Chapter 20
உனைப் பார்க்கும் நொடிகளிலே
உயிர்த்தெழுகிறேன் காதலனே..!
உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு..?
ப்ரீதியின் வேர் தமிழகத்தில் இருந்தது.. கங்காதரனின் பெற்றோரும், பார்கவியின் பெற்றோரும் வேலைக்காக வட மாநிலங்களுக்குச் சென்று அங்கே நிலை கொண்டவர்கள்.. சித்தார்த்தன் அப்படியில்லை.. கானவயலின் வேரில் நிலை கொண்டவனாக இருந்தான்.. அந்த மலை பிரதேசத்தை நேசித்தான்.. கானகம் அவனது தாய் மடியென்றான்.. மேற்கு தொடர்ச்சி மலைகளைத் ‘தோழர்கள்’ என்றான்.. பனி அவனது உடன்பிறப்பு.. மழை அவனது குடியிருப்பு..
“இது வற்றாத ஜீவ நீருற்று ப்ரீதி.. வந்தோரை வாழ வைக்கும் பூமி.. பகை இங்கே இல்லை.. போட்டி, பொறாமை இங்கு இல்லை.. காதல் கல்யாணம்தான் அதிகம்.. ஜாதி, மதங்களைக் கடந்த சொந்தம் இங்கே இருக்குடி.. ஊரும், உறவும், உண்மையும், அகமும், அன்பும், அறமும் செழித்து இருக்கிற இந்த பிரதேசத்தில வாழ்வது கொடுப்பினைடி.. அப்படியொரு வாழ்க்கையை என்னுடன் வாழ வருவாயா..?”
இரு கரம் விரித்து அவன் அழைத்த அழைப்பில் நெக்குருகிப் போனாள் ப்ரீதி.. அவனுடன் வாழாத வாழ்வென்ன வாழ்வு..? எங்கு சென்றாலும் இந்த மலை பிரதேசத்திலும், இதன் ஆரண்யத்திலும் அவள் கால் பதித்த நினைவுகள் தொடராமல் இருக்குமா..? தூக்கத்திலும் வந்து சுகம் தருமே..
தொட்டும் தொடாத சித்தார்த்தனின் ஆலிங்கனம் அவளுக்குப் புதிது.. நினைத்தாலே இனிமை தரும் ஞாபகங்கள் அவளுக்குப் புதிது.. ஆளைக் குழுக்கும் இந்த இன்ப அதிர்வுகள் அவளுக்குப் புதிது.. காலைப் பனியில் விடிந்தும் விடியாததைப் போன்ற மெலிதான சூரிய வெளிச்சத்தில் எதிரில் வருபவரை இனம் காண முடியாத பனிப்புகையில் நடைபயில்வது அவளுக்குப் புதிது.. மனம் முழுவதும் நிரம்பித் தவிக்க வைக்கும் உணர்வலைகள் அவளுக்குப் புதிது.. கனவுகள் அளிக்கும் அவனது குறும்பும் ஆளுமையும் அவளுக்குப் புதிது..
அன்றுதான் பிறந்தவளைப் போல அனைத்தையும் புதிதாக உணர்ந்தாள் ப்ரீதி.. அவனது கரங்களுக்குள் பாய்ந்தவளை இறுக்கமாக அவன் தழுவிக் கொண்ட வேகத்தில் தன் எல்லையற்ற காதலை உணர்த்தினான் சித்தார்த்தன்… அவனது அணைப்பினில் அடங்கியிருந்தவளுக்கு விரல் நீட்டிச் சுற்றுப் புறத்தைச் சுட்டிக்காட்டினான்..
உயரமான மலை விளிம்பில் அவர்கள் நின்றிருந்தார்கள்.. கீழே கட்டம் கட்டி அளவெடுத்தது போல பசுமையாக தேயிலைச் செடிகளின் பாத்திகள்.. வாழும் போதே சொர்க்கத்தை உணர்த்தும் குளிர் நிரம்பிய பனிப் பொழிவு.. எப்போது வேண்டுமானாலும் மழை பொழியும் கார் மேகங்கள் சூழ்ந்த மலை முகடுகள்.. மிதமான வானிலை..
