Chapter 03

0Shares

‘இன்னும் கேட்டு திறக்கலயே..’

எதிர் வீட்டுக் கேட்டை உற்றுப் பார்த்த வண்ணம் வீட்டை ஒட்டியிருந்த மரத்தோடு மரமாக சாய்ந்து நின்றான் வசந்தரூபன்.. அப்போதுதானே மரத்தின் நிழல் இருளோடு இருளாக அவனை மறைத்துக் காப்பாற்றும்.

‘என்னத்தப் பண்றா..? தூங்குமூஞ்சி..! இன்னும் தூங்கிக்கிட்டு இருக்காளா..?’

பேசாமல் காம்பவுண்டு சுவரேறிக் குதித்து.. எதிர் வீட்டின் ஜன்னல், குழாய் என்று ஏதாவது ஒன்றைத் தொற்றி.. மேலே ஏறி.. மாடியில் சயனித்திருக்கும் சித்ரலேகாவின் சயன அறையின் சாளரக் கதவுகளில் எட்டிப் பார்த்து தொலைக்காட்சி விளம்பரத்தில் வருவதைப் போல சைரனை ஒலிக்க விடலாமா என்ற யோசனை கூட அவனுக்கு வந்து தொலைத்தது..

‘அந்த விளம்பரத்துல வர்ற அப்பன், ‘ஏம்ப்பா ஏய், உனக்குத் தூக்கம் வரலையா..? உங்கப்பன இந்த பிராண்டு மெத்தய வாங்கிக் கொடுக்கச் சொல்லப்பா’ன்னு சொல்லிட்டுப் பேசாம போயிருவான்.. இந்த சித்திராவோட அப்பன் அப்படிப் போயிருவானா..?’

சித்ரலேகாவைப் பெற்ற சுந்தரம் அப்படிப் போகமாட்டார்..  அவர் வசந்த ரூபனை மரத்தில் கட்டி வைத்து பஞ்சாயத்தைக் கூட்டி வைப்பார் என்று ஏற்கனெவே இது போன்ற வசந்தரூபனின் அடிமன ஆசைகளை அறிந்து வைத்திருந்த சித்ரலேகா சொல்லியிருக்கிறாள்..

“அதையும் பார்த்துரலாம்டி..” சிலும்பிய வசந்தரூபனை..

“ஐயா.. சாமி.. கொஞ்சம் அடக்கி வாசிங்க.. இதில நீங்க வேற புதுப்பகையை ஆரம்பிச்சு வைச்சிராதீக.. உங்களுக்கு கோடி புண்ணியமாய் போயிரும்..” என்று தலைக்குமேல் கைகளை உயர்த்திக் கும்பிடு போட்டு வசந்த ரூபனின் கைகளைக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறாள்..

‘சித்ராங்கி..! செம ஆக்ட்டு கொடுப்பா..’

உதடுகளைச் சுழித்து மனதுக்குள் சித்ரலேகாவைக் கொண்டு வந்த வசந்த ரூபனுக்கு உடனே அவளைப் பார்த்து விட வேண்டும் போல தாபம் அதிகரித்தது.. தெருவைப் பார்த்தான்.. கிராமத்துத் தெருக்கள் எல்லாம் கருக்கல்லிலேயே விழித்து விடும்.. வீடு தோறும் வாசல் தெளிக்கும் சப்தமும் கூட்டிப் பெருக்கும் சப்தமும் கேட்க ஆரம்பித்து விடும்.. அதற்குள் சித்ரலேகா வந்து விடவேண்டுமே என்று இருந்தது அவனுக்கு.. அவளைப் பார்க்க வேண்டும் போல அவனுக்கு இருக்கும் தாபம் அவளுக்கு இல்லையா..?

எதிர்வீட்டைப் பார்த்தான்.. காம்பவுண்டு சுவரிலிருந்து நீண்டு சென்ற பாதையின் இரு பக்கமும் விளக்குகள் ஒளிர்ந்தன.. வீட்டு வாசலில் பத்து கார்கள் நிற்கும் அளவுக்குப் பெரிதான போர்டிகோ.. 

