Chapter 02

0Shares

நீ குடியிருக்கும் நெஞ்சத்தில்

வேறொருவர் குடி வரலாமோ…?

வாழ்க்கை என்பது எண்ணற்ற ஆச்சரியங்களைத் தன்னுள்ளே அடக்கிக் கொண்டிருப்பது.. வாழ்வின் எந்தத் திருப்பத்தில் நமக்கு பூங்கொத்து காத்திருக்கும் என்பதை யாராலும் அவ்வளவு எளிதாக கணித்து விட முடியாது…

மித்ரனின் வாழ்விலும் அதே போல.. ஆச்சரியங்கள் அணி வகுத்துக் காத்துக் கொண்டிருப்பதை அறியாதவனாக, அவன் உற்சாகமாக நண்பனுடன் உரையாடிக் கொண்டிருந்தான்.

“உண்மையிலேயே இது ரொம்ப சந்தோசமான விசயம்டா.. எனக்கு என் சித்தி மீது பிரியம் அதிகம். ஏறக்குறைய பதினொரு வருடங்களாகி விட்டது. அவங்க அந்த வில்லேஜிற்கு வாழ்க்கைப் பட்டுப் போய்…”

“வெயிட்.. வெயிட்.. இப்போது நீ என்ன சொன்ன..?”

“என்னடா சொன்னேன்…?”

“என்னவோ, வாழைக்காய்.. பட்டுன்னு.. சொன்னாயே.. அது என்னடா..”

விஸ்வம்.. மழைக்குக்கூட கிராமத்துப் பக்கம் ஒதுங்கி அறியாதவன். மித்ரனின் வேர் கிராமத்தில்தான் இருந்தது. திருச்சிக்கு அருகேயிருக்கும் கிராமத்தில்தான் மித்ரனின் அப்பா பிறந்தார். பிழைப்புக்கு சென்னைக்கு வந்து, வீடுகட்டி, சென்னையிலேயே நிலை கொண்டாலும் வருடாவருடம் ஊர் திருவிழாவிற்கு குடும்பதோடு கிராமத்திற்குப் போய் விடுவார்.

மித்ரனின் தாய் அன்னபூரணி பிறந்ததும்.. மதுரைக்கு அருகிலிருக்கும் கிராமம்தான். எனவே தாய் தந்தை வழி சொந்தங்களின் திருமணம் முதலிய விசேசங்களுக்கு சென்று வரும் வழக்கமுள்ள மித்ரனுக்கு கிராமத்தைத் தெரியும். கிராம மக்களின் வாழ்க்கை முறை தெரியும். அவர்களின் மண்வாசம் கலந்த பாசத்தையும் தெரியும்.

“அது வாழைக்காய் பட்டு இல்லை.. வாழ்க்கைப் பட்டு.. எங்கே சொல்லு.. வாழ்க்கைப் பட்டு…”

மித்ரன் விஸ்வத்திற்கு டியூசன் எடுக்க முனைய.. அவன் மீண்டும் கடுப்பாகி கனலானான். மித்ரனும் கைகளை உயர்த்தி சரணானான்.

“முறைக்காதே.. முறைக்காதே..”

“டென்சனாக்கிறியே டா.. அது என்ன பட்டுன்னு சொல்லுடான்னா எனக்கு என்னவோ.. ஏ.. ஃபார் ஆப்பிள்ன்னு பாடம் எடுக்க ஆரம்பிக்கறியே..”

“விஸ்வம்..! மேரேஜ் ஆகி ஒரு ஊருக்குப் பெண்கள் போவாங்க இல்லையா…?”

“யெஸ்.. யெஸ்…”

“அதைத்தான் வாழ்க்கைப்பட்டுப் போனதாகச் சொல்வாங்க…”

“அதை நேரடியாய் சொல்ல வேண்டியதுதானே.. என்ன ஒரு வில்லேஜ் லாங்வேஜோ…”

“ஏன்.. நம்ம சென்னை லாங்வேஜ் மட்டும் டிக்ஷனரியில் இல்லாத வார்த்தைகளை உலவ விடுவது இல்லையா…?”

“இது போலப் புரியாமல் எதைச் சொன்னோம்…?”

