Chapter 08
சந்தியா உற்சாகமாக கல்லூரிக்குப் போனாள்.. வீட்டுக்கு வந்திருக்கும் அபிஷேக்கின் நினைவில்.. கல்பனாவைப் பற்றி நினைக்க மறந்து விட்டாள்.. வகுப்பு நடந்து கொண்டிருந்த போது அவளருகே இருந்த தோழி அவள் கையைக் கிள்ள…
“ஸ்ஆ.. வலிக்குதுடி.. நீரு..” என்றவளின் காதில்..
“நான் நீரஜா இல்லை.. கல்பனா..” என்ற மெதுவான குரல் காதில் விழுந்தது…
சட்டென்று பாடத்தை மறந்து திரும்பிப் பார்த்தாள் சந்தியா.. அவள் அருகில் கல்பனா உட்கார்ந்திருந்தாள்.. அவள் முகத்தில் மலர்ச்சி இல்லை.. அதே நேரத்தில் கண்ணீரும் இல்லை..
போதி மரத்தடியில் ஞானம் பெற்ற புத்தரின் முகத்தில் தெரிந்த தெளிவு அவளிடத்தில் அப்போது இருந்தது…
“கல்பனா..” சந்தியா பாசத்துடன் அழைத்தாள்…
“எப்படி வந்த..?”
“அப்பவே வந்திட்டேன்.. நீதான் கவனிக்கலை..”
“தப்புத்தான்.. கிளாஸ் ரூமில் பாடத்தை மட்டும் தான் கவனிக்கனும்னு நானாக முடிவு பண்ணிட்டேன்.. ஏன் இரண்டு நாளா காலேஜிக்கு வரலை..?”
“உனக்குத் தெரியாதா..?”
“தெரியும்தான்.. அதுக்காக காலேஜ்க்கு வராம இருக்கிறதா..! நீ காலேஜிக்கு வராம இருந்தா மட்டும்.. உன் பிரச்னைகள் எல்லாம் தீர்ந்து விடுமா..?”
“ஏறக்குறைய அதெல்லாம் தீர்ந்ததைப் போலத்தான் சந்தியா…”
“வாட்..?”
சந்தியா விளக்கம் கேட்டுக் கொண்டிருக்கும் போதே.. மேடையில் விரிவுரையாற்றிக் கொண்டிருந்த லெக்சரர் பாடத்தை நிறுத்தி விட்டு..
“சந்தியா.. கல்பனா..” என்று கண்டிப்புடன் அழைத்தாள்..
“போச்சுடா.. இந்தக் கடுவன் பூனைகிட்ட மாட்டிக் கிட்டோம்டி..” முணுமுணுத்தபடி சந்தியா எழுந்து நிற்க.. கூடவே கல்பனாவும் எழுந்து நின்றாள்…
“கிளாஸைக் கவனிக்காம என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க..?”
“நத்திங் மேம்..” சந்தியா சொன்னாள்..
கல்பனா அதையும் சொல்லவில்லை.. செய்து வைத்த சிலை போல அசையாமல் அப்படியே நின்றாள்..
“பாடம் படிக்கனும்ங்கிற அக்கறை இருந்தா என் கிளாஸில் உட்கார்ந்து லெக்சரைக் கவனித்து நோட்ஸ் எடுங்க.. இல்லை.. பேசித்தான் ஆகனும்ன்னா… வெளியே போய் மரத்தடியில் உட்கார்ந்து வாய் வலிக்கிற வரைக்கும் பேசுங்க.. பட்.. படிக்கனும்னு நினைக்கிற மத்த ஸ்டூடண்ஸை டிஸ்டர்ப் பண்ணாதீங்க…” லெக்சரர் கடுமையான குரலில் சொன்னாள்…
‘நாங்க மட்டும் படிக்கனும்னு நினைக்காம.. வீட்டில பாத்திரத்தை உருட்டனும்னா நினைக்கிறோம்..’
சந்தியா வாய் பேசாமல் கல்பானவுக்கு துணையாக இன்னொரு அசையா மரமாக ஆணாள்..
“சிட் டவுண்..” முகச் சுளிப்புடன் லெக்சரர் அதட்டவும் இருவரும் அப்பாடா.. விசாரணை முடிந்தது என்ற நிம்மதியுடன் அமர்ந்தார்கள்..
