Chapter 04

0Shares

கௌசல்யா உடல் வியர்த்துப் போனவளாக.. சட்டென்று எழுந்து படுக்கையில் அமர்ந்தாள்.. அவளால்.. அவளது  நினைவையே நம்ப முடியவில்லை..

‘எப்படி இது சாத்தியம்..? அவன் யாரோ.. நான் யாரோ..அவனைப் போய் நான் இந்த நேரத்தில் ஏன் நினைக்கிறேன்..?’

கேள்வி.. கேள்வியாக இருக்க.. மனதில் புகை போல.. அவனது குறும்பு முகம் தோன்றியது..

‘எல்லோரும் தூங்கும் போது.. நீங்கள் மட்டும் தூங்காமல் என் முகத்தை நினைக்கலாம் …’

எப்படி.. இவ்வளவு சர்வ நிச்சயமாக இதை அவன் கூறினான்..? கௌசல்யா சுற்றும் முற்றும் பார்த்தாள்.. பக்கத்தில் வைதேகி அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள்.. எள் விழுந்தாலும் சத்தம் கேட்கும் இரவின் அமைதி வீடெங்கும் நிறைந்திருந்தது..

வீடே உறங்கிக் கொண்டிருந்தது.. அவள் மட்டும் உறங்காமல்.. உறங்க முடியாமல்.. அவன் முகத்தை நினைக்காமலிருக்க போராடிக் கொண்டிருந்தான்..

வெளியாள்களை வென்று விடலாம்..?உள் மனதை எப்படி வெல்வது? சில நாள்களுக்கு முன் வரை அவன் முகத்தை அவள் அறிந்ததில்லை.. முதல் நாள் வரை அவன் முகவரியை அவள் அறிந்ததில்லை.. இன்றைக்கு அவனை நினைத்து.. அவள் உறக்கத்தைத் தொலைத்தாளென்றால்.. இந்தக் கதையை யாரிடம் போய் அவள் சொல்வது..?

 ‘ஒரு நாளுக்குள் எத்தனை கனவு..?

  உன் பார்வையில் விழுகிற போது..

  தொடுவானத்தை தொடுகின்ற உணர்வு…’

அவள் மனதில் மெல்லிய பாடல் ஒலித்தது.. ஏனென்று அவளுக்குப் தெரியவில்லை.. அவள் மனதில் அவன் முகம் நிறைய.. துரத்த முடியாமல்.. கடைசியில் துரத்த மனமில்லாமல் தோற்றுப் போய் கண் மூடினாள்..

விழிகளுக்குள்.. விழி சிமிட்டி அவன் நின்றான்..

அவனது அந்தப்  பார்வையை நினைத்தபோது கன்னம் சிவக்க.. உடல் !! சூடேற.. அந்த நினைவுகளின் இதத்தோடு கண்ணுறங்கி விட்டாள் கௌசல்யா..

மறுநாள் காலையில்.. குளித்து விட்டு.. ஈரத்துணிகளை உலர்த்த மொட்டை மாடிக்கு அவள் போனபோது.. அவளையறியாமலே.. அடுத்த வீட்டு மாடியில் அவன் முகம் தென்படுகிறதா என்று அவளது கண்கள் தேடின..

அவன் அவளது கண்களை ஏமாற்றவில்லை.. எதிரே வந்து நின்றான்.. அவன் பார்வையில்.. அவளது பார்வையை எதிர்பார்த்த சிரிப்புத் தெரிய.. கௌசல்யா சட்டென்று.. உலர்த்திக் கொண்டிருந்த துணியின் மறைவில் ஒதுங்கிக் கொண்டாள்…

 ‘கண்டு பிடித்து விட்டான்..’

அவளது தேடலை அவன் கண்டு கொண்டு விட்டதை உணர்ந்த வெட்க உணர்வு அவளுக்குள் எழ.. அவள் முகத்தை கடுமையாக வைத்துக் கொள்ள முயன்றபடி.. அவன் பக்கம் பார்க்காமல்.. மீதமிருந்த ஈரத்துணிகளை உலர்த்த முற்பட்டாள்..

‘குட் மார்னிங்..”

அவன் மொட்டை மாடியின் கைப்பிடிச் சுவரருகே வந்து சொல்ல.. அவள் உடல் தூக்கிப்போட சுற்றும் முற்றும் பார்த்தாள்..

 ‘நல்ல வேளை.. யாரும் பார்க்கவில்லலை..’

சுவரோடு .. சுவர் ஒட்ட.. இடைவெளியில்லாமல் கட்டப்பட்ட வீடுகளில் மொட்டை மாடிக்கு குறுக்கே எல்லைக்கோடு போல.. தடுப்புச் சுவர் மட்டுமே இருக்கும்… ஒரு வீட்டின் மொட்டை மாடியிலிருந்து.. கடைசி வீட்டின் மொட்டை மாடி வரை தடையில்லாமல் நடை பயணம் போய் வரலாம்..

