Chapter 08

0Shares

காயாத கானகத்தில்

மேயாத மான் மனதில்

நர்த்தனமிடுவது உன் நினைவுகள் மட்டுமே..

‘நான் காண்பது கனவா.. இல்லை நனவா..?’

இமை கொட்டி விழித்தாள் ப்ரீதி.. அவன் நின்ற இடத்திலேயே நின்றிருந்தான்.. இமைகளைக் கசக்கி விட்டு விழித்துப் பார்த்தாள்.. அவன் உருவம் மறையவில்லை.. ஆரண்யத்தில் அவளை அதட்டியவன் அந்த அரண்மனையின் சொந்தக்காரனைப் போல வெகு சுவாதீனமாக தொண்டைமானுடன் பேசிக் கொண்டிருந்ததில் இவள் திகைத்துப் போனாள்..

‘இவன் எப்படி இங்கே..?’

அவளுக்குப் புரியவில்லை.. அடிமேல் அடியெடுத்து வைத்து நடந்தாலும் அவள் அவர்களை நெருங்கி விட்டாள்.. பேசியபடியே அவன் அவளைத் திரும்பிப் பார்த்து விட.. இவளுக்கு ‘திக்’கென்று ஆகி விட்டது.. அவனை மறுபடி பார்ப்போமா என்று நினைத்தவள்தான்.. இப்படியொரு அரண்மனையில் சந்திப்பாள் என்று நினைக்கவில்லையே..

அவளைக் கண்டதும் அவனது பார்வையில் வந்து போனது என்ன..? மின்னலா..?

எங்கே.. அவன்தான் நொடிப் பொழுதிற்கு மேல் உணர்ச்சிகளை முகத்தில் தக்க வைத்துக் கொள்ள மாட்டானே.. அவன் திரும்பிப் பார்த்ததில் தொண்டைமானும் திரும்பிப் பார்த்து விட்டு..

“இந்தப் பெண் நம் அரண்மனைக்கு விருந்தாளியாக வந்திருக்கிறாள் சித்தார்த்.. விசாகாவின் அண்ணன் மகளாம்.. ஊர் பூனாவாம்..” என்று அவனிடம் சொன்னார்..

‘இவன் பெயர் சித்தார்த்தா.. ஆளைப் போலவே பெயரும் நல்லா இருக்கு..’ அவள் மனம் ஜொள்ளியது..

“ஓ..” அப்போதுதான் அவளைப் பார்ப்பதைப் போல அவன் பாதாதி கேசம் முதல் பார்வையிட..

‘ஆரம்பிச்சுட்டாண்டி.. ஆரம்பிச்சுட்டான்..’ என்று அவளது மனம் குதூகலமடைந்தது..

‘எதுடா சாக்குன்னு இருப்பான் போல.. சைக்கிள் கேப்பில பிளேனையே ஓட்டிடறான்..’

அவள் அவனைக் குறும்பாக பார்த்த பார்வை உன்னை நான் அறிவேன் என்றது.. ஆரண்யத்தில் அவளை அறிந்திருந்தவனோ.. அவளை முன்பின் பார்த்திராதவன் போல..

“ஆர்த்தியின் மாமன் மகளா..?” என்றான்..

ப்ரீதிக்கு அவனை வம்பிழுக்க வேண்டும் போல இருந்ததில்..

“ஆதவனுக்கும் மாமன் மகள்..” என்றாள்..

சட்டெனத் திரும்பிப் பார்த்தவனின் கண்கள் தீக்கங்குகள் போல ஜொலித்ததில் அவளது முதுகுத் தண்டு ஜில்லிட்டது.. சீற்றத்துடன் அவன் முறைத்த முறைப்பில் பூனாவுக்கு ஓடிப் போய் விடலாம் போல நடுங்கி விட்டாள்..

‘ஆர்த்தியை மட்டும் கேசுவலா பேசறான்.. ஆதவனைச் சொன்னா மட்டும் துப்பாக்கியைத் தூக்கறான்.. ஆடு பகை.. குட்டி உறவுன்னுதானே பாட்டி பழமொழி சொல்வாங்க.. இவன் என்னடான்னா.. ஆட்டுக்குட்டிகளிலேயே ஆண்குட்டி பகை, பெண்குட்டி உறவுங்கிறதைப் போல பிஹேவ் பண்றானே..’

