Chapter 25
அன்பு என்பது ஆலகால விசம்..!
தகுதியற்றவரின் மீது அதைவைத்தால்
அன்பு வைத்தவரை அது அழிக்கும்..
“காற்றில்.. எந்தன் கீதம்..
காணாத ஒன்றைத் தேடுதே..”
கொட்டும் மழையில் நனைந்தபடி பாடிக் கொண்டிருந்தாள் ப்ரீதி.. வெறும் மழையல்ல.. குளிர் மழை.. அடர் இருட்டுடன் கூடிய தொடர்மழை.. அடர்ந்த வனம் மாலைப் பொழுதை கும்மிருட்டாகக் காட்டிக் கொண்டிருந்தது.. பனி படர்ந்த மரங்களும் செடிகளும் கொடிகளும் அச்சுறுத்தாவிட்டாலும் மனதுக்குள் ஓர்வித பயத்தை உண்டாக்கும் வகையில்தான் இருந்தன..
அது ‘சின்கோனா..!’ வால்பாறையின் சிரபுஞ்சி..! எப்போதும் மழை கொட்டிக் கொண்டிருக்கும் மலைப்பகுதி.. அந்தப் பிரதேசத்தை சித்தார்த்தனுடன் பார்வையிட வந்தபோது மழையில் நனைந்து வெடவெடத்துப் போனாள்.. சித்தார்த்தன் ஒரே கம்பளிக்குள் அவளை இழுத்துக் கொண்டான் என்பது வேறு விசயம்.. அந்த நினைவு இன்று வந்து தொண்டைக் குழியில் பந்து போல உருண்டது..
“காற்றில்.. எந்தன் கீதம்..
காணாத ஒன்றைத் தேடுதே..
அலை போலே.. நினைவாக..
சில்லென்று வீசும் மாலைநேரக்
காற்றில்.. எந்தன் கீதம்
காணாத ஒன்றைத் தேடுதே..”
கொட்டும் மழைத் தாரைகளின் ஊடே அவளது விழிகள் காணக் கிடைக்காத அவளது காதலனைத் தேடின.. அவன் அவளை ‘போ..’ என்று சொல்லி விட்டானே.. அவளது முகம் பார்க்கும் விருப்பமின்றி முகத்தைத் திருப்பிக் கொண்டானே..
“என் அம்மா சொன்னாங்கடி.. இங்கே இருக்கிறது என் கணவர் இல்லை சித்து.. விசாகாவின் கணவர்.. அவளை வரச்சொல்லி அவளுடைய கணவனை அவளிடம் ஒப்படைத்து விடு.. கொடுத்துப் பழகிய பரம்பரையில் பிறந்தவள் நான்.. இன்னொருத்தி கொடுத்த வாழ்வை வாழ்ந்து கொண்டிருந்தேன்னு இத்தனை நாளாய் எனக்குத் தெரியாது.. அதற்கு விலையாக அவளுடைய பிள்ளைகளுக்கு படிப்பு, பணம், தொழில்ன்னு செய்து ஈடு கட்டிவிடு.. அவர்கள் இந்த அரண்மனையில் இருந்து விட்டுப் போகட்டும்.. உன்னுடன் உன் அப்பா இருக்க வேண்டுமானால் அவருடன் அவருடைய குடும்பம் இருக்க வேண்டும்தானேன்னு சொன்னாங்க.. இப்படிப்பட்ட அப்பா எனக்கு வேண்டாம்.. அந்த மனிதரை என் வாயால் அப்பான்னு கூப்பிட மாட்டேன்னு சொன்னேன்.. அம்மா விரக்தியா சிரிச்சாங்க பாரு ஒரு சிரிப்பு.. அந்தச் சிரிப்பை என் ஆயுளுக்கும் மறக்க மாட்டேன்..”
சித்தார்த்தனின் துடிப்பில் ப்ரீதியும் துடித்துப் போனதை ஏன் அவன் உணரவில்லை.. எதிரியைப் பார்ப்பதைப் போல அவளைப் பார்த்தானே..
