Chapter 16

0Shares

ஒரு வார்த்தை உன் இதழ் உதிர்த்தால்…

ஒரு கோடி மலர்கள் என்மனதில் மலரும்…

மெல்லிய சுவர்க்கோழியின் ரீங்காரம் தவிர, வேறு சத்தமில்லாமல் ஊர் அடங்கியிருந்தது. மின் விசிறிகளின் ஓசையைத் தவிர.. வேறு ஓசைகளில்லாமல்.. காயத்ரியின் வீடு அடங்கியிருந்தது. அவளைத் தவிர – அனைவரும் தூங்கிக் கொண்டிருக்க, அவள் மட்டும் தூங்காமல்.. அறையின் மேல்கூரையில் ஓடும் மின்விசிறியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘ஒரு நாள் பார்த்தவுடன் மறந்து போகும் முகமா.. உங்கள் முகம்…?’

அவன் வாய் உதிர்த்த வார்த்தைகளை.. நினைத்து.. நினைத்து அவள் நெஞ்சம் மகிழ்ந்தது. அவள் உடலெங்கும் ஒரு வித இன்பப் பரபரப்பு இருக்க.. இமைகள் மூட மறுத்தன. கண்களில் உறக்கம் வந்து உட்கார மறுத்தது.

அவன் அதை மட்டுமா சொன்னான்..? அவனது கையில் இருந்த கோவில் குங்குமத்தை.. அவள் நெற்றியில் வைத்து விட்டான். லலிதா திரும்பி அவனை அழைத்தவுடன் சாதுப் பிள்ளையாக – எதுவும் அறியாதவன் போல.. அவள் பின்னால் போய் விட்டான்.

வீட்டுக்கு வந்த காயத்ரி.. முகம் கழுவவில்லை. நெற்றியில் அவன் வைத்து விட்ட குங்குமத் துகளை ஒரு பேப்பரில் எடுத்துப் பத்திரப்படுத்தினாள். அடிக்கடி கண்ணாடி பார்த்துக் கொண்டாள். அந்த இரவின் மடியில்.. இதமான தனிமையில் – நடந்ததை நினைத்துப் பார்ப்பதில் அவளுக்கு எல்லையற்ற மனத் திருப்தி கிடைத்தது.

‘உன்னை நம்பி நெத்தியிலே…

பொட்டுவைச்சேன் மத்தியிலே…

பொட்டு வைச்ச காரணத்தை..

புரிஞ்சுக்க ராசா…

விட்டுப் போனால் உதிர்ந்து போகும்..

வாசனை ரோசா..’

அவள் தாள முடியாத தவிப்புடன் கண்மூடி மனதிற்குள் பாடிக் கொண்டாள். இனம் புரியாத அந்த தவிப்பை இதுநாள்வரை அவள் உணர்ந்ததில்லை.

அவளது நெற்றியில் இருந்த குங்குமத்தைத் தொட்டுக் கொண்டே அவள் தூக்கம் வராமல் புரண்டு படுத்துக் கொண்ருக்க.. அவளுடைய நெற்றியில் குங்குமத்தை வைத்து விட்டவனோ.. அந்தப் பரபரப்பு இல்லாமல்.. ஆழ்ந்த உறக்கத்தில் அமிழ்ந்து போனான்.

விளக்கேற்றியவுடன் விநாயகருக்கு முன்னால் இருக்கும் குங்குமத்தை எடுத்து நெற்றியில் வைத்துக் கொள்வது காயத்ரியின் வழக்கம். அதைக் கவனித்து வைத்திருந்த மித்ரன், லலிதா கொடுத்த குங்குமத்தை கீழே போட மனமில்லாமல்.. போகும் அவசரத்தில் தேவியின் கையில் கொடுக்கப் போனான். அவள் ஒரு கையில் குடத்தையும் மறு கையில் எண்ணெய்க் கிண்ணத்தையும் வைத்திருக்க, சுவாதீனமாக அவள் நெற்றியில் குங்குமத்தை வைத்துவிட்டுப் போய் விட்டான்.

அவனுக்கு அதன் அர்த்தம் தெரிந்திருக்கவில்லை. ஆனால் விரும்பியவனின் கைகளால்.. நெற்றியில் குங்குமத்தை வாங்கிக் கொண்ட காயத்ரி.. அந்த நொடியிலேயே அவனது மனைவியாக மாறிவிட்டாள். குங்குமத்தைப் பரிசளித்தவனுக்கு.. தன் மனதில் கோவிலைக் கட்டி.. அதில் தெய்வமாக அவனை அமரச் செய்தும் விட்டாள்.