“கேட்டேனா..?” அவன் உறுமினான்..

‘என்ன கேட்கிறான்..?’ அவள் திருதிருத்தாள்..

“ஆதவன் உனக்கு மாமனா, மச்சானான்னு நான் கேட்டேனா..?”

‘இவன் அதை விட்டு நகரவே மாட்டான் போல..’

ப்ரீதி அழ மாட்டாத குறையாக தொண்டைமானைப் பார்த்தாள்.. அவரும் இவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார்.. சித்தார்த்தனைப் போலவே உணர்ச்சிகள் துடைத்த முகம்.. ஒரு வித்தியாசம் என்னவென்றால் அவ்வபோது அவன் கண்களில் மின்னல் வந்து போகும்.. இவரோ ஒட்டும் இல்லாமல் உறவும் இல்லாமல் கண்டிப்பாக பார்த்து வைத்தார்..

தொண்டைமானைப் பார்ப்பதற்கு சித்தார்த்தனைப் பார்ப்பதே சாலச்சிறந்தது என்று அவன் பக்கமாக திரும்பிக் கொண்டாள் ப்ரீதி.. அவனாவது முறைப்பதில் சிறிதளவு சொந்தத்தைக் காண்பிக்கிறான்.. இந்த மனிதர் ‘யார்.. நீ..?’ என்று தள்ளி நிறுத்துகிறாரே..

‘ஆர்த்தி.. இவங்களிடம் என்னை மாட்டி விட்டுட்டு எங்கேடி போய் தொலைஞ்ச..? சாப்பிடக் கூப்பிட அந்த லேடி மதன்பாய் வனிதாமணியைத்தான் அனுப்பித் தொலைக்கனுமா..? நீ வந்து தொலைத்திருக்கக் கூடாதா..?’

“என்ன..? பதிலைக் காணோம்..”

“தெரியலை சார்.. நானும் தேடிக்கிட்டுத்தான் இருக்கேன்.. இது மலைப்பிரதேசம் பாருங்க.. ஏதாச்சும் பறவை வந்து என் பதிலைத் தூக்கிக்கிட்டுப் போயிருச்சோ என்னவோ..”

கையை விரித்து அவள் பதில் சொன்ன பாணியில் அவனது உக்கிரம் குறைந்ததைப் போல இருந்தது.. தொண்டைமானைப்பற்றி அவள் கவலை கொள்ளவில்லை.. அவர் கண்களை விரித்தால் அவளுக்கென்ன.. கண்களை இடுக்கினால் அவளுக்கென்ன..? 

“அப்ப.. பதில் சொல்ல மாட்ட..?”

“என்னத்தைப் பதில் சொல்றது..? ஆதவன் எனக்கு அத்தான்.. நீங்க என்னடான்னா மாமனா, மச்சானான்னு கேட்கறிங்க..”

வேண்டுமென்றே சொன்னாள்.. ஆதவனை அவள் அத்தான் என்று சொன்னால் அவனுக்கு மிளகாயைக் கடித்ததைப் போல இருக்கும் என்று தெரிந்து கொண்டேதான் சொன்னாள்.. அவள் எதிர்பார்த்தைப் போலவே அவன் உக்கிரமூர்த்தியாக இவள் சிட்டாகப் பறந்து படிகளில் இறங்க ஆரம்பித்தாள்..

“இந்தப் பெண்ணை உனக்குத் தெரிந்திருக்கிறது போல..”

தொண்டைமான் சித்தார்த்தனிடம் கேட்டுக் கொண்டிருந்தது இவள் காதில் விழுந்தது.. அவன் என்ன பதிலைச் சொல்கிறான் என்று கேட்க வேண்டுமென்றால் நிற்க வேண்டும்.. அப்போதைக்கு அது முடியாது.. நில்லாமல் ஓடி விடுவதே நல்லது என்பதினால் அவர்களது உரையாடலைக் கேட்காமல் அவள் ஓடி விட்டாள்..

