Chapter 15
‘என்ன ஒரு ஆணவம்..!’
சந்தியா மனம் கொதித்தாள்.. அந்தக் கொதிப்புடன் ஸ்கூட்டியை ஓங்கி அவன் உதைத்த வேகத்தில் அது அலறியடித்துக் கொண்டு கிளம்பி விட்டது..
“சாவி என் கையில் இருக்கு..” அவள் முறைப்புடன் ஸ்கூட்டியை கிளப்பப் போனாள்…
“இப்பவும் நீ கிளம்ப முடியாது..” அவன் அமர்த்தலாகச் சொன்னான்…
“ஏன்..? சாவி என் கையில இருக்கு.. வண்டியும் ஸ்டார்ட் ஆகிருச்சு.. நான் ஏன் கிளம்ப முடியாது..?”
“அதுக்கு நான் வழி விட்டாகனுமே..”
“நீங்க வழி விடறதா..?”
சந்தியா நிமிர்ந்து பார்த்தாள்.. அவளுடைய ஸ்கூட்டியை மறித்ததைப் போல பெரிய வெளிநாட்டுக் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது.. அது நகர்ந்தால்தான் அவளும் நகர முடியும்.. அவள் அவனை முறைக்க.. அவனோ.. ‘எப்படி..?’ என்ற பாவனையில் புருவங்களை உயர்த்தி இறக்கினான்..
“இது உங்க காரா..?”
“இதை நான் சொல்லித்தான் நீ தெரிஞ்சுக்கனுமா..?”
“இதைப் பெருமையாய் வேற சொல்லிக்கறிங்களா..? நீங்க என்னவோ பெரிய பிஸினெஸ் மேன்.. நிற்க நேரமில்லாம அலைகிறவர்ன்னு சொன்னாங்க…”
“யார் சொன்னது..?”
“வேற யார் சொல்லுவாங்க..? எல்லாம் என்னைப் பெத்த அப்பாதான் சொன்னார்…”
“அவர் சொன்னா கரெக்டாத்தானே இருக்கும்..?”
“இல்லைன்னு நான் சொல்ல மாட்டேங்கிற திமிர் தானே..? அதை விட்டுத் தொலைங்க..”
“தொலைச்சிட்டாப் போகுது..”
“அவ்வளவு பிஸி மேனுக்கு காலேஜ் போகிற பெண்ணின் வழியை மறிக்க நேரமிருக்கா..?”
“ஓ.. நீ அப்படி வருகிறயா..? இந்த பிஸி மேனுக்கு.. இந்த காலேஜ் போகிற பெண்ணின் வழியை மறிக்க நேரமிருக்கும்..”
“உங்களுக்கு என்னதான் வேணும்..?”
எரிச்சலுடன் கேட்டாள் சந்தியா.. அந்தக் கேள்வியில் அவளையே இமைக்காமல் பார்த்தான் ரகுநந்தன்.. அந்தப் பார்வையில் அரண்டு போனவள்.. சுற்று முற்றும் கலவரத்துடன் பார்த்துக் கொண்டாள்..
‘இவன் பாட்டுக்கு இப்படிப் பார்த்து வைக்கிறானே.. யாராவது பார்த்து வைத்தா என்னைத் தப்பா நினைக்க மாட்டாங்களா..?’
அவன் அதைப்பற்றியெல்லாம் கவலைப் படுவதைப் போல தெரியவில்லை.. கருநீல பேண்டும்.. சாக்லெட் வண்ணச் சட்டையும்.. கூலிங் கிளாஸீமாக.. சினிமா கதாநாயகனைப் போல அட்டகாசமாக இருந்தவன் அவளையே அள்ளிப் பருகுவதைப் போலப் பார்த்துக் கொண்டிருந்தான்.. அப்படியொரு பார்வையை அபிஷேக்கிடம் கூட அவள் பார்த்ததில்லை…
‘காதல் மன்னன் கெட்டான்..’ பல்லைக் கடித்தாள்..
“கேள்வி கேட்டா பதிலைச் சொல்லனும்.. இப்படி பிடிச்சு வைச்ச பிள்ளையாரைப் போலப் பார்த்துக் கிட்டிருக்கக் கூடாது..” எரிச்சல் பட்டாள்..
