Chapter 17
ஆரண்யத்தில் தொலைந்தவளை
இருள் மருட்டுகிறது காதலனே…!
விளக்காக நீயெனக்கு.. எனை மீட்டு இருள்விலக்கு..
“ஆதவன் அழகன்தான்.. என்னை விட சிவந்த நிறம்.. கவர்ச்சியான முகம்.. இத்தனைக்கும் மேலாக உன் அத்தை மகன்.. அது என்ன சொன்ன..? அத்தான்.. ம்ம்ம்.. உனக்கு அத்தான்.. இத்தனையிருந்தும் நான் உறுதியாகச் சொல்கிறேன் ப்ரீதி.. என்னைத் தொட அனுமதித்த நீ.. அவனை உன் விரல் தொடக்கூட அனுமதித்திருக்க மாட்ட..”
ப்ரீதி மிரண்டு விழித்தாள்.. சித்தார்த்தன் கண்டு சொன்ன உண்மையில் அவள் மனம் கிடுகிடுத்தது.. சற்றுமுன் நடந்த நிகழ்வில் மயங்கி நின்றாளே.. அவளைத் தொட்டது ஆதவனாக இருந்திருந்தால் மயங்கியிருப்பாளா..?
“முந்தாநாள் என் காரில் வருவதை அவாய்டு பண்ணின.. எனக்கு வருத்தம்தான்.. தட் ஸேம் டைம்.. என்னை அவாய்டு பண்ணின பின்னாலே உன்னால் இந்த ஊரில் இருக்க முடியலை பார்த்தியா.. அப்பக்கூட உன் மனது உனக்குப் புரியலையா..?”
“ப்ளீஸ்.. எதுக்கும் எதுக்கும் கனெக்ட் கொடுக்கறிங்க..? உங்களுக்கும் என் அத்தையின் குடும்பத்திற்கும் ஏதோ ஒரு காரணத்தினாலே பகையிருக்குன்னு தெரியுது.. அது என்னன்னுதான் தெரியலை..”
“உன் அத்தையிடம் கேட்க வேண்டியதுதானே..”
“இதை பலமுறை நீங்கள் சொல்லி நான் கேட்டாகி விட்டது.. உங்களின் ரகசியம் உங்களோடு.. அதைத் தெரிந்துக்கிட்டு எனக்கு ஆகப் போகிறதென்ன..?”
“அவ்வளவு எளிதாக எதையும் தள்ளிவிட முடியாது ப்ரீதி.. அதைத் தெரிந்து கொண்டு உனக்கு ஆகவேண்டியது நிறைய இருக்கலாம்..”
“இருந்தால் இருந்து விட்டுப் போகட்டும்.. ஐ டோண்ட் கேர்..”
“என்னைக்கூட கேர் பண்ண மாட்டியா..?”
சித்தார்த்தனின் கேள்வியில் அவளையுமறியாமல் தவிப்போடு அவன் முகம் பார்த்தாள் ப்ரீதி.. அதற்காகவே காத்திருந்ததைப் போல அவளது பார்வையுடன் பின்னிப் பிணைந்தது அவனது பார்வை.. விடுபட முடியாத சுழல் மறுபடியும் அவளை ஆக்ரமிக்க அவசரமாக பார்வையை விலக்கிக் கொண்டாள்.. அவன் உரக்கச் சிரித்தான்.. அவளது மனம் படபடத்தது..
“உங்களுக்கும் அவங்களுக்கும் இடையே என்ன பகை இருந்தாலும் அதில் நான் இன்க்ளூடு ஆகறதில் எனக்கு சம்மதமில்லை.. நேற்று நான் உங்க காரில் ஏறாம அவாய்டு பண்ணியதற்கு என் பக்கம் காரணமிருக்கு.. பட்.. அதை வைத்து அத்தையும், ஆதவனும் சந்தோசப்பட்டதில் நான் கில்ட்டியா ஃபீல் பண்றேன்.. அதற்காகத்தான் நான் பூனாவுக்குக் கிளம்பினேன்.. மற்றபடி நீங்க எதையும் இமாஜின் பண்ணிக்க வேண்டாம்..”