மூச்சிரைக்க டைனிங் ஹாலுக்கு வந்தவளைப் பார்த்த விசாகா பதறிப் போனாள்..

“ஏன் கண்ணு.. இப்படி ஓடி வர்ற..?” என்று தாங்கிப் பிடித்துத் தோளில் சாய்த்துக் கொண்டாள்..

“அத்தையும், மருமகளும் கொஞ்சியாகிறதா..?”

ப்ரீதியைத் தின்று விடுவதைப் போல பார்த்தபடி ஆதவன் வந்தான்.. விசாகாவின் முகம் விகசித்தது..

“உனக்கு ஏண்டா பொறாமை..?” செல்லமாக அதட்டினாள்..

ப்ரீதி குற்ற உணர்வுடன் விலகிக் கொண்டாள்.. விசாகாவின் மனதிலிருந்த ஆசை வெளிப்படையாகவே தெரிந்தது.. அவள் ப்ரீதியை அண்ணன் மகளாக மட்டும் பார்க்காமல் ஆதவனின் வருங்கால மனைவியாக.. அவளது வருங்கால மருமகளாகப் பார்க்க ஆரம்பித்து விட்டதை ப்ரீதியால் உணர முடிந்தது.. அவளுக்குச் சங்கடமாக இருந்தது.. இயல்பான சொல்லாடல்கள் கூட இனி மறைமுகமாக இந்த உறவை உணர்த்த ஆரம்பிக்கும்..

‘இங்கே வந்தது சரிதானா..?’

சஞ்சலப்பட்டபோது சித்தார்த்தனின் முகம் மனதில் வந்தது.. நெருஞ்சி முள்ளாய் நெருடிய வேதனை மறைவதைப் போல இருந்தது.. இது என்ன புது வேதனை என்று அவன் முகத்தை ஒதுக்க முயன்றாள் ப்ரீதி.. அவன் யாரோ, எவரோ.. ஆரண்யத்தில் பார்த்தவன் அவளது அத்தையின் வீட்டில் இருக்கிறான்.. அறியாத ஒருவனைப் பற்றிய நினைவுகள், அவளது மன வேதனைக்கு மருந்தாகி விடுமா..? ஒட்டுறவு இல்லாதவனின் நினைவு அவளது மன வலிக்கு ஒத்தடம் கொடுத்திட முடியுமா..?

“உட்காரும்மா..”

மாறனின் குரலில் உடல் தூக்கிப் போட்டது.. அவர் டைனிங் டேபிளின் முன் இருந்த நாற்காலிகளில் ஒன்றில் அமர்ந்திருந்தார்.. இவர் எப்போது வந்தார் என்று திகைப்பாக இருந்தது.. அந்த அளவிற்கா அவள் சிந்தனையில் இருந்தாள்..?

“இங்கே உட்கார்..”

மாறனுக்கு எதிரே உட்கார்ந்திருந்த ஆதவன் அவனுக்குப் பக்கத்தில் இருந்த நாற்காலியைக் காட்டினான்.. பேசாமல் பசிக்கவில்லை என்று சொல்லிவிட்டு ஓடி விடலாமா என்று யோசித்தாள் ப்ரீதி.. அவன் பக்கத்தில் உட்கார்ந்தால் ஓர் விள்ளல் கூடத் தொண்டையில் இறங்காதே..

“என்னடி கும்பகர்ணி.. இப்பத்தான் தூக்கம் கலைந்ததா..?” துள்ளிக் குதித்தபடி ஆர்த்தி வந்து சேர்ந்தாள்.

இவள் மட்டும் எப்படிக் கவலையில்லாமல் கன்றுக் குட்டியைப் போலத் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறாள் என்று ப்ரீதிக்குப் பொறாமையாக இருந்தது.. ஆர்த்திக்கு என்ன.. மனம் போல வாழ்வு அமையப் போகிறது.. ப்ரீதியின் அண்ணனான பிரசாத்திற்கு ஆர்த்தியைப் பிடிக்கும்.. அதைவிட, ஆர்த்திக்குப் பிரசாத்தை ரொம்பவும் பிடிக்கும்..

