Chapter 15
தொலைதூர தொடுவானை நான்
தொட்டு விட்டு வந்தது
உன் மீதான காதலால் அல்லவா..?
“கட்டாயம் நீ போய்த்தான் ஆகனுமா..?”
விசாகா திரும்பத்திரும்பக் கேட்டு ஓய்ந்து போனாள்.. விருந்தாட வந்த பெண் பத்தே நாள்களில் ஊருக்குத் திரும்புவதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.. அண்ணன் மகளைச் சரியான முறையில் சீராட்டவில்லையோ என்ற குற்ற உணர்வு அவள் மனதை வாட்டியது.. ப்ரீதி மலைப்பிரதேசத்துக்கு வருகிறாள் என்பதில் எவ்வளவு சந்தோசப்பட்டாள், எத்தனை ஆசையாக கிளம்பி வந்தாள் என்பதை விசாகா அறிந்தவளாயிற்றே.. ஊர் சுற்றிப் பார்க்காமல் அவள் உடனடியாக ஏன் கிளம்புகிறாள்..?
ஆதவனின் கதையே வேறு.. அவன் சித்தார்த்தனைக் கடுப்பேற்ற செமத்தியாக திட்டம் தீட்டி வைத்திருந்தான்.. சித்தார்த்தனின் கண் முன்னே ப்ரீதியுடன் அவன் கை கோர்த்து ஊர் சுற்ற வேண்டும்.. ப்ரீதி அவளது கைபிடிக்க விடுவாளா என்பதில் அவனுக்குச் சந்தேகம் இருந்தது.. என்று அவனது பார்வையில் மாற்றம் வந்ததை ப்ரீதி கண்டு பிடித்தாளோ அன்றிலிருந்தே ஆதவனின் முகம் பார்த்துப் பேச மாட்டாள்.. விரல் நகம் கூடப் பட்டுவிட முடியாத தொலைவில் தள்ளி நின்றுதான் பேசுவாள்.. காரில்கூட முன் சீட்டில் அவன் பக்கத்தில் உட்கார்ந்து வர மறுத்தவள் ஆயிற்றே..
‘சித்தார்த்தன் பக்கத்தில் மட்டும் உட்கார்ந்து வந்தா..’
அந்தக் காண்டு ஆதவனின் மனதில் இருந்தது.. கொதித்துப் போயிருந்தான்.. கைகொடு என்று கேட்டால்தானே கொடுக்க மாட்டாள்.. அவளிடம் அனுமதி கேட்காமல் ‘பச்சக்’ கென பாய்ந்து பிடித்து விட்டால் என்ன செய்ய முடியும்..? ஆதவனுக்கு என்ன வேண்டும்..? சித்தார்த்தன் அதைப் பார்க்க வேண்டும்.. அவ்வளவுதான்.. சித்தார்த்தன் கடுப்பேறி கண்சிவக்க.. அதில் ஆதவனின் மனம் குதிக்க.. ஆஹா..! நினைத்தாலே இனிக்கிறதே..
முன் எப்போதையும் விட ப்ரீதியின் மீது அவனுக்கு ஆர்வம் அதிகரித்தது… தாய் மாமனை அறிந்து வைத்திருப்பவன் ஆதவன்… மகளின் விருப்பம்தான் கங்காதரனுக்கு முக்கியம்… தங்கையின் மகன் ஆசைப்படுகிறான் என்பதற்காக இந்தா.. என் மகளைக் கல்யாணம் பண்ணிக் கொள் என்று கை பிடித்துத் தந்து விட மாட்டார்.. ப்ரீதியின் மனம் போல்தான் வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பார்.. அதனால்தான் ஆதவன் அதிகக் கனவுகளை வளர்த்துக் கொள்ளவில்லை.. அவன் சுயநலம் மிக்கவன்.. ப்ரீதி இல்லையெனில் ஒரு ஸ்ருதி என்றுதான் எண்ணம் வைத்திருந்தான்..
இப்போதுதான் கதை மாறிப் போய் விட்டதே.. இனம் இனமறியும்.. எவரிடமும் நின்று பேசாத தோரணை மிக்க சித்தார்த்தன் கோபம் கொள்கிறான்.. இது போதாதா ஆதவனுக்கு..? யாராலும் வெல்ல முடியாத சித்தார்த்தனைச் சீண்டிப் பார்க்க ஒரு வாய்ப்புக் கிடைத்திருப்பதை அவனால் நம்பவே முடியவில்லை..