மலைச்சாரலின் பனியில் மழைச்சாரலின் தூறலில் நனையும் குளிர்ச்சி எப்படிப்பட்ட இன்பமான நடுக்கத்தைத் தரும் என்பதை சிலிர்ப்புடன் உணர்ந்து அனுபவித்துக் கொண்டிருந்தாள் ப்ரீதி..
“பார்.. இது காடுகள் சூழ்ந்த ஊர்.. வஞ்சம் சூழ்ந்த உலகுக்கும் இதற்கும் எந்தவிதமான தொடர்புமில்லை.. இங்கு வாழ வரும் மக்கள் இதன் சூழலை நேசிப்பவர்களாக இருப்பார்கள்.. பிடித்தத்துடன் இங்கே வாழ ஆரம்பிப்பார்கள்.. அந்தப் பிடித்தம் உன் மனதில் இருக்கிறதா ப்ரீதி..?”
“பிடித்தம் இல்லாமல்தான் உங்களுடன் சேர்ந்து ஊர் சுற்றிக் கொண்டு இருக்கிறேனா..?”
“இப்போது இருக்கும் இதே மனநிலை எப்போதும் மாறாமல் இருக்குமாடி..?”
“மாறாது சித்தார்த்.. என் காதல்மீது சந்தேகப் படறிங்களா..?”
“வாழ்வின் நிர்பந்தங்கள்மீது சந்தேகப்படுகிறேன்.. நிர்பந்தத்தினால் கிடைத்த வாழ்வு வேண்டாம்ன்னுதான்
என் அம்மா தன் உயிரைத் தானே குறைத்துக்கிட்டு தெய்வமாகிட்டாங்க.. அவங்க மகன் நான்.. என் காதல் கூட உனக்கு நிர்பந்தமாகி விடக் கூடாது..”
‘ஏன் இப்படிச் சொல்கிறான்..?’
ப்ரீதிக்குப் புரியவில்லை.. அவன்தான் புரியாத புதிராக இருந்து தொலைக்கிறானே.. ஆனாலும் புதிர் போன்ற அவனைத்தானே ப்ரீதிக்குப் பிடித்துத் தொலைத்திருக்கிறது.
ப்ரீதியை இறுக்கியபடி மலை முகடுகளை வெறித்துக் கொண்டிருந்தவனின் முகத்தில் தெரிந்த தீவிரம் அவளை பாதித்தது.. அவனது புருவச் சுளிப்புகளை விரல் தடவி நீவி நீக்கி.. அவன் தலை கோதி அரவணைக்க விரும்பினாள்.. நினைத்ததை செய்தாள்.. ஒரு குழந்தை போல அவளது விரல் நீவலுக்கு முகம் கொடுத்து தலைமுடியை அவளிடம் ஒப்புக் கொடுத்தவனின் தேடலில் அவள் உருகிப் போனாள்..
“சித்தார்த்..”
அருகிலிருந்த பாறையில் அமர்ந்து அவள் கைநீட்ட.. மறுபேச்சில்லாமல் விழிகள் மின்ன அவள்மடியில் படுத்துக் கொண்டான் அவன்.. அவனது கழுத்தை வளைத்த அவளது கரத்தைப் பிடித்து முகத்தில் தேய்த்து அவளது விரல்களில் முத்தமிட்டான்.. ப்ரீதி அவனுடைய முடி கோதியபடி கதை கேட்க.. அவன் தன் பேச்சைத் தொடர்ந்தான்..
“காடுகளின் அருகில் இருக்கும் ஊர்களில் ஆள்கள் நிறைந்திருக்கிறார்கள் ப்ரீதி.. ஆள்கள் நிறைந்திருக்கும் ஊர்களின் பக்கத்தில் இருக்கும் காடுகளில் வாத்துக்கள், மயில்கள், புறாக்கள், பெயர் தெரியாத பறவைகள், கரடிகள், புலிகள், சிங்கங்கள், யானைகள், மான்கள், குரங்குகள், சிறுத்தைகள், முள்ளம் பன்றிகள்ன்னு விலங்குகளும் பறவைகளும் நிறைந்திருக்கின்றன ப்ரீதி.. இதுபோல எங்கும் நீ பார்த்திருக்கிறாயோ என்னவோ.. எனக்கு என் ஊர் பெரிது..”
