Chapter 17
“கன்கிராஜீலேசன்ஸ்..” மனதார வாழ்த்தினார் கல்யாணராமன்..
“ஆனா.. அப்பா.. இதில ஒரு சிக்கல் வந்திருக்கு..”
“என்னம்மா..?”
“இப்பப் பார்க்கிற வேலையை ரிசைன் பண்ணனும்னா அதுக்கு மூன்று மாத நோட்டிஸ் கொடுத்தாகனும்…”
“கொடுத்துரும்மா…”
“அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் கைக்கு வராம எப்படிக் கொடுக்கிறதுன்னு பயமாய் இருக்குப்பா.. உங்களுக்கே தெரியும்.. இப்ப இருக்கிற பிரின்ஸிக்கு என்னைக் கண்டாலே ஆகாது.. அவங்களோட ரிலேடிவ்வை உள்ளே கொண்டுவர நான் தடையாய் இருக்கேன்னு என்மேல கொலைவெறியாய் இருக்காங்க…”
“அது தெரிந்த சங்கதிதானேம்மா.. எல்லா இடத்திலயும் இப்படிப்பட்ட சிலர் இருக்கத்தான் செய்வாங்க.. அதையெல்லாம் நினைச்சுப் பயந்துக்கிட்டு இருந்தா.. வேலை பார்க்கன்னு வெளியில போகவே முடியாதும்மா…”
“தெரியும்பா.. அவங்களோட டார்ச்சர் எனக்குப் பழகிப்போன ஒன்னுதான்.. இப்ப பிரச்னை அதில்லை.. நான் நோட்டிஸ் கொடுத்து.. எனக்கு கவர்ண்ட்மென்ட் ஜாப் கிடைக்காம போயிருச்சுன்னா.. இப்ப இருக்கிற வேலையும் போயிரும்.. புதுசா வேலை தேடறது எவ்வளவு சிரமம்ன்னு உங்களுக்கே தெரியும்.. என் சர்வீஸீம் போயிரும்…”
“ஆனா சூர்யா.. நோட்டிஸ் கொடுத்தாலும் நீ விலக நினைச்சாத்தான் விலக முடியும்.. மூன்று மாதத்திலே உன் மனது மாறி.. நீ வேலையில கண்டினியூ பண்ண நினைச்சா.. அவங்களாலே அதைத் தடுக்க முடியாது..”
“அப்படியா சொல்கிறிங்க..?”
“ஆமாம்.. நீ பயப்படாம நோட்டிஸ் கொடு…”
சூர்யா நிம்மதியானாள்.. அன்று முழுவதும் அவளுடன் பேசிக் கொண்டும்.. பூஜாவுடன் விளையாடிக் கொண்டும் இருந்ததில் சந்தியாவின் மனதிலிருந்த அச்ச மேகங்கள் விலகிப் போய் விட்டன.. அன்றிரவு அவள் நிம்மதியாக உறங்கினாள்…
அடுத்த நாளின் மாலைப் பொழுதில் சுதர்சனம் பரபரப்பாக வீட்டுக்கு வந்தான்.. சும்மாவும் வரவில்லை.. அந்தக்காலச் சினிமாவின் முதல் காட்சியைப் போல…
“வெற்றி.. வெற்றி..” என்று கூவிக் கொண்டு வந்தான்..
“என்னடா..?” ஜானகி ஆர்வத்துடன் வினவினாள்..
“அவனுக்குப் பிடிச்ச ஆக்டரோட படம் ரிலிஸாகியிருக்கும்.. முதல் ஷோவுக்கு.. முதல் டிக்கெட் கிடைச்சிருக்கும்..” அசுவராஸ்யமாக சொன்னார் கல்யாண ராமன்..
“என்னடா அண்ணா.. நீ சைட்டடிச்ச.. ஃபிகர் உனக்கு பச்சைக் கொடி காட்டிட்டாளா..?” தனிமையில் விசாரித்தாள் சந்தியா…
“ஒரு சாதனையாளனைப் பார்த்துக் கேட்கிற கேள்விகளையா நீங்க கேட்டு வைக்கறிங்க..?” ஒட்டு மொத்தக் குடும்பத்தின் மீதும் பாய்ந்தான் சுதர்சனம்…
“என்னன்னுதான் சொல்லுடா..”
