Chapter 14
சலனமற்ற பெண் மனதில்
கல்லெறிந்து கலக்கி விட்டு
வியாக்கினமா பேசுகிறாய்..?
இந்த நொடிவரை அவன் யாரென்றே அவளுக்குத் தெரியாது.. அவன் பெயர் தெரியும்.. ஊர் இதுதான் என்று அவன் சொல்லியிருக்கிறான்.. அந்த அரண்மனையில் அனைத்து அதிகாரங்களுடன் தங்கியிருக்கிறான்.. ஆனால் அவன் யார் என்று தெரியாது.. தொண்டைமான் யாரென்றும் தெரியாது.. விசாகாவின் குடும்பத்திற்கும் அவர்களுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியாது..
இப்படித் தெரியாத ஒருவனுக்காக அவள் மனம் துடிக்கிறது.. அவன் பார்வை முறைக்கிறது என்றால் இதை என்னவென்று சொல்வது..?
ஏதோ செய்யக்கூடாத தவறை செய்து விட்டவளைப் போலத் தலையைக் குனிந்தபடி ஓடி விட்டாள் ப்ரீதி.. உள்ளே போனால் கள் குடித்தவனைப் போல போதையுடன் நின்றிருந்தான் ஆதவன்.. சித்தார்த்தனை நிமிர்ந்து கூடப் பார்க்காமல் ப்ரீதி ஓடி வருகிறாளாம்.. அதில்
அவனுக்கு அவ்வளவு போதை.. சினத்துடன் உள்ளே வந்த சித்தார்த்தன் இதில் மேலும் உக்கிரமாக இவள் நடுங்கிப் போனாள்..
‘ஏண்டா அத்தான் நீ வேற இப்படிப் படுத்தித் தொலைக்கிற.. நான் ஓடி வருகிறதுக்கான காரணமே வேறடா..’ தலையில் அடித்துக் கொள்ளலாம் போல இருந்தது..
“ப்ரீதி.. என் செல்லமே..” விசாகாவின் குரல் கேட்டது.
‘ஹைய்யோ.. அடுத்த அட்டாக் ஆரம்பமாகிருச்சே..!’
ப்ரீதி பதறிப் போய் சித்தார்த்தனைப் பார்த்தாள்.. சிவந்த கண்கள் மேலும் சிவக்க ஆரம்பித்ததில் காபியும் வேண்டாம்.. டிபனும் வேண்டாம் என்று மாடிப் படிகளில் தாவியேற யத்தனித்தாள்..
‘இவங்க ஒரு குறிக்கோளுடன்தான் இருக்காங்க.. இவங்க பகைக்குத் தொட்டுக் கொள்ள நான் என்ன ஊறுகாயா..? நல்லா இருக்கே.. நான் போறேன் பூனாவுக்கு..’
விசாகா அழைக்கும் குரல் காதில் கேட்காததைப் போல ப்ரீதி விரைவதைப் பார்த்தபடி நின்றிருந்த சித்தார்த்தனின் புருவங்கள் முடிச்சிட்டிருந்தன.. கண்கள் இடுங்க எதையோ ஆழமாக சிந்தித்துக் கொண்டிருந்தான்.. அதைக் கலைப்பதைப் போல
“நீ வேணும்னா உச்ச நட்சத்திரமா இருக்கலாம்… அதுக்காக நினைத்ததை எல்லாம் வாங்கிவிட முடியாது.. உன்னால் வாங்க முடியாததும் உலகத்தில் இருக்கும்..” என்று ஆதவன் செல்போனில் உரத்த குரலில் சொல்லிக் கொண்டிருந்தான்.. சித்தார்த்தனின் பார்வை அவனைப் பொசுக்குவதை லட்சியமே பண்ணவில்லை.. தன் போக்கில் பேசித் தள்ளிக் கொண்டிருந்தான்..
“ஊரைச் சுற்றிக் காட்டுவியாம்.. எஸ்டேட்டைச் சுற்றிக் காட்டுவியாம்.. யாராலும் கேட்க முடியாதாம்.. இப்ப என்ன ஆச்சு..? சம்பந்தப்பட்டவளே உன் காரில் ஏற முடியாதுன்னு சொல்லியாச்சு.. ஊரை நீ சுற்றிக் காட்ட வேண்டாம்.. நான் சுற்றிப் பார்த்துக்குவேன்னு சொல்லியாச்சு.. யாரு அவ..? என்ன்ன் மாமன் மக..”