சித்தார்த்தனை எப்படியெல்லாம் சீண்டலாம் என்று படு உற்சாகமாக மனக் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தவனுக்கு ப்ரிதி பூனாவுக்குக் கிளம்பப் போகிறாள் என்பது பேரிடியாக இருந்தது.. கங்காதரனுக்குப் போன் போட்டான்..
“ஸாரி ஆதி.. ப்ரீதிக்கு விருப்பமில்லாத எதையும் நான் கட்டாயப் படுத்த மாட்டேன்..” என்று அவர் சொல்லி விட்டார்..
ஆதவன் துணுக்குற்றான்.. எதற்கான பதில் இது..? கங்காதரன் எதைச் சொல்கிறார்..? ப்ரீதி பூனாவுக்குக் கிளம்பி வருவதை அவளது விருப்பம் என்கிறாரா.. இல்லை.. ஆதவனை அவள் திருமணம் செய்து கொள்வது அவளது விருப்பம்.. அவர் அவளைக் கட்டாயப் படுத்த மாட்டார் என்கிறாரா..?
போனால் போகிறது என்று விட்டுவிட அவன் தயாராக இல்லை.. சித்தார்த்தனின் கண்ணெதிரில் ப்ரீதியை மனைவியாக்கி ஊர்வலம் வர வேண்டும்.. அதில் சித்தார்த்தனின் விழிகளில் தெரியும் தோல்வியில் இவன் களிக்க வேண்டும்..
“நீங்க சொல்லுங்கம்மா.. மாமா கேட்பார்..” விசகாவிடம் தூண்டினான்..
“நான் சொல்லலைன்னா நினைக்கிற..? சண்டை கூடப் போட்டுட்டேன்.. ஆனா அண்ணா கேட்க மாட்டேங்கிறாரே.. ப்ரீதிக்கு பிடிக்கலைன்னா அவர் ஃபோர்ஸ் பண்ண மாட்டேன்னு சொல்கிறாரே..” விசாகா அங்கலாய்க்க ஆதவன் திகிலடைந்தான்..
‘அம்மா எதைப் பத்திப் பேசினாங்க..? மேரேஜைப் பத்தியா..?’
“எவ்வளவோ சொல்லிட்டேன்.. ப்ரீதி இப்போதுதான் வந்தா.. உடனே கூப்பிட்டுக்க வேண்டாம்.. இன்னும் அவளுக்குன்னு தனியா விருந்து சமைத்துப் போடலை.. நான்கு இடங்களைச் சுற்றிக் காட்டலைன்னு.. அதனால் என்னன்னு மறுத்துச் சொல்லிட்டார்.. இதுக்கு மேலே என்னை என்னடா செய்யச் சொல்கிற..?”
‘அப்பாடி.. அம்மா ப்ரீதி பூனாவுக்குத் திரும்புகிறதைப் பற்றித்தான் சொல்கிறாங்க..’
ஆசுவாசமடைந்தான் ஆதவன்… அவனுக்கும் ப்ரீதிக்குமான திருமணப் பேச்சுவார்த்தை ஓர் முடிவுக்கு வருவதை அவன் விரும்பவில்லை.. கங்காதரனின் கால்களில் விழுந்தாவது ப்ரீதியை அவன் கைபிடித்தே தீருவான்.. அதில் எந்தவித மாற்றமும் வந்து விடக் கூடாது.. அதற்கு முன் ப்ரீதி இன்னும் சில தினங்கள் கான வயிலிலேயே இருக்க வேண்டும்.. சித்தார்த்தனின் கண் முன்னால் அவன் அவளுடன் ஊர் சுற்ற வேண்டும்.. நடக்குமா..?
“ஆர்த்தி..” தங்கையிடம் தஞ்சமடைந்தேன்..
அவள் நானிருக்கிறேன் அண்ணா உனக்கு என்று உடனே அபயமளித்து விடவில்லை..
“வேலையைப் பார்க்கிறயா..?” என்றாள் கறாராக..
“நீ சொன்னா ப்ரீதி கேட்பா..”
“யார் சொன்னாலும் கேட்க மாட்டா.. சில விசயங்களில் அவ முடிவெடுத்தா எடுத்ததுதான்.. யாராலும் அதை மாற்ற முடியாது..”
ஆர்த்தி பொடி வைத்துப் பேசுவதைப் போல இருந்தது.. ஆதவனுக்கு கோபம் வந்தது.. அடக்கிக் கொண்டான்.. ஆர்த்தியிடம் அவனது சினம் செல்லுபடியாகாது.. நியாயம் பேசியே கதறடித்து விடுவாள்..
