Chapter 04
வாழ வேண்டும் உன்னோடு..
இந்த மந்திரம் மட்டுமே என்னோடு
கொட்டும் அருவியில் உடல் நனைத்தால் உண்டாகும் சிலிர்ப்பை ப்ரீதி உணர்ந்தாள்.. தாலாட்டும் அவன் பார்வையில் இவள் மனம் தள்ளாடியது.. ஏதோ ஓர் குளிர் நதியில் தள்ளப்பட்டதைப் போல உணர்ந்தாள்..
“யார் நீ..?”
வெகு பிரியத்துடன் அவன் கேட்டான்.. காதலோ, காமமோ கலக்காத அரிதான பிரியம் அது.. பிடித்தவர்களிடம் காட்டும் பிரியம்.. அது ப்ரீதிக்கும் பிடித்திருந்தது..
“ப்ரீதி..”
“ப்ரீதி. அழகான பெயர்..”
அவனது பார்வை ‘உன் பெயர் மட்டுமல்ல.. நீயும் அழகுதான்..’ என்று சொல்லாமல் சொன்னது.. ப்ரீதியின் மனதுக்குள் பட்டாம் பூச்சிகள் பறந்தன.. பெயர் தெரியாத பறவையொன்று பாடியபடி நதிநீரில் நீர் குடித்தது.. சலசலத்து ஓடிய நதியின் பாடலும் பறவையின் பாடலுடன் சேர்ந்து கொண்டது.. குளிர் நிரம்பிய மலைக்காற்றும்.. சன்னமாகத் தெறித்த மழையின் சாரலும் அவளை மாய உலகொன்றுக்குள் ஈர்க்க முயன்றன..
“எங்கேயிருந்து வர்ற..?”
அடுத்த கேள்வி.. ப்ரீதிக்கு அவன் முகம் பார்த்துப் பேச வேண்டும் போல இருந்தது.. முடியவில்லை.. லேசாக அவன் முகம் பார்ப்பதும்.. அவனது பார்வையைச் சந்தித்தால் பதறிப் போய் வான் மேகங்களையும், மலை முகடுகளையும் பார்ப்பதுமாக பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்..
“பூனாவிலிருந்து..”
நடுக்கத்துடன் சொல்லி விட்டாள்.. அவளது நடுக்கத்தை உணர்ந்தவன் மெல்லச் சிரித்தான்..
“வெறும் வாய்தான் போல..”
எதற்காக இதைச் சொல்கிறான் என்று அவள் கேட்கவேயில்லை.. அதைக்கூட அறியாத அப்பாவியா அவள்..? கானகத்தில் கண்டவனைக் ‘கந்தர்வன்..’ என்று ஜொள்ளி ‘சைட்..’ அடிக்கும் படுபாவி அல்லவா அவள்..
“நான் போகனும்..”
“எங்கே போகனும்..?”
“அத்தை வீட்டுக்கு..”
“தெளிவாகத்தான் பேசற.. இவ்வளவு தெளிவு ஆகாது.. மொட்டையா அத்தை வீடுன்னு சொன்னால் எப்படி..?”
“உன் அத்தை வீடு எங்கே இருக்கு..?”
“யாருக்கு சார் தெரியும்..? நான் இதுவரைக்கும் என் அத்தையின் வீட்டுக்கு வந்ததே இல்லை.. இதுதான் பர்ஸ்ட் டைம்..”
“ஏன்..? அவங்க உன் சொந்த அத்தைதானே..”
“சரியாப் போச்சு போங்க.. நீங்க கேட்டதை மட்டும் என் அப்பா கேட்டிருக்கனும்.. சண்டைக்கு வந்திருப்பார்.. அவங்க என் அப்பாவுடன் பிறந்த சொந்தத் தங்கை சார்..”
“அவ்வளவு பாசமா உங்க அத்தை மேல..?”
“ம்ம்ம்..”
“இவ்வளவு பாசக்காரங்க ஏன் அத்தையின் ஊருக்கு வந்து போகலை..? குடும்பச் சண்டைய்யா..?”