“எங்க அம்மா ராணிடி.. அவங்களோட கணவர் வேறு ஒருத்திக்கும் கணவர்ன்னு தெரிஞ்சவுடனே உயிரை விட்டுட்டாங்க.. உன் அத்தை..? என்ன செஞ்சாங்க..? இன்னொருத்திக்கும் தாலியைக் கட்டிக் குடும்பம் நடத்தின கணவரை ஏத்துக்கிட்டாங்க.. மாதா மாதம் வந்து போகும் கணவரை சந்தோசமா தன் பக்கம் இழுத்துக்கிட்டாங்க.. அவர் ‘வா’ன்னு கூப்பிட்டவுடன் கானவயலுக்குப் பிள்ளைகளுடன் வந்து இந்த அரண்மனையை சொந்தம் கொண்டாடி செட்டிலாகிட்டாங்க.. அவங்களும் சரி.. ஆதவன், ஆர்த்தியும் சரி.. ஒரு நொடியாவது இந்த வாழ்க்கை அவங்களுக்குச் சொந்தமானதான்னு நினைத்துப் பார்த்திருப்பாங்களா..?
இது என்ன அவங்க அப்பா, பாட்டன் வீட்டுச் சொத்தா..? என் அம்மாவின் சொத்துக்கள்டி.. இதை அவங்க சொந்தம் கொண்டாடலாம்.. உன்னை நான் சொந்தம் கொண்டாடக் கூடாதா..?”
‘ஏன் கூடாது..?’ ப்ரீதியின் மனம் வலித்தது..
“ஆக்சுவலா உன் அத்தைக்கு யார் மேல கோபம் வரனும்..? யார் மேல பகை வரனும்..? யார் அவங்களுக்குத் துரோகம் செய்தது..? அவங்க மேலேதானே கோபமும் பகையும் வரனும்..? உன் அத்தை அதைச் செய்ய மாட்டாங்க.. அவங்க கழுத்தை அறுத்து நம்பிக்கைத் துரோகம் செய்த மிஸ்டர் மாறன் மேல பிரியத்தைக் கொட்டுவாங்க.. என்னவோ அவங்க சொத்து சுகத்தைப் பறித்துக் கொண்டதைப் போல என்னிடம் பகையைக் காட்டுவாங்க.. அவங்க பிள்ளைகள் அவங்களைத் தாண்டி இருக்காங்க.. என் தயவில் வாழ்கிறார்கள் எண்ற எண்ணமே அவர்களுக்கு இல்லை.. அவங்க கேட்கும் போதெல்லாம் நான் படியளக்க வேண்டும்.. இல்லைன்னா என் முதுகுக்குப் பின்னால் பேசுவாங்க.. கொடுத்துக் கிடுத்து வைத்திருக்காங்களா..?”
“ப்ளீஸ்.. கூல்டவுன் சித்தார்த்.. நாம் நம்மைப் பற்றிப் பேசுவோம்..”
“உன்னிடம் பேச எனக்கு என்ன இருக்கிறது..?”
சித்தார்த்தன் கேட்ட கேள்வியில்.. அவனது ஒட்டாத பார்வையில் விக்கித்துப் போனாள் ப்ரீதி.. அவன்தான் அவளுக்கு எல்லாமும் என்று கங்காதரனிடம் அறிவித்து விட்டு வந்திருக்கிறாள்.. ஆதவனைத் துச்சமாகப் பேசி தூக்கி எறிந்து விட்டு வந்திருக்கிறாள்.. சித்தார்த்தனோ உனக்கும் எனக்கும் இடையில் என்ன இருக்கிறது என்று கேட்கிறான்..
“எதுவுமே இல்லையா..?”
கலங்கிய அவளது விழிகளைச் சந்தித்தவனின் பார்வை ஓர்நொடி அவள் முகத்தில் நிலைத்து நின்றது.. இதோ அவளை இழுத்து அணைத்துக் கொள்ளப் போகிறான்.. நெற்றியில் முத்தமிடப் போகிறான்.. நீயின்றி நானில்லையடி என்று இறுக்கி எழும்புகளை நொறுக்கப் போகிறான் என்றெல்லாம் கற்பனை செய்து எதிர்பார்ப்பில் மனம் படபடக்க அவள் நின்றிருக்க.. அவன் பார்வையை விலக்கிக் கொண்டு வேறு திக்கில் பார்த்தபடி..
