Chapter 04
“எதுக்குடி எம்மேல தண்ணிய அள்ளி வீசறவ..?”
“நீங்க மரத்தோட மரமா ஒட்டிக்கிட்டு நிப்பீகன்னு ஆரு கண்டா..?”
“ஆரும் காண வேணாம்.. நீ கண்டுக்கிட்டாப் போதும்டி..”
வசந்தரூபனின் சூடான முத்தங்கள் சித்ரலேகாவின் முகமெங்கும் பதிந்தன.. வெப்ப முத்தங்களின் ஈரத்தில் முகம் நனைய சித்ரலேகா தொய்ந்து அவன்மீது சரிந்தாள்.. தளிர்கொடியாய் சரிந்தவளைத் தாங்கிப் பிடித்து இறுக்கிக் கொண்டான் வசந்தரூபன்.. மணிக்கணக்கில் காத்திருந்த கோபம் பஞ்சாகப் பறந்து விடக் கிடைத்திருக்கும் மணித்துளிகளை வீணடிக்காமல் தேனுண்ணும் வண்டாக அவள்மீது கவிழ்ந்தான்.
தெருவை அடைத்துக் கொண்டிருந்த மரத்துக்கும் அவன் வீட்டுக் காம்பவுண்டின் கோட்டைச் சுவருக்கும் இடையிலிருந்த பகுதிதான் அவர்கள் இருள் பிரியாத கருக்கல்லில் சந்தித்துக் கொள்ளும் நந்தவனம்..!
அதிகாலை நந்தவனம் இது என்றால் அந்தியில் சந்தித்துக் கொள்ளும் நந்தவனம் மாந்தோப்பு வனம்..! ஆற்றிலே நீந்தி விளையாட சித்ரலேகாவுக்கு வீட்டில் அனுமதி கிடைத்திருந்தது.. சொர்ணம் அதற்குத் தடை சொல்ல மாட்டாள்.. மாந்தோப்பைக் கடந்துதான் ஆற்றுக்குப் போக வேண்டும்.. இவள் தோழிகளுடன் செல்லாமல் தனித்துக் கிளம்பி மாந்தோப்புக்குள் நுழைந்து விடுவாள்.. அங்கே காத்திருக்கும் வசந்தரூபன் இவளை அள்ளிக் கொள்வான்.. இவர்களது சரச லீலைகளை உச்சி மரக்கிளையில் உட்கார்ந்து பார்க்கும் மாமரக்குயில் அப்படியே தனது ஜோடிக்கிளியிடம் அரங்கேற்றச் செல்லும்.. அது ஜாதியை முன்னிருத்தி முகத்தைத் திருப்பிக் கொள்ளும்..
“மரத்த ஏன் கட்டிப்புடிச்சுக்கிட்டு நின்னீகளாம்..? மரமா உங்க பொண்டாட்டி..?”
“நீதாண்டி என்னோட பொண்டாட்டி..”
“நெனப்புத்தான்..”
“ஒனக்கு நெனப்பில்லயா..?”
“இல்லாமத்தான் இப்புடிக் கருக்கலில வாசத் தெளிக்க வந்திருக்கேனா..?”
“கருக்கல்லில வர்றதை பெரிசாச் சொல்றியே.. ஜாமத்தில வந்து நிக்கிறவன என்னன்னு சொல்லுவ..?”
“என் புருசன்னு சொல்லுவேன்..”
“ஏய்ய்..”
அவளோடு பின்னிப் பிணைந்த வசந்தரூபனின் கைகள் அவளது எழும்புகளை நொறுக்கின.. சுகமான வலியில் அவள்..
“முரட்டு மச்சான்..” என்றாள்..
“சித்ரா..”
“ம்ம்ம்…”
“முடியலடி.. இப்புடி ஆருக்கும் தெரியாம எத்தன நாள்தான் ஒளிஞ்சு மறஞ்சு கொஞ்சிக்கிறது..? எனக்கு நீ வேணும்டி..”
“எனக்கு மட்டும் நீங்க வேணாமா..?”
“அப்ப சரின்னு சொல்லு..”
“எதுக்காம்..?”
“நம்ம கல்யாணத்துக்குத்தான்..”
“என்னமோ நானு சரின்னு சொன்னதும் ‘டும் டும்’ மேளத்தக் கொட்டிடறதப் போலயில்ல பேசறீக..”
“கெட்டி மேளம் கொட்ட மாட்டேனா..?”
வசந்த ரூபனின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் மௌனித்தாள் சித்ரலேகா.. குளிருக்கு இதமாக அவனது மார்பில் புதைந்திருந்த அந்தத் தருணம் இன்பம் துய்ப்பதாக இருந்தது.. அவனது சட்டையின் பொத்தானை திருகியவளின் கைபிடித்துத் தன் கைக்குள் இறுக்கிக் கொண்டவனிடம் கோபம் தெரிந்தது..
“பதில் சொல்லுடி..” அவன் உறுமினான்..
“என்னத்தப் பதில் சொல்லச் சொல்றீக..?”
“என்னோடு வா..”
“எங்கே..? ஓடிப் போறதுக்கா..?”
“சித்ரா..”
“இந்த ஊருக்குள்ள தல நிமிர்ந்து பெருந்தனக்கார வீடுகளா நிக்கிற நம்ம குடும்பம் ரெண்டும் நம்மளப் புள்ளயாப் பெத்துக்காக தல குனிஞ்சு நிக்கனுமா…? அதுக்கா நாம பொறப் பெடுத்திருக்கோம்..?”
“வேற என்னதாண்டி செய்யச் சொல்ற..? உன்னப் பெண் கேட்டு வரவான்னு கேட்டா அதுக்கும் வேணாங்கிற..”
