Chapter 33

0Shares

சந்தியா கண்களை மூடியபடி படுத்திருந்தாள்.. அவள் விழியோரமாக நீர் வழிந்து கொண்டிருந்தது… 

அவள் அறைக்கு வெளியே கைகளைப் பிசைந்தபடி நின்று கொண்டிருந்தாள் ஜானகி.. அவளருகில் நின்றிருந்த சுதர்சனத்தின் நெற்றியில் சிந்தனையின் கோடுகள் இருந்தன..

“என்னடா சுதர்சனா.. திடிர்ன்னு இவ மட்டும் வந்து நிற்கிறா.. கேட்டா எதையும் சொல்லாம ரூமுக்குள்ள போய் கதவை அடைச்சுக்கிட்டா.. என்னதான்டா நடந்திருக்கும்..?” அவள் குரலில் கடலளவு கவலையிருந்தது..

“பதறாம இருங்கம்மா.. நான் விசாரிக்கறேன்..” தாயை அமைதிப் படுத்தினான் சுதர்சனம்..

அவனுக்கும் கவலையாகத்தான் இருந்தது.. ஒரு வயதுக் குழந்தையை கையில் பிடிக்காமல் தனித்து வந்து நின்றிருக்கும் தங்கையின் மனதில் என்ன முள் தைத்திருக்கக் கூடும் என்று புரியாமல் அவன் நிலை குலைந்திருந்தான்…

அறைக்குள் படுத்திருந்த சந்தியாவின் மனதில் ரகுநந்தன் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் சாட்டையடி களாய் விழுந்து கொண்டிருந்தன..

“இதைத்தானே அவனிடம் நீ சொன்ன..?” என்று முடித்தவனிடம்

“எவன் அவன்..?” என்றுதான் கேட்டாள் சந்தியா..

“தெரியாததைப் போல நடிக்காதேடி.. அத்தான்னு சொன்னவுடனே அவன் பெயர்தானே உன் நினைவுக்கு வந்துச்சு..? என் பெயர் தோணலைல்ல.. அந்த அவன்தான் இவன்..” வெறுப்புடன் சொன்னான் ரகுநந்தன்..

“யாரைச் சொல்கிறிங்க..? அபிஷேக்கையா..?”

“இப்ப நினைவுக்கு வந்திருக்குமே.. கெட்டிக்காரிடி நீ.. என்னை சமாளிக்க என் கண்டிசன்களையும்.. நிறைவேற்றிட்டு.. அவன்கிட்ட இதைப் பற்றிச் சொல்லி அழுதிருக்க.. ச்சே.. உன்னைப் போய் நான் உயிருக்குயிராய் காதலிச்சேனே.. மேரேஜ்ன்னு ஒன்று நடந்து என்கூட நீ வாழ்ந்துட்டா உன் மனசும் மாறிரும்.. என்னை உண்மையாய் நீ காதலிப்பன்னு தப்புக் கணக்கு போட்டுட் டேனே.. கடைசியில என் நம்பிக்கையில மண்ணை அள்ளிப் போட்டுட்டியே..”

“யார் சொல்ல வேண்டியதை யார் சொல்றது..? அந்தக் கல்பனா சொன்னா.. உன ஹஸ்பெண்ட்.. எனக்கு ஹஸ்பெண்ட் மாதிரின்னு.. அதை உண்மையாக்குறதைப் போல அவ வீட்டுக்குப் போய் கொஞ்சி குழாவிட்டு இங்கே வந்து நல்லவர் வேசம் போடறிங்களா..? அன்னைக்கே சொன்னீங்க.. சான்ஸ் கிடைக்காத வரைக்கும் ஒருத்தன் நல்லவனா இருப்பான்னு.. உங்களைத்தான் சொல்லிக் கிட்டிங்கன்னு எனக்குத் தெரியாம போச்சே…”

பேசிக் கொண்டே போனவளின் கன்னத்தில் ஓங்கி அவன் விட்ட அறையில் பொறிகலங்கிப் போனவளாக அப்படியே நின்று விட்டாள் சந்தியா..

