Chapter 23

0Shares

நிலைமாறும் இவ்வுலகில்..

நீ மட்டும் வேண்டும்..

நிழலாக உனைத் தொடரும்..

நிலை மட்டும் வேண்டும்..

“அப்பா..”

கேட்டுக் கொண்டிருந்த உண்மைகளில் ஸ்தம்பித்துப் போனாள் ப்ரீதி.. அவளுடைய சித்தார்த்தன் அவளது அத்தையின் கணவரின் மகனா..?

கங்காதரன் உணர்ச்சிப் பிழம்பாக இருந்தார்.. தங்கையின் கடந்த கால வாழ்க்கைக் கதையைச் சொல்லிக் கொண்டிருந்தவரிடம் ஆத்திரம் மட்டுமே மிகுதியாக இருந்தது.. அவர் விசாகாவின் பக்கமிருந்த துயரத்தையும் நியாயத்தையும் மட்டுமே பேசினார்.. சாருலதாவின் குமுறலை அவர் கோடிட்டுக்கூடக் காட்டவில்லை..

“சாருலதா ராணியாக இருக்கலாம்.. விசாகாவை நான் இளவரசியைப் போலதானே வளர்த்தேன்..? அவளுடைய வாழ்க்கையைப் பற்றி எனக்கு ஆயிரம் கனவுகள் இருந்தன.. விசாகா படிக்கப் போனாள்.. கூடப் படித்த மாறனுடன் காதல் என்று வந்து நின்றாள்.. அவர் மலைவாழ்கிராமவாசியின் மகனாக இருந்தார்.. குடும்பத்துடன் பெண் கேட்டு வர அவர் தயாராக இல்லை.. அவர்கள் சம்மதிக்க மாட்டார்கள்.. கல்யாணம் ஆகாத இரண்டு தங்கைகள் இருக்கும்போது எனக்கு முதலில் கல்யாணம் செய்து வைக்க மாட்டார்கள்ன்னு சொன்னார்.. விசாகா காத்திருக்கத் தயாராக இல்லை.. மாறன் மீது அப்படியொரு வெறித்தனமான காதல்.. யார் சொல்வதையும் கேட்காமல் மாறனை வற்புறுத்தினாள்.. என்னிடம் அழுது பிடிவாதம் பிடித்தாள்.. நானும் வேறு வழியில்லாமல்தான் கோவிலில் அவர்களுக்குக் கல்யாணம் பண்ணி வைத்தேன்.. கொஞ்சநாள் விசாகா பூனாவிலேயே இருக்கட்டும்.. நான் கான வயலுக்குப் போய் சமயம் பார்த்து என் குடும்பத்துக்கு விவரம் சொல்லிவிட்டு வந்து விடுகிறேன்னு சொல்லிட்டுப் போனவர் அங்கே அவருக்கு ராணி சாருலதா தேவியுடன் கல்யாணம் ஆகி விட்டதுங்கிற விவரத்தோட வந்து நின்றார்.. நான் கொதிச்சேன்.. என் தங்கையைக் கல்யாணம் பண்ணினவர் எப்படி இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு அவரின் சட்டையைப் பிடித்தேன்.. போலிஸில் கம்ப்ளெயிண்ட் கொடுத்து அவருக்கு தண்டனை வாங்கித்தரப் போறேன்னு புறப்பட்டேன்.. விசாகா என் காலைப்பிடித்து அழுதா.. மாறனோ நீங்க என்ன தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்கிறேன்னு நிற்கிறார்.. அவர் நினைத்திருந்தா பூனாவுக்கு வராமல் இருந்திருக்கலாம்.. நாம தேடிப் போனாலும் தொண்டைமானின் மருமகனின் நிழலைக்கூட நெருங்க முடியுமா..? அவர் தன்னை ஒப்புக் கொடுக்கத்தானே வந்திருக்கிறார்ன்னு விசாகா கேட்டா… அவர் சூழ்நிலைக்கைதி.. நான்தானே அவரை கல்யாணம் செய்துக்கச் சொல்லி வற்புறுத்தினேன்னு கதறினா..”

“அப்புறம்..?”