“சண்டையா..? அத்தை கூடவா..? அப்பாவா..? நெவர்.. அத்தைக்காக அப்பா எதையும் செய்வார்..”
“அப்படிப்பட்டவர் தங்கையின் வீட்டுக்கு வந்து போயிருக்கலாமே..?”
“அந்தக் கதையை ஏன் சார் கேட்கறிங்க.. அத்தை கல்யாணம் ஆன நாளில் இருந்து எங்க வீட்டில்தான் இருந்தாங்களாம்.. அத்தையின் கல்யாணம் முடிந்து ஆதவன் அத்தான் பிறந்த பின்னால்தான் எங்கப்பாவுக்கும், அம்மாவுக்கும் கல்யாணம் நடந்ததாம்..”
அவள் பேசுவதையே ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தவனின் முகம் கடுமையானது.. ப்ரீதி திகைத்தாள்..
‘நான் தப்பா ஏதும் சொல்லிட்டேனா..?’
“என்ன பெயர் சொன்ன..?”
“யாரோட பெயரைக் கேட்கறிங்க சார்..? அப்பா பெயரா.. இல்லை அத்தையின் பெயரா..? இரண்டு பேரின் பெயரையும் நான் சொல்லவே இல்லையே..”
“உன் அத்தான்னு எவனோ ஒருவன் பெயரைச் சொன்னியே..”
“ஆதவன் அத்தான்..”
“ஆதவன்..?”
“ம்ம்ம்.. அவர்தான் என்னை கோயம்பத்தூர் ஏரோடிராமில் இருந்து பிக்-அப் பண்ணிக்க வந்தார்.. நாங்க வந்த கார் வழியிலேயே நின்று விட்டது.. மெக்கானிக்கிற்குப் போன் பண்ணினார்.. மெக்கானிக்கும் வந்தாச்சு.. அவங்க காரைப் பார்த்துக்கிட்டு இருந்த கேப்பில நான் ஃபாரெஸ்டைப் பார்க்க இந்தப் பக்கமா எஸ்கேப் ஆகிட்டேன்..”
அவள் சொன்னதை சிந்தனையுடன் கேட்டுக் கொண்டிருந்தவனின் முகத்தில் சினம் படர்ந்தது..
“ஃபாரின் கார் வாங்கினா மட்டும் போதாது.. அதை எப்படி மெயின்டெயின் பண்ணனும்னும் தெரிந்து வைத்துக்கனும்..”
எதற்காக அவனுக்கு இத்தனை கோபம் என்று புரியாமல் அவன் முகத்தையே குறுகுறு என பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு ஆச்சரியமாகி விட்டது.. ஆதவனின் கார் ஃபாரின் கார் என்று இவனுக்கு எப்படித் தெரியும்..? சரியாகச் சொல்கிறானே..
“அத்தானின் கார் ஃபாரின் கார்ன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்..? அத்தானை உங்களுக்குத் தெரியுமா..?”
அவன் பதில் சொல்லவில்லை.. கடுகடுவென இருந்தான்.. ப்ரீதிக்கு வருத்தமாகி விட்டது.. பாறாங்கல் முகத்துடன் அவளிடம் பேச வந்தவன் அப்போதுதான் இளகி ஒரு சிரிப்புச் சிரித்தான்.. பிரியமாக சில வார்த்தைகளைப் பேசினான்.. புரியாமல் எதையோ பேசி ப்ரீதி அதற்கும் வேட்டு வைத்து விட்டாளே.. பிரியப் போகும் நேரத்தில் இப்படியா நிகழ வேண்டும்..
“கோபமா இருக்கீங்களா..?”
தழதழத்த அவளது குரலில் என்ன நினைத்தானோ.. ஓர் பெருமூச்சுடன் தோள்களைக் குலுக்கிக் கொண்டான்.. வானத்தை அண்ணாந்து பார்த்தான்.. அங்கே என்ன இருக்கிறது என்று ப்ரீதியும் பார்த்தாள்.. அவள் பார்த்த போது மேகங்கள்தான் இருந்தன.. புதிதாக எதுவும் இல்லை..
அவளது செய்கையைக் கவனித்தவனின் முகத்தில் மென்மை மீண்டது.. சிறு குழந்தையை ரசிப்பதைப் போல அவளைப் பார்த்தான்..
