Chapter 18
யுகங்கள் பல கடந்து
உனக்காக நான்
பிறந்து வந்திருக்கிறேன் என் காதலனே..!
“ஆசையக் காத்தில தூது விட்டு..”
இனிமையான பெண்குரல்.. நடுவில் தீ மூட்டி சுற்றிலும் இளம் பெண்கள் கை கோர்த்து வட்ட வடிவமாக நெருப்பைச் சுற்றி ஆடி வந்ததைப் பார்க்கப் பார்க்க அதிசயமாக இருந்தது ப்ரீதிக்கு.. அது புதுவிதமான அனுபவமாக இருந்தது.. அடர்ந்த காடு என்பதினால் குளிர் அதிகமாக இருந்தது.. அவள் அணிந்திருந்த ஸ்வெட்டரையும் போர்த்தியிருந்த சால்வையையும் தாண்டி குளிர் அவளைத் தீண்டியதில் வெடவெடக்க ஆரம்பித்திருந்தாள்..
“கம்பளியைப் போத்திக்கங்க ஐயா.. அம்மாவுக்கு குளிரு தாங்கல..”
பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெரியவர் ஒருவர் கனத்த கம்பளியொன்றை நீட்டினார்.. அவர்தான் அந்தக் கூட்டத்திற்குத் தலைவர் போல.. கூட்டத்தினர் அவருக்கு மரியாதை கொடுத்து கைகட்டி வாய் பொத்த.. அவரோ சித்தார்த்தனுக்கு மரியாதை கொடுத்துக் கை கட்டி வாய் பொத்தினார்..
“ஏ குள்ளா.. ராசா வந்திருக்காரு.. ஆட்டம், பாட்டத்துக்கு மேளத்தைக் கொட்டு..”
அவர் ஆணையிட்டதில் கூட்டத்தைச் சேர்ந்த இளம் பெண்கள் நடுவில் தீ மூட்டி.. அதைச் சுற்றிவந்து ஆட ஆரம்பித்தார்கள்.. அவர்களில் ஒரு பெண்.. பார்க்க வெகு அழகாக இருந்தாள.. பெரிய கருவிழிகளுடன் சித்தார்த்தனையே ஏக்கத்துடன் பார்த்தபடி பாடியதைப் போல இருந்தது.. அது ப்ரீதிக்குப் பிடிக்கவில்லை..
‘அவ எதுக்காக இவனையே பார்க்கிறா..?’
அவளுக்குத்தான் இந்த சந்தேகம்.. சித்தார்த்தன் ப்ரீதியைத்தவிர எவரையும் கவனித்ததாகவே தெரிய வில்லை.. குளிரில் வெடவெடத்துக் கொண்டிருந்தவளுக்குக் கம்பளியைப் போர்த்து விட்டு அருகில் இழுத்து அணைத்துக் கொண்டான்.. ஒரே கம்பளியை இருவருக்குமாக அவன் போர்த்தியிருந்ததில் அவர்களின் நெருக்கம் மற்றவர்களின் பார்வையில் படவில்லை..
ப்ரீதியை தன் மடியில் அமர்த்தியிருந்தான் சித்தார்த்தன்.. பெரிய கம்பளி இருவரையும் போர்த்தியிருக்க அவனது கைகள் அவளது தோள்களைத் தழுவி இறுக்கி வயிற்றில் படிந்திருந்தன.. அவளுடைய கூந்தல் வாசத்தை அவன் முகர.. அவனது மூச்சுக் காற்றில் அவளது கன்னங்கள் சூடாகின.. ப்ரீதிக்கு தன்னுணர்வு மறந்தது.. வானில் பறப்பதைப் போலவே இருந்தது..