“யோசி ஆர்த்தி.. உனக்கு நான்.. எனக்கு நீ.. நாம வேறவேற திசையில யோசிச்சா சித்தார்த்தன் ஜெயிச்சுட்டுப் போயிருவான்.. இத்தனை நாளா எந்தவிதக் காரணமும் இல்லாம நாம் அவனிடம் தோற்றுக் கொண்டிருக்கிறோம் ஆர்த்தி..”
“சித்தார்த்தன் ஜெயிக்கப் பிறந்தவர் அண்ணா.. அவருடன் ஏன் நம்மை இணை கட்டற..?”
‘இந்த நியாயத்தையா உன்னை யோசிக்கச் சொன்னேன்..?’ பல்லைக் கடித்தான் ஆதவன்..
இதுதான் ஆர்த்தி.. எந்த நேரம் எதைப் பேசுவது என்று இல்லாமல் சகட்டு மேனிக்கு நியாயம் பேசி உயிரை வாங்குவாள்.. அதனால்தான் ஆதவன் தங்கையிடம் அதிகமாக வாதம் செய்து தொலைக்க மாட்டான்.. அவனுடைய நேரம்.. ஆர்த்தியிடம் அவனை மாட்டிக் கொள்ள வைத்திருக்கிறது..
“அவன் உன்னையும் என்னையும் அடிமை போல நினைக்கிறான்.. ட்ரீட் பண்றான்.. அதை மறந்து விட்டுப் பேசாதே..”
“எந்த அடிமைக்கு அரண்மனை வாழ்வும், கோடிக் கணக்கில் சொத்துக்களும், ஃபாரின் படிப்பும் கிடைத்திருக்கிறது..? வசதியாய் அதையெல்லாம் மறந்துட்டுப் பேசாதே அண்ணா..”
“உரிமையில்லாதது யாருக்கு வேணும்..?”
“தோடா.. பெரிய ரோசக்காரன்தான் நீ.. இப்பேற்பட்ட ரோசக்காரன் இந்த அரண்மனையில் இருக்க முடியாதுன்னு வெளியேறியிருக்கனும்.. உன் பெயரில் இருக்கிற சொத்துக்களை வேண்டாம்ன்னு சொல்லித் திருப்பிக் கொடுத்திருக்கனும்.. ஃபாரின் படிப்பு, ஃபாரின் கார்ன்னு ஹை-சொசைட்டி லைஃபை என்ஜாய் பண்ணி உல்லாசம் கொண்டாடாமல் இருந்திருக்கனும்..”
“ஆர்த்தி..”
“அட போ அண்ணா.. இந்த சவுண்டையெல்லாம் அம்மாவிடம் வைத்துக்க.. என்னிடம் வேண்டாம்.. ஒரு வகையில் ப்ரீதி இங்கிருந்து கிளம்புவதை நான் என்கரேஜ் பண்றேன்.. பாவம்.. தேவையில்லாத இஷ்யூஸ் அவளுக்கு எதற்கு..?”
“என் வுட்-பி மேல அவ்வளவு பாசம்..!”
“ஊஹீம்.. என் வுட்-பி யின் தங்கை மேல அவ்வளவு பாசம்..”
ஆதவனின் மூக்கை உடைத்து விட்டு ஆர்த்தி போய் விட்டாள்.. என்ன செய்வது என்று தலையைப் பிய்த்துக் கொண்டு யோசித்தான் ஆதவன்.. மற்றவர்களிடம் கெஞ்சிக் கொண்டிருப்பதற்குப் பதில் அவனே போய் பேசிப் பார்க்கலாம்தான்.. அதன் விளைவு முன்னிலும் மோசமாகப் போய் விடக் கூடிய சாத்திய கூறுகள் அதிகமிருந்ததில் அந்த யோசனையைக் கைவிட்டு வேறு மார்க்கங்களை யோசிக்கலானாள்..
ப்ரீதி பூனாவுக்குக் கிளம்பப் போகிறாள் என்பது ஆதவனுக்குத் தெரியும்.. எப்போது கிளம்பப் போகிறாள் என்பதுதான் தெரியவில்லை.. அதைத் தெரிந்து கொள்ள வனிதாமணியை அழைத்தான்.. எப்போதும் வனிதாமணியை மதித்துப் பேசாதவன் ஆதவன்.. சித்தார்த்தன்கூட வீட்டில் வேலை செய்பவர்களிடம் இன்முகமாகப் பேசுவான்.. ஆதவன் அப்படியில்லை.. எனக்கெல்லாம் நீங்கள் நிகரா என்பதைப் போல தலைகனத்துடன் நடந்து கொள்வான்.. அப்படிப் பட்ட தலைக்கனம் மிகு ஆதவன் அழைத்ததில் ‘லேடி மதன் பாப்’ வனிதாமணி வாயெல்லாம் பல்லாக அவன் முன் ஓடோடி வந்து நின்றாள்..