அப்படிப்பட்ட வீடுகளில்.. சக்திவேல்.. அடுத்த வீட்டில் குடியிருப்பவனாக இருந்து வைத்தால்.. கௌசல்யாவால் எப்படி அவனைச் சந்திக்காமல் தப்பிக்க முடியும்..?

அவள் பெரும்பாலான நேரங்களை மொட்டை மாடியில் கழிப்பவள்.. காலை நேரத்தில் நடந்து கொடுக்க.. ஈரத்துணி உலர்த்த.. ஆண்டாள் செய்து கொடுக்கும்.. வடாம்.. வத்தல்களை காய வைக்க.. காற்றோட்டமில்லாத வீட்டில்.. மதிய உணவிற்குப் பின் புத்தகம் படிக்க.. மாலை நேரத்தில் வைதேகியுடனும்.. மற்ற தோழிகளோடும் அரட்டை அடிக்க.. இரவு நேரத்தில் காற்று வாங்க.. தனிமை தேவைப்படும் போது தனித்திருக்க.. என்று.. மொட்டை மாடி.. அவளது வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாகி விட்டிருந்த போது.. அடுத்த வீட்டுக்காரனும் மொட்டை மாடிக்கு வருகிறானென்று.. மொட்டை மாடியைப் பிரிய அவளால் முடியுமா..?

‘குட்மார்னிங் சொன்னால்.. பதிலுக்கு குட்மார்னிங் சொல்லனும்.. அதுதான் நல்ல பழக்கம்…”

‘எனக்குப் அந்த பழக்கமெல்லாம் கிடையாது..”

‘என்னங்க இது..? ராமாமிர்தம் சார்.. நல்லவர்.. வல்லவர்.. நாலும் தெரிந்தவர்ன்னு இந்தத் தெருவில் பேசிக்கிறாங்க.. பெற்ற பெண்ணுக்கு இந்த நல்ல பழக்கத்தைக் கூட அவர் கத்துக் கொடுக்கலையா..?”

அவன் விடாமல் அவளை வம்புக்கு இழுக்க.. அவளுக்கு அந்த வம்புக்காரனை பிடித்துத் தொலைத்தது..

‘எங்கப்பா.. எனக்கு நல்ல பழக்கத்தைத் தான் கத்துக் கொடுத்திருக்கிறார்..”

‘அப்புறம் எதுக்கு பதில் குட்மார்னிங் சொல்ல மாட்டேங்கறிங்க..?”

‘அது நல்ல வழக்கமா..?”

‘பின்னே இல்லையா..?”

‘அறியாதவர்களைப் பார்த்து குட்மார்னிங் சொல்கிறது நல்ல பழக்கமில்லை…”

‘நான் அறியாதவனா..?”

‘பின்னே இல்லையா..?”

அவள்.. அவன் கேட்ட கேள்வியையே திருப்பி அடிக்க.. அவன்  விழிகள் மின்னின..

‘ஊ’Pம்..? இந்த அறியாதவனை நினைத்துத்தான் நீங்க ராத்தூக்கத்தைத் தொலைத்தீங்களா…?”

அவனது  இயல்பான ஊடுறுவும் பார்வையை அவள் மேல் வீசியபடி.. அவன் அமர்த்தலான குரலில் வினவ.. அவள் உடலில் கண நேரத்துக்கு.. அகப்பட்டுக் கொண்ட அதிர்வு தோன்றி மறைந்தது..

அதே.. கணப்பொழுதில்.. அவன் அதை கண்டு கொண்டு விட்டான்..

‘உளராதீங்க” கௌசல்யா அவசரமாகக் கூறினாள்..

‘யார் உளருவதாம்..? நானா..? உண்மையைச் சொன்னால் அது உளரலா..?”

‘உளரல்தான்.. வேறு என்ன..? நீங்க யாரோ.. எவரோ.. உங்களை நினைத்த நான் தூக்கத்தைத் தொலைக்கிறேனா..?”

‘வெறும் தூக்கமில்லை.. ராத்தூக்கம்..”

‘ அதென்ன ராத்தூக்கம்..?’  கௌசல்யாவிற்குப் புரியவில்லை.. அவன் விழிகளில் அதை உணர்த்தும் செய்தி தெரிய.. மனம் குறுகுறுக்க .. அதைப் பற்றிக் கேட்காமல் வேறு பேசினாள்..

‘எனக்கு அதெல்லாம் தெரியாது..”

‘எத்தனை நாள்தான் அதையெல்லாம் தெரிஞ்சுக்காம இருப்பீங்க..?” மீண்டும் அவன் விழிகள்; சிரிக்க.. அவள் மனம் பொங்கியது.. அடக்க பெரும் பிரயத்தனப் பட்டாள்..

