Chapter 06

0Shares

கபிலனின் சுழித்த புருவங்களையே பார்த்த வண்ணம் அவள் அசையாமல் அமர்ந்திருக்க, அவன் நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.. அவள் பார்வையில் தெரிந்த மிரட்சி.. அவனை மலையிறங்கச் செய்தது..

“ஏன் இப்படி என்னையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிற..? சாப்பிடு..” என்றான்..

“நீங்க கோபமாக இருக்கீங்களா..?”

“ஆமாம்.. கோபமாகத்தான் இருக்கிறேன்.. இப்ப அதுக்கு நீ என்னாங்கிற…?”

“ப்ளீஸ்.. இன்னும் கோபப்படாதீங்க..”

“ஆர்த்தி.. உன்னிடம் எப்படிப் பேசிப் புரிய வைப்பதுன்னு எனக்குப் புரியவில்லை..”

“அப்படியா..? நீங்க ரொம்ப இண்ட்டலி ஜெண்டுன்னு காலேஜில் பேசிக்கறாங்களே.. எனக்குப் புரிய வைக்க உங்களால் முடியாதா..?”

ஆர்த்தி தலை சாய்த்து வெகுளியாகக் கேட்டாள்.. கபிலனுக்கு அவள் கேட்ட விதம் பிடித்திருந்தது..

“ம்ம்.. நீ அப்படி வருகிறாயா.. அப்போ சரி.. உனக்குப் புரியும் படியாகவே சொல்கிறேன்.. இப்போ இந்த காலேஜ் கேண்டீனுக்கு என்னுடன் வந்து உட்கார்ந்திருக்கிறாயே.. என்னைத் தவிர வேறு யாரும் உன்னைக் கூப்பிட்டிருந்தால் வருவாயா..?”

ஆர்த்திக்கு எதுவோ புரிவது போல் இருந்தது.. அவள் யோசனையுடன் அவனைப் பார்த்தாள்..

“வேறு யாருமுன்னா..?”

“ம்ம்.. அதையும் சொல்லணுமா..? சுந்தர், அஜய் இப்படி யாராவது ஒருத்தர் உன்னைக் கூப்பிட்டிருந்தால் நீ வந்திருப்பாயா..?”

அவன் கவனமாக தினேஷின் பெயரைத் தவிர்த்து விட்டான்.. பேச்சுக்குக் கூட அவன் பெயரை ஆர்த்தியிடம் சொல்ல அவனுக்கு விருப்பமில்லை..

“அது எப்படி..? நீங்கள் கூப்பிட்டபோதே வர எனக்கு இஷ்டமில்லை.. நீங்க கோபப்படுவீங்கன்னு பயந்து போய் வந்தேன்..”

‘என் கோபத்தைக் கண்டால் நீயேன் பயப்படு கிறாய்..?’ மனதில் எழுந்த கேள்வியை அழித்துக் கொண்டே அவள் முகம் பார்த்தான் கபிலன்..

“அது ஏன்.. நான் கூப்பிட்டவுடன் வந்தாய்..? என் பிரண்ட்ஸ் கூப்பிட்டால் மறுத்திருப்பேன்னு நிச்சயமாகச் சொல்கிறாய்..?”

“இது என்ன கேள்வி..? நீங்களும் மத்தவங்களும் ஒன்றா..?”

‘இது.. இது.. இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்..’ கபிலனின் முகத்தில் ‘பல்ப்’ எரிந்தது..

“நான் மட்டும் என்ன ஸ்பெஷல்..?”

கபிலன் ஆழ்ந்த குரலில் வினவ.. ஆர்த்தி பதில் சொல்ல முடியாமல் திணறிப் போனாள்..

‘அதுதானே.. இவன் மட்டும் எந்தவகையில் ஸ்பெஷல்..?’

அவளுக்கு சொல்லத் தெரியவில்லை.. அப்போது தான் பள்ளியிலிருந்து கல்லூரிக்குள் காலடி எடுத்து வைத்திருந்தவளுக்கு, அவள் மனதை ஆக்ரமித்திருக்கும் உணர்வு என்ன என்பது விளங்க வில்லை.. தெரியவில்லை என்று சொன்னால் அவன் கோபித்துக் கொள்வான் என்பது மட்டும் புரிய.. அவள் மௌனமானாள்..

“பதில் சொல்லு ஆர்த்தி..”

“எனக்கு சொல்லத் தெரியவில்லை..”

அவள் வேறு வழியின்றி சொல்லி விட்டாள்.. கபிலன் முகத்தில் ஏமாற்றம் நிலவியது.. மீண்டும் எரிச்சலுடன் அவன் சாப்பிட ஆரம்பித்தான்..

ஆர்த்திக்கு அவனது முகமாற்றத்தைக் கண்டு மனம் தாளவில்லை.. அவனுக்கு என்ன பதிலைச் சொன்னால் சந்தோசப் படுவான் என்று யோசித்து கவனமாக வார்த்தைகளைக் கோர்த்துக் கூற ஆரம்பித்தாள்..