“நீங்க தனிச்சு வந்து பொண்ணுக் கேட்டா.. இந்தாக் கட்டிக்கன்னு எங்க வீட்டில என்னக் கட்டிக் கொடுத்துருவாகளா..?”
“எங்க வீட்டு ஆளுகளுக்கு விசயம் தெரிஞ்சா.. அதுக்கென்னடா மகனே.. பகையாளி வீட்டில உனக்காக நாங்க பொண்ணு கேக்கறோம்ன்னு வரிஞ்சு கட்டிக்கிட்டுக் கிளம்பி வந்திருவாகளா..? விசப் பாட்டிலக் கையில தூக்கிக்கிட்டு வேற பொண்ணக் கொண்டு வந்து நிப்பாட்டிக் கட்டுடா தாலியன்னு மிரட்ட ஆரம்பிச்சிருவாகடி..”
“எங்க வீட்டிலயும் அந்தக் கததான் நடக்கும்..”
“தெரியுதில்ல.. இம்புட்டு வித்தாரம் பேசறவ என்கூடக் கிளம்பி வர்றதுக்கு என்ன..? தாலியக் கட்டி, மாலையும் கழுத்துமா வந்து நின்னா இதுக வீறாப்பு ஓடிப் போயிரும்டி சித்ரா..”
“அதுக்கு முன்னால ரெண்டு வீட்டோட மானம், மரியாதை ஓடிப் போயிரும்..”
“நீ இதையே சொல்லிப் பயமுறுத்து..”
“நம்ம ஊரு நடப்ப நான் சொல்லிட்டேன்.. ரெண்டு வீட்டோட மானம், மரியாத காத்தில பறக்காம நம்ம கல்யாணம் நடக்கிறதுக்கு என்ன வழின்னு நீங்கதான் கண்டு பிடிக்கனும்..”
சித்ரலேகா சொல்லிக் கொண்டிருக்க.. தெருவில் பால் பண்ணையில் வேலை பார்க்கும் பரந்தாமன் சைக்கிளில் போனான்.. இவர்கள் பேச்சை நிறுத்தி மரத்தின் மறைவில் சரிந்து கொண்டார்கள். அவனது சைக்கிளில் இருந்த எப்.எம் ரேடியோ..
“கண்டேன் கண்டேன் நல்ல வழி – அது
காதலனுடனே செல்லும் வழி…”
என்று பாடிக் கொண்டே போனது..
“கேட்டியில்ல..” வசந்தரூபனின் இதழ்கள் அவளது காதோர மடல்களை வருடியது.. சிலிர்த்துப் போன சித்ரலேகா அவனது முகத்தைத் தள்ளி விட்டு..
“கேட்டுச்சு.. கேட்டுச்சு..” என்றாள்..
“பாட்டே நமக்கு வழி சொல்லுதுடி..” என்றான் வசந்தரூபன்.
“ஆகக்கூடி உருப்படியா ஒருவழிய நீங்க கண்டு பிடிக்க மாட்டிகன்னு சொல்லுங்க..”
“வச்சுக்கிட்டாடி நானு வஞ்சன பண்றேன்..?”
“‘வச்சுக்கிட்டு’ங்கிற வார்த்தய ரசிச்சுச் சொல்றாப்புல இருக்கு..”
“இதில ரசிச்சுச் சொல்றதுக்கு என்னாடி இருக்கு..?”
“நீங்கதான் கலாரசிகராச்சே.. நீங்கதான் சொல்லனும்..”
‘கலா ரசிகனா..?’
அப்போதுதான் அவள் எங்கே வருகிறாள் என்று புரிந்தது வசந்த ரூபனுக்கு.. அவன் ‘வைச்சுக்கிட்டு’ என்று சொல்லி விட்டானாம்.. உடனே அவனது காதலியின் புத்தி அம்சலேகாவிடம் பாய்ந்து விட்டது..
‘எதுக்கும் எதுக்கும் முடிச்சுப் போடறா..’
வசந்தரூபன் அவளது முகம் பற்றித் திருப்ப அவள் சினந்து அவன் கையைத் தட்டி விட்டாள்.. இவனோ தொட்ட கையை விலக்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தவனாக அவன் கையைத் தட்டி விட்ட அவளது கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டு விடமாட்டேன் என்று வம்பு செய்தான்..
“விடுங்க..” அவள் திமிறினாள்..
“விட முடியாதுடி.. என்னடி பண்ணுவ..” முரட்டுத்தனமாக அவளது இதழோடு இதழ் பதித்தான்..
அவளுக்குள் ஏதோ நிகழ்ந்தது.. மெல்ல அவளது கோபம் அடங்க, அவனுக்குள் அவள் அடங்கிக் கொண்டிருந்த போது தொலைவில்
“மதுர.. மருக்கொழுந்து வாசம்
என் ராசாவே.. உன்னுடைய நேசம்..”
என்ற கர்ண கடூரமான பாடல் சத்தம் கேட்டது..
“மருக்கொழுந்து வர்றா..”
பதறிப் போன சித்ரலேகா வசந்தரூபனிடமிருந்து தன்னைப் பிய்த்தெடுத்து வாசலுக்குப் போவதற்குள் வந்து விட்ட மருக்கொழுந்து..
“என்னா பாப்பா.. அங்கிட்டு இருந்து வர்ற..?” என்று சந்தேகத்துடன் கேட்டபடி மரத்தை உற்றுப் பார்த்தவள் வசந்த ரூபனைப் பார்த்து விட்டாள்..
‘ஆத்தாடி..’ சித்ரலேகாவிற்கு நெஞ்சை அடைத்தது..
மூளப் போகும் பிரளயத்தை நினைத்து அவள் சிலையானாள்..
Reviews – Roopachithra Mamarkuyile / ரூபசித்ர மாமரக்குயிலே
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.