“கொன்றுவிடுவேன்..” ஒற்றைவிரலை உயர்த்தி அவன் எச்சரித்தான்..

“கொன்று விடுவேன்.. யாரைப் பார்த்து என்ன வார்த்தையைச் சொல்ற..? எனக்கு ஒருத்திதான் பொண்டாட்டி.. அது நீ மட்டும்தான்.. அந்த அபிஷேக்கூட நீ நின்று பேசிக்கிட்டு இருந்ததையும்.. நமக்கு இடையில் நடந்த பேச்சுக்களை அவன்கிட்ட நீ சொன்னதையும் கல்பனா சொன்னா.. அது என்னன்னு விசாரிக்கத்தான் அவ வீட்டுக்கு நான் போனேன்…”

“பொய்.. அவளுக்கு இதெல்லாம் எப்படித் தெரியும்..?”

“இது நான் கேட்க வேண்டிய கேள்வி.. நமக்குள்ளே நடந்ததெல்லாம்.. அவளுக்கு எப்படித் தெரியும்..? நீ அவகிட்டச் சொன்னியா..?”

“ஏன் கேட்க மாட்டிங்க… நீங்க இதையும் கேட்பீங்க.. இதுக்கு மேலேயும் கேட்பீங்க… இதை புலன் விசாரனை பண்ணத்தான் அவள் வீட்டுக்கு நீங்க போனிங்களாக்கும்..? இதை நான் நம்பனுமாக்கும்..?”

“நம்பாதே.. உன்னை நம்பச் சொல்லி இங்கே யாரும் கெஞ்சலை.. அவளிடம் கேட்டா… அவளுக்கு அதையெல்லாம் அபிஷேக்தான் சொன்னான்னு சொல்றா.. எனக்கு எப்படியிருந்திருக்கும்..?”

“எப்படி வேணா இருந்துட்டுப் போகட்டும்.. நீங்க பேசுற கதையைக் கேட்க நான் தயாரா இல்லை.. அவனை நான் பார்த்து இரண்டு வருசத்துக்கு மேலே ஆச்சு.. இப்பப் போய் அவன் வந்தானா..?”

“இல்லையாமே.. போன மாதம் அவனை நீ பார்த்தியாமே.. அவன்கூட மாயாஜாலில் சுற்றி வந்தயாமே.. அப்பத்தான் நம்ம லைஃபில நடந்த விவரங்களை 

அவன் கிட்டச் சொல்லி அழுதியாமே.. அவனையும் உன்னையும் நான்தான் பிரிச்சேன்னு என்னிடமே அவன் கோபப்படறான்.. பிட்டுப்பிட்டு வைக்கிறாண்டி.. உனக்கும் எனக்கும் நடுவில் நடந்த அத்தனை போராட்டங்களையும் வரி விடாம அவன் சொல்றாண்டி.. இதெல்லாம் அவனுக்கு எப்படித் தெரியும்..?”

சந்தியா இமை சிமிட்டாமல் நின்று விட்டாள்.. கிணறு வெட்ட வெட்ட கிளம்பிய பூதத்தில் அவளால் பேச முடியவில்லை..

‘இது என்ன புதுக்கதை..?’

“கல்பனா என்னைப் பார்க்கனும்னு போன் பண்ணினாள்.. அவள் வீட்டுக்கு வரச்சொன்னாள்.. கோபப் பட்டப்போ.. உங்க பெண்டாட்டியின் அத்தான் வந்திருக்கார்.. நீங்க போட்ட மூன்று கண்டிசன்களைப் பற்றிக் கதை கதையாய் காரணமாம்ன்னு தோரணம் கட்டறார்.. அதை என்னன்னு கேட்டுட்டுப் போங்கன்னு சொன்னா.. உன்னாலேதாண்டி அவ வீட்டு வாசல் படியை நான் மிதிச்சேன்.. அந்த அபிஷேக் அன்னைக்கு வரலை.. நாம குலதெய்வம் கோவிலுக்கு போகிறதுக்கு முதல் நாளில் அவன் வருகிறதா இருந்தது.. பட்.. என்னால போக முடியலை.. இன்னைக்குப் போனேன்.. கல்பனா வீட்டில் அவன் இருந்தான்.. அவள் சொன்னதெல்லாம் உண்மைதான்னு.. பிட்டுப்பிட்டு வைச்சுட்டாண்டி.. ச்சீ.. இவ்வளவுதானா… நீ..! என்கூட நீ வாழ்ந்த வாழ்க்கை பொய்யா..?”

