Chapter 16

0Shares

அவன் என்ன செய்வான்..?

அன்று முழுவதும் அந்தக் கேள்வியே சந்தியாவின் மனதில் சுற்றிச்சுற்றி வந்தது.. அவளுக்குத் தூக்கம் பிடிக்கவில்லை.. அதிகாலையிலேயே கண்விழித்து விட்டவள்.. அறைக்கதவைத் திறந்து வெளியே போனாள். மாடி ஹால் வெறிச்சோடிக் கிடந்தது.. சுதர்சனுக்கு சீக்கிரமாக விழிக்கும் வழக்கமில்லை.. மெதுவாக நடந்து பால்கனிக்குச் சென்றவள்.. ஊஞ்சலில் அமர்ந்து கருமை கலந்த விடியலைக் கவனித்துக் கொண்டிருந்தாள்..

“சந்தியா…”

சுதர்சனத்தின் குரலில் கவனம் கலைந்தாள்.. அவளருகில் வந்து அமர்ந்த சுதர்சனம் காலால் ஊஞ்சலை விந்தித் தள்ளினான்.. வேகம் கூடிய ஊஞ்சலின் ஆட்டத்திலிருந்து விழுந்து விடாமலிருக்கும் பொருட்டு அதன் கம்பியை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்..

“என்னண்ணா.. இன்னைக்கு இப்படி சர்ப்ரைஸ் கொடுக்கிற..? சூரியன் உச்சிப் பொழுதுக்கு வந்தாத்தானே நீ யோர்வையை விட்டு வெளியே வருவ..?” வரவழைத்துக் கொண்ட உற்சாகத்துடன் கேட்டாள் சந்தியா…

“உச்சிப் பொழுதில காலேஜீக்குப் போனா கிளாஸ் ரூமுகுள்ளேயே விட மாட்டாங்க.. நான் சன்ரைஸை பார்க்கிறதில்லைங்கிறதுக்காக நீ இப்படியெல்லாம் பேசக்கூடாது…”

“ஸோ.. நீ சன்ரைஸை பார்க்க வந்திருக்கிறதுதான் சர்ப்ரைஸ்ங்கிற..?”

“ஏதோ ஒன்னு.. ஆமா.. நீயென்ன இந்நேரத்துக்கே எழுந்து வந்துட்ட..? உனக்குத்தான் எக்ஸாம் முடிஞ்சுருச்சே..”

“அதுக்காக நாள் முழுவதும் தூங்கனும்னு சட்டம் எதுவும் இருக்கா..? எனக்கு விழிப்பு வந்திருச்சு.. எழுந்து வந்துட்டேன்.. ஆமா.. நீயென்ன சீக்கிரமா எழுந்துட்ட..?”

“உன்னோடு பேசலாம்ன்னுதான்…”

“என்கூடப் பேசப் போறயா..? பார்றா.. நீ இதையெல்லாம் கூடச் செய்வியா..?”

“அப்பப்போ செய்வேன்.. சந்தியா..”

“ம்ம்ம்…”

“நான் ஒன்னு கேட்டா நீ தப்பா நினைச்சுக்க மாட்டியே…”

“தப்பாத்தான் எடுத்துக்குவேன்…”

தீவிரமான முகபாவனையுடன் சொல்லிய சந்தியா வாயைப் பொத்திக் கொண்டு சிரித்தாள்..

“பின்னே.. என்ன..? என்ஜினியர் படிக்கிறவனுக்கு இன்னும் ஒன்னு… ரெண்டு… தெரியலைன்னா தப்பா நினைச்சுக்க மாட்டேனா..?”

கலகலத்துச் சிரித்த சந்தியாவுடன் சேர்ந்து சுதர்சனமும் சிரிக்கவில்லை.. அவன் யோசனையுடன் ஊஞ்சலை ஆட்டியபடி பேசினான்..

“நீ.. அந்தப் பயலை காதலிச்சியா..?”

“எந்தப் பயலை..?”

“அதான்.. அந்த அல்டாப்பு ஆறுமுகத்தை..”

“அல்டாப்பு ஆறுமுகமா..?” சந்தியா மீண்டும் சிரித்தாள்.. 

“சிரிக்காதே சந்தியா.. உண்மையைச் சொல்லு..”

