Chapter 28
“அட்டெண்சன் ப்ளீஸ்…”
விமான நிலையத்தில் இருந்த ஒலிபெருக்கி அறிவித்துக் கொண்டிருந்தது… சந்தியாவின் பக்கம் திரும்பாமல் கையிலிருந்த பத்திரிக்கையில் கவனமாக இருந்தான் ரகுநந்தன்.. வழியனுப்ப வந்திருந்த பிறந்த வீட்டினருடன் பேசிக் கொண்டிருந்தாள் சந்தியா…
“பாரின் டிரிப் அடிக்கப் போகிற.. கலக்கு..” என்றான் சுதர்சனம்…
“இன்னைக்கு நான்.. நாளைக்கு நீ எத்தனை ஃபாரின் டிரிப் அடிக்கப் போகிறயோ.. யார் கண்டது..?” என்றாள் சந்தியா…
“இப்பவே சான்ஸ் வந்தாச்சு.. நெக்ஸ்ட் மன்த் இவன் ஃபாரின் போறான்.. இவன்கூட அக்ரிமென்ட் போட்டிருக்கிற இன்டர் நேசனல் கம்பெனி.. அடுத்த வொர்க்கை கொடுக்கப் போறாங்க..” சந்தோசமாக சொன்னாள் ஜானகி..
“அப்ப.. கலக்கப் போறது யாராம்..?” சந்தியா கிண்டலாக கேட்டாள்..
“அவன் தனியாப் போகலை.. கூடவே எங்களையும் அழைச்சுக்கிட்டுப் போறான்..” வாத்சல்யத்துடன் மகனைப் பார்த்துக் கொண்டார் கல்யாணசுந்தரம்..
சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த ரகுநந்தனைப் பார்த்தாள் சந்தியா.. இத்தனை மகிழ்வும் இவனால்தானே என்ற எண்ணம் அவளுக்கு ஏற்பட்டது.. அவனது பாரா முகத்தில் அவள் மனதில் சஞ்சலம் உண்டானது…
மதியத்திலிருந்து இப்படி இறுகிய முகத்துடன் தான் அவன் இருக்கிறான்.. கௌசல்யா பேசியபோது.. அவளுக்காக சிரித்துப் பேசியவன்.. அவளிடம் விடை பெற்று காரில் ஏறியதும்.. பழைய இறுக்கத்தை முகத்தில் கொண்டு வந்து விட்டான்..
‘இவனுக்கு எப்படித்தான் புரிய வைப்பது..?’ சந்தியாவுக்கு தலை வேதனையாக இருந்தது…
அவள் ஒன்றும் ரகுநந்தனின் மீது காதலாகி கசிந்துருக வில்லைதான்.. அவள் கழுத்தில் அவன் கத்தியை வைத்ததால்.. வேறு வழியின்றி.. குடும்பத்தாரின் நன்மைக்காக.. அவனைத் திருமணம் செய்து கொண்டவள்தான்..
ஆனாலும்.. அவன் கைபிடித்த பிறகு.. வேறு எந்த நினைவும் அவள் மனதில் வந்ததில்லையே.. அதை ஏன் அவன் புரிந்து கொள்ள மறுக்கிறான்..?
“என்ன சந்தியா.. என்னவோ போல இருக்கே..?” என்று கேட்டான் சுதர்சனம்…
“ஒன்னுமில்லைண்ணா..” சமாளித்தாள் சந்தியா..
“ஊஹீம்.. ஏதோ ஒன்னு இருக்கு.. அது உன் தலையில் ஏறி உட்கார்ந்துக்கிட்டு இருக்கு..” சந்தியாவின் தலைமீது தன் உள்ளங்கையை வைத்து ஆட்டிக் காட்டினான் சுதர்சனம்…
மிகச் சரியாக அந்த நொடியில் பார்வையை உயர்த்திய ரகுநந்தனின் விழிகளில் அந்தத் தோற்றம் தென்பட்டது.. சுதர்சனத்தின் செய்கையில் சிரித்துக் கொண்டே திரும்பிப் பார்த்த சந்தியாவின் விழிகளும்.. அவன் விழிகளும் அதே நொடியில் சந்தித்துக் கொண்டன.. சந்தியாவின் சிரிப்பு உறைந்தது.. அவளை ஊடுறிவிப் பார்த்தவன் சட்டென்று பார்வையை கையிலிருந்த பத்திரிக்கையின் பக்கமாக திருப்பிக் கொண்டு விட்டான்…
“என்ன பார்க்கிற..?” சுதர்சனம் திரும்பிப் பார்த்துவிட்டு..