கடைசியில் அவள் கணவன் குற்றமற்றவனாக இருந்திருக்கிறான்.. அவள்தான் குற்றவாளியாக அவன் முன்னால் நிற்கிறாள்.. ஆனால் அது எப்படி நிகழ்ந்தது..?

“அன்னைக்கு ஹாஸ்பிடலில் லேடி டாக்டர் என்னைப் பார்த்து கங்கிராஜீலேசன்ஸ்ன்னு சொன்னப்ப வானத்தில பறந்தேண்டி.. ஒரே செகண்டில அதை உடைச்சு என்னை மண்ணுக்கு தள்ளினவ தானேடி நீ..! நான் போட்ட மூன்றாவது கண்டிசனையும் நீ நிறைவேத்திட்டன்னு சொன்னப்ப என் மனசு உடைஞ்சு போச்சுடி.. உன் கூட நான் வாழ்ந்த வாழ்க்கை பொய்யாய் போயிருச்சு…”

ரகுநந்தன் விரல் நீட்டி அவளைக் குற்றம் சாட்டியதில் அப்படியே பின்னுக்கு நகர்ந்தாள் சந்தியா.. அவள் விழிகளில் எதைக் கண்டானோ.. அவன்..

“சந்தியா..” என்று ஒரு அடி முன்னால் எடுத்து வைத்தான்…

“வராதீங்க..” அவள் ஆவேசமாக குமுறினாள்…

“இனி என்னிடம் பேச வராதீங்க.. கடைசியில நான் உங்ககூட வாழ்ந்த வாழ்க்கையை பொய்யின்னு சொல்லிட்டிங்கள்ல.. இனி என் முகத்தில் விழிக்காதீங்க.. நான் போறேன்..”

“ஏய்ய்.. நில்லுடி.. எங்கே போற..?”

“எங்கேயிருந்து உங்க வாழ்க்கைக்குள்ள வந்தேனோ.. அங்கேயே போறேன்..”

“அறிவுகெட்டவளே..! இது நைட்நேரம்..”

“இருந்துட்டுப் போகட்டும்…”

“குழந்தை எழுந்தா உன்னைத் தேடுவாண்டி.. பொறு…”

“இவன் உங்க குழந்தை.. கண்டிசனுக்காக உங்க கூட வாழ்ந்தவதான நான்..? உங்க குழந்தைக்கு அம்மாவாகனும்ங்கிறது தானே உங்க கண்டிசன்.? உங்க கண்டிசனை நிறைவேற்றிட்டேன்.. இனி உங்களுக்கும்.. எனக்கும் சம்பந்தமில்ல…”

“ஏய்ய்..” அவன் கண்கள் ரத்தமாகச் சிவந்தன…

அவள் அஞ்சவில்லை.. அசையவில்லை.. அவனைத் திரும்பிக்கூடப் பார்க்க வில்லை… அவன் பேசிய வார்த்தைகளின் வேகம் தாங்காமல் அவள் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது…

“நான் வாழ்ந்த வாழ்க்கை சத்தியமானது.. உங்ககிட்ட காதல் சொன்னது சத்தியமானது.. இந்த சத்தியத்தை உடைத்தெறிய ஒரு கேடு கெட்டவளாலும்… கேடு கெட்ட வனாலும் முடியும்ன்னா… நான் வாழ்ந்த வாழ்க்கைக்கு என்ன சக்தியிருக்கு..? வேணாம்.. எனக்கு நீங்க கொடுத்த பரிசே போதும்.. இனியும் இங்கே நிற்க என்னால முடியாது..”

