Chapter 19

0Shares

நான் நீயாக.. நீ நானாக..

வாழ்ந்திருப்போம் இவ்வுலகில்..

வாழ்ந்திடவா.. என் மன்னவனே..!

‘கவர்க்கல்..’

எப்போதும் பனி படர்ந்திருக்கும் மலைபிரதேசம்.. பனிச்சறுக்கு விளையாடலாமா என்று குறும்பாக கேட்ட ப்ரீதி அந்த இடத்தை நேரில் பார்த்தபோது வாயடைத்துப் போனவளாக கன்னங்களில் கைகளை வைத்து பிரமித்து நின்று விட்டாள்.. எதிரே வரும் ஆள்கள் கூட தெரியாத அளவுக்கு பனிப்புகை அடர்ந்திருந்தது.. ப்ரீதிக்கு ‘உயர்ந்த மனிதன்’ திரைப்படத்தில் வாணிஸ்ரீ ‘நாளை இந்த வேளை பார்த்து ஓடிவா நிலா..’ என்று பனிப்புகையின் ஊடே பாடியபடி வந்து மறைந்து போகும் காட்சி நினைவுக்கு வந்தது.. அதை சித்தார்த்தனிடம் பகிர்ந்து கொண்ட போது..

“அது ரொம்ப பழைய படமாச்சே.. பிளாக் அண்ட் வொயிட் ஃபிலிமில்ல..?” என்று கேட்டான்..

“ஆமாம்.. என் பேரண்ட்ஸ் பழைய பாடல்களை விரும்பிக் கேட்பாங்க..” என்றாள் ப்ரீதி..

“இங்கேயும் அதே கதைதான்.. அம்மாவுக்குப் பழைய பாட்டுன்னா உயிர்..” சித்தார்த்தனின் குரல் கரகரத்தது.. 

‘அம்மாவின் நினைவு வந்து விட்டது போல..’ ப்ரீதி நெகிழ்ந்தாள்..

“அப்பாவுக்கு பழைய பாட்டு பிடிக்காதா..?” இதமாக வினவினாள்..

ப்ரீதியின் கேள்வியில் முகம் மாறினான் சித்தார்த்தன்.. அவளை உற்றுப் பார்த்தவனின் பார்வையில் ஏதோ இருந்தது.. குழம்பிப் போனவளாக..

“என்ன..?” என்றாள்..

“ஒன்றுமில்லை..” பட்டுக் கத்தரித்த பதில்..

அவன் தன்னுடைய அப்பாவைப் பற்றிப் பேசப் பிரியப்படவில்லை என்பதில் ப்ரீதி சங்கடம் கொண்டாள்.. இன்னும் எண்ணி பத்தே நாள்கள்தான்.. அவள் பூனாவுக்குக் கிளம்ப வேண்டும்.. கங்காதரனிடம் அவளுடைய காதலைப் பற்றிச் சொல்ல வேண்டும்.. அப்போது சித்தார்த்தனைப் பற்றிய முழுமையான விவரங்களை அவள் சொல்ல வேண்டாமா..?

“உங்க அப்பா எங்கேயிருக்கிறார்..?”

மறுபடியும் ஓர் மர்மப் பார்வை.. ப்ரீதியினால் தாங்க முடியவில்லை.. அவளது நிலையை அவன் புரிந்து கொள்ளவே மாட்டானா..?

“நெஞ்சில் குடியிருக்கும்..

அன்பருக்கு நானிருக்கும்..

நிலைமை என்னவென்று தெரியுமா..?

        நினைவை புரிந்து கொள்ள முடியுமா..?”

