Chapter 16

0Shares

உன்னை விட்டு விலகாத

உள்ளம் இது மன்னவனே..!

உன் மீது என் மனது..

“இல்லைப்பா.. மயக்கத்தில்தான் இருக்காங்க.. கவலைப்பட வேண்டாம்ன்னு டாக்டர் சொல்லிட்டார்.. உடல் சோர்வும் ஸ்ட்ரெஸ்ஸஸீம்தானாம்.. நீங்க வர வேண்டாம்.. இந்த வீக் எண்டில் நான் கிளம்பி வர்றேன்..”

தோட்டத்தில் உலவியபடி பேசிக் கொண்டிருந்தாள் ப்ரீதி.. இமைகள் வீங்கி சோர்ந்திருந்தாள்.. பூனாவுக்குக் கிளம்ப வேண்டும் என்பதில் அன்று இரவு முழுவதும் தூங்கவில்லை.. மறுநாள் காலையில் விசாகா மயங்கி விழுந்ததில் பூனாவுக்குப் போகாமல் மருத்துவமனைக்கு ஓடி முதல்நாள் முழுவதும் உறங்காமல் கண் விழித்ததில் ப்ரீதி சாமியாட ஆரம்பித்திருந்தாள்..

விசாகாவைச் சேர்த்திருந்த மருத்துவமனை நவீனமானதாக இருந்தாலும் சிறிய அளவில் இருந்தது.. முன்னால் வரவேற்பறை.. அடுத்ததாக டாக்டர் பரிசோதிக்கும் அறை.. இரண்டே இரண்டு அறைகள் மட்டுமே..

அந்த மருத்துவமனையைக் கட்டியிருந்த டாக்டர் சரவணன் ஆதவனின் நண்பனாம்..

“இங்கே பிரைவேட் கிளினிக்கிற்கு ஆள் அதிகமா வரமாட்டாங்க.. கவர்ண்மெண்ட் ஹாஸ்பிடலில்தான் கூட்டம் குமியும்.. சொந்த ஊர்.. எஸ்டேட் இருக்கு.. படித்த படிப்பை ஹானர் பண்ணனும்ல்ல.. அதுக்காக இந்த கிளினிக்..”

ப்ரீதியை ஆர்வமாகப் பார்த்தபடி விவரம் சொன்னான் டாக்டர் சரவணன்.. ஆதவன் பக்கத்தில் இருந்தால் மட்டும் ப்ரீதியை யாரோ எவரோ என்று பற்றில்லாமல் பார்த்து வைத்தான்..

‘ஆதவனின் பிரண்டு வேற எப்படி இருப்பான்..’

“லேசான அடிதான்.. பட்.. பெட் ரெஸ்டில் இருக்கனும்.. இங்கே டூ டேஸாவது அப்சர்வேசனில் இருக்கிறது பெட்டர்..”

அப்சர்வேசன் பண்ண என்ன இருக்கிறது என்று புரியவில்லை.. நண்பகலில் கண்விழித்த விசாகாவிற்கு சூடாக சாப்பாடைக் கொடுத்ததும் ஆதவன் பாலைச் சாப்பிடச் சொன்னான்.. வாங்கிக் குடித்த விசாகா தூங்க ஆரம்பித்து விட்டாள்.. தூக்க மாத்திரை கலந்த பாலைக் குடித்தால் தூக்கம் வராதா..?

ப்ரீதியைத் தடுத்து நிறுத்த ஆதவன் கையாண்ட யுக்தி அது.. யாருக்கும் பாதிப்பில்லாமல் ப்ரீதியின் பயணத்தை நிறுத்தி விட வேண்டும்.. இரவில் விசாகா சாப்பிட்ட பாலில் ஒன்றிற்கு இரண்டாக தூக்க மாத்திரைகளைக் கலந்து விட்டான்.. அதை ப்ரீதிக்குக் கொடுத்திருக்கலாம்.. ஏன் தனக்குத் தூக்கம் தூக்கமாக வருகிறது என்று அவள் யோசிக்க ஆரம்பித்து என்ன விவரம் என்பதைக் கண்டு பிடித்து விட்டால் காலா காலத்துக்கு ஆதவனை நம்ப மாட்டாள்.. திரும்பிப் பார்க்கவும் மாட்டாள்..

‘அத்தை செண்டிமெண்ட்தான் இப்ப ஷீட் ஆகும்..’

தூக்க மாத்திரைகளின் உபயத்தால் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த விசாகாவை எழுப்பி ப்ரீதிக்குக் காபி போடச் சொன்னான்..