ஆதவன் ‘என்ன்ன்’ என்று கொடுத்த அழுத்தத்தில் சித்தார்த்தனின் இமைகள் துடித்தன.. ஆதவன் எதிர்பாராத நொடியில் அவன் கையிலிருந்த செல்போனை பிடுங்கி தன் காதில் வைத்தான்.. மறுமுனை நிசப்தமாக இருந்தது.. சித்தார்த்தனின் கண்களில் தீப்பொறி பறந்தது..
“நினைச்சேண்டா..” என்றான் எகத்தாளமாக..
ஆதவன் அகப்பட்டு விட்டதில் குன்றிப் போனாலும் அதை மறைத்துக் கொண்டு..
“என்ன நினைச்சீங்க..?” என்று எகிறினான்..
“ஆளே இல்லாத கடையில் டீ ஆத்தறதைப் பற்றித்தான் கேள்விப்பட்டிருக்கேன்.. யாருமே பேசாத செல்போனில் தானாப் பேசிக்கிறதை இப்பத்தான் பார்க்கிறேண்டா.. இப்படி இன்டீசன்டா பிஹேவ் பண்ண உனக்கு சொல்லியா தரனும்..?”
“மைண்ட் யுவர் டங்..”
“இதை நான் சொல்லனும்.. எங்கே வந்து யாரை ஜாடை பேசற..? தைரியமிருந்தா நேருக்கு நேராப் பேசனும்..”
“அதுதான் பேசிட்டாள்ல..”
ஆதவனின் இதழ்கள் இகழ்ச்சியாக மடிந்தன.. சித்தார்த்தனின் ரத்தம் கொதிக்க ஆரம்பித்தது.. அவனிடம் நேருக்கு நேர் நின்று பேச அஞ்சும் ஆதவனின் விழிகளில் தெரிந்த ஏளனம் சித்தார்த்தனை பாதித்தது..
“என்ன சொல்கிற..?”
“நேருக்கு நேராய் நின்று பேசனும்னு சொன்னீங்கள்ல.. அதைச் சொன்னேன்.. என் மாமன் மகள்.. என் அம்மாவின் அண்ணன் மகள்.. நேருக்கு நேராய் நின்றுதானே பேசினாள்.. காரில் வான்னு கூப்பிட்டிங்களாமே.. அவள் வந்தாளா..? வரமாட்டா.. ஏன்னா அவ உடம்பில ஓடறது எங்க குடும்ப ரத்தம்.. என் மாமாவின் வளர்ப்பு அப்படி..”
ஆதவன் பழி தீர்த்துக் கொண்டிருந்தான்.. இப்படிப்பட்ட வாய்ப்புக் கிடைக்குமென்று அவன் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை.. லட்டு போல வாய்ப்பு அவன் கையில் விழுந்திருக்கிறது.. அதை நழுவ விடாமல் கெட்டியாப் பிடித்துக் கொண்டான்.. இதுபோன்ற இனிய வாய்ப்பு அவன் வாழ்நாளில் இனிக் கிட்டுமோ என்னவோ.. கிட்டாது என்பதே சர்வ நிச்சயம்.. சித்தார்த்தன் மன்னன்.. மன்னாதி மன்னன்.. அவன் நிழலை நெருங்கக்கூட ஓர் தகுதியிருக்க வேண்டும்.. ஆதவன் பெற்ற வரமோ இல்லை விசாகா பெற்ற வரமோ.. சித்தார்த்தனின் நிழலில் வாழும் பாக்கியம் கிடைத்திருக்கிறது.. இதில் சித்தார்த்தனை பழி தீர்ப்பது எப்படி..?
சித்தார்த்தனின் விழிகளில் வேட்டைப்புலியின் பளபளப்பு வந்திருந்தது.. வஞ்சம் தீர்க்கும் முனைப்பில் இருந்த ஆதவன் சித்தார்த்தனின் முகத்தில் தெரிந்த வன்மத்தைக் கவனிக்கவில்லை.. சிங்கம் புலியாகக் கூடாது.. நேருக்கு நேர் தாக்கும் சிங்கத்தைப் பதுங்கிப் பாயும் புலியாக்கிக் கொண்டிருந்தான் ஆதவன்..