கன்னக் குரலில் பாடினாள்.. அவன் காதலுடன் அவளை அணைத்துக் கொண்டான்.. கன்னத்தில் முத்தமிட்டான்.. ப்ரீதியின் உடல் நடுங்கினாலும் அவள் விலகவில்லை.. மறுபடியும் இதுபோல சித்தார்த்தனுடன் தனித்திருக்கும் சந்தர்ப்பம் கிடைக்குமோ, கிடைக்காதோ.. யாருக்குத் தெரியும்..? விசாகா மருத்துவமனையில் இருந்தபோது அவளைப் பார்க்கப் போகும் சாக்கில் சித்தார்த்தனுடன் ப்ரீதியால் ஊர் சுற்ற முடிந்தது.. ப்ரீதி பூனாவுக்குத் திரும்புவது இரண்டு வாரங்களுக்குத் தள்ளிப் போடப்பட்டு விட்டது என்பதை ஆதவன் அறிந்து கொண்ட மறுநிமிடமே விசாகாவிற்குத் தூக்க மாத்திரையிடமிருந்து விடுதலை கிடைத்து விட்டது.. அவள் வீடு திரும்பி விட்டாள்.. ப்ரீதியால் முன்போல போக்குக் காட்டிவிட்டு சித்தார்த்தனுடன் ஊரைச் சுற்ற முடியவில்லை.. இதில் வேறு ஆதவன் தன்னுடன் ஊரைச் சுற்றிப் பார்க்க வரும்படி ப்ரீதியை வற்புறுத்திக் கொண்டிருந்தான்.. இருக்கும் இம்சைகளிலேயே இதுதான் ப்ரீதிக்கு பெருத்த இம்சையாக இருந்தது.. வீட்டில் இருந்தால்தானே இவன் வெளியே வா என்று கூப்பிடுவான் என்று ப்ரீதி தன்னந்தனியாக உலாவக் கிளம்பி விட்டாள்.. நூறடிதான் போயிருப்பாள்.. பின்னால் அவளுக்குப் பழக்கமான கார் ஹாரன் சப்தம் கேட்டு விட்டது..

‘வந்துட்டான்..’ அவள் மனம் குதியாட்டம் போட்டது.. அவளுக்குத் தெரியும்.. அவள் வீட்டை விட்டு வெளியில் வந்தால் சித்தார்த்தன் தொடர்ந்து வந்து விடுவான் என்பது.

“ஏறிக்க..” கார்க்கதவை திறந்து விட்டான் அவன்..

“உங்க காரில் நான் ஏறினா கலவரம் வந்து விடும் சார்..” விளையாட்டாக அவள் மறுத்தாள்..

“எத்தனை கலவரத்தைப் பார்த்திருப்பேன்..? நான் பார்க்காத கலவரமா..? உன் அத்தை மகனெல்லாம் ஒரு ஆள்.. அவன் செய்கிற கலவரத்துக்கு பயந்து உன்னை விட்டுக் கொடுக்கப் போகிறேன்.. ஆளைப் பாரு..”

“ஓ.. ஆளைப் பார்க்காமத்தான் ஃபாலோ பண்றீங்களா..?”

“என்னை ஃபாலோ பண்ண ஏகப்பட்ட பெண்கள் கியூ கணக்கில் காத்துக்கிட்டு இருக்காங்க அம்மணி..”

“அப்படிங்களா மச்சான்.. அதில யாராவது ஒருத்தரை கன்சிடர் பண்ணியிருக்கலாமுங்களே..”

“என்னத்தைச் செய்கிறது..? இந்த மனசு சொன்னபடி கேட்க மாட்டேங்குதே..”

“சொன்னபடி கேட்காமல் என்ன பண்ணுச்சாம்..?”

“பூனாக்காரி பின்னால் போகுதே..”

“ஓ..”

“அடங்கறியா..?”

“அடங்கி..?”

“காரில் ஏறு..”

“ஏறலைன்னா..?”

“ஏறலைன்னா..”

அவளிடம் பேசியபடியே இமைக்கும் பொழுதுக்குள் காரை விட்டு இறங்கிச் சுற்றி வந்த சித்தார்த்தன் அவளை அலேக்காகத் தூக்கிக் காரில் போட்டு விட்டான்..

‘முரடன்..’  அவனது முரட்டுத்தனத்தில் லயித்தாள் ப்ரீதி.. எங்கே போகிறோம் என்று அவள் கேட்டபோது பனி படர்ந்த மலைப்பகுதி என்றான்.. எப்போது திரும்புவோம் என்று கேட்டதற்கு திரும்பும்போது திரும்புவோம் என்று இமை சிமிட்டினான்.. அவனது அடாவடியில் அவள் கரைந்து போனாள்.. அரண்மனையில் அவளைக் காணாமல் தேடுவார்களே.. சித்தார்த்தனுடன் அவள் திரும்பினால் பிரளயமே வெடிக்குமே என்று பயமாக இருந்தாலும் காரைத் திருப்பச் சொல்ல மனமில்லை அவளுக்கு.. வருவது வரட்டும் என்று துணிந்து விட்டாள்.. அவள் மனது சித்தார்த்தனின் மீது லயித்து விட்டதை உணர்ந்து கொண்டபின் எதற்காக பயப்பட வேண்டும்..? ஆமாம், அப்படித்தான் என்று சொல்லி விட வேண்டியதுதானே.. விசாகா காதல் திருமணம் செய்து கொண்டவள்தானே.. பூனாவுக்கு படிக்க வந்தார் மாறன்.. ஒரே வகுப்பில் சேர்ந்து படித்தாள் விசாகா.. காதல் என்று வந்து நின்றாள்.. கங்காதரன் எவ்வளவோ சொல்லிப் பார்த்தாராம்.. அடித்துக் கூடப் பார்த்து விட்டேன்.. உன் அத்தை கேட்கவில்லை.. கல்யாணம் பண்ணிக் கொண்டால் இவரைத்தான் பண்ணிக் கொள்வேன் என்று ஒற்றைக்காலில் நின்று மாறனைக் கல்யாணம் பண்ணிக் கொண்டாள்.. அவள் கதி என்னவாக ஆயிற்று என்று பார்த்தாயா என்று கேட்பார்.. அப்பா சொல்வதும் நியாயம்தானே என்று ப்ரீதிக்குத் தோன்றும்.. ஆதவனுக்குப் பதினைந்து வயதான போது தான் மாறன் தன் குடும்பத்தை கானவயலுக்கு அழைத்துக் கொண்டார்.. அதுவரை விசாகா தன் பிள்ளைகளுடன் அண்ணனின் நிழலில்தானே வாழ வேண்டியிருந்தது..?

