Chapter 22
எப்படித்தான் அவனால் இப்படிக் கோர்வையாக பொய் சொல்ல முடிகின்றதோ என்றிருந்தது சந்தியாவுக்கு.. கணக்குப் போட்டு காய் நகர்த்தி காரியத்தையும் வெற்றிகரமாக முடித்து விட்டு.. இப்படி ஒன்றும் தெரியாத அப்பாவி மனிதர்களிடம் காதல் நாடகம் ஆடிக் கொண்டிருக்கிறானே.. இவனை என்ன செய்தால் தேவலாம் என்று ஆவேசம் அவளுக்குள் கிளர்ந்தது..
ஆனால் அவனை அவளால் எதுவும் செய்து விட முடியாது…
இதுதான் அவளுடைய மிகப் பெரிய துயரம்.. அவன் அவளைக் கட்டிப் போட்டுக் காவலில் வைத்திருக்கிறான்.. அவனை மீறி அவளால் எதையும் செய்துவிட முடியாது.. அவன் கெட்டிக்காரன்.. எங்கே அடித்தால் எங்கே வலிக்கும் என்ற சூட்சுமத்தை நன்கு அறிந்தவன்..
சந்தியா வணங்காமுடி.. எந்தக் காலத்திலும் அவள் அவனுக்குப் பணிய மாட்டாள்.. இதை நன்றாக அறிந்து வைத்துக் கொண்டு.. அவளைத் தாக்காமல் அவள் குடும்பத்தை தாக்க ஆயத்தமானவன் அவன்.. உன்னை அடித்தால்தானே வலி தாங்குவாய்.. உன் குடும்பத்தை அடித்தால் உன்னால் என்ன செய்து விட முடியும்.. நான் கேட்பதை நீ செய்துதானே ஆகவேண்டும் என்ற இக்கட்டில் அவளைக் கொண்டு வந்து நிறுத்தியவன்..
அவன்.. அவளுடைய காதலனாம்.. இருவரும் காதலைப் பற்றிப் பேசி முடிவெடுத்தார்களாம்.. அந்த நல்ல விவரத்தை அவள் வீட்டாரிடம் சொல்ல தனியாக வந்தால் முறையாக இருக்காது என்று சேர்ந்து வந்தார்களாம்..
‘புளுகு மூட்டை..’
சந்தியா எரிச்சலை முகத்தில் வெளிப்படுத்தி விடாமல் இருக்க.. பிரம்ம பிரயத்தனம் செய்தாள்.. ஜானகி விழிகளை விரித்தபடி.. நின்றது நின்றபடி அசைவற்று நின்று விட்டாள்…
சுதர்சனம் ஒருவன்தான்.. யோசனையோடு தங்கையின் முகத்தைப் பார்த்தான்.. தமையனின் ஆராயும் பார்வையைக் கண்டதும்.. சந்தியா அவசரம்.. அவசரமாக தன் முகத்தை சிரித்த முகமாய் மாற்றிக் கொண்டாள்…
‘ஈ’ யென்று முகம் முழுக்க சிரிப்பைப் படற விட்டவளை சுதர்சனம் விசித்திரமாகப் பார்த்து வைத்ததும் தான் அவளுடைய தவறு அவளுக்கே உறைத்தது…
‘அதிகமாய் சிரிச்சு வைச்சுட்டேனோ.. இந்த அண்ணன் எம்டனாச்சே.. ஓவர் ஆக்டிங்கிறதை கண்டு பிடிச்சுருவானே…’
சட்டென்று சிரிப்பை சுருக்கிக் கொண்டவள் லேசாக சிரித்தபடி சுதர்சனத்தைப் பார்த்தாள்…
‘இது போதுமா.. இன்னும் கொஞ்சம் வேணுமா..?’ அவளுக்குச் சந்தேகமாக இருந்தது…
சந்தேகத்தை நிவர்த்தி செய்ய சுதர்சனத்திடமா அவள் விளக்கம் கேட்க முடியும்..? அவன் ஓடுகிற தண்ணீரில் ஒராயிரம் சுளிவுகளை கண்டு பிடிக்கிறவன்.. அவனுடைய கூர்மையான பார்வையில் பிரதிபலித்த சந்தேகத்தை கண்டு கொள்ளாமலிருக்க அரும் பாடுபட்டாள் சந்தியா…
“திடிர்ன்னு வந்து சொல்கிறிங்க.. எனக்கு கையும் ஓடலை.. காலும் ஓடலை..” யதார்த்தமாகப் பேசினார் கல்யாணராமன்…
“எனக்குப் புரியுது.. நீங்க வீட்டில் பேசி முடிவு பண்ணி.. நல்ல நாளாய் பார்த்து விட்டு எனக்குத் தகவல் சொல்லுங்க.. நான் முறைப்படி அம்மாவுடன் வந்து பெண் கேட்கிறேன்.. மற்றதை அன்னைக்கே பேசிக்கலாம்..” ரகுந்தன் எழுந்து கொண்டான்..
