Chapter 19

0Shares

முதலிரவு அறைக்கான அத்தனை அடையாளங்களும் அந்த அறையில் இருந்தன.. மலர்ச்சரங்கள் நெருக்கமாக தொங்க விடப் பட்ட பூங்கட்டில்.. அருகேயிருந்த டீப்பாயில் காத்திருந்த பாலும்.. பழமும்.. அறையில் கமழ்ந்த ஊதுபத்தியின் நறுமணம் என்று மோகனின் மனதை அந்தச் சுழல் மயக்கிக் கொண்டிருந்தது..

அவன் சுசரிதாவிற்காக காத்திருந்தான்.. அவனுடைய காதலை ‘பொய்’ என்று சொன்னவளிடம் இப்போது என்ன சொல்லப் போகிறாய் என்று கேட்கும் தருணத்துக்காக காத்திருந்தான்.. அவனை விட்டு விலக நினைத்தவளை விலக விடாமல் அவள் கழுத்தில் தாலி கட்டி ஆயுள் முழுதும் அவன் அருகில் கொணர்ந்து விட்ட வெற்றியைச் சுட்டிக்காட்டி பெருமை பீற்றுவதற்காக காத்திருந்தான்.. இவை அத்தனைக்கும் மேலாக அவளைப் பார்த்த கணம் முதலாய் அவளைத் தொட்டுவிடத் துடித்த ஆசையை அடக்கிக் கொண்டு அவளை தன்வழிக்குக் கொண்டு வர போராடியவன்.. அவளைத் தொட்டு ஆளுவதற்காக காத்திருந்தான்..

அறைக்கு வெளியே கொழுசு சப்தம் கேட்டது.. திருமணத்துக்காக சுசரிதா கொழுசை அணிந்திருந்தாள்.. என்பதை அவன் நினைவு படுத்திக் கொண்டான்.. 

மூக்குக் குத்தி மூக்குத்தி கூடப் போட்டிருந்தாள்.. மெட்டியொலியும்.. கொழுசொலியும் சங்கமித்ததில் அவள் அறையை சமீபித்து விட்டதை அறிந்தவன் அவசரமாக எழுந்து கதவுக்குப் பின்னால் மறைந்து கொண்டான்.. உள்ளே வந்தவளின் மீது பாய்ந்து அவளைக் கட்டிக் கொண்டான்..

“அடேய்.. நான் உன் பெண்டாட்டியில்லைடா.. அத்தை..!”

அலறினாள் சாந்தி.. அவள் சரவணனின் தங்கை.. அண்ணன் மகன் திருமணத்திற்கு குடும்பத்தோடு வந்தவள்.. அத்தையாக லட்சணமாக முதலிரவு அறைக்குள் அண்ணன் மகனின் புது மனைவியை விட்டுப் போக வந்திருந்தாள்..

அதற்குள் அவள் கன்னத்தில் முத்தமிட்டு விட்ட மோகன் கரண்ட் பெட்டியில் கை விட்டு விட்டவன் போல அலறியடித்துக் கொண்டு விலகி நின்றான்..

“அத்.. அத்தை..” அவனது மானம் காற்றில் ஆடியது.

“இப்படியாடா மூஞ்சியில எச்சில் பண்ணிவைப்ப..?”

கன்னத்தைத் துடைத்துக் கொண்ட சாந்திக்கு சிரிப்பு சிரிப்பாக வந்தது.. அவள் பார்க்க பிறந்து வளர்ந்தவன்தான் மோகன்.. குழந்தையாக அவனைக் கையில் ஏந்தி.. மடியில் சீராட்டி.. தோளில் போட்டு.. இடுப்பில் சுமந்து நிலாவைக் காட்டி சோறுட்டி..

“அத்தை மடி மெத்தையடா..

ஆடி விளையாடடா..”

என்றெல்லாம் பாட்டுப் பாடி கொஞ்சி மகிழ்ந்தவள் தான் சாந்தி.. மோகனுக்கும் அவள்மீது தனிப்பாசம் உண்டு.. அவளுக்குத் திருமணமாகி புகுந்த வீட்டுக்குப் போன போது ‘அத்தை.. அத்தை..’ என்று அவளை நினைத்து இவன் அழுததில் காய்ச்சலே வந்து விட்டது.. அந்த அன்பான அத்தையை நேரில் கண்டு விட்டால் அவன் இன்றைக்கும் கட்டிப் பிடித்து பாசமாக அவள் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுப்பான்தான்..

