Chapter 02
அகன்று விரிந்திருந்த தார் ரோட்டில் .. பஸ் நின்ற இடத்தில் ஒரு டீக்கடை இருந்தது.. அதன் வாசலில் இரண்டு மரபெஞ்சுகள் எதிரும்.. புதிருமாக போடப்பட்டிருந்தன.. அவற்றில் அமர்ந்திருந்த நான்கு இந்தியக் குடிமகன்கள் பேப்பரை தலைகீழாய் பிடித்துக் கொண்டு.. படிப்பதைப் போன்ற பாவனையை செய்து கொண்டிருந்தார்கள்..
டீக்கடையின் பக்கவாட்டிலும்.. ரோட்டின் மறுபக்கமுமாக இரண்டு பாதைகள் பிரிந்து சென்றன..
பஸ்ஸிலிருந்து இறங்கிய ஜனங்கள் தங்களுக்குள் பேசியவாறு இருபக்க பாதைகளிலும் பிரிந்து நடக்க.. அந்தப் பெண் மட்டும் தனித்து நின்றாள்..
எதிரும் புதிருமாக பிரிந்து சென்ற பாதைகளில் எந்தப் பாதையில் செல்வது என்று குழம்பிப் போனாள்..
‘ஹலோ….” என்று அழைப்பில் பேப்பரை தலை கீழாக பிடித்துக் கொண்டு அதன் மறைவினில் “டீ’ யை குடித்துக் கொண்டிருந்தவன் நிமிர்ந்து பார்த்தான்..
அந்தப் பிரதேசத்திற்கு புதியவளாக.. ஒட்டாதவளாக நின்று கொண்டிருந்தவளைப் பார்த்ததும் அவனுக்கு பேச்சு வரவில்லை..
கரிச்சான்பட்டியில்.. வீட்டுக்கு வீடு.. சின்னஞ்சிறு டிவி ஒன்று இருந்தது.. அதில் சிலகாலமாக அவனும் படம் பார்த்து வந்தான்.. அந்த டிவியில் வரும் விளம்பரங்களில் தோன்றும் பெண்களைப் பார்த்து அவன் மனதில் நீண்ட நெடுங்காலமாக ஒரு சந்தேகம் இருந்து வந்தது..
“இப்படிக்கூட அழகா… அம்சமா.. பொண்ணுக இருப்பாங்களா..’
அவனது சந்தேகத்தை நிவர்த்தி செய்ய வந்தவளைப் போல.. எதிரில் நின்று கொண்டிருந்தாள் அந்தப் பெண்..
தொலைக்காட்சியின் விளம்பர மாடல்களைத் தோற்கடிக்கும் அழகுடன் நின்று கொண்டிருந்தவளிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் அவன் திருதிருத்தான்..
‘ஹலோ… சார்..”
அதுவரை அவனை யாரும் “சார்’ என்று அழைத்திராத காரணத்தினால் அவள் வேறு யாரையோ அழைக்கிறாளோ.. என்று அவன் சுற்றும் முற்றும் பார்த்து வைத்ததைக் கண்டவளுக்கு சிரிப்புத்தான் வந்தது..
‘ஹலோ…. சார்.. உங்களைத்தான்..”
அவள் தன்னிடம் தான் பேசுகிறாள் என்று நிச்சயமானவுடன் அவன் வாய் திறந்தான்..
‘என்னையா கூப்பிட்டிங்க..?”
‘ஆமாம்..”
‘என்ன விசயமுங்க..?”
‘கரிச்சான் பட்டிக்கு எந்த ரோட்டில் போகனும்..?”
‘அந்தா… தெரியுது பாருங்க.. அந்த ரோட்டில் போங்க..”
டீக்கடையின் பக்கவாட்டில் பிரிந்து சென்ற அந்தப் பாதையின் முகப்பில்.. “கரிச்சான் பட்டி.. உங்களை வரவேற்கிறது..’ என்ற வாசகங்களைக் கொண்ட பெயர் பலகை நின்றது..
ஏனோ.. அதைப் படித்ததும்.. அவள் முகத்தில் ஓர்விதமான மென்மை பரவிப் படர்ந்தது..