குளிருக்கு இதமாக அவனது உடல் சூடு அவளுக்கு உஷ்ணத்தைக் கொடுக்க விலக முடியாமல் விலக விரும்பாமல் அவனுக்குள் புதைந்து விட்டாள் ப்ரீதி.. அவனது நெருக்கம் தட்டியெழுப்பி விட்ட உணர்வலைகள் தீயென எழுந்து அவளைப் பொசுக்கின.. கண்மூடிக் கிறங்கி அவன் மீது சரிந்திருந்தாள் ப்ரீதி.. அதை அவன் உணர்ந்தான்.. மற்றவர்கள் உணரவில்லை.. கம்பளிக்குள் நடந்த ஆலிங்கனத்தை அவர்கள் அறிய முடியவில்லை..
அவன் மடியில் புதைந்து அவனது கைகளுக்குள் சிறைபட்டிருக்கும் அந்த நிலைமை நீண்டு கொண்டே இருக்க வேண்டும் என்று அவள் மனம் விரும்பியது.. அந்த நடனம் முடியக் கூடாது.. அவளும் சித்தார்த்தனும் கம்பளியை விட்டு வெளியே வரக்கூடாது.. அவர்கள் அரண்மனைக்குத் திரும்பக் கூடாது.. அந்த ஆரண்யத்திலேயே இருந்து விடவேண்டும்.. அவன் மடிமீது புதைந்து.. அவன் மார்பில் முகம் பதித்து.. இப்படியே பினைந்திருக்க வேண்டும்.. அது முடியுமா..?
“ஆசையைக் காத்தில தூது விட்டு..
ஆடிய பூவில் வாடை பட்டு..
சேதியைக் கேட்டொரு ஜாடை தொட்டு..
பாடுது பாட்டு ஒன்னு – குயில்
கேட்குது பாட்ட நின்னு..”
குளிரைச் சுமந்து வந்த பாடலில் குளிர் நிரம்ப அவனை இறுக்கிக் கொண்டாள் ப்ரீதி.. அவனது கரங்கள் இன்னும் ஆழமாகப் பதிந்ததில் இதமான இன்ப இம்சையொன்று நூதனமாக அவளைத் தாக்கியது.. உணர்வுகளின் வீச்சைத் தாங்க முடியாதவளாக ப்ரீதி அவனுடன் ஒன்றிக் கொண்டாள்.. அதில் அவனது கரங்கள் இறுகிப் பரவி முன்னேறின.. தாபத்துடன் சித்தார்த்தனின் சூடான இதழ்கள் அவளது செவி மடல்களில் படிந்தன.. அவளது கூந்தலில் பூவாசத்தை உணர்ந்தான்..
“வாசம்.. பூவாசம்.. வாலிப காலத்து நேசம்..
மாசம்.. தைமாசம்.. மல்லிகைப் பூ மணம் வீசும்..
நேசத்தில.. வந்த வாசத்தில..
நெஞ்சம் பாடுது.. சோடியத் தேடுது..
பிஞ்சும் வாடுது வாடையிலே..
கொஞ்சம் ஜாடையைப்
பேசுது பார்வையும்
சொந்தம் தேடுது மேடையிலே..
ஆசையைக் காத்தில தூது விட்டு..”
ப்ரீதியை இழுத்து ஏதோ ஓர் குளிர் நதியில் தள்ளி விட்டது பாடல்.. அவள் உருகிப் பனி போல் ஓடிக் கொண்டிருந்தாள்.. சித்தார்த்தன் எது செய்தாலும் சம்மதம் என்று அவனிடம் தஞ்சமடையும் நிலையில் தொய்திருந்தாள்.. தாள முடியாத தாபத்தை அந்தப் பாடல் அவளுக்குள் உற்பத்தி செய்ய ஏக்கம் கொண்டாள் ப்ரீதி.. அவன் வேண்டும் என்று அவளது உடலும் மனமும் தேடிய தேடலில் மனம் துடித்தாள்..
“தேனு.. பூந்தேனு.. தேன்துளி கேட்டது நானு..
மானு.. பொன்மானு.. தேயிலை தோட்டத்து மானு..
ஓடிவர.. உன்னைத் தேடிவர..
தாழம்பூவில.. தாவுற காத்தில..
தாகம் ஏறுது ஆசையிலே..
