Chapter 11
‘என்ன மாப்பிள்ளை..?” குரல் நடுங்க கேட்டார் ராமாமிர்தம்..
‘கொஞ்ச நேரத்துக்கு முன்னால உங்க மக வேலை பார்க்க ஆத்தை விட்டு வெளியே போகக் கூடாதுன்னு நீங்க சொன்னதாக நினைவு…”
அவன் கண்கள் இடுங்க.. அவரை நோக்கினான்.. கௌசல்யா மனம் நடுங்க ராமாமிர்தத்தைப் பார்த்தாள்..
‘அது கோபத்தில் சொன்ன வார்த்தை மாப்பிள்ளை..”
‘அப்படியா..? கோபம் வந்தால் ஒரு பேச்சு.. கோபம் போய் விட்டால் வேற பேச்சுன்னு.. மாற்றி மாற்றிப் பேசற ஆளா நீங்க? உங்க பேச்சை எந்தக் கணக்கில் எடுத்துக் கொள்கிறது?”
‘அப்படியில்ல மாப்பிள்ளை.. கொசுவுக்கு பயந்து கோட்டையை காலி செய்யலாமா..?”
‘புரியலை…”
‘கௌசல்யா பார்த்துக்கிட்டு இருக்கற வேலை நல்ல வேலை மாப்பிள்ளை.. அதை விட்டால் திரும்பவும் கிடைக்காது..”
‘அதனால..?”
‘அந்தப் தடியனை ஊரை விட்டு ஓட்ட நானாச்சு.. நீங்க அதைப் பத்தியே யோசிக்காதீங்க..”
‘வேலைக்குப் போகிறேன்னு போகிற பொண்ணு.. வீட்டுக்கு திரும்பி வராமல்.. அவன் கூட கம்பியை நீட்டிவிட்டால் என்ன செய்வீங்க..?”
கோபத்தில் அவன் போட்டுக் கொண்டிருந்த வேடம் கொஞ்சமாகக் கலைய.. மனதிற்குள் சந்தோசப்பட்டாள் கௌசல்யா..
‘இப்பாவாவது.. இவன் புத்தி என்னன்னு அப்பாவுக்கு தெரியாதா..?’
ராமாமிர்தத்திற்கும் அந்த யோசனை வர.. அவர் புருவத்தை உயர்த்தினார்.. அதற்குள் மனோஜ் சுதாரித்துக் கொண்டான்..
‘நம்மாத்துப் பொண்ணு நல்லவள்தான் மாமா.. ஆனா.. அந்த தடிப்பயல் இவ மனசைக் கலைத்து விடுவானே.. நான் அதைத்தான் யோசிக்கிறேன்..”
‘இவன் சமாளிப்பதில் வல்லவன்..’ கௌசல்யா மனம் நொந்தாள்..
வுpனாடிக்கு ஒரு வேடம் புனைகிற இவனுடன்.. மனதிலிருப்பதை அப்பயே பேசி விடும் வைதேகி எப்படித்தான் வாழ்க்கை நடத்தப் போகிறாளோ.. என்று கௌசல்யாவின் அடிவயிறு கலங்கியது..
அவன் கெட்டிக்காரனாக இருந்தான்.. எதிராளியின் மனதை படிப்பவனாக இருந்தான்.. சூழ்நிலை எவ்வளவு எதிராக திரும்பினாலும்.. கணப் பொழுதில் அதை தனக்குச் சாதகமாக மாற்றி விடுகிற வித்தை தெரிந்தவனாக இருந்தான்.
இவ்வளவு இருந்தும்.. ஏன் இவன் நல்லவனாக இல்லாமல் போனான்.. என்று மனம் வருந்தினாள் கௌசல்யா..
‘எங்காத்துப் பொண்ணு அப்படிப்பட்டவ இல்லை மாப்பிள்ளை..”
‘அதைத்தான் நான் பார்க்கில் பார்த்தேனே..”
இந்த வார்த்தைகளை ஏளனமாக மனோஜ் சொல்லிய விதத்தில்.. ராமாமிர்தம் புண்பட்டுப் போய் விட்டார்..
அவரது கண்களில் அந்த ரண வேதனையை உணர்ந்த கௌசல்யா.. குற்ற உணர்வில் மனம் கனத்தாள்..
‘என்னால்தானே அப்பாவுக்கு இந்த நிலைமை..?’
‘போன கதையை இனிப் பேசிப் புண்ணிமில்லை மாப்பிள்ளை.. இன் நடக்கப் போகிறதைப் பேசுவோம்..”
‘பேசுங்க..”
‘என் மகள்.. இனி என் பேச்சை மீற மாட்டாள்..”
‘ஒரு வேளை மீறிட்டாள்ன்னா..?”
‘அந்த நொடியே.. நான் என்னை மாய்ச்சுக்குவேன்..”
ராமாமிர்தத்தின் வார்த்தைகள் உறுதியுடன் வெளிப்பட அடுத்த நொடியில்
‘அப்பா’?” என்று அலறினாள் கௌசல்யா..