“ஓ..”
சித்தார்த்தன் மௌனசாட்சியாக வீற்றிருந்த மாறனை ஓர் மௌனப்பார்வை பார்த்தான்.. மாடியேறி விட்டான்.. மாறன் ஓர் பெருமூச்சுடன் நிமிர்ந்தார்.. ஆதவனைப் பார்த்தார்..
“நீ செய்வது நல்லா இருக்கா..?” என்று கேட்டார்..
“நீங்கள் செய்ததை விட நன்றாகத்தான் இருக்கிறது..” ஆதவன் பதிலடி கொடுத்தான்..
மாறன் மறுபடியும் ஓர் பெருமூச்சுடன் மௌனியாகி விட்டார்.. எப்போதும் கணவர் மௌனமானால் ஏதேனும் ஓர் பேச்சைப்பேசி சூழ்நிலையை கலகலப்பாக்கும் விசாகா அன்று அவரது மௌனத்தைக் கண்டு கொள்ளவே இல்லை.. மகத்தான ஓர் செயலை செய்துவிட்ட மகனைப் பாராட்டுவதைப் போல ஆதவனைப் பாராட்டிப் பாராட்டிப் பூரித்துப் போனாள்.. ஆர்த்தியும் கூடச் சேர்ந்து கொண்டதைத்தான் மாறனால் நம்பமுடியவில்லை.. அவரது மகள் நியாயவாதியாயிற்றே.. எப்போதிருந்து இப்படி மாறிப் போனாள்..?
மாடியறைக்குப் போன ப்ரீதி கட்டிலில் வீழ்ந்தாள்.. உடலும் மனமும் சோர்ந்திருந்தன.. ஊருக்குப் போய் விட வேண்டும் என்ற எண்ணம் தீவிரமாக வலுத்தது.. அதுவும் உடனே போய்விட வேண்டும்.. செல்போனை எடுத்தவள்..
“அப்பா..” என்றாள்..
“என்னடா..? ஊருக்கு ரிட்டர்ன் ஆகனுமா..?” கனிவுடன் கேட்டார் கங்காதரன்..
“உங்களுக்கு எப்படித் தெரியும்..?” ப்ரீதி திகைத்தாள்.
“விசாகா சொன்னா..” ஒற்றை வரியில் பதில் வந்தது..
‘அதற்குள் பூனா வரை விசயம் போய் விட்டதா..?’
எதற்காக இந்தக் கொண்டாட்டம்..? ப்ரீதி சித்தார்த்தனைத் தவிர்த்தது தன் சுயமரியாதைக்காக.. தனிப்பட்ட பிரச்னைக்காக.. தொண்டைமானின் வார்த்தைகள் அவளைக் காயப்படுத்தி விட்டதற்காக.. அதை விசாகாவின் குடும்பம் தங்களுக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டு குதிப்பதில் ப்ரீதிக்குத் துளியளவும் விருப்பமில்லை.. அவளறிந்தவரை சித்தார்த்தன் ஓர் கண்ணியவான்.. கண்டிப்பானவன்.. தோரணையானவன்.. ஆனாலும் கனிவானவன்.. அவனுடன் பேச ப்ரீதிக்கு மிகவும் பிடித்திருந்தது.. எந்த ஒன்றையும் மேம்போக்காக சொல்லாமல் ஆழ்ந்து அலசி ஆராய்ந்து அவன் பேசும் விதம் அவளைக் கவர்ந்தது.. தொண்டைமான் பேசியதைக் கேட்க நேர்ந்து விட்டதினால்தானே அவள் அவனைத் தவிர்த்தாள்.. ஆதவனுக்காகவும், அத்தைக்காகவும் அல்லவே..
“இங்கே இருக்கவே எனக்குப் பிடிக்கலைப்பா..”
“ஊரைப் பிடிக்கலையா..?”