“எதுவும் இல்லை..” என்றான்..
“அது எப்படி இல்லாமல் போகும்..?” ப்ரீதி வெகுண்டாள்..
முதல்நாள் முழுவதும் அவளுடன் அவன் கழித்த சூடான பொழுதுகள் அவன் நினைவில் எப்படி இல்லாமல் போகும்..? அவனது மூச்சுக்காற்றின் வெப்ப மூச்சு அவளது மேனியெங்கும் படிந்த நொடிகள் அவன் நினைவில் எப்படி இல்லாமல் போகும்..? பனி பொழியும் குளிர் மழையில் வெடவெடத்து நின்றவளை தன் உடல்மீது அப்பிக் கொண்டு உஷ்ணத்தை அவளுடலுக்குத் தந்து அவளை அவன் குளிர் காய வைத்த நிகழ்வுகள் அவன் நினைவில் எப்படி இல்லாமல் போகும்..?
“எத்தனையோ என் வாழ்வில் இல்லாமல் போயிருக்கிறது.. எனக்கு மட்டும் சொந்தம்ன்னு நான் நினைத்த அப்பா.. என் வாழ்வில் கடைசிவரை முடிகோதும் என் அம்மா.. கௌரவமாய் நிமிர்ந்து நின்ற என் பாட்டின்னு நான் நேசித்தவர்கள் எல்லாம் என்னை விட்டுப் போயிட்டாங்க..”
“உங்க அப்பா உங்களை விட்டுப் போகலை சித்தார்த்..”
“ம்ப்ச்.. இங்கே இருக்கிற மாறனை என் அப்பான்னு நான் நினைக்கலை.. அந்த மனிதர் என் பிறப்புக்குச் சொந்தக்காரராக இருக்கலாம்.. எனக்குச் சொந்தமாக முடியாது.. பாட்டி அம்மா மேல உயிராய் இருந்தவங்க.. அம்மா போனதும் இவங்களும் போயிட்டாங்க.. அவங்களைச் சொல்லிக் குற்றமில்லை.. அவங்களுக்கு அவங்க மகள் மேல பாசம்.. என் அம்மாவுக்குத்தான் என்மேல பாசமில்லாமப் போயிருச்சு.. இப்ப எனக்குன்னு இருக்கிறசொந்தம் என் தாத்தா மட்டும்தான்..”
“நான் இருக்கிறேனே சித்தார்த்.. நானும் இருக்கிறேனே..”
“யார் நீ..? விசாகாவின் அண்ணன் மகள்.. ஆதவனின் தாய்மாமன் மகள்.. எனக்கு நீ யார்..? எதுவுமேயில்லை.. உன் அத்தையும், அத்தை பிள்ளைகளும் என் அரண்மiயில் இருந்து கொண்டே எனக்கு எதிரா வேலை செய்கிறாங்கன்னா உன் அப்பா அவங்களோட உறவுங்கிறதை அப்படியே ஃப்ரூவ் பண்றார்.. என் அரண்மனையில் உட்கார்ந்து கொண்டே என்னை வெளியே போகச் சொல்கிறார்.. உன் அப்பா என்கிறதுக்காக பொறுமையாய் வந்து விட்டேன்.. ஆதவனுக்கு மாடியில் கால் வைக்கும் தைரியத்தை நான் தந்ததில்லை.. இன்றைக்கு அவனை முன்னால் வைத்துக் கொண்டு உன் அப்பா ஆர்டர் போடுகிறார்.. இதெல்லாம் யாராலே.. உன்னாலே.. உன்மேல் நான் வைத்த ஆசையினாலே.. சும்மாவா சொன்னான் புத்தன்.. ஆசைதான் துன்பத்துக்கான அடிப்படைக் காரணம்ன்னு.. அந்த சித்தார்த்தன் சொன்னதை இந்த சித்தார்த்தன் தெரிந்துக்காம போயிட்டேண்டி..”
“ஐ லவ் யு சித்தார்த்தன்..”