“இல்லண்ணா.. காதல்ங்கிறதெல்லாம் பெரிய வார்த்தை.. எனக்கும் அவனுக்குமிடையில நிச்சயமாய் காதல் இல்லை…”

“அப்பாடி..” நிம்மதியாய் பெருமூச்சு விட்ட சுதர்சனம்.

“அப்புறம் ஏன் இப்படி இருக்க..?” என்று கேட்டான்..

“எப்படி இருக்கேனாம்..?” சந்தியா சிரிக்க முயன்றாள்

“உனக்குத்தான் நடிக்க வரலையே.. வேணாம்.. விட்டுவிடு.. நீ.. நீயாய் இல்லை சந்தியா.. சோர்ந்து தெரியற…”

“பரிட்சைக்கு படிச்ச களைப்புண்ணா…”

“அவ்வளவுதானே..” சுதர்சனம் சந்தேகமாய் கேட்டான்..

“அவ்வளவேதான்..” தமையனுக்காக சிரித்த முகத்துடன் பதில் சொன்னாள் சந்தியா…

“நான் என்னவோன்னு பயந்துட்டேன்..”

“தோடா.. என்னவோ பாசமலர் அண்ணனைப் போல.. பாசப் பயிரை வளர்க்கிற.. என்ன சங்கதி..? என்னாலே உனக்கு வேலை எதுவும் ஆகனுமா..?”

“ஆஹா.. நீ பெரிய மகாராணி.. உன்னாலே எனக்குக் காரியம் ஆகனும்.. போவியா.. இருந்திருந்து டிகிரி படிச்சு முடிச்சிருக்கிற நீ வந்து இன்ஜினியரான எனக்கு ஹெல்ப் பண்ணப் போறியா..? நினப்புத்தான் உனக்கு…”

“அடேய் அண்ணா.. இன்ஜினியர் ஃபைனல் இயருக்கு பரிட்சைதான் எழுதியிருக்க.. இன்னும் ரிசல்ட் வரலை…”

“அங்கே மட்டும் என்ன வாழுதாம்..? என் கேஸ்தான நீ..?”

சந்தியாவின் பின்னந்தலையில் ஒரு தட்டு தட்டிவிட்டு சுதர்சனம் எழுந்து போய் விட்டான்.. அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்த சந்தியாவின் மனதில் பயம் எழுந்தது…

‘அந்த ரகுநந்தன் அண்ணனுக்கு எதுவும் கெடுதல் பண்ணிருவானோ..?’

நினைக்கும் போதே சந்தியாவின் நெஞ்சம் நடுங்கியது.. தனிமையில் உட்கார்ந்திருந்தால் தேவையில்லாத பயங்கள்தான் சூழும் என்பதால் காபியை குடித்து விட்டு வரலாம் என்ற எண்ணத்துடன் படியிறங்கினாள்…

“தலைவாழை இலை போட்டு

விருந்து வைப்பேன்…

என் தலைவா உன் வருகைக்கு

தவமிருப்பேன்…”

டிவியில் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்த பாடலுடன் இனைந்து பாடியபடி காபி கலந்து கொண்டிருந்த ஜானகியின் சுறுசுறுப்பில் சந்தியாவின் மனம் லயித்தது…

‘இந்த அம்மாதான் எத்தனை அழகு…!’

வியந்த போதே.. இவளுக்கு அந்த ரகுநந்தனால் என்ன சிக்கல் வரப் போகிறதோ என்ற நடுக்கம் அவளுக்குள் வந்தது..

“என்னடி ஆச்சு..?”

ஜானகியின் உலுக்கலில் மலங்க மலங்க விழித்து அவளைப் பார்த்த சந்தியாவிற்கு ஒன்றும் புரியவில்லை..

“என்னம்மா..?”

“என்ன நொன்னம்மா..? இதோட ஆறுதடவை உன்னைக் கூப்பிட்டுட்டேன்.. ஏம்மான்னு கேட்காம.. அப்புடியே பிடிச்சு வைச்ச பிள்ளையாராட்டம் உக்காந்திருக்க…”

‘பிடிச்சு வைச்ச பிள்ளையார்..’

சந்தியாவின் மனக் கண்ணில் மர்மச் சிரிப்புடன் ரகுநந்தன் வந்தான்.. அவள் உடல் நடுங்கியது…

‘என்ன செய்யப் போகிறான்..’

