Chapter 07

0Shares

என் ஆன்மாவின் அந்தரங்கம்

உனக்காக உருகுவதை

இந்த ஆரண்யம் சொல்லவில்லையா..?

நெடுநெடுவென உயரமாக இருந்த அந்த மனிதரின் பார்வை ப்ரீதியை அளவிட்டது.. துளைக்கும் பார்வை என்று கூடச் சொல்லலாம்.. அளவிட்ட அந்தப் பார்வையில் சினம் கொண்டாள் ப்ரீதி.. அவளுடைய அத்தையின் வீட்டிற்கு வந்திருக்கிறாள்.. இவர் யார் அவளை லேசர் பார்வை பார்க்க..?

‘யார் நீங்கள்..?’ ப்ரீதி கேள்வி கேட்க வாய் திறப்பதற்குள்..

“இவள் எங்க மாமா மகள்.. பூனாவிலிருந்து வந்திருக்கிறா..” என்ற குற்றம் செய்து விட்டவளைப் போல தழைந்த குரலில் சொல்லிக் கொண்டிருந்தாள் ஆர்த்தி..

‘இது ஆர்த்திதானா..?’ ப்ரீதிக்கு நம்ப முடியவில்லை..

அவளறிந்த ஆர்த்தி துணிச்சலானவள்.. எவருக்கும் அஞ்சாதவள்.. மனதிலிருப்பதை அப்படியே போட்டு உடைத்து விடுபவள்..

அவளா.. எவரோ ஒரு நெடியவரின் பார்வை கேட்ட கேள்விக்குப் பம்மிப் பதில் சொல்கிறாள்..? இந்தப் பதவிசு எதற்கு..?

“ம்ம்ம்..”

ஒற்றை வார்த்தை கூட உதிர்க்காமல் அனுமதிக்கும் பாவனையில் முணுமுணுத்து விட்டு அவர் இறங்க ஆரம்பிக்க.. அவசரமாக ப்ரீதியை கீழே தள்ளி விடாத குறையாக படியின் ஓரத்துக்குத் தள்ளி விட்டு வழி விட்டாள் ஆர்த்தி.. ப்ரீதிக்குப் பற்றிக் கொண்டு வந்தது.. என்னடி நினைத்துக் கொண்டிருக்கிறாய் என்று சுடச்சுட நான்கு கேள்விகளைக் கேட்டு விட வேண்டும் என்று வாயைத் திறந்தால் அதை எதிர்பார்த்திருந்தவளைப் போல ப்ரீதியை வாயை இறுக்கிப் பொத்தி இழுத்துக் கொண்டு படியேறினாள் ஆர்த்தி.. மாடிஹாலில் அவர்கள் கால் வைத்த பின்னால்தான் ப்ரீதிக்கு விடுதலையே கிடைத்தது..

வேக வேகமாக மூச்சு வாங்கியபடி இடுப்பில் இரு கைகளையும் வைத்து சண்டைக்கோழியானாள் ப்ரீதி..

“தெரியாத்தனமா உங்க வீட்டுக்கு கெஸ்ட்டா வந்து விட்டேன்ங்கிறதுக்காக நீ இப்படியெல்லாம் செய்வியா..?”

“இல்லடி ப்ரீதி.. நீ எதையாச்சும் பேசிருவியோன்னுதான்..”

“பேசினால் என்ன..? பேசத்தான் வாய் திறந்தேன்..”

“அது தெரிந்துதான் உன் வாயைப் பொத்தினேன்..”

இப்படிச் சொல்பவளை என்ன செய்வது என்ற கொலை வெறியோடு வெறித்துப் பார்த்தாள் ப்ரீதி.. கண்கள் கலங்க.. உதடுகள் துடிக்க.. வேறு திசை பார்த்தாள் ஆர்த்தி.. ப்ரீதிக்கு மனம் தாங்கவில்லை.. அவளுடைய அன்புத்தோழியா இப்படி அலைபாய்கிறாள்..?

“யாருடி இவர்..?” மனம் தாளாமல் விசாரித்தாள்..

“தொண்டைமான்..”

“தொண்டைமானா.. இப்படியும் பெயர் வைப்பாங்களா..?”

“ராஜவம்சத்தில் வைப்பாங்க..”

“ஓ… இவர் ராஜா வம்சமா..?”

