Chapter 21
கானகத்தின் காவலனே..! உன்
காலடியில் இந்தப் புள்ளிமான்..!
விலக்கம் ஏனடா..? நீ விளக்கம் சொல்லடா..
“அப்பா..!”
இமைகொட்டி விழித்தாள் ப்ரீதி.. அறைவாசலில் கங்காதரன் நின்று கொண்டிருப்பது உண்மையா..? பிரமையா..? என்ற சந்தேகத்தில் கிள்ளிப் பார்த்துக் கொண்டாள்.. வலித்தது..
‘இது உண்மைதான்..’
தாயைக் கண்ட கன்றாக அவளது கண்களில் இருந்து கண்ணீர் உடைப்பெடுத்தது.. உதடுகள் துடிக்க நின்றிருந்தவளைப் பார்த்து கங்காதரனின் விரிந்த கைகள் ‘வா, மகளே..’ என்று அழைத்தன.. தேம்பலுடன் தந்தையின் தோள் சாய்ந்தாள்.. மகளை சமாதானப் படுத்தியபடி அறைக்குள் வந்தார் கங்காதரன்.. இன்னமும் அவளது தந்தை கானவயல் அரண்மனைக்கு வந்திருக்கிறார் என்பதை ப்ரீதியால் நம்பவே முடியவில்லை..
விசாகா மாறனைப் பின்தொடர்ந்து கிளம்பியபோது தடுத்தார்.. அவரை மீறிப் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு கணவரைப் பின் தொடர்ந்து வந்து விட்டாள் விசாகா.. கங்காதரன் தங்கையைப் பார்க்க என்று அவளிருந்த இடத்தில் கால் பதிக்கவேயில்லை..
ஏன் என்று பலமுறை ப்ரீதி வினவியிருக்கிறாள்..
“அத்தையோட வாழ்க்கைப்பா.. அவங்க மாமாவோடு தான் இருக்கனும்னு டிசைட் பண்ணினா நீங்க அப்ஜெக்ட் பண்ணக் கூடாதுப்பா.. இந்த கோபத்தை மனதில் வைத்துக்கிட்டு அவங்க வீட்டுக்கு நீங்க போய் வராம இருக்கலாமா..?” ப்ரீதி வாதாடுவாள்..
அப்போது கங்காதரன் சிரிப்பாரே ஓர் சிரிப்பு.. அந்தச் சிரிப்புக்கான அர்த்தம் என்னவென்று இதுநாள்வரை ப்ரீதிக்குத் தெரியாது..
“அவள் வீடா..? அது விசாகாவின் வீடா..?”
அவரது சிரிப்புக்குப் பொருள் தெரியாததைப் போல கோபமான அந்தக் கேள்விக்கும் அவளுக்குப் பொருள் விளங்கவில்லை.. இதுபற்றி தாய்க்கு ஏதேனும் தகவல் தெரியக் கூடுமோ என்று அவளை அணுகினால்..
“படி.. இல்லேன்னா வேற வேலை ஏதாச்சும் இருந்தா அதைப் பாரு.. தேவையில்லாம தொண தொணக்காதே..” என்று மகளை அதட்டி விடுவாள் பார்கவி..
பிரசாத் இதைப்பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டான்.. அவனுக்கு தேவை ஆர்த்தி மட்டும்தான்.. அவள் அவனுடன் மணிக்கணக்கில் செல்போனில் பேசுகிறாள்.. வருடா வருடம் பூனாவுக்கு வந்து போகிறாள்.. அது போதாதா..?
“டேய் அண்ணா.. நீ ஆர்த்தியை மேரேஜ் பண்ணிக்கப் போகிறதான..?”
“அதிலென்ன சந்தேகம் உனக்கு..?”
“அப்ப அப்பா எதுக்காக அவ வீட்டுக்கு போகிறதில்லைன்னு கேட்கலாமில்ல..?”
“அது எதுக்கு நமக்கு..?”
“இப்படியாடா பேசுவ..?”
“ப்ரீதி.. ஆர்த்தியே நம் வீட்டுக்கு வாழ வந்திருவா.. அத்தை வீட்டுக் கதையைப் பேசி நமக்கு ஆகப் போகிறதென்ன..?”