“வேறு என்ன செய்து தொலைக்க..? விசாகா நம்ம வீட்டிலேயே இருந்தா.. மாறன் மாதம் ஒருதடவை வந்து போனார்.. ஆதவனும் ஆர்த்தியும் பிறந்தாங்க.. ஆதவனுக்குப் பதினைந்து வயதான போது.. சாருலதா சாகக்கிடக்கிறாள்.. கடைசியாக உன்னுடன் பேசனும் என்கிறாள்.. உன்னையும் பிள்ளைகளையும் கானவயலுக்கு அழைத்து வந்துவிடும்படி அனுமதி கொடுத்து விட்டாள்ன்னு மாறன் வந்து நின்றார்.. அவருக்கே அந்த அரண்மனையில் உரிமையில்லை.. உனக்கு என்ன உரிமையிருக்கப் போகிறது..? போகாதேன்னு நான் தடுத்தேன்.. உன் வாழ்வை நீ வாழ இன்னொரு பெண் அனுமதி கொடுப்பதான்னு கேட்டேன்.. என்னிடம் இருந்த தன்மான உணர்ச்சி என் தங்கையிடம் இல்லாமல் போய் விட்டது.. அவளுக்கு மாறன் சொல்வதுதான் வேதவாக்கு.. இத்தனை காலமாக பிறந்த வீட்டில் இருந்ததை விடவா தன்மான குறைவு வந்து விடப் போகிறதுன்னு கேட்டு விட்டு மாறனுடன் கிளம்பி இங்கே வந்து விட்டாள்.. இந்த அரண்மனை மாறனுக்குச் சொந்தமானதில்லை.. ராணி சாருலதா தேவிக்குச் சொந்தமானது.. இங்கே நான் எப்படி தங்கை வீடென்று உரிமை கொண்டாடி வந்து போக முடியும்..? உரிமையில்லாத இடத்தில் உரிமையில்லாத வாழ்வை விசாகா வாழலாம்.. அது அவள் முடிவு.. அவள் வாழ்வு.. நான் அப்படியில்லையே.. என்னால் இந்த அரண்மனையை என் தங்கை வீடென்று சொந்தம் கொண்டாட முடியாது ப்ரீதி..”

“என்னாலும் சொந்தம் கொண்டாட முடியாது மாமா..”

அறைவாசலில் ஆதவனின் குரல் கேட்டது.. கனல் கக்கிய விழிகளுடன் ப்ரீதியை சுட்டுப் பொசுக்கியபடி உள்ளே வந்தான் ஆதவன்.. அவன் மாடிப்பக்கம் வந்ததே இல்லை.. மாறன், விசாகா, ஆதவன், ஆர்த்தியென்று அவர்கள் தனித்துப் பிரிந்திருந்ததை ப்ரீதியால் அப்போது தான் உணர முடிந்தது.. அவர்களின் அறைகள் தரைத் தளத்தில்தான் இருந்தன.. முதல்நாள் ப்ரீதிக்கு அறையைக் காட்டக் கூட வந்த ஆர்த்தி அதன்பின் மாடிக்கு வரவில்லை..

‘இதையெல்லாமா நுணுக்கமா நோட்டிஸ் பண்ண முடியும்..?’

இப்படி ஒரு கதை இருக்குமென்றே அறியாதவள் ப்ரீதி.. இயல்பாக விருந்தாட வந்தவள்.. அவளைப் போய் ஆதவனின் சொத்தைக் கொள்ளையடித்து விட்டதைப் போல உக்கிரமாக ஆதவன் முறைத்துக் கொண்டிருந்தான்..

“உட்கார் ஆதவா..”

“உங்க வார்த்தைக்காக உட்காருகிறேன் மாமா.. நீங்க வந்திருக்கிறதால மாடிக்கு வந்திருக்கிறேன்.. இல்லேன்னா இங்கே கால்கூட வைக்க மாட்டேன்.. நான் உங்க மருமகன் மாமா.. உங்களிடம் இருக்கும் ரோசமும் கோபமும் அப்படியே எள்ளளவும் குறையாமல் என்னிடம் இருக்கிறது..”

“ஓ..”

