Chapter 22

0Shares

நின்னைச் சரணடைந்தவளுக்கு

நிழல் தராமல், நீ புறக்கணிப்பதில்

நியாயம் உள்ளதோ..? சொல்..

கானவயல்..! மேற்கு தொடர்ச்சி மலைச் சாரலில் உள்ள அழகான ஊர்..! காடும்.. காடு சார்ந்த இடமும்தான் கானவயல்..! ஐந்திணைகளை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று தமிழ் இலக்கியம் வரையறுத்திருக்கிறது. குறிஞ்சித் திணை மலையும், மலை சார்ந்த இடமும்.. முல்லைத் திணை காடும், காடு சார்ந்த இடமும்.. மருதமானது வயலும் வாழ்வும்.. நெய்தல் கடலோடும் காவியம்.. பாலை மணல்வெளி.. 

இதில் குறிஞ்சித்திணையும் முல்லைத் திணையும் சேர்ந்து இருந்தால் எப்படியிருக்கும் என்பதை நம் கண் முன் காட்டுவதுதான் கானவயல்..! மேற்கு தொடர்ச்சி மலைகளின் மீது அடர்ந்திருக்கும் ‘அட்டகட்டி’ காடு.. அதைத் தொடர்ந்து கானவயல்..!

கானவயலின் ராஜவம்சத்தில் வந்த கோடிஸ்வரர் தொண்டைமான்..! மலைப்பிரதேசத்தின் பளிங்கு மாளிகை, அவரது பரம்பரை அரண்மனை..! தேயிலை, காபித் தோட்டங்கள், காய்கறிகள், ஏலக்காய், மிளகு என்று பணம் கொழிக்கும் விளைபொருள்களை கொண்ட எஸ்டேட்.. கோயம்பத்தூரில் மில்.. பொள்ளாச்சியில் தென்னந்தோப்புகள், பால்பண்ணைகள்.. என்று அள்ள அள்ளக் குறையாத செல்வச் செழிப்புடன் வாழ்பவர்.. அவருக்கு ஒரே மகள்.. சாருலதா..! ராணி சாருலதா தேவி..!

சாருலதா வெளிநாட்டில் படித்தவள்.. அழகி.. தந்தையின் சொத்துக்களை நிர்வகிப்பதில் கெட்டிக்காரி.. 

தொண்டைமானின் மனைவி ரூபலதா.. ஜெய்ப்பூர் ராஜவம்சத்தில் பிறந்தவள்.. சாருலதா தாயின் சாயலில் இருந்தாள்.. குணத்திலும் அப்படியே இருந்திருக்கலாம்.. ரூபலதா சாமான்யர்களிடம் பேச மாட்டாள்.. ராஜவம்சம் என்ற கர்வம் அவளது நடையுடை பாவனைகளில் பிரதிபலிக்கும்.. கோடிஸ்வரி என்ற மமதை அவளது ஒவ்வொரு வார்த்தையிலும் தெறிக்கும்.. தாயைப் போன்ற கர்வமும், மமதையும் இல்லாமல் தொழிலாளர்களின் நலன் பேணி இன்முகம் காட்டிப் பழகும் சாருலதாவின் மனதை ஒரு சாதாரண தொழிலாளியின் மகன் கவர்ந்து விட்டான்..

மாறனின் பெற்றோர் சாருலதாவின் எஸ்டேட்டில் தேயிலை பறிக்கும் வேலையை செய்து வந்தார்கள்.. எஸ்டேட் தொழிலாளர்களுக்காக கட்டித் தரப்பட்டிருந்த லைன் வீடுகளில் ஒன்றில்தான் குடியிருந்தார்கள்… மாறன் சிறுவயதிலிருந்தே படிப்பில் கெட்டிக்காரன்… தொண்டைமானின் உதவியோடு கோயம்பத்தூரில் பள்ளியில் சேர்ந்து ஹாஸ்டலில் தங்கிப் படித்து வந்தான்.. கல்லூரிப் படிப்பிற்கு அவனுக்கு அரசின் உதவித் தொகை கிடைத்து விட்டது.. என்ஜினியரிங் படிப்பை முடித்தவன் பூனாவில் பகுதி நேர வேலையொன்றை தேடிக் கொண்டு எம்.பி.ஏ படிக்க ஆரம்பித்தான்..

