Chapter 05
சோமசுந்தரம் கோபத்தின் உச்சத்தில் இருந்தார்.. மிக முக்கியமான சந்திப்பில் அவரிருந்த போது தான் தான்ய லட்சுமியை கல்லூரியில் காணவில்லை என்ற தொலை பேசித் தகவல் அவருக்கு வந்து சேர்ந்தது..
அந்தச் சந்திப்பு.. அவரது கம்பெனிக்கு அதி முக்கியமான ஒன்று.. பன்னாட்டு வர்த்தக நிறுவனத்தின் பிரதிநிதிகளோடு அப்போது அவர் பேசிக் கொண்டு இருந்தார்.. முக்கியமான ஒப்பந்தம் முடிவாகிக் கொண்டிருந்த வேளையில்.. தான்யலட்சுமியைப் பற்றிய தகவலை அவர் கேட்டார்.. உடனே ஒப்பந்தத்தைப் பற்றிய கவலையில்லாமல் எழுந்து விட்டார்..
“சார்..”
ஜெனரல் மேனேஜரும்.. மற்றவர்களும் பதறிய போது..
“நீங்க கண்டினியூ பண்ணுங்க..” என்று பொறுப்பை அவர்களிடம் கொடுத்து விட்டு.. அவர் பறந்து வீட்டுக்குப் போய் சேர்ந்து விட்டார்..
அவரது ஒரு பார்வையில் கதிகலங்கிப் போன மாணிக்கம் நடுங்கிப் போய் அவர் காலிலேயே விழுந்து விட்டான்…
“சாமி சத்தியமா சொல்றேனுங்க ஐயா… நான் நேரத்தோட காலேஜீக்குப் போயிட்டேன்..”
“அப்புறம் எப்படி.. தான்யலட்சுமியைக் கூப்பிடாம வீட்டுக்கு வந்து சேர்ந்த..?”
இதை அவர் கேட்கவில்லை.. அப்படியெல்லாம் வேலையாள்களிடம் சமதையாக அவர் பேசிவிடமாட்டார்.. திட்டுவதாக இருந்தால் கூட அதுவும் பேச்சுத்தானே என்ற எண்ணம் அவருக்கு..
அவரின் சார்பாக.. அவரது தர்ம பத்தினிதான் கேள்வி கேட்டாள்..
“சின்னம்மா.. காலேஜில் இல்லைம்மா..”
“அடித்தால் பல்லு பூராவும் கொட்டி விடும்.. காலேஜூக்கு போன பொண்ணு.. அங்கேயில்லாம எங்கே போயிருக்கப் போறா..? நீதானே காலையில கொண்டு போய் விட்டுவிட்டு வந்த..?”
“ஆமாம்மா.. ஆமாம்…”
“இதுக்கு மட்டும் உணக்கையாய் உடனுக்குடனே பதிலைச் சொல்லிரு.. நீ கொண்டு போய் விட்டுட்டு வந்த பொண்ணு காலேஜில்தானே இருந்திருக்கனும்..?”
‘அதை என்கிட்டக் கேட்காம.. உங்க பொண்ணு-கிட்டக் கேளுங்க..’ மனதுக்குள் பொறுமினான் மாணிக்கம்…
அதை வாய்விட்டு சொன்னால் அவன் உயிர் உடலில் தங்காது என்பதால் அதை மனதிற்குள்ளேயே புதைத்துக் கொண்டான்..
அவனும்தான் என்ன செய்வான்..? பெண்டாட்டி.. பிள்ளைகள் என்று அவனை நம்பி.. அவன் குடும்பம் இருக்கிறது.. அவன் நூறாண்டு காலம் வாழ்ந்தாக வேண்டுமே..
“காலேஜில் இண்டு இடக்கு விடாம.. ஒரு இடம் பாக்கியில்லாம.. அத்தனை இடத்திலேயும் தேடிப் பார்த்து விட்டேன்ம்மா.. சின்னம்மா அங்க இல்ல…”
அவன் பாவம்.. கொட்டும் மழையில்.. மைதானத்தில்.. மரத்தின் மறைவில்.. அவள் நின்று கொண்டிருப்பாள் என்று கனவா கண்டான்..?
அவன் சொன்னதைக் கேட்டுக் கொள்கிற நிலைமையில் அகிலாண்டேஸ்வரியும்.. சோமசுந்தரமும் இல்லை.. சோமசுந்தரத்தின் கல் போன்ற கடினமான முகபாவமே.. மாணிக்கத்தின் வேலை பறிபோய்விட்டதை.. அறிவித்தது.. அகிலாண்டேஸ்வரியோ.. அதற்கும் ஒருபடி மேலே போய் மாணிக்கத்தை போலீஸில் பிடித்துக் கொடுத்து விடும் உத்தேசத்தை எடுத்திருந்தாள்..
மாணிக்கத்துக்கு கண்களைக் கட்டிக்கொண்டு வந்தது.. வீட்டிற்குத் திரும்பிப் போவதென்பது கனவுதான் என்ற முடிவுக்கே அவன் வந்து விட்டிருந்தான்..