“உதார் விடுவது.. ஜொள் விடுவது.. கடலை போடுவது.. வெத்தலை பாக்கு போடவைப்பதுன்னு அர்த்தம் கண்டு பிடிக்க முடியாமல் விழிக்க வைக்கும் ஆயிரம் வார்த்தைகள் நம் ஊரில் புழக்கத்தில் உண்டு. அள்ளி விடவா..”

“அதையெல்லாம் இன்னொரு நாள் அள்ளிவிடு.. இப்போ என் சோகக்கதையைக் கேளுடா மச்சான்..”

விஸ்வம் அழமாட்டாத குறையாய் கெஞ்ச.. மித்ரன் மனமிரங்கினான்.

“சொல்லு.. சொல்லு.. புன்னை வனத்தில் உனக்குப் பெண் பார்த்திருக்கிறாங்க..”

“அந்தப் பெண்ணின் பெயர் காயத்ரியாம்..”

“பெயரே அழகாக இருக்கிறது. ஆள் எப்படி…?”

“யாருக்குத் தெரியும்…?”

“உனக்குத் தெரிந்திருக்கணுமேடா.. நீதானே அந்தப் பெண்ணை மேரேஜ் பண்ணிக்கொள்ளப் போகிறவன்..”

விஸ்வம் கையிலிருந்த செல்ஃபோன் சுக்கு நூறாய் உடைந்தாலும் பரவாயில்லையென்று மித்ரனை நோக்கி.. கோபத்துடன் அதை வீச.. மித்ரன் மிகச் சரியாக அதைக் கையில் பிடித்து

“கேட்ச்..” என்று விஸ்வத்தை நோக்கி கண் சிமிட்டினான்.

“நீயெல்லாம் என் நண்பனாடா..?”

“என் பெயரே மித்ரன்.. தோழன்.. நீ உன் பிரச்னையை சொல்லு..”

“அந்தப் பெண்ணிற்கு ஏராளமாய் சொத்து இருக்கிறதாம்..”

“குட்…”

“அவளுடைய பேரண்ட்ஸிற்கு அவள் ஒரே பெண்ணாம்..”

“வெரிகுட்..”

“என் அப்பாவின் ஒன்றுவிட்ட தங்கையின் மகளாம்..”

“வெரி.. வெரி.. குட்..”

“நீ செமத்தியாய் என்னிடம் வாங்கப் போகிறாய்.. நான் புலம்புவது உனக்கு கிண்டலாக இருக்கிறதா..?”

“ஏண்டா.. வெரிகுட்ன்னுதானே சொன்னேன். வேறென்ன சொன்னேன்…?”

“பி சீரியஸ் மித்ரன்…”

“ஓகே.. நீ சொல்லு.. நான் சீரியஸாகக் கேட்கிறேன்..”

“எனக்கு அந்தப் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள கொஞ்சம் கூட விருப்பமில்லை.. பட்.. என் பேரண்ட்ஸ் நான் அந்தப் பெண்ணைத்தான் மேரேஜ் பண்ணிக்கணும்னு ஒற்றைக் காலில் நிற்கிறாங்க..”

‘இன்னொரு காலில் அடிபட்டு விட்டதா…’ என்று கேட்க வாயெடுத்த மித்ரன்.. விஸ்வத்தின் கனலை இனியும் தாங்க முடியாது என்ற எண்ணத்துடன் வாயை மூடிக்கொண்டான்.

“நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்து விட்டேன். அவங்க கேட்க மாட்டேன்கிறாங்க. வீட்டை விட்டுப் போய்விடுவேன்னு நேற்று ஒருவார்த்தை சொன்னேன். என் அப்பா. என்ன செய்தார் தெரியுமா…?”

“என்ன செய்தார்…?”

“நான் சொல்லி வாய் மூடுவதற்குள் அவர் போய் முதியோர் இல்லத்தில் உட்கார்ந்து கொண்டாருடா…”

“ஹா.. ஹா…”

மித்ரன் அடக்கமாட்டாமல் சிரித்து வைத்தான். விஸ்வம்.. ‘யு… டு.. மித்ரா..’ என்ற பாணியில் ஜூலியஸ் ஸீஸர் புரூட்டஸைப் பார்த்த பார்வையை பார்த்த பின்னால்தான் மித்ரன் சிரிப்பை நிறுத்தினான்.