“ஊஹீம்.. ஊர் ரொம்ப அழகாயிருக்கு.. இங்கேயே இருந்து விடலாம்ன்னு தோணுது.. சில்லுன்னு காத்தும்.. கொட்டற மழையும்.. எங்கே பார்த்தாலும் அருவியும், பச்சைப் பசுமையுமா ‘ஹப்பா..’ன்னு இருக்கு.. பட்.. இதையெல்லாம் என்ஜாய் பண்ண முடியாத சிச்சுவேசன் இங்கே இருக்குப்பா..”
ஓர்நொடி மௌனமாக இருந்த கங்காதரன்..
“விசாகாவோட வாழ்க்கை சிக்கலானதா ஆகிருச்சும்மா.. அது உன்னையும் பாதிக்கும்ன்னு நான் நினைக்கலை.. ஆதவனோட பேசிப் பழகத்தானே உன்னை அனுப்பினேன்..? நீ ஏன் அவனுடன் அவுட்டிங் போகக் கூடாது..?” என்று கேட்டார்..
“எனக்குப் பிடிக்கனுமேப்பா..” ப்ரீதி பட்டென்று பதில் சொல்லி விட்டாள்..
“சித்தார்த்தனுடன் அவுட்டிங் போக மட்டும் பிடித்திருக்கிறதா..? டோன்ட் மிஸ்டேக் மி மை சைல்டு.. நீ சித்தார்த்தனுடன் அவுட்டிங் போயிருக்கிறாய்.. அதிலிருந்துதான் பிராப்ளம் கிரியேட் ஆகியிருக்கிறது.. அதனால் கேட்டேன்..”
“இந்த சித்தார்த்தன் யாருப்பா..?”
“உனக்குத் தெரியாதா..?”
“உங்களுக்குத் தெரியுமா..?”
கங்காதரன் மகளின் கேள்விக்கான பதிலைச் சொல்லாமல்..
“அங்கே யாரும் உனக்குச் சொல்லவில்லையா..?” என்று கேட்டார்..
“இல்லைப்பா.. யாரும் சொல்லலை.. இன்க்ளூடிங் ஆர்த்தி.. என்னிடம் எதையும் மறைக்காதவள் இந்தக் கேள்விக்கு மட்டும் பதிலைச் சொல்லவே மாட்டேங்கிறா..”
“சொல்லலைன்னா விட்டு விடு.. அது நமக்குத் தேவையில்லாதது..”
“சித்தார்த்தனைப் பற்றி நீங்க கேட்ட கேள்விகான ஆன்சர் இதுதான்ப்பா.. எனக்கு அவனுடன் ஊர் சுற்றிப் பார்க்கப் பிடித்திருந்தது..”
“ப்ரீதி..”
“ஹி இஸ் எ பெர்பெக்ட் ஜென்டில்மேன்.. ஆதவனை விட இவன் பணக்காரன் போல..”
“ம்ம்ம்.. சித்தார்த்தனின் உயரம் ரொம்ப அதிகம்.. நீயும் நானும் நினைத்துப் பார்க்க முடியாத உயரத்திலிருப்பவன்..”
“நினைத்துப் பார்க்கும் உத்தேசமும் எனக்கு இல்லைப்பா.. அவன் பெரிய இவனாவே இருக்கட்டும்.. ஐ டோன்ட் கேர்.. இந்த ப்ரீதி ஒன்றும் பணத்தைப் பார்த்துப் பல்லை காட்டும் ரகமில்லை.. என்னை ஈஸியா யாரும் நினைத்து விடவேண்டாம்..”
ப்ரீதியின் படபடப்பில் கங்காதரன் கவலையாகி விட்டார்..
“அப்பாவிடம் கோபமா கண்ணம்மா..?”
“தெரியலைப்பா.. உங்க மேலே, அத்தை மேலே, மாமா, ஆதவன், ஆர்த்தின்னு அத்தனை பேர் மேலேயும் கோபம்தான் வருது.. ஏன்னு தெரியலை..”
“அங்கிருக்கும் சிச்சுவேசனில நீ அபெக்ட் ஆகியிருக்கிறாய்ன்னு தெரியுது.. லீவ் இட்..”
“ம்ம்ம்..”
“ஆதவனுக்குப் போன் பண்றேன்..”
“எதுக்கு..?”