“இமாஜின்..? யு மீன்.. ‘கற்பனை..?'”
“ஆஹா.. உங்களுக்கு இங்கிலிஷ் தெரியாது பாருங்க.. என்னிடம் விளக்கம் கேட்கறிங்க.. போவிங்களா..?”
அவனிடம் பேசும் போது எப்படிப் பேசுவாளோ.. அப்படிப் பேசிவிட்டு அவசரமாக நாக்கைக் கடித்துக் கொண்டாள் அவள்.. அவன் இமைக்காமல் அவளையே பார்த்ததில் அவளுக்கு லஜ்ஜையாகி விட்டது..
“மாற்றிக்க முடியலையில்ல..?” மென்மையாக வினவினான்..
பின்னலை முன்னால் இழுத்து அதன் நுனியைப் பிரிப்பதும், பின்னுவதுமாக இமைகள் படபடக்க அவள் நின்றிருந்த கோலம் ரவிவர்மாவின் ஓவியத்தைப் போலவே இருப்பதாக அவனது இதயம் ஜொள்ளியது..
“எதுக்காக நீ மாறனும் ப்ரீதி.. என்னிடம் எப்படிப் பேசிப் பழகினாயோ.. அப்படியே இருக்க வேண்டியதுதானே..? திடிர்ன்னு ஏன் முகம் திருப்பின..? உன் அத்தைக்காகவும், ஆதவனுக்காகவும்ன்னு சொல்லாதே.. உனக்கு விருப்பமில்லாத எதையும் உன்மீது திணிக்க முடியாது.. அதற்கு நீ அலோவ் பண்ண மாட்டாய் என்பது எனக்குத் தெரியும்..”
‘எப்படி..?’
ஆச்சரியத்துடன் விழி மலர அவனைப் பார்த்தாள் ப்ரீதி.. அவளது குணாதிசியத்தைப் பிட்டுப்பிட்டு வைக்கிறான்.. அவள் மனதின் விருப்பு வெறுப்புகளைத் தெள்ளத் தெளிவாகச் சொல்கிறான்.. யார் இவன்..? கந்தவர்னா.. யட்சனா.. இல்லை அவளைக் காக்க வந்த ரட்சகனா..?
“பூனாவுக்குப் போனால் நான் உன்னைத் தேடி அங்கே வர மாட்டேனா..? இங்கே உன் அத்தை குடும்பம் இருக்கிறது.. அவர்கள் முன்னால் உன்னை அப்ரோச் பண்ணுவதுதான் எனக்கு கஷ்டம்.. பூனாவில் அப்படியில்லை.. அங்கே நீ சுதந்திரப்பறவை.. உன் பின்னால் ரோமியோ போல.. ஃபாலோ பண்ணி உன் மனதை ஜெயிப்பது வெகு சுலபம்..”
‘ரோமியோவா.. இவனா..?’
அவனறியாமல் அடிப்பார்வையில் அவனை நோட்டமிட்டாள் ப்ரீதி.. ரோமியோ வேடம் அவனுக்குப் பொருந்தி வரவில்லை.. மாறாக வாளேந்தும் வீரனாக புரவியில் ஆரோகணித்து.. ஆக்ரோசமாக சண்டையிடும் போர்வீரன்தான் பொருந்தி வந்தான்..
“என் மனதை ஜெயிப்பது அத்தனை சுலபமில்லை மிஸ்டர் சித்தார்த்தன்..”
“ஆல்ரெடி.. நான் உன் மனதை ஜெயிச்சாச்சு மிஸ் ப்ரீதி.. யு நோ.. என் மனதை ஜெயிக்கிறதும் அத்தனை சுலபமில்லை.. இந்த வட்டாரத்தில் என்னைத் தெரியாதவர்கள் யாருமில்லை.. என் முன்னால் நின்று பேசக்கூட யோசிப்பார்கள்.. நீ என்னடாவென்றால் மிஸ்டர் சித்தார்த்தன்னு எனக்குப் பெயரை வைத்தவளைப் போல அழுத்தம் திருத்தமாகச் சொல்கிற… நான் அதை ரசித்துக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.. இதிலிருந்தே நான் உன்னை என் மனதில் எந்த இடத்தில் வைத்திருக்கிறேன் என்பதை நீ புரிந்து கொள் கண்ணம்மா..”
