Chapter 19

0Shares

நிழலாக என் மனதில் நின்றவனை…

நிஜமாக என்முன்னால் ஒருநாள் கண்டேன்..

படகோட்டும் ராமையா பார்க்காத சம்பவம்.. அந்தப் புன்னைவனத்தில் நடந்ததாக சரித்திரம் இல்லை. எந்த வீட்டில் எது நடந்தாலும் அது அவன் செவிக்கு வந்து விடும். எந்த இடத்தில் எது நடந்தாலும் அது அவன் பார்வைக்கு வந்து விடும்.

ஆற்றைக் கடக்க.. அவன் படகை நம்பித்தான் அந்த ஊர் மக்கள் இருந்தார்கள். அவன் படகில் ஏறுகிறவர்கள் பேசும் கதைகளை செவிமடுக்கும் ராமையா.. மறந்தும் அதை இன்னொருவரிடம் கூற மாட்டான்.

அவன் மிகச் சிறந்த பார்வையாளன். தன்னைச் சுற்றி நடக்கும் அனைத்தையும் கவனிப்பான்; கணிப்பான். ஆனால் யாரிடமும் அதை பற்றவைக்க மாட்டான்.

மற்றவர்கள் எல்லாம் ஒரு காதில் வாங்கி மறுகாதில் விட்டுவிடுபவர்கள். சிலர் அதை வாயில் வெளிப்படுத்தி விடுவார்கள். ஆனால் ராமையா மட்டும்.. இரண்டு காதுகளிலும் கேட்பவைகளையும் இரண்டு கண்களிலும் பார்ப்பவைகளையும் மனதில் போட்டு அமிழ்த்திக் கொள்வான். மற்றவர்களிடம் பேசமாட்டான்.

அன்று ராமையாவின் படகு படித்துறையை நெருங்கும் போது மாலை மயங்கி இருள் சூழ்ந்து கொண்டிருந்தது. ஆற்றங்கரையில் யாருமில்லை.

படித்துறையின் பக்கவாட்டுச் சுவரில் அமர்ந்திருந்த மித்ரன் குதித்து இறங்கினான். மேல்படியில் அமர்ந்திருந்த காயத்ரிதேவி. எழுந்து நின்றாள். அவளை மெதுவாக நெருங்கிய மித்ரன், அவள் தோள் தொட்டான். அவள் முகம் கவிழ்த்திக் கொள்ள – முகம் நிமிர்த்தி.. அவள் நெற்றியில் சின்னதாக முத்தமிட்டான். அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அவள் உடல் நடுங்க – அவன் தோள் சாய்ந்து விட்டாள்.

இருவரும் தழுவிக் கொண்டு நின்றிருந்ததை நிழலோவியமாக ராமையா பார்த்தான். பார்த்தவுடன் துடுப்புப் போடுவதை நிறுத்தி விட்டான். துடுப்புப் போடும் சத்தம் அவர்களுக்குக் கேட்டு விடும் என்பதால் துடுப்புப் போடாமல் படகில் நீரின் மேல் மிதந்து கொண்டிருந்தான்.

“போய் வரவா…” காயத்ரி பிரிந்தாள்.

“நாளைக்கு வருவாயில்லையா..?” பிரிய மனமின்றி மித்ரன் கேட்டான். 

“வராமல் என்னால் இருக்க முடியுமா..?” காயத்ரி.. ஓடி விட்டாள்.

அவள் போவதையே பார்த்துக் கொண்டு நின்ற மித்ரன், ஆற்று நீரின் லேசான சலசலப்பு ஓசையைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தான்.

துடுப்புப் போட ஆரம்பித்திருந்த ராமையாவின் படகு அவனை நெருங்கி வந்தது.

‘இவன் பார்த்து விட்டானோ…’ மித்ரன் சஞ்சலப்பட்டான்.

அவன் தன்னைப் பற்றிக் கவலைப்படவில்லை. காயத்ரிதேவி அந்தக் கிராமத்தில் பிறந்து வளர்ந்த பெண். சிறு அபவாதம் கூட அவள்மேல் வந்துவிடக்கூடாது என்பதுதான் அவனுக்கு.

“என்ன தம்பி.. இருட்ட ஆரம்பித்து விட்டது. வீட்டுக்கு போகாமல் இங்கே நின்னுக்கிட்டு இருக்கீங்க..?”