“சிரிப்பு வந்தால் நான் என்னடா செய்வேன்..? ஸாரி ஸாரி…”

“எப்படி என்னை மிரட்டுகிறார் பார்…”

“உன் நிலைமை எனக்குப் புரிகிறது…”

மித்ரனுக்கு விஸ்வத்தைப் பார்க்க.. பாவமாகத்தான் இருந்தது. பிடிக்காத எதை வேண்டுமானாலும் செய்யலாம். பிடிக்காத திருமணத்தை ஒரு போதும் செய்யக்கூடாது என்பது அவனின் கொள்கை.

“இப்ப என்னடா செய்யப் போகிற…?”

“உன் உதவியோடு இவங்க திட்டத்தை முறியடிக்கப் போகிறேன்..”

“என் உதவியோடா…?”

மித்ரனுக்கு தூக்கிவாரிப் போட்டது. இந்த விசயத்தில் அவன் எங்கே.. எப்படி. வரமுடியும்..?

‘இவன் என்ன இப்படிச் சொல்கிறான்..?’ என்ற கேள்வியோடு நண்பனைப் பார்த்தான்.

“இதில் நான் என்னடா செய்ய முடியும்..? உன் அம்மா அப்பாவிடம் நான் ‘ஹலோ ஆன்டி.. ஹலோ அங்கிள்’ன்னு பேசியதோடு சரி.. அதிகமாகப் பேசியதில்லை.. நான் சொன்னால் அவங்க கேட்டுக்கொள்வாங்களா…?”

“நீ சொன்னால் என் அம்மா அப்பாதான் கேட்டுக் கொள்ள மாட்டாங்க.. பெண் வீட்டில் கேட்டுக் கொள்வாங்களே…”

“என்னது…”

ஏறக்குறைய அலறிவிட்டான் மித்ரன்..

“ஏண்டா.. இப்படி ஒரு அணுகுண்டைத் தூக்கிப் போடுகிற… இது உனக்கே நல்லாயிருக்கா..? உன் அப்பா.. அம்மாவிடமே நான் பேசத்தயங்குகிறேன். பெண் வீட்டுக்காரங்க – எனக்கு முன்னே பின்னே தெரியாதவங்க. அவங்களிடம் போய் நான் எப்படிடா பேச முடியும்..?”

“உன்னைத்தான் அவங்களுக்குத் தெரியாது. உன் சித்தியின் குடும்பத்தைத் தெரிந்திருக்குமே..”

“விஸ்வம்…”

அவன் எங்கே சுற்றி.. எங்கே வருகிறான் என்பது மித்ரனுக்கு ஓரளவு புரிந்து விட்டது. அதை மேலும் தெளிவாக்க.. விஸ்வமே தொடர்ந்து தன் திட்டத்தை விவரித்தான்.

“உன் சித்தி குடும்பத்துடன் கொஞ்ச நாள் தங்க வேண்டும்ன்னு நீயும் ரொம்பநாளாய் ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறாய்…”

“என் ஆசையைப் பற்றி நீயொன்றும் அக்கறைப் படவேண்டாம். விசயத்திற்கு வா..”

“ஒரு மாதம் லீவ் எடுத்துக் கொள். உனக்குத்தான் நிறைய லீவ் பேலன்ஸில் இருக்கிறதே..”

“அது உன் கண்ணை உறுத்துகிறதா..?”

“கோபித்துக் கொள்ளாதே டா மச்சான். எனக்காக நீ இந்த லீவை வேஸ்ட் பண்ணக் கூடாதா…?”

“என் சித்தி குடும்பத்துடன் போய் இருப்பதில் எனக்கு நோ அப்ஜெக்சன்.. பட்.. அதற்கு மேல் நீ சொல்லும் வேலையைத் தான் என்னால் செய்ய முடியாது..”

“எனக்காக இதைச் செய்ய மாட்டாயா…?”

