Chapter 05
ரகுநந்தன் சூழல் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தான்.. அவனின் அந்த தோரணையில் எரிச்சல் பட்டாள் சந்தியா.. அதை அவளின் முகம் வெளிப்படையாகக் காட்டியதில் அவன் பாதிக்கப் பட்டான்..
அவன் இருக்குமிடத்திற்கே வந்து அவனிடம் வெறுப்புக் காட்டும் அந்த சிறு பெண்ணின் நோக்கம் என்னவாக இருக்கக் கூடும்..?
அது எதுவாக இருந்த போதிலும் அவன் தன்னைப் பற்றிய தன்னிலை விளக்கத்தை அவளுக்கு கொடுக்க முயன்றான்..
ஏனோ தெரியவில்லை.. சிங்கத்தின் குகைக்குள் நுழைந்து விட்ட அந்த சிறு முயலின் மீது அவன் மனதுக்குள் கனிவு வந்தது..
“லுக் கேர்ள்…”
“கேர்ளா..?”
“பின்னே நீ லேடியா..? இன்னும் காலேஜைக் கூட நீ முடிக்கலை.. உன்னை கேர்ள்ன்னு சொல்லாம வேற எப்படிச் சொல்றது..?”
“நீங்க எப்படியும் சொல்ல வேணாம்.. என் பெயர் சந்தியான்னு நான் வந்தவுடன் சொல்லிட்டேன்…”
“ஊஹீம்..? ஸோ வாட்..?”
“அதனால நீங்க கேர்ள்ன்னு என்னை ஸ்கூல் கோயிங் கேர்ளா மாத்தாம பெயரைச் சொல்லியே கூப்பிடுங்க சார்..”
மூக்குநுனி சிவக்க அவனிடம் கோபப்பட்ட போதே… இப்படித்தானே… ‘காலேஜ் கோயிங் பாய்..’ என்று சுதர்சனத்தைச் சொன்ன போது அவனுக்கும் இருந்திருக்கும் என்று சந்தியா நினைத்துக் கொண்டாள்..
இதைத்தான் வள்ளுவர்..
‘பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் – தமக்கின்னா
பிற்பகல் தானே வரும்..’
என்று சொல்லியிருக்கிறாரோ என்று யோசித்-தவளுக்கு.. வள்ளுவர் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் என்று மெச்சத் தோன்றியது…
முதல் நாள் இரவுதான் அவள் சுதர்சனத்தை ‘காலேஜ் கோயிங் பாய்..’ என்று சொல்லி இன்னா செய்திருக்கிறாள் மறுநாள் காலையிலேயே அவளை ஒருவன் ‘கேர்ள்’ என்று சொல்லி இன்னா செய்கிறான் என்றால்.. வள்ளுவரின் வாய்க்கு சர்க்கரையை அள்ளிக் கொட்ட வேண்டாமா..?
தன் போக்கில் அவள் சிந்தித்துக் கொண்டிருக்க.. அவனோ அதைப் பற்றிய கவலையில்லாமல் அவளை ரசனையுடன் பார்த்து…
“சந்தியா..” என்று அந்தப் பெயருக்கு வலிக்குமோ என்று சொல்லிப் பார்த்துக் கொண்டான்..
பேசாமல் எழுந்து போய் விடலாமா என்று சந்தியாவிற்குத் தோன்றியது.. இருந்திருந்து அவள் பெயரை இவன்தானா ரசனையுடன் உச்சரிக்க வேண்டும்..?
கல்பனாவின் நினைவில்.. வந்ததுதான் வந்தோம்.. இன்னும் இரண்டு கேள்வியை அவனை நாக்கைப் பிடுங்கிக் கொள்வதைப் போலக் கேட்டு விட்டுப் போவோம் என்று பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்..
அவனைப் பார்த்தால் நாக்கைப் பிடுங்கிக் கொள்கிற ரகமாகத் தெரியவில்லை.. என்னதான் அவள் ‘வந்து பார் வட்டப் பாறைக்கு’ என்று அறைகூவல் விடுத்தாலும்.. அதை ஒரு பார்வையில் தவிடு பொடியாக்கும் வித்தையை அவன் கற்று வைத்திருந்தான்…
“நான் சொல்வதை புரிந்து கொள் சந்தியா..” அவன் ஆரம்பித்தபோதே சந்தியாவுக்கு தூக்கம் வந்து தொலையும் போல இம்சையாக இருந்தது..