“பிள்ளையாரா..?” அவன் முகம் மாறியது…
“இங்கே பாரு.. நீ எதை வேணும்னாலும் சொல்லு.. ஆனா பிள்ளையார்ன்னு மட்டும் சொல்லாதே.. அவரே கல்யாணமாகாம இன்னும் பெண் தேடிக்கிட்டு இருக்கார்..”
“அதனாலதான் உங்க கூட இணை கூட்டறேன்.. அவருக்குக்கூட பெண் கிடைத்துரும்.. ஆனா உங்களுக்கு இந்த ஜென்மத்திலே நீங்க ஆசைப்படுகிறதைப் போலப் பெண் கிடைக்கவே மாட்டா..”
வயிறெரிந்து சொன்னாள் சந்தியா.. அபிஷேக்கின் மீது அவளுக்கு ஒன்றும் அபரிதமான காதல் இல்லைதான்.. ஆனாலும் ரகுநந்தன் ஆட்டி வைக்க ஆகும் பொம்மையாக அவன் உருமாறிவிட்டதில் ஏற்பட்ட அதிர்ச்சி அவள் மனதில் அப்படியே இருந்தது…
அவளுடைய சாபத்தைக் கேட்டு அவன் அலட்டிக் கொண்டதாகவே தெரியவில்லை.. மாறாக தோள்களைக் குலுக்கிச் சிரித்தான்…
“எனக்குத்தான் நீ கிடைச்சிட்டயே…”
“என்னது..?!”
“ஏன்..? நான் சொன்னது உன் காதில் விழலையா..?”
“கனவு காணாதீங்க..”
“கனவா..? ஊஹீம்.. இது நடந்து கொண்டிருக்கும் நனவு..”
“நினைப்புத்தான் பொழைப்பை கெடுக்குமாம்..”
“யார் பிழைப்பை..?”
“யார் பிழைப்பையோ…”
“அது பாட்டுக்கு அது இருக்கட்டும்.. நீ நம் கதைக்கு வா..”
“நம்ம கதையா..? ஹலோ.. உங்க கதை வேற கதை.. என் கதை வேற கதை.. இது ரெண்டும் சேர்ந்து நம்ம கதையா ஒருநாளும் ஆகவே ஆகாது..”
“அதை அப்புறம் பார்க்கலாம்.. நான் கேட்க வந்ததே வேறு..”
“என்னத்தைக் கேட்க வந்தீங்க..?”
“யாரோ அவங்களுக்கும்.. அபிஷேக்.. அபிஷேக்ங்கிற ஒரு ஆளுக்கும் கல்யாணம் ஆகப் போகுது.. அந்தக் கல்யாணத்துக்கான இன்விடேசனை தர்றேன்.. மறக்காம வந்து அட்சதை போட்டு வாழ்த்திட்டுப் போங்கன்னு என்னிடம் சொன்னாங்களே.. அந்த இன்விடேசனை வாங்கிட்டுப் போகலாமேன்னு நானே வந்தேன்.. எங்கே அந்த இன்விடேசன்..?”
அவன் கை நீட்டினான்.. சந்தியா இமைமூடி தன்னைக் கட்டுப் படுத்திக் கொள்ள முயன்றாள்.. அன்று அவள் பேசிய தன்னம்பிக்கையான பேச்சு.. இன்று எங்கே தொலைந்து போனது என்று அவள் மனம் தேடிக் கனைத்தது…
‘சொல்லிக் காட்ட வந்திருக்கிறானா..?’
அவள் மனதில் புறக்கணிப்பின் ரண வலி உண்டானது.. தேடுதல் நிறைந்ததுதான் வாழ்க்கை.. ஆனால் இதைப் போன்ற தேடல்களை வாழ்க்கை கொடுப்பது கொடுமை என்று அவள் மனம் கசந்தாள்.. வலியவர்கள் வாழ்வதும்.. எளியவர்கள் ஓடி ஒளிவதுமாக இருந்தால்.. கடவுள் என்ற ஒருவர் எதற்காக இருக்கிறார்.?
