Chapter 01

0Shares

வனத்தில் தொலைந்திட

விரும்பியே வந்தேன்..

ப்ரீதிக்கு உற்சாகமாக இருந்தது.. இறக்கைகள் இருந்திருந்தால் வானில் சிறகடித்துப் பறந்திருப்பாள்.. எத்தனை நாளைய கனவு இது.. நாள்கள் என்பதை விட வருடங்கள் என்று சொல்லலாம்.. விசாகா அத்தை பூனாவை விட்டுக் கிளம்பிய போது தானும் அவளுடன் கிளம்ப வேண்டும் என்று கை கால்களை உதைத்துத் தரையில் புரண்டு அழுதாளே.. அன்று ஆரம்பித்த அடம் இது.. அப்போது அவளுக்கு எட்டு வயது.. அவள் பிறந்ததிலிருந்து அவளுடன் இருந்த விசாகா அத்தை அவளைப் பிரிந்து தன் கணவருடன் கிளம்பி விட்டாள்..

“நானும் அத்தையுடன் போவேன்..”

ப்ரீதி உதட்டைப் பிதுக்கித் தரையில் உருண்டு புரண்டு அழுது ஆகாத்தியம் செய்தாள்.. இறுக்கமான முகத்துடன் இருந்த அவளது அப்பா கங்காதரன் மகளின் முதுகில் ஒரு போடு போட்டு..

“வாயை மூடு..” என்று அதட்டினார்..

“யார் மேலேயோ இருக்கிற கோபத்தை குழந்தை மேல காட்டறிங்களே..” ப்ரீதியின் தாய் பார்கவி பதறிப் போனவளாக ப்ரீதியை தன் பக்கம் இழுத்துக் கொண்டதினால் ப்ரீதி தப்பித்தாள்.. இல்லையென்றால் அன்று கங்காதரன் இருந்த கோபத்திற்கு ப்ரீதி ஒரு வழியாகியிருப்பாள்..

“உன் அத்தையே உரிமையில்லாத இடத்தில் வாழப் போகிறாள்.. இதில் நீயும் கூடப் போகிறாயா..? அங்கே ஆரத்தி எடுத்து.. ‘வா’ன்னு சொல்ல யாரிருக்காங்கன்னு நினைத்த..?”

விசாகா தமையனுக்கும் குறையாத இறுக்கத்துடன் நின்றாள்.. ஒரேயொரு வித்தியாசம்தான்.. கங்காதரனின் கண்களில் கோபம் மண்டியிருந்தது.. விசாகாவின் விழிகளில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது..

“போகலாமா விசாகா..?” மாறனின் அழைப்பில் கங்காதரன் வெடித்தார்..

“எந்த தைரியத்தில் கூப்பிடறிங்க மாறன்..? நீங்க உழைத்து சம்பாதித்து வைத்திருக்கும் சொத்துக்களை என் தங்கையின் பெயருக்கு எழுதி வைக்கப் போகிறதாய் சொல்லிக் கூப்பிடறிங்களா..? இல்லை நீங்கள் கட்டி வைத்திருக்கும் அரண்மனையில் என் தங்கையை ஊஞ்சலாட வைக்கக் கூப்பிடறிங்களா..?”

“அது உங்களுக்குத் தேவையில்லாதது அண்ணா..”

கணவருக்குப் பதில் விசாகா பேசினாள்.. மாறன் மைத்துனரின் முகம் பார்க்கவில்லை.. துயரம் பூசியிருந்த அவரது முகத்தைப் பார்க்க ப்ரீதிக்குப் பாவமாக இருந்தது.. அன்பான மாமா.. அப்பா ஏன் மாமாவைக் கண்டாலே துப்பாக்கியைத் தூக்கிச் சுட்டுப் பொசுக்கி விடத் துடிக்கிறார்..?

“இவரை நான்தான் காதலித்தேன்.. என் காதலை கௌரவித்துக் கல்யாணமும் செய்து கொண்டார்.. எதைக் கேட்பதாக இருந்தாலும் என்னிடம் கேளுங்கள்..”