பார்க்கும் போது ஏக்கம் தீரல..
தேகம் வாடுது.. பேசையில..
ஆசையைக் காத்தில தூது விட்டு..”
பாடல் தொடர்ந்து கொண்டிருந்தது.. அனல் மூச்சு அவளைச் சுட்டது.. அவளது முடிகோதி.. தோள் தடவி.. அவளது எழும்புகளை நொறுக்கி விடுபவனைப் போல இறுக்கிக் கொண்டவனைத் தடுக்க முடியாமல் அவனிடம் சரணடைந்திருந்தாள் அவள்.. கண்மூடி மனம் கிறங்க அவனது சிருங்காரத்தில் லயித்திருந்தாள்.. குழைந்து அவனுடன் ஒன்றியிருந்தவளின் தோள் வளைவில் முகம் பதித்தான் சித்தார்த்தன்.. முடியவே கூடாது என்று அவர்கள் விரும்பிய நடனம் முடிவுக்கு வந்து விட்டது.. விலக மனமில்லாமல் இருவரும் விலகி எழுந்தார்கள்.. கம்பளியை மடித்துக் கூட்டத்தின் தலைவரிடம் கொடுத்து விட்டு ப்ரீதியின் தோள் மீது கைபோட்டு அணைத்தபடி நடக்க ஆரம்பித்தான் சித்தார்த்தன்..
“ராணி எந்த ஊருங்கோ..?”
அவர் யாரையோ கேட்கிறார் என்று நினைத்தபடி காட்டை வேடிக்கை பார்த்தாள் ப்ரீதி.. சித்தார்த்தனின் பார்வை மயிலிறகைப் போல அவள் மனதை வருடியதில் சிலிர்த்துப் போனவளாக அவன் முகம் பார்த்தாள்..
“இவ வட இந்தியாவில இருந்து வந்திருக்கிறா..”
“அப்படிங்களா..? அம்மணி தமிழ் பேசுவாகளா..?”
“அதெல்லாம் வெளுத்துக் கட்டுவா..”
“ராசாவுக்குச் சொந்தமோ..”
“சொந்தமாகப் போகிறவ.. இப்போதைக்கு ஆதவனின் அம்மாவுக்குத்தான் இவள் சொந்தம்.. அவங்க அண்ணன் மகள்..”
சித்தார்த்தன் சொன்ன பதிலில் அந்த மலைவாசி இனத் தலைவரின் முகம் படுபயங்கரமாக மாறியது..
“ராசா..” என்று அவர் ஏதோ சொல்ல ஆரம்பிக்க.. சித்தார்த்தன் சைகை செய்து அதைத் தடுத்து விட்டான்..
ப்ரீதிக்குப் பயமாக இருந்தது.. ஆதவனுக்கும் சித்தார்த்தனுக்கும் பகை என்றால் அவள் என்ன செய்வாள்..? அந்த மலைவாசி இனத்தின் தலைவர் அவளை விரோதியைப் போலப் பார்க்கிறாரே..
வெகுதூரம் வந்த பின்பும் ப்ரீதியின் நடுக்கம் நின்ற பாடாக இல்லை.. வழியில் இருந்த அருவியில் அவளை முகம் கழுவச் சொல்லி அருகிலிருந்த பாறையில் உட்கார வைத்தான் சித்தார்த்தன்.. இப்போதும் அவன் மடி மீதுதான்.. கம்பளியைப் போர்த்தி மறைத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லாமல் அங்கே தனிமை அவர்களைச் சூழ்ந்திருந்தது..
“ஆக்சுவலாய் நீங்க யார்..?” தவிப்புடன் அவள் கேட்டாள்..
“சித்தார்த்தன்..” உல்லாசமாக அவன் நகைத்தான்..
“ம்ப்ச்.. இதுதானே வேண்டாம்ங்கிறது..” சிணுங்கினாள் ப்ரீதி..
“எது வேண்டாம்..?” அவளது இதழ்தேடிக் கிறக்கத்துடன் குனிந்தான் அவன்..
