Chapter 05

0Shares

பொத்திப் பொத்திக் காதலை வளர்த்து வந்தது இதற்காகத்தானா..? இனி இரு வீட்டாரும் மோதிக் கொண்டு ‘வெட்டு, குத்து’ என்று இறங்கி விடுவார்களே.. ஊரே இரண்டு பட்டுப் போகுமே.. ஊர்ப் பஞ்சாயத்து கூடி அவளையும், வசந்தரூபனையும் எதிரும் புதிருமாக நிறுத்தினால் அவள் என்ன செய்வாள்..? வசந்தரூபன் வேண்டும் என்று ஊர் கூடிய சபையில் அவளால் சொல்ல முடியுமா..? அப்படிச் சொல்வதைப் கேட்ட பின்னர் அவளது குடும்பத்தினர் உயிரோடு இருப்பார்களா..?

அப்படியே பூமி பிளந்து அதற்குள் புதையுண்டு விட மாட்டாளா என்று ஏங்கிப் போனாள் சித்ரலேகா.. அரை மயக்க நிலைக்குப் போய்க் கொண்டிருந்தவளுக்குள் உயிர் நீரை வார்த்தது வசந்தரூபனின் குரல்..

“ஏய்ய்.. சுந்தரத்தின் மகள்ன்னா உந்தலயில ரெண்டு கொம்பு மொளச்சிருக்குன்னு நெனப்பான்னு கேட்டாப் பதிலச் சொல்லாம இந்த மொற, மொறக்கிற.. என்னா..? கேக்கிறதுக்கு ஆளில்லங்கிற நெனப்பா..? சிவானந்தத்தோட மகன் இருக்கிறேன்.. பாத்துத் தண்ணியத் தெளிச்சுப் பழகு..”

அவன் என்னவோ கதை விடப் போகிறான் என்பதைப் புரிந்து கொண்ட சித்ரலேகா அவன் விட்ட கதை என்ன என்பதைக் கேட்டுப் புரிந்து கொள்ளக் காதைத் தீட்டிக் கொண்டு காத்திருந்தாள்.. அவன் ‘பழகு’ என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்துப் பேச்சை முடிக்க இவள்..

“அதுக்கென்ன..” என்று அவனைப் போலவே அழுத்தம் கொடுத்து அவன் விட்ட கதையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்..

வசந்தரூபன் போட்ட சத்தத்தில் வாயடைத்துப் போன மருக்கொழுந்து சந்தேகத்தை கைவிட்டு சண்டைக்குத் தயாரானாள்.

“எருமமாடு போல இருட்டில நின்னா ஆருக்குக் கண்ணு தெரியும்..? வாசத் தெளிக்க வீசின தண்ணி மேலே பட்டிருச்சுன்னா சிலுப்பி விட்டுப் போயிரனும்.. சும்மா சிலுப்பிக்கிட்டு சண்டைக்கு வரக் கூடாது..”

“வந்தா..?”

“எங்களுக்கும் வாயிருக்கு.. சிவானந்தம் மகனுக்கே வாயி இந்தப் பக்கமும், அந்தப் பக்கமுமா இப்புடிக் கிழிஞ்சா சுந்தரத்தோட மகளுக்கு எம்புட்டுக் கிழியும்..?”

“அதான் தெரியுதே..”

“என்னா தெரியுது..?”

“வாய் நீட்டமுன்னு தெரியுது..”

“அத நீரு சொல்லக் கூடாது..”

“வேற ஆரும்மா சொல்லனும்..?”

“இந்த ஊரு சொல்லனும்..”

“அது என்ன சொல்லுது..?”

“சுந்தரம் மகள அடக்க ஒடுக்கமா ‘பசு’ப் போல வளத்து வைச்சிருக்காரு.. சிவானந்தம்தான் மகன கோவில் காள மாதிரி ரௌடி வேசம் கட்டிக்கிட்டு ஊரச் சுத்தி அலய விட்டிருக்காருன்னு தான் சொல்லுதே..”

“எங்கிட்டச் சொல்லலையே..”

“எங்கிட்டச் சொல்லுச்சே..”