‘கிளாஸ் ரூமிலதான் பாடம் எடுத்து டார்ச்சர் பண்றாங் கன்னா.. சண்டை போட வந்த இடத்தில இவனும் அதைத் தான் செய்யனுமா..? இம்சை.. இப்படிக் கிளாஸ் எடுத்தே என்னை ஓட்டி விட்டுடலாம்கிற ஐடியாவோட இருக்கானா..?’
அவள் சிரமப்பட்டு வந்த கொட்டாவியை வாய்க்குள்ளேயே அடக்க முயன்றபடி.. அவன் என்னதான் சொல்கிறான் என்று கவனித்தாள்..
“நீ பி.காம் ஸ்டூடன்ட்.. உனக்கு நான் அதிகமாச் சொல்ல வேண்டியதில்லை..”
‘அதிகமாகச் சொல்ல வேண்டியதில்லை.. அதிகமாச் சொல்ல வேண்டியதில்லைன்னு சொல்லிக்கிட்டே அரைமணி நேரமா ரம்பம் போடறியேடா.. இது உனக்கே நல்லாயிருக்கா..?’
“உன் பிரண்டோட வீடு இருக்கிறது பிஸினெஸ் ஏரியா..”
‘இருந்துட்டுப் போகட்டும்.. அதில உனக்கென்ன கஷ்டம் வந்தது..?’
“சுற்றிலும் ஷாப்பிங் காம்ளெக்ஸ்.. மல்ட்டி இன்டர் நேசனல் கம்பெனிஸீன்னு கமர்ஷியலா இருக்கிற இடத்தில.. உன் பிரண்டோட வீடு மட்டும் ஒற்றையாய் நிற்குது…”
‘தோடா.. அதுக்கு ஜோடி சேர்த்து விடத்தான் நீ அந்த வீட்டை அபேஸ் பண்ணப் பார்க்கறியா..? கேட்கிறவ கேணையா இருந்தா நீ கேழ்வரகில நெய் வடியுதுன்னு கதை செல்லிருவ போல இருக்கே.. உன்கிட்ட உஷாராய்த் தான் இருக்கனும் போல..’
“அந்த இடத்தில பெரிய ஒரு ஷாப்பிங் மால் கட்டலாம்ன்னு ரொம்ப நாளா பிளான் போட்டுக்கிட்டு இருக்கேன்..”
‘அடுத்தவன் வீட்டை இடிச்சுக்கட்ட ஐடியா பண்ணிக்கிட்டு இருந்தேன்னு சொல்லு..’
“உன் பிரண்டோட அப்பா.. அவர் பெயரென்ன..?”
அவன் யோசனையுடன் ஒருபக்க நெற்றியில் ஒற்றை விரலைத் தட்டி யோசிக்க… கொதித்துப் போனாள் சந்தியா.
‘பாவம்.. அந்த மனுசக்கிட்ட இருந்த வீட்டையும் பிடுங்கிக்கிட்டு.. அவன் பெயரை நினைவில்லைன்னு நெத்தியிலே ஓட்டை போடறான்.. இவனுக்கெல்லாம் இதயம்ங்கிறதே இல்லையா..?’
அவள் நெற்றிக் கண்ணை திறந்த அதே நொடியில் அவனுக்கும் அவர் பெயர் நினைவுக்கு வந்து விட்டது..
“ம்ம்ம்.. மந்திரமூர்த்தி..” பெருமையுடன் சந்தியாவைப் பார்த்தவன்..
“ஆம் ஐ ரைட்..?” என்று அவளிடம் கேட்க வேறு செய்தான்…
‘நீ ரைட்டே இல்லை.. ராங் பெர்சன்..’ மனதில் நினைத்ததை சொல்ல முடியாமல் பல்லைக் கடித்தபடி தலையை அசைத்தாள் சந்தியா…
“அந்த மந்திர மூர்த்தியிடம் வீட்டை விலை பேசினேன்.. இப்ப அவர் இருக்கிற கமர்ஷியல் ஏரியாவை விட பெட்டரா.. லேண்ட்வேல்யூ கூட உள்ளதா இருக்கிற வி.ஐ.பி. ஏரியாவில் இதைவிட அதிகமான வசதிகளோட இருக்கிற வீட்டை விலைக்கு வாங்கித்தரேன்னு சொன்னேன்.. அதே நேரத்தில் இப்ப அவர் விற்கிற வீட்டுக்கு என்ன மதிப்போ.. அந்தப் பணத்தையும் அவருக்கு கொடுக்கிறதா வாக்குக் கொடுத்தேன்.. தட்’ஸ் தி ஜாக்பாட்.. பட்.. அவர் பைத்தியக்கார மனிதனா இருந்தார்.. நான் கொடுத்த ஜாக்பாட்டை கெட்டியா பிடிச்சுக்க அவருக்குத் தெரியலை.. தென்.. வாட் கேன்
ஐ டு..?”