“எனக்கும் உங்க ஊர் பெரிதுதான் சித்தார்த்..”
“ஆதவனுக்கு இந்த ஊரில் பிடிமானமில்லாமல் போகலாம்.. நான் அவனில்லை..”
இதைச் சொல்வது அவன்தானா என்று வியப்புடன் அவனைப் பார்த்த ப்ரீதி உதட்டை வளைத்துச் சிரித்தாள்.. எவராலும் அணுக முடியாத இரும்பு மனிதனைப் போன்ற ஒருவன்.. ஊரையே காவல் காக்கும் காவல் தெய்வம் போன்றவன்.. ஊரை ஏமாற்றிப் பிழைக்கும் ஒருவனின் வாயிலிருந்து வரும் வசனமான ‘நான் அவனில்லை..’ என்ற வார்த்தைகளைச் சொல்கிறான்..
‘இது விசித்திரம்தான்..’ அவளது சிரிப்பு விரிந்தது..
அண்ணாந்து அவளது முகத்தைப் பார்த்தபடி இருந்த சித்தார்த்தனின் முகம் விகசித்தது.. அவளது சிரிப்பு அவனை கொள்ளை கொண்டது.. ஆசையுடன் அவளைப் பார்த்தான்.. பனியில் நனைந்த மலரைப் போன்ற அவளது சிரிப்பு அவனை மயக்கியது.. விரல்களால் அவளது இதழ்களைச் சுண்டினான்..
“ஸ்ஆ.. வலிக்குது சித்தார்த்..” அவள் பொய்யாக சிணுங்கினாள்..
“சித்தார்த்தா..? நீ என்ன எனக்குப் பெயர் வைத்தாயா..?” அவன் அவளது மூக்கை நிமிண்டினான்..
“உங்களுக்கு முன்னால் பிறந்திருந்தால்தானே பெயர் வைத்திருக்க முடியும்..? பெயர் வைக்கிறது எதுக்காம்..? கூப்பிடத்தானே..”
“என் தாத்தாவின் முன்னால் இப்படி நீ கூப்பிட்டிருக்கனும்.. ஆடித் தீர்த்திருப்பார்..”
“சொல்லாதீங்க.. அவரை நினைச்சுப் பார்த்தாலே பயமாய் இருக்கு..”
“உன் ஆளிருக்க பயமேன்..?”
அவளது கன்னம் தட்டினான் அவன்.. ப்ரீதிக்கு உலகமே மறந்து போனது.. அவனும் அவளும் மட்டுமே இருந்த அந்த இடம் மட்டுமே நினைவில் இருந்தது.. உச்சியிலிருந்து பார்த்தால் சரிவில் மரங்களின் அடர்த்தியின் மறைவில் தெரியும் வீடுகளும்.. பசுமையின் மத்தியில் வெந்நிற ரிப்பன்களைப் போல வளைந்து நெளிந்து செல்லும் ஆறுகளும்.. ஆங்காங்கே மலை முகடுகளில் சாரல், நீர்ப்புகையாய் பொங்கி எழும்ப வெள்ளிப்பனியுருகி வீழ்வதைப் போலக் கொட்டிக் கொண்டிருந்த அருவிகளும் அவளை எங்கோ அழைத்துச் சென்றன..
இயற்கை அழகு தரும் போதையிலிருந்து தெளிவது என்பது அத்தனை சுலபமானதல்ல.. மனம் மயக்குவது காதல் மட்டுமல்ல.. கானகமும்தான்.. வாழ்வின் சூட்சுமங்களையும் சூழ்ச்சிகளையும் பற்றிய சிந்தனையின்றி இயற்கையின் அழகில் லயித்து அந்நொடிகளில் சிலிர்ப்பதைத் ததும்பத் ததும்பப் பருகி மகிழ்ந்தாள் அவள்.. இயற்கையின் அற்புத ஆலாபனைகளிலிருந்து வெளிப்படும் ஸ்வரங்களின் லயம் ஆன்மாவை ஆட் கொள்பவை..