“சித்தார்த்..” தடுமாறிப் பிணைந்தாள் ப்ரீதி..
அவனைத் தடுக்க முடியவில்லை.. தடுக்கவும் தோன்றவில்லை.. இது எதில் போய் முடியப் போகிறதோ என்ற பயம் அவளை அச்சுறுத்தியது.. அவன் யார்..? அவனைப் பெற்றவர்கள் எங்கே..? ஏன் அவன் விசாகாவின் குடும்பத்துடன் வசிக்கிறான்..? அவர்கள் இவனுக்கு அடங்கியவர்களாக இருக்கிறார்களே.. ஏன்..? அவர்களை விட இவனுக்குத்தான் சகலவிதமான அதிகாரங்களும் இருக்கின்றனவே.. அது எப்படி..?
கேள்விகள் அவளைச் சூழ்ந்திருக்க.. அவற்றை மறந்து அவனுடன் ஒட்டி உறவாடத் துடித்தது அவளது மனம்..
“என்னடி யோசனை..?” அவளது கன்னம் தட்டினான் சித்தார்த்தன்..
“‘டீ’யா..?”
“ஆமாண்டி.. ஏன்.. நான் உன்னை வாடி, போடின்னு கூப்பிடக் கூடாதா..? அந்த உரிமை எனக்கு இல்லையா..?”
“அந்த உரிமை எனக்கு இருக்குமா..?”
ப்ரீதி அழுது விட்டாள்.. நெற்றியில் கோடுகள் விழ சித்தார்த்தன் விலகி அவளது முகத்தைத் திருப்பி விழிகளுக்குள் உற்றுப் பார்த்து அதட்டினான்..
“என்மேல் நம்பிக்கை இல்லையா..?”
“தெரியலை சித்தார்த்..” அவள் விசும்பினாள்..
“பைத்தியம்.. என்னைச் சித்தார்த்துன்னு பெயர் சொல்லிக் கூப்பிடும் உரிமை உனக்கு இருக்கிறதே.. அதிலிருந்தே உன் உரிமையின் லெவல் என்ன என்பது உனக்குத் தெரியலையா..?”
ப்ரீதி விழி விரிய அவனைப் பார்த்தாள்.. அவன் விழிகளில் உண்மை இருந்தது..
“நீங்க யார்ன்னு சொல்ல மாட்டேங்கறிங்களே..” குழந்தையைப் போல குறைபட்டாள்..
“சித்தார்த்தன்னு சொல்லிட்டேனே.. அது போதாதா..?”
“போதாதே.. அரண்மனையில் இருக்கும் அந்தப் பெரியவரும் சரி.. இந்த மலைவாசிப் பெரியவரும் சரி.. உங்களை பெரிய இடத்தில் வைத்துப் பேசறாங்க.. அவர் உங்களின் உயரத்துக்கு என்னைப் போல சாதாரணப் பெண்ணுடன் பேசுவது கூடத் தவறுன்னு உங்களைக் கண்டிக்கிறார்.. இவர் என்னடாவென்றால் நான் விசாகா அத்தையின் அண்ணன் மகள்ன்னு தெரிந்ததும் கத்தியை எடுத்துக் குத்தி விடுவார் போல முறைக்கிறார்.. இதில் நீங்க காதல் சொல்கிறீங்க.. எனக்குப் பயமா இருக்கே..”
சித்தார்த்தன் சிந்தனையுடன் அவளைப் பார்த்தான்..
“தாத்தா என்னிடம் பேசியதை நீ கேட்டு விட்டாயா..?”
“தாத்தான்னா.. சொந்த தாத்தாவா..?”
“ம்ம்ம்.. அவர் என் தாத்தாதான்.. அம்மாவின் அப்பா..”
“உங்களுக்கு அம்மா இருக்காங்களா..?”
“அம்மா இல்லாம யாரும் இந்த உலகத்திற்கு வந்திருக்க முடியாதுடி.. என்னைப் பத்து மாதம் சுமந்து பெற்ற அம்மா இப்போது இல்லை..”