அதற்குப் பின்னாலும் கிசுகிசுவென்று ரகசியம் பேச.. அவர்கள் என்ன முட்டாளா..? வாய் பேசாமல் பாடத்தைக் கவனித்து விட்டு.. வகுப்பு முடிந்ததும் மரத்தடியில் ஒதுங்கினார்கள்..
“சொல்லுடி.. எப்படி உன் பிரச்னை தீர்ந்தது..? அந்த ரகுநந்தன் உங்க வீடு வேண்டாம்ன்னு விலகிப் போய் விட்டானா..?” பரபரப்புடன் வினவினாள்.. சந்தியா..
ஒருவேளை.. அவள் பேசிய பேச்சில் அவன் யோசித்துப் பார்த்திருப்பானோ.. அவன் செய்தது தவறு என்று அவன் மனச்சாட்சி உறுத்தியிருக்குமோ.. அதனால் மந்திரமூர்த்தியின் வீட்டை அவரிடமே ஒப்படைத்து விட்டானோ…
அவளுக்கு அதைத் தெரிந்து கொண்டே ஆக வேண்டும் போல இருந்தது.. கோட்.. சூட்.. டையென்று.. ஆறடி உயரத்தில் இருந்த அவனது கம்பீரமான தோற்றம் அவள் மனக் கண்ணில் வந்து போனது..
‘அப்படி மட்டும் அவன் நினைத்துப் பார்த்துத் திருந்தியிருந்தா.. ரியலி ஹி இஸ் எ கிரேட் மேன்தான்…’
இல்லையென்றாள் கல்பனா… அவன் திருந்த வேண்டிய அவசியமில்லாமல் அவர்களைத் திருத்தி விட்டான் என்று சொன்னாள்..
“இந்த செண்டிமென்ஸை விட்டுவிட்டுப் பார்த்தா.. அவன் சொல்கிறதில் பாயிண்ட்ஸ் இருக்கு சந்தியா.. எங்க வீடு இருக்கிற ஏரியாவை விட லேண்ட் வேல்யூ அதிகமா இருக்கிற.. பணக்காரங்க குடியிருக்கிற ஏரியாவில பக்காவான வசதியோட ஒரு வீடு.. கூடவே.. எங்க வீட்டின் மதிப்புக்கான பணம்ன்னு அள்ளிக் கொடுக்கிறான்.. அதை அக்செப்ட் பண்ணிக்கிட்டு போகிறதுதான் பெட்டர்ன்னு நாங்க முடிவு பண்ணிட்டோம்…”
“ஆனா கல்பனா.. இதையே அவன் விலை பேச வந்தப்போ சொல்லியிருக்கான் தானே.. அப்ப விட்டுட்டு.. இப்ப ஏன் இதை அக்செப்ட் பண்ணினீங்க..?”
“அப்ப வீடு எங்க கையில் இருந்தது சந்தியா.. இப்ப அவன் கைக்குப் போயிருச்சு.. அவன் நினைச்சா.. எங்களை அந்த வீட்டை விட்டு வெளியே துரத்தலாம்…”
“சேச்சே.. என்ன பேச்சு பேசற..? எப்படி இப்படி யெல்லாம் சொல்கிற கல்பனா..?”
சந்தியா கடிந்து கொண்ட போது கல்பனா வெறிச்சிட்ட பார்வையைப் பார்த்தாள்..
“இதை நான் சொல்லலை சந்தியா.. அவன் சொன்னான்…”
“கல்பனா…”
“ஆமாம் சந்தியா.. வீடு எங்க கையை விட்டுப் போயிருச்சு.. அதை மீட்க எங்களுக்கு எந்த வழியும் கிடைக்கவில்லை.. எப்படின்னு தெரியாமலே அவன் கையிலே பவர் போயிருச்சு.. அதுக்குப் பின்னாலே பணிந்து போகிறதைத் தவிர எங்களுக்கு வேற வழி என்ன இருக்கு..?”
“என்னடி இப்படிப் பேசற..?”
“இதையும் நான் பேசலை.. டாடி பேசினார்.. அவர் சேர்த்து வைத்த சொத்து இது.. இதை கை நழுவ விட அவருக்கு மனமில்லை.. அம்மாவும் அவரும் உட்கார்ந்து பேசினாங்க.. அம்மா அழுதாங்க.. சொந்த வீட்டிலே இருந்துட்டு வாடகை வீட்டில எப்படி இருக்கிறதுன்னு கேட்டாங்க.. அப்பா கரைஞ்சுட்டார்.. குடும்பத்துக்காக நான் எதையும் செய்வேன்னு சொன்னவர்.. அவன் காலில் போய் விழுந்திருக்கார்..”