அவன் எதுவும் செய்வான் என்ற நினைவில் சந்தியாவுக்கு கையும் ஓடவில்லை.. காலும் ஓடவில்லை..

“சந்தியா..?”

ஜானகியின் குரலில் தொனித்த பயத்தை உணர்ந்ததும்.. சந்தியா கண்களைக் கசக்கியபடி காபியை வாங்கிக் கொண்டவள்…

“தூக்கம்.. தூக்கமா வருதும்மா..” வராத கொட்டாவியை வரவைக்க முயன்றபடி சொன்னாள்…

“தூக்கம் வந்தா தூங்க வேண்டியதுதானே..? எதுக்காக முட்டைக் கண்ணை முழிச்சுக்கிட்டு இப்படி கருக்கல்லி-லேயே எழுந்திருச்சு கீழே வர்ற…?” ஜானகி அதட்டினாள்..

“உங்க காபியோட வாசனை காத்தில கலந்து மிதந்து மாடி ரூம் வரைக்கும் வந்துருச்சா.. உடனே காபி குடிக்கனும் போல ஆகிருச்சு.. அதான்.. ஓடோடி வந்தேன்…”

சந்தியா கதையளந்து விட்டு குளிக்கப் போனாள்.. காலை டிபனுக்கு கீழே வந்தபோது.. ஹாலில் சூர்யாவும்.. சாய்நாதனும் அமர்ந்திருந்தார்கள்.. பூஜா சுதர்சனத்துடன் விளையாடிக் கொண்டிருந்தாள்…

“ஹாய் அக்கா…”

தமக்கையைக் கண்டதும் சந்தியாவின் சோர்வு பறந்தே போய் விட்டது.. அவள் உற்சாகத்துடன் சூர்யாவிடம் ஓடினாள்…

“உன் அக்காவுக்குத்தான் ஹாய் சொல்லுவியா..? எனக்குச் சொல்ல மாட்டியா..?” என்று கேட்ட சாய் நாதனை லேசாக முறைத்து வைத்தாள் சூர்யா…

‘மச்சினியைக் கண்டதும் ஜொள்ளு விட ஆரம்பிச்சிருவிங்களே…’

அவளது முறைப்பு சொல்லிய செய்தியில் அடங்கிப் போகத்தான் நினைத்தான் சாய்நாதன்…

“ஆயிரம்தான் இருந்தாலும் இது எங்க அக்கா..” சலுகையுடன் சூர்யாவின் தோளில் சாய்ந்து கொண்டு சந்தியா சொன்னதும்..

“அதனால அவளுக்கு மட்டும் ஹாயா..? என்னை என்னன்னு சொல்லுவ.. போய்யான்னு சொல்லிருவியோ..” என்று அடங்கிப் போக முடியாமல் பேச்சு வார்த்தையை வளர்த்தான்…

“ம்ஹீம்.. ஆயிரம்தான் இருந்தாலும் நீங்க எங்க மாமா… அதனால அப்படிச் சொல்லிர முடியாதே..” சந்தியா போலியாக பெருமூச்சை விட..

“ஸோ.. அதனாலதான் அடக்கி வாசிக்கிற..” என்றான் சாய்நாதன்…

“தெரிஞ்சுக்கிட்டாச்சரி.. மாமா..”

“ஏம்மா..?”

“வீட்டில அத்தையும்.. மாமாவும் எப்படியிருக்காங்க..?”

“ஃபைன்..”

“உங்களையும் வாங்கன்னு சொல்லியாச்சு.. உங்க அப்பாம்மாவையும் நலம் விசாரிச்சாச்சு.. இனியாவது நான் எங்க அக்காகிட்ட பேசலாமில்லையா..?”

பவ்யமாக சந்தியா கேட்டதும்.. அதுவரை அடக்கி வைத்திருந்த கடுப்பையெல்லாம் சேர்த்து வைத்து சிரித்து வைத்தாள் சூர்யா.. தமக்கையின் பக்கமாக திரும்பி சந்தியா பேச ஆரம்பித்து விட.. மூக்குடை பட்டதை வெளியே காட்டிக் கொள்ளாமல் வீட்டு மாப்பிள்ளையென்ற தோரணையைக் காட்டிக் கொள்ள முயன்றவனாக கால் மேல் கால் போட்டு உட்கார முயன்றான் சாய்நாதன்.. அது அவனுக்கு பொருந்தி வரவில்லை.. அடிக் கண்ணால் அக்கா கணவனின் முயற்சியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சுதர்சனத்திற்கு சிரிப்புத்தான் வந்தது.. அடக்கிக் கொண்டான்..