“வெல்கம்..” என்றான்..
“எதற்கு..?” புரியாமல் கேட்டாள் ப்ரீதி..
அவன்தான் எந்த நேரம் எதைப் பேசுகிறான் என்று தெரிய மாட்டேன் என்கிறதே.. வரவேற்கிறானே என்று நன்றி சொல்லி வைத்தால் அதற்கும் ஏதாவது சொல்லி வைப்பான்.. தற்காத்துக் கொள்வதே உசிதமானது..
“இதுகூடத் தெரியாத மக்கா நீ..?”
அவன் விமரிசித்ததில் அவளுக்கு ரோசம் பொத்துக் கொண்டு வந்தது..
“காலேஜில் கோல்டு மெடல் வாங்கியிருக்கிறேன் சார்.. அவசரப் பட்டு வார்த்தையை விட்டு விடாதீங்க..”
“விட்டா..?”
“அள்ள முடியாது..”
“அப்படின்னு யார் சொன்னது..? உன் பாட்டியா..?”
ஆமாம் என்பதில் ப்ரீதியின் முகம் விழுந்து விட்டது.. லேசாக அசடு வழிகிறதோ என்று கூட சந்தேகம்.. செல்போனை பார்ப்பதைப் போல அதன் கண்ணாடி திரையில் முகம் பார்த்துக் கொண்டாள்..
‘நல்லாத்தான் இருக்கேன்..’
நிம்மதியாகி நிமிர்ந்து பார்த்தவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது.. ஒரு குறுஞ்சிரிப்புடன் அவன் அவளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.. ப்ரீதிக்கு முகத்தை எங்கே வைத்துக் கொள்வது என்று தெரியவில்லை.. இப்படியா மாட்டித் தொலைப்பாள்..?
“என்ன படிச்சிருக்க..?”
“பி.ஈ. கம்யூட்டர் என்ஜினியரிங்…”
“எங்கள் ஊருக்கு வந்திருக்கிறாய்.. அதற்காகத்தான் வெல்கம்..”
நன்றி சொல்லத்தான் நினைத்தாள்.. அவன் அவளை வாரிய வாரல் நினைவுக்கு வந்ததில்..
“நல்ல வேளை.. இப்போதாவது சொன்னிங்களே..” என்று அவனைப் போலவே குறுநகை புரிந்தாள்..
அவள் வம்புக்கு இழுக்கிறாள் என்பதில் அவனது கண்கள் ரசனையுடன் மின்னின.. அவளை ஒரு மார்க்கமாகப் பார்த்தபடி..
“வேறு எப்போது சொல்வேன்னு நினைத்தாய்..?” என்று கேட்டான்..
“நான் பூனாவுக்குப் போக பிளைட்டில் ஏறும்போது சொல்வீங்கன்னு நினைத்தேன் சார்..” பவ்யமான பதில்..
“வால் ஒன்றுதான் இல்லை..” பல்வரிசை தெரிய சிரித்தான்..
“என்னை குரங்குன்னு சொல்கிறீங்களா..?” சண்டைக்கு வருவதைப் போல கேட்டவள்..
“எங்க வீட்டிலேயும் இதைத்தான் சொல்றாங்க..” என்று வாய் விட்டு விட்டாள்..
“சொல்லாம எப்படி இருப்பாங்க..?”
“போதும் சார்.. நான் போயாகனும்..”
“அத்தானைப் பார்க்க அவசரமா..?”
ஒரு தினுசான குரலில் அவன் வினவினான்.. ஆதவன் என்றால் அவனுக்கு ஆகாது போல என்று நினைத்துக் கொண்ட ப்ரீதி..
“அத்தையைப் பார்க்க அவசரம்..” என்றாள்..
“அடேங்கப்பா.. அத்தையின் மீது கொள்ளைப் பாசம் போல..”
இப்போதும் இடக்கான குரல்.. அவளுடைய அத்தையின் மீது அவளுக்குப் பாசம் இருப்பதில் இவனுக்கென்ன இத்தனை ஆட்சேபனை..?