‘அந்த நிலை எனக்கு வந்து விடக்கூடாது..’

இன்று எப்படியும் சித்தார்த்தனிடம் அவனைப் பற்றிய விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள் ப்ரீதி.. அத்தையின் வாழ்க்கையைப் போல அவள் வாழ்க்கை ஆகி விடர் கூடாதுதான்.. அப்படி ஆனாலும் பரவாயில்லை.. சித்தார்த்தனின் நினைவிலேயே வாழ்ந்து விடலாம் என்று இப்போது தோன்றுகிறதே.. இதுதான் காதல் செய்த மாயமா..?

“உன் நிலைமைக்கு என்னடி..? நானிருக்கேனில்ல..” காதலுடன் அவளது கன்னத்தில் தன் கன்னத்தைத் தேய்த்தான் சித்தார்த்தன்..

தீப்பிடித்த உணர்வுகளைச் சமன் செய்ய போராடினாள் ப்ரீதி.. அவனுக்கென்ன.. தொட்டு விடுகிறான்.. சுட்டெரிக்கும் உணர்வுகள் குளிர் காய அழைத்துக் தொலைக்கின்றனவே..

வண்பாடுபட்டிப் போராடி அவனிடமிருந்து தன்னைப் பியித்துக் கொள்ளாத குறையாக பிரிந்து நின்றாள் ப்ரீதி..

“ஏன்..?” உறுமினான் அவன்..

“எனக்கு உங்களைப் பத்தித் தெரியனும் சித்தார்த்..” பிடிவாதமாக அறிவுறுத்தினாள் ப்ரீதி..

அவன் தீர்க்கமாக அவளைப் பார்த்தான்.. தீட்சண்யம் மிக்க அவனது பார்வை சுட்டபோதும் பிடிவாதமாக அவனது பார்வையை எதிர் கொண்டு அசையாமல் நின்றாள் அவள்..

“பிடிவாதமா..?” கடினமான குரலில் கேட்டான்..

“சில விசயங்களில் பெண்கள் பிடிவாதமா இருந்துதான் தீரனும்..”

“உன்னை ஏமாற்றி விடுவேன்னு நினைக்கிறயா..? என்னைப் பார்த்தால் உனக்கு ஏமாற்றுக்காரனைப் போல இருக்கிறதா..?”

சித்தார்த்தனின் உக்கிரத்தில் அவளது பிடிவாதம் கொஞ்சம்கூட குறையவில்லை.. அவளையே இமைக்காமல் பார்த்தவன்..

“எதற்கு இந்தப் பிடிவாதம்..?” என்று எரிந்து விழுந்தான்..

“என் அத்தையின் வாழ்க்கையைப் போல என் வாழ்க்கையும் ஆகிவிடக் கூடாது சித்தார்த்..”

தனது நிலையை அவள் சொல்ல ஆரம்பிப்பதற்குள்..

“என்ன சொன்ன..?” என்று கண்சிவந்து விட்டான் சித்தார்த்தன்..

“உன் அத்தையின் வாழ்க்கைக்கு என்ன குறை..? உயிருக்குயிராய் காதலித்த காதல் கணவர்..”

“சித்தார்த்.. நான் அப்பாவிடம் உங்களைப் பற்றிச் சொல்லனும்..?”

சித்தார்த்தன் கடகடவெனச் சிரித்தான்.. ப்ரீதி பயந்து போனாள்.. கலைந்த தலையும், சிவந்த கண்களுமாக அவன் உரத்துச் சிரித்த சிரிப்பு.. பனி மேகம் மூடியிருந்த மலை முகடுகளில் எதிரொலித்து அவளது அச்சத்தை அதிகப் படுத்தியது..