இப்போது அறைவாசலில் கேட்டது சித்தார்த்தனின் எள்ளல் குரல்.. ப்ரீதி உள்ளம் துள்ளப் பார்த்தாள்.. அதை கண்டு கொண்ட மின்னல் சித்தார்த்தனிடமும்.. காட்டம் ஆதவனிடமும் வந்தன..

“நீ ரோசக்காரனா..? அவ்வளவு ரோசமிருக்கிறவன் இந்த அரண்மனையிலேயே கால் வைத்திருக்கக் கூடாது.. படிக்க ஃபாரின் போயிருக்கக் கூடாது.. அங்கே வேலை பார்த்துக்கிட்டே படிக்காமல் மாதா மாதம் லட்சக்கணக்கில் பணம் கேட்டிருக்கக் கூடாது.. ஃபாரின் கார் வாங்கியிருக்கக் கூடாது.. பூனாவில் கம்பெனி ஆரம்பிக்க கோடிக்கணக்கில் பணம் கேட்டிருக்கக் கூடாது.. இதெல்லாம் யார் வீட்டுப் பணம்..? உன் அப்பா வீட்டுப் பணமா..?”

நிதானமாக அடியெடுத்து வைத்து வந்த சித்தார்த்தன் ஆதவனின் சிறுத்துப் போன முகத்தின் முன்னால் குனிந்து விரல் சொடுக்கி..

“என் அம்மாவோட பணம்.. எனக்கு மட்டும் உரிமையான.. சொந்தமான பணம்.. பரம்பரைப் பணம்..” என்றான்..

ஆதவனின் விழிகளில் ரணவேதனை தெரிந்தது.. அவன் இமைகளை மூடிக்கொள்ள.. கங்காதரனின் முகம் ஜிவுஜிவுத்தது..

“மிஸ்டர் சித்தார்த்தன்.. இது உங்களுடைய அரண்மனையாக இருக்கலாம்.. பட்.. என் மகள் தங்கியிருக்கிற ரூமில் அத்துமீறி நீங்கள் உள்ளே வருவது அநாகரிகம்.. நாங்க எங்க குடும்ப விவரங்களைப் பேசிக் கொண்டிருக்கிறோம்.. ப்ளீஸ்.. நீங்க வெளியே போகிறிங்களா..?” அறை வாசலை நோக்கி கைகாட்டி விட்டார்..

ப்ரீதியே அதை எதிர்பார்க்கவில்லை.. ஒரு நொடியில் ஆதவனின் இமைகள் திறந்தன.. அவனது விழிகளில் இருந்த ரண வேதனை மறைந்து திமிர் வந்திருந்தது.. அதே நொடியில் சித்தார்த்தனின் விழிகளில் சீற்றம் வந்தது.. அவன் ப்ரீதியை உறுத்துப் பார்த்தான்.. ப்ரீதி வாய் திறந்து பேசுவதற்குள் வேகமாக வெளியே போய்விட்டான்..

“அப்பா.. என்ன இது..?” ப்ரீதி பதறினாள்..

“கண்ட்ரோல் யுவர் ஷெல்ஃப் ப்ரீதி.. என் கண் முன்னால் என் தங்கையின் மகனை இழிவாகப் பேசுகிறார்.. கேட்டுக் கொண்டு என்னை சும்மா இருக்கச் சொல்கிறாயா..?”

“அதற்காக..? அவருடைய அரண்மனையிலேயே அவரை வெளியே போகச் சொல்வீங்களாப்பா..? இது அநியாயம்..”

“எனக்கு இதுதான் நியாயம்.. அவருடைய அரண்மனையில் எதற்காக அவருடைய அப்பாவின் இன்னொரு குடும்பத்தை தங்க வைத்திருக்கிறார்..? இப்படிச் சொல்லிக் காட்டவா..?”

கங்காதரன் கேட்டதும் நியாயமாகத்தான் தோன்றியது.. அவர் அவருடைய தங்கையின் பக்கம் நின்று பேசுகிறார்.. ப்ரீதி நிற்க வேண்டியது சித்தார்த்தனின் பக்கம் அல்லவா.. அந்த நியாயத்தை அவள் எப்படிச் சொல்லுவாள்..?