“ஹிஹி.. ஐயா..”
“முதலில் இந்தச் சிரிப்பை நிறுத்து.. இம்சையா இருக்கு..”
“ஆகட்டும்ங்க ஐயா..”
வனிதமாணியின் சிரிப்பு சட்டென மறைந்தது.. வண்டாற்குழலிக்கே அடிபணிபவள் ஆதவனின் கட்டளையை சிரமேற்கொள்ள மாட்டாளா..?
“நீ என்ன செய்கிற..”
ஆதவன் அவளுக்குச் சொல்ல வேண்டிய வேலையைச் சொல்வதற்காக ஆரம்பிக்க.. கூமுட்டை வனிதாமணியோ..
“சோபாக்களைத் துடைத்துக்கிட்டு இருந்தேங்..” என்றாள்.
இவளிடம் எப்படி வேலைவாங்குவது என்று ஆதவனுக்குத் தலை வேதனையாகி விட்டது.. வனிதாமணியின் அறிவின் எல்லை பூஜ்யம் என்பது அவனுக்குத் தெரியும்தான்.. அதுதானே அவனுக்கும் தேவை.
“நீ இப்ப என்ன செய்கிறன்னு கேட்டா செய்துகிட்டு இருக்கிற வேலையைக் கேட்டேன்னு அர்த்தமில்லை.. செய்ய வேண்டிய வேலையைச் சொல்கிறேன்னு அர்த்தம்..”
தான் சொன்ன விளக்கத்தை அவள் புரிந்து கொண்டாளா என்பதில் பெருத்த சந்தேகம் இருந்தது ஆதவனுக்கு.. அவள் பூம்பூம் மாட்டைப் போலத் தலையாட்டுவதினால் மட்டும் நம்பிப் பேசிவிட முடியாது.. நல்லவேளையாக வனிதாமணி அவன் வயிற்றில் பாலை வார்த்து..
“என்ன செய்யனுங்ய்யா.. ஐயாவோட ரூமை நான் காலையிலேயே பெருக்கித் துடைச்சு வைச்சிட்டேனுங்களே..” என்று பவ்யமாகச் சொன்னாள்..
“இது பெருக்கித் துடைக்கிற வேலையில்லை..”
“சரிங்..”
“ப்ரீதி இருக்காள்ல..”
“ஆமாங்..”
வனிதாமணி ப்ரீதியைப் பற்றிய பேச்சில் வாயெல்லாம் பல்லாகி.. ஆதவனின் முன்னால் சிரித்து வைத்தால் அவன் பல்லைப் பேர்த்து விடுவான் என்பதினால் அவசரமாக வாய் பொத்தினாள்..
“ப்ரீதி ஊருக்குப் போகப் போகிறதா சொல்லிக்கிட்டு இருக்கா..”
“அப்படிங்களாங்..”
வனிதாமணிக்கு வாய் பொத்த வேண்டிய அவசியமே இல்லாமல் சிரிப்பு பறந்து விட்டது.. ப்ரீதியை அவளுக்கு மிகவும் பிடிக்கும்.. மாதக் கணக்கில் அந்த அரண்மனையில் ப்ரீதி தங்கியிருப்பாள்.. அவளிடம் ஆசைதீரப் பேசலாம் என்று நம்பியிருந்த வனிதாமணியின் ஆசை ஆட்டம் கண்டது.. அந்த அரண்மனைக்கு விருந்தாளிகள் வருவது மிகவும் குறைவு.. அத்தி பூத்தாற்போல ஒரு அழகான விருந்தாளி வந்திருக்கிறாள்.. காவையல் காடும், காடு சார்ந்த இடமாக இருந்தது.. காட்டில் உள்ள அரண்மனைக்கு பூனாவைப் போன்ற நகரத்தில் வசிக்கும் நாகரிகப் பெண்ணொருத்தி வந்திருக்கிறாள் என்பதில் வனிதாமணிக்கு ஏகத்துக்கும் சந்தோசம்.. அந்த ப்ரீதி ஊருக்குப் போகப் போகிறாளா..?
“ஆமாம் வனிதாமணி.. இருன்னு சொன்னா இருக்க மாட்டேங்கிறா.. அவ ஊருக்குப் போகிறதை தடுத்து நிறுத்தனும்..”
“உங்களால் அது முடியுங்களா..?”