“இருக்காதா பின்னே..? என்னையும் பிரசாத்தையும் தூக்கி வளர்த்தவங்க அவங்க..”
“பிரசாத்தா..? யாரது..?”
“என் அண்ணன்.. பூனாவில் இருக்கிறான்..”
“ஓ…”
“ஆதவன் அத்தானும் ஆர்த்தியும் பூனாவில் பிறந்து வளர்ந்தவங்கதான்.. அத்தை எங்க கூடத்தான் இருந்தாங்க..”
“உன் அத்தையின் ஹஸ்பெண்ட் எங்கே இருந்தாராம்..?”
அவனது குரலில்தான் எத்தனை குரோதம்.. ஆத்திரம்.. ஆங்காரம்..
‘வொய் திஸ் கொலைவெறி..?’
ஆதவனின் மீது இவனுக்கு விரோதம் இருக்கலாம்.. ஆதவனின் அலட்டல் அப்படிப்பட்டதுதான்.. ஆனால் மாறன் மாமா அமைதியின் சிகரம் ஆயிற்றே.. அவரை ஏன் இவனுக்குப் பிடிக்கவில்லை..
“இங்கேதான் இருந்திருக்கனும்..”
“யூகமா..?”
“இல்லைன்னு சொல்ல மாட்டேன்.. என் நினைவு தெரிந்த நாளில் இருந்து அத்தையும் ஆதவனும், ஆர்த்தியும் எங்ககூட பூனாவில்தான் இருந்தாங்க.. மாதத்திற்கு ஒர்முறை மாமா வந்து விட்டுப் போவார்.. அப்பாவுக்கு மாமாவைக் கண்டாலே ஆகாது.. அவர் ஏன் வருகிறார்ன்னு சத்தம் போடுவார்.. அத்தை அழுவாங்க..”
அவனது முகம் பார்க்காமல் விவரித்துக் கொண்டிருந்தாள் ப்ரீதி.. அறிமுகமில்லாத எவனோ ஒருவனிடம் தன் அத்தையைப் பற்றிய விவரங்களை விவரித்துக் கொண்டிருப்பதை அவள் உணரவில்லை.. பொதுவாக ப்ரீதி இப்படி மனதில் உள்ளதையெல்லாம் கொட்டி விடும் ரகமல்ல.. கலகலவென்று பேசினாலும் எதைப் பேச வேண்டும்.. எதைப் பேசக்கூடாது என்ற வரைமுறை அவளுக்குத் தெரியும்.. அந்த புத்திசாலி ப்ரீதிதான் தன்னை மறந்து அவனிடம் பேசிக் கொண்டிருந்தாள்.. அது என்னவோ.. அவன் எதைக் கேட்டாலும் மறைக்காமல் சொல்லிவிட வேண்டும் போல இருந்தது.. ஏனென்றுதான் தெரியவில்லை..
“அப்போ ஆதவன் அத்தானுக்கு பதினைந்து வயதிருக்கும்.. எனக்கு எட்டு வயது.. மாமா திடிர்ன்னு வந்து அத்தையையும் அவருடைய பிள்ளைகளையும் அவரோட ஊருக்குக் கூப்பிட்டுக் கொண்டு போகப் போவதாகச் சொன்னார்.. அப்பா அனுப்ப மாட்டேன்னு சத்தம் போட்டார்.. அத்தை மாமாவுடன் கிளம்பிட்டாங்க..”
“உன் அப்பா எதற்காக உன் அத்தையைத் தடுக்கனும்..? அவங்களோட ஹஸ்பெண்ட் ஊருக்குத்தானே கிளம்பினாங்க..”
“அதுதான் எனக்கும் தெரியலை.. உனக்கு உரிமையில்லாத வீட்டுக்கு நீ போகக்கூடாதுன்னு அப்பா கோபப் பட்டார்.. மாமா சுயமா சம்பாதிச்சு அத்தைக்காக சொத்து சேர்த்து வைத்துக் கொண்டு கூப்பிடுகிறாரான்னு ஆத்திரப்பட்டார்.. யாரோ ஒருத்தங்களோட நிம்மதிக்காக அத்தை தன்னோட சுயமரியாதையைத் தொலைக்கனுமான்னு கேட்டார்..”