‘தேங்க்..யு..”
முத்துப் பற்கள் தெரிய அவள் புன்னகைத்த விதத்தில் “ஆ’ வென்று வாய் பிளந்தவனாக கையில் தலைகீழாப் பிடித்துக் கொண்டிருந்த பேப்பரை நழுவ விட்டான் அவன்..
இரண்டு தோள்களிலும்.. இரண்டு பெரிய டிராவல் பேக்குகளை மாட்டிக் கொண்டு.. இரண்டு கைகளிலும்.. இரண்டு பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு அவள் அங்கிருந்து நகர்ந்து போன பின்னாலும்.. பிரமை பிடித்தவனாக.. அவள் சென்று கொண்டிருந்த திசையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவனைப் பார்த்த.. மற்றவர்கள் பலத்த குரலில் சிரித்தார்கள்..
‘என்னப்பா.. மாடசாமி.. அந்தப் பொண்ணு கூட ரொம்ப நேரமா பேசிக்கிட்டிருந்த போல.. தெரிஞ்ச பொண்ணா..?”
“டீ’ யை ஆற்றிக் கொண்டிருந்த டீக்கடைக்காரன் கேலியாக வினவினான்..
அதில் வழி சொன்னவன் பெருமைப்பட்டுப் போக.. அவனுக்கு பக்கத்திலிருந்தவனுக்கு அது பொறுக்கவில்லை..
ஏற்கனவே.. தன்னிடம் வழி கேட்காமல் மாடசாமியிடம் வழி கேட்டு விட்டாளே என்று மனதிற்குள் பொறுமிக் கொண்டிருந்தவன் அவன்..
‘என்னாங்கண்ணே.. இப்படிச் சொல்ற..? அது ஒன்னும் இவனுக்குத் தெரிஞ்ச பொண்ணில்ல.. கரிச்சான் பட்டிக்கு வழி தெரியாத பொண்ணு..”
‘அதச் சொல்லு.. ஆமாம் குப்பு.. நீதான பெஞ்சில் முதல் ஆளா உட்கார்ந்திருக்கிற.. உன்ன விட்டுப்புட்டு.. மாடசாமிகிட்ட அந்தப் பொண்ணு வழி கேட்டிருக்கு.. பார்த்தியா..?’
‘எனக்கெல்லாம் புதுசா வர்ற பொம்பளப் புள்ளைக்கிட்ட பேசிப் பழக்கமில்லண்ணே..”
‘அப்படியா.. இதை என்ன நம்பச் சொல்றியாக்கும்..?’
‘நிசமாலுமே.. அப்படித்தாண்ணே..”
‘அந்தப் பொண்ணு உன்கிட்ட வழி கேட்டிருந்தா.. நீ வாயை மூடிக்கிட்டு இருந்திருப்பியாக்கும்.. ஹா.. ஹா..”
‘ஏண்ணே.. இப்படிச் சொல்ற..?”
‘மாடசாமியாவது.. வழியைச் சொல்லிட்டு.. பேஸ்தடிச்சுப் போய் உட்கார்ந்துட்டான்.. நீயா இருந்தா.. நான் வழிகாட்டறேம்மான்னு சொல்லி.. அந்தப் பொண்ணோட பொட்டிகளைத் தூக்கித் தலையில் சுமந்துக்கிட்டு.. கூடவே போயிருப்ப..”
உண்மையிலேயே.. அப்படியொரு எண்ணம்தான் அவன் மனதில் ஓடிக் கொண்டிருந்தது..
“இந்தப் புள்ள.. என்கிட்ட வழி கேக்காமப் போயிருச்சே.. அப்படிக் கேட்டிருந்தா.. பொட்டிகளைச் சுமந்துகிட்டாவது.. கூடவே போயிருக்கலாமே.. இனிமே போனா.. இவனுக சிரிப்பானுகளே..’
மனதைப் படிக்கும் வித்தை தெரிந்திருந்த அந்த டீக்கடைக்காரன் கண் சிமிட்டினான்..
‘என்ன குப்பு.. அப்படித்தானே மனசில் நினைச்சே..”