“என்னடி சொன்ன..?” சந்தியா அதிர்ந்து விட்டாள்..
“ஏறக்குறைய அப்படித்தான் சந்தியா.. அவனிடம் கெஞ்சினாராம்.. உங்க கையைக் காலா நினைத்துக் கேட்கிறேன்னு கையெடுத்துக் கும்பிட்டாராம்.. அதுக்குப் பின்னாலே அவன் மலையிறங்கியிருக்கிறான்…”
‘என்ன மனிதன் அவன்..’ எட்டிக்காய் போல வெறுப்பு வந்தது சந்தியாவுக்கு..
“இந்தப் புத்தி முதலிலேயே இருந்திருக்க வேண்டாமான்னு கேட்டானாம்.. தப்புத்தான்.. மன்னிச் சிருங்கன்னு டாடி சொன்னாராம்.. போனாப் போகுதுன்னு அவன் முதலில் சொன்னபடி வீட்டையும் வாங்கிக் கொடுத்து.. எங்க வீட்டுக்குண்டான பணத்தையும் கொடுத்துட்டான்.. அப்பா அவன் பெயருக்கு எங்க வீட்டை ரெஜிட்டர் பண்ணிக் கொடுத்துட்டார்…”
முகம் மாறாமல் கதை சொல்வதைப் போலச் சொல்லிக் கொண்டிருந்த கல்பனாவையே உற்றுப் பார்த்தாள் சந்தியா.. இதற்காகவா இத்தனை போராட்டம் என்று கேட்கத் தோன்றியது அவளுக்கு.. தோற்றுப் போவதற்காகத்தான் இத்தனைப் போராட்டம் என்றால் எதற்காக அவர்கள் போராடினார்கள்..? முதலிலேயே பணிந்து போயிருக்கலாமே.. என்று நினைத்த போது இதைத்தான் அவன் எதிர்பார்த்தானோ என்ற எண்ணம் அவளுக்குள் எழுந்தது…
அவன் கேட்டதும் கொடுத்திருக்கலாமோ என்ற எண்ணத்தை அவர்கள் மனதில் விதைத்து விட்டிருக் கிறான் அவன்.. அவனை எதிர்க்க முனைந்தால் என்ன ஆகும் என்பதை அவர்களுக்கு உணர்த்தி அதன்மூலம் அவர்களை பணியச் செய்திருக்கிறான்..
சந்தியாவுக்கு அவனை நினைத்தாலே எரிச்சல் வந்தது..
“உனக்கு கஷ்டமாய் இல்லையாடி..?” தோழியிடம் கேட்டாள்..
“இல்லை..” என்றாள் அவள்..
“உன் செண்டிமென்ட்ஸ்.. நீ பிறந்து வளர்ந்தவீடு.. நீ நட்டு வைத்த ரோஜா..”
“இந்த எக்ஸெட்ரா.. எக்ஸெட்ராவெல்லாம் இடியாடிக்குன்னு தோணிப்போயிருச்சு.. சந்தியா… இதுதான் உலகம்.. இங்கே பந்த பாசத்துக்கு இடமில்லை.. மனித உணர்வுகளை விட.. கரண்ஸி நோட்டுக்குத்தான் இங்கே மதிப்பு அதிகம்… பணத்துக்கு முன்னாலே சாமானிய மனுசங்களாலே என்ன பண்ண முடியும் சந்தியா..?”
அவர்கள் பேசிக் கொள்ளவில்லை.. கல்பனாவின் முகத்தில் உணர்வுகள் துடைக்கப் பட்டு.. துறவியின் மனோபாவம் வந்திருந்தது.. தோழியை இரக்கத்துடன் பார்த்தான் சந்தியா…
“இனி வீடு மாறனுமில்ல..?”
“ஊஹீம்.. ஆல்ரெடி வீடு மாறியாச்சு..”
“என்னடி சொல்ற..?”
அந்த வீட்டை விட்டு வெளியேறுவதை நினைத்த போதே அழுது தவித்த கல்பனாவா இவள் என்ற ஆச்சரியம் சந்தியாவுக்கு வந்தது…
‘வீடு மாறிட்டதை இவ எவ்வளவு சாதாரணமாச் சொல்றா..!’