கணவருக்காக வரிந்து கட்டிக் கொண்டு பரிந்து வந்த தங்கையை இமைக்காமல் பார்த்தார் கங்காதரன்.. அவரது உதடுகள் துடித்தன.. தமையனின் மௌனப் பார்வையைத் தாங்க முடியாமல் மௌனக் கண்ணீர் வடித்தாள் விசாகா..

“இன்னும் எத்தனை நாளைக்குத்தான் உன் கணவனின் துரோகத்தைத் தாங்கிப் பிடித்துப் பரிந்துக்கிட்டு இருப்பாய் விசாகா..”

“என் உயிர் இருக்கிற வரைக்கும் அண்ணா..”

விசாகா கணவரைப் பின் தொடர்ந்து போய் விட்டாள்.. அவளுடன் அவளுடைய மகனும் மகளும் சென்று விட்டதில் ப்ரீதியும் அவளது அண்ணன் பிரசாத்தும் ஏகத்துக்கும் வருத்தப் பட்டார்கள்.. அவர்களுடன் சேர்ந்து விளையாடிய நண்பர்கள் பிரிந்து சென்று விட்டார்களே..

கணவரின் பின்னால் சென்று விட்ட விசாகா பூனாவுக்குத் திரும்பாமல் இல்லை.. வருடாவருடம் பிள்ளைகளின் விடுமுறை தினங்களுக்கு பூனாவுக்கு வந்து செல்வாள்.. ஆதவனும், ஆர்த்தியும்.. ப்ரீதி, பிரசாத்துடன் அரட்டையடிப்பார்கள்.. சேர்ந்து விளையாடுவார்கள்.. பிரசாத் ப்ரீதியை விட நான்கு வயது பெரியவன்.. விசாகாவின் மகன் ஆதவனை விட இரண்டு வயது சிறியவன்.. ஆர்த்தி ப்ரீதியின் வயதுதான்.. ஆதவன் ப்ரீதியை விட ஆறுவயது பெரியவன்.. கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாவே ஆதவன் ப்ரீதியிடம் பழகும் விதத்திலும், பார்க்கும் பார்வையிலும் வித்தியாசம் தெரிய ஆரம்பித்திருக்கிறது.. கண்களில் மின்னலுடன் ஆர்வமாகப் பார்க்கிறான்.. அதை பிரசாத்திடம் உணர்ந்த ஆர்த்தி, ப்ரீதியிடம்.

“ஏய்… உன் அண்ணன் என்னை சைட் அடிக்கிறாண்டி..” என்று இமை சிமிட்டிச் சொல்லிச் சிரித்தாள்..

உன் அண்ணன் மட்டும் என்ன.. அவனும்தான் என்னை சைட் அடிக்கிறான் என்று ப்ரீதி சொல்லவில்லை.. அது ஏனென்றும் தெரியவில்லை.. ஆதவனுக்கு அவள்மீது ஈர்ப்பு இருக்கிறது.. அவளுக்கு..? அவன்மீது பாசமிருப்பது நிச்சயமாகத் தெரியும்.. ஈர்ப்பு..? அது தெரியவில்லையே..

அதற்காகத்தான் கங்காதரன் மகளை விசாகாவின் ஊருக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.. இல்லையென்றால் அத்தனை வருடங்களாக விசாகா கெஞ்சியும் பிள்ளைகளை தங்கையின் ஊருக்குச் செல்ல அனுமதிக்காதவர் இப்போது ‘போய் வா’ என்று அனுப்பி வைப்பாரா என்ன..?

“ஆதவன் காட்டுப்பகுதியில் இருக்க விரும்பவில்லை.. ஃபாரின் போய் படித்திருக்கிறான்.. பூனாவில் ஐ.டி கம்பெனி ஆரம்பிக்கும் பிளானில் இருக்கிறான்.. பிரசாத்தும் ஆர்த்தியும் விரும்புகிறதைப் போல இருக்கிறது.. நீ ஓகேன்னு சொன்னா இரண்டு கல்யாணத்தையும் ஒரே மேடையில் பண்ணி வைத்து விடுவேன் ப்ரீதி.. என் கண் முன்னால் நீயிருப்பாய்.. என் தங்கையைத்தான் தடுத்து நிறுத்த முடியவில்லை.. தங்கையின் பிள்ளைகளை என்னிடம் இழுத்துக் கொண்டு விட்ட மனநிம்மதி எனக்குக் கிடைக்கும் மகளே.. உன் அப்பாவுக்காக உன் அத்தை மகனை கல்யாணம் பண்ணிக் கொள் ப்ரீதி..”