“உங்களுக்கும்.. மத்தவங்களுக்கும் என்ன வித்தியாசத்தை நான் கண்டு விட்டேன்னு எனக்கு சொல்லத் தெரியாது.. ஆனால் உங்களிடம் பேசுவத போல.. என்னால் அவங்களுடன் பேச முடியவில்லை..”

“அதுதான் ஏன்..?”

“ஏன்னா.. உங்களிடம் எனக்கு மூன்றாம் மனிதரைப் போல உணர்வு வரவில்லை.. நீங்க வேற்றாள்ன்னு எனக்குத் தோணவே இல்லை..”

கபிலன், முகம் பிரகாசிக்க நிமிர்ந்தான்… ‘இப்போதைக்கு இது போதும்..’ என்று அவனுக்குத் தோன்றியது..

“ஸோ.. நான் வேற்றாள்ன்னு உனக்குத் தோணலை..?”

“ம்ம்ம்..”

“அப்புறம் ஏன்.. என் பக்கத்தில் ஜெண்ட்ஸ் உட்கார்ந்தது இல்லைன்னு சொன்னாய்..? மத்தவங்களும் நானும் ஒன்றில்லைன்னு நீதானே இப்போது சொன்னாய்.. நான்தானே உன் பக்கத்தில் உட்கார்ந்தேன்..? ஏன்.. நான் பக்கத்தில் உட்காரக் கூடாதா..?”

“நான் அப்படிச் சொன்னேனா..?”

“அப்படி வாய்விட்டுச் சொன்னால்தானா..? சுற்றும் முற்றும் பார்த்தாயே..” 

“யாராவது பார்த்துவிட்டால் என்ன செய்வது..?”

“அந்த பயம் மட்டும்தானா..?”

“ம்ம்ம்..”

“அப்போ சரி..”

கபிலன் எழுந்து கொண்டான்.. ஆர்த்தி கண்களில் ஆச்சரியத்துடன் எழுந்து கொண்டாள்.. அவன் அவ்வளவு சீக்கிரத்தில் கோபத்தை விடுவான் என்று அவள் எதிர் பார்த்திருக்கவில்லை..

“அவ்வளவுதானா..? நீங்கள் பேசி முடித்து விட்டீங்களா..?”

“நீயென்ன.. ராகிங் பண்ணினாலும் ‘இவ்வளவு தானா..?’ன்னு கேட்கிற.. கோபப்பட்டாலும்.. ‘இவ்வளவு தானா..?’ன்னு கேட்கிற.. திட்டு வாங்குவதில் உனக்கு இவ்வளவு ஆசையா..?”

அரிசிப் பற்கள் தெரியச் சிரித்தான் கபிலன்.. அவன் முகத்திற்கு அழகு சேர்க்கும் அந்தச் சிரிப்பு ஆர்த்தியை என்னவோ செய்தது..

அன்று இரவு ஆர்த்தி நிம்மதியாக உறங்கினாள்..

மழை பலமாகக் கொட்டிக் கொண்டிருந்தது.. காலேஜின் வராண்டாவை விட்டு இறங்க யோசித்தவளாய் ஆர்த்தி.. மழையைப் பார்த்துக் கொண்டே நின்று கொண்டிருந்தாள்.. தற்செயலாய் திரும்பியவள் தன்னருகே கருத்த நிறத்தில் நீண்ட ஓவர் கோட்டும் முகம் மூடிமறைத்த தொப்பியும் போட்டுக் கொண்டிருந்த உருவத்தைக் கண்டதும் வாயில் கையை வைத்து..

“வீல்..” என்று அலறினாள்..

“இப்போது எதுக்கு.. சோப்புக்கு விளம்பர மாடல் போல.. அந்த சோப்பு பவுடரின் பெயரைச் சொல்கிற..?” என்றவாறு முகத்தை மூடியிருந்த தொப்பியை எடுத்தான் கபிலன்..

“நீங்களா..” என்று ஆசுவாசப் பெருமூச்சு விட்டாள் ஆர்த்தி..

“ஒரு மனுசன் ரெயின் கோட்டைப் போட்டுக்கிட்டு பக்கத்தில் வந்தால்.. இப்படித்தான் பயந்து அலறுவதா..?” என்றான் அவன்..

“நீங்க வேற.. நேற்றைக்கு நைட் டிவியில் ஒரு பழைய படம் பார்த்தேன்.. ‘நூறாவது நாள்..’ங்கிற படம்.. அதில் கொலைகாரன் இப்படித்தான் முகத்தை மறைத்து தொப்பிப் போட்டு இதே போல ரெயின் கோட்டை மாட்டிக்கிட்டு வருவான்..” ஆர்த்தி பயத்துடன் சொன்னாள்..

“இதே போல் மழையும் பெய்திருக்குமே..”

“அட.. ஆமாம்.. நீங்களும் அந்தப் படத்தைப் பார்த்தீங்களா..?”

“இதற்குப் போய் படத்தைப் பார்க்கணுமா..? மழையில் நனையாமலிருக்கத்தானே ரெயின் கோட் போடுவாங்க..?”