  ‘கங்கை வெள்ளம்.. சங்குக்குள்ளே

    அடங்கி விடாது…

மங்கை உள்ளம் பொங்கும் போது

    விலங்குகள் ஏது..?’

இதைப் பாடிய கவிஞனுக்கு பெண் மனதைப் பற்றி எப்படித் தெரிந்தது என்ற வினா அவளது நெஞ்சில் எழுந்தது..

‘எதையும் தெரிஞ்சுக்கனும்னு எனக்கு அவசியமில்லை சார்..”

‘இத்தனை நாளாய் அப்படியிருக்கலாம்.. இனியும் அப்படியிருக்க உங்களால் முடியுமா..?”

‘இனியும்ன்னா.. இப்போ என்ன நடந்து விட்டது..?”

‘ஆயிரம்தான் சொல்லுங்க.. மனசை மறைச்சுப் பேசறதில் பெண்களுக்கு நிகர் பெண்கள்தான்..”

‘ஆண்கள் எதை மறைக்காமல் பேசுவீங்க…?”

‘நாங்க மனசை மறைத்ததில்லைங்க….”

‘நாங்க மட்டும் மறைத்தோமா..?”

இதைச் சொல்லும் போது.. அவள் மனம்  ‘நீ மறைக்கவில்லையா..?’  என்று கேள்வி கேட்க.. கௌசல்யா அவனது நேர் கொண்ட பார்வையை எதிர் கொள்ள முடியாமல் தவிர்த்தாள்..

அவன் சிரித்தான்.. அவள் ரோசத்துடன் நிமிர்ந்தாள்..

‘எதுக்கு இப்ப சிரிச்சீங்க..?”

‘இல்லை.. மனசுக்குப் பிடிச்சவங்க பொய் சொன்னாலும்.. அந்தப் பொய்யைக் கேட்பதிலேயும் ஒரு சுகமிருக்கு..”

 ‘நீ சொல்வது பொய் என்கிறான்..’

கௌசல்யாவிற்கு  அதற்கு மேலும் அங்கே நிற்க முடியவில்லை.. அவள் கீழே ஓடிவிட்டாள்..

அவள் கால்களில் அணிந்திருந்த கொலுசின் ஒலி.. தேய்ந்து மறையும் வரை.. அசையாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தான் அவன்..

வேகமாய் ஓடி வந்த கௌசல்யாவை கண்டதும்.. வியப்பில் விழி விரித்தாள் வைதேகி..

‘இது நீயாடி கௌசி.. நோக்கு இப்படி வேகமா ஓடி வரக்கூடத் தெரியுமுன்னு இன்னைக்குத்  தாண்டி எனக்குத் தெரிஞ்சது.. அம்மா இங்கே வாயேன். உன் சின்னப் பொண் .. என்னமா ஓடி வர்றான்னு வந்து பாரேன்..”

அவசரமாக வைதேகியின் வாயை இறுக்கி மூடினாள் கௌசல்யா.

‘ஏண்டி பிசாசே ஊரைக் கூட்டற..?”

‘முதல்ல கையை எடுடி.. மூச்சு முட்டறது.. நான் ஊரையா கூட்டினேன்..? அம்மாவையில்ல கூப்பிட்டேன்..”

‘ரெண்டும் ஒன்னுதான்..”

இப்படிச் சொன்ன கௌசல்யாவை அதிசயமாக பார்த்தாள் வைதேகி.. அவளது ஆச்சரியம் அதிகரித்தது..

ஆண்டாளின் செல்லப் பெண் கௌசல்யா.. அவளாவது.. ஆண்டாளையும்.. ஊரையும்.. இணைகூட்டிப் பேசுவதாவது..?

தன் காதுகளை நம்ப முடியாமல் இமை கொட்டி.. தங்கையைப் பார்த்தாள் வைதேகி..

‘நீயாடி.. இதைப் பேசின..?”

‘நான் பேசாம.. வேறு யார் வந்து பேசினதாம்..” யட்சிணி வந்து பேசிச்சா..?”

‘எனக்கென்னமோ.. அப்படித்தான் தோணறது..”

‘எப்படித் தோணறது..?”

‘உன் உடம்பில் யட்சிணிதான் புகுந்துட்டாப்புல எனக்குத் தோணறது… நீ.. நீயாய் இல்லைடி கௌசி..”

வைதேகி சரியாகச் சொல்லி விட்டாள்.. கௌசல்யா.. கௌசல்யாவாக இல்லை வேறாக மாறிப் போனாள்..

‘உன் முகவடிவை அறிந்த பின்னால்..

என் முகவரியை மறந்து போனேன் 

உன் கால் தடத்தில் என் கால் பதித்து..

உன்னைப் பின்பற்றக் கனவு கண்டேன்..’