கங்காதரன் மகளை அழைத்துப் பேசிய போது ப்ரீதி கலவரமடைந்தாள்.. அதற்கென்னப்பா.. உங்கள் மனம் போல ஆகட்டும் என்று ஏன் அவளால் சொல்ல முடியவில்லை..?

“எனக்கு இப்போதைக்கு மேரேஜ் வேண்டாம்ப்பா..” என்று ஏன் அவள் மறுத்தாள்..?

தெரியவில்லை.. அவளுக்கே அது தெரியவில்லை.. அவள் மனம் ஆதவனை விரும்புகிறதா இல்லையா என்று அவளால் கண்டுணர முடியவில்லை.. எவ்வளவு யோசித்தாலும் ஆதவனின் மீது அவளுக்கு நேசம் வந்து தொலைக்கவில்லை.. பாசம்தான் வந்து தொலைத்தது..

“பிரசாத் ஆர்த்தியை விரும்புகிறான்ம்மா..”

“அண்ணன் மேரேஜை டிலே பண்ணாம நடத்தி வைத்து விடுங்கப்பா.. ஐ ஹேவ் நோ அப்ஜெக்சன்..”

“ஆதவனும் உன்னை விரும்புகிறானே ப்ரீதி..”

‘அதுதான் எனக்குத் தெரியுமே..’

ப்ரீதி சங்கடமடைந்தாள்.. ஆதவனின் மீது அவளுக்கு எந்தவிதமான ஈர்ப்பும் ஏற்படவில்லையே.. என்ன செய்வாள்..?

“அப்பா.. அத்தானின் மீது எனக்கு எந்த விதமான அட்ராக்சனும் ஏற்படலையே அப்பா..” ப்ரீதி சொல்லி விட்டாள்..

கங்காதரனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.. மகளிடம் கோபம் கொள்ளவும் முடியவில்லை.. மனதிலிருப்பதை மறைக்காமல் சொல்லி விட்ட மகளின் மீது அவர் மனதில் பாராட்டுதல் வந்தது..

‘என் வளர்ப்பு..’ என்று பெருமிதம் கொண்டார்..

ஆனால் ஆதவன்..? அவன் மீதான அவரது அக்கறை.. பரிவு… பாசம்… இவற்றையும் நினைத்துப் பார்க்க வேண்டுமல்லவா..? அவரது உயிருக்குயிரான தங்கை விசாகா பெற்ற மகன் அவன்.. காட்டுப் பகுதியில் பொருந்தி வாழ அவனால் முடியாது.. பூனாவில் பிறந்து வளர்ந்தவன் அவன்… பதினைந்து வயதில் தாயைத் தொடர்ந்து சென்றாலும் அவனது மனம் முழுவதும் பூனாவில்தான் இருந்தது என்பதை கங்காதரன் அறிவார்..

“காடு மாமா அது.. இங்கே விடிய விடிய கலகலன்னு இருக்குமில்ல.. அங்கே அப்படியில்ல மாமா.. ஈவினிங் மூன்று மணிக்கெல்லாம் இருட்டிரும்.. ஆறு மணிக்கெல்லாம் அவங்கவங்க வீட்டில் அடைந்துக்கிறாங்க..” என்று புலம்பிக் கொண்டே இருப்பான்..