அந்த முத்தமும்.. இந்த முத்தமும் ஒன்றாகி விடுமா..?

மோகன் சுவரைப் பார்த்தபடி அசடுவழிந்தான்.. சாந்தி தலையில் அடித்துக் கொண்டாள்..

“அவசரக்காரா..! நல்ல வேளையா நான் துணைக்கு வந்தேன்.. ஆக்சுவலா.. உன் பெண்டாட்டியோட அம்மா தான் கூடவர கிளம்பிக்கிட்டு இருந்தாங்க..”

“அத்தை..!”

நடக்க இருந்த விபரீதத்தில் மோகனின் கண்கள் நிலைகுத்திவிட்டன..

“இப்ப அலறு.. பர்ஸ்ட் நைட் ரூமுக்குள்ள வாரது யாருன்னு பார்த்துட்டு மேலே பாய மாட்டியா..? சப்போஸ்.. எனக்குப் பதிலா உன் மாமியார் உள்ளே வந்திருந்தா என்ன ஆகியிருக்கும்..?”

‘காலம் பூராவும் அவங்க முகத்தை நானும்.. என் முகத்தை அவங்களும் நேருக்கு நேரா பாக்க முடியாம போயிருக்கும்..’

நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் நடுங்கியது மோகனுக்கு.. கதவுக்கு வெளியே வாயைப் பொத்தி சிரிப்பை அடக்கியபடி சர்வலங்கார பூஷிதையாக நின்றிருந்த சுசரிதாவை பார்த்தான் அவன்..

‘எல்லாம் இவளாலே வந்தது..’ பல்லைக் கடித்தான்.

“இவ என்ன ஐடியாவிலே நின்னுக்கிட்டு இருக்கா அத்தை..? உள்ளே வர்ற உத்தேசமிருக்கா.. இல்லை.. அப்படியே திரும்பிப் போயி அவ அம்மா மடியில படுத்துத் தூங்கப் போறாளா..?”

“நீயே சொல்லிக் கொடுத்திருவ போல இருக்கே.. பாவம்.. அவளே புதுப்பொண்ணு.. உள்ளே வராம அவ அம்மாகிட்ட ஓடிப் போயிரப் போறா..”

“புதுப் பொண்ணா இருந்தா அவ பாவப்பட்ட பிறவியா..?”

“சும்மாயிருடா போக்கிரி.. நீ பண்ணி வைக்கிற கூத்தில அவ பயந்து போயிரமாட்டாளா..?”

“இவளா..? உங்களுக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான அத்தை.. பயமே இவளைப் பாத்தா பயப்படும்..”

“அப்படின்னு பயம் வந்து உன்கிட்டச் சொல்லிச்சா..? ரொம்பத்தான் கண்டவனைப் போல பேசாதே.. பெண்ணோட மனசைப் பத்தி உனக்கென்னடா தெரியும்..?”

“வேற யாருக்குத் தெரியும்..?”

“இன்னொரு பெண்ணுக்குத்தான் தெரியும்..”

“இந்த டயலாக்கை வைச்சே காலம் காலமா சினிமாவும், சீரியலும் ஓடிக்கிட்டிருக்கு.. நீங்களும் ஓட்ட வேணாம்.. கிளம்புங்க..”

“எங்கேடா கிளம்பச் சொல்ற..? ரூம் அழகாயிருக்கு.. கொஞ்ச நேரம் உங்ககிட்ட உக்காந்து பேசிட்டு போறேனே..”

“நல்ல கதையாய் இருக்கே.. இது எங்க ரூம்.. இங்கே எங்களுக்கு மட்டும்தான் இடமிருக்கு.. நீங்க நடையைக் கட்டுங்க…”

“இவ்வளவு தானாடா உன் பாசம்..? வெளியே வெக்கையாய் இருக்குடா மோகன்..” சாந்தியின் கண்களில் வம்பு செய்யும் சிரிப்பு இருந்தது..

“அதுக்கு..?”