சித்ரலேகா தாவணியை இழுத்துக் செறுகிக் கொண்டு சண்டை வளர்த்துக் கொண்டிருக்க என்ன, ஏதென்று தெரியாமலே சேலையை வரிந்து கட்டிக் கொண்ட மருக்கொழுந்து..

“இந்தா பாருங்க தம்பி.. உங்ககிட்ட ஊரு சொல்லலைன்னா ஊரப் போயி கேளுங்க.. எங்க பாப்பாகிட்ட வாய் வளக்காதீக.. சொல்லிப்புட்டேன்..” என்று போர் முரசு கொட்டி விட்டு சித்ரலேகாவிடம் ரகசியமாக..

“என்ன பாப்பா விசயம்..?” என்று கேட்டாள்..

“நீயே கேளு மருக்கொழுந்து.. நான் வாசத் தெளிக்க வாளியில தண்ணியக் கொண்டாந்தேனா..?”

“கொண்டாந்த..”

“தண்ணிய அள்ளி.. வாசத் தெளிச்சேனா..?”

“தெளிச்ச..”

“தெளிச்ச தண்ணி இந்தக் கருவாயன் மேல பட்டிருச்சாம்.. சண்டைக்கு வர்றாரு..”

‘கருவாயனா..?’

அந்த அடைமொழியில் மருக்கொழுந்துக்கே பலத்த ஆட்சேபனை இருந்தது.. சித்ரலேகா சுண்டி விட்டால் ரத்தம் வரும் அளவுக்குச் செக்கச் செவேல் என்ற நிறத்தில் இருப்பவள்.. வசந்தரூபன் அவளை விட நிறத்தில் சற்றுக் குறைவாக இருப்பான்..

‘அதுக்குப் போயி நம்ம பாப்பா ‘கருவாயன்’னு சொல்லிருச்சே..’

ஆற்றாமையாக இருந்தாலும் அதை வெளிக்காட்டி விட முடியுமா..? மருக்கொழுந்து என்ன சிவானந்தம் வீட்டின் வேலைக்காரியா..? சுந்தரம் குடும்பத்தின் விசுவாசம் மிக்க வேலைக்காரி.. சித்ரலேகா வெள்ளைக் காக்கா பறக்குது என்றால் இல்லை பாப்பா என்று சொல்லாமல் தலையை ஆட்டி ஆமோதிக்கக் கடமைப் பட்டவள்.

“ஏந்தம்பி.. எங்க பாப்பாதான் வாசத் தெளிக்குதுன்னு தெரியுமில்ல.. தள்ளி நிக்க வேண்டியதுதான..?” என்றாள்.

“நீயென்ன மருக்கொழுந்து இப்புடி நாயம் கேக்கிற..? இங்க ஏன் நிக்கறாருன்னு கேக்கறேன்..” சித்ரலேகா எகிறினாள்..

“இது எங்க வீட்டுக்கும் வாசல்தாம்மா.. உங்க வீட்டுக்கும் எங்க வீட்டுக்கும் பொதுவான தெரு.. நான் இங்கயும் நிப்பேன்.. அங்கயும் நிப்பேன்.. எங்கயும் நிப்பேன்..” வசந்தரூபன் தன் பங்குக்கு குதித்தான்..

“அப்பத் தண்ணி மேல பட்டா ஏன்னு கேக்கக் கூடாது.. எருமமாட்டு மேல மழ பெஞ்சாப்புல தட்டி விட்டுட்டுப் போயிரனும்..” சிலுப்பினாள் சித்ரலேகா..

“தட்டி விட்டுப் போற பரம்பரயில்ல எங்க பரம்பர..”

“ஆ.. மா.. பெரிய்ய்ய்ய ராஜ பரம்பர…”

“ஜமின் பரம்பர..”

“நாங்களும் அதே ஜமீ..ன் பரம்பரதான்..”

“எதுக்கு இந்த இழுவ..?”

“ஆடற ஆட்டத்தைத் தாங்க முடியல சாமி..”