கபிலன் புருவங்களை உயர்த்த.. ஆர்த்தி அசடு வழிந்தாள்..

“அதுசரி ஆர்த்தி.. எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்..”

“சந்தேகமெல்லாம் எனக்குத்தானே வரும்.. உங்களுக்கு வராதே..! நீங்க புத்திசாலியாச்சே..!”

“நீ மட்டும் மக்கா..?”

“வார்த்தைக்கு வார்த்தை நீங்க என்னை அப்படித்தானே கூப்பிடுகிறீங்க..”

ஆர்த்தி சிணுங்கல் குரலில் கூறினாள்.. கபிலனின் முகத்தில் மெல்லிய சிரிப்பு படர்ந்தது..

“இது, வேற சந்தேகம்மா..”

“அம்மான்னா சொன்னீங்க..?”

“ஆமாம்..”

“நான் உங்களுக்கு அம்மாவா..?”

‘அட.. இவளுக்கு இதுபோல் கூடப் பேசத் தெரியுமா..?’ கபிலன் ஆச்சரியத்துடன் இமை கொட்டினான்..

“அடிச்சுத் தூள் கிளப்பறே ஆர்த்தி.. கீப் இட் அப்..”

“பார்க்கலாம்.. நீங்க உங்க சந்தேகத்தைக்கேளுங்க..”

“இந்தப் பெண்களுக்குப் பயம் வந்தால் ஏன் வாயின் மேல் கையை வைத்து சோப்புப் பெயரைச் சொல்லி அலறுகிறாங்க..?”

ஆர்த்தி கபிலனை முறைத்தாள்.. அவன் இரண்டு கைகளையும் மேலே உயர்த்திச் சிரித்தான்..

“இந்த சில்லுன்ன மழைக்கு வெப்பம் தேவைதான்.. அதுக்காக இப்படி ஒரு அனல் பார்வையை அள்ளி வீசினால் நான் தாங்க மாட்டேன் பாரு.. இந்தரெயின் கோட்டே பொசுங்கி விட்டது..”

“நானே மழையில் எப்படி வீடு போய் சேருகிறதுன்னு கவலையில் இருக்கிறேன்.. நீங்க வேற.. நேரம் காலம் தெரியாமல் ஜோக்கடிக்கிறீங்க..”

அவள் கவலையுடன் கபிலனிடம் கூறிக் கொண்டிருந்த போது அவர்களின் முதுகிற்குப் பின்னால் அந்தக் குரல் கேட்டது..

“நான் வேண்டும்ன்னா.. என் காரில் உன் வீட்டில் டிராப் பண்ணவா ஆர்த்தி..?”

கபிலனும் ஆர்த்தியும் திரும்பிப் பார்த்தார்கள்.. தினேஷ் நின்று கொண்டிருந்தான். கபிலனின் முகம் கருத்தது..

“வேண்டாம்..” ஆர்த்தி கொஞ்சம்கூட யோசிக்காமல் உடனே பதில் சொன்னாள்..

“மழை பலமாய் பெய்கிறது.. இப்போதைக்கு விடாது.. இருட்ட ஆரம்பித்து விட்டது.. நீ வீட்டிற்குப் போக வேண்டாமா..? நான் காரில்தான் வந்திருக்கிறேன்.. எனக்கொன்றும் சிரமமில்லை.. நீ வா.. உன் வீட்டில் இறக்கி விட்டுப் போகிறேன்..” தினேஷ் விடாமல் கூறினான்..

‘வற்புறுத்துகிறான்.. ராஸ்கல்..’ கபிலன் பல்லைக் கடித்தான்..

“அது என் கவலை.. என் வீட்டுக்குப் போக எனக்கு வழி தெரியும்.. நீங்க கிளம்புங்க..”

ஆர்த்திக்கு இப்படிக் கண்டிப்பாகப் பேசவும் தெரியும் என்று.. அன்றுதான் உணர்ந்தான் கபிலன்..

“நீ இப்படி மழையில் மாட்டியிருக்கும் போது நான் மட்டும் எப்படி.. நிம்மதியாகப் போவேன் ஆர்த்தி..?”

கபிலனோடு அவள் பேசிக் கொண்டிருப்பதைப் பொறுக்க மாட்டாமல், தினேஷ் விடாக்கண்டனாக அங்கேயே நின்று கொண்டான்..

ஆர்த்தியின் முகம் கோபத்தில் சிவந்தது.. வெட்கத்தில் மட்டுமே சிவந்த அவளுடைய முகத்தைப் பார்த்த கபிலன் இந்தக் கோப முகத்தைக் கண்டதும் திகைத்தான்..

‘இவளுக்கு கோபம் கூட வருமா..?’

ஆர்த்தி ஒரு முடிவோடு தன் முன்னால் நின்ற தினேஷைப் பார்த்தாள்.. பின் கபிலனின் அருகே வந்து அவன் எதிர்பார்க்காத ஒன்றைச் செய்தாள்..

0Shares

Reviews – Poovum Puyalum / பூவும் புயலும்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link