“ம்ம்ம்.. ராஜா தொண்டைமான்..”

“இவர் ஏன் உங்க வீட்டில் தங்கியிருக்கிறார்..?”

“என்னடி சொன்ன..?”

கண்களில் வழியும் கண்ணீரோடு சிரிக்க யாரால் முடியும்..? ஆர்த்தியால் முடியும் என்பதை அன்று அறிந்தாள் ப்ரீதி.. கண்களில் பொங்கி வழியும் கண்ணீரோடு வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தாள் ஆர்த்தி..

“நீ இருக்கியே.. கேட்கிற கேள்விகளிலேயே ஆளை சிரிக்க வைச்சிருவ.. போடி போ.. அவர் எங்க வீட்டில் தங்கியிருக்கிறாரா..? குட் ஜோக்.. வெளியில் சொல்லிராதே.. மொத்து வைச்சிருவாங்க..”

“இது உங்க வீடுதானேடி ஆர்த்தி..”

ஆர்த்தி முகத்தைத் துடைத்துக் கொண்டு மாமன் மகளை வாத்சல்யத்துடன் பார்த்தாள்.. ப்ரீதியின் முடிகோதி கன்னத்தில் தட்டினாள்..

“பல வருச கதையை ஒரே நிமிசத்தில் சொல்லிவிட முடியாது ப்ரீதி.. உன் கேள்விக்கு நிச்சயம் பதில் கிடைக்கும்.. இப்போது இல்லை.. வா.. உன் ரூமைக் காட்டறேன்..”

ப்ரீதி நின்று நிதானமாக மாடி ஹாலை பார்வையிட்டாள்.. இதுவும் பெரிதுதான் என்றாலும்.. தரைத்தளத்தில் இருந்த ஹாலைப் போல பெரியது அல்ல.. அதில் பத்தில் ஒரு பங்குதான் இருக்கும்.. இதுவே பிரம்மாண்டமாக இருந்தது.. தரைத் தளத்தில் சுவர்.. அதில் ஓவியங்கள் என்று இருந்தால் இங்கே சுவருக்குப் பதில் கண்ணாடிக் கதவுகளுடன் கூடிய ஜன்னல்கள் இருந்தன.. கனத்த திரைச்சீலைகள் ஒதுக்கி, ஓரம் கட்டி விடப் பட்டிருந்ததில் தெரிந்த மேற்கு தொடர்ச்சி மலைகளின் பசுமையும்.. மலை முகடுகளில் மையம் கொண்டிருந்த மேகங்களும்.. சரிவில் யாரோ பச்சை வண்ணத்தில் கட்டம் கட்டி வைத்திருப்பதைப் போன்ற தேயிலைப் பாத்திகளும்.. அடர்ந்த காடுகளும்.. செடி கொடிகளும்.. அருவிகளும்.. நீரோடைகளும் என புதியதோர் உலகம் ப்ரீதியை ஈர்த்ததில் பரவசப் பட்டு அப்படியே நின்று விட்டாள்..

“வாவ்.. உங்க ஊர் ரொம்பவும் அழகுடி ஆர்த்தி..”

நொடிப்பொழுதில் கேள்விகளை மறந்து இயற்கையின் அழகில் லயித்து விட்ட ப்ரீதியின் குழந்தைத்தனத்தில் கரைந்த போன ஆர்த்தி..

“நாளையில் இருந்து ஊரைச் சுற்றிப் பார்க்கலாம்..” என்றாள்..

“காடு..”

“காடில்லாத ஊரா..?”

“அப்பச்சரி..”

ப்ரீதி உற்சாகத்துடன் ஆர்த்தியின் பின்னால் போனாள்.. அவளுக்கான அறையின் கதவு திறந்து விடப் பட்டது.. மறுபடியும் ஒரு ‘வாவ்..’ கன்னங்களில் கை வைத்து விழி விரித்தல்..

“உலக அழகி பட்டத்த ஜெயிச்சவ கூட இப்படி ரியாக்ட் பண்ண மாட்டாடி..” தலையில் அடித்துக் கொண்டாள் ஆர்த்தி..