“வண்டாற்குழலி வர நேரமாகும் அம்மா.. ப்ரீதி பாவம்.. வெறும் வயிறோடு கிளம்புகிறா.. காபியாவது குடித்துட்டுப் போகட்டுமே..”

விசாகாவின் அத்தை பாசம் தூக்க மாத்திரைகளினால் வந்த மயக்கத்தை வெற்றி கொள்ள, அவள் தள்ளாடியபடியே எழுந்து சமையலறைக்குக் காபி போடப் போனாள்.. தூக்க மயக்கத்தில் இருந்தவளால் ஓர் அளவுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை.. காபிக் கப்பை நழுவ விட்டுத் தூங்கிச் சரிந்தாள்.. அதற்காகவே காத்திருந்த ஆதவன் ஏற்கனெவே பேசி வைத்திருந்தபடி நண்பனின் கிளினிக்கில் கொண்டு வந்து சேர்த்து விட்டான்.. விசாகா கீழே விழும்போதே ஆதவன் தாங்கிப் பிடித்து விட்டதால் அடியேதும் படவில்லை.. ஆனால் அடி பட்டிருப்பதாக ஆதவன் சொல்ல வைத்தான்.. பிரியத்துக்குரிய அத்தை மயக்கத்தில் இருக்கும் போது ப்ரீதியால் எப்படி ஊருக்குக் கிளம்ப முடியும்..? ப்ரீதி பூனாவை மறந்து விசாகாவின் பக்கத்தில் உட்கார்ந்து வீட்டாள்..

பூனாவில் இருந்த கங்காதரன் மாமனார் ஊருக்குச் சென்றுவர வேண்டியிருந்தது.. ப்ரீதியின் அம்மா பார்கவி கொல்கத்தாவில் பிறந்தவள்.. அவளுடைய பெற்றோர் கொல்கத்தா வாழ் தமிழ்வாசிகள்.. அவளுடைய பாட்டனார் கொல்கத்தாவில் வேலை பார்க்க வந்து அந்த ஊர் தமிழ் குடும்பத்தில் பெண்கட்டி தானும் அவர்களுடன் ஐக்கியமானவர்.. பார்க்கவியின் தம்பி மகனுக்கு கொல்கத்தாவிலிருந்த கோவிலில் மொட்டையடித்துக் காது குத்துகிறார்களாம்.. ப்ரீதி வந்தவுடன் குடும்பமாகக் கிளம்பி கொல்கத்தா போவதாக இருந்தவர்களுக்கு விசாகா மயங்கி விழுந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்ட செய்தி வந்து சேர்ந்தது..

“நீங்க வர வேண்டாம் மாமா.. மனதில ஆயிரம் கவலைகளை வைத்துக்கிட்டு வெளியில் சொல்லாம மருகிக்கிட்டு இருந்தா இப்படித்தான்.. எங்க தலைவிதி.. இரண்டு நாள் ஹாஸ்பிடலில் இருக்கனுமாம்.. ப்ரீதி வேற ஊருக்குக் கிளம்பினாளா.. ஸ்ட்ரெஸ்ஸஸ் அதிகமாகி மயக்கத்தில கொண்டு வந்து விட்டிருச்சு.. ப்ரீதி பக்கத்தில் இருந்தா பெட்டரா ஃபீல் பண்ணுவாங்கன்னு நினைக்கிறேன்..” உருக்கமாக சொல்லி வைத்திருந்தான் ஆதவன்..

தங்கையைப் பார்க்கக் கங்காதரன் வந்து விட்டால் அவர் போகும்போது ப்ரீதியும் கூடச் சென்று விடுவாளே.. அதற்காகவா இத்தனை மெனக்கெட்டிருக்கிறான்..

மனது கேட்காமல் மகளிடம் விசாரித்தார் கங்காதரன்.. அவளும் கவலைப்பட ஏதுமில்லை என்று சொல்லி விட்டதில் மனது லேசாக.. மாமனாரின் ஊருக்குப் புறப்படத் தயாரானார்.. மகளிடமும் அதைச் சொன்னார்..