‘இப்படியாகும்ன்னு தெரிஞ்சிருந்தா.. காலம்பர கிளம்பரப்பவே.. அவ முகத்தை.. நல்லா ஒரு தடவை பார்த்துவிட்டு வந்திருப்பேனே..’
அவன் ஏக்கம்.. அவனுக்கு..
சோமசுந்தரமோ செல்போனை காதுக்கு கொடுத்திருந்தார்.. போலீஸீன் உயர்மட்ட அதிகாரிகளோடு தொடர்பு கொண்டு.. விவரத்தை ரகசியமாக வைத்துக் கொண்டு.. மகளைத் தேடும்படி சொல்ல ஆரம்பித்திருந்தார்..
அந்த களேபரமான சூழ்நிலையில்தான் அது நிகழ்ந்தது…
“ஐயா.. சின்னம்மா.. யாரோ ஒரு பையனோட வந்து பைக்கில இறங்கறாங்கய்யா..” செக்யூரிட்டியின் பதட்டமான போன் சோமசுந்தரத்தை எட்டிய வேளையில்.. தான்ய லட்சுமி கோகுலக் கண்ணனுடன் வீட்டுக்குள் பிரவேசித்து இருந்தாள்…
அவர்கள் இருவரையும் ஒரு சேரப் பார்த்தவரின் புருவங்கள் முடிச்சிட்டன..
“ம்ம்..” ஒற்றை முனுமுனுப்பில் போனை அணைத்தவர் மகளைப் பார்த்தார்..
“டாட்.. ஹி இஸ் மை காலேஜ் மேட்..”
அவனது பெயரை அறியாத தான்யலட்சுமி அறிமுகப் படுத்தி வைத்த போதுதான் அதுவரை அவன் பெயரை அவளுக்கும் அவன் சொல்லவில்லை என்ற விவரமே அவனுக்கு உறைத்தது..
அதே போல.. அவள் பெயரையும் அவன் கேட்டுக் கொள்ளாததை அவன் நினைத்துப் பார்த்தான்..
அவள் முதலாண்டு மாணவி என்பது மட்டும்தான் அவனுக்கு தெரியும்.. அவன் அந்தக் கல்லூரியில் படிப்பவன் என்ற தகவலை மட்டும்தான் அவளும் அறிவாள்..
அப்படியிருக்க.. ‘என்னவோ காலம் காலமாய் பழகியதைப் போன்ற ஓர் உரிமையுணர்வு மனதுக்குள் எப்படி நுழைந்தது..’ என்று அவன் திகைத்துப் போனான்..
“ஓ..” சோமசுந்தரம் அந்த ஒற்றை எழுத்தை உச்சரித்ததே உலகமகா அதிசயம் என்று கோகுல கண்ணனுக்கு தெரியாது..
ஆகையால்.. அவன் வெகு இயல்பாக..
“ஹலோ சார்..” என்று கையை நீட்டி விட்டான்…
சோமசுந்தரம் மகளைப் பார்த்தார்.. பதிலுக்கு அவர் கைநீட்ட வேண்டுமென்ற எதிர்பார்ப்பு அவள் விழிகளில் இருப்பதை உணரந்தவர் யோசித்தார்..
அப்போது கரம் நீட்டாமல் தவிர்த்தால் மகளின் மனத்தாங்கலுக்கு ஆளாகிவிடும் அபாயம் இருப்பதை அவரது அறிவு அச்சுறுத்தியது..
ஏற்கனெவே அவரின் குண இயல்பை கண்டித்துப் பேசி வருபவள்.. வில்லன்.. அளவிற்கு அவரை நினைத்து விட்டால் என்ன செய்வது என்ற எண்ணத்துடன் அரை மனதாக கரத்தை நீட்டினார்.. கோகுலகண்ணனின் கையை பட்டும் படாமல் பற்றி லேசாகக் குலுக்கிவிட்டு… கை விலக்கியவர்.. மகளறியாமல் தன் கையை கைக்குட்டையால் நாசூக்காக துடைத்துக் கொண்டார்..
கோகுலக்கண்ணன் அதைக் கவனிக்கவில்லை.. கவனித்திருந்தால் அந்த வினாடியிலேயே அந்த வீட்டை விட்டு வெளியில் சென்றிருப்பான்..
அவளை மழையில் நனைய வைத்துவிட்ட பரிதாபத்தில் வீட்டுக்கு கொண்டு வந்து விட வந்தவன் அவன்..
வரும் வழியெல்லாம்.. அவளது ஏழ்மையைக் குறித்து அவள் தாழ்வு மனப்பான்மையை கொண்டு விடக் கூடாது என்று உபதேசித்துக் கொண்டே வந்தவன் அவன்..
அங்கே வந்து பார்த்தால்.. அவள் ஒரு மாளிகையில் வசிப்பவளாக இருந்தாள்..
பிறந்ததிலிருந்து தங்கத்தட்டில் சாப்பிட்டு வளர்ந்த வளிடம் “சில்வர் தட்டை நீ பார்ததில்லையா..” என்று அனுதாபம் காட்டினால் எப்படியிருக்கும்..?
அந்த நிலைமையில்தான் அவன் இருந்தான்..
Reviews – Ponmakal Vanthal / பொன்மகள் வந்தாள்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.