மன்றாடினாள் ப்ரீதி.. அந்தக் குரலில் மனம் அசைந்ததோ என்னவோ.. ஓர் நொடி அவளைத் தின்று விடுவதைப் போல பார்த்து விட்டு மறுநொடியில் விரோதியைப் போல வெறித்துப் பார்த்து..
“போய் விடு..” என்று கர்ஜித்தான் அவன்..
“போகிறேன்.. உங்களை விட்டோ.. இந்த கானயவலை விட்டோ போக மாட்டேன்.. இந்த இடத்தை விட்டுப் போகிறேன்.. வால் பாறையின் சிரபுஞ்சின்னு நீங்க எனக்கு அடையாளம் காட்டிய சின்கோனா காட்டுக்குள் போகிறேன்.. மழையில் நனைந்து பனியில் விறைந்து அங்கேயே நான் செத்தாலும் சாவேனே தவிர.. நீங்கள் என் காதலை ஏற்றுக்கிட்டுக் கூப்பிட வராமல் காட்டை விட்டு வரமாட்டேன்.. உங்க அம்மாவும், பாட்டியும் உங்களை விட்டுப் போயிருக்கலாம்.. உங்க அப்பா இருந்தும் இல்லாதவரா ஆகியிருக்கலாம்.. நான் உங்களை விட்டுப் போக மாட்டேன்.. இருந்தும் இல்லாதவளா ஆக மாட்டேன்.. இது சத்தியம்..”
ப்ரீதி சித்தார்த்தனைத் திரும்பியும் பார்க்காமல் விடுவிடு எனப் படிகளில் இறங்கி போர்டிகோவுக்கு வந்தாள்.. சமையலுக்குத் தேவையான காய்கறி, மளிகைப் பொருள்களை வாங்க கார் குழலியை ஏற்றிக் கொண்டு கார் கிளம்பிக் கொண்டிருந்தது.. இவளும் அந்தக் காரில் ஏறிக் கொண்டாள்..
“அம்மாவிடம் சொல்லிட்டிங்களாம்மா..?”
முதல்நாள் நடந்த சண்டையை நினைத்துத் தயங்கியபடி கேட்ட வண்டாற்குழலியிடம் தலையை மட்டும் அசைத்து வைத்தவள் வழியில் காரை நிறுத்தி இறங்கிக் கொண்டாள்..
“நானும் துணைக்கு வர்றேம்மா..” இறங்கப் போன வண்டாற்குழலியை..
“நீ காலாகாலத்தில் காய் வாங்கிட்டுப் போனால்தானே சமைக்க முடியும்..? என்னுடன் காட்டைச் சுற்ற வந்து விட்டா சமையலை யார் கவனிக்கிறது..?” என்று தடுத்து விட்டு சரிவில் நடந்து விட்டாள்..
“சீக்கிரமா வண்டியை விடுய்யா.. இந்தம்மா காட்டுக்குள்ள போகிற சங்கதிய வீட்டில சொல்லனும்..” காய் வாங்காமல் வண்டாற்குழலி அரண்மனைக்குத் திரும்பி விட்டாள்..
தேயிலைச் செடிகளின் இடையே நடந்து கொண்டிருந்த ப்ரீதிக்கு அழுகை அழுகையாக வந்தது.. இந்த தேயிலைச் செடிகளை சித்தார்த்தன்தான் அவளுக்கு அறிமுகப் படுத்தினான்..
“இங்கிருக்கும் நிலப்பரப்பு.. தேயிலை வளர்வதற்கான நிலப்பரப்பு.. தேயிலைக்கு நீர் தேங்கக் கூடாது.. அதே சமயம் தொடர்ந்து நீர் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.. வால்பாறையில் எப்போதும் மழை பெய்து கொண்டே இருக்கும்..”
அவன் சொல்லச் சொல்ல அவளுக்கு கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்போல இருந்தது.. உலகம் சுற்றும் தொழிலதிபன்.. ஹைதராபாத்தில் கம்ப்யூட்டர் கம்பெனி நடத்துபவன்.. மும்பையில் ஷாப்பிங் மால் வைத்திருப்பவன்.. அந்தமலை பிரதேசத்தின் கானகத்தையும் அதில் விளையும் பயிர்களையும் நேசிக்கிறான்.. அவற்றைப் பற்றி அடி முதல் நுனி வரை அறிந்து வைத்திருக்கிறான்..