“உன்னை பூனாவுக்கு கூப்பிட்டுக்கிட்டு வரச் சொல்றேன்.. அவனும் இங்கே பிஸினெஸ் ஆரம்பிக்க பில்டிங் பார்க்கனும்னு சொன்னான்.. நீயும் அவனுடன் போய் உன்னோட ஒப்பினியனைச் சொல்லலாம்.. அப்படியே அவனுடன் பேசிப் பழகி உங்க மேரேஜ் பத்தி நல்ல டிசிசன் எடுக்கலாம்..”
“நல்ல டிசிசன்னா என்னப்பா..? நான் அத்தானை மேரேஜ் பண்ணிக்க ஓகே சொல்லனும்.. உங்களைப் பொருத்தவரைக்கும் தட்ஸ் ஒன்லி எ குட் டிசிசன்..! ஈஸிட்..?”
“பாருடா.. அப்பாவை நீ புரிந்துக்கனும்..”
“என்னையும் நீங்க புரிந்துக்கனும்.. அத்தான் மேல எனக்கு இண்ட்ரெஸ்ட் இல்லை.. எந்தக்காலத்திலும் அது வரவே வராது.. இதை மறந்து விடுங்க.. இதையும் மீறி ஃபோர்ஸ் பண்ணினீங்கன்னா நான் பூனாவுக்கு வராம வேற எங்கேயாச்சும் போயிருவேன்..”
அவள் பூனாவுக்குப் போகப் போவதில்லை.. என்பதை அறியாதவளாய் ப்ரீதி கோபப்பட்டாள்..
“கூல் டவுன் பேபி..”
“நான் பேபியில்லைப்பா.. என் வாழ்க்கை யாருடன் இருக்கணும்னு டிசைட் பண்ணுகிற அளவுக்கு பெரிய பெண்ணாகிட்டேன்.. ப்ளீஸ்.. அண்டர்ஸ்டாண்ட் இட்.. அத்தை மகள்தானே ஆர்த்தி.. அவளை அண்ணாவுக்கு மேரேஜ் பண்ணி வையுங்க.. ஆதவன் அத்தானுக்கு வேறு பெண்ணைப் பாருங்க.. என்னை விட்டுவிடுங்க..”
“ஓகே.. இதுதான் உன் டிசிசன்னா அப்பா உன்னை ஃபோர்ஸ் பண்ண மாட்டேன்.. ஐ ஆக்ரி வித் யு.. உனக்கு பூனாவுக்கு வர டிக்கெட் போட்டு விடுகிறேன்.. நீ தனியாகவே வா..”
கங்காதரனுடன் பேசி முடித்த களைப்பில் கண்மூடிப் படுத்துத் தூங்கி விட்டாள் ப்ரீதி.. செல்போன் அலறியது.. கண்விழித்தால் காலிங் பெல்லும் சேர்ந்து அலறிக் கொண்டிருந்தது.. செல்போனை காதுக்குக் கொடுத்தபடி கதவைத் திறந்து விட்டாள்..
“ஹி..ஹி.. அம்மா..” வனிதாமணி வந்தாள்..
“சொல்லுங்கப்பா.. டிக்கெட் கிடைச்சிருச்சா.. மார்னிங் பிளைட்டா..? அத்தையிடம் நீங்களே சொல்லிட்டிங்களா..? தேங்க்யு அப்பா.. தேங்க்யு வெரிமச்..”
மகளுக்கு வாக்களித்தபடி உடனடியாக பிளைட் டிக்கெட்டை புக் பண்ணியிருந்தார் கங்காதரன்.. அவளது செல்போனில் செய்தி வந்திருந்தது.. தந்தையின் துரித செயல்பாட்டில் மனம் நெகிழ்ந்திருந்தாள் ப்ரீதி.. கான வயலை விட்டுக் கிளம்ப வேண்டும் என்பதில் மனதில் மலைஏறி அமர்ந்தது..
“ஊருக்குப் போறீங்களா..?”
ப்ரீதி கிளம்புகிறாள் என்பதில் லேடி மதன்பாய் வனிதாமணி தன் உடன்பிறப்பான சிரிப்பை மறந்து போனாள்.. அவள் துளைத்துத் துளைத்துக் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொன்ன ப்ரீதிக்குத் தெரியாது.. வனிதாமணி செய்திகளை சேகரிக்கிறாள் என்பது..
Reviews – aaranyam azhakanathu / ஆரண்யம் அழகானது
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.