கல்யாணராமன் அதட்டல் போட்டதும் தான் அவன் வாய் திறந்தான்.. பெரிய கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியாம்.. பன்னாட்டு நிறுவனமாம்.. இவனைக் கூப்பிட்டு வியாபார ஒப்பந்தம் போட்டிருக்கிறதாம்…
“நீயே தனி ஆள்.. உன்கூட எப்படிடா அவங்க பிஸினெஸ் டீலிங்ஸ் வைத்துக்கிட்டு.. அக்ரிமெண்டும் போட்டாங்க..? அதுவும் இன்டர்நேசனல் கண்ஸ்ட்ரக்சன் கம்பெனிங்கிற..?” மகனை ஏற இறங்கப் பார்த்த கல்யாண ராமன்…
“ஆர் யு ஆல்ரைட்.. சுதர்சனா..?” என்ற கேள்வியையும் கேட்டு வைத்தார்…
“அப்பா..” நொந்து போய் விட்டான் சுதர்சனம்..
“நீங்களே இப்படிப் பேசினா எப்படிப்பா..? முழுசாக் கேளுங்க…”
“சொல்லு.. கேட்கலாம்..” அப்போதும் சந்தேகத்துடன் தான் கேட்டார் கல்யாணராமன்..
“மகாவீர் கன்ஸ்ட்ரக்சன் கம்பெனின்னு ஒரு வெப்சைட்டை ஆரம்பிச்சேன்ப்பா.. அதில என்னோட பியுச்சர் பிளானையெல்லாம் போட்டு வைச்சேன்.. அதைப் பார்த்துட்டுத்தான் அவங்க என்னைக் கூப்பிட்டுப் பேசினாங்க…”
“மகாவீர் கன்ஸ்ட்ரக்சன் கம்பெனியா..? இது என்னடா புதுசா இருக்கு..?”
“புதுசுதான்ப்பா.. மாவீரன் அலெக்சாண்டரைப் போல சாதிக்கனும்கிற வெறி எனக்குள்ளே இருக்குப்பா.. அதான்.. மகாவீர்ங்கிற பெயரில கம்பெனி ஆரம்பிச்சேன்…”
“அதுக்குப் பணம் வேணாமா..? முதலீடு இல்லாம எப்படிடா தொழில் பண்ணுவ..?”
“அதையெல்லாம் பின்னால பார்த்துக்கலாம்ன்னு நினைச்சேன்ப்பா.. இப்போதைக்கு அந்தப் பெயரை மட்டும் ரெஜிஸ்டர் பண்ணி வைச்சேன்.. வெப்சைட்டை கிரியேட் பண்ணி.. அதில என் பிளானையெல்லாம் போட்டு வைக்கிறதை ஒரு இன்ட்ரெஸ்டிலதான் செய்துக்கிட்டு இருந்தேன்.. நினைச்சுக் கூடப் பார்க்கலை… ஒரு ஆர்வத்தில நான் செய்து வைத்ததைப் பார்த்துட்டு ஜீபூம்பா பூதம் என் கம்பெனியின் கதவைத் தட்டும்ன்னு..”
சுதர்சனத்தின் தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்க வில்லை.. மறுவாரம்தான் அவை வெளியிடப் படுவதாக இருந்தன.. அதற்குள் அவன் எதையெதையோ சொன்னதில்.. அதை நம்புவதா.. வேண்டாமா.. என்று அந்தக் குடும்பத்தார் குழம்பிப் போய் நின்றார்கள்…
ஆனால்.. அவர்களும் அதை நம்பத்தான் வேண்டியிருந்தது.. மறுவாரத்தில் வெளியான தேர்வு முடிவுகளில் சுதர்சனம் அதிக மதிப்பெண்களை எடுத்துப் பாஸ் பண்ணியிருந்தான்.. அவனுடன் வியாபார ஒப்பந்தம் செய்து கொண்டதாக அவன் சொன்ன அந்தக் கம்பெனியைச் சேர்ந்தவர்கள் வீடு தேடிவந்து அவனுக்கு வாழ்த்துச் சொன்னார்கள்.. வீட்டின் முன் பகுதியையே தனது அலுவலகமாக சுதர்சனம் மாற்றிக் கொண்டு விட்டான்.. மகன் சொல்வதிலும் உண்மை இருக்குமோ என்ற நம்பிக்கையின் வித்து கல்யாணராமனின் மனதுக்குள் விழுந்ததில் அவர் தந்தை மகனுக்காற்றும் உதவியாக.. அவன் கேட்காமலே வீட்டின் முன்புறத்தை மாற்றியமைத்து அவனுக்கான அலுவலகத்தை அமைத்துக் கொடுத்து விட்டார்..