ராமையா இயல்பாகக் கேட்டபடி. படித்துறையில் இறங்கி.. படகைக் கயிற்றில் கட்ட ஆரம்பிக்கவும் – மித்ரனின் மனம் சமாதானமடைந்தது.

‘நல்ல வேளை இவன் பார்க்கவில்லை…’

“சும்மா காத்து வாங்க வந்தேன் ராமையா. இதோ.. விட்டைப் பார்த்து.. போய்கிட்டே இருக்கேன்…” மித்ரன் லேசான மனதுடன் நகரப் போனான்.

“பார்த்து தம்பி. இது ஆற்றங்கரைக் காத்து.. உங்க சென்னைப் பக்கத்து கடற்கரைக் காத்து இல்லை.. இதுக்கு ஆழமும்.. பிடிமானமும் ஜாஸ்தி…”

ராமையாவின் வார்த்தைகள் இரு பொருள் பட ஒலித்தது போல் தோன்றினாலும் மித்ரன் அதற்கு விளக்கம் கேட்கவில்லை. வேகநடையுடன் வீட்டை நோக்கிப் போய்விட்டான்.

அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்த ராமையா பெருமூச்சு விட்டான்.

‘பாவம் அந்த தேவிப் பொண்ணும்.. பட்டணத்துக்காரனின் மேல் ஆசை வைத்திருக்கு. இதைப் பண்ணையாரு கேள்விப்பட்டால் என்ன ஆகுமோ..’

அவனும் தன் வீட்டை நோக்கி நடையைக் கட்டினான். அவன் மனதில் தேவியைப் பற்றிய கவலையே இருந்தது.

பிளஸ் டூ வரை.. அக்கரையில் உள்ள பள்ளிக்கு தினமும் ராமையாவின் படகில்தான் காயத்ரி போய்வருவாள். அவள் சிறுமியாக இருந்த காலத்தில் இருந்தே.. அவளை ராமையாவிற்கு நன்கு தெரியும்..

சில சமயங்களில் வீட்டில் செய்த பலகார வகைகளைத் தோழிகளுக்குக் கொண்டு வந்து கொடுக்கும் போது ராமையாவிற்கும் அதில் சிறு பங்கைக் கொடுப்பாள் காயத்ரி.

அந்த சின்ன செய்கையில் ராமையா மனம் நெகிழ்ந்து விடுவான். கள்ளங்கபடம் இல்லாமல் பிரியம் காட்டும் அந்தச் சின்னப் பெண்ணின் அன்பு அவன் மனதைத் தொட்டு விடும்.

“உனக்குத் தெரியுமா சேதி..”

“என்னடி…?”

“நம்ம ஊரு பண்ணையாரு மகளுக்கு ஜாதகத்தில் ஏதோ தோசமாமில்ல…”

“அடி ஆத்தி.. அதனாலதான்.. அந்தப் பொண்ணுக்கு வர்ற மாப்பிள்ளையெல்லாம் தட்டித்தட்டிப் போகுதா..?”

படகில் தினமும் தயிர், காய்கறிகள், வெண்ணெய் முதலியவைகளை அக்கரையில் விற்பதற்காகப் போகும் பெண்கள் தங்களுக்குள் வம்பளந்து கொள்வது.. ராமையாவின் செவிகளில் விழும்.

‘அப்படி எத்தனை மாப்பிள்ளைகள் தட்டிப் போயிருக்கு..’ என்று கோபமாகக் கேட்க அவன் மனம் துடிக்கும். ஆனால் தன் வழக்கப்படி அவன் எதுவும் பேசமாட்டான். மௌனித்து விடுவான்.

காயத்ரிக்கு அப்படி ஒன்றும் வயதாகிவிடவில்லை. இருபது வயது இளம் பெண்தான் அவள். ஆனால்.. பதினாறு வயதிலிருந்தே அவளுக்கு கந்தசாமி மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தால்.. ஊரார் ஏன் இப்படிப் பேசமாட்டார்கள் என்று நினைத்து கொள்வான் ராமையா.

0Shares

Reviews — Aatrangarai Arukinilze / ஆற்றங்கரை அருகினிலே..!

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link