அழகாக விரிந்து பரந்த அறையில் கனத்த திரைச்சீலைகள் மறைத்த கண்ணாடி ஜன்னல்கள்.. அதன் பக்கத்தில் சதுரம் கட்டிப் போடப்பட்டிருந்த சோபாக்கள்.. நடுவில் கண்ணாடி டீப்பாய்.. தரை முழுவதும் காஷ்மீர் கம்பளம்.. இந்தப் பக்கமாக சுவரில் பெரிய டி.வி. அதற்கு நேர் எதிரே பெரிய கட்டில்.. நுரை மெத்தை.. அருகே கண்ணாடி டீப்பாய்.. அறையின் நடுவே இருந்த கதவைத் திறந்தால் உடை மாற்றும் அறை.. சுவர் முழுவதும் அலமாரிகள்.. 

நடுவே டிரஸ்ஸிங் டேபிளும், ஆளுயுயரக் கண்ணாடியும்.. அதையொட்டிக் குளியலறை..

“செம.. செம.. செமடி..”

ஆர்த்தி பதிலேதும் சொல்லவில்லை.. இப்படி வியக்கும் ப்ரீதி பங்களாவாசி.. பூனாவில் கங்காதரன் சொந்தமாக ஆட்டோமொபைல் ஷாப்பும், டிபார்ட்மெண்டல் ஸ்டோரும் நடத்தி வந்தார்.. வி.ஐ.பி ஏரியாவில் பங்களா, கார் என்று இருப்பவரின் மகள்தான் ப்ரீதி.. அவளே வாய் பிளக்கிறாள் என்றால் அது மிகையல்ல.. அரண்மனை போன்ற அந்த மாளிகையின் அழகும், செல்வச் செழிப்பும், நேர்த்தியும் அப்படிப்பட்டதுதான்.. அதன் அருகே கூட கங்காதரனின் வசதி வந்துவிட முடியாது..

“ரசித்தது போதும்..”

“எனக்குப் போதாதே ஆர்த்தி..”

“இங்கேதானே இருக்கப் போகிற.. கொஞ்சம் கொஞ்சமாய் ரசித்துக்கலாம்..”

ஆர்த்தி கதவை அடைத்து விட்டுப் போனாள்.. உள்ளே தாழிட்ட ப்ரீதி.. ஜன்னலை மறைத்திருந்த கனத்த திரைச்சீலையை விலக்கிளாள்.. ஹாலில் பார்த்த அதே இயற்கை காட்சி.. கானகத்தின் மத்தியில் அவள் இருப்பதைப் போன்ற உணர்வு.. சற்றுநேரம் அப்படியே நின்றவள் மூட மனமின்றி திரைச்சீலையை இழுத்து மூடினாள்..

வனிதாமணி கொண்டு வந்து வைத்திருந்த பெட்டிகளை உடை மாற்றும் அறைக்குள் இழுத்துச் சென்றவ்ள அங்கிருந்த சுவர் அலமாரியில் பெட்டியிலிருந்த உடைகளை எடுத்து சீராக அடுக்கி வைத்தாள்.. காலி பெட்டிகளை மூடி அலமாரியின் அடித்தட்டில் வைத்தவள் வெட்டி முறித்து விட்டதைப் போல கைகளை நெட்டி முறித்தாள்.. குளியலறைக்குள் எட்டிப் பார்த்தவள் மயங்கி விழாத குறைதான்.. மிகப் பெரிய அறையொன்றை குளியலறையாக மாற்றி அமைத்திருந்ததைப் போல அது பெரிதாக இருந்தது.. நீண்டு அகன்ற பாத்-டப்பில் வெந்நீரை நிரப்பிக் கை – கால்களை நீட்டிப் படுத்தவளுக்கு அலுப்பெல்லாம் ஓடி விட்டது.. சடுகுடு விளையாடாத குறைதான்.. குளித்து உடை மாற்றிக் கட்டிலில் விழுந்தவளைக் கனவுகளற்ற தூக்கம் ஆக்ரமித்துக் கொள்ள.. இமைகள் செறுக சரிந்தவள் தூங்கி விட்டாள்.. அறையின் காலிங் பெல் அலறி அவளை எழுப்பி விட்டது.. ப்ரீதிக்கு எழுந்து கொள்ள மனமில்லை.. அவளது ஆழ்ந்த தூக்கத்தைக் கலைத்தது யார் என்ற கோபத்தோடு போய் கதவைத் திறந்தால்..

