Chapter 04
“எப்படி போவேன்..?”
மழையில் நனைந்த உடல் நடுங்க கேட்டாள் தான்யலட்சுமி.. “இந்த இடத்தை விட்டு ஓரடி கூட நகரக் கூடாதுன்னு நீங்க சொல்லிட்டுப் போனீங்களே..”
அவளது வார்த்தைகளைக் கேட்டவனுக்கு ஆச்சர்யம் அதிகமானது..
“நான் சொன்னதுக்காக.. இவ மழையில நனைஞ்சுக் கிட்டு இந்த இடத்திலேயே நிற்கிறாளா..?”
அவன் சொன்ன அந்த வார்த்தைகளுக்காக.. அசையாமல் அந்த இடத்திலேயே நின்றவளைப் பார்க்கப் பார்க்க.. அவனுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது..
அதிலும்.. இடி.. இடிக்கும் சமயங்களில்.. அவள் கண்மூடி காதைப் பொத்திக் கொண்டு.. தன்னையு மறியாமல்.. “அம்மா..” என்று கூவியதில் அவன் குற்ற உணர்வு கொண்டான்..
“இவ்வளவு பயமிருக்கிறவ.. ஏன் இப்படி நிற்கனும்..? தாங்க முடியாதவனாக..” அவன் கடிந்து கொண்டான்..
“நீங்க நிற்கச் சொன்னீங்களே..”
சொன்னத்தைச் சொல்லும் கிளிப் பிள்ளையாக அவள் பேசியதில் அவன் வசீகரிக்கப்பட்டான்..
அவள் யாரோ.. அவன் யாரோ..
அவன் சொன்ன வார்த்தைகளை மீறக்கூடாது என்பதற்காக அவள் கொட்டும் மழையில்.. அசையாமல் நின்று கொண்டிருக்கிறாள்…
“பைத்தியமா.. நீ..? சீனியர்ன்னா.. ஜூனியர் பொண்ணுகளை ராகிங் பண்ணத்தான் செய்வாங்க.. அதுக்காக.. அதையே வேத வாக்காய் எடுத்துக்கிட்டு மழையில் நனைஞ்சுக்கிட்டு நிற்கனுமா..?”
“நீங்க சொன்னீங்களே…”
“திரும்பத்திரும்ப.. கீறல் விழுந்த ரிகார்டைப் போல.. அதையே பினாத்தாதே.. அங்கே பாரு.. நீ நனைகிறதை அத்தனை பயல்களும் ஜொள்ளு விட்டுக்கிட்டு வேடிக்கை பார்க்கிறானுங்க..”
“நானென்ன செய்யட்டும்..? நீங்கதானே மழையில் நிற்கச் சொன்னீங்க..?”
விட்டால்.. அன்று முழுவதும் அவள் அந்த வார்த்தைகளைத்தான் சொல்லிக் கொண்டிருப்பாள் என்ற நினைவில் அவன் புன்னகைத்தான்..
“சரி.. சரி.. நீ மழையில் நின்னது போதும்.. வா.. போகலாம்..”
அவனது யமாஹாவின் பின் சீட்டில் ஏறிக்கொண்டவள் உட்காரத் தெரியாமல் திணறிய போது அவனது புருவங்கள் முடிச்சிட்டன..
“நீ முன்னே.. பின்னே டூ வீலரில் ஏறியதில்லையா..?”
“ஊஹூம்..”
அவளது பதிலில் அவன் ஆச்சரியமானன்.. என்ன தான் பஸ்ஸில் பயணம் செய்தாலும் இரண்டு சக்கர வாகனத்திலேயே.. அதுநாள் வரை அமராமல் அவளால் எப்படி இருந்திருக்க முடியுமென்று அவனுக்கு பிடிபட வில்லை…
“காலேஜூக்கு எப்படி வருவ..?”
“டூ வீலரில வந்ததில்லை..”
“அதான் தெரியுதே.. பஸ்ஸில் வருவியா..?”
அவனது கேள்விக்கு பொய் சொல்ல முடியாமல் அவள் மௌனித்தாள்.. அதை அவன் வேறு விதமாக புரிந்து கொண்டான்..
“இதைச் சொல்ல ஏன் சங்கடப்படற..? எல்லோருமே வசதியானவங்களா இருந்திருக்க முடியுமா..? இதோ பார்.. ஏழ்மைக்காக வருத்தப்படக்கூடாது.. போராடி ஜெயிக்கனும்.. வாழ்ந்து காட்டனும்.. புரியுதா..?”
அவள் யாரென்று தெரியாமல் அவன் ஆறுதல் சொல்லியவிதத்தில் அவள் ஆகர்ஷிக்கப்பட்டாள்.. “இந்த வார்த்தைகளை உண்மையாக அவன் சொல்லி உற்சாகப் படுத்தும் விதத்தில் தான் இருந்திருக்க கூடாதா..” என்று ஏனோ அவள் மனம் ஏங்கியது..
“உன் கூடப்பிறந்தவங்க எத்தனை பேர்..?”
வண்டியை ஓட்டியபடி அவன் கேட்டான்.. இரண்டு சக்கர வாகனத்தில் உட்கார்ந்து பழக்கமில்லாத தான்யா.. நடுங்கியபடியே..