வசந்தரூபனின் வீடும் அது போன்றதுதான்.. சித்ரலேகாவின் வீட்டை விடவும் இவன் வீடு பெரிதாக இருக்கும்.. அவள் வீட்டு போர்டிகோவில் பத்து கார்கள் நின்றால் இவன் வீட்டுப் போர்டிகோவில் பனிரெண்டு கார்கள் நிற்கும்..

அந்தக் காலத்தில் வசந்தரூபனின் பாட்டனும், சித்ரலேகாவின் பாட்டனும் போட்டி போட்டுக் கொண்டு வீட்டைப் புதுப்பித்து வைத்திருந்தார்கள்.. அவர்கள் காலத்தில் ஆரம்பித்த பகையல்லவாம் இந்தப் பகை.. அதற்கு முன்னால் ராஜா, ராணி காலத்திலிருந்தே ஆரம்பித்திருக்க வேண்டும் என்று சித்ரலேகா கூறினாள்..

“நீ வேற.. எதுக்குப் பகை வந்துச்சுன்னு தெரியாம இதுக தலைமுறை, தலைமுறையாய் பயிர வளக்கறதைப் போல பகைய வளத்துக்கிட்டு உக்காந்திருக்குதுக..” அலுத்துக் கொண்டான் வசந்தரூபன்..

அப்படிப் பகையாளிகள் என்று இனம் காட்டப்படும் இரண்டு குடும்பங்களுக்கு மத்தியில் எதனால் பகை வந்ததென்று தெரியாத ஜென்மப்பகையிருக்க.. எதிர்வீட்டு வசந்தரூபனும் இந்த வீட்டுச் சித்ரலேகாவும் அந்த ஜென்மப் பகையை வளர்க்காமல் காதலை வளர்த்துக் கொண்டிருந்தார்கள்..

‘தளுக்கு முளுக்குன்னு அப்புடியே தக்காளிப்பழம் போல இருக்கா.. இவளக் காதலியா நினக்காம பகையாளியா நினைடான்னா எப்புடி நினைக்க முடியும்..?’

எதிர் வீட்டைப் பார்த்தான்.. வாசலில் ஒளிர்ந்த விளக்குகள் வீட்டுக்குள் எரிகின்றனவா என்று தெரியவில்லை.. சம்சயமாக இருந்தது..

‘வீட்டையா கட்டி வைச்சிருக்கானுக.. அடுக்கடுக்காப் பிரிச்சு.. இது முன்புற வராண்டா.. இது அதுக்கடுத்த நடை.. இது ஹாலு.. இது அந்தப்புரமான பின்புறம்ன்னுல்ல கட்டி வைச்சிருக்கானுக.. இதில எந்தப்புரத்தில விளக்கு எரியுதுன்னு வெளியில நிக்கிறவன் எப்புடிக் கண்டுபுடிப்பான்..?’

வசந்தரூபனின் வீடும் அதுபோன்ற ‘அடுக்கு’ மாளிகைதான்.. மாந்தோப்புக் கிராமத்தின் இணையற்ற இரண்டு பெருந்தனக் காரர்களின் வீடுகளும் எதிரெதிரே அமைந்திருக்க.. அவர்களுக்குள் பகைமை தலைமுறை, தலைமுறையாய் தொடர்ந்து கொண்டிருப்பது காலம் வகுத்த கட்டளை..

‘விதி வகுத்த விந்தைன்னு கூடச் சொல்லலாம்..’

வாழ்க்கை என்பது நதி போல ஓடிக் கொண்டிருக்க வேண்டாமா..? இப்படியா தேவையில்லாத பகையென்னும் குப்பைகளையும் கூளங்களையும் சுமந்து கொண்டிருப்பது..?