‘போண்ணே.. உனக்கு வேற வேலையில்ல..”
‘அது நிசம்தானே.. எனக்கு டீக்கடையைத் தவிர.. வேற வேலை இல்லைதான்.. ஆனா.. உனக்கு வேலை வந்திருக்குமே..”
‘எப்படிண்ணே கண்டு பிடிச்சே.. இப்பத்தான்.. வயலிலே உரம் வைக்கப் போகனுமேன்னு நினைச்சேன்.. அதுக்குள்ள நீ அதை சொல்லிட்ட..”
‘எனக்குத் தெரியாதாப்பு..? தினமும் டீக்கடை பெஞ்சை தேய்க்கிறதையே ஒரு பொழைப்பா வச்சிருக்கிற உனக்கு.. கரிச்சான் பட்டிக்குள்ள புதுசா ஒரு புள்ள போகிறதைப் பார்த்த பின்னாலே அங்கேதானே வேலை வரும்ன்னு எனக்குத் தெரியாம போகுமாப்பு..? நாளைக்கு “டீ’ க்குடிக்க வருவியா.. மாட்டியா..?”
‘அதென்னண்ணே.. அப்படிச் சொல்லிப்புட்ட.. அடுத்த வாரம் சந்தைக்கு போகிறப்ப.. உன் “டீ’ க்கடையை எட்டிப் பார்க்காம போக எனக்கு கால் வருமா..?”
‘எப்படியோ.. நீ உன் ஊருக்குள்ளேயே இருந்து பிழைச்சா சரி.. விடிஞ்சதும் எந்திரிச்சு.. “டீ’ க்கடை பெஞ்சை தேய்க்க வந்து.. ஒரு “டீ’யை ஆத்தி ஆத்தி.. ஒரு நாள் முழுக்க குடிச்சுப்புட்டு.. பொழுது சாய தூக்கம் போட வீட்டுக்குப் போகிறவன் நீ.. வெட்டியா பொழுதை கழிக்க.. எங்கிட்டுத்தான் வரம் வாங்கிட்டு வ்நதியோ.. எப்படியும் உன் பெண்டாட்டி களையெடுத்தாவது உனக்கு கஞ்சியை ஊத்திப் புடறாள்ல..? அந்த தைரியம் உனக்கு..”
‘விடுண்ணே.. விடுண்ணே..”
அன்று பூராவும் அந்த டீக்கடைப் பேச்சுக்கு தான் தான் கதாநாயகி ஆகப் போகிறோம் என்பதை உணராதவளாக.. அந்தப் பெண் கரிச்சான்பட்டியை நோக்கிப் போய் கொண்டிருந்தாள்..
பாதையின் நடுவில் பெரிய பாலம் ஒன்று வந்தது.. அதன் அடியில் ஆறு ஒன்று ஓடிக் கொண்டிருந்தது.. அதன் நீர்பசையுடன் கூடிய காற்று அவளது மேனியைத் தழுவ.. அவள் இதமாக உணர்ந்தாள்..
கையிலிருந்த பெட்டிகளையும்.. தோளில் மாட்டியிருந்த பைகளையும் பாலத்தின் ஓரமாக வைத்து விட்டு.. கைகளை உதறி.. வலியை ஓட்டியபடி.. பாலத்தின் விளிம்புக்குச் சென்று எட்டிப் பார்த்தாள்..
ஆற்று நீர் ஸ்படிகம் போல.. காலை வெயிலில் மின்னியது..
அவள் மனதில் பாடல் தோன்றியது..
‘புத்தம் புதுக் காலை…
பொன்னிற வேளை..
என் வாழ்விலே…
தினந்தோறும் பாடும்…
சுகராகம் கூடும்….
இனி.. நாளும்.. ஆனந்தம்…”
வாய்விட்டு.. மனம் விட்டு பாடியபடி திரும்பியவள் திகைத்து நின்றாள்..
டாடாசுமோ வண்டி ஒன்று பாலத்தின் மீது நிற்க… அதன் மீது சாய்ந்து.. ஒரு காலை மடித்து.. இருகைகளையும் மார்புக்கு குறுக்காக கட்டி.. அவளையே பார்த்தபடி நின்றிருந்தான் அவன்..