“உனக்கு அந்த சிரமம் வைக்க வேண்டாம்ன்னு நானே உன்னைத் தேடி வந்தேன்.. இன்விடேசனைக் கொடு சந்தியா…” அவன் குரலில் வெற்றியின் எகத்தாளம் இருந்தது.. அது சந்தியாவின் மனதைச் சுட்டது..
பொறுக்க முடியாமல் தலையை நிமிர்த்திய சந்தியா.. அவனையே இமைக்காமல் முறைத்தாள்.. அந்தப் பார்வையை சளைக்காமல் அவன் எதிர் கொண்டான்..
“என்ன..? உன்னிடம் இன்விடேசன் இல்லையா..? ஆனா என்னிடம் இருக்கே..”
ரகுநந்தன்.. குனிந்து காரின் பின்சீட்டிலிருந்த அபிஷேக்கின் திருமண அழைப்பிதழை எடுத்து சந்தியாவின் முன்னால் விசிறிக் காட்டினான்..
“இதுதான் அந்த இன்விடேசன்.. மாப்பிள்ளை நீ சொன்ன அபிஷேக்தான்.. கல்யாணப் பெண்தான் வேற யாரோவாம்.. எப்படி..? எதுக்கும் ஒரு விலையிருக்கு சந்தியா.. ஓவர் நைட்டில.. ஒரே செகண்டில விலை போகிறவனை நம்பியா நீ என்னிடம் சேலன்ஜ் பண்ணின..?”
சந்தியாவின் இதயத்தை சல்லடையாக்கின அவனது கேள்விகள்.. இவன் போய் தொலைய மாட்டானா என்றிருந்தது அவளுக்கு.. இப்படிக் குருரமாக அவள் மனதைக் குதறி எடுக்கத்தான் அவன் அவளைத் தேடிவந்தானா..?
“இந்த இன்விடேசனில் இவன் பெயர் பக்கத்தில் இந்தப் பெண்ணின் பெயர்தான் இருக்கனும்ங்கிறதை முடிவு செய்தவன் நான்.. இதைப் போலதான்.. நம் கல்யாண இன்விடேசனையும் நானே முடிவு பண்ணியிருக்கிறேன்.. அதில் என் பெயர் பக்கத்தில் உன் பெயர் இருக்கும்..”
அவன் குரலில் தெரிந்த நிச்சயத்தில் அவள் மனம் வீறு கொண்டது.. அவனது தன்னம்பிக்கை நிறைந்த அந்த வார்த்தைகள் அவளை உசுப்பி விட்டன.. அவளின் நம்பிக்கையை சிதைத்து விட்டு.. அவன் மட்டும் நம்பிக்கை கொள்வதா..?
“நெவர்..” என்றாள் அவள்..
அவன் உதட்டைச் சுழித்ததில் அவளது வேகம் அதிகமனாது..
“உங்க மனதில் என்னதான் நினைத்துக்கிட்டு இருக்கீங்க..?”
“உன்னைத்தான் நினைச்சுக்கிட்டு இருக்கேன்..”
“வெல்.. இதுவரைக்கும் நீங்க சொன்னதை நான் சீரியஸாவே எடுத்துக்கலை.. திடிர்ன்னு வந்து நின்னீங்க.. என் மேல் காதல்ங்கறிங்க.. என்ன சார்.. நீங்க பெரிய கோடிஸ்வரனா இருந்தா என்ன வேண்டும்னாலும் பேசலாமா..?”
“ரிலாக்ஸ்.. நான் தப்பா எதுவும் பேசலையே..”
“எனக்கு இது தப்புத்தான் சார்.. அன்னைக்கு கல்பனாவின் குடும்பம்.. இன்னைக்கு அபிஷேக்.. நீங்க நினைத்ததை அடைய எந்த குறுக்கு வழியில் வேண்டும்னாலும் இறங்குவீங்கங்கிறதுக்கு இதைவிட வேற எக்ஸாம்பிள்ஸ் தேவையில்லை.. உங்களை மாதிரி ஆளிடம் எப்படி எனக்கு காதல் வரும்ன்னு நீங்க நினைக்கறிங்க..? எதனால இந்த கான்பிடெனஸ்..? நீங்க பணக்காரன்ங்கறதினாலேயா..? பணமிருந்தா ஒரு பெண்ணின் மனதையும்.. காதலையும் வாங்கி விட முடியுமா..?”
