Chapter 07

0Shares

இனம் விளங்காமல் என்னகம் தொட்டவன்.

எனைப் பிரிவானோ.. இல்லை.. எனில்

கலப்பானோ..?

மித்ரன் அவள் மீதிருந்த பார்வையை விலக்காமல் படித்துறைக்கு சென்றான். படித்துறையின் படியில் நின்றிருந்தாள் தேவி. அந்தி நேரத்து சூரியனின் செந்நிறக்கதிர்கள் அவள் மேல் படிந்திருந்தன. ஏற்கெனவே அரைத்து வைத்த மஞ்சளின் நிறத்தில் இருப்பவள் அந்தக் கதிரொளியில் இன்னும் அற்புதமான பேரழகோடு இருந்தாள். அரக்குச் சிவப்பில் மஞ்சள் நிற பார்டர் கொண்ட பட்டுப் பாவாடை உடுத்தி.. மஞ்சள் நிற தாவணி அணிந்திருந்தாள். அவள் தோளின் இருபக்கமும் மல்லிகைச் சரம் அடர்ந்து படந்திருந்தது.

அவளைப் பார்த்துக் கொண்டே படித்துறையில் இறங்கினான், மித்ரன். அவன் பார்வையோடு அவள் பார்வை கலந்து பிணைந்தது.

அவளுடைய இமைகள் பட்டாம்பூச்சிகள் போல் படபடத்து உயர்ந்து தாழ்வதைக் கண்டவனுக்கு என்னவோ போல் இருந்தது. இதுவரை இப்படிப்பட்ட உணர்வை அவன் அனுபவித்தது இல்லை.

சென்னைப் பெண்கள் முகம் பார்த்து.. கண் பார்த்து.. பார்வையை விலக்கிக் கொள்ளாமல்.. இயல்பாகப் பேசக் கூடியவர்கள். இவளைப் போல யாரும் வெட்கி குனியமாட்டார்கள்.

தாழ்த்திய அவளுடைய இமைகள், குடையை நினைவுபடுத்த, மித்ரன் அவளையே பார்த்தவாறு.. படித்துறையின் பக்கவாட்டுச் சுவரில் அமர்ந்து கொண்டான். ஓரக்கண்ணால் அதைப் பார்த்துக் கொண்டிருந்தவள், இதழ் பிரியாமல் சிரித்தாள்.

‘சிரிக்க ஆரம்பித்து விட்டாளா…’

மித்ரனுக்கு அவளுடைய சிரிப்பிற்கான காரணத்தை தெரிந்து கொண்டே ஆகவேண்டும் போலத் தோன்றியது. இல்லாவிட்டால் அவனுக்குத் தலையே வெடித்து விடும் போலிருக்க.. வயதுப் பெண்களை பார்ப்பதே குற்றமென்று சொல்லும் கிராமத்தில்.. வயதுப் பெண்களுடன் பேசக்கூடாது என்ற நியதியை மறந்து..

“எதுக்குங்க என்னைப் பார்த்து இப்படிச் சிரிக்கறீங்க..” என்று கேட்டு விட்டான்.

அவள் சட்டென்று நிமிர்ந்தாள். அவன் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் தடுமாறினாள். அவளுடைய இமைகளின் படபடப்பு அதிகமானது. பதில் சொல்லாமல் குடத்துடன் அவள் படியிறங்க முனைய.. மித்ரனின் குரல் அவளைத் தடுத்து நிறுத்தியது.

“ஏங்க.. இங்கே ஒருத்தன் கேட்டுக் கொண்டேயிருக்கிறேன். பதில் சொல்லாமல் படியிறங்கினால் என்ன அர்த்தம்..?”

அவள் நின்று விட்டாள். குடத்தின் மீது விரல்களால் கோலம் போட்டவாறு தலை கவிழ்ந்து நின்றிருந்தாள். அவளது பார்வை உயர்ந்து அவன் பார்வையைச் சந்தித்து.. உடனே விலகி தரையைப் பார்த்தது. அவனுக்கு சிரிப்பு வந்து விட்டது.