“அத்தானையா பார்க்கிற..?” என்று கேட்டு வைத்தான்..
“அத்தானா..?” சந்தியாவின் உடல் தூக்கிப் போட்டது.
கல்யாணராமனின் செல்போனில் சூரியா அழைக்கிறாள் என்ற செய்திவர.. அவர் போனைக் காதுக்கு கொடுத்தபடி சற்று விலகி நின்றார்.. பெரிய மகள் என்ன சொல்கிறாள் என்பதைக் கவனிக்கும் பொருட்டு ஜானகியும் கணவருடன் சேர்ந்து நகர்ந்தாள்…
மீண்டும் பார்வையை உயர்த்தி ரகுநந்தன் மனைவி இருக்கும் திசையில் பார்த்தபோது.. அவளும் சுதர்சனமும் தீவிரமான முகபாவனையுடன் ரகசியமாக பேசிக் கொண்டிருப்பதைக் கண்டான்.. அவன் புருவங்களின் மத்தியில் சுளிப்பு ஏற்பட்டது.. இமைக்காமல் அந்தக் காட்சியினைப் பார்த்தவனின் முகத்தில் கடினம் பரவியது..
அதைக் கவனிக்காமல் சுதர்சனத்தின் கேள்விக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தாள் சந்தியா..
“எதுக்காக இந்த அளவுக்கு பதட்டப்படற..?”
“அத்தான்னு நீ யாரைச் சொன்ன..?”
“சந்தியா…”
சுதர்சனத்தின் முகம் மாறியது.. ‘அத்தான்’ என்ற அழைப்பைக் கேட்டதும் தங்கை எதற்காக பதட்டப்பட்டாள் என்றவிவரம் அவனுக்குப் புரிந்து விட்டது…
“முட்டாளா நீ..?” அவன் சீறினான்…
“அத்தான்னு யாரைச் சொல்வாங்க..? அக்கா.. தங்கையின் ஹஸ்பெண்ஸைச் சொல்லுவாங்க.. அதைப் புரிஞ்சுக்காம மடச்சாம்பிராணி போல பேசி வைக்கிறயே.. உன்னை என்ன செய்தால் தேவலாம்.. சூர்யாக்காவோட வீட்டுக்காரரை நான் என்ன சொல்லிக் கூப்பிடுவேன்..? நீதான் என்ன சொல்லிக் கூப்பிடுவ..?”
“அத்தான்னுதான் கூப்பிடுவோம்..” உதட்டைக் கடித்துக் கொண்டாள் சந்தியா..
“இப்பப் புரியுதா..? அத்தான்னா அது அவனைத்தான் குறிக்கனும்னு ஒரு அவசியமும் இல்லை…”
சுதர்சனம் அபிஷேக்கின் பெயரைச் சொல்லக் கூட விரும்பவில்லை.. அந்த ‘எவன்’ யாரென்பதை தானாகப் புரிந்து கொண்ட சந்தியா உதட்டைக் கடித்தாள்.. தமையனிடமும் இப்படி மாட்டிக் கொண்டாளே…
“என்கிட்டப் பேசினதைப் போல உன் ஹஸ்பெண்டிடமும் பேசி வைக்காதே.. என்ன புரியுதா..” சுதர்சனம் அதட்டினான்…
“ஆல்ரெடி.. பேசித் தொலைச்சிட்டேன்..” சந்தியாவின் கண்களில் நீர் முட்டியது..
ஏனோ தெரியவில்லை.. ரகுநந்தனின் பாராமுகம் அவளை அதிகமாக பாதித்துத் தொலைத்தது…
“அடிப் பாவி..” சுதர்சனம் பதறிப் போய் விட்டான்…
அவன் திரும்பிப் பார்த்தபோது.. பத்திரிக்கையி லிருந்து பார்வையை விலக்கிய ரகுநந்தனும் அவனைப் பார்த்துத் தொலைத்தான்.. அவனது கடினமான முகத்தில் எதையோ தேடுவதைப் போல சுதர்சனத்தின் விழிகள் பதிந்து மிண்டன..