“இந்த வீக் எண்டில் வர வேண்டாம் ப்ரீதி.. நாங்க எல்லாம் உன் மாமாமகன் காதுகுத்து பங்சனுக்கு கொல்கத்தா போகிறோம்.. நெக்ஸ்ட் வீக் எண்டில பிளைட் டிக்கெட் புக் பண்றேன்.. நீ கிளம்பி வந்துவிடு.. விசாகாவைப் பார்க்கன்னு எங்கே அந்த ஊரை மிதிக்க வேண்டி வந்து விடுமோன்னு மனசுக்குள்ளே ஓர் முள் நெருடுச்சு.. அது தேவையில்லங்கிறதில நிம்மதியா இருக்கு.. பார்கவியும், பிரசாத்தும் சத்தம் போட்டாங்க.. இப்படியே இருந்து விட முடியுமா..? ஏதாவதும் அவசரம், ஆத்திரம்ன்னா நாம போய்த்தானே ஆகனும்னு கேட்டாங்க.. அது வருகிறப்ப பார்த்துக்கலாம்ன்னு சொல்லிட்டேன்.. நீ அத்தையைப் பார்த்துக்க..”

“சரிப்பா..”

தந்தையிடம் பேசி முடித்துவிட்டுத் திரும்பிய ப்ரீதி, யார் மீதோ மோதி விழப் போனாள்.. தாங்கிப் பிடித்த சித்தார்த்தன்..

“பைக், காரில் போகிறப்ப மட்டுமில்லை.. கார்டனில் வாக் பண்றப்பவும் பக்கத்தில் ஆள் வர்றாங்களான்னு பார்த்துக்கிட்டேதான் செல்போனில் பேசனும்..” என்றான்..

அவளது முகத்திற்கு வெகு அருகாமையில் அவனது முகம் தெரிந்தது.. அவனது மூச்சுக் காற்றின் ஸ்பரிசத்தை அவளது முகம் உணர்ந்ததில் அவள் பதட்டம் கொண்டாள்.. அவனது வலிமையான இரும்புக் கரம் அவளது இடுப்பில் அழுந்திப் பதிந்திருக்க.. மறு கரத்தால் அவளது தோளைத் தழுவியிருந்தான்.. ஏறக்குறைய அவனை அணைத்த நிலையில் அவள்.. இவ்வளவு நெருக்கமாக எந்த ஆணும் அவளைத் தொட்டதில்லை என்பதில் அவள் தடுமாறி நிலைகுலைந்தாள்.. வேகமாக விலக நிமிர்ந்தவள் அவனது தோள்களை இறுகப் பற்றியதில் இடையிலிருந்த அவனது கரம் உயர்ந்து அவளது முதுகில் பரவிப் படர்ந்தது.. குளிர் உடலைத் துளைத்த அந்த சீதோஷ்ணத்தில் அவனது உடல் வெப்பம் இதமாக இருந்தது.. அவள் விலகுவதற்குள் அவன் அவளை இறுக்கி அணைத்து விட்டான்..

ப்ரீதியின் உடல் நடுங்கியது.. எதிர்பாராத அணைப்பில் அதிர்ந்து போயிருந்தாள்.. விடுபட வேண்டுமென்ற எண்ணம் கூடத் தோன்றாமல் ஸ்தம்பித்து நின்று விட்டவளின் முகம் நோக்கி அவன் குனிந்தான்.. என்ன நடக்கிறதென்று அவள் உணர்வதற்குள் அவளது இதழ்களில் அவனது சூடான இதழ்கள் படிந்து அழுந்திக் கவ்விக் கொண்டன..

‘முத்தம் கொடுத்து விட்டான்..’

ப்ரீதியின் காலடியில் பூமி அதிர்வதைப் போல இருந்தது.. ஓங்கி உயர்ந்த ஓர் பேரலையில் அவள் அடித்துச் செல்லப் பட்டாள்.. சுழித்து இழுத்த சுழலில் மாட்டிக் கொண்டவளுக்கு மூச்சுத் திணறியது.. இதயம் தடதடத்தது.. உடல் வெடவெடத்தது.. கன்னத்தில் இதழ் பதித்த முத்தமல்ல அவன் முத்தம்.. ஆவேசம் காட்டாத ஆவேசம் கொண்ட அழுத்தமான முத்தம்.. அவளது இதழ்களை அவனது இதழ்கள் சுவைத்து உண்ட அமுதம் அருந்தும் முத்தம்.. நொடிகள் நிமிடங்களாகி நேரம் நீண்டு கொண்டே இருக்க.. அவள் மயக்க நிலையில் நின்றாள்.. நேரம் கடந்து கொண்டே இருக்க அவன் அவளைத் தழுவிக் கொண்டே இருந்தான்.. மழைத்தூறல் அவர்களை நனைத்தது.. மலைக்காற்று உடல் துளைத்தது.. பெயர் தெரியாத பறவையொன்று பாடிக் கொண்டே பறந்தது.. ஏகாந்தம் அவர்களைச் சூழ்ந்து அரணாக நின்று காவல் காத்தது..