“ஹிஹி.. அம்மா..” என்று லேடி மதன்பாப்பாக வனிதாமணி நின்றிருந்தாள்..

அலறாத குறையாக தன்னையுமறியாமல் பின் வாங்கிய ப்ரீதிக்குத் தூக்கம் பறந்து விட்டது..

“வ…வ.. வனிதா..” என்றாள்..

“ஹி..ஹி.. என் பேரு.. ஹி..ஹி.. வ.. வ.. வனிதா இல்லம்மா.. ஹி..ஹி.. வனிதாமணி..”

“என்னவோ ஒன்று.. இப்போ எதுக்கு என் தூக்கத்தை விரட்டின..?”

“நான் எங்கேம்மா விரட்டினேன்..?”

தன்மீது சுமத்தப்பட்ட அபாண்டமான குற்றச்சாட்டில் சிரிக்க மறந்த வனிதாமணி ஓடி விட்ட தூக்கத்தைத் தேடிப் பிடித்துக் கொண்டு வந்து விடவேண்டும் என்ற தீவிரத்தோடு அறைக்குள் எட்டிப் பார்த்தாள்..

“இங்கே ஒன்றுமேயில்ல..” தூக்கம் கலைந்த எரிச்சலுடன் சொன்னாள் ப்ரீதி..

“ஹி..ஹி.. நீங்க இருக்கீங்களேம்மா..”

“அதுக்கு..?”

“ஒன்றுமேயில்லைன்னு.. ஹிஹி.. சொல்கிறீங்களேம்மா.. ஹிஹி.”

சிரிக்கும் போது வனிதாமணி வேறு விதமான அழகோடு மிளிர்ந்தாள்.. சிரிப்பு என்பது மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்வைத் தரும் அருமருந்து..! சிரிக்கத் தெரிந்தவர்கள் பாக்கியசாலிகள்..! வனிதாமணியின் சிரிப்பைப் பார்த்து பயந்து பூனாவுக்கு ஓடிவிடாமலிருக்க இப்படியெல்லாம் நினைத்துத் தன்னைத் தேற்றிக் கொண்டாள் ப்ரீதி..

வேறு வழியில்லை.. விசாகா அத்தை இருக்கும் அந்த அரண்மனையில் கொஞ்ச காலம் தங்க வேண்டுமென்றால் வனிதாமணியின் சிரிப்பை ரசிக்கக் கற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்..

“பரவாயில்லையே.. நீ கூட ஜோக் அடிக்கிறயே..”

“நிஜமாவாம்மா..?”

பாராட்டைக் கேட்ட பரவசத்தில் சிரிக்க மறந்தாள் வனிதாமணி.. அவளை திசை திருப்ப இப்படியொரு வழியுண்டு என்று கண்டு பிடித்து விட்டதில் தன்னை கொலம்பஸ் போல உணர்ந்து புளகாங்கிதப்பட்டுப் போனாள் ப்ரீதி.. இல்லையென்றால் வனிதாமணி சிரித்துச் சிரித்தே ப்ரீதியை ஒருவழியாக்கி பூனாவிற்கு ஓட்டி விட்டு விடுவாளே..

‘இதை இப்படியே விட்டு விடக் கூடாது.. ப்ரீதி.. கோழியை அமுக்கிறயோ இல்லையோ.. இவளை அமுக்கிருடி..’

ப்ரீதி வனிதாமணியை உற்றுப் பார்த்ததில் உவகை கொண்டாள் வனிதாமணி.. வடக்கத்திய ஊரிலிருந்து வந்திருக்கும் அழகி அவளை உற்றுப் பார்ப்பது பெருமையல்லவா..

“என்னம்மா.. அப்படிப் பார்க்கறீங்க.. ஹிஹி..”

“ஆரம்பிச்சுட்டியா.. இந்த ‘ஹிஹி’ யை கொஞ்ச நேரம் ஏறக்கட்டேன்..”

“எப்படிம்மா..? ஹி..ஹி..”

“ஆக்சுவலா வனிதாமணி.. நீ சிரித்தா..”

“நான் சிரித்தா..?”

ப்ரீதி என்ன சொல்லி பாராட்டப் போகிறாள் என்ற எதிர்பார்ப்பில் வனிதாமணியின் கண்கள் மின்னின..