“அவர் வீடு.. அவர் கொடுக்க மாட்டேன்னு சொல்லியிருக்கிறார்.. இதில உங்களுக்கு என்ன சார் அப்ஜெக்சன்..? நீங்க ஷாப்பிங் மால் கட்ட வேறு இடமா கிடைக்காது..?”
“புத்தியோடதான் பேசறயா..?” அவன் எரிந்து விழுந்தான்…
“எது.. எது.. எங்கே இருக்கனுமோ.. அங்கேதான் இருக்கனும்… கமர்ஷியல் ஏரியாவில வீட்டைக் கட்டிக்கிட்டு… வீடுகளா இருக்கிற கொயட் ஏரியாவில போய் ஷாப்பிங் மாலை கட்ட முடியுமா..?”
அவன் கேட்ட போது.. பி.காம் பட்டப் படிப்பை படிப்பவளுக்கு முடியாதுதான் என்று தோன்றியது..
‘அதற்காக..?’
கல்பனா கூறிய பிறந்து வளர்ந்த கதையை நினைவு கூர்ந்தவளுக்கு ரகுநந்தன் கூறியதில் இருந்த விளக்கங்கள் மறந்து போயின..
“எல்லோருமே உங்களைப் போல லாப நஷ்டக் கணக்கை பார்க்கிறவங்களா இருக்க மாட்டாங்க சார்.. வாழ்க்கைங்கிறது வெறும் கூட்டல் கழித்தல் போடும் கணக்கு இல்லை.. அதையும் தாண்டி நிறைய இருக்கு.. அந்த வீட்டில் கல்பனாவின் நினைவுகள் இருக்கு சார்.. அது உணர்வு பூர்வமானவை..”
“ஓகே.. நான் உன் பாயிண்டுக்கே வருகிறேன்.. நீ சொல்கிறதைப் போல அங்கே உன் பிரண்டுக்கு செண்டி மென்ட் மெமோரிஸ் இருக்கிறதாவே இருக்கட்டும்..”
“இருக்கட்டும்ன்னு சொல்ல வேண்டாம் சார்.. இருக்கிறது..”
“ஓகே.. இருக்கிறது.. நான் அதை ஒப்புக் கொள்கிறேன்.. ஆனா.. உன் பிரண்ட் காலம் முழுவதும் பிறந்த வீட்டிலேயே இருந்து விட முடியுமா..? அவளுக்கும் மேரேஜ்ன்னு ஒன்று ஆகும்.. அப்ப அந்த வீட்டை விட்டு ஹஸ்பெண்டின் வீட்டுக்கு வாழப் போக மாட்டாளா..? வாழப் போகும் வீட்டை நேசிக்க ஆரம்பிக்க மாட்டாளா..?”
இந்தக் கேள்விக்கு சந்தியா என்ன பதிலைச் சொல்லுவாள்..? அவளுடைய அக்கா சூர்யா.. பிறந்த வீட்டை நேசித்ததைவிட அதிகமாகவா கல்பனா அவள் வீட்டை நேசித்திருக்கப் போகிறாள்..? அவள் புகுந்த வீட்டிற்குப் போகவில்லையா..? அந்த வீட்டை நேசிக்க ஆரம்பிக்கவில்லையா..?
“இது அன்நெஸஸரி கொஸ்டின் சார்..”
“ஊஹீம்.. இது நெஸஸரி கொஸ்டின்தான்.. அதே போல கல்பனா இல்லாத வீட்டில் வாழ மந்திரமூர்த்தி பழகிக் கொள்வாரா.. மாட்டாரா..?”
“பழகிக்குவார்தான்..”
“அப்படி பழகிக்க வேண்டியவர்.. ஏன் அந்த வீட்டை விட்டு புது வீட்டில் இருந்து கொள்ளப் பழகிக்க கூடாது..?”
ரகுநந்தன் கேட்ட கேள்வியில்.. இவன் பேச்சில் கெட்டிக்காரன் என்று சந்தியாவிற்குத் தோன்றியது..