எந்தக் காரணத்தினால் கங்காதரன் கணவரைப் பின் தொடர்ந்து தங்கை போவதை ஆட்சேபித்தாரோ.. அதே காரணத்தினால் ஆதவனும் அந்த ஊரை வெறுத்தான்.. பிளஸ் ஒன், பிளஸ் டூ படிப்பிற்கு ஊட்டி கான்வென்டில் ஹாஸ்டல்.. கல்லூரிப் படிப்புக்கு சென்னை.. ஹாஸ்டல் வாசம்.. எம்.பி.ஏ படிப்பிற்கு வெளிநாடு என்று ஊர் தங்காமல் பறந்து கொண்டிருந்தான்.. பணத்திற்கு குறைவில்லை.. அவன் கேட்டது கிடைத்தது.. பூனாவில் ஐ.டி கம்பெனி ஆரம்பிக்கவும் பணம் கிடைத்து விடும்.. கோடிக் கணக்கில் அள்ளிக் கொடுத்து விடுவார்கள்.. அப்படியே ஒதுங்கிக் கொள்ளலாம் என்பது அவன் எண்ணம்..

ஆர்த்தியின் மனதில் என்ன இருக்கிறது என்று கங்காதரனுக்குத் தெரியவில்லை.. எது இருந்தால் என்ன என்பது கங்காதரனின் எண்ணம்.. பிரசாத்தும் ஆர்த்தியும் ஒருவரையொருவர் விரும்புகிறார்கள்.. அது போதும் அவருக்கு..

“ரொம்ப நாள்களாக நீ அத்தையின் ஊருக்குப் போக வேண்டுமென்று ஆசைப்பட்டாய்.. இப்போது போய் வா.. ஆதவனும் அங்கேதான் இருக்கிறான்.. ஐ.டி கம்பெனி ஆரம்பிக்க அத்தையின் குடும்பத்தில் பெர்மிசன் வாங்கனுமே.. ஆதவனுடன் பேசிப் பழகு.. பதினைந்து வயது வரை நம் வீட்டில் உன்னுடன் வளர்ந்தவன்.. அந்த நினைவில் நீ தயங்குகிறாய்ன்னு நினைக்கிறேன்.. இப்ப இருக்கும் ஆதவனே வேறு.. விசாகா வரும் போது ஆர்த்திதான் கூட வருவாள்.. ஆதவன் அடிக்கடி வந்து போனதில்லை.. அத்தை மகன் என்பதினால் அவனுடைய அருமை உனக்குத் தெரியவில்லை.. அவனிருக்கும் ஊருக்குப் போய்ப் பார்.. நிச்சயம் உனக்கு அவனைப் பிடிக்கும்..”   நம்பிக்கையுடன் சொன்னார்..

“இப்போதும் அத்தானை எனக்குப் பிடித்திருக்கிறதே அப்பா.. அவரை நான் வெறுக்கவில்லையே..”

“இந்தப் பிடித்தம் வேறு ப்ரீதி.. அவனைக் கல்யாணம் பண்ணிக்க உனக்குப் பிடிக்கனுமே..”

ப்ரீதி உதட்டைக் கடித்துக் கொண்டாள்.. சுற்றிச் சுற்றி பேச்சு ஆதவனை அவள் மணக்க வேண்டும் என்று முடிவதில் அவளுக்கு என்னவோ போல இருந்தது.. நிர்பந்தம் இல்லாத பந்தத்தைத்தான் மனம் ஏற்கும்.. இதை அவளது தந்தையிடம் யார் சொல்வது..?

எது எப்படியோ.. அவளுக்கு அவளுடைய அத்தை இருக்கும் வால்பாறைக்குப் போக அனுமதி கிடைத்து விட்டது.. அதுவரை மகளை அவர் தனித்து அனுப்பி வைத்ததில்லை.. இப்போது வேறு வழியில்லை.. கங்காதரன் விசாகா இருக்கும் ஊருக்கு வர விரும்பவில்லை..

“கோயம்பத்தூருக்குப் பிளைட் டிக்கெட் புக் பண்ணியாச்சு.. ஏரோடிராமில் உன்னை அழைத்துக் கொண்டு போக விசாகா காருடன் வந்து விடுவதாக சொல்லியிருக்கிறா.. தனியாக டிராவல் பண்ணப் போற.. பத்திரம்..”