“நான் ஒரே பெண்தான்..” என்று பதில் சொன்னாள்.. அவளது குரலிலிருந்தே நடுக்கத்தை உணர்ந்தவன்.. மென்மையான குரலில் பேசினான்..
“பயப்படாதே.. உனக்காக நான் மெதுவாகத்தான் வண்டியை ஓட்டறேன்.. எதுக்கும் என்னை கெட்டியாய் பிடிச்சுக்க..”
ஏற்கெனவே பயத்துடன் அவனை ஒட்டிக் கொண்டு அமர்ந்திருந்த தான்யா.. அவன் சொன்னதைக் கேட்டதும் தயக்கம் விலகியவளாக அவனை இறுக்கிக் கட்டிக் கொண்டாள்..
அவளது அந்த அதீத நெருக்கத்தில் அவனுக்குள்ளே இருந்த எதுவோ விழித்துக் கொண்டது.. இதற்கு முன்னாலும் அவன் இதுபோல பல பெண்களை அவனது வண்டியில் ஏற்றிக்கொண்டு போயிருக்கிறான்தான்.. அவர்கள் எல்லோரும் தான்ய லட்சுமியைவிட அதிகமான நெருக்கத்தை காண்பித்து இருக்கிறார்கள்தான்..
அப்போதெல்லாம் உணராத ஓர் உணர்வை. அவன் இப்போது உணர்ந்தான்..
அவர்களையெல்லாம் அவன் பெண்ணென்று வேறுபடுத்தி நினைத்தது இல்லை.. அவர்களும் தோழையுடன்தான் அவனுடன் பழகுவதாகத்தான் அவன் நினைத்துக் கொள்வான்.. அதனால் வித்தியாசமாக அவனை நெருங்க நினைப்பவர்களையும் அவன் புரிந்து கொண்டதில்லை..
அந்த கோகுலகண்ணன் இன்று அலைபாயும் ஓர்விதமான உணர்வுகளுக்கு ஆட்பட்டான்..
அவளது மென்மையான.. நுட்பமான தன்மையில் அவன் ஈர்க்கப்பட்டுக் கொண்டிருப்பதை அவனால் உணர முடிந்தது.. அவனை இடுப்போடு கட்டிக் கொண்டிருந்த அவளது கரங்களின் பட்டுப் போன்ற தன்மையில் அவன் மனம் சிக்குண்டது..
‘கொட்டும் மழையில் நனைந்தபடி.. இரு சக்கர வாகனத்தில் பயணித்த அந்த அனுபவத்தை என்றைக்கும் மறக்க முடியாது..’ என்று தான்யலட்சுமி நினைத்துக் கொண்டாள்…
அவனுக்கும் அதுபோன்ற நினைவு ஏற்படுமா என்று அவளுக்குத் தெரியவில்லை… இதுபோன்ற அனுபவங்களை அவன் அதற்கு முன்னால் உணர்திருக்கக் கூடும் என்று அவள் நினைத்துக் கொண்டாள்.. அந்த நினைவு ஓர் விதமான ஏமாற்றத்தை அளிப்பதை அவளது உள்ளம் உணர்ந்தது.. சற்று பொறாமையாகக் கூட அவள் நினைத்தாள்..
அவளது உயரத்தை உணராமல்.. இயல்பாக பேசியபடி வண்டியை ஓட்டியவனுடன் செல்கின்ற அந்த பயணம் முடியவே முடியக் கூடாதென்று அவள் மனம் ஏங்குவதை… ஓர் அதிர்வுடன் உணர்ந்தவளுக்கு… ஆச்சரியமாகப் போனது..
இது சாத்தியமில்லை என்று தெரிந்த பின்னாலும்.. இப்படி ஒரு நினைவை எப்படி அவள் நினைக்கிறாள்..?
“எங்கே போகனும்..?” கோகுல கண்ணன் கேட்டான்.
“இப்படியே எங்கேயாவது போய்விடு..” என்று சொல்லத்தான் அவள் ஆசைப்பட்டாள்…
நினைப்பதையெல்லாம்… வெளியில் சொல்ல முடியுமா என்ன..? இல்லை.. ஆசைப்பட்டதையெல்லாம் கேட்டுவிடத்தான் முடியுமா..?
இரண்டும் முடியாது என்பதினால்.. அவள் போக வேண்டிய இடத்தைச் சொன்னாள்… அவன் முகம் மாறியது.. அவள் சொல்லிய முகவரி… சென்னையின் மிகப் பெரும் பணக்காரர்கள் வசிக்கும் இடமாக இருந்து வைத்ததில் அவன் திகைத்துப் போனான்…
‘அங்கே இவ எதுக்குப் போறா..?’
“அங்கே உனக்குத் தெரிஞ்சவங்க யாராவது இருக்காங்களா..?”
அவன் கேட்ட கேள்வியில் அவளுக்குச் சிரிப்புதான் வந்தது.. இருந்தாலும்.. “அப்பாவும்.. அம்மாவும்..” தெரிந்தவர்கள்தானே என்ற நினைவில் அவள் “ஊம்” கொட்டினாள்..
அவள் வீட்டிற்கு முன்னால் அவனின் யமஹா நின்றது..
Reviews – Ponmakal Vanthal / பொன்மகள் வந்தாள்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.