“யாருடா நீ.. புரியாதவனாக இருக்கிற.. கிராமத்தில் இருக்கிறவங்க செம விவரமான ஆளுக. நான் போய் உனக்குக் கல்யாணத்தில் இஷ்டமில்லைன்னு சொன்னால்.. என்னை சும்மா விட மாட்டாங்க. உன் வீட்டிற்கு ஃபோன் போட்டுவிட்டு கல்யாணத்தை நான் கலைக்கப் பார்த்தேன்னு.. ஊரைக்கூட்டி என்னை பஞ்சாயத்தில் நிறுத்தி வைத்து விடுவாங்க..”

“மித்ரா, நீ போனவுடன் இந்த வேலையை ஆரம்பிக்காதே..”

“அப்புறம்..?”

“ஒரு மாதம் இருக்கிறதே.. நீ உன் சித்தியின் வீட்டில் இருந்துகொண்டு பெண் வீட்டிற்கு போய் வந்து கொண்டு இரு…”

“உனக்கு என்னைப் பார்த்தால் எப்படி இருக்கிறது..? வா.. வான்னு பதினொரு வருசமா வருந்திக் கூப்பிடுகிற என் சித்தியின் வீட்டிற்கே நான் போனதில்லை. முன்பின் பழக்கமில்லாத உன் மாமனார் வீட்டிற்கு போவேனா..?”

“உனக்குக் கோபம் வந்தால் என்னை நான்கு அடி வேண்டுமானாலும் அடித்து விடு.. ஆனால் அந்த வீட்டை என் மாமனார் வீடுன்னு மட்டும்  சொல்லாதே…”

“விடு.. விடு.. இப்ப என்னை என்னதாண்டா செய்யச் சொல்கிற…? என்னால் அறிமுகமில்லாதவங்க வீட்டுக்கெல்லாம் போக முடியாது…”

“அறிமுகத்தோடேயே நீ போகப் போகிறாய்..”

“அது எப்படி…?”

“என் சார்பாய் நீ பெண் பார்க்கப் போவதாக என் பேரண்ட்ஸிடம் நான் சொல்லி விட்டேன்…”

மித்ரன் திகைத்து விட்டான். இது என்ன இப்படி ஒரு பூகம்பம் கிளம்புகிறது.

“என்னைக் கேட்காமல் நீ எப்படிடா.. இப்படிச் சொல்லலாம்…?”

“எனக்கு வேறு வழி தெரியவில்லைடா. என் அப்பாம்மாவிற்கும் வேறு வழியில்லை. ‘மித்ரன் அந்த கிராமத்தில் ஒன்மன்த் ரெஸ்ட் எடுக்கப்போகிறான். அவன் போய் அந்தப் பெண்ணின் குணத்தைப் பார்த்து விட்டு வரட்டும். அதற்கப்புறமாய் நான் ஓகே சொல்கிறேன்’னு.. அப்பாம்மாவிடம் சொல்லிட்டேன்.. அவங்களும் இதற்கு ஒப்புக்கொண்டு பெண் வீட்டிற்கு ஃபோன் போட்டுச் சொல்லிட்டாங்க…”

“அடப்பாவி…”

“உனக்காக.. உன் புரொஜெக்ட் வொர்க்கையும் நான் முடித்து வைத்து விட்டேன். டீம் லீடர் ஏக சந்தோசத்தில் இருக்கிறான். உனக்கு லீவ் கிராண்ட் ஆகிவிட்டது..”

“நான் லீவ் அப்ளை பண்ணவே இல்லையேடா…”

“உனக்காக நானே உன் சைனைப் போட்டு லீவை அப்ளை பண்ணிவிட்டேன்..”

“விஸ்வம்.. நீ செய்வது எதுவும் சரியில்லை. நான் அதைத்தான் சொல்லுவேன்..”

“நோ அதர் வே. நீ போய்த்தான் ஆகவேண்டும். ஒருமாதம் கழித்து.. நீ கிளம்பி வரும்போது, எனக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பமில்லைன்னு அவங்களிடம் சொல்லிவிடு.” விஸ்வம் கெஞ்சினான். மித்ரன் திகைத்தான்.

0Shares

Reviews — Aatrangarai Arukinilze / ஆற்றங்கரை அருகினிலே..!

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link