தேயிலைச் செடிகள் மரங்களைப் போல உயர்ந்து வளர்ந்திருந்தன.. அதனூடே நடந்தவளை மறைத்தன.. விட்டால் வானைத் தொடும் அளவிற்கு வளர்ந்து விடும் போல என்று ப்ரீதி சொன்ன போது..
“அதற்காகத்தான்.. ஆறு மாதத்திற்கு ஓர்முறை ‘கவாத்து’ன்னு சொல்லப்படற இலையின் முனையை ஒரே சீராக செதுக்கி விடும் வேலை நடக்கும்..” என்று குழந்தைக்குச் சொல்வதைப் போலச் சொன்னான்..
‘அந்த பிரியம் இப்போது எங்கே போய்விட்டது..?’
ப்ரீதியின் விழிகளில் வழிந்த கண்ணீர் மழைத் தாரைகளோடு தாரையாக கலந்து காணாமல் போனது.. அதுபோல சித்தார்த்தனின் மனதிலிருந்த பிரியமும் காணாமல் போய் விடுமோ என்று பயந்தாள் ப்ரீதி.. அப்படிப் போய் விட்டால் அவள் பிழைத்திருப்பதில் அர்த்தம் ஏதுமில்லை.. அவளது வாழ்வின் அர்த்தம் அவன்தான்.. அவன் மட்டும்தான்..
கானகத்தின் அடர் இருள் அவளை உள்வாங்கியதைப் போல உணர்ந்தாள்.. மீட்டு ஒளி கொடுக்கும் ரட்சகனாய் அவன் வருவானா..? பெரிய மரமொன்றில் சாய்ந்து சரிந்தவளின் மீது மரத்தின் இலைகளில் தேங்கியிருந்த மழைநீர் கொட்டிக் கொண்டே இருந்தது.. வானில் மின்னல் வெட்ட.. தூரத்தில் இடி முழக்கம்.. சுழன்றடிக்கும் பெருங்காற்று.. அடர்ந்த கானகத்தின் இருளில் தன்னை மூழ்கடித்துக் கொண்டு காற்றில் கரைந்து கீதம் பாடி அவனைத் தேடும் பாடலுடன் அவள்..
“எங்கெங்கும் இன்பம் அது
கோலம் போட..
என்னுள்ளே ஒரு வீணை
ராகம் தேட..
அன்புள்ள நெஞ்சைக் காணாதோ..
ஆனந்த ராகம் பாடாதோ..”
அவளுள் பொங்கியெழுந்த ஏக்கம் பாடலில் ஒலிக்க.. ‘திக், திக்’ என அடித்துக் கொள்ளும் இதயத்துடன் தீனமாகப் பாடினாள் ப்ரீதி.. அவன் வருவானா என்று நெஞ்சம் பதறிக் கொண்டே இருந்தது..
“கண்கள் எங்கும்.. நெஞ்சின் பாவம்..
மேலும் ஏற்றும்..
காற்றில்.. எந்தன் கீதம்..
காணாத ஒன்றைத் தேடுதே..”
சின்கோனாவின் குளிர்மழை ஆளை உறையச் செய்வது.. பனியும், மழையும் சேர்ந்து பொழிந்தால் மனித உடல் தாங்குமா..? அதிலும் ப்ரீதி அந்தப் பிரதேசத்தின் தட்ப வெப்பநிலைக்குப் பழக்கப்படாதவள்.. பூனாவில் பிறந்து வளர்ந்தவள்.. அவளால் வால் பாறையின் குளிரையே தாங்க முடியாது.. சின்கோனாவின் குளிர் மழையை எப்படித் தாங்குவாள்..?