பேசிப் பேசியே எதிராளியை மடக்கி விடும் வித்தையை இவன் கற்று வைத்திருக்கிறான்.. இவனிடம் தோற்றுவிடக் கூடாது என்று அவள் நினைத்தாள்.. இவன் கல்பனாவின் வீட்டை அபகரித்திருக்கிறான்.. அதற்கான நியாயத்தை அவனிடம் கேட்டே தீர வேண்டும் என்று அவள் நினைத்தாள்.. அவளுடைய தோழி கண்ணீர் வடிக்கிறாள்.. அதற்குக் காரணமான இவன் நொண்டிச் சமாதானம் கூறி அவனுடைய அராஜகத்தை நியாயப் படுத்தப் பார்க்கிறான் என்று அவள் நினைத்தாள்…
“நீங்க ஒன்றை மறந்துட்டிங்க சார்..” அவள் பீடிகை போட்டாள்..
“எதை..?” அவன் அமர்த்தலாக வினவினான்..
“அது அவர்களின் வீடு.. அதை நேசிப்பதும்.. மறப்பதும் அவர்களின் விருப்பம்.. அதை விற்க மறுப்பதும் அவர்களின் உரிமை.. இதில் நியாயம் பேச நீங்கள் யார் சார்..?”
அவனை விட அமர்த்தலாக அவள் கேட்ட விதத்தில் அவன் முகம் சுளித்தான்.. அவனுடைய உயரத்திற்கு அவளையெல்லாம் இணையாக நினைத்து விளக்கம் சொல்லியது தவறு என்ற கோபம் அவன் முகத்தில் தெரிந்தது.. அந்தக் கோபத்தோடே கேட்டான்..
“நீ பி.காம் ஃபைனல் இயர்ன்னுதான சொன்ன..?”
“யெஸ்…”
“அப்புறம்.. பெரிசா லா.. பாயிண்ட் பேசற..? லுக்.. இது உனக்குத் தேவையில்லாத மேட்டர்.. இதிலெல்லாம் மூக்கை நுழைக்காம படிக்கிற வேலையை மட்டும் பார்.. உன் அப்பாவுக்கு நீ இங்கே.. என்னைப் பார்க்க வந்திருக்கிற.. ஐ மீன்.. சண்டை போட வந்திருக்கிற விவரம் தெரியுமா..?”
‘மிரட்டுகிறானா..? தெரியலைன்னா என்ன செய்வான்..? போனைப் போட்டுப் போட்டுக் கொடுப்பானா..?’
மனதுக்குள் வெகுண்ட போதும்.. அப்படி அவன் செய்து விட்டால் கல்யாணராமன் என்ன சொல்வார் என்பதை நினைத்துப் பார்த்தாள் சந்தியா..
“உனக்கு எதற்கு இந்த வீண்வேலை..? உன்னை படிக்கத்தானே அனுப்பி வைத்தேன்..? ரகுநந்தனைப் போன்ற பெரிய மனிதனிடம் வம்பு வளர்க்கச் சொல்லி அனுப்பி வைத்தேனா..? நேத்தே என்ன சொன்னேன்..? இதெல்லாம் உனக்குத் தேவையில்லாத பேச்சுன்னு சொன்னேனா இல்லையா..? என்ன ஜானகி.. பெண்ணை இப்படி வளர்த்து வைச்சிருக்க..?”
இத்தனை அர்ச்சனைகளை கேட்க வைத்து விடுவானோ என்ற பயம் மனதுக்குள் வந்த போதும்.. செய்தால் செய்துவிட்டுப் போகட்டுமே என்ற வீம்பும் அந்த பயத்தோடு சேர்ந்து வந்தது..
அடுத்தவர் சொத்தை அபகரிக்க நினைக்கும் அவனுக்கே பயம் இல்லாத போது.. அதைத் தட்டிக் கேட்க வந்த அவள் எதற்காக பயப்படவேண்டும்..? “”
“தெரியாது.. அதுக்கு இப்ப என்னங்கறிங்க..?”
அவள் படபடப்பாக கேட்ட விதத்தில் அவனுக்குச் சிரிப்பு வந்தது..
“அதானே பார்த்தேன்.. கல்யாணராமன் இதையெல்லாம் அலோவ் பண்ண மாட்டாரேன்னு நினைச்சேன்.. நான் நினைத்தது சரியாகத்தான் இருக்கு..”
அவன் சிரிக்க.. அவளுக்கு பற்றிக் கொண்டு வந்தது..