“இப்படிச் சொல்லிக் காட்டனும் என்பதற்காகத்தானே மாமா இவனுடைய அம்மா சாகப் போகிறாங்கன்னு எங்களை இங்கே வர வைத்தாங்க.. கட்டிப் போட்டு அடிக்கிறான் மாமா.. இவங்க பக்கம் தப்பை வைத்துக்கிட்டு எங்களுக்குத் தண்டனை கொடுக்கிறான்.. அவனுடைய அம்மா என் அம்மாவின் வாழ்வைப் பறித்தாங்க.. இவன் எங்களைக் கைதியாக்கி சாட்டையால் அடிக்கிறான்..”

ஆதவன் எடுத்துச் சொல்லிய விதத்தில் கங்காதரனின் முகத்தசைகள் துடித்தன.. அவரது கண்கள் சிவப்பதைக் கவலையுடன் பார்த்தாள் ப்ரீதி.. சித்தார்த்தனின் மீதான அவரது துவேசத்திற்கு ஆதவன் தூபம் போட்டுக் கொண்டிருக்கிறானே.. இது நீடிக்கக் கூடாதே..

“அத்தை மாமாவுடன் வாழாமலா நீங்களும் ஆர்த்தியும் பிறந்தீங்க அத்தான்..” என்று கேட்டு விட்டாள்..

ஆதவன் பல்லைக் கடித்தான்.. இதே கேள்வியை சித்தார்த்தன் பலமுறை கேட்டிருக்கிறான்..

“மாமா அத்தையிடம் உண்மையை மறைக்கலை.. சித்தார்த்தனிடம் அம்மாவிடம்தான் உண்மையை மறைத்திருக்கிறார்.. அத்தை என்ன தண்டனையைக் கொடுத்தாலும் ஏத்துக்கிறேன்னு சரணடைந்தவர் சித்தார்த்தனின் அம்மாவிடமும் சரணடைந்திருக்கலாமே.. ஏன் அதைச் செய்யலை..? தொண்டைமான் தாத்தா உண்மையைத் துப்பறிந்து கண்டு பிடித்தார்… இல்லாவிட்டால் கடைசிவரை மாமா அவங்களுக்கு உண்மையைச் சொல்லியிருக்க மாட்டார்..”

“எப்படிச் சொல்லுவார்..? அப்பாவைக் கட்டாயப் படுத்திக் கல்யாணம் செய்துக்கிட்டவங்கதானே அவங்க.. கோடிஸ்வரங்க… கொன்று புதைத்திருவாங்கன்னு உண்மையை மறைத்திருப்பார்..”

“சாருலதா ஆண்ட்டியைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளச் சொல்லி மாமாவின் குடும்பம்தான் அவரைக் கட்டாயப் படுத்தியிருக்கு.. ஆண்ட்டியின் அம்மாவுக்கு மாமாவைக் கொஞ்சம் கூடப் பிடிக்கல.. கல்யாண ஏற்பாடுகளை தடுத்திருக்காங்க.. தன் குடும்பத்திற்குத் தெரியாமல் தொண்டைமான் தாத்தாவிடம் அவருக்குக் கல்யாணம் ஆகிவிட்டது என்கிற உண்மையை மாமா சொல்லியிருக்கலாமே.. அவரை எது தடுத்தது அப்பா..? குடும்பம் தற்கொலை செய்து கொள்ளும்ன்னு தயங்கினார்ன்னு சொல்வதெல்லாம் சும்மா.. சப்பைக் கட்டு.. இரண்டு தங்கைகள் அண்ணன் படித்து வேலைக்குப் போய் தங்களுக்குக் கல்யாணம் செய்து வைப்பார்ன்னு காத்திருந்தபோது அவர்களைப் பற்றிக் கொஞ்சம்கூட கவலைப்படாமல் சுயநலமாக தான் மட்டும் முதலில் கல்யாணம் செய்து கொண்ட மாமாவுக்கு இதைச் சொல்ல வாய் வரவில்லையா..?”

கங்காதரனே திகைத்துப் போனார்.. மகள் யோசித்த அளவுக்குக்கூட அவர் ஏன் யோசிக்கவில்லை..? தங்கை பாசம் அவரது கண்களை மறைத்து விட்டதா..?