‘கண்ணம்மாவா..?’
அவள் விழிகளை உயர்த்தி அவனைப் பார்த்தாள்.. தாபத்துடன் அவளைப் பார்த்தவன் அவளருகே வர ஒரு எட்டு வைத்தான்..
“சித்தார்த்தா..”
தொண்டைமானின் குரல் கேட்டது.. வேகமாக அங்கிருந்து சென்று விட்டான்.. அங்கிருந்த மர பெஞ்சில் தளர்ந்து உட்கார்ந்த ப்ரீதி தலையைப் பிடித்துக் கொண்டாள்.. ஏனோ கண்ணீர் பெருகியது..
“கண்ணன் என்னை கண்டு கொண்டான்..
கையிரண்டில் அள்ளிக் கொண்டான்..
பொன்னழகு மேனியென்றான்..
பூச்சரங்கள் சூடத் தந்தான்..
கண்திறந்து பார்த்தேன்.. கண்ணன் அங்கு இல்லை..
கண்ணீர் பெருகியதே..”
மனதில் பாடல் ஒலித்தது.. பாறையாய் கனத்த மனதுடன் கண்மூடி அமர்ந்திருந்தவளின் தோளில் சில்லென ஓர்கரம் படிந்தது.. திடுக்கிட்டு நிமிர்ந்தாள்..
“ஏய்ய்.. இங்கே உட்கார்ந்துக்கிட்டு என்ன பண்ற..?” ஆர்த்தி அவள் தோளை உலுக்கி எழுப்பினாள்..
“ச்சும்மா..”
“சும்மா உட்கார நல்ல இடம் பார்த்த போ.. வால்பாறை வட்டாரத்தில எப்போதும் மழை பெய்துக்கிட்டே இருக்கும்.. மலைக் காத்து ஊசியாய் உடம்பைத் துளைக்கும்.. இப்படி பனியிலும் மழையிலும் நனைந்துக்கிட்டு இருந்தா உன் உடம்பு தாங்குமா..? நீயும் எதையாவது இழுத்து விட்டுக்காதே.. வா.. வா.. வீட்டுக்குள் போகலாம்.”
ஆர்த்தியுடன் ப்ரீதி வீட்டுக்குள் போனபோது சித்தார்த்தன் ஹாலில் தொண்டைமானுடன் பேசிக் கொண்டிருந்தான்.. அவனது பார்வை வாசல் மீதே இருந்தது.. ப்ரீதியைக் கண்டதும் அவனது விழிகளில் தெரிந்த ரகசிய பளபளப்பில் இவளது உடலில் ஜிவ்வென்ற ஓர் உணர்வு உண்டானது.. அவனது பார்வையை நேர்கொண்டு பார்க்க முடியாமல் வேறு பக்கம் பார்த்தபடி மாடியேறி விட்டாள்.. அவளது முதுகைத் துளைத்த அவனது ரேசர் பார்வையை அவளால் உணர முடிந்தது..
பூனாவுக்கும் ஓட முடியாது.. அவளது குடும்பம் கொல்கத்தாவுக்குப் போயிருக்கும்.. இன்னும் இரண்டு வாரம் அவள் கானவயலில் இருந்துதான் ஆக வேண்டும்..
யோசித்து யோசித்து தலைவலி வந்ததுதான் மிச்சம்.. அவளுக்கு எந்த வழியும் புலப்படவில்லை.. மாற்றுடையை எடுத்துக் கொண்டு குளிக்கப் போனாள்.. கொதிக்கும் வெந்நீர் ஷவரில் கொட்ட தலை நனைய நின்றவளுக்கு அவன் முத்தம் கொடுத்த மணித்துளிகள் நினைவுக்கு வந்து தொலைத்தன.. தலையை உலுக்கி அந்த நினைவைத் துரத்த முற்பட்டாலும் அது மறையவில்லை.. ஒரு கட்டத்தில் அந்த நினைவோடு அவள் ஒன்றிப் போனாள்..