விடை தெரியாத கேள்வியாக.. விசாகாவின் வீட்டிற்கு கங்காதரன் செல்லாதது ப்ரீதியின் மனதில் சுழன்று கொண்டிருக்க.. கங்காதரன் மகளுக்காக விசாகாவின் வீட்டுப் படியை மிதித்திருக்கிறார்..
‘எனக்காகவா..’
ப்ரீதி அப்பா செல்லம்.. அவள் எதைக் கேட்டாலும் மறுக்காமல் வாங்கிக் கொடுத்து விடும் அன்புத் தந்தை அவர்.. இப்போது சித்தார்த்தனைக் கேட்கப் போகிறாள்.. மறுக்காமல் அவள் கேட்கும் சம்மதத்தைத் தருவாரா..?
முதல்நாள் முழுவதும் சித்தார்த்தனுடன் ஊரைச் சுற்றி விட்டு வீடு திரும்பியவளை விசாகாவும் அவளது பிள்ளைகளும் புறக்கணித்தார்கள்.. பேசவில்லை.. மாறன் மட்டும் பேப்பரைத் தூக்கிப் போட்டு விட்டு..
“சாப்பிட வாம்மா..” என்று அழைத்தார்..
“பசிக்கலை மாமா..” என்று சொல்லி விட்டு மாடியேறி அவளுக்குக் கொடுக்கப்பட்டிருந்த அறைக்குப் போய் விட்டாள் ப்ரீதி..
குளித்து நைட்டிக்கு மாறி படுக்கையில் உட்கார்ந்த போது தனிமைப் படுத்தப்பட்டு விட்ட சோகம் அவளைக் கலங்க வைத்தது.. விசாகா அழைத்துத்தானே அங்கே வந்தாள்.. இப்போது அவளே பேச மறுக்கிறாள் எனும்போது ப்ரீதி என்ன அந்த அரண்மனையில் வேண்டாத விருந்தாளியா..?
பொங்கி வந்த அழுகையில் அவள் கரைந்து கொண்டிருந்த போது அறையின் காலிங்பெல் அலறியது.. கதவைத் திறந்தாள்.. ‘ஹி..ஹி..’ என்று சிரிக்காமல் தீவிரமாக முகத்தை வைத்துக் கொண்டு வனிதாமணி நின்றிருந்தாள்.. கையில் மூடப்பட்ட பெரியதட்டு.. கண்களில் கருணைப் பார்வை..
“என்ன வனிதா..?”
“ராத்திரி டிபன்ம்மா.. பெரியய்யா கொடுத்து விட்டாங்க..”
மாறன் அனுப்பி வைத்திருக்கிறார்.. விசாகாவோ, ஆர்த்தியோ அதை அனுப்பி வைக்கவில்லை என்பதில் ப்ரீதி மனம் உடைந்தாள்..
“பசியில்லை வனிதா.. எனக்கு டிபன் வேண்டாம்..” தீனமாகச் சொன்னாள் ப்ரீதி..
“எப்படிப் பசியில்லாமல் போகும்..? வழியை விடுங்க சொல்றேன்..” வனிதா ப்ரீதியை விலக்கி விட்டு உள்ளே நுழைந்தாள்..
“வேண்டாம்ன்னு சொல்கிறேனில்ல..” அதட்ட முயன்று தோற்றாள் ப்ரீதி..
“யாருக்காக வயிறைக் காயப் போடறிங்கம்மா..? காட்டைச் சுற்றிப் பார்க்கப் போயிருக்கீக.. செம பசியாயிருக்கும்.. பனிக் காத்தில நாலு எட்டு நடந்துட்டு வந்தாலே வயிறு கபகபன்னு எரியும்.. நீங்க நாளு பூரா நடந்துட்டு வந்து சாப்பிடாம படுப்பீகளா..? தூக்கம் வராதும்மா..” வனிதாமணி வாதிட்டாள்..
“இங்க என்ன நடக்குது..?” அறைவாசலில் குரல் கேட்டது..
‘சித்தார்த்..’ அவசரமாக தலை நிமிர்ந்தாள் ப்ரீதி..
அவனைக் கண்டவுடன் அவளது கண்கள் கலங்குவதைப் பார்த்தபடி உள்ளே வந்தான் சித்தார்த்தன்.. அதுவரை அவள் இருந்த அறைக்கு அவன் வந்ததில்லை.. அவனைக் கண்டதும் எழுந்து நின்றாள் வனிதாமணி.. கைகட்டி வாய் பொத்தாத குறைதான்… ப்ரீதிக்கு காட்டுவாசிகளின் கூட்டத் தலைவன் அவனைப் பார்த்து..