“முடியாதுதான்..” அவளையே பார்த்தபடி சொன்னான் அவன்..
“அப்புறம் எந்த நம்பிக்கையில என்னிடம் காதல் சொல்றீங்க..?”
“எப்படியும் நீ என்னிடம் காதல் சொல்வாய் என்ற நம்பிக்கையினால் தான்..” அவன் நிதானமாகச் சொன்னான்.
“வாட்..?!” அவள் தலைசாய்த்து அவனைப் பார்த்தாள்.. அவள் விழிகளில் கேலி இருந்தது.. கோபம் இருந்தது.. வன்மம் இருந்தது..
“இத்தனைக்குப் பின்னாலும் நான் உங்களிடம் வந்து காதல் சொல்வேன்னா நினைக்கறிங்க..?”
“யெஸ்..”
“எதை வைச்சு அப்படிச் சொல்கிறிங்க..? உங்களிடம் கோடி கோடியாய் பணமிருக்கு.. பவர் இருக்குங்கிற தெனாவெட்டா..?”
“ஊஹீம்.. உன் மனதில் கொள்ளை.. கொள்ளையாய் பாசம் இருக்குங்கிற உண்மையிலதான் இதை நான் சொல்றேன்…” அவன் அழுத்தம் திருத்தமாகச் சொன்னான்.
“புரியலை..”
“யாரோ ஒரு பெண்.. உன் கூடப் படித்தவள்.. அவளுக்காக நியாயம் கேட்டு நீ என் ஆபிஸிக்கே வந்து நின்றாய்…”
“இந்த டயலாக்கையே இன்னும் எத்தனை தடவை தான் சொல்வீங்க..?”
“வாழ்நாள் முழுவதும் சொல்வேன்.. அப்படி யாரோ ஒருத்திக்காக.. உனக்கு ஏதாவது பிரச்னை வந்து விடுமோ என்ற எண்ணமில்லாமல் துணிந்து வந்து நின்னயே.. இதுவே உன் குடும்பத்துக்கொரு பிரச்னைன்னா விட்டா கொடுத்திருவ…”
“என்னது…?!”
சந்தியா புரியாமல் அவனைப் பார்த்தாள்.. மெல்ல.. மெல்ல.. அவன் சொன்னதன் முழு அர்த்தமும் புரிந்த போது.. அவள் முகத்தில் திகில் பரவியது…
‘இவன் என்ன சொல்கிறான்..?’
அவள் பேச வாய் திறக்கையில் அவன் நகர்ந்தான்..
“ஹலோ.. ஒரு நிமிசம்..” அவள் பதறினாள்..
“நான் கிளம்பனுமே..”
“நீங்க சொன்னதுக்கு என்ன அர்த்தம்..?”
“நீ என்னன்ன புரிஞ்சுக்கிட்டயோ.. அதுதான் அர்த்தம்…”
அவன் நடக்க ஆரம்பிக்க.. சந்தியா.. கிளப்பிக் கொண்டிருந்த ஸ்கூட்டியை அம்போவென்று தரையில் சாய விட்டுவிட்டு அவன் முன்னால் ஓடிப்போய் நின்று வழி மறித்தாள்..
“வெயிட்.. வெயிட்..”
“எனக்கு வேலையிருக்கும்மா..”
அவ்வளவு நேரமும் வராத வேலை அப்போது மட்டும் அவனுக்கு வந்து விட்டதா..? அவள் முகத்தில் உக்கிரம் பரவியது..
“அந்த வேலையைத் தூக்கி உடப்பில போட்டுட்டு.. நான் கேட்கிறதுக்கு பதில் சொல்லுங்க..”
“சொல்லலைன்னா..?”
அவனின் அமர்த்தலான கேள்வியில் சந்தியா சுற்று முற்றும் பார்த்தாள்.. காரில் ஆடிக் கொண்டிருந்த சாவி அவள் கண்ணில் பட்டது.. சட்டென்று அதை கைப்பற்றிக் கொண்டாள்.. அவன் விழிகளில் மெச்சுதல் கலந்த மின்னல் வந்தது..