‘எனக்கு மட்டும் ஏன் ஆதவன் அத்தானைப் பிடிக்கலை..?’

ப்ரீதி ஆதவனைப் பார்த்தாள்.. அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்ததில் அரண்டு போனாள்… யதேச்சையாகப் பார்வையைத் திருப்பியவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது.. டைனிங் ஹாலுக்கு அடுத்து இருந்த அறையில் சித்தார்த்தன் நின்றிருந்தான்.. நின்றிருந்தவன் இவர்களின் பார்வைப் பரிமாற்றத்தைக் கவனித்து விட்டானோ என்னவோ.. உர்ரென்று அவளை உறுத்துப் பார்த்தான்..

‘போங்கடா டேய்..’

ப்ரீதிக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது.. மேற்கு தொடர்ச்சி மலைகளில் அருவி கொட்டும், அழகான வனப்பகுதியில் குடில் போட்டு தவம் செய்யப் போய்விட வேண்டுமென்று உத்தேசித்தாள்..

‘ஆண் வாடையே அங்கிருக்கக் கூடாது.. ஆரண்ய வாடை மட்டும் போதும்.. செடியும் கொடியும் நதியும் அருவியும்ன்னு பசுமையா இயற்கையோடு இயற்கையாக் கலந்து வாழ்ந்து விட்டுப் போயிடனும்..’

சுற்றிலும் நிசப்தமாக இருந்ததில் ஏனிந்த பேரமைதி என்று திகைத்துப் போனாள் ப்ரீதி.. சுற்றிலும் பார்த்தாள்.. தவறு செய்து விட்டவரைப் போல மாறன் தலைகுனிந்து அமர்ந்திருந்தார்.. அங்கே நிற்கலாமா வேண்டாமா என்று யோசிப்பதைப் போல விசாகா புடவைத் தலைப்பின் முனையைத் திருகிக் கொண்டிருந்தாள்.. ஆதித்தன் கடுகடுவென டைனிங் டேபிளை வெறிக்க.. ஆர்த்தி உதட்டைக் கடித்தபடி டைனிங் டேபிளின் மீது விரலால் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்..

‘இவங்கள்ளாம் ஏன் இப்படி பேஸ்தடித்ததைப் போல முழிக்கிறாங்க..’ ப்ரீதிக்கு மண்டை காய்ந்தது..

இது என்ன அத்தையின் வீடா.. இல்லை மர்ம தேசமா..?

ப்ரீதியை முறைத்துக் கொண்டிருந்த சித்தார்த்தன் அங்கிருந்து அகன்றதும் அனைவரின் முகத்திலும் ஆசுவாசம் வந்தது..

“வாடி சாப்பிடலாம்..”

ஆர்த்தி குதித்தபடி மாறனின் பக்கத்தில் உட்கார்ந்து ப்ரீதியைத் தன் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டாள்.. அப்பாடி என்றிருந்தது ப்ரீதிக்கு.. இனி நிம்மதியாகச் சாப்பிடலாம்..

சிரித்த முகத்துடன் விசாகா பரிமாறத் தயாரான போது மெதுவான குரலில் மாறன் வினவினார்..

“அவன் சாப்பிட்டானா..?”

ஆதவன் பல்லைக் கடித்தபடி தகப்பனை முறைத்தான்..

“அவனும் அவனுடைய தாத்தாவும் சாப்பிடாமல் நாம் சாப்பிட முடியுமா..? எந்தக் காலத்தில் அவங்க சமபந்தி போஜனத்துக்கு வந்திருக்காங்க..? உரிமைப் பட்டவங்க முதலில் சாப்பிட்டு விடுவாங்க.. உரிமையில்லாதவங்க அடுத்த பந்தியிலதான உட்கார்ந்தாகனும்..? இத்தனை வருசங்களா இப்படித்தானே நடந்துக்கிட்டு இருக்கு.. புதிதா என்ன கேள்வி கேட்கறிங்க..?”