“இங்கேயானா ஏஸி இருக்கு.. ஜம்முன்னு பூவாசவும்.. பத்திவாசமும்.. சந்தனவாசமும் ரூமை ரொப்புது.. தூங்கினா இங்க தூங்கனும்.. இத விட்டுட்டு ஹாலில கூட்டத்தோட கூட்டமா தூங்குவாங்களா..?”

“அத்தை..”

“என்னடா..?”

“புளியைக் கரைச்சு என் வயித்திலே ஊத்தாம கிளம்பிப் போங்க அத்தை.. உங்களை மாமா தேடுவாரு..”

“இருடா.. அவருக்கும் ஒரு குரல் கொடுத்து கூப்பிட்டுக்கறேன்..”

“அதுசரி.. உங்க பிள்ளையையும் பெண்ணையும் மட்டும் ஏன் விட்டு வைச்சிருக்கீங்க..?”

“நல்ல வேளைடா மோகன்.. ஞாபகப்படுத்தின.. அவங்களுக்கும் சேர்த்தே குரல் கொடுக்கிறேன்..”

“நான் உங்க குரல்வளையைப் பிடிக்கறேன்..”

மோகன் சாந்தியின் தொண்டையில் விளையாட்டாய் விரல் வைத்து அழுத்தினான்.. அவள் சிரித்துக் கொண்டே அவனைத் தள்ளி விட்டு..

“பிழைத்துப் போ..” என்றபடி வெளியில் போனாள்..

“தனியா பிழைக்க முடியாது அத்தை.. வெளியே நிக்கிற என் பெண்டாட்டியை உள்ளே தள்ளி விடுங்க.. அவளோடு சேர்ந்து பிழைக்கிறேன்..”

“அவ வந்தா கூப்பிட்டுக்க..”

“வராம போயிருவாளா..?”

மோகன் கைநீட்டி சுசரிதாவை உள்ளே இழுத்துக் கொண்டான்.. அவன் இழுத்த வேகத்தில் அவன் மார்பில் வந்து விழுந்தவளைக் கண்ட சாந்தி பலமாக சிரித்தாள்..

“வீடே வேடிக்கை பார்க்க வரப் போகுது..” முகச் சிகப்புடன் சுசரிதா விலக யத்தனிக்க..

“வந்தா முடின கதவை வேடிக்கை பார்த்துட்டுப் போகட்டும்..” என்று அறைக் கதவை அடைத்து தாழிட்டான் மோகன்..

சுசரிதாவின் கன்னத்தில் வெட்கச் சிகப்பு படர்ந்திருந்தது.. அவளது மருதாணிபூசிய கை விரல்கள் நடுங்குவதைப் பார்த்தவன் அவள் விரல் பற்றிக் காதலுடன் முத்தமிட்டான்.. அவள் விரலை உறுவ முயன்றாள்.. அவன் விடவில்லை…

புதுமனைவிக்குரிய நாணமும்.. ஆசையும் அவள் முகத்தில் கலவையாக படர்ந்திருந்தன.. மோகன் அவளது அதீத அழகில் கவரப் பட்டவனாக.. அவள் கைபற்றி படுக்கைக்கு அழைத்துச் சென்றான்.. அவள் முகம் பற்றி அவன் குனிந்த போது அவள் துள்ளி விலகினாள்…

“என்னடி..?” ஏமாற்றத்தில அவனுக்கு கொலை வெறியே வந்துவிட்டது..

“அம்மா முதல்ல பாலையும்.. பழத்தையும் சாப்பிட்டிறச் சொன்னாங்க..”

“இதென்ன பர்ஸ்ட்நைட் ரூமா.. இல்ல.. டைனிங் ஹாலா..?”

“ப்ளீஸ்.. ஏதோ சாஸ்திரம்.. சம்பிரதாயமாம்..”

“என்னத்தையோ செஞ்சு தொலை..”

மோகன் அவள் விருப்பத்துக்கு மதிப்புக் கொடுத்து உடன்பட்டான்.. அவள் சொன்னதைக் கேட்டுக் கொண்ட கணவனின் செய்கையில் சுசரிதா பாலையும் பழத்தையும் பகிர்ந்து கொடுத்ததோடு நிறுத்தியிருக்கலாம்.. அதை விட்டு விட்டு கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருக்கலாமே என்று அவன் கையை விலக்கினாள்..

