Chapter 21

0Shares

தகதகவென தங்க வேட்டையாடலாம் போல கோவா கடற்கரையின் மணல்கள் தங்கத்துகள்கள் போல மின்னிக் கொண்டிருந்தன.. சல்வாரின் துப்பட்டா காற்றில் பறக்க.. மோகனின் தோளைப் பற்றிக் கொண்டு நடந்த சுசரிதாவுக்கு சந்தோசமாக இருந்தது.. கடற்கரையின் அழகை ரசித்தவள் அதைப்பற்றிச் சொல்லியபடி நடந்தாள்.. மோகனிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை.. என்னவாயிற்று என்று கேட்கத் திரும்பியவளுக்கு என்னவென்னவோ ஆயிற்று..

அழகான.. இளமையான.. புதுமனைவி பக்கத்தி- லிருக்க.. மோகன் அவளைப் பார்வையிடாமல் கடற்கரை மணலில் சூரிய குளியல் போட்டுக் கொண்டிருந்த வெள்ளைக்காரப் பெண்களை பார்வையிட்டுக் கொண்டிருந்தான்..

“யு ராஸ்கல்..” சுசரிதாவின் முகம் மிளகாய் பழம் போல மாறியது..

“இப்ப என்னத்துக்கு காளி அவதாரம் எடுக்கற.. கடற்கரைக்கு வந்தா மனுசன் காத்து வாங்கனும்னு நினைக்க மாட்டானா..?” மோகன் நியாயம் கேட்டான்..

“காத்து வாங்கனும்னு நினைக்கலாம்.. மத்தவங்க காத்து வாங்கறதை உத்து உத்துப் பாக்கனும்னு நினைக்கக் கூடாது.. வெட்கமாயில்லை..?”

“இல்லை போலதான் இருக்கிறது..”

வெள்ளைக்காரப் பெண்களை பார்வையிட்டபடி சொன்ன மோகன்..

“வேணும்னா அவங்ககிட்டப் போய் கேட்டு விட்டு வரட்டுமா..?” என்று பரபரத்தான்..

“ஒத்த அடி எடுத்து வைச்சிங்க… காலை வெட்டிருவேன்.. இதுதான் சாக்குன்னு அவளுககிட்ட வழியறதுக்கு பிளான் பண்றிங்களா..? கொன்னு புதைச்சிருவேன்..”

“எங்கேடி..?”

“இந்த பீச் மணல்லதான்..”

“தோதா மணல் கிடைச்சிருச்சுன்னா நீ எப்படியெல்லாம் பிளான் பண்றேடி..! நான் கொடுத்து வைச்சவன்..”

இரண்டு பேரும் வரிந்து கட்டிக் கொண்டு சண்டையை ஆரம்பிக்க.. பக்கதிலிருந்த ஒரு வெள்ளைக்கார ஜோடி அவர்களின் அருகே வந்து சண்டையை விலக்கி விட முனைந்தது..

“வாட் ஹேப்பன் டார்லிங்…” என்ற அந்த வெள்ளைக் காரனுக்கு அழகான இந்தியப் பெண்களைப் பிடிக்கும் போல..

அவன் பார்வை சுசரிதாவை ஸ்வாஹா செய்து மோகனை வெறிகொள்ள செய்தது.. அதே சமயத்தில் மோகனை சமாதானப் படுத்துகிறேன் பேர்வழியென்று அவனைத் தோளோடு கட்டியணைத்துக் கொண்டிருந்த அந்த வெள்ளைக்கார பெண்ணின் மீது சுசரிதாவுக்கு கடுங்கோபம் ஏற்பட்டது..

“தள்ளி நில்லுடா முதல்ல.. டார்லிங்காமில்ல.. யார் பெண்டாட்டி யாருக்கு டார்லிங்..?” மோகன் வெள்ளைக் காரனிடம் சண்டைக்கு போனான்..

“கையை எடுடி.. எவ புருசனை யார் கட்டிக்கிட்டு நிக்கிறது..? யாருன்னு நினைச்ச.. கையை வெட்டிருவேன்..” சுசரிதா.. துப்பட்டாவை இறுக்கிக் கட்டி செறுகி சண்டைக்குத் தயாரானாள்..

“ஓ.. நோ..” வெள்ளைக்கார ஜோடி வெற்றிகரமாக பின்வாங்கியது.. அவர்கள் கண்களில் பயம் மின்னியது…

அருகிலிருந்த டூரிஸ்டு கைடு அவர்களை சமாதானப் படுத்தினான்.. 