“சித்தார்த்..?”
“யெஸ்.. அவங்க இறந்துட்டாங்க..”
“அப்பா..”
சித்தார்த்தனின் விழிகள் தீப்பிழம்பாக கனன்றதில் பயந்து போனாள்..
“சொல்ல விரும்பலைன்னா விட்டு விடுங்க..” என்றாள்..
“தாத்தா அப்படித்தான் பேசுவார் ப்ரீதி.. அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை..”
“எப்படி எடுத்துக் கொள்ளாமல் இருப்பது..? உங்கள் தாத்தா பேசிய பேச்சு என் சுயமரியாதையை பாதிக்கிறதே.. உங்களிடம் பேசவே கூடாதுன்னு நினைத்தேன்..”
“ஓ.. அதனாலதான் என் காரில் ஏற மாட்டேன்னு சொன்னாயா..?”
“ம்ம்ம்…”
“இது தெரியாம நான் எதையெதையோ நினைத்துக் குழம்பிப் போய் விட்டேன்டி..”
“நான் உங்களை அவாய்டு பண்ணியது இந்த ரீசனுக்காகத்தான்.. இது தெரியாமா அத்தையும், அத்தானும் சந்தோசம் கொண்டாடினாங்க.. வெறுத்துப் போய் பூனாவுக்குக் கிளம்ப டிசைட் பண்ணினேன்.. அத்தான் மேல எனக்கு விருப்பமில்லைன்னு அப்பாவிடம் சொல்லி விட்டேன்..”
“என் ப்ரீதி..”
ஆசையுடன் அவளைக் கட்டிக் கொண்ட சித்தார்த்தன்..
“வேறு யார் மீது உனக்கு விருப்பம்..?” என்று கண்சிமிட்டினான்.. ப்ரீதி அவன் மார்பில் குத்தினாள்..
“தாத்தாவைச் சமாளிப்பது என் பொறுப்பு.. பெரியவர்.. எனக்கென்று இருக்கும் ஒரே சொந்தம் அவர்தான்.. அதனால்தான் அவர் பேசுவதைக் கண்டிக்காமல் சிரித்தபடி தட்டிக் கழித்துக் கொண்டிருக்கிறேன்.. எனக்கு நீதான் வேண்டும்ன்னு நான் சொல்லி விட்டால் அவர் மறுத்துப் பேச மாட்டார்.. ஏன்னா.. அவருக்கு இருக்கிற ஒரே சொந்தம் நான் மட்டும்தான்..”
ப்ரீதிக்குத் துயரமாக இருந்தது.. அவளது மனம் கவர்ந்தவனுக்கும் அவனுடைய தாத்தாவிற்கும் சொந்தமென்று சொல்லிக்கொள்ள ஒருவருக்கொருவர் மட்டும்தான் இருக்கிறார்களா..?
“நானில்லையா..?” கண்ணீருடன் கேட்டாள்..
“ப்ரீதி..” உணர்ச்சிப் பெருக்குடன் அவளது கன்னம் தடவினான் சித்தார்த்தன்..
“உங்க தாத்தாவுக்கு பேத்தியாக நானிருப்பேன் சித்தார்த்..”
“எனக்கு யாராக இருப்பாய் ப்ரீதி..?”
குழந்தை போலக் கேட்டவனின் முடிகோதி மார்போடு அவனை சேர்த்தணைத்து முடிகோதி அவள் பாடினாள்..
“காதல் வந்தால் சேயாவேன்..
கருணை வந்தால் தாயாவேன்..
கண்ணா.. உந்தன் நிழலாவேன்..
உனக்கென நான் வாழ்வேன்..”
‘கவர்க்கல்!’ எப்போதும் பனி படர்ந்திருக்கும் வனப் பிரதேசம்.. அங்கே.. அவனும் அவளும் ஒருவரிடம் ஒருவர் மனதைச் சொன்னார்கள்..
Reviews – aaranyam azhakanathu / ஆரண்யம் அழகானது
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.