“வனிதா.. ஏ வனிதா..”

வண்டாற்குழலியின் குரலில் பதறிப் போய் விலகினாள் ப்ரீதி.

“அரண்மனைக்குள் சத்தம் கேட்குது.. இங்கே யாரும் வரலை..” அவளது கன்னம் வருடினான் சித்தார்த்தன்..

“ஷட் அப்..” அவனது கையைத் தட்டி விட்டுச் சீறினாள் ப்ரீதி.

“இப்பத்தானே இந்த கோபம் வருது..”

சற்று முன்வரை அவனது அணைப்பில் அடங்கி முத்தத்தில் கட்டுண்டு நின்றிருந்தாள் என்பதைச் சுட்டிக் காட்டினான் அவன்..

“ஆர் யு அசேம்டு எபௌட் இட்..? தனியாக மாட்டிக் கொண்ட பெண்ணின் தனிமையை யூஸ் பண்ணிக்கிட்டிங்கள்ல.. இப்படியொரு சீஃப் மெண்டாலிட்டி உங்களுக்கு இருக்கும்ன்னு நான் நினைத்துப் பார்க்கலை மிஸ்டர் சித்தார்த்தன்..”

“ஓ…”

அவனது உதடுகள் ஏளனமாக வளைந்தன.. மூச்சிரைக்க நின்றவளை ஏற இறங்க பார்த்த அவனது பார்வையில் முகம் சிவந்தாள் ப்ரீதி.. அவன்மீது ஏன் அவளுக்கு கோபம் வர மறுக்கிறது..?

“சீஃப் மெண்டாலிட்டியா..? எனக்கா..? குட் ஜோக்..! நீ தனியாக என்னிடம் மாட்டிக் கொண்டிருக்கிறாயா..? எங்கே மாட்டிக் கொண்டிருக்கிறாய்..? காட்டிலா..?”

சித்தார்த்தனின் கிண்டலான கேள்வியில் உதடுகளைக் கடித்தபடி சுற்று முற்றும் பார்த்தாள் ப்ரீதி..

“இது அரண்மனை.. நாம் தோட்டத்தில் நின்று கொண்டிருக்கிறோம்.. நீ வாக்கிங் போய்கிட்டே பேசிக் கொண்டிருந்தாய்.. நான் இந்தப் பக்கம் வந்தேன்.. தடுக்கி விழுந்தாய்.. தாங்கிப் பிடித்தேன்.. அப்புறம்..” சித்தார்த்தன் சொல்லிக் கொண்டே போக..

“போதும்.. போதும்..” என இடைமறித்தாள் ப்ரீதி..

“போதுமா..?” விசமமாக அவன் வினவியதில் அவள் முகத்தில் ரத்தம் பாய்ந்தது.. அவனது விழிகள் பளபளத்தன..

“இதற்கு முன்னால் இரண்டு தடவை காட்டில் நீ என்னுடன் தனிமையில் பேசியிருக்கிறாய்.. அப்போ தெல்லாம் உன் தனிமையைப் பயன்படுத்திக் கொள்ள நினைக்காதவனா இப்போது நினைத்திருப்பேன்..?”

ப்ரீதியால் பதில் சொல்ல முடியவில்லை.. அதே சமயம் சற்றுமுன் அவன் எல்லை மீறியதை ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை.. விழிகள் கலங்க..

“இதற்குத்தான் நான் பூனாவுக்குப் போய் விட வேண்டும்ன்னு நினைத்தேன்..” என்று குமுறினாள்..

சித்தார்த்தனின் புருவங்கள் சுருங்கின.. இமைக்காமல் அவளைப் பார்த்தவன்..

“ஸோ.. எனக்குப் பயந்துதான் நீ பூனாவுக்குக் கிளம்ப டிசைட் பண்ணியிருக்க..?” என்று கேட்டான்..

“ஏன்..? உங்களுக்கு நான் ஏன் பயப்படனும்..?” ப்ரீதி படபடத்தாள்..

“இதோ.. இப்ப.. கொஞ்ச நேரத்துக்கு முன்னால்..” சித்தார்த்தன் எதையோ சொல்லவர..

“வேண்டாம்..” என்று பதறினாள் ப்ரீதி..

“எது வேண்டாம்..?”

“சொல்ல வேண்டாம்..”

“எதை..?”

சித்தார்த்தனின் விழிகள் கூர்மையாக அவளைத் தைத்தன.. எதையென்று சொல்ல முடியாமல் தவித்துப் போனாள் ப்ரீதி.. என்னவென்று சொல்லுவாள்..? நினைக்கும் போதே ஆழிப் பேரலை அவளை இழுக்கிறதே..