“அட்வான்ஸா பணம் கொடுத்துட்டாங்கப்பா…”
அவன் சொன்ன தொகை.. லட்சங்களாக இல்லாமல் கோடிக்கணக்கில் இருந்ததில் கல்யாணராமனுக்கும்.. மற்றவர்களுக்கும் மயக்கமே வந்து விட்டது..
“இடத்தைக் கூட அவங்களே வாங்கிக் கொடுத்துட்டாங்கப்பா.. லேபர்ஸையும் அவங்களே சப்ளை பண்றாங்க.. பிளான் போட்டு.. வேலை வாங்கறது மட்டும் தான் நான்.. இதில பிஃப்டி பெர்ஸென்ட் பார்ட்னர்ஷிப் என் கம்பெனிக்கு உண்டு..”
சுதர்சனத்தின் கண்கள் ஜொலித்தன.. அவன் கனவுகள் இவ்வளவு பிரம்மாண்டமான நனவுகளாக உருமாறுவதில் அவனுக்கே பிரமிப்பு இருந்தது.. கிடைத்திருப்பது மிகப்பெரிய வாய்ப்பு என்பதை அவனும் உணர்ந்திருந்ததால் விளையாட்டுத் தனங்களை மூட்டை கட்டிப் பரணில் போட்டு விட்டு.. வெறித்தனமாக வேலையில் இறங்கினான்.. இரவு பகல் பார்க்காமல் அவன் உழைத்ததில் அந்த பிரம்மாண்டமான அபார்ட்மென்டுக்கான கட்டிடம் உருப்பெற்று எழுந்து நிற்க ஆரம்பித்தது..
“நிஜமாவே இவன் பெரிய ஆளாய் வந்திட்டாண்டி..”
இரவு வேளைகளில் மனைவியிடம் பெருமைப் பட்டார் கல்யாணராமன்.. சந்தியாவுக்கும் தமையனின் வெற்றியை நினைத்து சந்தோசமாகத்தான் இருந்தது.. எப்பேற்பட்ட வெற்றி அது..! மிக பிரம்மாண்டமான வெற்றியல்லவா அது..!
வீட்டில் மாறியிருந்த கலகலப்பான சூழ்நிலையில் சந்தியா அனைத்தையும் மறந்துவிட்டு பழைய சந்தியாவாக மாறிப்போனாள்.. அவளுடைய தேர்வு முடிவுகளும் வந்து விட்டன.. முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தவளை எம்.காம் படிப்பில் சேர்த்து விட்டார் கல்யாணராமன்…
“ஈவினிங் கிளாஸில் சி.ஏ. படி.. ரெகுலரில் எம்.காமை முடிச்சுரு.. ஸேம் டயத்தில ரெண்டையும் ஹேண்டில் பண்ண உன்னால முடியாதா..?”
சந்தியாவால் முடிந்தது.. அவளுடைய லட்சியப் படிப்பை படிக்க அவளும் ஆயத்தமானாள்.. நாள்கள் இறக்கை கட்டிக் கொண்டு பறந்தன.. ரகுநந்தனை
அவள் சுத்தமாக மறந்து விட்டாள்.. அப்படியொருவன் இருந்தான்.. அவள் வாழ்வில் வந்து சவால் விட்டான்.. அவளை மணக்க இருந்தவனை வேறொருத்தியை
மணக்க வைத்தான் என்ற அத்தனை நிகழ்வுகளும் அவளுக்கு மறந்தே போயின…
புதுக்கல்லூரி.. மேற்படிப்பு.. என்று சந்தியா பட்டாம் பூச்சியாக துள்ளித் திரிந்தாள்.. அப்போதுதான் கல்யாண ராமன் அந்தச் செய்தியைக் கொண்டுவந்தார்..
“ஜானகி.. எனக்குப் பிரமோசன் வரும் போல இருக்குடி…”
அத்தனை உற்சாகத்தை அவரிடம் அதற்கு முன்னால் சந்தியா பார்த்ததே இல்லை… கல்யாணராமனின்
முகத்தில் சந்தோசம் கூத்தாடியது.. சந்தோச மிகுதியில் அவர் குரலும்.. கைவிரல்களும் நடுங்கின.. ஜானகி பயந்து போய் விட்டாள்..