திக்குத் தெரியாத கானகத்தில் மாட்டிக் கொள்வது என்பது இதுதானா..? ப்ரீதிக்கு கண்களைக் கட்டிக் கொண்டு வந்தது.. எதுவும் புரியவில்லை.. எதுவும் இயல்பாகவும் இல்லை.. அனைத்தும் விந்தையாகவும் விசித்திரமாகவும் இருக்கிறதே..

“உஸ்ஸ்.. ப்ரீதி இருக்கிறா..” விசாகா மகனை அடக்க முயன்றாள்..

“இருக்கட்டுமே.. அவளும் தெரிந்துக்கட்டும்.. எத்தனை நாளைக்குத்தான் அவளிடம் மறைப்பீங்க..? பூனாவில் அவள் இருந்தவரை இது ரகசியம்.. இப்போது நாம் வாழும் வாழ்வின் லட்சணத்தைப் பார்க்க நேரில் வந்திருக்கிறாள்.. இன்றைக்கு உங்க அண்ணன் மகள், எனக்கு மாமன் மகள்.. நாளைக்கு எனக்கு மனைவி.. உங்களுக்கு மருமகள்.. எத்தனை நாளைக்குத்தான் அவளிடமிருந்து உண்மையை மறைப்பீங்க..? சொல்லுகிற நேரம் வந்தாச்சு சொல்லித்தானே ஆகனும்..?”

ப்ரீதிக்கு ஆதவன் பேசியது கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை.. அந்த மாளிகையில் என்னதான் நடந்து கொண்டிருக்கிறது என்று அறிய அவளுக்கும் ஆவலாகத்தான் இருந்தது.. அதிலும் சித்தார்த்தனை ஏன் ஆதவன் வில்லனைப் போலச் சித்தரிக்கிறான் என்று தெரிந்து கொள்ள மிகவும் விரும்பினாள்.. அதற்காக ஆதவனின் வருங்கால மனைவி என்ற அடையாளத்தை ஏற்றுக் கொள்ள வேண்டுமானால் அந்த விவரங்கள் அவளுக்குத் தெரியவே வேண்டாம்..

“நேரம் வரும்போது அதைப் பார்த்துக்கலாம் அத்தான்.. எதையும் தெரிந்துக்கனும்னு எனக்கு இண்ட்ரெஸ்ட இல்லை.. பசி வயிற்றைக் கிள்ளுது.. டைனிங் டேபிளில் வேற வெரைட்டிஸ் நிறைய இருக்கா.. என் இண்ட்ரெஸ்ட் எல்லாம் இதுமேல்தான் இருக்குது..” ப்ரீதி தன் முன் இருந்த பிளேட்டில் தாளம் போட..

“இவ இருக்காளே..” என்று சிரித்தாள் ஆர்த்தி..

விசாகாவும் சிரித்து விட்டாள்.. மாறன் மெலிதான புன்னகையுடன் மைத்துனன் மகளைப் பார்க்க.. ப்ரீதி வெள்iயாக சிரித்து வைத்தாள்.. கலகலப்பாக அவர்கள் சாப்பிட ஆரம்பிக்க ஆதவன் மட்டும் கடுகடுவென இருந்தான்.. அவனது முகம் இருண்டிருந்தது.. ப்ரீதியின் மறைமுகமான விலகலை அவன் மனம் புரிந்து கொண்டிருந்தது.. எந்தச் சூழலிலும் அவள் அவனை வருங்காலக் கணவன் என்று குறிப்பிடவே இல்லை.. விசாகாவை அத்தை என்று அழைத்தாள்.. மாமியார் என்று ஒப்புக் கொள்ளவில்லை..

அவள்மீது அவனுக்கு ஈர்ப்பு இருக்கிறது.. அவன்மீது அவளுக்கு பாசம் மட்டும்தானே இருக்கிறது..? ஈர்ப்பு ஏன் வரவில்லை..? அவனுக்கு என்ன குறை..?

0Shares

Reviews – aaranyam azhakanathu / ஆரண்யம் அழகானது

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • X (Twitter)
  • Email
  • Copy Link
Copy link