“இப்படி சிரிக்காதீங்க.. பயமா இருக்கு..” என்று அவள் வேண்டிக் கேட்டுக் கொண்ட பின்னால்தான் சிரிப்பதை நிறுத்தினான்..

“ஏன் சிரிக்கறீங்க..?”

“உன் அப்பாவிடம் என்னைப் பற்றிச் சொல்லனும்னு சொன்னியே.. அதில் சிரிப்பு வந்து விட்டது..”

“இதில் சிரிக்க என்ன இருக்கு..?”

“நிறைய இருக்குடி.. உனக்குத்தான் நான் யார்ன்னு தெரியாது.. உன் அப்பாவுக்குத் தெரியும்.. நான் யார்..? என் பூர்விகம் என்ன..? என் அப்பா, அம்மா யார்.. இப்படி எல்லா விவரங்களும் அவருக்குத் தெரியும்..”

“என் அப்பாவுக்கா..?”

“உன் அம்மாவுக்கும் தெரியும்..”

“ஆர் யு ஷ்யூர்..”

“ஏய்ய்.. தெரியும்டி.. சித்தார்த்தனைக் காதலிக்கிறன்னு மட்டும் சொல்லு.. மத்தப் பஞ்சாயத்தை எல்லாம் அவரே ஆரம்பிப்பார்..”

“எப்படி சித்தார்த்..?”

“அது அப்படித்தான்.. நீயும் நானும் ஒன்று சேர போராட வேண்டியிருக்கும் ப்ரீதி.. பட், ஒன் திங்.. எதற்காகவும், யாருக்காகவும் நான் உன்னை விட்டுக் கொடுக்கவே மாட்டேன்.. நீ எனக்கு வேண்டும் ப்ரீதி.. உன்னுடன் நான் வாழனும்..”

அவனது கரங்கள் ஆக்டோபஸாக அவளை வளைத்து இழுத்துக் கபளீகரம் செய்ய முற்பட்டபோது அவள் அதை தடுக்கவில்லை.. அவளுக்கான அவனது தேடலில் கர்வம் கொண்டாள்.. காணக் கிடைக்காத ஆண்மகன் அவளைத் தேடுகிறான்… அவள்தான் அவனுக்கு வேண்டும் என்று வேட்கை கொள்கிறான்.. ப்ரீதிக்கு உலகமே மறந்து போனது..

“வருவதை எதிர் கொள்வோம்.. இந்த நொடியில் எல்லாத்தையும் மறடி.. உன்னையும், என்னையும் பற்றி மட்டும் நினைடி.. உனக்கு நான்.. எனக்கு நீ.. நமக்கு இந்த மலைபிரதேசம்.. குளிர் நிரம்பிய இந்த காட்டுக்குள் கனப்பாக என் அருகில்வா..”

“சித்தார்த்..”

தாள முடியாத தவிப்புடன் முணுமுணுத்தாள் ப்ரீதி.. அத்து மீறிய அந்த அராஜகக்காரனின் அணைப்பு அவளது எழும்புகளை நொறுக்கியது.. குளிருக்கு கனப்பாக அவளை அருகில் அழைத்தவன் அவளுக்குக் கனப்பானான்.. அவளது இதழ் தேடிக் குனிந்தவனுக்கு தன் இதழ்களைத் தந்து அடைக்கலமானாள் அந்த மாது..

மெலிதான வெண்மை நிறத்துடன் கூடிய பனிப்புகை அவர்களைச் சூழ மேகத்தில் மிதக்கும் கந்தர்வக் கன்னிகையைப் போல உணர்ந்தாள் ப்ரீதி.. கந்தவர்னின் அணைப்புக்குள் இருந்தால் கந்தர்வக் கன்னிகையாக ஆகித்தானே தீர வேண்டும்.. பட்டப் பகலில் காரிருளின் கும்மிருட்டு கானகத்தை நிறைத்தது.. அவளுக்கு அச்சமாக இல்லை.. ஆரண்யத்தின் அரசன் அணைத்துக் கொண்டிருக்கும் போது காரிருள் அவளை பயமுறுத்துமா..?

சித்தார்த்தனின் சூடான இதழ்கள் அவளது முகம் முழுவதும் படிந்து உஷ்ணமூட்டின.. கண்மூடிக் கிறங்கிக் கிளர்ந்து அவனுடன் ஒன்றிக் கொண்டாள் ப்ரீதி..

