Chapter 01
“வந்தாள் மகா லட்சுமியே.. என் வீட்டில்.. என்றும் அவள் ஆட்சியே…”
தொலைக்காட்சியில் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.. அதை “ஆ..” வென்று பார்த்தபடி.. டைனிங் டேபிளை துடைக்கிறேன் பேர்வழியென்று பாவனை செய்து கொண்டிருந்தாள் மல்லிகா..
“இதுதான் நீ வேலை செய்கிற லட்சணமா..?”
அவள் காதருகில் கடுமையாக ஒலித்த குரலில் அரண்டு போனவளாக.. கை வேலையை நிறுத்திவிட்டு திரும்பிப் பார்த்தாள்..
கண்களில் தீப்பொறி பறக்க.. இடுப்பில் கை வைத்து.. அச்சு அசல் அந்த காளியின் மகா ரூபமாய் நின்று கொண்டிருந்தாள் அகிலாண்டேஸ்வரி..
“அ.. அ.. அம்மா…”
வார்த்தைகளால் தந்தியடித்தாள் மல்லிகா..
“இப்பத்தான் ஆனா.. ஆவன்னா கத்துக்கறியா..? அதுக்கு என் வீடுதான் கிடைச்சதா..?”
“இல்.. இல்லைங்கம்மா..”
“வேலை நிலைக்கனுமா.. வேணாமா…?”
“வேணும்மா.. கட்டாயம் வேணும்மா.”
“அந்த நினைப்பிருக்கில்ல..? அப்ப.. ஒழுங்காய் வேலையை மட்டும் கவனி..”
அதட்டி விட்டு நகர்ந்த அகிலாண்டேஸ்வரியிடம்.. “போம்மா.. நீயாச்சு.. உன் வீட்டு வேலையுமாச்சு..” என்று சொல்ல மல்லிகாவுக்கு ஒரு நொடி கூட ஆகாது..
அவளுக்கும் அப்படிச் சொல்ல வேண்டுமென்ற ஆசை வெகுநாளாக உண்டுதான்…
ஆனால்.. அந்த வீட்டில் கிடைக்கும் சம்பளத்தொகை அவளது வாயைக் கட்டிப்போட்டு வைத்திருந்தது.. மற்ற வீடுகளில் வேலையாள்களுக்கு கிடைக்கும் சம்பளத்தைப் போல.. நான்கு மடங்க அதிகமாக அந்த வீட்டில் கொடுக்கப் பட்டது.. அந்த காரணத்துக்காகவே.. அங்கே வேலை செய்தவர்கள்.. வாயைத் திறக்காமல் பசைபோல வேலையில் ஒட்டிக் கொண்டிருந்தார்கள்..
அந்த வீட்டில் மட்டும்.. மற்ற வீடுகளைப் போல அதே அளவு சம்பளம் கிடைத்திருந்தாள்.. ஒரு வேலையாள்கூட.. ஒரு மணி நேரத்துக்குமேல் அங்கே தாக்குப்பிடிக்க மாட்டார்கள்..
அந்த அளவுக்கு அந்த வீட்டின் எஜமானியின் அதிகார மமதை அங்கே கொடி கட்டிப் பறந்தது..
“ம்ஹூம்.. இந்தக் காசுக்காக பாக்கிறேன்ம்மே.. இல்லாங்காட்டி.. இந்தப் பொம்பளகிட்ட மனுசன் வேலை பார்ப்பானா..?”
அகிலாண்டேஸ்வரியைக் கண்டால்.. கேள்விக் குறியைப் போல இடுப்பை வளைத்து பணிவு காட்டி.. கார் கதவை பவ்யமாக திறந்து விடும் டிரைவர் மாணிக்கம் இந்த வார்த்தைகளை அவன் பெண்டாட்டியிடம் சொல்லிப் புலம்பாத நாளே இல்லை எனலாம்..
“என்னா பொம்பளய்யா.. அந்தம்மா..? ஒரு சிரிப்பு உண்டா..? ஒரு பேச்சு உண்டா..? எப்பப் பார்த்தாலும்.. கடுவன் பூனையைப் போல.. மூஞ்சியை கடுகடுன்னு வெச்சிக்கிட்டு இருக்குதுய்யா.. அதுகிட்ட குப்ப கொட்டி.. கொட்டி எனக்கு சிரிப்பே மறந்து போயிருச்சிய்யா..”
வீட்டு வேலை செய்யும் மல்லிகாவின் இந்த பரிதாப நிலையை தினமும் காது கொடுத்துக் கேட்டும்.. அவள் கணவன் வேலையை விட்டு நின்று விடும்படி சொன்ன தில்லை..
அவனுக்கே தெரியும்.. அவன் சொன்னாலும்.. அவள் வேலையை விட்டு நிற்க மாட்டாள் என்பது..
“பாவம்.. இவ கஷ்டத்தை ஆருகிட்டச் சொல்லுவா.. எங்கிட்டத்தானே.. புலம்பியாகனும்..” என்ற எண்ணத்தினால் தாலி கட்டி விட்ட கடமைக்காக மறக்காமல் “ஊம்..” மட்டும கொட்டுவான்..