“இப்படி உட்காருங்க சொல்கிறேன்…”
அவரை சோபாவில் உட்கார வைத்து மின் விசிறியைச் சுழல விட்டாள்.. பிரிட்ஜைத் திறந்து.. குளிர் நீரை எடுத்துக் கொடுத்து பருக வைத்தாள்..
“பதட்டப் படாம விசயத்தைச் சொல்லுங்க..”
“ரீஜினல் மேனேஜருக்கான பிரமோசன் லிஸ்டில என் பெயர் இருக்குதாம்டி.. அதிலயும் டாப் மோஸ்டில் இருக்காம்…”
“எப்படிங்க..?”
“இதுவரைக்கும் என் பேங்கில நான் காட்டின டிரான்ஸ்hக்சனும்… டெபாசிட் அமௌவுண்டும்தான் காரணமாம்.. எங்க ஹெட் ஆபிஸ்ல சொன்ன டார்கெட்டை அசீவ் பண்ணாம நான் இருந்ததில்ல.. எந்த லோனும் பென்டிங்ல இல்ல.. சின்ன கம்ப்ளெயிண்ட் கூட என் பேரில வந்ததில்ல.. இதெல்லாம் தான் காரணமாம்..”
“நீங்க ரீஜீனல் மேனேஜரா..?”
வாய் பிளந்தாள் ஜானகி.. அவளுக்கு இறக்கை கட்டிக் கொண்டு வானத்தில் பறப்பதைப் போல இருந்தது.. கால்கள் தரையில் பாடாமல் மான்குட்டியைப் போல..
அவள் வயதை மறந்து.. இங்கும்.. அங்குமாக ஓடினாள்.. கல்யாணராமனுடன் கோவிலுக்குப் போய் வந்தாள்.. கோவில் பிரகாரத்தில் அமர்ந்து கணவனும் மனைவியும் நெடுநேரம் வரை பேசிக் கொண்டிருந்து விட்டு வீடு திரும்பினார்கள்..
எதிர்காலம் ஒளிமயமானதாக இருந்தது.. வரப் போகும் வாழ்க்கை பல பரிசுகளை அள்ளி வைத்துக் கொண்டு காத்திருப்பதாக அந்தக் குடும்பத்திற்குத் தோன்றியது.. பிள்ளைகளுக்கும்.. கணவனுக்கும் கிடைத்த உயர்வில் ஜானகி ஒரு சுற்றுப் பருமனாகி விட்டாள்..
எல்லாமே நன்றாகத்தான் போய் கொண்டிருந்தது.. ஒரு மழைநாளின் மாலைப் பொழுதில் ரகுநந்தனை வழியில் சந்திக்கும் வரை சந்தியாவும் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தாள்.. கொட்டும் மழையில் அகன்ற சாலையில் அவள் ஸ்கூட்டியைக் கடந்து சென்ற அவன் கார் அவள் வழியை மறைத்து நின்ற போது அந்த நினைவில்தான் சப்தம் போட்டாள்..
“அறிவில்லை..?”
கார் கதவைத் திறந்து கொண்டு இறங்கிய ரகுநந்தன்.. மழையீல் நனைந்து கொண்டிருந்தவளின் அருகே வந்து நின்று.. மழைக்கோட்டின் பாதுகாப்பில் நனையாமல் நின்று கொண்டு…
“எனக்கு நிறைய அறிவிருக்கு.. அது உலகத்துக்கே தெரியும்.. உனக்குத்தான் தெரியல.. வேணும்னா என் அறிவில் உனக்குக் கொஞ்சம் கடன் கொடுக்கவா..?” என்று கேட்ட போதுதான்.. ரகுநந்தன் இன்னும் அவளை மறக்கவில்லை.. அவள் வழியில் இருந்து ஒதுங்கவில்லை என்ற உண்மையே அவளுக்கு உறைத்தது…
“இறங்கு..” என்றான் அவன் அதிகாரமாக…
“ஏன் இறங்கனும்..?” மழையில் நனைந்ததினால் நனைந்த உடைகளின் வெடவெடப்போடு அவள் கேட்டாள்..
“இறங்குன்னு நான் சொன்னா இறங்கிரனும்.. எதிர் கேள்வி கேட்கக் கூடாது..”