சந்தியா குழந்தையை மறந்து.. அவசரமாக கீழே இறங்கிப் போய் காரை எடுத்துவிட்டாள்.. தொடர்ந்து வந்த ரகுநந்தன் அவன் காரில் அவளைப் பின் தொடர்ந்தான்.. அவள் வீடு வரை சென்றவன் அவள் பத்திரமாக இறங்கி வீட்டுக்குள் சென்று விட்டாள் என்பதை உறுதி படுத்திக் கொண்டதும் காரைத் திருப்பி விட்டான்.. அவன் முகத்தில் அழுத்தமான சிந்தனை படிந்திருந்தது..

33

சந்தியா அழுது அழுது ஓய்ந்திருந்தாள்.. குழந்தையின் நினைவு வந்தது… அவனும் இதைப் போல அவளைத் தேடி அழுதிருப்பானோ என்று யோசித்தாள்.. அவள் அறைக்கு வெளியே யது நந்தனின் அழுகுரல் கேட்டது.. அவசரமாக கதவைத்திறந்தாள் குழந்தையுடன் நின்றிருந்த ரகுநந்தன் அவளையே பார்த்தபடி உள்ளே வந்தான்.. கதவை மூடினான்.. அறைக்கு வெளியே நின்றிருந்த ஜானகியும்.. சுதர்சனமும் ஒருவரையொருவர் நிம்மதியுடன் பார்த்துக் கொண்டார்கள்…

“இனிப் புருசன் பாடு.. பெண்டாட்டியின் பாடு..” ஜானகி நிம்மதியாக வீட்டுக்கு வந்திருக்கும் மருமகனுக்கு விருந்து சமைக்கப் போனாள்…

“வெளியே போங்க..” அறைக்குள் இருந்த சந்தியா சீறினாள்…

“ஏன் போகனும்..?” நிதானமாக கேட்டபடி அவளருகே வந்தான் ரகுநந்தன்…

“ம்மா..” யதுநந்தன் சந்தியாவிடம் தாவினான்.. அவசரமாக குழந்தையை அள்ளிக் கொண்டவளின் முகத்தில் தெரிந்த தாய்மையுணர்வில் அவன் மனம் கனிந்தது.. மனைவியை அணைத்துக் கொள்ள அவன் மனம் துடித்தது..

“சந்தியா.. நான் உனக்கு நியாயம் செய்துட்டுத்தான் வந்திருக்கேன்டி..” என்றபடி அவளை தொட முயன்றான் ரகுநந்தன்..

“இது என்ன புதுக்கதை..?” யதுநந்தனைச் சமாதானப் படுத்தியபடி கணவனிடம் சீறினாள் சந்தியா…

“கதையில்லைடி.. நிஜம்.. யோசிச்சுப் பார்த்தேன்.. இந்த மூன்று கண்டிசன்களையும் நமக்கு நடுவில் இருந்த அந்த எழுதப்படாத அக்ரிமெண்டையும் எனக்கு நீ நினைவு படுத்தின இடம் ஹாஸ்பிடல்.. பட்.. இதை நீ சொல்லி ஒன்றரை வருசங்களுக்கு மேலாகுது… அந்த ஹாஸ்பிடலுக்கும் கல்பனாவுக்கும் இடையில் ஏதாவது லிங்க் இருக்குதான்னு பார்த்தேன்.. இருந்தது.. அங்கே வேலைபார்த்த நர்ஸ் ஒருத்தி.. கல்பனாவோட உறவுக்காரி.. அவள் அந்த ஹாஸ்பிடலின் சார்பா துபாயிலிருந்த 

பேசண்ட் ஒருத்தரின் வீட்டுக்கு வேலைக்குப் போயிட்டு இப்பத்தான் திரும்பி வந்திருக்கிறா.. அவளை மடக்கி விசாரிச்சப்ப.. அவதான் யதேச்சையா கல்பனாவுடன் ஷாப்பிங் வந்தப்ப உன்னைப் பார்த்துட்டு.. நீ பேசின விவரங்களை அவளிடம் சொல்லியிருக்கிறா.. இவ அபிஷேக்கைப் பற்றி எப்படியோ தெரிந்துக்கிட்டு 