உடைமாற்றி இறங்கி வந்தவளை விழுங்கி விடுவதைப் போல பார்த்து வைத்தான் சித்தார்த்தன்.. தொண்டைமானும் பக்கத்தில் நிற்கிறார் என்பதில் முகத்தை இறுக்கமாக்கிக் கொண்டாள் ப்ரீதி.. அவரைக் கண்டாலே அவளுக்குப் பிடிக்கவில்லை.. அதை கண்டு கொண்ட சித்தார்த்தன் ஏன் என்பதைப் போல புருவங்களை உயர்த்தி அவளை அரள வைத்தான்..
‘பேசாம இருந்து தொலைடா.. இந்தக் கிழவர் எதையாச்சும் சொல்லி வைக்கப் போகிறார்.. இன்னுமாடா இங்கே மீட்டிங் போட்டுக்கிட்டு இருக்கீங்க.. மத்தவங்க ஃப்ரீயா இருந்துவிடக் கூடாதுங்கிறதில நீயும் இந்த மனிதரும் கண்ணும் கருத்துமா இருக்கிங்கடா.. எப்போதும் மாடி ஹாலில்தான மீட்டிங் போடுவீங்க.. இன்றைக்கு என்ன கீழேயே ஸ்டார்ட் பண்ணிட்டிங்க..? அவ்வளவு நல்ல எண்ணம்..’
வெட்டும் பார்வையுடன் அவள் டைனிங் ஹாலுக்குப் போனாள்.. அவளைத் தொடர்ந்த சித்தார்த்தனின் பார்வையில் முகம் சுளித்தார் தொண்டைமான்.. ப்ரீதி கூசிப் போனாள்..
‘இவனால்தானே இந்த நிலைமை..’
வெட்டவா, குத்தவா என்பதைப் போல அவள் வெகுண்டு பார்த்ததில் சித்தார்த்தன் மறுபடியும் புருவங்களை உயர்த்தி அவளை சோதித்து வைத்தான்.. அதை ப்ரீதி பார்த்ததைப் போலவே தொண்டைமானும் பார்த்து வைத்தார்..
“சித்தார்த்தா..”
அவர் போட்ட அதட்டலில் ‘வாங்குப் பெறுடா மச்சான்..’ என்று எதையும் கண்டு கொள்ளாதவளைப் போல ப்ரீதி நகர்ந்து விட்டாள்..
“உன்னிடம் ஏற்கனெவே சொல்லியிருக்கிறேன் சித்தார்த்தா..”
அவர் பேச்சு டைனிங்ஹாலில் இருந்த ப்ரீதியின் காதுகளில் விழுந்து வைத்தது..
‘நல்லா ஞாபகப் படுத்துங்க ஓல்டுமேன்..’ என்று இங்கு அவள் மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்..
“உன் உயரம் என்னவென்று உனக்குத் தெரியாதா..?”
‘எனக்கும் தெரியும் ஓல்டுமேன்.. ஆறடிக்கும் மேல் ஆதவன் அத்தானைவிட உயரமாக நெடுநெடுன்னு வளர்ந்திருக்கான்.. ஹப்பா.. என்ன உயரம்.. என்ன உயரம்..’
“உன் லெவலை விட்டு இறங்காதே சித்தார்த்தா..”
‘ஆமாண்டா.. மரத்து மேலே ஏறி உட்கார்ந்துக்க.. அதுதான் சரியா இருக்கும்.. ஓல்டுமேன் சொல்கிறதைக் கேளுடா..’
சித்தார்த்தன் தாழ்ந்த குரலில் எதையோ முணுமுணுக்க.. தொண்டைமானின் முகம் கடுமையானது.. தன் குரலை அவரும் தாழ்த்திக் கொண்டதில் சப்தம் போடாதே என்று சித்தார்த்தன் அவரை கடிந்து கொண்டிருக்க வேண்டும் என்று யூகித்தாள் ப்ரீதி.. சீற்றத்துடன் அவர் எதையோ பேச.. சித்தார்த்தன் அவரைவிடச் சீற்றமாக பதில் சொல்லிவிட்டு தடதடவென மாடிப்படிகளில் ஏறிப் போய் விட்டான்.. தீப்பந்தம் போல ஜொலிக்கும் கண்களோடு தொண்டைமான் டைனிங்ஹால் பக்கம் திரும்பியதில் நடுநடுங்கிப் போன ப்ரீதி ஆர்த்தியின் முதுகுக்குப் பின்னால் ஒளிந்து தப்பித்தாள்..