“ஹலோ மிஸ்டர் சூப்பர்மேன்.. உங்க மனதில் என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க..? நீங்க பெரிய ஆளா இருந்தா அது உங்க மட்டுக்கு.. என்னை வழி மறித்து இறங்கச் சொல்ல நீங்க யார் சார்..?”
“நான் யாரா..? ம்ம்ம்.. உன் குடும்பத்தின் தலைவிதியை மாற்றி எழுதப் போகிறவன்.. கலியுகத்தின் ‘பிரம்மா’ இது போதுமா.. இன்னும் கொஞ்சம் சொல்லனுமா..?”
அவன் முகத்தில் காதல் இல்லை.. கடுமை இருந்தது.. அவன் விழிகளில் மின்னல் இல்லை.. தீட்சன்யம் இருந்தது.. அவன் முகத்தில் இளக்கம் இல்லை.. அது பாறைபோல இறுகிக்கிடந்தது…
“என் மனதில நான் என்ன நினைக்கிறேன்ங்கிறது இருக்கட்டும்.. உன் மனதில என்ன நினைச்சுக்கிட்டு இருக்க..? இந்த ரகுநந்தன் விட்ட சவாலை மறந்து போயிட்டான்னு நினைத்துக்கிட்டு இருக்கியா..? நான் ஓட விட்டுப் போட்டுத் தாக்கறவன்.. இப்ப உன் குடும்பத்தை ஓட விட்டிருக்கேன்.. அவங்களை நான் போட்டுத் தாக்கறதும்.. தாக்காததும் உன் கையில்தான் இருக்கு..”
சந்தியா திக் பிரமை பிடித்தவளாக அவனையு மறியாமல் தன்னிச்சையாக ஸ்கூட்டியை விட்டு இறங்கினாள்…
“விக்ரம்..” என்ற ரகுநந்தனின் குரலில்…
“சார்..” என்று காரை விட்டு இறங்கி ஓடிவந்து நின்றான் அவனுடைய டிரைவர்..
“இந்த ஸ்கூட்டியைக் கொண்டு போய் மாம்பலத்தில இருக்கிற இவங்க வீட்டில விட்டுட்டு நீ உன் வீட்டுக்குப் போகலாம்.. நாளைக்குக் காலையிலே வேலைக்கு வந்தால் போதும்…”
ரகுநந்தன் சந்தியாவின் வீட்டு முகவரியைச் சொன்னான்.. யாரோ ஒரு முன்பின் தெரியாத மனிதனிடம் ஸ்கூட்டியை ஒப்படைக்கிறோமே.. அவன் அதைக் கொண்டு போய் சந்தியாவின் வீட்டில் விட்டால்… வீட்டில் உள்ளவர்கள் கேள்வி கேட்பார்களே.. அந்தக் கேள்விகளுக்கு என்ன பதிலைச் சொல்லச்சொல்வது.. இது போன்ற எந்தச் சிந்தனைகளும் இல்லாமல் செழுத்தப்பட்ட பதுமை போல ரகுநந்தன் திறந்து விட்ட காரின் முன்னிருக்கையில் அமர்ந்து விட்டாள் சந்தியா.. கார் கதவை அழுந்த மூடியவன் விக்ரமைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் காரில் ஏறிப் பறந்து விட்டான்…
சம்பளம் கொடுக்கும் முதலாளி என்ன சொன்னாலும் கேட்டுத்தான் தீரவேண்டும் என்ற சலிப்புடன் கொட்டும் மழையில் நனைந்தபடி ஸ்கூட்டியை ஓட்ட ஆரம்பித்தான் விக்ரம்..
‘வீட்டுக்குப் போனதும் அவகிட்ட சுக்குக் கஷாயம் போட்டுக் கொடுக்கச் சொல்லிக் குடிக்கனும்..’
நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு அதற்குள் தும்மல் மேல் தும்மலாக வந்து விட்டது.. சொட்டச் சொட்ட நனைந்தபடி கல்யாணராமனின் வீட்டில் வண்டியை நிறுத்தியவனால் உடனே கிளம்ப முடியாமல் அங்கே ஆயிரம் கேள்விக் கனைகள் பாய்ந்து வந்தன.. விக்ரம் திணறிப்போனான்..
Reviews – Puthithaga Oru Bubalam / புதிதாக ஒரு பூபாளம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.