Chapter 06

0Shares

“மருக்கொழுந்தே அத மறந்து போயிட்டா..”

பொங்கிச் சிரித்தாள் சித்ரலேகா.. மாமரத்துக் கிளையில் கால்களைத் தொங்க விட்டு வாகாக அமர்ந்திருந்த வசந்தரூபன் அவளை இழுத்துத் தன் கை வளைவுக்குள் கொண்டு வந்தான்.. அவளது கழுத்தை அவனது கைகள் வளைத்திருக்க அவளது உச்சந்தலையில் முகவாயை ஊன்றி..

“ஊம்..” என்று கதை கேட்டான்..

“என்னத்தன்னு சொல்லுவேன்.. காலயில இருந்து நாயம் பேசறவ.. தண்ணிய அவதான் தெளிச்சதப் போலவே பேசிக்கிட்டு இருக்கா.. எனக்குத்தான் பதக்குபதக்குன்னு இருந்துச்சு..”

“எதுக்குப் பதக்கு பதக்குன்னு இருக்கனும்.. காலாகாலத்தில கல்யாணம் பண்ணிக்கிட்டா இந்தக் கோராமையெல்லாம் இல்லயில்ல..”

“ஏன் பேச மாட்டிக.. என்னவோ இவரு எனக்கு முறமாப்பிள போலவும் நானு இம்முன்னு ஒரு வார்த்த சொன்னவுடனே பொண்ணு கேட்டு வந்து பரிசம் போட்டுறப் போறதப் போலவும் இல்ல பேசிக்கிட்டு வர்றாரு.. போவிகளா..”

“எங்கேடி போகச் சொல்கிற..?”

“ஊம்..? நாடகக் கொட்டகைக்குப் போகச் சொல்றேன்.. அங்கதான உங்க மனசுக்குப் புடிச்சவ..

தங்க ஜரிகச் சேல..

எங்கும் பளபளக்க

தனியாக வந்தேனே

ன்னு பாட்டுப் பாடிக்கிட்டே வருவா..?” 

சித்ரலேகா எரிச்சலுடன் சொல்லி விட்டு விலக யத்தனித்தாள்.. வசந்தரூபன் தன் கால்களினால் அவளை வளைத்துச் சிறை படுத்தினான்.. சித்ரலேகாவின் எரிச்சல் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டது.. அவனது முரட்டுக் கால்களின் வலிமையில் சிக்கியவளால் விடுபட முடியவில்லை..

“விடுங்க..” என்று சிணுங்கினாள்..

“விட முடியாதுன்னு சொல்லிட்டேனில்ல..”

“எங்கிட்ட இந்த வித்தாரம் பேசறது.. பொழுது சாய்ஞ்சவுடனே மொத ஆளா நாடகக் கொட்டாயிக்குள்ள போயி உக்காந்துடறது..”

“ஏய்ய்.. அதுவேற.. இதுவேறடி..”

“இப்புடியே சொல்லி என்ன ஏய்க்கப் பாக்கறிகளா..? அது வேற, இது வேறன்ன என்ன அர்த்தம்..?”

“இதில போயி விலாவாரியா என்னத்தடி அர்த்தம் சொல்றது..?”

“நான் சொல்லவா..?”

சித்ரலேகா பின்னலைச் சுண்டியபடி கேட்டாள்.. ஏதோ எக்குத் தப்பான அர்த்தத்தைச் சொல்லப் போகிறாள் என்பதை புரிந்து கொண்ட வசந்தரூபன் அவளது முகத்தைத் தன்பக்கமாகத் திருப்பித் தாஜா செய்ய முனைந்தான்.. சித்ரலேகா இளகவில்லை.. அவனது கையைத் தள்ளி விட்டபடி..

“அது வேறன்னா.. அவளோட உங்களுக்கு இருக்கிற உறவு வேற மாதிரின்னு அர்த்தம்..” என்றாள்..

“உறவா..?” தலையில் அடித்துக் கொண்டான் வசந்தரூபன்..

“ஏண்டி உனக்குப் புத்தி இப்படிப் போகுது..? அவளோட நடிப்புக்கு நான் ரசிகன்டி.. அம்புட்டுத்தேன்..”

“ஹ.. இதெல்லாம் நம்பறாமாதிரியா இருக்கு..?”

“நம்பாத மாதிரியா இருக்கு..?”

“ஆமாங்கிறேன்..”