கைகூப்பி அனைவரிடமும் அவன் விடைபெற்ற பண்பாட்டில் பல்லைக் கடித்தாள் சந்தியா.. இப்படிப்பட்ட பவ்யம் காட்டினால் எந்தப் பெண்ணின் வீட்டில்தான் மகிழ்ந்து போக மாட்டார்கள்…
‘வேதாளம் வந்து நின்னு தேவாரம் பாடுது.. அதைப் புரிந்துக்காம என் வீட்டாளுக.. பதில் வணக்கம் சொல்லி விழுந்து விழுந்து வணங்கறாங்க.. இவன் இந்த வீட்டு ஆளுகளுக்கு கண்ணி வைத்திருக்கிறவன்.. நான் மட்டும் இவனைக் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிக்கலைன்னா.. எல்லோரையும் ஒரு வழி பண்ணிட்டுத்தான் ஓய்வான்.. இதுகளுக்கு அது தெரியலையே…’
விட்டால் அவனுக்கு பாதபூஜை பண்ணி விடுவதைப் போல.. பவ்யமாக கை கூப்பியபடி வாசல் வரைக்கும் தொடர்ந்து போனார் கல்யாணராமன்… சுதர்சனமும் அவரைப் பின் தொடர்ந்தான்.. போவதற்கு முன்னால் தாயின் அருகே நின்று கொண்டிருந்த தங்கையை ஒரு பார்வை பார்த்து விட்டுத்தான் போனான்..
“ஜானகி…”
கல்யாணராமன் திரும்பி வந்து விட்டார்.. ஜானகியிடம் பரவசமாக ஒரு குரல் கொடுத்தவரின் அருகே உட்கார்ந்த ஜானகி…
“என்னங்க இது..? மாயாஜாலம் போல இருக்கு..?” என்றாள்..
“எனக்கும் அப்படித்தாண்டி இருக்கு.. சுதர்சனம்.. நீயென்னடா சொல்ற..?”
“புரியலைப்பா..” அவன் ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டான்…
“இப்ப என்னடி செய்யலாம்..?”
“இதில யோசிக்க என்னங்க இருக்கு.. அதிர்ஷ்ட லட்சுமி வீடு தேடிவ வந்திருக்கா.. கதவைத் திறந்து அவளை ‘வா’ன்னு சொல்லி ஆரத்தி எடுக்கறதை விட்டுட்டு மலைச்சுப் போய் உட்கார்ந்திருக்கீங்க…”
“எனக்கும் அப்படித்தாண்டி தோணுது.. இவ்வளவு பெரிய கோடிஸ்வரன்தான்.. இளம் வயதுதான்.. ஆனா.. இதுநாள்வரை இவரைப் பெண்களோடு சம்பந்தப்
படுத்தி எந்தவொரு வதந்தியும் வந்ததில்லை.. இந்த ஒண்ணுக்காகவே இவருக்குப் பெண் கொடுக்கலாம்டி…”
அந்த ஒன்று இல்லாவிட்டாலும்.. ரகுநந்தன் பெண் கேட்டு வந்த பின்னால் மறுக்காமல் அவனுக்குத்தான் கல்யாணராமன் பெண் கொடுப்பார் என்பதை ஜானகியும்.. சுதர்சனமும் அறிந்து வைத்திருந்ததால்.. மௌனமாக ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டார்கள்…
“நாளைக்கே போன் பண்ணி.. வருகிற வெள்ளிக் கிழமை அவங்களைப் பெண் பார்க்க வரச் சொல்லி விடுகிறேன்…” கல்யாணராமன் முடிவு செய்து விட்டார்..
வருகிற வெள்ளிக்கிழமை.. மறுநாளுக்கு அடுத்த நாளில் வருகிறது என்பதில் ஜானகியின் சிரிப்பு அதிகமானது.. சுதர்சனம் லேசாக சிரித்து வைத்தான்…
அன்றைய இரவில் நிம்மதியில்லாமல் சந்தியா மட்டும் பால்கனியில் நின்று கொண்டிருந்த போது அவள் பின்னால் வந்து நின்ற சுதர்சனம்..
“உண்மையாகவே ரகுநந்தனை நீ காதலிக்கிறயா சந்தியா..?” என்று ஆழ்ந்த குரலில் கேட்டு வைத்தான்..
Reviews – Puthithaga Oru Bubalam / புதிதாக ஒரு பூபாளம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.