வனிதாமணியின் ஆவலில் தான் கட்டளையிட வேண்டிய அவசியமே இல்லை என்பதை கண்டு கொண்டான் ஆதவன்.. வனிதாமணியின் வேண்டு கோளுக்காக அவன் போனால் போகிறது என்று ப்ரீதியைத் தடுத்து நிறுத்தியதாக மாற்றி விடலாம்..
“முடியும்தான்.. எதுக்குன்னு யோசிக்கிறேன்.. அவ ஊருக்கு அவ போகிறா.. நான் ஏன் தடுத்து நிறுத்தனும்..?”
“என்னங்கய்யா இப்படிச் சொல்லிட்டிங்க.. ஒரு மாசமோ ரெண்டு மாசமோ இருப்பாங்கன்னு அம்மா சொன்னாங்க.. இப்புடிப் பொசுக்குன்னு பத்தே நாளில ஊரைப் பார்த்துக் கிளம்பப் போகிறதா சொல்கிறாங்க.. அவங்களை இருக்க வைக்காம பட்டுக்காம பேசறிங்களே..”
“அப்படிங்கிற..?”
“ஆமாங்கய்யா..”
“ஓகே.. நீ இவ்வளவு தூரத்துக்கு கெஞ்சறதினால நான் ஏதாவது ஐடியா பண்ணி அவளை நிறுத்தி வைக்க முடியுமான்னு பார்க்கிறேன்.. இதை வெளியில் சொல்லி வைக்காதே.. உனக்கெதுக்கு இந்த வேலைன்னு வண்டாற்குழலி சாமியாடிரும்..”
“சொல்ல மாட்டேங்கய்யா.. சொல்லவே மாட்டேன்.. நீங்களும் பெரிய மனது பண்ணி எனக்காகத்தான் ப்ரீதி அம்மாவை நிப்பாட்டி வைச்சீங்கன்னு யாருகிட்டேயும் சொல்லிராதீங்கய்யா.. முக்கியமா என் அண்ணிகாரிகிட்ட சொல்லிராதீங்க.. அது என்னை ஆய்ஞ்சு கூடையில அள்ளிப் போட்டிரும்ங்க.. என்னவோ அந்த ப்ரீதி அம்மாவை ரொம்பப் பிடிச்சுப் போச்சுங்க.. அதனாலதான் கெஞ்சிக் கேக்கிறேன்..”
“ஓகே.. யாரிடமும் சொல்லலை.. நீ போய் ப்ரீதி எப்ப ஊருக்குக் கிளம்புகிறாள்ன்னு தெரிஞ்சுக்கிட்டு வா..”
வனிதாமணி தகவல் சேகரித்துக் கொண்டு வந்து கொட்டி விட்டாள்..
‘மார்னிங் பிளைட்டா..’
ஓர் இரவுக்குள் என்ன செய்து விடமுடியும் என்று தலை காய்ந்த ஆதவன் தலைமுடியைப் பிய்த்து யோசித்து ஓர் வழியைக் கண்டு பிடித்தான்..
அதிகாலையில் எழுந்து விட்ட ப்ரீதி.. குளித்து உடைமாற்றி முதல் நாள் இரவே உடைகளை அலமாரியில் இருந்து எடுத்து அடுக்கி வைத்திருந்த பெட்டிகளை உருட்டியபடியே ஹாலுக்கு வந்தாள்.. விசாகாவிடம் சொல்லி விட்டுப் போக அவளுடைய அறைக்குப் போனால் அவள் சமையலறையில் ப்ரீதிக்குக் காபி கலக்கிக் கொண்டிருந்தாள்..
“அத்தை..” என்ற ப்ரீதியின் குரலில் திரும்பி இரண்டு எட்டு எடுத்து வைத்தவள் கையிலிருந்த காபிக் கப்பை நழுவ விட்டு மயங்கிக் கீழே சரிந்தாள்..
“அம்மா..”
ஆதவனின் சப்தத்தில் அரண்மனையே விழித்துக் கொண்டது.. விசாகாவை அள்ளிக் கொண்டு ஆதவன் மருத்துவமனைக்க ஓடினான்.. ப்ரீதியும் ஆர்த்தியும் மாறனுடன் வேறு ஒரு காரில் பின் தொடர்ந்தார்கள்.. மயக்கத்திலிருந்த விசாகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள்.. ப்ரீதி பூனாவை மறந்து ஆர்த்திக்கு ஆறுதல் சொல்லியபடி கவலையுடன் மருத்துவமனையில் உட்கார்ந்து விட்டாள்..
Reviews – aaranyam azhakanathu / ஆரண்யம் அழகானது
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.