே ‘விட்’ அடிக்கிறயே..”

“சமசரம் பண்ணி விடற..? நீ..? இதில ஏதோ ‘உள்குத்து..’ இருக்குன்னு என் மனசுக்குள்ள ஒரு பட்சி வந்து சொல்லுதுடா அண்ணா..”

“அதுக்கு இரையைப் போட்டு பத்தி விடு மாளவிகா.. கவனிங்க அப்பா.. இப்ப நான் அத்தை மகளைக் கட்டிக் கிட்டா அம்மா மனசு வருத்தப்படும்..”

“உன் மாமாமகளைக் கட்டிக்கிட்டேன்னா என் மனசு வருத்தப்படுமேடா..”

“அதே.. அதே.. அதுக்குத்தான் நான் ஒரு சமரசம் சொல்றேன்..”

“என்னாதுடா அது..?”

“உங்களுக்கும் வேணாம்.. அம்மாவுக்கும் வேணாம்.. இந்தப் போட்டோவைப் பாருங்க.. பிடிச்சிருக்கான்னு சொல்லுங்க.. இது உங்க இரண்டு பேருக்கும் பொதுவான வேற இடம்.. என்ன சொல்கிறிங்க..?”

மோகன் நீட்டிய கையில் சுசரிதாவின் படமிருக்க..

“நினைச்சேன்..” என்றாள் மாளவிகா..

இதுபோன்ற புத்திசாலித்தனமெல்லாம் அன்பழகனிடம் இல்லையே என்று அவளுக்கு ஆற்றாமையாக இருந்தது..

“பொண்ணு நல்லாத்தான் இருக்கா.. இவரோட தொங்கச்சி மகளப் போல இல்ல.. என்னடா படிச்சிருக்கா..?” என்றாள் கார்த்திகா..

மோகன் சுசரிதாவின் படிப்பையும் வேலையையும் சொன்னதும்..

“வெரிகுட்..” என்று சந்தோசமானார் சரவணன்..

“இவளோட அண்ணன் மகளப் போல அரை வேக்காடா இல்லை.. உன்கூட வேலை பார்க்கிறா.. சென்ட்ரல் கவர்ண்மென்ட் சேலரி.. எனக்குப் பிடிச்சிருக்குடா..”

“ஆமாமா.. இவரோட தொங்காச்சி மக மட்டும பாரின் போயி படிச்சுட்டு வந்தவ.. பட்டிக்காட்டில பத்தாவதைத் தாண்டாதவ.. எனக்கும் இந்தப் பொண்ணைப் பிடிச்சிருக்குடா மோகன்..” கார்த்திகா சம்மதித்து விட்டாள்.

ஒரு சுபயோக சுபநாளில் சுசரிதாவிடம் சொன்னதைப் போல அவளை பெண் கேட்டு குடும்பத்துடன் போனான் மோகன்.. ஏற்கனெவே அவன் ‘தங்கக் கம்பி’ என்ற அபிப்ராயத்தோடு இருந்த சுசரிதாவைப் பெற்றவர்கள் வாயெல்லாம் பல்லாக தாம்பூலத் தட்டை மாற்றி விட்டார்கள்..

கனவு போல சுசரிதாவுக்கு இருந்தது.. கல்யாணம் பண்ணி விட்டுக் காதலிப்பேன் என்று அவளிடம் சூளுரைத்த அந்த ‘பொய்காரன்..’ அவள் கழுத்தில் தாலியைக் கட்டியே விட்டான்..

0Shares

Reviews – Poiselanerangalil Azhakanathu / பொய் சில நேரங்களில் அழகானது

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link