‘இவளுக்கு நான் அப்பாங்கிறது உண்மையா இருந்தால்.. இவ என்னுடைய மகள்ங்கிறது உண்மையாக இருந்தால்.. என் பேச்சைக் கேட்பாள்.. மீற மாட்டாள்..”
ராமாமிர்தம் பேசப் பேச.. மனோஜின் கண்கள் வெற்றிக் குறியுடன் மின்னின..
‘அப்போ .. உங்க பேச்சை நம்பி.. நான் கல்யாண வேலைகளில் இறங்கலாமுன்னு சொல்றீங்க..” அவன் கொக்கி போட்டான்..
‘ஆமாம் மாப்பிள்ளை..”
‘நீங்க சொன்ன வார்த்தையைக் காப்பாற்றுவீங்க.. வார்த்தை தவற மாட்டீங்க.. என்கிற நம்பிக்கையில் நான் போகிறேன்..” அவன் எழுந்து கொண்டான்..
ஆவனை வாசல் வரை சென்று வழியனுப்ப.. ராமாமிர்தம் போய்விட.. கௌசலயா.. விசும்பியபடி உள்ளே ஓடினாள்.. வழியில் நின்று கொண்டிருந்த ஆண்டாளை ஏறெடுத்தும் பார்க்காமல் கட்டிலில் விழுந்து கதற ஆரம்பித்தாள்..
அறைக் கதவை மூடிவிட்டு.. ஆண்டாள் வெளியேறி விட.. அழுது.. அழுது ஓய்ந்தவளாய் கௌசல்யா சுருண்டு படுத்திருந்தாள்..
ஆண்டாள் உள்ளே வந்தாள்.. அவள் முகத்தைப் பார்க்காமல் சுவரைப் பார்த்து.. யாரிடமோ சொல்வதைப் போலச் சொன்னாள்..
‘அப்பா கூப்பிடறார்..”
கௌசல்யா எழுந்து சென்றாள்.. ராமாமிர்தம் அவளை தீர்க்கமாகப் பார்த்தார்..
‘மாப்பிள்ளையிடம் நான் பேசினது உன் காதில் விழுந்திருக்கும்..”
கௌசல்யா பேவில்லை.. உயிரற்ற பார்வையை பார்த்தபடி அசையாமல் நின்றாள்..
‘நாளைக்கு கார்த்தாலேயே..அவனிடம் பேசி விடு..”
‘நானா..?’ அவளது விழிகள் வினவின..
‘நீதான் பேசனும்.. வினையை விதைத்தவாதான் வினையை அறுக்கனும்.. அதோட நீ பேசினாத்தான் அவன் கேட்பான்..”
‘என்னை வைத்தே அவரை விரட்டப் பார்க்கிறேளா?’
‘நான் பேசினா கலவரம் வரும்.. நாலு மனுசா பஞ்சாயத்து பண்ண வருவா.. அவாளுக்கு உண்மை தெரிஞ்சா.. இந்த ஊருக்கே தெரிஞ்சுடும்.. அது வேணாம்ன்னு பார்க்கிறேன்..”
‘நீங்க அவனை வேணாம்ன்னு பார்க்கிறேள்..’
கௌசல்யா சொன்னாள்.. உணர்ச்சியற்ற குரலில்.. உயிரற்ற பார்வையுடன்.. சாவி கொடுக்கப்பட்ட பொம்மை போல.. ராமாமிர்தம் கூறியதை சக்திவேலிடம் ஒப்பித்தாள்..
அவன் முகம் மாறினான்.. அதிர்ந்தான்..
‘கௌசி..?”
‘நான் கௌசல்யா..”
‘அது எனக்கும் தெரியும்டி..”
‘வாடி.. போடின்னு கூப்பிடாதேள்..”
‘ஏன்..?”
‘இனி நான் யாரோ.. நீங்க யாரோ..”
அவன் சாட்டையடி பட்டவனாக அவளையே இமைக்காமல் பார்த்தான்..
கொன்று தின்ற அந்தப் பார்வையைத் தாங்க முடியாதவளாய் குற்றுயிராய் அவள் மனம் துடித்தாள்..
‘இது நீதானா கௌசி?”
‘இது ராமாமிர்தத்தின் மகள் கௌசல்யா..”
‘புரியலை..”
‘நீங்க எங்க பக்கத்தாத்தை காலி பண்ணனும்.. வேலையில டிரான்ஸ்பர் வாங்கிக்கனும்.. இந்த ஊரை விட்டுப் போயிடனும்..”
‘இதை நீ சொல்றியா..?”
‘ம்ம்.. நான் இதை உங்ககிட்டச் சொல்லனும்.. அப்படிச் சொன்னால்தான்.. நான் எங்கப்பாவுக்கு மகளாவேனாம்.. அவரும் எனக்கு அப்பாவாக ஆவாராம்..”
‘கௌசி..”
‘இனி என் வாழ்க்கையில் நீங்க வரவே கூடாது..”
‘இதையும் உன் அப்பா சொல்லச் சொன்னாரா..?”
அவன் நிதானமாக கேட்டான்.. அவளது பார்வையில் கத்திக் குத்துப் பட்ட பறவையின் வேதனை தெரிய வேதனையுடன் கண் மூடி நின்றான்..