‘ராசா..’ என்று அழைத்தது நினைவிற்கு வந்தது..
‘இவன் யார்..? விசாகாவின் குடும்பத்துக்கும் இவனுக்கும் என்ன சம்பந்தம்..?’
மனதில் எழுந்த கேள்விக்கு விடை கிடைக்கவில்லை..
“அம்மா சாப்பிட மாட்டேங்கிறாக அய்யா..” வனிதா முறையிட்டாள்..
சித்தார்த்தனின் தீர்க்கமான பார்வை அவளை துளைத்தது.. குற்றவாளியைப் பார்ப்பதைப் போலப் பார்க்கிறானே என்று துவண்டு போனாள் ப்ரீதி.. அவளென்ன மத்தளமா..? இரண்டு பக்கமும் இடி கிடைக்கிறதே..
“ஏன்..? அத்தை மகனுக்குத் துரோகம் பண்ணிட்டாங்கன்னு வருத்தப்பட்டு பட்டினி கிடக்கிறாங்களா..?”
அவனது கேள்வியில் துடித்துப் போனவள் வனிதாமணியின் கையிலிருந்த தட்டைப் பிடுங்கி நின்ற வாக்கில் அசுர வேகத்தில் சாப்பிட்டு முடித்தாள்.. அவனது கண்களில் திருப்தி வந்ததை அவள் கவனிக்கவில்லை.. காலி தட்டை வனிதா மணியின் கையில் கொடுத்துவிட்டு..
“மனதில் வருத்தம் வருகிறதுக்கு ஆயிரம் காரணம் இருக்கலாம் வனிதாமணி.. என்னன்னு தெரியாமக்கூட மனது வருத்தப்படலாம்.. எதையும் புரிஞ்சுக்காம வாய் இருக்குன்னு அபாண்டமா எதையும் பேசக்கூடாது..” என்று உதடுகள் துடிக்கச் சொன்னாள்..
சித்தார்த்தன் அசையாமல் நின்று அவளை ஒர் பார்வை பார்த்துவிட்டு..
“தூங்கு.. காலையில் பேசிக்கலாம்..” என்று சொல்லி விட்டுப் போய்விட்டான்..
‘அவ்வளவுதானா..?’ சோர்ந்து போய் கண்களை மூடிக் கொண்டாள் ப்ரீதி..
அவன் கைகளில் அடங்கி அவன் தோளில் தலை சாய்த்துக் கொண்டால் நிம்மதியாக இருக்கும் என்று மனம் அரற்றியது.. ஆள்களின் மத்தியில் இருந்தும் அவள் உணரும் தனிமையினை அவன் உணராமல் போனானே என்று மனம் மருகினாள் ப்ரீதி..
“கதவைத் தாழ் போட்டுக்கங்க அம்மா..”
வனிதாமணி போன பின்பு கதவைத் தாழிட்டு விட்டு வந்து படுக்கையில் விழுந்தவளுக்கு அழுகை குமுறிக் கொண்டு வந்தது.. வேண்டாத விருந்தாளியாக அவள் தள்ளி வைக்கப்பட்டு விட்ட துயரம் அவள் மனதைப் பிழிந்தது.. அவள் விருப்பத்திற்கு இதுதான் தண்டனையா..? புறக்கணிப்பை விட கொடிய தண்டனை ஏதுமில்லை..
உடனடியாக பூனாவுக்குக் கிளம்பி விட வேண்டும் என்று அவளது உள்ளம் துடித்தது.. அவள் எங்கு சென்றாலும் சித்தார்த்தன் அவளைத் தேடி வருவான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அவளிடம் இருந்தது.. தவிரவும், அவள் பூனாவுக்குப் போய்த்தானே ஆக வேண்டும்.. பெற்றவர்களின் சம்மதமில்லாமல் அவள் சித்தார்த்தனை மணந்து கொள்ள முடியுமா..? அவளது காதலைப் பற்றியும், அவள் சித்தார்த்தனைத்தான் திருமணம் செய்து கொள்வாள் என்று அவள் எடுத்திருக்கும் முடிவைப் பற்றியும் பெற்றவர்களிடம் சொல்லித்தான் தீரவேண்டும்..