“ராகம் இழுக்காத.. நம்ம ஊருக்கு நாடகக் கொட்டாயி வந்து ரெண்டு மாசமாகுது.. இந்த ரெண்டு மாசத்தில அவள நானு தனிப்பட்ட முறயில பாத்தேன், பேசினேன்னு சொல்லு பாப்போம்..”

“அதான் கொட்டாயி வந்த நாளில இருந்து மொத வரிசயில, மொத ஆளாப் போயி உக்காந்தாகிறதே.. இது பத்தாதா..? தனியா வேற சந்திக்கனுமாக்கும்..? ஐயா மனசில அப்புடி ஒரு நினப்பிருந்தா.. கருக்கல்லில அவ வீட்டு வாசலில போயி காவக் காக்க வேண்டியதுதான..? இல்ல மத்தியானத்துக்கு மேல மாந்தோப்பில சந்திக்க வேண்டியதுதான..?”

“தெரியுதில்ல.. இதெயல்லாம் உன்னப் பாக்கத்தான் நான் செய்யறேன்னு.. சொந்த வீட்டு வாசலிலேயே திருட்டுப்பய போல மரத்துக்குப் பின்னாடி ஒளிஞ்சுக்கிட்டு நிக்கறேனில்ல..? அத நெனச்சுப் பாருடி சித்ரா..”

வசந்தரூபன் கெஞ்சிய கெஞ்சலில் கொஞ்சமாக மலையிறங்கினாள் சித்ரலேகா.. அவனது பிடியினில் இருந்து விடுபட திமிறியவள் அதை கைவிட்டு அவனது முழங்காலில் முகம் புதைத்தாள்.. உரிமையான அந்தச் செய்கையில் மனம் நெகிழ்ந்த வசந்தரூபன் அவளது தலைமீது தலை வைத்து சாய்ந்து கொண்டான்.

“என்னை விட்டால் யாருமில்லை..

கண்மணியே..! உன் கையணைக்க..

உன்னை விட்டால் வேறொருத்தி..

எண்ணமில்லை.. நான் காதலிக்க..”

பிசிறில்லாமல் ஒலித்த அவனது குரலில் மனம் கவரப் பட்டவளுக்கு இது போலத்தானே அம்சலேகாவின் பாடல் அவனைக் கவர்ந்திருக்கும் என்ற பீதி உண்டானது..

“பாட்டுப்பாடி என்ன மயக்கிராலாம்ன்னு மட்டும் நினைச்சிராதீக மச்சான்.. ஆரு மனசில என்ன நெனப்பிருக்குன்னு ஆருக்குத் தெரியும்..?” என்று கண் கலங்கினாள்..

அவனது முழங்காலை நனைத்த அவளது கண்ணீர் துளிகளில் துணுக்குற்ற வசந்தரூபன் மாமரக் கிளையை விட்டுக் குதித்து இறங்கினான்.. சித்ரலேகாவை இழுத்து அணைத்து கடிந்து பேசியபடி அவளது கண்ணீரை துடைத்து விட்டான்..

“என்ன நேரத்தில எதப் பேசறதுன்னு உனக்குத் தெரிய மாட்டேங்குதுடி.. நாமளே மறஞ்சு, ஒளிஞ்சு, மாமரத் தோப்புக்குள்ள சந்திச்சுக்கறோம்.. கிடைக்கிற கொஞ்ச நேரத்தில கொஞ்சிப் பேசனும்னு நெனைக்காம என்னத்தையோ பேசிக்கிட்டு வர்றவ.. 

ஆரு மனசில ஆரோ இருந்துட்டுப் போறாக.. அதப்பத்தி நமக்கு என்னடி..? உன் மனசில நானு.. என் மனசில நீயி.. இத மாத்த ஆராலும் முடியாதுடி சித்ரா..”

“உக்கும்.. இப்ப சித்ரான்னு கூப்பிடறவரு இதுக்கு முன்னால ‘லேகா’ ன்னு அவ நெனப்பில கூப்பிட்டவருதான..?”

“ஓங்கி அடிச்சேன்னா கன்னம் ரெண்டும் மாம்பழம் போல வீங்கிரும்.. சொல்லிட்டேன்.. நீ பொறந்ததில இருந்து ‘சித்ரா’ன்னு தான் கூப்பிட்டுக்கிட்டு இருக்கேன்.. நீதானடி ‘லேகா’ன்னு கூப்பிடச் சொன்ன..?”