“ஸோ.. என் சாவி இப்ப உன் கையில் இருக்கு…”
“ஒரு சின்னதிருத்தம்.. உங்க கார் சாவிதான் என் கையில் இருக்கு..”
“ஊஹீம்..? இதை வைத்துக்கிட்டு என்ன செய்கிறதாய் உத்தேசம்..?”
“என் கேள்விக்கு பதில் சொல்லலைன்னா கார் சாவியைக் கொடுக்கக் கூடாதுங்கிற உத்தேசம்..”
“ஈஸிட்..?”
ரகுநந்தன் அலட்டிக் கொள்ளாமல் செல் போனை எடுத்தான்…
“விக்டர்.. எனக்கு ஒரு காரை அனுப்பி வை.. யெஸ்.. இம்மிடியட்டா அது வந்து சேரனும்.. அட்ரஸை குறிச்சுக்க..” கட்டளையிட்டு விட்டு போனை அணைத்து பாக்கெட்டில் போட்டபடி அவளைப் பார்த்து புருவங்களை உயர்த்தினான்.
“ஓகே பேபி.. நீ இந்தக் காரை வைத்துக்க.. இன்னைக்குத்தான் இந்தக் காரை டெலிவரி எடுத்தேன்.. உனக்கு இதை பிரஸெண்ட் பண்ணனும்னுதான் ஆசைப் பட்டேன்.. நீ வாங்கிக்குவியோ.. மாட்டியோங்கிற சந்தேகம்.. பட்.. நீ வாங்கிக்கிட்ட.. ஐ ஆம் ஸோ ஹேப்பி..”
அவன் பேசப் பேச.. நெருப்பு சுட்டு விட்டதைப் போலக் கார் சாவியை காருக்குள்ளேயே போட்டு விட்டாள் சந்தியா…
“வாட் ஹேப்பன்..? இந்தக் காரின் கலர் உனக்குப் பிடிக்கலையா..?” கரிசனமாக அவன் விசாரித்தான்…
“என் குடும்பத்தைப் பற்றி ஏன் பேசினிங்க..?” அவள் படபடத்தாள்..
அவன் பதில் சொல்லாமல் காரில் ஏறி அதைக் கிளப்பினான்.. அவளை நிமிர்ந்து பார்த்தான்.. அவள் கண்களின் பதட்டத்தில் எதைக் கண்டானோ.. காரின் என்ஜினை அணைத்தான்…
“ரிலாக்ஸ் சந்தியா.. நான் விரும்புகிறதை நீ சொல்லிட்டா எதுவும் நடக்காது.. பயப்படாதே..” என்றான்.
“என்னத்தைச் சொல்லச் சொல்ற..?” அவள் மரியாதையை கை விட்டாள்..
அவள் ஏகவசனத்தில் பேசியதில் அவன் கண்கள் இடுங்கின..
“குட் மேனர்ஸ்..” என்றான்..
“அதை நீ சொல்லாதே..” அவள் சீறினாள்..
“நான் எதை விரும்புவேன்.. என் முகம் பார்த்து நீ ‘ஐ லவ்யு’ன்னு சொல்லனும்.. நான் கட்டுகிற தாலியை மனசார கழுத்தில் வாங்கிக்கனும்.. என்னை விரும்பி என்கூட குடும்பம் நடத்தனும்.. என் குழந்தைகளுக்கு நீ அம்மாவாகனும்…”
அவளையே பார்த்தபடி சொன்ன அவன் பார்வையில் தாபம் இருந்தது.. அதை நிறைவேற்றிக் கொள்ளும் தீவிரம் இருந்தது.. அவள் திகைத்து நிற்கும் போதே அவன் கார் கிளம்பிப் பறந்தது…
‘என்னவெல்லாம் சொல்லி விட்டான்..!’
அவள் அசையாமல் அப்படியே நின்றாள்.. அவள் ஸ்கூட்டி தரையில் சாய்ந்து கிடந்தது…
Reviews – Puthithaga Oru Bubalam / புதிதாக ஒரு பூபாளம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.