சண்டை வலுக்க ஆரம்பித்தது.. அதற்குள் சிவானந்தத்தின் வீட்டு வேலைக்காரியான பொன்னம்மா வாசல் தெளிக்க வந்துவிட, சண்டை இடம் மாறி மருக்கொழுந்தும், பொன்னம்மாவும் குடுமிப்பிடி சண்டை போட ஆரம்பித்து விட்டார்கள்..

“நீங்க போங்கய்யா வீட்டுக்குள்ள.. உங்க தரத்துக்கு நீங்கள்ளாம் வாசல்ல நிக்கலாமா..?” பொன்னம்மா வசந்தரூபனைக் கிளப்பிவிட..

“ஏன் பாப்பா.. அவுக தரத்துக்கு உன் தரம் என்ன குறைச்சலா..? நீ மட்டும் வாசப்பக்கம் நிக்கலாமா..? வீட்டுக்குள்ள போ பாப்பா.. நான் பார்த்துக்கறேன்..” என்று மருக்கொழுந்து சித்ரலேகாவை வீட்டுக்குள் அனுப்பி வைத்து விட்டாள்..

‘தப்புச்சேன்..’ நிம்மதிப் பெருமூச்சுடன் வீட்டுப் பக்கம் திரும்பிய சித்ரலேகாவை வசந்தரூபனின் சீழ்க்கையொலி திரும்பிப் பார்க்க வைத்தது.. அவன் ரகசியமாகக் கண்ணடித்து வழியனுப்பி வைத்தான்..

‘இவன் இருக்கானே..’

அவனது சமயோசித புத்தியை மனதுக்குள் மெச்சியபடி வீட்டைப் பார்த்து ஓட்டம் பிடித்தாள் சித்ரலேகா..

“எதுக்குடி இந்த ஓட்டம் ஓடி வர்றவ..?” மகளை சொர்ணம் பிடித்துக் கொள்ள..

“வாசல்ல மருக்கொழுந்துக்கும் பொன்னம்மாவுக்கும் சண்டைம்மா..” என்று என்னவோ இவளுக்கும் அந்தச் சண்டைக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை என்பதைப் போல பச்சைக் குழந்தையாக முகத்தை வைத்துக் கொண்டு வாசல் பக்கம் கை காட்டினாள்..

“சண்டையா..?”  அடுப்பில் வைத்திருந்த பால் பாத்திரத்தை மறந்து விட்டு சாந்தா வாசல்பக்கம் தாவப் போனாள்..

“அதான் மருக்கொழுந்து பொன்னம்மாவோட குடுமியைப் புடிச்சுக்கிட்டு இருக்காள்ல..? அவ வீட்டு வேலைல முன்ன பின்ன இருந்தாலும் குடுமிப்பிடி சண்டையில கெட்டிக்காரி.. சண்டைய முடிச்சுட்டு வந்து அவளே விபரம் சொல்லுவா.. நீ காபித் தண்ணியக் கலக்கிற வேலையைப் பாரு..” என்று சொர்ணம் அவளைத் தடுத்து நிறுத்தி விட்டாள்..

சொர்ணம் சொன்னதைப் போலவே குடுமிப்பிடி சண்டையைப் போட்டு முடித்து விட்டுத் தலைவிரி கோலமாக மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க வீட்டுக்குள் வந்த மருக்கொழுந்து..

“வாசத் தெளிக்க வீசின தண்ணி மேல பட்டுருச்சாம்மா.. அதுக்கு காடு காக்கிறா..” என்று விவரம் சொன்னாள்..

“அதுக்கா இம்புட்டுப் பேச்சு..?” சாந்தா மோவாயில் கை வைத்து நியாயம் கேட்டாள்..

ஆக மொத்தம் யார் தெளித்த தண்ணீர் யார்மீது பட்டது என்று யாருக்குமே தெரியவில்லை.. எல்லோருமே மருக்கொழுந்து தெளித்த தண்ணீர் பொன்னம்மாவின் மீது பட்டதினால் சண்டை வந்தது என்றே நினைத்தார்கள்..

0Shares

Reviews – Roopachithra Mamarkuyile / ரூபசித்ர மாமரக்குயிலே

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link