இது எதுவும் சாருலதாவிற்குத் தெரியாது.. அவள் ஊட்டி கான்வெண்டின் ஹாஸ்டலில் தங்கிப் படித்தவள்.. வெளிநாட்டில் கல்லூரிப் படிப்பை முடித்து கானவயலுக்குத் திரும்பியவள் தந்தையின் தொழில்களின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டாள்.. அப்படி அவள் எஸ்டேட்டிற்கு சென்ற போதுதான் மாறனை சந்தித்தாள்..

ஆறடி உயரம்.. மாநிறம்.. ஆளை ஈர்க்கும் கம்பீரம்.. என்று மாறன் முதல் பார்வையிலேயே சாருலதாவை வசீகரித்து விட்டான்.. தேயிலைத் தொழிலாளிகளின் மத்தியில் வித்தியாசமாகத் தெரிந்தவனுடன் பேசிப் பழகும் ஆர்வம் சாருலதாவுக்கு உண்டானது.. அவனும் ‘ராணியம்மா’ அவர்களுக்கு படியளக்கும் ‘முதலாளி’ என்ற மரியாதையுடன்  சாருலதாவிடம் பேசினான்.. அவனது நிதானம்.. பொறுமை.. அந்த மலைபிரதேசத்துடன் பொருந்திப் போகாத அறிவார்ந்த பேச்சு என்று அனைத்து குணாதிசியங்களும் சாருலதாவைக் கவர்ந்துவிட.. அவள் மாறன்மீது காதல் கொண்டாள்..

சாருலதாவைப் பெற்றவர்கள் அதிர்ந்து போனார்கள்.. ராணி ரூபலதா தேவியினால் அதை ஜீரணிக்கவே முடியவில்லை.. மகளிடம் கெஞ்சினாள்..

“நான் ஜெய்ப்பூர் ராஜ வம்சத்தில் பிறந்தவள் சாரு.. உனக்காக என் அண்ணன் மகன் காத்திருக்கிறான்.. அவனது நிறத்துக்கும், அழகுக்கும் முன்னால் இந்தத் தொழிலாளியின் மகனால் நிற்கக்கூட முடியுமா..? அவன் கோடிஸ்வரன்.. இவன் பரம ஏழை.. பணம், பணத்தோடுதான் சேர வேண்டும்  சாரு.. அதுதான் மரியாதையான வாழ்வைக் கொடுக்கும்.. ராஜ வம்சத்தில் பிறந்துவிட்டு உன் உயரத்திலிருந்து கீழே இறங்க நினைக்காதே மகளே..! அது உனக்கு நிம்மதியைத் தராது..”

சாருலதா தாயின் வார்த்தைகளைக் காது கொடுத்துக் கேட்கவில்லை.. ரூபலதா கணவரிடம் முறையிட்டாள்.. தொண்டைமான் மகளின் மீது மட்டற்ற பாசம் கொண்டவர்.. அதே சமயம் பாரம்பர்யம் காப்பாற்றப்பட வேண்டும் என்று நினைப்பவர்..

ஆனமட்டும் மகளிடம் போராடிப் பார்த்தார்.. தந்தையின் பேச்சுக்கு மௌனமாக இருந்த சாருலதா அன்று இரவு தூக்க மாத்திரைகளை விழுங்கி விட்டாள்.. இரண்டு நாள்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இரவு பகலாக போராடி சிகிச்சையளித்து மருத்துவர்கள் அவளது உயிரை மீட்டுக் கொடுத்தார்கள்..

“எனக்கு மாறன் வேண்டும் அப்பா..”

சாருலதாவின் பிடிவாதம் வென்றது.. ரூபலதா மகளிடம் முகம் கொடுத்துப் பேசாமல் இறுகிப் போனாள்.. எஸ்டேட் பங்களாவுக்கு மாறனின் பெற்றோரை வரவழைத்த தொண்டைமான் மாறனின் தங்கைகள் இருவருக்கும் மாப்பிள்ளை பார்த்துத் திருமணம் செய்து வைப்பதாகவும்.. அவர்கள் கானவயல் எஸ்டேட்டை விட்டுக் கோயம்பத்தூரில் அவர் வாங்கிக் கொடுக்கும் பங்களாவுக்கு குடி பெயர்ந்து விட வேண்டும் என்றும் கட்டளையிட்டார்..