அவள் பூனாவுக்குக் கிளம்பிவிட முடியாமல் அவளது குடும்பம் கொல்கத்தாவிற்குச் சென்றிருக்கிறதே.. அந்த வார இறுதியில்தானே அவர்கள் பூனாவுக்குத் திரும்புவார்கள்..
விடிய விடிய தூக்கமில்லாமல் அவள் அழுது கரைந்தாள்.. விடியலில் காலிங் பெல் அலறியது.. கதவைத் திறந்தால் கங்காதரன் நின்று கொண்டிருக்கிறார்..
“அப்பா..”
அடக்கி வைத்திருந்த அழுகையை வெளிப்படுத்தித் தேம்பினாள் ப்ரீதி.. மகளை சோபாவில் உட்கார வைத்துப் பக்கத்தில் உட்கார்ந்தவர் மகளின் தலையைத் தடவிக் கொடுத்தார்.. அழுது முடிந்து தந்தையை ஏறிட்டுப் பார்த்த ப்ரீதி..
“நீங்க கல்கத்தாவில் இருப்பீங்கன்னு நினைத்தேன்ப்பா..” என்றாள்..
“அங்கிருந்துதான் பிளைட் பிடித்து வந்திருக்கிறேன் ப்ரீதி..” அமைதியாகச் சொன்னார் கங்காதரன்..
“மாமா வீட்டு பங்சன்..?”
“அம்மாவும் பிரசாத்தும் அங்கேதானே இருக்கிறாங்க.. அவங்க அட்டெண்ட் பண்ணிக்குவாங்க..”
“ஆனால் அப்பா.. அது இம்பார்ட்டண்ட் பங்சனாச்சே..”
“அதைவிட.. ஏன்.. எதையும்விட.. நீ எனக்கு இம்பார்ட்டண்ட் ப்ரீதி.. உனக்கு அடுத்துத்தான் மத்ததெல்லாம்..”
“அப்பா..”
ப்ரீதி நெகிழ்ந்து போனாள்.. யாருமற்று தனித்துப் போயிருந்த துயரம் அவள் மனதை விட்டு அகன்றிருந்தது.. அவளுடைய அப்பா வந்து விட்டார்.. அவருக்கு மகள்தான் முக்கியம்.. அவளது விருப்பம்தான் முக்கியம்.. விசாகாவின் குடும்பம் அவளை விரல் நீட்டிக் குற்றம் சொல்வதை அவர் அனுமதிக்க மாட்டார்..
“உங்ககிட்ட நான் பேசனும்ப்பா.. நிறையப் பேசனும்.. பட்.. நீங்க இப்பத்தான் வந்திருக்கீங்க.. ரெஸ்ட் எடுத்துட்டு, குளித்து பிரஷ்அப் ஆகி, பிரேக்பாஸ்ட் முடித்தவுடன் பேசறேனே..”
“தேவையில்லை ப்ரீதி.. நான் இங்கே விருந்தாட வரவில்லை.. வால்பாறையில் ரூம் போட்டிருக்கிறேன்.. அங்கே குளித்து பிரேக்பாஸ்ட் முடித்து விட்டுத்தான் இங்கே வந்தேன்.. நீ சொல்ல வேண்டியதைச் சொல்..”
“அப்பா..”
அவளுக்காகத் தான் கங்காதரன் வந்திருக்கிறார்.. விசாகாவின் வீட்டில் கை நனைக்கக்கூட அவர் விரும்பவில்லை என்பதில் இனம் தெரியாத வகையில் அவளது மனம் நிறைந்தது..
“நீங்க எப்படிப்பா இங்க..?”
“விசாகா போன் பண்ணினாள்..”
“எப்ப..?”
“நேற்றுக் காலையில்..”
“ஓ..”
ப்ரீதி சித்தார்த்தனுடன் காரில் ஏறி கிளம்பியவுடனே இந்தப் பக்கம் கங்காதரனுக்குப் போன் போய் விட்டது போல..
“அப்பா.. அது வந்து.. நான்.. இங்கே..”
கங்காதரன் குறுக்கிடவில்லை.. தடுமாறும் மகளைப் பேச விட்டு அமைதியாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்..
“சித்தார்த்தன்னு உங்களிடம் சொன்னேனில்ல..” ப்ரீதி திக்கித் திணறினாள்..