ஆயிரம் முறை மகளை எச்சரித்து அனுப்பி வைத்தார்.. பார்கவிக்கு மகளுடன் போக ஆசைதான்.. கங்காதரன் விட வேண்டுமே..

“உன் அப்பாவுடன் யார் பானிபட் யுத்தம் பண்ணுவது..? என்றைக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்தாங்களோ.. அன்றைக்கு என் அடிமை வாழ்க்கை ஆரம்பிச்சாச்சு.. ஆசைப்பட்ட ஊருக்குப் போக முடியுதா..? எப்படியோ.. விசாகா மகனைக் கல்யாணம் பண்ணிக்க 

நீ சம்மதிக்கனும் என்கிறதினால உனக்கு பர்மிசன் கிடைச்சிருக்கு.. காட்டுப் பக்கம் தன்னந்தனியாப் போய் மாட்டிக்காதே.. ஆர்த்தியுடன் சேர்ந்து போ..”

தாயின் கவலையோடு சொன்னாள் பார்கவி.. தாய்மையின் மனது நுணுக்கமானது.. பெற்றெடுத்த பிள்ளைகளுக்கு நேரப் போகும் சின்னஞ்சிறு நிகழ்வையும் அது அறிந்து விடும்..

ப்ரீதி போகப் போகும் காடு எப்படிப்பட்டது.. அங்கே அவள் எப்படியெல்லாம் போராடப் போகிறாள் என்பதை அந்தத் தாயின் மனம் உணர்ந்து சொன்ன சொற்களா அவை..?

ப்ரீதி பூனாவிலிருந்து விமானத்தில் கிளம்பி கோவை வந்து இறங்கி விட்டாள்.. அவளுக்காக கார் காத்திருந்தது.. அழைக்க வந்தது விசாகா இல்லை.. ஆதவன்..

‘இவனா..?’

மனதில் சலிப்பை மறைத்துக் கொண்டு புன்னகைத்தாள் ப்ரீதி.. “வாட் எ சேன்ஜ்..! நான் பார்த்து வளர்ந்த ப்ரீதியா நீ..?”

ஆதவனின் பார்வை அவளது அங்கம் முழுவதும் ஊர்ந்ததில் அருவெறுப்புத்தான் வந்து தொலைத்தது..

‘இப்போது இருக்கும் ஆதவனே வேறு..’

கங்காதரனின் குரல் அவளது காதுகளில் ஒலித்தது.. அவன் வெளிநாடு போய் வந்ததில் மாறிப் போயிருக்கிறானாம்.. பெண்கள் வட்டமிடும் கட்டழகனாம்..

ஆதவன் கட்டழகனாகத்தான் இருந்தான்.. ப்ரீதியின் மனம் கவர்ந்த கட்டழகனாக அவன் இல்லை.. அவனது விழிகள் மேய்ந்த மேய்ச்சலில் அவள் உடல் கூசிப் போனாள்.. அவனது பார்வை பெண்களின் மீதான அவனது மோகத்தையும் முன் அனுபவங்களையும் பட்டவர்த்தனமாக அறிவித்தது..

‘உண்மைதான் அப்பா.. இப்போது இருக்கும் ஆதவன் அத்தான் வேறுதான்.. சின்னஞ்சிறு வயதில் நான் பார்த்த அத்தானாக இல்லை..’

காரின் முன்சீட்டில் அவனருகில் அமர்வதைத் தவிர்த்து அவள் பின்சீட்டில் ஏறியபோது அவனது முகம் மாறிவிட்டது.. 

“நானென்ன உனக்கு டிரைவரா..?” காட்டத்துடன் கேட்டான்..

“லாங் ஜர்னி அத்தான்.. அசதியாக இருக்கிறது.. பின் சீட்டுன்னா எனக்கு சாய்ந்து கால்களை நீட்டிக்க கன்வினியண்டா இருக்கும்..”

வாய்க்கு வந்ததைச் சொல்லித் தப்பித்தாள் ப்ரீதி..

0Shares

Reviews – aaranyam azhakanathu / ஆரண்யம் அழகானது

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • X (Twitter)
  • Email
  • Copy Link
Copy link