முதன் முதலாக கௌசல்யா.. தன் டைரியில் கவிதை எழுதினாள்.. தினசரி நிகழ்வுகளுக்குப் பதில்.. தினம் ஒரு கவிதை அவளது டைரியில் பதிந்தது..

‘நீ சிந்தி விட்டுப போன

சிரிப்பினையே….         

 சேகரிக்கத் துடிக்கிறது

என் இதயம்…’

‘ஏண்டி..  கௌசி.. யாரையாச்சும்.. காதலித்து வைக்கிறயா..?”

‘சேச்சே..” அவசரமாக மறுத்தாள் கௌசல்யா..

‘அப்புறம் ஏண்டி.. இப்படி அச்சுப் பிச்சுன்னு எழுதி வச்சிருக்க..?”

 ‘அழகான அந்தக் கவிதைகள் அச்சுப் பிச்சா..?’ 

காதலை உணராதவள் சொல்லிவிட்டுப் போக.. காதலை உணர்ந்த கௌசல்யா பெருமூச்சு விட்டாள்..

சக்திவேல்.. மொட்டை மாடியில் குறுக்கும். நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான்.. அவன் கண்கள் பக்கத்து வீட்டு மொட்டை மாடியின் மீது பதிந்திருந்தது..

 ‘இன்னும் கீழே என்ன செய்கிறா..? ‘ அவனுக்கு எரிச்சல் வந்தது..

கொலுசுச் சத்தம் கேட்கவும்.. ஆவலாக திரும்பிப் பார்த்தான். 

வைதேகி வந்துக் கொண்டிருந்தாள்.. அவன் முகத்தில் ஏமாற்றம் கவிழ்ந்தது.. வந்தவள் அவளை கடைக் கண்ணால் பார்க்க.. அவன் சங்கடமடைந்தான்..

‘கீழே போய் விடலாமா..?’ என்ற யோசனையுடன் திரும்பிய போது.. “என்னப்பா சக்திவேல் மொட்டை மாடியிலேயே வாக்கிங்கா..?” என்ற குரல் கேட்டது..

‘செந்தில் வந்து விட்டான்.. “

வைதேகியுடன் தனியாக நிற்க வேண்டிய நெருக்கடி அகன்றதில் நிம்மதியடைந்தான் சக்திவேல்.

‘வேற எங்கே வாக்கிங் போறது?”

‘ஏன் பொடி நடையாய் மருதமலைக்கு போயிட்டு வர்றது..?”

‘நடக்கிற கதையைப் பேசப்பா..”

‘அப்போ.. மலையடிவாரத்தில் விஷ்ணு துர்;ககையம்மன் ;கோவில் இருக்கு.. அங்கே போயிட்டு வர்றது..”

‘நீயேன்.. என்னை கோவில்.. கோவிலாய் துரத்தப் பார்க்கிற..,”

‘உனக்குப் புண்ணியம் கிடைக்கட்டு மேன்னுதான்..”

‘இருக்கிற புண்ணியம் போதும்.. நீயென்ன.. புதுசாய் மாடிப்பக்கம் வந்திருக்கிற..? காற்று வாங்க வந்தியா..?”

‘ஊம்.. ஒரு கவிதை வாங்க வந்தேன்..”

செந்திலின் பார்வை வைதேகியின் பக்கம் தாவ.. அவள்.. அவனை கண்டு கொள்ளாமல்.. உலர்ந்து விட்டிருந்த துணிகளை மடிக்க ஆரம்பித்தாள்.. செந்திலுடன் பேசிக் கொண்டிருந்த சக்திவேலின் காது கூர்மையானது.. அவனுக்கு பழக்கமான கௌசியின் கொபுசொலி கேட்க.. அவன் ஆவலுடன் திரும்பிப் பார்த்தான்…

இப்போது அவனை ஏமாற்றாமல் கௌசல்யா வந்து நின்றாள்… ‘என்ன மச்சி.. முகத்தில் பல்ப் எரியுது.. காதலா..? ” செந்தில் கிசுகிசுப்பாக வினவினான்..

‘சேச்சே..” சக்திவேல் மறுத்தான்..

‘இதை நான் நம்பணுமாக்கும்..?”

‘நம்பறதும் நம்பாததும் உன் இஷ்டம்..”

சக்திவேல்… செந்திலிடம் பேசியபடி கௌசல்யாவைப் பார்க்க அவள் வைதேகியுடன் பேசியபடியே சக்திவேலைப் பார்த்தாள்.. 

ரகசியப் பார்வைகள் சந்தித்துச் சந்தித்துப் பிரிந்தன.. அவர்களின் பார்வையை உணர்ந்த செந்தில் பொறாமையுடன் வயிறெரிந்தான்..

0Shares

Reviews – Aarathanai / ஆராதனை

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link