“உனக்கு ஜவுளிக்கடை வைத்துக் கெடுக்கறேன்… என் சம்பந்தி என் எஸ்டேட்டில் வேலை செய்கிறவனா இருக்கக் கூடாது..”

கரும்பு தின்னக் கூலி கேட்பார்களா..? ஒரே நாளில் வாழ்வு உச்சத்துக்குப் போய்விட மாறனின் பெற்றோர் ஆனந்தமாக அதற்கு சம்மதித்தார்கள்.. பூனாவிலிருந்து வந்த மாறனுக்கு விவரம் தெரிய.. அவன் அதிர்ச்சியானான்..

“என்னைக் கேட்காமல் சம்மதம் சொல்லிட்டிங்களா..?”

இந்த ஒரு கேள்வியைத்தான் அவன் கேட்டான்.. அவனைப் பெற்றவர்களும்.. கூடப் பிறந்த தங்கைகளும் அவனை உலுக்கு உலுக்கென்று உலுக்கி விட்டார்கள்..

தலைநாளில் பிறந்த மகன்.. தன்னை மட்டும் பேணிக் கொண்டு தனித்து இருக்கிறான்.. பெற்றவர்களும், கூடப் பிறந்த தங்கைகளும் பனியிலும், மழையிலும் நனைந்து தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்கிறார்கள்.. படித்து முடித்தவன் ஏதேனும் ஓர் வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்றுவான் என்று பார்த்தால்.. அவன் மேலே மேலே படித்துக் கொண்டே இருக்கிறானே தவிர.. குடும்பத்தை நினைத்தும் பார்க்கவில்லை.. பெற்றவர்களைத்தான் நினைக்க வேண்டாம்.. அவர்கள் வயோதிகர்கள்.. வாழ்ந்து முடித்தவர்கள்.. தங்கைகளை நினைத்துப் பார்த்தானா..? அவர்கள் வாழ வேண்டிய பருவத்தில் இருக்கிறார்களே.. அவர்களின் திருமணத்திற்கு என்ன சேர்த்து வைத்திருக்கிறான்..? கடவுள் போல முதலாளி ஓர் வழி காட்டியிருக்கிறார்.. கனவிலும் நினைக்காத வாழ்வு அவனுடைய தங்கைகளுக்கு கிடைக்கப் போகிறது.. காலம் முழுவதும் தேயிலைச் செடிகள் உடல் முழுவதும் குத்த வேலை செய்த வயோதிகர்கள் கடைசிக் காலத்திலாவது நிம்மதியாக உண்டு, உறங்கி வாழ வரம் கிடைத்திருக்கிறது.. அதை அவன் எப்படி கேள்வி கேட்கலாம்..?

குடும்பம் கொதித்த கொதிப்பில் மாறன் அடங்கிப் போனான்.. வாராது வந்த வாழ்வை இழக்க அவனைப் பெற்றவர்களும்.. தங்கைகளும் தயாராக இல்லை.. ஒன்று மாறன் இந்தத் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ள வேண்டும்.. இல்லையென்றால் அவனது குடும்பம் மொத்தமும் விசம் அருந்தித் தற்கொலை செய்து கொள்ளும் என்று முடிவாகச் சொல்லி விட்டார்கள்.. எதிர்பாராமல் கிடைத்த வாழ்வை இழக்க நேரிட்டால் அவர்கள் எந்த எல்லைக்கும் போவார்கள் என்பது உறுதியாகத் தெரிந்த பின்னால் மாறனால் வாய் திறந்து பேச முடியுமா..?

மாறன் ராணி சாருலதா தேவியின் கணவனானான்.. அவனுடைய தங்கைகள் குன்னூர், பொள்ளாச்சி என்று பெரிய இடங்களில் திருமணமாகிச் சென்று விட்டார்கள்.. அவனைப் பெற்றவர்கள் கோயம்பத்தூர் பங்களாவுக்கு குடி பெயர்ந்தார்கள்.. மாறனுக்கும் அவனுடைய குடும்பத்திற்கும் யாதொரு தொடர்பும் இருக்கக்கூடாது.. மாதம் ஓர்முறை அவன் பெற்றவர்களைப் பார்க்க போய் வரலாம்.. ஆனால் அவர்கள் அரண்மனைக்கு வரக்கூடாது.. அவனுடைய தங்கைகளுக்கான சீர்வரிசையை திருமணத்தின் போதே தொண்டைமான் செய்து விட்டார்.. அவர்கள் தாய் வீட்டில் சீராட வேண்டுமென்றால் கோயம்பத்தூருக்குத்தான் போக வேண்டும்.. கானவயல் அரண்மனைப் பக்கம் வந்துவிடக் கூடாது என்று நிபந்தனைகள் போடப்பட்டன.. அவை எல்லாம் நியாயம்தானே என்று மலர்ந்த முகத்துடன் ஏற்றுக் கொண்டு மாறனைப் பெற்றவர்களும், தங்கைகளும் ஒதுங்கிக் கொண்டார்கள்.. தன்னை விற்கப்பட்ட ஒரு பொருளாக மாறன் நினைக்கத் தொடங்கினார்..