இவ்வாறு வீட்டில் உள்ளவர்களை ஆட்டிப்படைக்கும் சர்வ வல்லமை படைத்த அகிலாண்டேஸ்வரியின் கணவர் சோமசுந்தரம் ஒரு மாபெரும் கோடீஸ்வரர்.. அவரின் சொத்துக்களைப் பற்றிய அனைத்து விவரங்களும் அவருக்கே தெரியாது.. அவருடைய மனைவிக்கு.. அவையெல்லாம் அக்குவேறு.. ஆணிவேறாக தெரியும் என்பது வேறு விசயம்.. அப்பேற்பட்ட பெருமைகொண்ட பணக்காரரின் மனைவி என்பதால்.. அவளுக்கான கர்வம்.. தலைமுதல்.. கால்வரை ஒவ்வொரு அங்குலத்திலும் கலந்திருந்தது.. அதை அவளுக்குக் கொடுத்திருந்த சோம சுந்தரத்திற்கு மனைவியை விட பலமடங்கு அதிகமான கர்வம் இருந்தது..
அகிலாண்டேஸ்வரியாவது.. வேலையாள்களை திட்டுவதற்காவது வாயைத் திறப்பாள்.. சோமசுந்தரம் அதைக்கூடச் சொய்யமாட்டார்.. ஒரு பார்வையிலேயே வேலையாள்களை பதற வைத்து விடுவார்..
அவரது கண்டிப்பும்.. தோரணையும்.. கடினமான முகபாவமும் எதிரே நிற்பவர்களை கதிகலங்க வைக்கும் சக்தி வாய்ந்தவை..
அவர் காரில் ஏற வருவதற்கு முன்னால் ஆயிரம் தடவையாவது காரிலுள்ள தூசியைத் துடைத்துவிடுவான் மாணிக்கம்.. அவனுக்கு முன்னால் வேலை பார்த்த டிரைவர்களின் வேலை.. கடுகளவு தூசியினால் பறிபோய் விட்ட பரிதாபக் கதைகள் அவனுக்குத் தெரியும்..
கண்ணாடி போல பளபளக்கும் காரை எந்தவித உணர்வுகளும் பிரதிபலிக்காத கல்போன்ற கடினமான முத்துடன் பார்த்தபடி அவர் காரில் ஏறிக்கொண்ட
பின்னால் தான் அவன் நிம்மதியாக மூச்சை விடுவான்.. அதுவரைக்கும் அவனது மூச்சு திணறிக்கொண்டு தான் இருக்கும்..
வீட்டில் மட்டுமல்ல.. அவருக்கு சொந்தமான தொழில்களிலும்.. வேலை செய்யும் வேலையாள்களின் நிலை இதுதான்..
அந்த ஒன்றில் மட்டும் அவர் சமத்துவத்தை கையாண்டார்.. உயர்மட்ட அதிகாரிகளிலிருந்து.. அடிமட்ட வேலையாள்கள் வரை அனைவரிடமும் ஒரே மாதிரியான நிலைப்பாடை அவர் கடைபிடித்தார்…
இப்படிப்பட்ட மனமொத்த தம்பதிகளின் ஒரே மகள்தான் தான்யலட்சுமி..
தான்யா.. குரூப் ஆப் கம்பெனிஸ்.. என்று இவள் பெயரில்தான் தனது அனைத்து தொழில் சாம்ராஜ்யங்களையும் இயக்கி வருகிறார் சோமசுந்தரம்..
தான்யா என்ற தான்ய லட்சுமி.. அழகானவள்.. அறிவானவள்.. அப்பேற்பட்ட கோடிஸ்வரத் தம்பதிகளின் ஒற்றை மகளாகப் பிறந்ததினால் ஐஸ்வர்யம் நிறைந்தவள்.. இவை அத்தனையிலும் கூடுதலாக அன்பானவள்…
“ஹாய் மல்லிகா.. என்ன டிவி அமைதியா இருக்கு.. உன் பாட்டு எங்கே போச்சு..?” என்று மல்லிகாவுக்காக தொலைக்காட்சியை ஒலிக்க விடுவாள்…
“பெரியம்மாவுக்கு தெரிஞ்சா அவ்வளவுதான்..” மல்லிகா நடுங்குவாள்..
“ஹேய்.. என்ன இது..? அம்மா கேட்டா.. நான்தான் போட்டேன்னு சொல்லிக்கிறேன்.. அதுக்காக ஏன் பயந்து சாகற..?” தான்யா அதட்டுவாள்..
“அப்படியில்லம்மா.. வேலை கெடுதுன்னு பெரியம்மா சத்தம் போடுவாங்க..”
விளக்கம் சொன்னாலும்.. மல்லிகாவின் பார்வை ஆவலுடன் தொலைக் காட்சியின் பாடல் காட்சியில்தான் பதிந்து மீளும்.. அதைப் பார்க்கும் தான்யாவுக்கு சிரிப்புடன் கனிவும் சேர்ந்து வரும்..
“ஆடிப்பாடி வேலை செய்தா அலுப்பிருக்காது மல்லிகா..” இதை அப்படியே அகிலாண்டேஸ்வரியிடம் சொல்லவும் செய்வாள்…
Reviews – Ponmakal Vanthal / பொன்மகள் வந்தாள்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.