Chapter 12
நம்பினோர் கெடுவதில்லை.. நான்கு மறை தீர்ப்பு..
உன்னை நம்பிய எண்மனம் தெரிந்தும்.. நீயேன் கைவிட்டாய்..?
“நிஜமாகத்தான் சொல்கிறாயா…?” நம்பமுடியாமல் கேட்டாள் லலிதா..
“பின்னே.. நானென்ன பொய்யா சொல்லுகிறேன்..? சித்தப்பா உங்களைத் தினமும் ஆற்றங்கரைக்கு அனுப்ப சம்மதித்து விட்டார்..” மித்ரன் சிரித்தான்.
“எப்படிடா…?”
“எனக்காக.. நீங்க தினமும்.. ஆற்றங்கரை அரச மரத்தடி பிள்ளையாருக்கு விளக்கேற்றி வேண்டணும்னு.. அம்மா வேண்டியிருக்கிறதாக சொன்னேன். தெய்வ காரியம் என்றதும்.. பயந்துபோய் ஒப்புக் கொண்டு விட்டார்.”
மித்ரன்.. தன் வெற்றியை விவரிக்க.. லலிதாவின் முகம் வாடி விட்டது. மித்ரனுக்கு காரணம் புரியவில்லை…
“ஏன் சித்தி என்னவோ போல ஆகிவிட்டிங்க..”
“இப்படி உன் சித்தப்பாவிடம் பொய் சொல்லி நான் அவசியம் ஆற்றங்கரைக்கு வரணுமாடா…?”
“கட்டாயம் வரணும்.. இதைப் ‘பொய்’யின்னு ஏன் நினைக்கறீங்க…? இதே ஊரிலிருக்கும் ஒரு பெண் தினமும் வந்து பிள்ளையாருக்கு தண்ணீர் எடுத்து ஊற்றி விளக்கேற்றி வைத்து விட்டுப் போகிறாளே.. அவளுக்கு இருக்கும் சுதந்திரம் கூட உங்களுக்கு இல்லைன்னா அது பெரிய அநியாயம் சித்தி….”
“எந்தப் பெண்ணைச் சொல்கிறாய்…?”
“அவள் பெயர் தேவின்னு நினைவு…”
“அவள் தினமும் ஆற்றங்கரைக்கு வருவாள்ன்னு உனக்கு எப்படித் தெரியும்..? நீ வந்து இரண்டு நாட்கள் தான் ஆகுது…”
“இந்த இரண்டு நாளும் நான் ஆற்றங்கரைக்குப் போகிறேனே…”
“அந்த தேவிப் பொண்ணுக்கு.. ஜாதகத்தில் ஏதோ சிக்கலாம்…”
“ஏதோ சிக்கல்ன்னா.. ஒன்றும் புரியவில்லையே..”
“அவள் கல்யாணம் நடப்பது.. அவ்வளவு ஈஸியில்லையாம்…”
“பாவம்.. ஏழை வீட்டுப் பெண் போல..”
மித்ரனுக்குத் தெரியும் – எந்த ஏழைவீட்டுப் பெண்ணும் தினமும் ஒரு பட்டுப்பாவாடை தாவணி அணிந்து.. காதில் வைரத் தோடும் கழுத்தில் கெட்டி தங்கச் சங்கிலியுமாக உலா வரமாட்டாள் என்பது. அவனுக்கு தேவியைப் பற்றிய விவரம் தெரிய வேண்டும். அதற்காக லலிதாவின் வாயைக் கிளறினான்.
“அதெல்லாமில்லை மித்ரா. அவள் இந்த ஊர் பண்ணையாரின் மகள். நான்தான் முந்தாநாளே.. அவள் பெரிய வீட்டுப் பெண்ணுன்னு சொன்னேனே…”
“அப்புறம் எப்படி அவளுடைய கல்யாணத்தில் சிக்கல் வரும்…?”
“ஜாதகத்தில் அப்படித்தான் இருக்காம் மித்ரா. இன்னும் ஒன்றைச் சொல்லவா..? அவளுடைய ஜாதகப்படி அவள் கல்யாணம் ஊர் பார்க்க நடக்காதாம். இதை அவங்க அப்பாம்மாவுக்கு சொல்ல முடியாமல் ஜோஸியரே மறைத்து விட்டாராம். வெறும் சிக்கல்ன்னு மட்டும் சொன்னாராம். அதற்கு பரிகாரம் செய்யத்தான் தினமும் மூன்று குடம் தண்ணீரில் பிள்ளையாரைக் குளிப்பாட்டி – விளக்கேற்றி வைத்து விட்டு வருகிறாள் அந்தப்பெண்.. பாவம்…”
“அவளுடைய அப்பா அம்மாவிற்கே தெரியாத விவரம்.. உங்களுக்கு மட்டும் எப்படித் தெரிந்தது…?”
“அந்த ஜோஸியரின் பெண்டாட்டி வேணியும்.. நானும்.. சிநேகிதிகள்.”