முதல் பார்வையிலேயே அவனது கம்பீரமான தோற்றம் அவள் மனதில் பதிந்து விட்டது..
அந்தப் பக்கத்து மண் வாசனையை உணர்த்தும்.. மாநிறத்தில்.. கருமையான.. அடர்த்தியான தலைமுடி காற்றில் அலைபாய.. அடர்ந்த மீசையுடன்.. உயரமாக.. கட்டுக் கோப்பான உடலுடன் நின்றிருந்தவனைப் பார்த்து.. அவள் மனம் அலை பாய்ந்தது..
“வாவ்.. ௭ இஸ் வெரி Nயுன்ட்சம் ‘
அவளது பார்வையில் தென்பட்ட சுவராஸ்யத்தை அவனும் கவனிக்கவே செய்தான்.. சிறு மின்னல் அவன் கண்களில் தோன்றி மறைந்தாலும்.. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மிதப்பாக அவளைப் பார்த்து புருவங்களை உயர்த்தினான் அவன்..
‘யாரு நீங்க.. உங்களுக்கு என்ன வேனும்..?”
“என்ன திமிர்..?’ என்று தான் அவளுக்கு முதலில் தோன்றியது.. முன்பின் தெரியாத பெண்ணிடம் இவ்வளவு திமிராய் பேசுகிறானே என்று மனதிற்குள் கொதித்துப் போனாள்..
அவளுக்குத் தெரியாது.. அது.. அந்த மண்ணுக்கே உரிய “தெனாவெட்டு’ என்பது..
‘நான் யாராயிருந்தா உங்களுக்கென்ன..? அதென்ன பெரிய சக்கரவர்த்தியப் போல.. உங்களுக்கு என்ன வேனும்ன்னு ஒரு கேள்வியைக் கேட்கறீங்க.. எனக்கு இந்த ஊரே வேணும்ன்னு நான் கேட்டால் என்ன செய்வீங்க..? எனக்கு எழுதிக் கொடுத்து விடுவீங்களா..?”
அவள் படபடவென்று பேசிய விதத்தில் அவன் விழிகளில் ஓர்விதமான ரசனை உதயமானது..
‘ஊருக்கு புதுசா..?” என்று வினவினான்..
அவளது பேச்சுக்கு பதில் சொல்லாமல் அவன் பேசிய விதத்தைக் கண்டு அவளது கோபம் இன்னும் அதிகமானது..
‘அதைப் பற்றி உங்களுக்கென்ன..?”
‘எந்த ஊர்..?”
‘உங்களுக்கு அதைச் சொல்லனுமென்ற அவசியமில்லை..”
‘அதனாலதான் உங்களுக்கு என்னைத் தெரியலை..”
‘நீங்க என்ன இந்த ஊருக்கே கிங்கா..?”
‘யார் வீட்டுக்குப் போகனும்..?”
‘நிச்சயமாய் உங்க வீட்டுக்கு போகலை.. போதுமா..?”
அவளுக்குத் தெரியாது.. அவள் அவன் வீட்டுக்குத்தான் போகப் போகிறாள் என்பது..
அது தெரியாமல் அவள் அவனோடு மோதிக் கொண்டிருந்தாள்.. அவனுக்கு அவளது அந்தக் கோபம் பிடித்துப் போய் விட்டது.. அவளுடன் இன்னும் கொஞ்ச நேரம் வார்த்தையாடினால் என்ன என்ற ஆர்வம் அவனுக்குள் உதயமானதை ஓர்வித ஆச்சரியத்துடன் உணர்நதான் அவன்..
‘நீங்க வந்தாலும் எங்க வீட்டிலே இடமில்ல..”
‘ஓஹ்ஹோ..”
‘ஆமாம்.. வீடு நிறைய கசகசன்னு ஆளுக இருப்பாங்க.. அதனால.. உங்களை என் வீட்டுக்கு விருந்தாளியாய் கூப்பிட்டுக் கொண்டு போகும் உத்தேசம் எனக்கு இல்லை.. போதுமா..?”
