Chapter 03
“அடடா.. மழைடா.. அடை மழைடா..”
பாடிக்கொண்டே.. மழை நீரை.. காலால் அளைந்தபடி வந்து கொண்டிருந்த கோகுலக் கண்ணன் அவளைப் பார்த்தான்…
“யாரு இவ.. பார்த்தா பச்சக்குன்னு மனசில ஒட்டிக் கிறதைப் போல பளிச்சின்னு இருக்காளே…”
அவனது புருவங்கள் மேலேறின…
தான்ய லட்சுமியை அதற்கு முன்னால்.. அந்த கல்லூரி வளாகத்துக்குள் அவன் பார்த்திருக்கவில்லை..
கல்லூரி மைதானத்தை கடக்கும் போது அவள்மீது தெறித்து விழுந்த மழைத்துளிகளால் அவள் நனைந்திருந்தாள்.. அவள் முகத்தில் ஆங்காங்கே நீர்முத்துக்களாக படிந்திருந்த மழைத்திவலைகள் அவனுக்கு பனியில் நனைந்த மலரை நினைவு படுத்தியது..
அவளுடன் பேச வேண்டுமென்ற ஆவல் அவன் மனதில் தோன்றியது..
“ஏய்ய்.. இங்கே வா..” அவன் சொடக்கு போட்டு அவளை அழைத்தான்..
தான்ய லட்சுமியின் முகத்தில் வியப்பின் சாயல் படிந்தது.. அதுவரை.. அவளை யாரும் அப்படி அழைத்த தில்லை.. அவளது விழியசைவில்.. “அம்மா..” என்று ஓடி வந்து கைகட்டி நிற்பார்கள்..
அப்படிப்பட்டவளை சொடக்கு போட்டு அவன் அழைத்தவிதம் அவளுக்குப் பிடித்திருந்தது.. என்ன வென்று சொல்லத் தெரியாத இதமான ஓர் உணர்வு அவள் மனதில் படிவதை அவள் திகைப்புடன் உணர்ந்தாள்..
அவளைப் போல சிறிதளவே நனையாமல்.. அவன் சொட்டச் சொட்ட நனைந்திருந்தான்.. ஈரத்தினால் கலைந்திருந்த அவனது முரட்டு முடிக்கற்றை அவனது
முன் நெற்றியில் படிந்திருந்தில் ஓர் கவர்ச்சியை அவள் உணர்ந்தாள்.. கால்களை அகற்றி அதை ஊன்றி அவன் நின்றிருந்த விதத்தில் ஓர் கம்பீரம் வெளிப்பட்டு அவர் கருத்தைக் கவர்ந்தது…
அவனருகே அவள் சென்று நின்றாள்…
“பர்ஸ்ட் இயரா..?” அதட்டலாக கேட்டான்..
“ம்ம்ம்..” அவள் மேலும்.. கீழுமாக தலையசைத்தாள்..
“ம்ம்ன்னா.. என்ன அர்த்தம்..? வாயைத் திறந்து பேசமாட்டியா..? கொழுப்பா..?”
“இல்லை…”
“என்ன இல்லை..?”
“நான் பர்ஸ்ட் இயர்தான்..”
“இதை முதல்லேயே சொல்றதுக்கென்ன..?”
“நான் ம்ம்ன்னு சொன்னேனே..”
“ஓஹோ.. நீ ம்ம்ன்னா.. நான் கேட்டுக்கிட்டு போயிடனுமா..? மகாராணிக்கு வாயைத் திறந்து பதில் சொல்ல முடியாதோ.. சீனியர்ன்னா பயமில்லையா..?”
“இல்லை..”
“என்னது.. பயமில்லையா..?”
இதற்கு என்ன பதிலைச் சொல்வது என்று தெரியாமல் விழித்தாள் தான்ய லட்சுமி..
அவன் கேட்ட கேள்விக்கு.. “அப்படியெல்லா மில்லை” என்று சொல்லத்தான் அவள் வாய் திறந்தாள்.. அதை எப்படிச் சொல்வதென்று புரியாமல்.. “இல்லை..” என்றும் சொல்லி வைத்தாள்.. அதுவும் வில்லங்கமாக வந்து முடிந்ததில் வேறு என்ன பேசுவது.. எப்படிப் பேசுவது.. என்று அவளுக்கு புரியவில்லை…
அது புரியாமல் அவன் கண் சிவந்தான்..
“என்ன தைரியம்.. சீனியர்ன்னா.. பயமில்லையான்னு கேட்டா.. இல்லைன்னு சொல்ற.. இறங்கு..”
அவன் ஒற்றை விரலை ஆட்டி மிரட்டினான்..
‘எதில் இறங்கச் சொல்கிறான்..? ஒரு மண்ணும் புரியவில்லை..’
அவள் பேந்தப் பேந்த விழிக்க.. அவனது ரௌத்ரம் அதிகமானது..
“நான் சொன்னது காதில் விழுகலையா..? இறங்குன்னு சொன்னேன்..”