“அவர் யார்ன்னு உனக்குத் தெரியுமா..?” நிதானமாக கேட்டார் கங்காதரன்..
ஆதவனை அவன் இவன் என்று பேசுபவர், சித்தார்த்தனை அவர் என்று குறிப்பிட்டதை ப்ரீதி கவனித்தாள்.. ஏன்..? அவளுக்குப் புரியவில்லை..
“தெரியாதுப்பா, அத்தை, ஆர்த்தின்னு யாரிடம் கேட்டாலும் சொல்ல மாட்டேங்கிறாங்க.. சித்தார்த்தன்.. இங்கே… அத்தையின் அரண்மனையில்தான் தங்கியிருக்கிறார்..”
“என்ன சொன்ன..?”
கங்காதரன் உரத்த குரலில் கோபத்துடன் சிரித்தார்.. ப்ரீதி பயந்து போனாள்.. கங்காதரனுக்கு கோபம் வந்து விட்டதே.. ஏற்கனெவே இன்று சொன்னதைப் போல ப்ரீதி சொன்னபோது அன்றும் இப்படித்தான் சிரித்தார்..
“அப்பா..?” நடுக்கத்துடன் அழைத்தாள்..
“சித்தார்த்தன் ஒன்றும் உன் அத்தையின் அரண்மனையில் தங்கியிருக்கலை.. உன் அத்தைதான் தன் பிள்ளைகளோடு சித்தார்த்தனின் அரண்மனையில் தங்கியிருக்கிறா.. இதை முதலில் தெரிந்து கொள்.. இது சித்தார்த்தனின் அரண்மனை..!!”
“என்னது..?..!..”
ப்ரீதி விழி விரித்தாள்.. இது என்ன புதுக்கதை..! அவள் அறியாத கதையில் அவளறியாமலே ஓர் அங்கமாகி விட்டாள் என்பதை கங்காதரன் சொல்லிக் கொண்டிருந்தார்..
“கானவயல் ராஜ வம்சத்தில் பிறந்தவர் ராஜா தொண்டைமான்..”
“யார்..? அந்தப் பெரியவரா..?”
“அவர் சித்தார்த்தனின் அம்மாவைப் பெற்ற தாத்தா..”
“இதைச் சொல்லியிருக்கிறார்..”
“தொண்டைமானுக்கு ஒரே மகள்.. சாருலதா.. ராணி சாருலதா தேவி..! இதைச் சொல்லியிருக்கிறாரா..?”
“இல்லையேப்பா..”
“எஸ்டேட்.. கோயம்பத்தூரில் மில்.. பொள்ளாச்சியில் தென்னந்தோப்புகள்.. பால் பண்னைகள்.. ஹைதராபாத்தில் ஐ.டி கம்பெனி.. மும்பையில் ஷாப்பிங் மால்.. இன்னும் உலகம் முழுவதும் பல பிஸினெஸ்கள்ன்னு கங்கு கரையில்லாத.. சொத்துக்களுக்குச் சொந்தக்காரர் சித்தார்த்தன்.. ராணி சாருலதா தேவியின் ஒரே மகன்.. இதையாவது அவர் சொல்லியிருக்கிறாரா..?”
“இல்லையேப்பா… அவர் இவ்வளவு பெரிய கோடிஸ்வரர்.. ராஜ வம்சத்தில் பிறந்தவர்ன்னு என்னிடம் சொன்னதே இல்லைப்பா.. எனக்குத் தெரியவே தெரியாதே..”
ப்ரீதியின் அகன்ற விழிகளில் அச்சம் நிரம்பியது.. அவளுக்கு சித்தார்த்தன் எட்டாக்கனியா..? உச்சாணிக் கொம்பா..?
“ஆனால் அப்பா.. அத்தையின் ஃபேமிலி ஏன் இங்கே இருக்கிறது..?”
“ஏன்னா.. உன் அத்தையை கல்யாணம் பண்ணிக்கிட்ட மாறன் இங்கே இருக்கிறாரே.. அதனால் தான்..?”
“மாமாவும்தான் ஏன் இங்கே இருக்கனும்..?”
“ஏன்னா.. அவர் ராணி சாருலதா தேவியையும் கல்யாணம் பண்ணிக்கிட்டாரே.. அதனால்தான்..”
“அப்பா..???!!!…”
Reviews – aaranyam azhakanathu / ஆரண்யம் அழகானது
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.