‘பாராட்டைக் கேட்டா மட்டும் சிரிக்க மறந்து விடறா..’

அப்படியே வனிதாமணியின் தலையில் ஓங்கி ஒரு குட்டு வைக்க ப்ரீதியின் கை பரபரத்தது.. அடக்கிக் கொண்டாள்.. குட்டு வைப்பது தற்காலிகத் தீர்வு.. ப்ரீதி நிரந்தரத் தீர்வைக் கண்டு பிடித்தாக வேண்டும்.. தற்காலிகத் தீர்வு வேலைக்கு ஆகாது..

நீ சிரித்தால் தீபாவளி என்ற பாராட்டைக் கேட்கக் காத்திருந்த வனிதாமணியின் காதுகளில்..

“நீ சிரித்தா அச்சு அசல் லூசு போலவே இருக்கு..” என்ற வார்த்தைகள் வெந்நீர் போல பாய்ந்தன..

“அம்மா..” அலறினாள் அவள்..

“அதிகமாப் பேசற ஆம்பளையையும் அதிகமாச் சிரிக்கிற பொம்பளையையும் பார்க்கச் சகிக்காதுன்னு சொல்வாங்க வனிதாமணி..”

“யாரும்மா சொல்லுவாங்க..?”

‘யார் சொல்வாங்க..?’ ப்ரீதிக்கும் தெரியவில்லை..

வனிதாமணியின் சிரிப்பை (இளிப்பை) நிறுத்த அவள் வாய்க்கு வந்த எதையோ சொன்னால் வனிதாமணி குறுக்குக் கேள்வி கேட்பாளா..? இப்போது யார் சொன்னது என்பதை சொல்லியாக வேண்டுமே..

“ஆ.. பெரியவங்க சொல்வாங்க..” ப்ரீதி கண்டு பிடித்துச் சொல்லி விட்டாள்..

“அப்படிங்களாம்மா..?” பெரியவர்கள் என்றதும் வனிதாமணி அடங்கி விட்டாள்..

“ஆமாம் வனிதாமணி.. நீ பார்க்க அழகா இருக்கிற..”

“அப்படிங்களா..?”

வனிதாமணி வாயெல்லாம் பல்லானாள்.. இந்த சந்தோசத்தில் சிரித்துத் தொலைத்து விடப் போகிறாளே என்று ப்ரீதிக்கு ‘பக்.. பக்’ என இருந்தது.. அவள் பயந்ததைப் போல எதுவும் நிகழ்ந்து விடவில்லை.. ஆன்றோரின் வாக்கிற்குக் கட்டுப்பட்டவளாய் வனிதாமணி சிரிப்பைத் துறந்திருந்தாள்.. அப்பாடி என்ற மன நிம்மதியுடன்..

“அப்படித்தான் வனிதாமணி.. அமைதிதான் பெண்களுக்கு அழகு..” என்றாள் ப்ரீதி..

‘நீ மட்டும் ஏன் வாயடிக்கிற..?’ ப்ரீதியின் மனச்சாட்சி குறுக்கிட்டது..

‘நீ வாயை மூடு..’ ப்ரீதி மனச்சாட்சியை அடக்கி வைத்தாள்..

“நீங்க சொன்னா சரிங்கம்மா.. கீழே உங்களை சாப்பிட வரச் சொன்னாங்கம்மா..” கதவைத் தட்டிய காரணத்தைச் சொன்னாள் வனிதாமணி..

“இதை அப்பவே சொல்லியிருக்கலாமே..”

“மறந்துட்டேன்..”

“இனி மறக்காதே..”

துள்ளி ஓடிய வனிதாமணியைப் பார்த்தபடி அறைக்கதவை மூடிய ப்ரீதியின் வாய் தன்னிச்சையாக பாடி வைத்தது..

“வனிதாமணி.. வனமோகினி..

வந்தாடு….”

பாடியபடியே திரும்பியவள் அப்படியே நின்று விட்டாள்..

ஹாலில் ஜன்னலோரமாக நின்று நெடிய பெரியவருடன் பேசிக் கொண்டிருப்பது யார்..? அவனா..?

0Shares

Reviews – aaranyam azhakanathu / ஆரண்யம் அழகானது

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • X (Twitter)
  • Email
  • Copy Link
Copy link