காலையில் காபியுடன் மித்ரனை எழுப்பிய லலிதா.. உடனடியாக போய் விடாமல், மித்ரனுக்கு எதிராக அமர்ந்து கொண்டாள். அவள் கண்களில் கவலை தெரிந்தது.

“என்ன சித்தி…” என்றான் மித்ரன்.

“கீழே கந்தசாமி அண்ணனும்.. ராமசாமி அண்ணனும் வந்திருக்காங்கடா..” லலிதாவின் பார்வை மித்ரனை ஆராய்ந்தது.

“இரண்டு சாமிகளும் உங்க வீட்டுக்கு வந்திருக்காங்க.. அதை என்கிட்ட ஏன் சொல்கிறீங்க..?”

“அவங்க உன்னைப் பார்க்கத்தான் வந்திருக்காங்கடா..”

“என்னைப் பார்க்க வந்திருக்கிறாங்களா..? அந்த இரண்டு சாமிகளும் யாருன்னே எனக்குத் தெரியாதே சித்தி..”

“உன்கூட ‘விஸ்வம்’ன்னு யாராவது வேலை பார்க்கிறாங்களா..?”

மித்ரனுக்கு அப்போதுதான் அவன் புன்னைவனத்திற்கு எதற்காக வந்திருக்கிறான். விஸ்வம் அவனை எதற்காக அனுப்பி வைத்திருக்கிறான்,  என்பதே நினைவுக்கு வந்தது.

“அட.. ஆமாம்.. அவன் பெயர் உங்களுக்கு எப்படித் தெரியும்…?”

“அவனுக்குப் பெண்ணைக் கொடுக்கப் போகிற கந்தசாமி அண்ணனும்.. அவருடைய தம்பி ராமசாமி அண்ணனும்தான் உன்னைப் பார்க்க நம்ம வீடு தேடி வந்திருக்கிறாங்க.”

“ஏன் சித்தி.. இதுவே இத்துனூண்டு கிராமம். இதில் உங்கள் வீட்டை அவங்க தேடவேறு செய்யணுமா..?”

“போடா போக்கிரி.. அவங்க பெரிய இடம்டா…”

“ஓ.. நீங்க அந்த அர்த்தத்தில் சொல்கிறீங்களா..?”

“ஆமாம்.. நீ எழுந்து சட்டையைப் போட்டுக் கொண்டு கீழே வா..”

அப்போதும்.. லலிதாவின் பார்வையில் ஏதோ இருக்க – மித்ரன், அவள் ஏன் தன்னை அப்படிப் பார்க்கிறாள் என்று புரியாதவனாக புருவம் உயர்த்தினான்.

“மித்ரன்…”

“ம்ம்ம்…”

“அந்த விஸ்வம் உனக்கு நெருங்கிய சிநேகிதனா..?”

“ஆமாம்.. ஏன் கேட்கறீங்க…?”

“அவனுக்கு கந்தசாமி அண்ணனின் பெண்ணை பேசிமுடித்திருப்பது உனக்குத் தெரியுமா…?”

“ஓ தெரியுமே.. பட்.. அவனுக்கு இந்த மேரேஜில் இஷ்டமில்லை சித்தி…”

சூரியனைக் கண்டதும் மறையும் பனியைப் போல.. லலிதாவின் முகத்தில் இருந்த கவலை மேகங்கள்.. காணாமல் போய் விட்டன. அவள் முகம் மலர்ந்து விட்டது.

‘அந்த நிச்சயத்தில்தான்.. தேவியுடன் மித்ரன் நெருக்கமாகப் பழகுகிறான் போல…’

“உனக்கு நிச்சயமாய் இது தெரியுமா…?”

“நீங்கவேற.. என்னைப் புன்னை வனத்திற்கு பார்சல் பண்ணி அனுப்பியதே.. அவன்தானே…”

மித்ரன் சட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டே – அவன் ஒரு மாத லீலை எடுத்துக் கொண்டு ஏன் சென்னையை விட்டு புன்னை வனத்திற்கு வந்தான் என்ற கதையை சொன்னான்.

0Shares

Reviews — Aatrangarai Arukinilze / ஆற்றங்கரை அருகினிலே..!

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link