எதிர்வீட்டின் கதவு திறந்தது.. விளக்கு வெளிச்சத்தில் சித்ரலேகா தெரிந்தாள்.. வசந்தரூபனின் உடலில் உஷ்ணம் உண்டானது.. இரவுப் பொழுதின் குளிரையும் மீறிய வெப்பம் அவனது உடல் முழுவதும் பரவியது.. அவளை இழுத்து அணைத்து வாசம் பிடித்து, முகத்தோடு முகம் பதித்து முத்தமிடவேண்டும் போன்ற கிளர்ச்சியில் மரத்தை விட்டு விலகி நின்றான்..

‘இனி மரத்தக் கட்டிப் புடிக்க வேணாம்.. நான் கட்டிப் புடிக்க வேண்டிய அவ வந்துக்கிட்டு இருக்கா..’

சித்ரலேகா காம்பவுண்டை நோக்கிப் போன நடை பாதையில் கையில் வாளியுடன் அன்னநடை பயின்று வந்தாள்.. வசந்தரூபன் கடுப்பானான்..

‘இங்க ஒருத்தன் ஜாமக்கோழி, ஏய் கூவுதம்மான்னு ஜாமத்தில இருந்து காத்துக்கிட்டு இருக்கேன்.. மனுசனோட நிலம புரியாம இவ என்னடான்னா சாவகாசமா அன்னநட போட்டு வர்றா..’

வரட்டும் அவள்.. இருக்கிறது அவளுக்கு என்று சூளுரைத்தது அவனது வீர மனம்.. என்ன இருக்கிறது என்று எள்ளி நகையாடியது அவனது ஆழ்மனம்..

‘அவ வந்ததும் தண்டன கொடுக்கிறேன் பேர்வழின்னு இறுக்கிப் புடிச்சு ஒரு உம்மா தரப் போற.. அவ்வளவுதான..?’

ஆழ்மனதின் நகைப்பை அலட்சியப் படுத்தி விட்டு அவன் சித்திரலேகாவின் சித்திர நடையை ரசித்துக் கொண்டிருந்தான்.. அவள் அருகில் நெருங்க நெருங்க அவனது ரத்த நாளங்கள் தளபுள எனக் கொதிக்க ஆரம்பித்தன..

சித்திரலேகா சித்திரம் போல காம்பவுண்டு கேட்டை விரிய திறந்தாள்.. அவளது பார்வை இருளோடு இருளாக கலந்து ஒன்றியிருக்கும் வசந்தரூபனின் மீது படிந்தது.. அவனது கண்கள் மின்னின.. அவள் அவனைக் கண்டு பிடித்து விடுவாள் என்று அவனுக்குத் தெரியும்.. ஆனால் தெரியாததைப் போலப் பாவனை செய்வாள்..

அன்றும் அதைத்தான் செய்தாள்.. அவனைக் காணாததைப் போல அவளது கண்கள் அவனைத் தேடித் துழாவின..

‘நடிப்புக்காரி..’ அவளது நடிப்பை அவன் ரசித்தான்.

‘அப்புடியே.. அம்சலேகா போலவே அலப்பற பண்ணுவா..’

அம்சலேகா என்பவள் நாடக நடிகை.. அல்லிராணி வேசம் கட்டி அவள் மேடையில் நடை பயின்றால் தான் அர்ஜீனன் ஆகிவிட மாட்டோமா என்று அவனவன் ஏங்கிப் போவான் என்று கலாரசிகனாக சித்ரலேகாவிடம் சொல்லி விட்டு மாத்து வாங்கியிருக்கிறான் வசந்தரூபன்..

‘அவளுக்கு நான் ரசிகன்.. இவளுக்கு நான் புருசன்.. இது ஏன் இவளுக்குத் தெரிய மாட்டேங்குது..’

சித்ரலேகா அவன் மரத்தினடியில் இருப்பது தெரியாததைப் போல வாளியிலிருந்த தண்ணீரை அள்ளி வாசலைத் தெளிப்பதைப் போல அவன்மீது தெளித்தாள்..

“அடிங்..”

அவன் அவளது கையைப் பிடித்து இழுத்துக் கட்டியணைத்தான்.

0Shares

Reviews – Roopachithra Mamarkuyile / ரூபசித்ர மாமரக்குயிலே

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link