கங்காதரனின் தடுமாற்றத்தை ஆதவன் கண்டு கொண்டான்.. தாய் மாமனின் மனம் தடுமாறுவதில் அவனுக்கு உடன்பாடில்லை.. அவரை சிந்திக்க வைக்கும் கேள்விகளைக் கேட்ட ஆர்த்தியின் மீது சினம் வந்தது..

“சித்தார்த்தனிடம் மயங்கி விட்டாய் ப்ரீதி.. அதற்காக என் அப்பாவின் இக்கட்டான நிலையைப் புரிந்து கொள்ளாமல் பழி போடுகிறாய்.. குடும்பம் தற்கொலை பண்ணிக்கும் என்கிற பயம் இருக்கிறப்ப ஒரு மனிதனால் என்ன செய்ய முடியும்..? அப்பா தன் குடும்பத்துக்குக் கட்டுப்படுவார் என்கிற நிச்சயத்தில்தானே அவரது ஏழ்மையைப் பயன்படுத்திக்கிட்டு இந்த தொண்டைமான் அவர் மகளை என் அப்பாவின் தலையில் கட்டினார்..?”

ஆதவன் பேசியதை கங்காதரனாலேயே சகித்துக் கொள்ள முடியவில்லை.. ப்ரீதி கொதித்துப் போனாள்..

“ஆமாம் அத்தான்.. சாருலதா ஆண்ட்டி தெருவில் நின்றிருந்தாங்க.. உங்க அப்பா அவங்களுக்கு வாழ்க்கைக் கொடுத்துக் காப்பாற்றினார்.. இதைச் சொல்ல உங்களுக்கு வாய் வருதே.. மாமா கெட்டிக்காரர்.. இவர்தான் சாருலதா ஆண்ட்டியின் தலையில் விழுந்து தன் தேவைகளை நிறைவேற்றிக்கிட்டார்.. தங்கைகளுக்கு பெரிய இடங்களில் கல்யாணம்.. தாய், தகப்பனுக்கு சொத்து, கார், பங்களான்னு நினைத்துப் பார்க்க முடியாத பணக்கார வாழ்க்கை.. ஏற்றுக் கொள்ள கசக்கிறதா..? தாலிகட்டிய பெண்டாட்டிக்கு உண்மையாய் இருக்கனும்ங்கிற அவசியம் என்ன..? ஆசைக்கு அத்தை.. ஆஸ்திக்கு சாருலதா ஆண்ட்டி.. இரண்டு பெண்களுக்கும் துரோகம் செய்கிறோம்.. அவங்க வாழ்க்கையில் விளையாடுகிறோம்ங்கிற குற்றஉணர்ச்சி கொஞ்சம் கூட இல்லை.. அவரால் நிம்மதியாக வாழ முடிந்திருக்கிறது.. பழியானது யாருடைய நிம்மதி..? வஞ்சிக்கப் பட்டது ஓர் மகாராணி.. அத்தான்.. அதைப் பத்தி நினைத்துக் கூடப் பார்க்காம அபாண்டமாய் பேசறிங்களே.. ஒன்றை நினைவில் வைத்துக்கங்க.. மாமாவுக்கு இன்னொரு குடும்பம் இருக்கிறதுன்னு தெரிந்தவுடன் சித்தார்த்தனின் அம்மா உயிரை விட்டுட்டாங்க..”

“அதைப் போல என் அம்மாவும் சாகலைன்னு உனக்கு வருத்தமாக இருக்கிறதா..? கேட்டுக்கங்க மாமா.. அண்ணன் மகள்ன்னு என் அம்மா பாசத்தைக் கொட்டினதுக்கு உங்க மகள் பதிலுக்கு எப்படியெல்லாம் பேசுகிறாள்ன்னு பாருங்க..”

ஆதவன் தாய் மாமனுக்கு எடுத்துக் கொடுத்தான்.. கங்காதரனுக்கும் மனதுக்கு கஷ்டமாக இருந்தது.. விசாகா இறக்கவில்லை என்ற ரீதியில் மகள் பேசுவதாகத்தான் அவர் எடுத்துக் கொண்டார்..

“என்னம்மா பேசற நீ.. என் தங்கை எதற்குச் சாகனும்..?” கோபத்துடன் ஆட்சேபித்தார்..