மனமெங்கும் வியாபித்திருந்த பரவச உணர்வை என்னவென்று விவரிப்பது.. வார்த்தைகளால் சொல்ல இயலாத வர்ண ஜாலங்கள் அல்லவா அவை.. உணர்வில் திளைப்பவை.. உணர்வில் கலப்பவை..
அரண்மனைக்குத் திரும்ப வேண்டும் என்ற நினைவில்லாமல் இருந்தவர்களைச் சுற்றிக் கவிந்தது இருள்.. போயாக வேண்டும் என்ற ஏக்கத்துடன் அவனும், அவளும் எழுந்து கொண்டார்கள்.. காரின் வெளிச்ச வெள்ளம் மலைப்பாதையில் பாய கார் சீரான வேகத்தில் அரண்மனையை நோக்கி விரைந்தது.. அவனது தோள் சாய்ந்த ப்ரீதி இமைகளை மூடினாள்.. நாள் முழுவதும் காட்டுக்குள் அலைந்த அலைச்சலின் அசதி.. அதீத காதலினால் உண்டான இன்ப அயர்வு.. அப்படியே தூங்கி விட்டாள் போல.. ‘டம்.. டம்..’ என்ற தட்டல் சப்தத்தில் இமைகளைத் திறந்து பார்த்தாள்..
ஆதவன்தான் காரின் ஜன்னல் கதவைத் தட்டிக் கொண்டிருந்தான்.. சித்தார்த்தனின் தோள்மீது சாய்ந்திருந்தவள் ஆதவன் அதை பார்த்து விட்டானே என்ற பதட்டம் சிறிதுமின்றி வெகு நிதானமாக விலகி அமர்ந்ததில் ஆதவனின் சினம் அதிகரித்தது..
கதவைத் தட்டாதே என்ற அர்த்தத்தில் கண்டிப்பான முக பாவத்துடன் விரலை ஆட்டி எச்சரித்தான் சித்தார்த்தன்.. ஆதவனின் முகம் அவமானத்தில் சிறுத்தது.. அவன் கண்ணாடி கதவைத் தட்டுவதை நிறுத்தி விட்டு தள்ளி நின்றான்.. விசாகாவும் ஆர்த்தியும் அரண்மனையின் நீண்ட படிக்கட்டுகளில் நின்றிருந்தார்கள்.. கார் பக்கத்தில் வரவில்லை.. மாறன் அங்கு இல்லை..
‘வழக்கம் போல ஹால் சோபாவில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருப்பாராயிருக்கும்..’ ஆர்த்தி நினைத்துக் கொண்டாள்..
எப்படித்தான் ஒரு மனிதரால் தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளின் பாதிப்புகள் இல்லாமல் துறவியைப் போல பற்றற்ற நிலையுடன் இருக்க முடிகிறதோ..
‘தொண்டைமான் இல்லாமல் இருந்தால் நல்லாயிருக்கும்..’
அவள் நினைத்து முடிப்பதற்குள் ‘வந்தேன் பார்..’ என்று அவர் அரண்மனையிலிருந்து வெளிப்பட்டு மேல்படியில் நிற்க… அவளையுமறியாமல் ப்ரீதி சித்தார்த்தனின் கையைப் பற்றினாள்.. அதைப் பார்த்து விட்ட ஆதவன் கொதித்துப் போனான்..
“ம்ப்ச்.. நானிருக்கேனில்ல.. டோன்ட் அஃப்ரைடு..” சித்தார்த்தனின் கை அவளது கையை அழுத்தியது..
தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவள் காரை விட்டு இறங்கினாள்.. அதற்காகவே காத்திருந்த ஆதவன்..
“எங்கே போன..?” என்று சீறினான்..
“அதை போர்டிகோவில் நின்றுதான் கேட்பாயா..? வாசலில் செக்யூரிட்டி இருக்கிறான்.. போர்டிகோவில் டிரைவர் நின்றிருக்கிறான்.. வேலையாள்களின் முன்னால் வீட்டு விவரங்களைப் பேசக் கூடாதுங்கிற அறிவு உனக்கு வேண்டாமா..? எத்தனை தடவை சொன்னாலும் உன் புத்தியில் இது ஏறவே ஏறாதா..?” பதிலுக்கு சீறிய சித்தார்த்தன் ப்ரீதியின் பக்கம் திரும்பி..