“எதில இறங்க..?”
அவள் புரியாமல் கேட்க.. அவள் வழக்கடிப்பதாக அவன் நினைத்துக் கொண்டான்..
“எவ்வளவு திமிர்..”
கோபத்துடன் அவள் கையைப் பிடித்து இழுத்து.. கொட்டும் மழையில்.. மைதானத்தில் நிற்க வைத்தான் கோகுலகண்ணன்..
“இங்கேயே நிற்கனும்.. இந்த இடத்தைவிட்டு ஓரடி நகர்ந்தே.. அவ்வளவுதான்..”
ஒற்றை விரலை உயர்த்தி மிரட்டியவன்.. போய்விட்டான்…
கொட்டும் மழையில் சொட்டச் சொட்ட நனைந்தபடி பயத்துடன் கண்களை இறுக மூடிக்கொண்ட தான்ய லட்சுமியை அவன் திரும்பிக்கூட பார்க்கவில்லை..
வானத்தில் நீண்ட வெள்ளிக் கீற்றாய் மின்னல் வெட்டி மறைய.. “டமார்..” என்ற இடிச்சத்தம்.. காதைப் பிளந்தது..
“அம்மா..” பயத்தில் அலறினாள் தான்யலட்சுமி..
மழையின் பேரிறைச்சலில் அவளின் சப்தம்.. மற்றவர்களின் காதுகளை எட்டவில்லை..
தான்யலட்சுமிக்கு மழையென்றால் பயம்.. இடி இடித்து மழை பொழிந்தால் அவள் கிடுகிடுத்துவிடுவாள்..
அவ்வளவு பயம் கொண்டவளை.. அந்த கொட்டும் மழையில் நிறுத்தி விட்டு அவன் போய்விட்டான்..
தூரத்தில் தான்யலட்சுமியை அழைத்துப் போக கார் வந்து நின்றதை அவள் பார்த்துக் கொண்டுதான் இருந்தாள்.
மைதானத்தின் நடுவிலிருந்த மேடையும்.. அதன் மீது கிளைகளை பரப்பி.. ஆழமாக வேர் விட்டு.. அகன்று நின்ற மரமும்.. தான்யலட்சுமியை மறைத்துவிட.. டிரைவர் மாணிக்கம் அவளைத் தேடி ஓய்ந்து போனவனாக காரை எடுத்துக் கொண்டு போய்விட்டான்…
“வீட்டில் அவனுக்கு என்ன பாட்டு கிடைக்கப் போகிறதோ..” என்ற நினைவில் தான்யலட்சுமி கவலை கொண்டாலும்.. இருந்த இடத்தை விட்டு நகரவில்லை..
மழை கொட்டிக் கொண்டிருந்தது.. அவள் கண்மூடி சிலையாக.. நனைந்தபடி நின்று கொண்டிருந்தாள்..
கோகுலக்கண்ணன் நண்பர்களுடன் அரட்டை அடித்து முடித்துவிட்டு திரும்பி வரும்போதுதான் அவளைப் பார்த்தான்..
“யார் அது..? மழையில் நனைஞ்சுக்கிட்டு நிற்கிறது..?”
அவளை மழையில் நனைந்தபடி நிற்கச் சொன்னதே அவன்தான் என்பதை மறந்து போனவனாக அவன் கூர்ந்து பார்த்தான்..
“என்னடா பார்க்கிற..?”
அங்கே நின்று கொண்டிருந்த விவேக் கேட்டான்..
“யாருடா அது..?”
“பர்ஸ்ட் இயராம்.. சூப்பர் பிகருடா மச்சி.. மழையில நனைஞ்சாப் பிடிக்கும் போல இருக்கு.. அவ மழையில நனைஞ்சிருக்கிற அழைகைப் பார்க்க எனக்குப் பிடிக்குது.. அதான் அப்பயிருந்து இங்கேயே நிற்கிறேன்..”
அவன் எந்த அழகை ரசிக்கிறான் என்பதை தான்யலட்சுமியின் ஈர உடையின் மீது மேய்ந்த அவனது பார்வையே கூறிவிட.. கோகுல கண்ணன் அறுவெறுப்பு கொண்டான்..
சுற்று முற்றும் பார்த்தபோது.. விவேக்கைப் போலவே பலரும் நின்று.. கலைக்கண்ணோடு அவள் உடலை ரசித்துக் கொண்டிருந்தது புரிய தாளமாட்டாதவனாக மைதானத்தில் இறங்கி அவளருகே சென்றான்..
“ஏய்ய்.. யாரு நீ..? மழையில நனைஞ்சிக்கிட்டு.. ஃப்ரீ ஹோ காட்டறியா..?”
அதட்டியபடி அவள் முகம் பார்த்தவன் அதிர்ந்தான்.. “இவளா..? இவ இன்னும் வீட்டுக்குப் போகலையா..?”
Reviews – Ponmakal Vanthal / பொன்மகள் வந்தாள்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.