அவளது அடைக்கலத்தில் சித்தார்த்தனின் மனம் நிறைந்திருக்க வேண்டும்.. அவளை விடுவித்து கலைந்திருந்த அவளது கூந்தலை நீவி விட்டுக் கன்னத்தில் தட்டினான்.. காதலுடன் பார்த்தவளை போதையுடன் பார்த்தான்..

“இன்னும் கொஞ்ச நேரம் இங்கே நின்றிருந்தால் போதும்.. நான் உன்னை ஆண்டு விடுவேண்டி.. டேன்ஜரான நேரம் இது.. வா.. போகலாம்..”

ப்ரீதிக்கும் பெருமையாக இருந்தது.. அவளது காதலன்தான் எப்பேற்பட்டவன்.. அவளுடைய தனிமையைப் பயன்படுத்திக் கொண்டான் என்று அவள் குற்றம் சாட்டினாள்.. இன்றோ அவன் என்ன செய்தாலும் கேள்வி கேட்க யாருமில்லாத கானகத்தின் காரிருள்.. பனிப்புகை சூழ்ந்த தனிமை.. அவன் அவளை விட்டு விலகி ‘வா.. போகலாம்..’ என்று அழைக்கிறான்..

“இங்கு வரும் எந்த மனிதரும் இந்த இடத்தை, இந்த வாழ்வை, இந்தப் பனியை, இந்தக் குளிரை, இந்த மழையை, இந்த மலைத்தொடரை, இந்த அருவிகளை, இந்த செடி கொடிகளை விட்டுப் போக நினைப்பதேயில்லை.. அவர்களது வேர் வேற இடத்தில் இருக்கும்.. வேறு வழியில்லாம போவாங்க.. வேரில்லாதவங்க.. இங்கே வேரூன்றி வாழ ஆரம்பித்து விடுவாங்க.. வால்பாறை வட்டாரம் முழுவதும் வந்தேறிகள்தான் அதிகம் இருக்கிறாங்கடி.. நோயாளிகள் குறைவு.. இயற்கை தரும் சுத்தமான நீரூம், காற்றும் நோயை அண்ட விடுவதில்லை தெரியுமா..”

ப்ரீதியின் தோள்மீது கைபோட்டு இறுக்கிக் கதை சொல்லியபடி நடந்தான் அவன்.. அவனுடைய தோள்மீது தலைசாய்த்து அவனுடைய விரல்களுடன் விரல்களைப் பிணைத்து ஊம் கொட்டியபடி கூட நடந்தாள் அவள்.. ஆரண்யத்தில் நடப்பதைப் போலவே இல்லை.. வாழ்க்கைப் பாதையில்.. அவன் தோள் சாய்ந்து, விரல்கள் கோர்த்து நடப்பதைப் போலவே இருந்தது..

“இங்கிருக்கும் மக்களோட வாழ்வாதாரம் தேயிலைத் தோட்டங்கள்தான்.. இயற்கையோடு இயற்கையாக அவ்வளவு இயல்பாய் தங்களைப் பின்னிப் பிணைச்சுக்கிட்டவங்க இவங்க.. அழகான மனசுக்குச் சொந்தக்காரங்கடி.. காதல் கல்யாணங்கள்தான் இங்கே அதிகம்.. பொங்கலைக் கொண்டாடுவாங்க.. ‘ஃபுட்பால்’ விளையாட்டுன்னா இவங்களுக்கு உயிர்.. தீவிர ரசிகர் கூட்டம்.. இங்கே இருக்கு.. ஒவ்வொரு வீட்டிலும் ஒரு ஃபுட்பால் விளையாட்டு வீரன் இருப்பான்.. தமிழ் மணக்கும் ஊர்டி இந்த ஊர்.. கில்லி, பச்சைக்குதிரை, கண்ணாமூச்சி, சாட் பூட் திரின்னு இன்றைய தலைமுறை மறந்து போன விளையாட்டுகளை இவங்க விளையாடிக்கிட்டு இருக்கிறாங்க.. கம்யூட்டர் அழிக்க முடியாத விளையாட்டுக்கள்டி இவங்க விளையாட்டு.. கிரிக்கெட்டைத் தாண்டிய விளையாட்டு..”

சித்தார்த்தன் சொல்லச் சொல்ல.. ப்ரீதிக்கு பூனாவுக்குத் திரும்பிப் போகாமல் அந்த ஊரிலேயே இருந்து விடவேண்டும் போல இருந்தது..

0Shares

Reviews – aaranyam azhakanathu / ஆரண்யம் அழகானது

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • X (Twitter)
  • Email
  • Copy Link
Copy link