ஸ்வெட்டரையும் மீறித் தாக்கிய குளிர் அவளைச் சுருளச் செய்தது.. ப்ரீதி மரத்தின் வேரில் சுருண்டு முடங்கினாள்.. தாங்க முடியாத குளிர் அவளைத் தாக்கியது.. மனம் பலவீனமானது.. பயம் அதிகரித்தது.. எது நடந்தாலும் அந்த இடத்திலேயே மடிய வேண்டும்.. எக்காரணம் கொண்டும் அரண்மனைக்குத் திரும்பி விடக் கூடாது என்ற அசைக்க முடியாத வைராக்கியம் மட்டும் அவள் மனதில் வேரூன்றியிருந்தது..
“நில்லென்று சொன்னால் மனம்
நின்றால் போதும்..
நீங்காத நெஞ்சில் அலை
ஓய்ந்தால் போதும்..”
கட்டுக்கடங்காத குதிரைக்கு கடிவாளமிட்டு விட முடியுமா..? நில் என்று அவள் சொன்னால் மனம் நின்று விடுமா..? சித்தார்த்தன் வேண்டும் என அவளது உடலும் மனமும் தேடித் தவித்ததை சொல்லில் வடித்து விடத்தான் முடியுமா..?
“மௌனத்தின் ராகம் கேளாதே..
மௌனத்தில் தாளம் போடாதோ..
வாழும்.. காலம்.. யாவும்.. இங்கே..
நெஞ்சம் தேடும்..
காற்றில்.. எந்தன் கீதம்..
காணாத ஒன்றைத் தேடுதே..”
தேடுதலுடன் விழி மூடினாள் ப்ரீதி.. அவ்வளவுதான்.. இனி முடியாது என்று இமைமூடி ஆழ்ந்த மயக்கத்துக்குள் அவள் போய்க் கொண்டிருந்த போது அவளது இடைபற்றி தூக்கியது வலிமையான கரமொன்று.. அனிச்சையாகத் திமிறி கண்விழித்தாள்..
“விடு.. விடு.. என்னை..”
“விடமுடியாதுடி..”
குனிந்து அவளது இதழோடு இதழ் பதித்து முரட்டு முத்தமிட்டவனை உணர்ந்து கொண்ட ப்ரீதி.. அழுகையும் விம்மலுமாக அவனது முடிபற்றி உலுக்கினாள்..
“ராஸ்கல்..! ‘போ’ ன்னு சொல்லிட்டு.. ஏண்டா தேடி வந்த..?”
சித்தார்த்தனின் முகம் விகசித்தது.. அவளது கோபத்தை மிகவும் ரசித்து உரத்த குரலில் சிரித்தான்..
“வராமல் எப்படிடீ இருக்க முடியும்..?”
“நான் வேண்டாம்ன்னு சொன்னவன்தானேடா நீ..?”
“நான் வேண்டும்ன்னு கேட்டவதானேடி நீ..?”
“அதுக்கு..?”
“என்னை உனக்குக் கொடுக்கத்தான் வந்திருக்கிறேன்.. எடுத்துக்க..”
கொட்டும் மழையில் அவளை ஆரத்தழுவி தன்னை அவன் ஒப்புக் கொடுத்த அந்தப் பொழுதில்.. காரிருள் குவிந்திருந்த ஆரண்யம் அவளை அச்சுறுத்தவில்லை.. நீண்ட கோடாய் வானில் வெட்டிய மின்னல் அவளை விழி மூடச் செய்யவில்லை.. தூரத்து இடிமுழக்கம் அவளது உடலை நடுங்க வைக்கவில்லை..
அனைத்தையும் சாட்சியாக வைத்து அவனை தழுவிக் கொண்டாள் ப்ரீதி.. ஆவேசமான அவளது ஆலிங்கனம் அவனைப் பிய்த்துத் தின்றது.. சந்தோசமாக அவளது பிரியத்துக்கு உணவானான் சித்தார்த்தன்.. ஆசை துன்பத்துக்கு மட்டும் காரணமாகாது.. இன்பத்துக்கும் வழி வகுக்கும் என்று போதிமரம் காணாத அந்த புத்தன் தனக்குள் சொல்லிக் கொண்டான்..
Reviews – aaranyam azhakanathu / ஆரண்யம் அழகானது
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.