சாருலதா சந்தோசமாக இருந்தாள்.. மாறனின் நிதானமும் அமைதியும் அவளுக்குப் பிடித்திருந்தாலும் கலகலப்பில்லாத அவரது சுபாவம் அவளை பாதிக்கத்தான் செய்தது… அவள் அவர்மீது காட்டிய காதலில் துளியளவு கூட பதிலுக்கு அவரிடமிருந்து அவளுக்குக் கிடைக்கவேயில்லை.. அது சித்தார்த்தன் பிறந்த பின்பும் தொடர்ந்தது..

மாதம் ஓர்முறை கோயம்பத்தூரில் இருக்கும் பெற்றவர்களைப் பார்ப்பதற்காக மாறன் சென்று விடுவார்.. திரும்பி வர ஒரு வாரமாகும்.. தொண்டைமானின் சொத்துக்களை நிர்வகிக்கும் வேலைப்பளுவில் சாருலதா அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டாள்.. சித்தார்த்தனுக்குப் பத்து வயதான போது சாருலதா ஹைதராபாத்தில் ஐ.டி கம்பெனி ஒன்றைத் தொடங்க முடிவு செய்தாள்..

“நம்ம பரம்பரை கான வயலில் காலூன்றியிருந்தாலும் இந்த எல்லைக்குள் மட்டும் தேங்கி நின்று விடக் கூடாதுப்பா.. இப்ப ஐ.டி கம்பெனிகளுக்கு நல்ல பியூச்சர் இருக்கு.. அந்த ஃபீல்டில் இறங்கனும்னு ஆசைப்படறேன்ப்பா..”

மகள் சொல்வதற்கு தொண்டைமான் என்று மறுப்புச் சொல்லியிருக்கிறார்..? வழக்கப்படி அவர் தலையாட்ட சாருலதா ஹைதராபாத்துக்கும் கானவயலுக்குமாக வானில் பறந்து தன் கனவை சாதித்தாள்..

 பிரம்மாண்டமாக ஐ.டி கம்பெனியின் திறப்பு விழாவை நடத்தினார்கள்… சாருலதா கணக்கிட்டதை விட கம்பெனியில் அதிக லாபம் கிடைத்ததில் அவள் கம்பெனியின் கிளைகளை வெளிநாடுகளில் நிறுவினாள்.. அதன் விளைவாக அவள் வெளிநாடுகளுக்கு அடிக்கடி பயணமாக.. சித்தார்த்தன் ஊட்டி கான்வென்டில் சேர்க்கப் பட்டான்..

சாருலதா வெளிநாட்டில் படித்தவள் என்பதினால் தனித்துப் பயணம் செய்யத் தயங்கவில்லை.. மாறன் அவளுடன் செல்வதைத் தவிர்த்ததைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவுமில்லை.. கால்களில் சக்கரம் கட்டிக் கொள்ளாத குறையாக அவள் சுற்றிக் கொண்டிருந்தபோதுதான் அந்தச் செய்தி அவளது செவிகளில் விழுந்தது..

சாருலதா வெளிநாடு போயிருக்கும் சமயங்களில் மாறன் கானவயிலில் இருப்பதில்லை.. அவர் கோயம்பத்தூருக்கும் செல்வதில்லை.. வேறு எங்கோ சென்று விடுகிறார்..

“அவர் எங்கே போகிறார் அம்மா..?”

அவள் ரூபலதாவிடம் கேட்ட போது அவள் உக்கிரமாக முறைத்தாள்..