“சரிதான்.. நேற்றுப் போல இன்றைக்கும் என்னை பாட்டுக் கச்சேரி பண்ண வைக்கணும் என்ற முடிவோடு வந்திருக்கீங்களா…?”

இப்போது அவள் மலர்ந்து சிரித்தாள். மித்ரனின் ஆவல் அதிகமானது.

“சொல்லுங்க.. எதுக்கு சிரிச்சீங்க..? அதுக்குப் பதில் சொல்லாமல் வெறும் சிரிப்பை மட்டும் சிரித்தால் எப்படி..?”

அவள் பதில் சொல்லாமல்.. குடத்தில் நீரை நிரப்பி.. இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு படியேறினாள். மித்ரன் வழியை மறைத்தவாறு நின்று கொண்டான். அவள் முகத்தில் பதட்டம் பரவியது.

“வழியை விடுங்க…” என்றாள்.

“நீங்க எதற்கு சிரித்தீங்கன்னு சொல்லுங்க.. நான் வழியை விடுகிறேன்..” என்று பிடிவாதமாகக் கூறினான் மித்ரன்.

“யாராவது பார்த்து விடப் போகிறாங்க..” அவள் பதட்டத்துடன் நாற்புறமும் விழிகளை சுழலவிட்டாள்.

பெண்களுடன் இலகுவாகப் பேசிப் பழகும் மித்ரனுக்கு அவளுடைய பதட்டத்தைக் கண்டு வேடிக்கையாக இருந்தது.

‘இப்போது நான் என்ன செய்து விட்டேன்னு இப்படி இவள் பயப்படுகிறாள்..? இவள் கையையா பிடித்து இழுத்துவிட்டேன்…?’

அந்த நினைவு மனதில் எழுந்ததும், அவள் கையின் மேல் மித்ரனை அறியாமல் அவன் பார்வை ஓடியது.

குடத்தை வளைத்துப் பிடித்திருந்த அவள் கையில் வரிசையாக தங்க வளையல்கள் அணி வகுத்து நின்றன. அந்த வளையல்களை நிரட மனதில் ஆசை தோன்ற..

‘என்ன நினைவு இது…’ என்று தன்னைத்தானே கடிந்து கொண்டு அவள் முகம் பார்த்தான் மித்ரன்.

“யாராவது பார்த்தால் என்ன…?”

“உங்களுக்கு ஒன்றுமில்லை. எனக்குத்தான் எல்லாமும்…”

“எல்லாமும்ன்னா.. என்ன அர்த்தம்…?”

அவன் விடாக்கண்டனாய் கேள்வி கேட்டுக் கொண்டிருக்க.. அவள் பொறுமையிழந்தவளாக வெடுக்கென்று பதில் சொன்னாள்.

“பெரிய பட்டணத்துக்காரர், என்ஜினீயர்ன்னு பெருமையாய் ஊரெல்லாம் பேசிக்கிறாங்க. இப்படி எதுக்குமே அர்த்தம் தெரியாமல் இருக்கறீங்க.. இதுக்குக் கூட அர்த்தம் தெரியாமல் அப்படி என்னத்தை படிச்சுக் கிழித்தீங்க..?”

மித்ரனுக்கு, பேசியது அவள்தானா.. என்று ஒரு கணம் நம்பமுடியவில்லை. கையை கிள்ளிப் பார்த்து விட்லாமா என்று கூட அவன் யோசித்தான். விட்டால்.. தனுஷ் பாடியதைப் போல…

‘யாத்தே.. யாத்தே.. யாத்தே.. என்னாச் சோ…!’ என்று பாடிவிடுவான். அந்த அளவுக்கு அவளின் பேச்சு அவனைப் பாதித்து விட்டது.