“எல்லா நேரமும் உங்க நினைப்பு சரியாகவே இருக்காது சார்..” பட்டென்று சொல்லி விட்டாள்…
“ஃபார் எக்ஸாம்பிள்..?” அவன் மிதப்பாக புருவங்களை உயர்த்தினான்.. அந்த புருவ உயர்வில் வசீகரிக்கப் பட்டாள் சந்தியா..
‘இவன் செய்கிறதெல்லாம் வில்லன் வேலையாய் இருக்கு.. ஆனா.. ஆளைப் பார்த்தா அசத்தலா இருந்து வைக்கிறான்…’
அவள் மனதுக்குள் தோன்றிய எண்ணத்தைப் படித்து விட்டவனைப் போல அவன் இதழோரம் தெரிந்த சிரிப்பில் அவள் அவசரமாக தன் மனதில் ஓடிய எண்ணங்களை அழித்தாள்..
‘இருந்திருந்து.. இவனைப் போய்த்தான் நான் ரசிக்கனுமா..? மைகாட்..’ அவசரமாக சுதாரித்துக் கொண்டவள் அவனை தேவைக்கு அதிகமாகவே முறைத்து தன் மனதை மறைக்க முயன்றாள்…
“கல்பனா வீட்டு விசயத்தில உங்க நினைப்பு தப்பானது சார்.. அந்த ஒரு எக்ஸாம்பிள் போதாதா..?”
“அதற்குத்தான் விளக்கம் சொல்லிட்டேனே…”
“அவங்க வீட்டை அநியாயமா எடுத்துக்கப் பார்க்கறிங்களே.. இது எப்படி சார் சரியாகும்..?”
“நான் கேட்டேன்.. அவங்க கொடுக்கலை..”
“அப்ப நீங்களா அதை எடுத்துக்குவீங்களா..?”
“யெஸ்…”
அவன் கண்களின் ஜொலிப்பிலும்.. வார்த்தையின் கடினத்திலும் அவள் பயந்து போனாள்.. அது வேட்டைக் காரனின் பார்வையாக இருந்தது.. நினைத்ததை அடையும் தீவிரம் அதில் தெரிந்தது…
‘என்ன மாதிரியான மனிதன் இவன்.. காட்..!’
“நானும் கிளப்பிள்ளைக்குச் சொல்கிறதைப் போல எடுத்துச் சொல்லிப் பார்த்தேன்.. அவர் கேட்கலை.. நான் எடுத்துக்கிட்டேன்..”
“இது தப்புன்னு தோணலையா..?”
“இல்லையே..”
அவன் தோள்களைக் குழுக்கி கைகளை விரித்த விதத்தில் இவன் மகாபாவி என்று அவளுக்குத் தோன்றியது..
சண்டாளன்..! மந்திரமூர்த்தியைப் போன்ற ஒரு நல்ல மனிதரை ஏமாற்றி அவர் வீட்டைப் பறித்துக் கொண்ட கேடு கெட்டவன்.. கல்பனாவைப் போன்ற மென்மையான உணர்வுகளைக் கொண்ட பெண்ணின் மனதை சுக்கு நூறாக உடைய வைத்தவன்.. அபிராமி போன்ற பெண்மணி.. கண்ணீர் வடிக்கக் காரணமானவன்..
“இது அநியாயம்..” அவள் மனம் குமுறினாள்..
“எனக்கு இதுதான் நியாயம்.. நான் நினைத்தால் எதையும் செய்வேன்னு அந்த மந்திரமூர்த்தி இப்ப புரிஞ்சுக்கிட்டு இருப்பார்…”
“எப்படி இது நடந்தது…?”
“எப்படியோ நடந்தது.. அது எதற்கு உனக்கு..? ரகுநந்தன் வேண்டுமென்று ஒன்றை நினைத்து விட்டால் அதை அடைந்தே தீருவான்.. அதை மட்டும் தெரிந்துக் கிட்டுப்போ.. வந்ததுதான் வந்து விட்ட.. ஜீஸ் சாப்பிட்டு விட்டுப் போ.. உன் அப்பா எனக்குத் தெரிந்தவர்.. நல்ல மனிதர்…”
அதற்காகவெல்லாம் நீ கொடுக்கும் ஜீஸை நான் குடிக்க முடியாது என்று பல்லைக் கடித்தபடி அவன் அறையை விட்டு வெளியேறினாள் சந்தியா..
Reviews – Puthithaga Oru Bubalam / புதிதாக ஒரு பூபாளம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.