“ஆமாம் சந்தியா.. நேற்றே வீடு மாறிட்டோம்.. அதுவும் ரகு நந்தனின் உபயம்தான்.. எங்க வீட்டில் இருக்கிற குண்டுசி கூட மிஸ் ஆகாம அத்தனையையும் பேக் பண்ணி.. லாரிகளில் ஏற்றி.. எங்க புது வீட்டில் இறக்கி விட.. அவன்தான் ஏற்பாடு செய்தான்.. அவன் அனுப்பின ஏஜன்ஸி ஆள்கள்.. எங்களையும் தூக்கி அந்த லாரிக்குள்ளேயே போட்டு.. அவன் காட்டிய புது வீட்டில் கொட்டி விட்டுப் போயிட்டாங்க…”
இவ்வளவு எளிதாக கல்பனா அந்த மாற்றத்தை ஜிரணித்துக் கொண்டதில் சந்தியாவுக்குள் லேசான நிம்மதி வந்தது…
அந்த மட்டிலும் அவள் தோழியின் சொத்து பறிபோய் விடவில்லையே.. அதைப்போல வீடும் கிடைத்து.. பணமும் கிடைத்திருக்கிறதே…
அதற்காகவெல்லாம் அவனை மன்னித்துவிட முடியாது என்று ஆத்திரத்துடன் நினைத்துக் கொண்டாள் சந்தியா…
‘கடைசியில் அவன் நினைத்ததை சாதிச்சுட்டானே..’
ரகுநந்தனைப் போன்ற ஒரு மனிதனை நினைத்துப் பார்ப்பதுகூட பாவம் என்ற முடிவிற்கு வந்து விட்ட சந்தியா.. அவனைப் பற்றிய பேச்சை மாற்றி.. வேறு பேச்சை பேச ஆரம்பித்து விட்டாள்..
அன்று மாலையில் கல்பனாவிற்கு தெம்பாக இருக்கும் என்ற நினைவில் அவளுடன் அவளுடைய புது வீட்டிற்குப் போனாள்.. வீடு ரகுநந்தன் சொன்னதைப் போல செழிப்பான பகுதியில்.. பணக்கார வீடுகளுக்கு மத்தியில் இருந்தது…
‘அந்த வீட்டை விட இதுக்கு லேண்ட் வேல்யு அதிகமா இருக்கும் தான்..’ சந்தியா ஒப்புக் கொள்ளத்தான் வேண்டியிருந்தது..
கல்பனாவின் பழைய வீட்டைச் சுற்றி சந்தடி நிறைந்திருக்கும்.. சிறிய இடமாக இருந்தாலும் அதைச் சுற்றிச்சுவர் எடுத்து.. அங்கும் ஒரு கடைவைத்து விடுவார்கள்.. கல்பனாவின் வீட்டைத்தவிர.. வேறு எங்கும் பசுமையான மரம் செடி.. கொடியைப் பார்க்கவே முடியாது.
இந்தப் புது வீட்டில் அப்படியில்லை.. தெருக்கள் அகலமாகவும்.. சீராகவும் நீண்டிருந்தன.. இரு பக்கமும் மரம்.. செடி கொடிகள் நடப்பட்டு.. அந்தப் பகுதி முழுதுமே குளுமை நிறைந்ததாக இருந்தது.. பெரிய.. பெரிய வீடுகள்.. அமைதியான சூழல் என்று இருந்த அந்தப் பகுதியில் குறை சொல்ல எதுவும் இருப்பதாக சந்தியாவுக்குத் தோன்ற வில்லை…
வீடும்.. பெரிதாகவும்.. பிரம்மாண்டமாகவும் இருந்தது.. கல்பனாவின் பழைய வீட்டில் மாடி இருக்காது.. இங்கே மாடியும்.. அதில் ஹாலும்.. இரண்டு படுக்கையறைகளும் இருந்தன..
“ஒரு கிச்சனை மட்டும் கட்டி விட்டா.. கிரௌண்ட் ஃப்ளோரை வாடகைக்கு விடலாம் போல இருக்கே ஆண்ட்டி..” என்று அவள் சொன்னதும்..