ஏற்கனெவே புது மனைவி என்று அத்தையின் கன்னத்தில் முத்தத்தை தந்து விட்டதில் லேசான சங்கடம் கொண்டிருந்த மோகன் அவனை அவனது புதுமனைவி ‘பறக்கா வெட்டி…’ என்று நினைத்துவிடக் கூடாது என்பதற்காக தலையை ஆட்டி வைத்தான்..

அதுதான் வினையாய் போய் தொலைத்தது..

பேசவேண்டும் என்று சொன்னவளுக்கு பேச வேறு விவரமே கிடைக்கவில்லையா..? அவள் வாயை வைத்துக் கொண்டு சும்மாயிருக்காமல்..

“என் மேலதான் உங்களுக்கு பர்ஸ்ட்ல லவ் வந்துச்சா..? உண்மையைச் சொல்லனும்.. வழக்கம் போல பொய்யை கரைச்சு ஊத்தக் கூடாது..” என்று கேட்டு விட்டாள்.

அவனாவது புதிதாய் எதற்காக உண்மையை கட்டி இழுக்க வேண்டும்… நாம்தான் பொய்யிலே பிறந்து.. பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமான் ஆயிற்றே என்று பொய் எதையாவது சொல்லி வைக்காமல் காதல் மனைவியிடம் ஒளிவு மறைவில்லாமல் உண்மையை பிட்டுப்பிட்டு வைக்கும் திடிர் முடிவை எடுத்தவனாக..

“ஊஹீம்.. என் பர்ஸ்ட் லவ் வேற ஒருத்தங்க மேல வந்தது..” என்று உண்மையை விளம்பி விட்டான்..

சுசரிதாவின் முகம் மாறிவிட்டது.. அவள் விலகி அமர்ந்தாள்.. அதைக் கவனிக்காமல் அவன் விட்டத்தைப் பார்த்தபடி பிளாஸ் பேக்கிற்குப் போனான்..

“அப்ப எனக்கு ஆறு வயசிருக்கும்.. ஜெஸிந்தா.. ஜெஸிந்தான்னு ஒரு டீச்சர்… அழகா இருப்பாங்க.. உன்னைப் போலதான் ஒற்றைரோஜாவை பின்னலில் செருகிக்கிட்டு காட்டன் புடவையில பாந்தமா வருவாங்க.. ஆக்சுவலா உன்னைப் பார்த்ததும் அவங்க நினைப்புத்தான் எனக்கு முதலில் வந்தது..”

“ஓஹோ..” ஒட்டாத குரலில் அந்த ‘ஓஹோ’ வை போட்டு வைத்தாள் சுசரிதா..

“அவங்ககூட பேசறதுன்னா எனக்கு அவ்வளவு பிடிக்கும்..”

“அப்ப அவங்களுக்கே நூல் விட்டு கல்யாணம் பண்ணியிருக்க வேண்டியதுதான்..”

“யாருடிஇவ.. அவங்களை எப்படிடீ நான் கல்யாணம் பண்ணிக்க முடியும்..? அவங்களுக்கு என் அம்மா வயசுடி..”

“அதனாலதான் அவங்க நினைப்பில எனக்கு நூல் விட்டிங்களா..?”

அப்போதுதான் அவள் குரலில் இருந்த மாறுபாட்டை உணர்ந்து கொண்ட மோகன் தன் வாயால் தான் கெட்டுப் போனதை உணர்ந்து தலையில் கை வைத்தான்..

“சுசி..” அவள் தோளைத் தொடப் போனான்..

“தொடாதீங்க.. அத்தைக்கு முத்தம்.. ஆறுவயசிலேயே டீச்சர் மேல காதல்.. தூ..” 

சுசரிதா கட்டிலைவிட்டு குதித்து இறங்கி.. சுவரோரமாக போனாள்.. அவளுடன் கலந்து உரையாடுவது என்பது வேலைக்கு ஆகாத ஒன்று என்ற முடிவுக்கு வந்த மோகன் அவளை வேட்டையாட முடிவு செய்தான்.. கட்டிலை விட்டு இறங்கியவன் அவளை விழிகளால் மேய்ந்தபடி அவளை நெருங்கினான்… அவள் பின்வாங்கினாள்..

0Shares

Reviews – Poiselanerangalil Azhakanathu / பொய் சில நேரங்களில் அழகானது

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link