“என்னடி..?” ஆர்த்திக்குப் புரியவில்லை..
“அந்த ஓல்டு மேன் முறைக்கிறார் ஆர்த்தி.. எனக்கு பயமா இருக்கு..”
ஆர்த்தி திரும்பிப் பார்த்து விட்டு கடுகடுவென்ற முகத்துடன்..
“அவர் அப்படித்தாண்டி.. எங்களைக் கண்டாலே அவருக்கு ஆகாது.. நீ என் மாமன் மகளில்ல.. அதுதான் முறைக்கிறார்.. வெளிப்படையா எதுவும் பேச மாட்டார்.. பயப்படாதே..” என்று சமாதானப் படுத்தினாள்..
இருந்தாலும் ப்ரீதிக்குப் பயமாகத்தான் இருந்தது.. மாடிக்குச் செல்லும்போது ஹாலில் தொண்டைமான் இருக்கிறாரா என்று மறைந்து நின்று பார்த்தபடி பூனையைப் போலப் போனாள்..
“யாரைப் பார்த்து இப்படிப் பயப்படற..?”
காதோரம் ஒலித்த குரலில் ஆனந்தம் கொண்டாள்.. அதை வெளிக்காட்டி விடாமல் சர்வ ஜாக்கிரதையாக..
“பயமா..? எனக்கா..? ஹ..” என்றபடி திரும்பினாள்..
“நம்பிட்டேன்..” புன்சிரிப்புடன் கைகளை மடித்துக் கட்டியபடி நின்றிருந்தான் சித்தார்த்தன்..
‘பெரிய விவேகானந்தன்னு மனசுக்குள் நினைப்பு.. எதுக்கெடுத்தாலும் இந்த போஸ்தானா…? படவா ராஸ்கல்.. எந்த போஸ் கொடுத்தாலும் அழகாய் இருந்து தொலைக்கிறான்..’
அவனை பார்வையால் அவள் அளவெடுக்க..
“மாப்பிள்ளை பார்க்கிறயா..?” என்று கேட்டு வைத்தான் அவன்..
“நினைப்புத்தான்..”
“யெஸ் மை டியர்.. உன் நினைப்புத்தான்..”
“பக்கத்தில் பெரியவர் இல்லாத தைரியமா..?”
“எந்தப் பெரியவர்..?”
“எதுக்கு வம்பு..? அவர் பெயரை நான் மாற்றிச் சொல்லி விடுவேன்.. நீங்க உடனே எப்போதும் நான் இதுபோல பொறுமையாக விளக்கம் சொல்லிக்கிட்டு இருக்க மாட்டேன்னு எண்ணையில போட்ட அப்பம் போலக் குதிப்பீங்க.. தேவையா எனக்கு..?”
“ஓ.. அவரைச் சொல்கிறாயா..?”
“அவரேதான்.. எனகூடப் பேசாதீங்க..”
“ஏன்..? என்னை உனக்குப் பிடிக்கலையா..?”
ஆழ்ந்த குரலில் அவன் கேட்டான்.. உள்ளம் படபடக்க அவனை நிமிர்ந்து பார்த்தாள் ப்ரீதி.. அலைபாயும் சிகையோடு அவளைக் கவர்ந்து இழுக்கும் காந்தப் பார்வையோடு இமைசிட்டி அவளை மயக்கினான் அந்த மாயவன்..
‘இவனை எனக்குப் பிடிக்காதா..?’
பிடித்திருந்தது.. அவனை அவளுக்குப் பிடித்திருந்தது.. அவன் யார் என்று தெரியாமலே.. அவனுக்கும் அவளுடைய அத்தை குடும்பத்திற்கும் பகையிருக்கிறது என்று தெரிந்திருந்தும் அவளுக்கு அவனை மிகவும் பிடித்திருந்தது..
Reviews – aaranyam azhakanathu / ஆரண்யம் அழகானது
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.