“இதைப் பாருடா.. உங்களுக்கு பிரண்டுகூட இந்த ஊரில் இருக்கிறாங்களா.. சித்தப்பா எப்படி.. உங்களுடன் சிநேகிதியை பேசவிட்டார்…?”
“போடா அரட்டை.. சனிக்கிழமை பெருமாள் கோவிலுக்குப் போவேனே.. அங்கு அவளைப் பார்ப்பேன்..”
“ஸோ.. இப்படித்தான் இந்த ஊர்நிலவரம் உங்களுக்கு தெரிகிறது. வாரத்தில் ஒரு நாள் கோவிலுக்குப் போகும் போதே இவ்வளவு விவரம் தெரிந்து வைத்திருக்கீங்களே.. தினமும் வெளியில் போனால் எவ்வளவு விவரம் தெரிந்து கொள்வீங்களோ…”
மித்ரன் விளையாட்டாய் பேசிச் சிரித்தாலும் அவன் மனம் தேவியை நினைத்துக் கொண்டிருந்தது.
‘எவ்வளவு அழகான.. அறிவான.. இசை ஞானம் உள்ளபெண். அவளுக்கு ஜாதகத்தில் சிக்கலா…?’
இருபத்திஓராம் நூற்றாண்டின் – கம்ப்யூட்டர் என்ஜினீயர் என்பதால் அவன் அதை சற்று நேரத்தில் மறந்து விட்டான்.
மாலையில் லலிதாவைக் கிளப்பினான்.
“சீக்கிரம் சித்தி.. நேரமாகுது…”
“பொறுடா.. எண்ணெயும் விளக்குத்திரியும் எடுத்து வைத்துக் கொண்டு வருகிறேன்…”
அவர்கள் இருவரும் கிளம்பிய போது, அருணும் அபிநயாவும் தாங்களும் வருவோம் என்று அடம்பிடித்து ஒட்டிக் கொண்டார்கள். அருண் மித்ரனின் கையைப் பிடித்துக் கொள்ள.. அபிநயா.. லலிதாவின் கையைப் பிடித்துக் கொண்டாள்.
மகளின் கையைப் பிடித்தபடி – மித்ரனுடன் கதை பேசியவாறு – ஆற்றங்கரைக்குச் சென்றபோது லலிதாவின் மனதில் ஆனந்தம்… பிரவாகமாய் பொங்கியது..
அவளுடைய திருமணத்திற்கு முன்பு இருந்த சுதந்திர மனப்பான்மையை உணர்ந்தாள் லலிதா.. தளைகள் இல்லாமல் இருப்பது இப்படி ஒரு பேரானந்தத்தை அளிக்குமா..? இதைத்தான்..
‘விட்டு சிறகடிப்பாய் – அந்த
சிட்டுக் குருவியைப் போல்…’
என்று பாரதி பாடி வைத்தாரா…? பாரதியால் எப்படி ஒரு பெண்ணின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிந்தது…?
ஆற்றங்கரையின் படித்துறையில் இறங்கி.. சுழித்தோடும் நதி நீரில் கால் நனைத்த போது.. லலிதாவின் மனம் அந்த சிட்டுக் குருவியைப் போல்.. விட்டுச் சிறகடித்தது. அவள் ஆசை தீர.. ஆற்று நீரில் கைகளால் அளைந்தாள். நீரை அள்ளி முகம் கழுவிக் கொண்டாள். நீரின் அருகே.. பாதம் நனைய கடைசிப் படியில் அமர்ந்து கொண்டாள்.
மாலை நேரத்தில் கூட்டில் அடையப் பறந்து வரும் பறவைகள் கூட்டத்தை அண்ணாந்து பார்த்தாள். ஆற்றோரக் காற்று முகத்தில் படியும் சுகத்தை ஆனந்தமாக அனுபவித்தாள்.
மித்ரன்.. முகத்தில் மென்மையோடும்.. கண்களில் கருணையோடும் – அவனுக்கு சிறுவயதில் விளையாட்டுத் தோழியாக இருந்த சித்தியின் சந்தோசத்தைக் கண்டு ரசித்துக் கொண்டிருந்தான்.
“தேங்க்ஸ்.. மித்ரா…” என்றாள் லலிதா.
“உங்களுக்குத்தான் நான் தேங்க்ஸ் சொல்லனும் சித்தி…” என்று பதிலுக்குச் சொன்னான் மித்ரன்.
“எனக்கு நீ தேங்க்ஸ் சொல்லனுமா எதற்குடா…?”
“உங்களின் சந்தோசத்தை இந்த ஒரு மாத காலத்திற்காவது.. என்னால் திருப்பிக் கொடுக்க முடிந்ததற்கு…”
லலிதா கனிவோடும் பாசத்தோடும் தமக்கையின் மகனைப் பார்த்தாள்.
Reviews — Aatrangarai Arukinilze / ஆற்றங்கரை அருகினிலே..!
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.