“இது இந்திய கணவன்.. மனைவியின் சண்டைங்க.. அவங்களா அடிச்சுக்குவாங்க.. அவங்களா கூடிக்குவாங்க.. ஊடே சண்டை விலக்கப் போனா.. உண்டு இல்லைன்னு ஆக்கிருவாங்க.. நீங்க வெளிநாட்டுக்காரங்க இல்ல.. உங்களுக்கு விவரம் பத்தலை..”

உலகையே சுற்றிவரக் கிளம்பிய அந்த ஜோடி இந்தியாவைப்பற்றி இன்டர்நெட்டில் சர்ச் பண்ணி விவரங்களை சேகரித்திருந்தது.. கூகுளில் இதைப்பற்றிச் சொல்லவே இல்லையே என்று அந்த ஜோடி தங்களுக்குள் விவாதித்த வண்ணம் குழம்பிக் கொண்டிருந்தார்கள்..

“புருசன் பெண்டாட்டி சண்டையைப் பத்தி படைச்ச பகவானேலேயே சொல்ல முடியாது.. கூகுள் எம்மாத்திரம்..?”

டூரிஸ்டு கைடு கேள்வியை எழுப்பி விட்டு அரண்டு போயிருந்த அந்த ஜோடியை அழைத்துக் கொண்டு போனான்..

சுசரிதா கோபமாக விலகி நடந்தாள்.. மோகன் அவளைத் தொடுத்துக் கொண்டு பின்னால் ஓடினான்..

“என் பின்னாலே வராதீங்க.. அந்த வெள்ளைக்காரிக பின்னாலே போங்க..”

“அவளாடி என் பெண்டாட்டி.. நீதான் என் பெண்டாட்டி..”

“ஆஹாஹா..! பெண்டாட்டியை மதிக்கிற லட்சணம் தான் தெரியுதே.. பக்கத்திலே பெண்டாட்டியை வைச்சுக் கிட்டு வெள்ளைக்காரிகள பார்வையிலே மேயறது..”

“மேய்ச்சல் நிலத்தைக் கண்டா தன்னாலே பார்வை மேயுதுடி.. நான் என்ன பண்ண..? ஹனி மூனுக்கு வர்றவ கோவாவை செலக்ட் பண்ணாம காசி.. ராமேஸ்வரம்ன்னு செலக்ட் பண்ணியிருக்காலமில்ல.. நானும் கோவில்.. கோவிலா.. தீர்த்த நீராடிக்கிட்டு புனிதனா வீடு வந்து சேர்ந்திருப்பேன்..”

மோகன் சிரிக்காமல் சொன்னதில் சுசரிதாவுக்கு சிரிப்பு வந்து விட்டது..

“உங்களை..” அவன் மார்பில் குத்தினாள்..

குத்தியவளை அவன் இழுத்து அணைத்துக் கொண்டு அதுதான் சாக்கென்று அவள் காதோரம் ரகசியம் பேசினான்.. சுசரிதாவின் மிளகாய் பழ முகம் கோவைப் பழத்தின் நிறத்துக்கு மாறியது.. அவள்

“ச்சீ..” என்றாள்..

அன்றைய ஊடல் அந்தக் கூடலுடன் முடிந்தது..

ஹனிமூனை முடித்து விட்டு வந்த புதுமனைத் தம்பதிகளை தாய்மாமன் வீட்டு விருந்துக்கு கிளம்பச் சொன்னாள் கார்த்திகா..

“அதெல்லாம் முடியாது.. என் தங்கச்சி வீட்டு விருந்துக்குத்தான் முதலில் போகனும்..” என்று சண்டைக்கு வந்தார் சரவணனன்..

மோகன் மாளவிகாவைப் பார்த்தான்.. இரண்டு நாளாக அதே சண்டைதான் அவர்கள் இருவருக்கும் நடுவில் ஓடுகிறது என்றாள் அவள்..

“நாங்க ஹனிமூன் கொண்டாடினா.. இவங்க இங்கே சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்களா..? என்ன செய்கிறது..?”

“என்னத்தையோ செய்.. உனக்கு சொல்லியாதரனும்..?”

“அப்ப நீ சொல்லித்தர மாட்ட..?”