“வேண்டாம்.. விட்டு விடு..” மிருதுவாகச் சொன்னான் சித்தார்த்தன்.. ப்ரீதி விம்மினாள்..

“ஐ’ம் ஸாரி.. மனதார இதைச் சொல்கிறேன்.. வேண்டுமென்றே அதைச் செய்யவில்லை.. தடுக்கி விழுந்தாய்.. தாங்கித்தான் பிடித்தேன்.. அதற்கு மேல் நடந்ததெல்லாம் தானாக நடந்தது.. திட்டமிட்டு நடத்தலை.. பட் ஒன் திங்.. உன்னைத் தவிர வேறு எந்தப் பெண்ணை நான் தாங்கிப் பிடித்திருந்தாலும் சட்டென விலக்கி நிறுத்தியிருப்பேன்.. விலகி நின்றிருப்பேன்.. உன்னிடம் அப்படி விலக முடியவில்லை.. ஐ கான்ட் கண்ட்ரோல் மை ஷெல்ஃப்..”

ப்ரீதி தேம்பலுடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.. அவளது விழிகள் விரிந்தன.. இவன் என்ன சொல்கிறான்..? என்ன சொல்ல வருகிறான்..?

“யெஸ்.. இதுவரை நான் பார்த்துப் பழகிய பெண்களில் உன்னைப் போல யாரும் என்னை இம்ப்ரெஸ் பண்ணலை.. பர்ஸ்ட் சைட்டிலேயே நீ என்னை இம்ப்ரெஸ் பண்ணிட்ட.. ஐ திங்க் ஐ லவ் யு..”

“பேத்தல்..” காட்டத்துடன் சொல்லி விட்டாள் ப்ரீதி..

“பேத்தலா..?” சித்தார்த்தனின் கண்கள் இடுங்கின..

“ஆமாம்.. பேத்தல்தான்.. பர்ஸ்ட் சைட்டிலேயே இம்ப்ரெஸ் ஆகி விடும் ஆளில்ல நீங்க..”

“ஐ ஸீ.. நான் எந்த மாதிரி ஆள்ன்னு என்னைவிட உனக்குத்தான் நல்லாத் தெரிஞ்சிருக்கு போல.. இதைப் போல உன்னைப் பற்றி எனக்குத் தெரிந்ததை நான் சொல்லவா..?”

ப்ரீதி சொல்லுங்கள் என்று கேட்கவில்லை.. சித்தார்த்தனை முறைத்துக் கொண்டிருந்தாள்.. அவளது பதிலை எதிர்பார்க்காமல் அவன் கண்சிமிட்டியபடி சொன்னான்..

“இப்போத் தடுக்கி விழுந்தியே.. அப்போது தாங்கிப் பிடித்தது ஆதவனா இருந்திருந்தா நீ ஒரு செகண்டு கூட லேட் பண்ணாம அவனைத் தள்ளி விட்டிருப்ப.. தள்ளி நின்னிருப்ப.. ஐ ஆம் ஷ்யூர் எபௌட் இட்..”

‘என்னது..!’

ப்ரீதி அப்படியே அசைவற்று நின்று விட்டாள்.. அவளது பார்வை அதிர்ச்சியுடன் சித்தார்த்தனைப் பார்த்தது.. அவன் சொல்வது முற்றிலும் உண்மை என்பதில் அவள் மனம் அரண்டது..

ஆதவனின் விரல் நகம் அவள்மீது பட்டிருந்தாலும் அவள் நூறடி விலகி நின்றிருப்பாள்.. அப்படிப்பட்டவளை சித்தார்த்தன் இடையில் கைபதித்து அணைத்து நின்றிருந்தான்.. அவள் விலக நினைத்தபோது இழுத்து அணைத்தான்.. அவளுடைய இதழுடன் இதழ் பதித்து நீண்ட நேரம் முத்தமும் கொடுத்தான்..

ப்ரீதி ஏன் விலகவில்லை..? தன்னை மறந்த மோகத்துடன் அவனுடைய அணைப்பில் பாகாய் உருகி நின்றாளே.. அவனது முத்தத்தில் மூழ்கிப் போனாளே.. விலகிய பின்பும் அவனை அவளால் வெறுக்க முடியவில்லையே.. ஏன்..? ஏன்..? ஏன்..?

0Shares

Reviews – aaranyam azhakanathu / ஆரண்யம் அழகானது

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • X (Twitter)
  • Email
  • Copy Link
Copy link