“நீ உள்ளே போ..” என்று உத்தரவிட்டான்..
ஆதவனுக்குப் பதில் சொல்லாமல் சித்தார்த்தனின் உத்தரவுக்குக் கீழ்படிந்த ப்ரீதி வேகமாக படிகளில் ஏறினாள்.. விசாகாவின் முகத்தில் கடுமையென்றால் கடுமை.. அப்படியொரு கடுமை விரவியிருந்தது.. அன்பும், அமைதியுமான விசாகாவின் முகத்தைத்தான் ப்ரீதி பார்த்திருக்கிறாள்.. ஆத்திரமே உருவான விசாகாவை அவள் அன்றுதான் பார்க்கிறாள்..
என்னதான் இருந்தாலும் ப்ரீதி விசாகாவின் வீட்டுக்கு விருந்தாளியாக வந்திருக்கிறாள்.. உடல்நிலை சரியில்லாத விசாகாவிடம் சொல்லாமல்.. அவளுக்குத் தெரியாமல் ப்ரீதி சித்தார்த்தனுடன் நாள் முழுவதும் ஊர் சுற்றிப் பார்த்து விட்டு இருட்டியபின்னர் வீடு திரும்புவது தவறுதானே..
“அத்தை..” தயக்கத்துடன் அழைத்தாள்..
விசாகா விர்ரென்று உள்ளே போய் விட்டாள்.. ப்ரீதிக்கு முகத்தில் அடித்ததைப் போல இருந்தாலும் ஒருவகையில் விசாகா சென்று விட்டது விடுதலையுணர்வைத் தந்தது..
‘அடுத்தது ஆர்த்தி.. இவளிடம் என்னத்தைச் சொல்ல..?’
அவள் கைகளைப் பிசைய ஆரம்பித்தாள்..
“ஆர்த்தி..”
“நீ ரெஸ்பான்ஸிபிள் பெர்சன்னு நினைத்தேனே ப்ரீதி.. அதைப் பொய்யாக்கிட்டியே..”
“இல்லைடி..”
“வேண்டாம் ப்ரீதி.. உன் விளக்கம் எதுவும் எனக்கு வேண்டாம்.. எப்ப எங்களிடம் சொல்லாமல் உன் விருப்பப்படி நீ நடக்க ஆரம்பிச்சிட்டியோ.. இனி உன்னிடம் பேசுவது வேஸ்ட்..”
ஆர்த்தியும் வேகமாகப் போய்விட ப்ரீதிக்கு அழுகையழுகையாக வந்தது.. இதையெல்லாம் அவள் எதிர்பார்த்திருந்தாலும் நேரில் அனுபவிக்கும் போது மனம் வலிக்கிறதே..
தொய்ந்து போனவளாக படியேறியவள் தொண்டை மானின் அக்கினி பார்வையில் கிடுகிடுத்துப் போனாள்.. அவர் எதையோ பேச வாய் திறப்பதற்குள், சித்தார்த்தன்..
“தாத்தா..” என்று அதட்டி விட்டான்..
“சித்தார்த்.. நீ யார் என்பதை மறந்து விட்டாயா..?”
“நான் யார்ன்னு இவளுக்கும் தெரியாது தாத்தா..”
“நீ.. உயரத்தில் இருப்பவன் சித்தார்த்தன்..”
“இவள் என் காதலி.. என் உயரத்துக்கு இவளைத் தூக்கி நிறுத்தி விட்டால் எல்லாம் சரியாகி விடும்.. நாம் இதைப் பற்றி மாடிக்குப் போய் பேசலாமா..?”
சித்தார்த்தன் கை பிடியாய் தொண்டைமானை இழுத்துக் கொண்டு போய் விட்டான். ஊசிக்குளிர் உடலைத் தாக்க படியிலேயே நின்று விட்ட ப்ரீதிக்கு கண்ணைக் கட்டியது.. இனி அவள் எதையெல்லாம் எதிர்கொள்ள வேண்டியிருக்குமோ..
Reviews – aaranyam azhakanathu / ஆரண்யம் அழகானது
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.