“ஓ..”
அவனது கண்கள் சிவந்தன.. ரௌத்ரமான அவனது ‘ஒ’ வில் அதிர்ந்து அவன் முகம் பார்த்தவளுக்குப் பயமாக இருந்தது.. எதற்காக இந்த கோபம்..? யார் மீது கோபம்..?
“உன் அத்தை சுயமரியாதையைத் தொலைத்ததுதான் உன் அப்பாவின் கண்களுக்குத் தெரிந்திருக்கிறது.. ஏன்னா உன் அத்தைதானே உன் அப்பாவுடன் பிறந்தவங்க.. மன நிம்மதியைத் தொலைத்து விட்ட வேறு எந்த ஆத்மாவைப் பற்றியும் ஏன் அவர் நினைத்துப் பார்க்கப் போகிறார்..?”
ப்ரீதி திருதிருத்தாள்.. அவளுடைய அப்பா தன் தங்கையின் மீது பாசம் வைத்தால் இவனுக்கு என்ன வந்தது..?
“அன்றைக்குக் கிளம்பிய அத்தையுடன் நானும் போவேன்னு அழுதேன்.. அப்பா முதுகில் நாலு சாத்து சாத்தி ரூமுக்குள் தள்ளிக் கதவைச் சாத்திட்டார்..”
“உன் அத்தையின் மீது இருந்த கோபத்தை உன்னிடம் காட்டியிருப்பார்..” அவன் முகத்தில் சிரிப்பு விரிந்தது..
“நான் மாத்து வாங்கினதில சாருக்கு இவ்வளவு சந்தோசமா..?” ப்ரீதிக்குத் தாங்கவில்லை..
“மனதில் பட்டதைச் சொன்னேன்.. ஹா.. ஹா..”
“போதும் சார்.. வாய் வலிக்கப் போகுது..”
பேசியபடியே அவர்கள் காட்டைக் கடந்து சரிவில் ஏறி விட்டார்கள்.. மேடான சாலையில் கார் நின்றிருந்தது..
“வாங்க சார்.. அத்தானை உங்களுக்கு அறிமுகப் படுத்தி வைக்கிறேன்..” என்றாள் ப்ரீதி..
“அவனை நீ எனக்கு அறிமுகப் படுத்தி வைக்கிறயா..? குட் ஜோக்..” அவன் காட்டுக்குள் நடக்க ஆரம்பித்தான்..
“அவ்வளவுதானா..?”
அவளது கேள்வியில் நின்று விட்டான்.. ப்ரீதி நாக்கைக் கடித்துக் கொண்டாள்.. அவன் போகிறானே என்ற வேகத்தில் அவளது ஆர்வத்தை வெளிப்படுத்தி விட்டாளே..
“வேறு என்ன வேண்டும்..?”
தோரணையாக அவன் கேட்ட விதத்தில்..
“இந்தக் காடு வேண்டும்.. கொடுக்கறிங்களா..?” என்று கேட்டு விட்டாள்..
“காடு, மலை, செடி, கொடி, கடல் ன்னு நாம சொந்தம் கொண்டாட முடியாத கடவுளின் கொடைகளை விட்டு வைப்போம்.. நதிகளைக் கூட விட்டு வைக்கலை.. இந்தக் காடு என்னோட அடையாளம்.. நீயும் இதை அடையாளப் படுத்திக்கலாம்.. பொதுவான எதையும் உரிமைப் படுத்திக்க நினைக்காதே..”
அவன் போய் விட்டான்.. ப்ரீதி அசையாமல் நின்றாள்.. அவனைப் பார்க்க முடியாதா என்ற ஏக்கம் அவளுக்குள் எழுந்தது.. அவனைப் பார்க்க வேண்டும் போல இருந்தது..
அந்த நொடியில் அவளுடைய அப்பா தன் தங்கையிடம் உரிமை இல்லாத இடத்துக்கும் போகாதே என்று தடுத்தது நினைவுக்கு வந்தது..
Reviews – aaranyam azhakanathu / ஆரண்யம் அழகானது
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.