என்னவோ.. அவள்.. அவன் வீட்டுக்கு விருந்தாளியாத்தான் வருவேன் என்று அடம் பிடிப்பதைப் போலவும்.. அவன் அதை நிராகரிப்பதைப் போலவும்.. அவன் பேசிய விதத்தில் அவள் பல்லைக் கடித்தாள்..
‘நீங்க அழைத்தாலும்.. உங்க வீட்டுக்கு விருந்தாளியாய் ஒரு நாளும் நான் வர மாட்டேன்… யு நோ.. கரிச்சான் பட்டியிலே.. சிதம்பரநாதன்னு பெரிய பண்ணையார் ஒருவர் இருக்கிறார்..”
இதைக் கேட்ட சிதம்பரநாதனின் மூத்த மகனாகப் பிறந்ததிருந்த அவனது கண்களில் வியப்பு வந்து போனது..
“யார் இந்தப் பெண்? அப்பா பெயரைச் சொல்கிறாளே’
‘ஆமாம்.. இருக்கிறார்.. அவருக்கென்ன…?”
‘அவருக்கு எதுவாக இருந்தால் உங்களுக்கென்ன..?”
“அது சரி.. அப்பனுக்கு எதுவாக இருந்தாலும் பிள்ளையை அது பாதிக்காதா.. ? உனக்குத் தெரிந்தது இவ்வளவுதானா….’
‘என்னங்க.. இப்படிச் சொல்லிட்டிங்க.. எங்க ஊரு பெரிய பண்ணையாருக்கு.. ஏதாவது ஒன்னுன்னா.. எங்க மனசு அதைத் தாங்குமா..?”
அவன் கண்களில் தெரிந்த அப்பட்டமான கேலியைக் கண்டு அவள் வெகுண்டாள்..
‘ஹலோ..”
அவளது அழைப்பில் அவன் அவள் கையிலிருந்த செல்போனை பார்த்தான்..
‘போனை காதில் வைக்காம.. கையில் வைத்துக்கிட்டு ஹலோன்னு சொல்றீங்களே..”
‘என்ன மிஸ்டர்.. கேலி செய்கிறீங்களா..?”
‘நான் எதுக்குங்க உங்களை கேலி செய்யப் போகிறேன்..? நீங்க என்ன.. எனக்கு அத்தை மகளா..? இல்லை மாமன் மகளா..?”
‘அத்தை மகளா ..மாமன் மகளா.. இருந்தால் உடனே கேலி செய்து விடுவீங்களா..?”
‘ஆமாம்.. அதுதானே எங்க ஊரு வழக்கம்..? முறைப் பெண்ணை சைட் அடிக்கலேன்னா எப்படி..?”
‘ஓஹ்ஹோ.. நான் உங்க முறைப் பெண்ணில்ல.. நீங்க உங்க வேலையைப் பார்த்துக்கிட்டுப் போங்க..”
‘நீங்களும் உங்க வேலையைப் பார்க்கப் போனால்.. எனக்கும் என் வேலையைப் பார்க்கப் போக வசதியாக இருக்கும்..”
‘எனக்கும் .. உங்க வேலைக்கும்.. என்னங்க சம்மந்தம்..?”
‘இருக்கே.. அதை இப்பச் சொன்னா நல்லாயிருக்காது..”
‘வேற எப்பச் சொல்லப் போகிறீங்க..?”
‘நீங்க பெரிய பண்ணையார் பெயரைச் சொன்னீங்களே.. எதுக்குச் சொன்னீங்க..?”
‘இதென்னங்க வம்பாப் போச்சு.. நான் அவர் வீட்டுக்குத்தான் போகனும். அதனால் சொன்னேன்.. போதுமா..?”
அவனுக்கு அந்த விவரம் போதவில்லை.. அவள் எதற்காக அவர்களின் வீட்டுக்கு வருகிறாள் என்ற யோசனையுடன் அவளைப் பார்த்தான்..
Reviews – Puthiya Poovithu Puthathu / புதிய பூவிது பூத்தது
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.