“நான் அந்த அர்த்தத்தில் சொல்லலைப்பா.. இன்னொரு பெண் மாமா வாழ்க்கையில் இருப்பதை சாருலதா ஆண்ட்டிக்கு கல்யாணத்திற்கு முன்னாடியே தெரியப் படுத்தியிருந்தா அவங்க மாமா இருக்கிற திசைப்பக்கம் கூடத் திரும்பிப் பார்த்திருக்க மாட்டாங்க.. அதைத்தான் இப்படிச் சொன்னேன்..”

‘ஆம்’ எனும் விதமாய் கங்காதரன் தலையை ஆட்டி வைத்ததில் ஆதவனுக்கு வேகு, வேகு என வந்தது..

“அப்படின்னா.. இன்னொரு பெண் எங்க அப்பாவின் வாழ்க்கையில் வந்து விட்டதைத் தெரிந்தவுடன் என் அம்மா, அப்பாவின் வாழ்க்கையிலிருந்து விலகியிருக்கனும்னு சொல்கிறயா..?” என்று பிடித்துக் கொண்டான்..

“விலகனும்னு இல்லை.. துரோகம் செய்து விட்டக் கணவரை விலக்கி வைத்திருக்கலாம்… அப்பாவும் அதைத்தானே சொன்னார்.. எனக்குத் தெரிந்து அப்பா மாமாவிடம் முகம் கொடுத்துப் பேசியதே இல்லை.. அத்தை அப்படி இருந்திருக்கலாமே.. ஏன் மாமாவுடன் குடும்பம் நடத்தினாங்க..? சாருலதா ஆண்ட்டி இறந்த பின் அவங்க அரண்மனைக்கே பிள்ளைகளுடன் வந்து தங்கி விட்டாங்களே.. இப்ப உங்க குடும்பம் அனுபவித்துக்கிட்டு இருக்கிற அரண்மனை வாழ்வு மாமா உங்களுக்குத் தந்ததில்லையே.. சாருலதா ஆண்ட்டி கொடுத்த வாழ்க்கைதானே.. அத்தை நினைத்திருந்தா இது வேண்டாம்.. சாருலதாவே போன பின்பு உங்களுக்கும் 

இந்த அரண்மனைக்கும் என்ன சம்பந்தம்.. வாங்க.. நாம் பூனாவுக்குப் போய் பிழைத்துக் கொள்ளலாம்ன்னு மாமாவைக் கூப்பிட்டுக் கொண்டு வந்திருக்கலாமே..? அப்பாவும் அதைத்தானே விரும்பினார்..?”

“இப்போது நான் அதைத்தானே செய்யப் போகிறேன்.. ஆர்த்தியும் பூனாவுக்குத்தானே வரப் போகிறா..?”

“நீங்க இரண்டு பேரும் வெளியேறுகிற லட்சணத்தைப் பற்றி வெளியில் சொல்லி விடாதீங்க.. சிரிக்கப் போகிறாங்க.. உரிமையில்லாத இடத்தில் இருக்கக் கூடாதுன்னா நீங்க வெளியேறுகிறீங்க..? உங்களுக்கு இந்தக் காட்டுப் பகுதி பிடிக்கவில்லை.. சிட்டி லைஃபை விரும்புகிறீங்க.. அதனால் கோடிக் கணக்கில் சித்தார்த்தனிடம் பணத்தை வாங்கி.. அதில் உங்க பெயரில் கம்பெனியை ஆரம்பித்துக்கிட்டு வெளியேறுகிறதா இருக்கீங்க.. ஆர்த்தி மட்டும் என்ன..? சீர்வரிசை இல்லாமல் வந்து விடுவாளா..? இதெல்லாம் யாருடைய பணம்..?”

நாக்கைப் பிடுங்கிக் கொள்வதைப் போல நல்ல நல்ல கேள்விகளைப் ப்ரீதி கேட்டு வைத்ததில் ஆதவனின் முகம் பயங்கரமாக மாறியது..

0Shares

Reviews – aaranyam azhakanathu / ஆரண்யம் அழகானது

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • X (Twitter)
  • Email
  • Copy Link
Copy link