“உன் ஹஸ்பெண்டைப் பற்றி என்னிடம் எதுவும் கேட்காதே சாரு.. எனக்கு நல்ல, நல்ல வார்த்தைகளாக வாயில் வந்து விடும்.. இதற்குத்தான் தகுதி பார்த்து மேரேஜ் பண்ணிக்கனும் என்கிறது.. இப்போது பார்.. குடிசையில இருந்தவனை கோபுரத்தில உட்கார வைத்த.. அதன் அருமை அவனுக்குத் தெரியுதா..?”

ரூபலதா எப்போதும் மாறனுக்கு மரியாதை கொடுத்துப் பேச மாட்டாள்.. தொண்டைமானாவது மகளின் முகத்திற்காக மாறனிடம் பேசுவார்.. ரூபலதா அந்த அரண்மனையில் மாறன் என்ற மனிதர் இருப்பதாகவே நினைக்க மாட்டாள்.. அவளுக்கு சாருலதாவும், சித்தார்த்தனும் மட்டுமே முக்கியம்.. அவன், இவன் என்றுதான் மருமகனைப் பேசுவாள்..

“அம்மா.. நான் என்ன கேட்கிறேன்.. நீங்க எதைப் பேசறிங்க..”

“என்னிடம் அவனைப் பற்றிக் கேள்வி கேட்டால் இப்படித்தான் பதில் வரும் சாரு.. ஜெய்ப்பூரின் மகாராணியாய் இருக்க வேண்டியவள்.. இப்படி இரண்டாம் தாரமாய் எவனோ ஒரு கூலித் தொழிலாளியின் மகனை மேரேஜ் பண்ணிக்கிட்டு இப்படி நிற்கிற..”

ரூபலதா போட்டு உடைத்து விட்டாள்.. தொண்டைமான் கெட்டிக்காரர்.. எதை வைத்து எதை சாதிக்கலாம் என்ற நுட்பம் அறிந்தவர்.. ஒருவரின் கண்பார்வையை வைத்தே அவரது செயல்பாடுகளும், குணாதிசியமும் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை படு நுணுக்கமாக ஆராய்ந்து அறிந்து விடுவார்.. அப்படிப்பட்டவர் மாறன் எங்கே போகிறார்.. திரும்பி வரும்போது இனம் விளங்காத ஓர் சந்தோசத்தை முகத்தில் பிரதிபலிக்கிறாரே.. அது ஏன் என்பதை கண்டு பிடித்திருக்க மாட்டாரா..

மாறன் மாதா மாதம் கோயம்பத்தூருக்குப் போய் வந்ததாகச் சொல்லி விட்டு வேறு எங்கோ சென்று வருகிறாரோ என்ற சந்தேகம் எழுந்த போது மாறனை கண்காணித்தார்.. மாறன் பூனாவில் இருந்த அவரது நண்பரின் வீட்டுக்குப் போவதாகப் போக்குக் காட்டியதில் அப்படித்தானோ என்று விட்டு விட்டார்.. சித்தார்த்தனுக்குப் பத்து வயதாகும்வரை மாறன் மாதம் ஓர்முறை மட்டுமே கானவயலை விட்டுச் சென்றார்.. ஆறே நாள்களில் திரும்பி வந்தார்.. சித்தார்த்தனுக்குப் பத்து வயதானது.. அவன் ஊட்டி  கான்வென்டில் சேர்க்கப்பட்டான்.. சாருலதா வெளிநாட்டுக்குப் பறந்தாள்.. மாறன் மாதக் கணக்கில் பூனாவில் தங்கத் தொடங்கினார்..

மருமகன் எங்கேயென்று தொண்டைமான் தேட ஆரம்பிக்க அவருக்கு அதிர்ச்சி தரும் உண்மைகள் தெரிய வந்தன.. எதற்கும் அதிராத தொண்டைமான் அந்த உண்மைகளில் அதிர்ந்து ரூபலதாவிடம் தஞ்சமடைந்தார்..

“நீ சொல்வதைக் கேட்டிருக்கனும் ரூபா.. நம் உயரத்திலிருந்து இறங்கியிருக்கக் கூடாது.. சாரு ஆசைப்படுகிறாள்ன்னு ஏற்கனெவே கல்யாணம் ஆன ஒருவனை சாருலதாவுக்குக் கல்யாணம் பண்ணி வைத்து விட்டேனே.. என் மகள் இளைய தாரமா..?”

0Shares

Reviews – aaranyam azhakanathu / ஆரண்யம் அழகானது

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • X (Twitter)
  • Email
  • Copy Link
Copy link