சித்ரலேகா அந்த அழும்பைச் செய்தாள்தான்.. இரண்டு மாதங்களுக்கு முன்னால் மாந்தோப்பு கிராமத்துக்கு நாடகம் போட காண்ட்ராக்ட் பேசி நாடகக் கம்பெனி வந்து இறங்கிய சமயத்தில் ஊரே அந்தக் கம்பெனியில் நடிக்கும் நாடக நடிகையான அம்சலேகாவின் கவர்ச்சியை வியந்து பேசியது.. அது சித்ரலேகாவின் அடிவயிற்றில் அனலை மூட்டியது..

வசந்தரூபன் ஒரு நாடக பைத்தியம்.. எங்கே நாடகம் நடந்தாலும் புல்லட்டில் பறந்து போய் பார்த்து விட்டு வந்து விடுவான்..

“காலம் மாறிப் போயி கிடக்கு.. நீங்க ஊர் ஊரா சினிமாப் பாக்கப் போனீகன்னா மெச்சிக்கலாம்.. நாடகத்தயில்ல பாக்கப் போறீக..” வசந்த ரூபனிடம் சித்ரலேகா கோபப் படுவாள்..

“எனக்குப் புடிச்சிருக்கு.. பாக்கறேன்.. இதில என்ன தப்பு..?” இயல்பாக அவன் நியாயம் கேட்பான்..

சித்ரலேகா தன் பயத்தை எப்படி உரைப்பாள்..? திரைப்படங்களில் பார்க்கும் கதாநாயகிகள் நிழல் வடிவங்கள்.. திரையில் பார்த்து ‘ஜொள்ளு..’ விடலாம்.. நேரில் பார்த்துப் பேசிப் பழக முடியாது.. நாடகங்களில் அப்படியல்லவே.. பிடித்த நடிகையிடம் பேசிப் பழக அவன் நினைத்து விட்டால்..? அவனையே நினைத்துக் கொண்டிருக்கும் சித்ரலேகா என்ன செய்வாள்..?

அடுத்த ஊர்களுக்கு அவன் சென்று வருவதிலேயே திகில் பிடித்துப் போய் இருந்தவளுக்கு மாந்தோப்பிலேயே நாடகக் கம்பெனி வந்து இறங்கியதும் ‘பகீர்’ என ஆகிவிட்டது..

“ஐஞ்சு வருச காண்ட்ராக்ட்டாம்.. தெனமும் ஒரு நாடகம் போடுவாகளாம்..” மருக்கொழுந்து தகவல் சொன்னாள்..

மாந்தோப்பு கிராமத்தைச் சுற்றி இருபது கிராமங்கள் இருந்தன.. இருப்பதிலேயே பெரிய கிராமம் மாந்தோப்புத்தான் என்பதினாலும்.. நாடகக் கொட்டாய் போடுவதற்கான விஸ்தீரமான மைதானம் மாந்தோப்பு கிராமத்தில் மட்டுமே இருந்ததினாலும் நாடகக் கம்பெனிக்காரர்கள் தங்குவதற்கான பெரிய, பெரிய வீடுகள் மாந்தோப்பு கிராமத்தில் மட்டுமே வாடகைக்கு கிடைத்ததினாலும் நாடகக் கம்பெனி மாந்தோப்பு கிராமத்தில் முகாமிட்டு விட்டது.

இருபத்தியொரு கிராமங்களுக்கும் மையக் கிராமமாக மாந்தோப்பு கிராமம் இருந்தது நாடகக் கம்பெனிக்கு வசதியாகப் போய் விட்டது.. அவர்கள் மாந்தோப்பு கிராமத்தில் நாளொரு நாடகமும் பொழுதொரு பாட்டுமாக கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்தார்கள்..

சித்ரலேகா பயந்ததுதான் நடந்தது.. வசந்தரூபன் நாள் தவறாமல் நாடகம் பார்க்கச் சென்றான்.. சென்று வந்தவன் அம்சலேகாவின் அழகையும் நடிப்பையும் பற்றிச் சித்ரலேகாவிடம் பாராட்டிப் பேசித் தொலைத்து விட்டான்.. அப்போது ஆரம்பித்ததுதான் இந்த வினை..

வசந்தரூபன் பேசுவதையெல்லாம் மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்து விட்டு சித்ரலேகா ஓர்நாள் அணுகுண்டை வீசி வைத்தாள்..

0Shares

Reviews – Roopachithra Mamarkuyile / ரூபசித்ர மாமரக்குயிலே

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link