“அதான் அவர் உர்ருன்னு இருக்காரா..?”
“ம்ம்ம்…”
“ஏன் சந்தியா இப்படி இருக்க..?”
“தெரியலை…”
திரும்பவும் சந்தியாவின் கண்களில் நீர் முட்டவும் சுதர்சனம் அவசரமாக ரகுநந்தனைத் திரும்பிப் பார்த்தான்.. அவன் அவர்களைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்..
“பண்ணிய முட்டாள்தனமெல்லாம் போதும்.. இனியும் அதை கன்டினியூ பண்ண வேணாம்.. கண்ணைத் துடைச்சுக்க.. அத்தான் பார்க்கிறார்.. இனிமே அத்தான்னா உன் ஹஸ்பெண்ட் முகம் மட்டும்தான் உன் மனசுக்குள்ள வரனும்…” தாழ்ந்த குரலில் கண்டித்தான் சுதர்சனம்…
“அண்ணா..” ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்தாள் சந்தியா…
இது ஏன் அவளுக்குத் தோன்றாமல் போய் விட்டது..? அந்த அபிஷேக்கின் பெயரைக் கேட்டால் கூட இனிமையான நினைவுகள் அவள் மனதில் மலர்வ தில்லையெனும் போது.. ‘அத்தான்’ என்ற அழைப்பில் மட்டும் அவன் நினைவு எதற்காக வர வேண்டும்..?
“புரியுதுண்ணா..” கண்களைத் துடைத்துக் கொண்டாள் சந்தியா..
இனி அவள் என்ன செய்ய வேண்டும் என்று அவளுக்குப் புரிந்து விட்டது.. விமானம் கிளம்பும் நேரம் வந்ததும்.. அவள் கையாட்டிவிட்டு ரகுநந்தனை நோக்கி நடந்தாள்.. விமானத்தில் ஏறி அவன் பக்கத்தில் உட்காரும் வரை அவனது பாரா முகத்தைப் பற்றிக் கவலைப் படாமல் அவன் கைவளைவில் தன் கைகளை பிணைத்துக் கொண்டிருந்தாள்.. கேள்வியாக அவன் அவளைப் பார்த்த போது..
“எனக்குப் பிளேன் ஜர்னி பழக்கமில்ல.. ஃபார்மாலிட்டீஸை எப்படி ஃபாலோ பண்றதுன்னு தெரியல..” என்று அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு சொன்னாள்..
ரகுநந்தன் எதுவும் பேசவில்லை.. அவள் கைகளுக்குள் தன் கையைக் கொடுத்தபடி.. அவளுக்கு விளக்கம் சொல்ல வேண்டிய நேரத்தில் மட்டும் விளக்கம் சொன்னான்.. அவர்கள் விமானத்தில் ஏறினார்கள்.. விமானம் பறக்க ஆரம்பித்தது…
ஜன்னலோரமாக அமர்ந்திருந்த சந்தியா.. உற்சாகத்துடன் கீழே புள்ளிகளாத் தெரிந்த ஊரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.. எதையோ சொல்ல அவன் பக்கம் திரும்பிய போது ரகுநந்தன் அவளைப் பார்க்காமல் அப்போதும் பத்திரிக்கையைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்..
சந்தியா ஜன்னலை மறந்து அவன் பக்கமாக சரிந்தாள்.. அவன் தோளில் தலை வைத்துக் கொண்ட போது அவன் பார்வையை விலக்காமல்…
“என்ன..? புதிதாய் காதல் பொங்குது..?” என்று கேட்டான்…
“புதிதோ.. பழையதோ.. என் அத்தான் மேல் எனக்குக் காதல் வருது.. அதில் உங்களுக்கென்ன அப்ஜெக்சன்..? ஏனாம்..? எனக்கு என் அத்தான் மேல் காதல் வரக் கூடாதா..?”
அவள் கொஞ்சலாகக் கேட்டாள்.. பத்திரிக்கையி லிருந்து பார்வையை விலக்கி அவளைத் தீர்க்கமாக பார்த்தான் ரகுநந்தன்.. சந்தியா திகைத்தாள்..
Reviews – Puthithaga Oru Bubalam / புதிதாக ஒரு பூபாளம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.