அவன் மைத்துனன்.. அக்கா கணவனை கிண்டல் செய்து சிரித்து மகிழ்வதெல்லாம் மைத்துனிகளின் உரிமை.. மைத்துனர்களுக்கு அந்த உரிமை கிடையாது.. அதை எந்த அக்கா கணவர்களும் விரும்புவது கிடையாது..

‘அதான் வரலைன்னு தெரியுதே.. விட்டு விடலாமே..’

இந்த வார்த்தைகளை மனதுக்குள் நினைக்காமல் வெளிப்படையாகச் சொல்லி வார சந்தியாவினால் முடியும்.. சுதர்சனத்திற்கு மனதுக்குள் நினைத்துக் கொள்ள மட்டும் தான் முடியும்.. அதனால் அவன் மனதுக்குள் அதை நினைத்துக் கொண்டான்…

“வாம்மா சூர்யா.. வாங்க மாப்பிள்ளை..” மலர்ச்சியான முகத்துடன் மூத்த மகளையும்.. மாப்பிள்ளையையும் வரவேற்றபடி கல்யாணராமன் வந்தார்…

“பேங்குக்கு கிளம்பிக்கிட்டு இருந்தேன்.. நீங்க வந்து ரொம்ப நேரமாச்சா..? ஜானகி.. ஜானகி.. பொண்ணும் மாப்பிள்ளையும் வந்திருக்காங்கங்கிறதை ஏன் நீ என்கிட்டச் சொல்லலை..?” கல்யாணராமன் சமையலறைப் பக்கம் திரும்பி சப்தம் போட்டார்…

“அம்மா கூப்பிடறேன்னுதான் சொன்னாங்கப்பா.. நான்தான் வேண்டாம்ன்னு சொல்லிட்டேன்..” என்றாள் சூர்யா…

“ஏம்மா..?”

“எங்களுக்கொன்னும் அவசரமில்லைப்பா.. இன்னைக்கு எனக்கும் பூஜாவுக்கும் லீவ்தான்.. உங்க மருமகன் பெர்மிசன் போட்டிருக்கார்.. ஸோ.. நீங்க வந்த பின்னாலே பார்த்துக்கலாம்ன்னு நினைச்சோம்…”

“அப்பச் சரி.. ஜானகி காபி கொடுத்தியா..?”

“நாங்க வந்தவுடனே அம்மா கொடுத்திட்டாங்கப்பா..”

“அப்பச்சரி.. ஜானகி.. பூஜாவுக்கு பால் கொண்டுவா..”

“எங்களுக்கு முன்னாலே பேத்திக்குத்தான் அம்மா பாலாற்றிக் கொண்டு வந்தாங்க…”

“அப்பச்சாரி.. ஜானகி.. பொண்ணும் மாப்பிள்ளையும் வந்திருக்காங்க.. ஸ்பெசலா சமையல் பண்ணு..”

“அதை அப்பவே ஆரம்பிச்சுட்டாங்கப்பா..”

“அப்பச்சரி..” அமைதியானார் கல்யாணராமன்..

தகப்பனாரின் கனிவான உபசரணையிலும். கவனிப்பிலும் பெருமை கொண்டாள் சூர்யா.. அவள் மனதுக்கு அது வெகு இதமாக இருந்தது.. திருமணமாகி புகுந்த வீட்டிற்குப் போய் விட்ட பெண்ணுக்கு என்ன வேண்டும்..? பிறந்தவீடு என்றுமே அவளை மறக்காது.. அவள் உரிமையை மறுக்காது என்ற நிச்சயம் வேண்டும்..

அந்த நிச்சயத்தை எப்போது அவள் பிறந்த வீட்டிற்கு வந்தாலும் அள்ளி.. அள்ளித் தந்து கொண்டிருந்தது அவளுடைய பிறந்தவீடு…

“உனக்கும்.. பூஜாவுக்கும் லீவுன்னா.. நீங்க ரெண்டு பேரும் இங்கேதானம்மா இருப்பீங்க..?”