ஆச்சரியத்துடன் ஸ்லோ மோசனில் இமையை மூடித் திறந்தவன்,

“பூவுக்குள் பூகம்பம் என்கிறது நீங்கள்தானா…?” என்று கேட்டான்.

“ஆமான்னு சொன்னால் வழியை விட்டு விடுவீங்களா..?” என்று பதிலுக்கு அவள் கேட்டாள்.

“உங்களுக்கே இவ்வளவு இருந்தால் எனக்கு எவ்வளவு இருக்கும்..? நீங்கள் பதிலைச் சொல்லுங்க.. வழியை விடுவதைப் பற்றி அப்புறமாய் நான் யோசிக்கிறேன்..”

“அப்போதும் யோசிக்கத்தான் செய்வீங்க.. வழியை விட மாட்டிங்க..”

“ஆமாம்.. அதுக்கு இப்ப என்னாங்கிறீங்க…?”

“எங்க ஊருக்கே வந்து.. என்கிட்டயே தெனாவெட்டு காட்டுகிறீங்களா..? நான் யாருன்னு தெரியுமா..?”

அவள் மனம் குறுகுறுக்க இந்தக் கேள்வியைக் கேட்டாள்.

அவன் குறும்பு கொப்புளிக்க..

‘நீதானே.. என் வருங்காலப் பெண்டாட்டி…’ என்று சொல்வான் என்று அவள் எதிர்ப்பார்த்தாள்.

அவனோ.. முன்பின் தெரியாத இளம் பெண்ணிடம் வார்த்தையோடும் உற்சாகத்துடன் பேச்சை வளர்த்தான்.

“ஹலோ.. இந்த ஊர் என்ன.. உங்களுக்கே பட்டா போடப்பட்ட ஊரா..? இந்த ஊரில்தான் எனக்கு நெருக்கமான சொந்தக்காரங்க இருக்கிறாங்க.. அதனால், எனக்கும் இந்த ஊரின் மேல் உரிமையிருக்கு.” என்று அவன் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ள..

‘இது மாமனார் ஊருங்கிற அர்த்தத்தில் சொல்கிறான்..’ என்று அவள் மனதிற்குள் மகிழ்ந்து போனாள்.

“வெறும் உரிமையை வைத்து எதையும் செய்ய முடியாது.. வழியை விடுங்க…”

“நான் கேட்டதற்கு பதிலைச் சொல்லாமல் நான் வழியை விடமாட்டேன்..”

“என் வழியை ஏன் மறிக்கறீங்க பாகவதரே..? நீங்களாச்சு.. உங்க பாட்டாச்சு.. அதை ரசித்துக் கேட்கும் நாணலாச்சு.. என்னை எதற்காக வம்புக்கு இழுக்கறீங்க..?”

அவள் அடக்க முடியாமல் சிரிக்க.. மித்ரனுக்கு அவளுடைய சிரிப்பு தொற்றிக் கொண்டது.

“ஓஹோ.. நான் பாட்டுப் பாடியதை.. திருட்டுத்தனமாய் மறைந்திருந்து பார்த்ததும் இல்லாமல் கேலி செய்கிறீங்களா…?”

“திருட்டுத்தனமாய்.. மறைந்திருந்து பார்த்தேனா..? நினைப்புத்தான் உங்களுக்கு. இவர் பெரிய பாட்டுச் சக்கரவர்த்தி.. இவர் பாட்டை.. நான் ஒளிந்து நின்று கேட்கிறேன். பெருமை பேசுவதற்கும் ஓர் அளவு வேண்டாமா..”

அவள் அவனைச் சுற்றிக் கொண்டு படியேறினாள். மேல்படியில் கால் வைத்தபோது… திரும்பி அவனைப் பார்க்கவேறு செய்தாள்.

0Shares

Reviews — Aatrangarai Arukinilze / ஆற்றங்கரை அருகினிலே..!

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link