அவனைப் போய் பார்த்திருக்கிறா.. அவனும் உன் மேல பொறாமையா இருந்திருக்கான்.. இரண்டு கூட்டுத் திருடர்களும் கூட்டணி போட்டுக்கிட்டு நம்ம லைஃபில விளையாடிப் பார்க்க நினைச்சிட்டாங்க.. உனக்கே தெரியும்.. என் பனிஷ்மெண்ட் எப்படியிருக்கும்ன்னு கல்பனாவோட கல்யாண ஏற்பாடும்.. அவளுடைய அப்பாவின் பிஸினெஸ்ஸீம் இப்பக் கேள்வி குறியாய் ஆகிருச்சு.. அபிஷேக்கின் மாமனார் வீட்டில அவனால இனிமே கால் வைக்க முடியாது.. வேலையும் இல்லாம அவன் வெட்டியா நிற்கப் போறான்..”

ரகுநந்தன் நீட்டிய கைகளுக்குள் நிம்மதியுடன் புகுந்து கொண்டாள் சந்தியா…

“வேண்டாம்..” என்றாள்..

“எது வேண்டாம்..?” ரகுநந்தனின் புருவங்கள் உயர்ந்தன..

“அவங்களைத் தண்டிக்க வேண்டாம்..”

“அறிவோடதான் பேசறயா..? சந்தியா.. அவங்க இரண்டு பேரும் நம்ம வாழ்வை குலைக்கப் பார்த்தாங்கடி..”

“இல்லை.. நம்வாழ்வை குலைக்கப் பார்த்தது நாம் தான்.. மத்தவங்க சொன்னா..? நாம உடனே ‘ஊம்’ போட்டு அதைக் கேட்டுக்கனுமா..? உங்க மேல எனக்கும்.. என் மேல உங்களுக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை இருந்திருந்தா நம்மிடம் விளையாட மத்தவங்க துணிஞ்சிருப்பாங்களா..?”

“சந்தியா…”

“போதும் அத்தான்… நம்ம மேல தப்பை வைத்துக்கிட்டு மத்தவங்களைத் தண்டிக்க வேண்டாம்.. என் அத்தானால் ஒருவர் வாழ்ந்ததாகத்தான் இனிமேல் இருக்க வேண்டும்.. வீழ்ந்ததா இருக்கக் கூடாது..”

“அதுக்காக அவங்களைச் சும்மா விட்டு விடுகிறதா..?”

“யார் அப்படிச் சொன்னது..? இப்பக் கொடுத்திருக்கிற தண்டணையை கொஞ்ச நாள் கண்டினியு பண்ணுங்க.. அதுவே போதும்.. அதை நிரந்தரமாக்காதீங்க..”

“உத்தரவு மகாராணி..”

சந்தியாவை அணைத்துக் கொண்டான் ரகுநந்தன்.. அவன் அவளுக்கு மட்டுமே உரியவன் என்ற நினைவில் அவள் மனம் நிம்மதி கொண்டது..

அவள் அவனை உண்மையாகக் காதலித்தாள்.. வற்புறுத்தலுக்காக காதலிக்கவில்லை என்ற நினைவில் அவன் மனம் நிம்மதி கொண்டது..

வாழ்வுப் பாதையில் சூறாவளி சுழன்றடிக்கலாம்.. அதை எதிர்த்துச் சமாளிக்கும் வல்லமையை கணவன்.. மனைவி இருவருக்கும் இடையே உள்ள உண்மையான அன்பு மட்டுமே அளிக்கும்..

அதை உணர்ந்து வாழ்பவர்களுக்கு பிறக்கின்ற ஒவ்வொரு நாளும் புதிதான ஒரு பூபாள ராகத்துடன் தான் பிறக்கும்…

– முற்றும் –

0Shares

Reviews – Puthithaga Oru Bubalam / புதிதாக ஒரு பூபாளம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link