“இது உன் பிரச்னைடா அண்ணா.. நான் தலையிட்டா என் தலைதான் உருளும்.. அப்பவும் என்னைக் காப்பாத்த நீதான் வந்தாகனும்..”

“அப்படிங்கறே..”

மோகன் அவன் வழக்கப்படி தாடையைத் தடவியபடி யோசித்தான்.. மாளவிகா அண்ணன் செய்யப் போகும் அளப்பறையை வேடிக்கை பார்க்கும் ஆர்வத்தோடு சோபாவில் குத்துக்காலிட்டு உட்கார்ந்து கன்னத்தில் கை வைத்தாள்..

“அருமையான தங்கை..” மெச்சிப் போனாள் சுசரிதா..

மோகன் அவளை ஓர் பார்வை பார்த்தான்..

“என்னைப்  பாக்காதீங்க.. உங்க அப்பா அம்மாவைப் பாருங்க..” சுசரிதா மோகனின் தலையை மாமியார்.. மாமனாரின் பக்கமாக திருப்பிவிட்டாள்..

“இரண்டு பேர் வீட்டுக்கும் இப்போதைக்கு போறதாயில்லை..” மோகன் அறிவித்தான்.. 

சண்டையை வேடிக்கை பார்க்கத்தோதாக நாத்தனாரின் பக்கத்தில் இடம் பிடித்து அமர்ந்திருந்த சுசரிதா..

“என்ன மாலு.. உங்கண்ணன் இப்படி சப்புன்னு சண்டையை முடிச்சிட்டாரு..” என்று முணுமுணுத்தாள்..

“முடிகிற சண்டையா இது..? உங்களுக்கு தெரியலை அண்ணி.. ஆக்சுவலா அண்ணன் இப்ப மத்தளத்துக்குள்ள தலையைக் கொடுத்திருக்கான்..” என்றாள் மாளவிகா..

“மத்தளமா..?” சுசரிதா கவலையுடன் கணவனைப் பார்த்தாள்..

“ஆமா.. அங்கதான ரெண்டு பக்கமும் இடி கிடைக்கும்.. இப்பப் பாருங்க.. சண்டை எந்தப் பக்கம் திரும்பப் போகுதுன்னு..”

“என்னது..?” என்றாள் கார்த்திகா..

“உங்க அத்தை வீட்டுக்குப் போகலைன்னு சொல்லு.. அதில ஒரு அர்த்தமிருக்கு.. அதென்ன இரண்டு வீட்டுக்கும் போக மாட்டேன்னு சொல்றது…?”

“டேய்..” அதட்டினார் சரவணன்..

“உன் மாமன் வீட்டுப் பக்கம் தலைவைத்துப் படுக்க மாட்டேன்னு சொல்லு.. நீ ரோசக்காரன்னு ஒப்புக்கிறேன்.. அத விட்டுட்டு இரண்டையும் தள்ளிவைச்சா எப்படிடா..?”

“அப்பா.. அம்மா.. இப்போதைக்கு நான் என் மாமனார் வீட்டுக்குப் போயாகனும்.. அதுக்கப்புறம்தான் மத்த விருந்தெல்லாம்..”

“ஆஹா..” என்றாள் மாளவிகா..

“இப்ப எதுக்கு இவரு எங்க வீட்டுக்கு விருந்துக்குப் போகனும்கிறாரு..? அதான் மறுவீட்டு விருந்தெல்லாம் முடிஞ்சு.. சீர் கொண்டு வந்தாச்சே.. அதுக்கப்புறம்தானே நாங்க கோவாவுக்கு கிளம்பிப் போனோம்..” என்று மாளவிகாவிடம் சந்தேகம் கேட்டாள் சுசரிதா..

“அப்பத்தானே அண்ணி.. அப்பாவும் அம்மாவும் ஒன்னாச் சேருவாங்க..? அண்ணணை என்னன்னு நினைச்சீங்க.. ஜெகஜால கில்லாடியில்ல இவன்..” மாளவிகா பெருமைப் பட்டாள்..

“அப்படியா..?”

சுசரிதா ஆச்சரியத்துடன் மாமனார் மாமியாரைப் பார்க்க.. மாளவிகா சொன்னதுதான் நடந்தது.. கார்த்திகாவும் சரவணனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.. மோகன் ஏதுமறியாதவன் போல அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு நின்றான்..

‘நடிகன்..!’ சுசரிதாவுக்கு சிரிப்பு வந்து தொலைத்தது.