‘இதை நான் சொல்லலைன்னா.. அவருக்கு நான் மகளில்லையாம்.. அவரை மீறி உங்க பின்னால் வந்தால்.. அவர் உயிர் அவருக்கு சொந்தமில்லையாம்..”
கௌசல்யா வேதனையுடன் பேசினாள்.. சக்திவேலுக்கு அவளது நிலைமை புரிந்தது.. ராமாமிர்தம் கெட்டிக்காரராக செயல் பட்டிருநதார்.. யார் சொன்னால் அவன் கேள்வியே கேட்காமல் கீழ் படிவான் என்று தெளிவாக அவர் எடை போட்டிருந்தார்..
சக்திவேல் முரட்டுக் காளை.. அவனை நெருங்குவது சுலபமல்ல.. வீட்டை காலி பண்ணச் சொன்னால் ‘முடியாது’ என்று முறைப்பான்
பெண்ணைத் தர முடியாது என்று சொன்னால்.. வீடு புகுந்து.. அவளைத் தூக்கிக் கொண்டு போய் தாலியைக் கட்டுவான்..
அதனால் .. கத்தியின்றி.. ரத்தமின்றி.. யுத்தம் புரிய அவர் கௌசல்யாவை தேர்ந்தெடுத்து அனுப்பி விட்டார்..
‘முள்ளை .. முள்ளால் எடுப்பது என்பது இதுதான் போல…’ அவன் வெறுமையாகப் புன்னகைத்தான்..
‘கடைசி முடிவா நீ என்னதாண்டி சொல்கிற..?”
‘நான் ஆத்துப் படியைத் தாண்டினா.. அப்பா உயிரை விட்டு விடுவாராம்… “
‘உன்னைப் பிரிஞ்சா.. நான் உயிரை விட்டு விடுவேண்டி..”
‘மாட்டீங்க..”
‘அதெப்படி.. அத்தனை உறுதியாய் சொல்கிற…?”
‘நீங்க இந்த லோகத்தில் இருக்கிற வரைக்கும் தான் நானும் இந்த லோகத்தில் இருப்பேன்.. நீங்க போயிட்டா.. பின்னாடியே வந்து விடுவேன்..
‘கௌசி..”
‘நாம பிரியத்தான் போகிறோம்.. மறக்கப் போகிறதில்லை.. என் சுவாசம் நீங்க தான்.. என் மனசெல்லாம் நீங்கதான்.. இந்த உடம்பு ஒன்று சேர்ந்தால்தான் நாம காதலில் ஜெயிச்சுட்டதா அர்த்தமாகுமா..? நம்ம மனசு ஒன்று சேர்ந்தாச்சு.. அதைப் பிரிக்க யாராலும் முடியாது.. நாம காதலில் ஜெயிச்சுட்டோம்.. நீங்க கிளம்பிப் போங்க..”
சக்திவேல் அவளையே பார்த்துக் கொண்டு நின்றான்.. அவனது அந்த ஊடுறுவும் பார்வையை எதிர் கொள்ள முடியாமல் எப்போதும் நாணித் தலை குனியும் கௌசல்யா.. அன்று அந்தப் பார்வையை அள்ளிப் பருகுவதைப் போல ஆவலுடன் எதிர் கொண்டாள்..
‘ஸோ.. நாம் பிரியத்தான் வேண்டும்..?”
‘வேறு வழியில்லை..”
‘நீ வேறொருத்தனை கல்யாணம் பண்ணிக் கொள்ள.. நான் வேறொருத்தியை கல்யாணம ;பண்ணிக் கொள்ளத்தான் வேண்டும்..?”
‘இல்லை.. நான் இன்னொருத்தனுக்கு பெண்டாட்டியாக மாட்டேன்..”
‘நீ இப்ப உன் அப்பா சொன்னதைத்தானே செய்கிற.. அப்பவும் உன் அப்பா.. இதைப் போல உன் கல்யாணத்திற்கு வற்புறுத்தினால் என்ன செய்வே..?”
‘உயிரை விட்டு விட.. அவருக்குத்தான் தெரியுமா?”
‘உயிரை ஏண்டி விடனும்? வாழ்ந்து பார்க்கலாம்.. வா…”
கௌசல்யா அவன் முகத்தையே தீர்க்கமாகப் பார்த்தாள்.. அவள் முகத்தில் என்றுமில்லாத தேஜஸ் அன்று தெரிந்தது..
‘இதுவரை நாம் வாழலைன்னு யார் சொன்னது..? இனியும் நாம் வாழப் போகிறதில்லைன்னு யார் சொன்னது..?” என்று கேட்டாள்.. அவள்..
சக்திவேலின் உடல் சிலிர்த்தது..
‘உங்க மனசில் நான் இருக்கிறேன்.. என் மனசில் நீங்க இருக்கிறேள்.. நாம வாழாத வாழ்க்கையையா.. மத்தவா வாழ்ந்துடப் போறா..?”
அவர்கள் ஒருவரையொருவர் பார்த்த வண்ணம்.. நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தனர்..
Reviews – Aarathanai / ஆராதனை
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.