“நானும் அதைத்தான் நினைத்தேன்..” என்றாள் அபிராமி…
அந்தப் பகுதியில் அதிக வாடகை கிடைக்கும் என்பதில் அவள் முகத்தில் திருப்தி நிலவியதை மனதுக்குள் குறித்துக் கொண்டாள் சந்தியா…
“கல்பனாவின் டாடி வாங்குற சேலரிக்கு ஈக்குவலா வாடகை கிடைக்கும் சந்தியா…”
அபிராமியின் பூரிப்பில்.. அவள் துக்கமான மனநிலை யிலிருந்து மிக எளிதாக விடுபட்டு விட்டாள் என்பதை சந்தியாவால் புரிந்து கொள்ள முடிந்தது…
‘இந்தப் பணம்தான் மனிதர்களை எப்படியெல்லாம் மாற்றி விடுகிறது..’ சந்தியா எதுவும் பேசவில்லை..
மந்திரமூர்த்திகூட உற்சாகமான மனநிலையுடன் இருந்தார்.. அவரைவிட வயதில் இளையவனிடம் பணிந்து போக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு விட்டதே என்ற வருத்தம் அவருக்குக் கொஞ்சம் கூட இருப்பதாகத் தெரியவில்லை…
“பார்த்தியா சந்தியா.. உங்க ஆண்ட்டி நான் வாங்குற சேலரியை கேலி பேசறா.. இதுக்காகத்தான் நான் வேலை யை விட்டுவிட்டு பிஸினெஸ்ஸில் இறங்கலாம்ன்னு முடிவு பண்ணியிருக்கேன்..” என்று அவர் திட்டத்தை அறிவித்தார்..
“அப்படியா அங்கிள்..?”
“ஆமாம்மா.. ரகுநந்தன் கொடுத்த பணம் கோடியைத் தாண்டி கையில் இருக்கிறது.. அதைச் சும்மா வைத்திருக் கிறதைவிட.. பிஸினெஸ்ஸில் போட்டால் பணம் புரளும்.. அதான்.. அவர் கட்டற ஷாப்பிங் மாலில்.. எனக்கொரு கடை வேண்டும்ன்னு இப்பவே அட்வான்ஸா சொல்லிட்டேன்.. உங்களுக்கு இல்லாததா மந்திரமூர்த்தின்னார்.. பக்கா பிஸினெஸ் ஏரியா… இனிமே பாரேன்.. நான் பத்துப் பேருக்குச் சம்பளம் கொடுப்பேன்…”
அவர்கள் கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தார்கள்.. கல்பனாவின் முகத்தில் தெரிந்த சோகம் மெல்ல.. மெல்ல வடிய ஆரம்பித்ததை கவனித்தாள் சந்தியா..
இனி அவள் தேறி விடுவாள் என்பதில் அவளுக்கு நிம்மதி உண்டானது..
அவன் கெட்டிக்காரன் என்று நினைத்துக் கொண்டாள்.. இதுதான் வழி.. வேறு வழியில்லையென்று வந்து விட்டால் அவர்கள் மடங்கிவிடுவார்கள் என்பதை மிகத் தெளிவாக அவன் கணித்து வைத்திருக்கிறான்.. அந்த வழியில் சென்று நினைத்ததை அடைந்து விட்டான்..
மாலை மயங்கும் வேளையில் கல்பனவிடம் விடை பெற்று அவள் வீட்டை விட்டு வெளியே வந்தபோது சந்தியாவின் மனதில் வலி உண்டானது..
கல்லையும்.. செங்கலையும்.. சிமிண்டையும் கொண்டு கட்டின கட்டிடத்தையும்.. அதைச் சுற்றி வளர்ந்த தாவர வகைகளையும்.. உயிர்ப்புள்ள சொந்தமாக நேசித்த வர்களை.. ஒரே நொடியில் பணத்தை வைத்து மாற்றிக் காட்டி விட்ட அந்த ரகுநந்தனின் மீது அவளுக்குள் எல்லையற்ற வெறுப்பு உண்டானது..
அந்த வெறுப்புடனே அவள் வீட்டுக்குச் சென்றாள்.. அங்கே அவளுக்காக காத்திருந்த அபிஷேக்கைப் பார்த்த போது அவள் மனதின் வலி மறைவதைப் போல இருந்தது.. புன்னகையுடன் அவனைப் பார்த்தாள்..
அவளுக்குத் தெரியாது.. அவனை நோக்கிக் புன்னகைக்கும் அந்த புன்னைக்கு சொற்ப ஆயுள்தான் என்பது…
Reviews – Puthithaga Oru Bubalam / புதிதாக ஒரு பூபாளம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.