“நீ பிறந்தவுடனே உன்னைத் தொட்டுத் தூக்கி கழுத்தில பத்து பவுனுக்கு சங்கிலி செஞ்சு போட்டு விட்டது எங்க அண்ணன்.. உன்னை மடியில உட்கார வைச்சு ஊரு பாக்க சீரு செஞ்சு மொட்டையடிச்சு காதுகுத்தி விட்டது எங்க அண்ணன்.. உனக்கு அவரையெல்லாம் கண்ணுக்குத் தெரியலை.. நேத்து வந்த மாமனார் வீடுதான் கண்ணுக்குத் தெரியுதில்ல..?”

“அதானே.. உன்னை மடியில போட்டு வளர்த்தவ உங்க அத்தை.. அம்மா யாரு.. அத்தை யாருன்னு கூட உனக்குத் தெரியாது.. அன்னைக்கு அவ பாடின அத்தை மடி மெத்தையடா பாட்டைக் கேட்டுத்தான் நீ தூக்கமே போட்ட.. அந்த அத்தையை விட.. உன் பெண்டாட்டியைப் பெத்த அத்தைதான் உனக்கு உசத்தியாப் போயிட்டாங்களா..?”

“இவன் பேசலைங்க.. புதுசாக் கல்யாணம் கட்டிக் கிட்ட மோகம் இவனைப் பேச சொல்லுது..”

“ஆமடி கார்த்திகா.. எப்ப அம்மா அப்பா வீட்டுச் சொந்தங்கள விட மாமனார் வீட்டுச் சொந்தம்தான் பெரிசுன்னு நினைச்சுட்டானோ.. அதுக்கு மேலே இவன் கிட்ட பேச்சு என்னடி வேண்டிக்கிடக்கு.. நீ வாடி.. உனக்கு நான்.. எனக்கு நீ.. இவ்வளவுதான்.. பெத்த சொந்தமெல்லாம் சும்மாடி.. தென்னையைப் பெத்திருந்தாலாவது இளநீர் கிடைச்சிருக்கும்.. பிள்ளையைப் பெத்ததுக்கு கண்ணீர்தான் மிச்சம்.. பெத்தவன் மனசு பித்து.. பிள்ளையின் மனசு கல்லுன்னு ஆகிப் போயிருச்சுடி..”

“நீங்க மனம் தளராதீங்க.. ஆலமரத்து விழுதுகளப் போல ஆயிரம் சொந்தம் வந்து போகும்.. வேரா நான் இருக்கிற வரைக்கும் நீங்க விழுந்துர மாட்டிங்க.. உங்களுக்கு நான் இருக்கேன் அத்தான்..”

சரவணனும் கார்த்திகாவும் ஒருவரையொருவர் தேற்றிய தேற்றுதலைப் பார்த்தபோது சுசரிதாவுக்கு அந்தக் காலத்து கருப்பு வெள்ளை திரைப்படத்தைப் பார்ப்பதைப் போலவே இருந்தது.. வசனங்கள் கூட பழைய பாடல்களின் வார்த்தைக் கோர்வைகளை நினைவுபடுத்த.. அவள் குழப்பத்துடன் நாத்தனாரைப் பார்த்தாள்.. அவளோ அலட்டிக் கொள்ளமால் அண்ணியைப் பார்த்து..

“அதேதான்.. ரெண்டு பேரும் மாறிமாறி பழைய சினிமாப் பாட்டைத்தான் வசனமாக்கி உறவு கொண்டாடிக் கிறாங்க.. இது எப்பவும் நடக்கிற கதைதான்..” என்று சொன்னாள்.. சுசரிதாவுக்கு தலையைச் சுற்றியது..

ஒருவழியாக மோகன் அவர்கள் இருவரையும் சமாதானப் படுத்தி.. அவன் மாமனார் வீட்டைத தியாகம் பண்ணுவதாக வாக்குக் கொடுத்தபின்புதான் அவர்கள் இருவரும் பழைய பாடல்களுக்கு விடுதலை கொடுத்து வழியனுப்பி வைத்தார்கள்..

அடுத்து அவர்கள் பண்ணிய அழும்பில்தான் சுசரிதாவுக்கு மயக்கமே வந்துவிட்டது..

0Shares

Reviews – Poiselanerangalil Azhakanathu / பொய் சில நேரங்களில் அழகானது

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link