“ஆமாம்ப்பா.. இவர் ஈவினிங் ஆபிஸ் விட்டுப் போகிறப்ப எங்க ரெண்டு பேரையும் கூப்பிட்டுக்கிட்டுப் போவார்..”

“ஏம்மா.. மாப்பிள்ளையும் நீங்களும் ஒரு வாரத்துக்கு இங்கே தங்கியிருக்கலாமில்ல..?”

“இல்லப்பா.. அத்தைக்கு லேசா ஜுரம் வந்திருக்கு.. நாங்க கட்டாயம் போயாகனும்…”

“அடடா.. எப்பம்மா ஜுரம் வந்தது..?”

“இப்பத்தான்ப்பா.. நாங்க கிளம்பிக்கிட்டு இருக்கிறப்பதான் அத்தை சொன்னாங்க…”

சூர்யா இயல்பாக சொல்லிக் கொண்டிருந்தாள்.. சந்தியாவின் விழிகளும்.. சுதர்சனத்தின் விழிகளும் சந்தித்துக் கொண்டன… அவர்களின் கண்களில் லேசான சிரிப்பு இருந்தது…

அது எப்படித்தான்.. வீட்டுக்கு வந்த மருமகள் அவளுடைய பிறந்த வீட்டுக்கு கிளம்ப நினைக்கும் போது மிகச் சரியாக மாமியாருக்கு காய்ச்சலும்.. தலைவலியும் வந்து விடுகிறதோ என்பதே அவர்களின் கண்கள் பேசிக் கொண்ட செய்தியாகும்..

கல்யாணராமனுக்கும் அது தெரிந்துதான் இருந்தது.. ஏன்.. அவருக்கு முன்பே அந்தக் கேள்வியைக் கேட்டு.. அந்தப் பதிலையும் பெற்றுவிட்ட ஜானகிக்கும் அது தெரிந்துதான் இருந்தது.. இருந்தும் அவர்களால் எதையும் பேசிவிட முடியாது..

“அப்படியா..? அத்தை உடம்பைப் பார்த்துக்கச் சொல்லும்மா..” என்றுதான் கல்யாணராமனால் சொல்ல முடிந்தது..

ஜானகி சமையலறையிலிருந்து எட்டிப் பார்த்து.. எல்லோரையும் சாப்பிட வரச் சொன்னாள்.. அவர்கள் பேசியபடியே சாப்பிடச் சென்றார்கள்.. மருமகன் காலை டிபனுக்கு மட்டும்தான் இருப்பார் என்ற செய்தியை அறிந்ததும்.. காலையிலேயே கோழி வறுவல் செய்து.. அதற்கு இட்லியையும்.. பூரியையும் துணையாக வைத்திருந்தாள் ஜானகி…

“அசத்தல்ம்மா.. மாப்பிள்ளைக்குன்னா.. ஸ்பெசல் சமையலா? எப்படியோ நெல்லுக்குப் பாய்கிறது.. கொஞ்சம் புல்லுக்கும் பாய்ந்தால் சரிதான்..” சுதர்சனம் சொன்னான்..

இப்படிப்பட்டப் பேச்சுக்களை எப்போதுமே விரும்புவான் சாய்நாதன்.. அவனுக்கான முக்கியத்துவத்தை மாமனார் வீடு அளித்ததில் என்றும் போல.. அன்றும் பெருமை வர.. அதை முகத்தில் காட்டிக் கொள்ளாமல் அமர்த்தலாக.. சாப்பிட உட்கார்ந்தான்.. சாப்பிட்டுக் கொண்டிருந்த போதுதான் அந்தச் செய்தியைச் சொன்னாள் சூர்யா…

“அப்பா.. எனக்கு கவர்ண்மென்ட் ஜாப் கிடைச்சிரும் போல இருக்குப்பா..”

“அப்படியா..?”

கல்யாணராமனும்.. மற்றவர்களும் சந்தோசப்பட்டுப் போனார்கள்.. சூர்யாவின் முகத்தில் அவளுக்குப் பிடிக்காத இடத்தில் வேலை பார்க்க வேண்டிய அவசியமில்லை என்பதற்கான நிம்மதி தெரிந்தது.. அந்த நிம்மதியில் சந்தோசப் பட்டுப் போனாள் சந்தியா…

0Shares

Reviews – Puthithaga Oru Bubalam / புதிதாக ஒரு பூபாளம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link